அன்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 580
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் கண்ட கனவோடு அவன் மனம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது. ஆயினும் அவன் வேகமாக நடந்துகொண்டிருந்தான்.
அதிகாலையில் அதிர்ந்தெழவைத்த அந்தக் கனவு!
வானவெளியில் பெரும் நட்சத்திரக்கோளமொன்று வெடித்துச் சிதறுகிறது.
அவன் எதனாலோ உலுக்குப்பட்டவனாய்ப் படுக்கையை விட்டெழுகிறான்.
சிறிது நேரம் அப்படியே அதிர்ந்துபோய் இருந்தவன், அவனை அறியாமலே மீண்டும் கண்கள் மூடுபட்ட அரைத்தூக்கத்துள் வீழ்கிறான்.
மூடிய கண்களுள் வெடித்த நட்சத்திரக்கோளத்திலிருந்து சிறுசிறு கோள்கள் உருவாகிச் சுழல்வதுபோல்…
எப்பவோ வாசித்த ஒரு தகவலின் அருட்டலாக இருக்க வேண்டும் இது என்ற நினைவுப்பருக்கை அடிமனதில் சுழித்தபோது, மீண்டும் காது செவிடுபடும் அதே கரை அதிர்வு.
ஆனால், முன்னர் கண்டதுபோல் இம்முறை நட்சத்திரக் கோளம் ஒன்று வெடித்துச் சிதறவில்லை. மாறாக, அது தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் அதிர்வாக இருந்தது. அத்தாக்குதலை நடத்தியவனின் தலை அவன்முன்னே வெறித்துப் பார்த்தபடி…
இப்போ அவனிடம் நித்திரைச் சோம்பல் கிஞ்சித்தும் இல்லை. அவன் உண்மையில் அதிர்ந்துபோய் எழுந்து உட்காருகிறான்.
அவன்முன்னே யாரோ ஒருவனின் தலைப்பகுதி, இரத்தம் சொட்டச்சொட்ட அவனை வெறித்துப் பார்ப்பதுபோல் கிடந்தது.
யாரோ ஒருவனின் தலையா?
இல்லை, ‘அன்பு’வின் தலைதான் வழமைபோலவே கிடந்து வெறித்தது.
இப்போ அவசர பணியொன்றுக்காக அவன் வெளியே போய்க் கொண்டிருந்த இந்த நேரத்திலும் காலையில் கண்ட கனவின் தொடர்ச்சியாய் அவன்முன்னே அந்தத் தலை மிதந்துவந்தது.
அதன் வெறித்த பார்வை. ஆனால், குரூரமில்லை.
இது அவனுக்குப் புதிதல்ல. இதேமாதிரியான கனவு பல தடவை அவன் நித்திரையைக் குழப்பியுள்ளது. பத்திரிகைகளில் கண்ட காட்சிகள், வாசித்த விஷயங்கள் அவன் மனதுக்குப் பழக்கப்பட்டவற்றோடு ரசவாதமுற்று வெளிக்காட்டப்படுகின்றனவா?
எதையும் அவன் மறுப்பதற்கில்லை.
திடீரெனக் காதை அதிரவைத்த அந்தச் சத்தம் –
அதைத் தொடர்ந்து வெறித்த பார்வையோடு கிடக்கும் அந்தத் தலை –
சிறிது நேரத்தில் அந்தத் தலை ‘அன்பு’வின் தலையாக மாறுதல் –
இந்த வகையான ஒவ்வொரு கனவும் அவனுக்கு ‘அன்பு’ வையே முன்னிறுத்திவிட்டுச் சென்றது.
தற்கொலைத் தாக்குதல்!
அவர்களால் அது எப்படி முடிகிறது?
மூளைச்சலவை செய்யப்பட்டு முடுக்கிவிடப்படும் யந்திரங் களா இவர்கள்?
இயக்கப் போராளியாக மாறுவதற்கு முன்னர் இந்த விமர் சனங்கள் அவனுக்குள்ளும் ஒலித்தவைதான். இத்தகைய தற்கொலை அர்ப்பணிப்புகள் அவனுக்கு ஆச்சரியம் தருபவையாகவேதான் இருந்தன.
பசுபிக் சமுத்திரத்தில் ‘குயின் மேரி’ என்ற பேரில் அசை யும் தீவுபோல் நின்ற மாபெரும் ஆங்கிலக் கப்பலின் புகைப்போக்கிக் குள் யப்பானிய விமானத்திலிருந்து விழுகிறான். குண்டுப் பொதியைத் தன் உடலோடு கட்டியவாறு யப்பானிய நாட்டு யுத்த வீரன்.
அடுத்த வினாடி, அசையும் தீவென நின்ற கப்பல், இரண்டா. கப் பிளந்து சமுத்திரத்தில் மூழ்கிறது.
இது, அவன் படித்த வரலாற்றுச் செய்தி.
இவர்கள் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட யந்திரங்களா? அந்தக் கேள்விக்கு ஒருகாலத்தில் அவனிடம் இடமிருந்தது.
ஆகாயத்தில் அற்பமாகத் தெரிந்த அந்த விமானம் திடீரெனக் கீழ்நோக்கிக் குத்திவந்தது.
“அந்தா பொம்பர் வருகுது, பொம்பர் வருகுது, ஓடி ஒளியுங்க.” “அந்தா குத்திறான், குத்திறான்…”
சனங்கள் பிள்ளைகுட்டிகளோடு அந்தத் தேவாலயத்தை நோக்கி விழுந்தடித்தவாறு ஓடுகின்றனர்.
“யேசுவே, யேசுவே” என்று வாய் பிதற்ற, கையும் காலும் பதறியடிக்க, சனங்கள் தேவாலயத்திற்குள் அடைக்கலம் என்று புகுந்தபோது குண்டுகளைப் பொழிந்துவிட்டு விமானம் மேலெழு கிறது.
அந்தக் காட்சியை அவன் நேரடியாகவே கண்டான். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் இடிந்துபோய்க் கிடக்கிறது. அதன் இடிபாடுகளுக்கிடையே ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமாய் சிதறுண்டுபோய்க் கைவேறு கால்வேறான நிலையில்… யாருக்கு உதவுவது, எவரைக் காப்பாற்றுவது என்று தெரியாது அவன் தடுமாறிக்கொண்டிருந்தபோது, அவன் முன்னே ஒரு காட்சி அவனை அசையாது ஸ்தம்பிக்கவைக்கிறது. இறந்துபோன தாயின் இறுகிய அணைப்பில், உயிர் தப்பிய இரண்டு வயதுக் குழந்தை திமிறிக்கொண்டு கிடந்தது.
இறந்துபோன தாயின் அன்புமேலிட்ட அணைப்பில் கிடந்து திமிறும் இக்குழந்தை ஒருநாள்…
அவன் அந்த நேரம் தன்னை நினைத்துப்பார்த்துக்கொண்டான்.
அவன் எத்தனை தடவை அவர்கள் வீட்டுப் பின்புறத்தில் இருந்த பதுங்கு குழிக்குள் ஓடிப் பதுங்கியிருக்கிறான். வானத்தில் பொம்பர் விமானங்கள் இரையத் தொடங்கியதும்…
“அந்தா சகடையடா, சகடையடா” என்ற கூக்குரல்கள் எழும்.
“அந்தா குத்தப்போறான், ஓடுங்கடா” என்று மேலும் பல குரல்கள்.
அவன் அந்த நேரங்களிலெல்லாம் பற்கள் கிடுகிடுவென நடுங்க, நெஞ்சுதற பதுங்கு குழிக்குள் கண்களை மூடிக்கொண்டு கிடந்திருக்கிறான்.
அதைத் தொடர்ந்து பல நினைவுகள் ஓடிவந்தன.
ஆனால், அவற்றில் அவனால் மறக்க முடியாதது, அவன் பக்கத்து வீட்டு, அவன் வயதையொத்த ‘சிவலை’ இறந்ததுதான். திடீரெனக் குண்டு விமானம் இரையத் தொடங்கிற்று. அன்று, அவர்கள் வீடுகளுக்கு மேலாக வட்டமிடுவதுபோல் தெரிந்தது. அவர்கள் அண்ணாந்து பார்ப்பதற்குள் கீழ்நோக்கிக் குத்திவந்தது.
எல்லோரும் தத்தம் வீடுகளில் வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர்.
அதே கணம் அவர்கள் வீடுகளே சிதறிப்போவதுபோல் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.
ஒரு பத்து நிமிடம் காற்றின் செவியுதறல்கூடக் கேட்காத பேரமைதி கவிந்து மறைகிறது.
விமானம் அகன்றுவிட்டதென்ற நிச்சயப்படுத்தலுக்குப் பின் அவன் ‘சிவலை,’ ‘சிவலை’ என்று கத்தியவனாய், சிவலையின் வீட்டை நோக்கி ஓடுகிறான்.
சிவலையின் வீட்டுப் பதுங்கு குழியருகேதான் குண்டு விழுந்து இன்னொரு பெருங்குழியை ஏற்படுத்தியிருந்ததோடு, அவர்கள் பதுங்கியிருந்த இடமே தெரியாதவாறு மண்ணை வாரி இறைத் திருந்தது.
அந்த மண் குவியலை அப்புறப்படுத்தி, சிவலையையும் அவனது தாத்தாவையும் வெளியே எடுத்தபோது, அவர்கள் பிணமாகவே எடுக்கப்பட்டனர்.
மூச்சுத்திணறிப் பிணமாகியிருந்தனர்.
அவர்களைப் பார்த்தபோது, அவன் நெஞ்சு ஏனோ உதறத் தொடங்கியது.
“இப்பிடி எத்தனை நாள் ஓடி ஒளியப்போற, வா என்னோட, இப்பிடி எங்களை ஓடச்செய்யிறவங்களை நாங்கள் ஓடச்செய் வோம்” என்று ஒருநாள் அவனை அழைத்தான் அவனது பாடசா லைத் தோழன் அன்பு.
அன்பு ஏற்கனவே இயக்கத்தில் சேர்ந்து போராளியாக இயங்கி வந்தான்.
அவன் வழிகாட்டலில் இவனும் அவனோடு போய்ச் சேர்ந்து கொண்டான்.
என்றாலும் அடிக்கடி அவனது அம்மாவின் முகம், அவனை வீட்டை நோக்கி அழைத்தபடிதான் இருந்தது. அனாதரவாக விடப்பட்ட அம்மா; அப்பா ஒரு நோயாளி. உதவுவதற்கு வேறு பிள்ளைகளும் அவர்களுக்கில்லை. அவன் இரவில் தூங்க முடியா மல் துயரச் சுமையோடு உருண்டு புரண்டுகொண்டிருந்தான். இயக்கத்தில் சேர்ந்த ஆரம்பகாலம் அவனை ஈவிரக்கமற்றுத் தாக்கிற்று. அப்போதெல்லாம் அவனுக்கு அன்புதான் ஆறுதல்.
அன்பு நல்ல உயரமும் வாட்டசாட்டமான தோற்றமும் உடையவன். பெயருக்கேற்ப எந்தவித களங்கமும் இல்லாத குழந்தை முகம். அவனிடம் இருந்து வரும் சொற்கள் ஒவ்வொன்றும் அன்பில் தோய்ந்ததாகவும் அவனது தோற்றத்தைப் போலவே கனதியுடையதாகவும் இருந்தது. காரணம், அவன், தான் நம்பிய கொள்கைக்கேற்பவே வாழ்ந்துவந்ததால் அவனிடம் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாத உண்மையே குடிகொண்டிருந்தது.
இவன் அன்புவின் அழைப்பில் இயக்கத்தில் போய்ச் சேர்ந்த புதிதில் எதையோ பறிகொடுத்தவன்போல் யோசித்துக்கொண்டிருக் கும் சந்தர்ப்பங்களில்…
“டேய் விக்கி, என்னடா, யோசனை? திரும்பவும் அம்மாவைப் பற்றி நினைப்போ?” அன்பு கேட்பான்.
இவன் வாய் திறக்காது, தலையை ‘ஓம்’ என்னும் பாவனையில் ஆட்டுவான்.
“டேய் விக்கி, எங்களுக்கெல்லாம் அம்மா எங்கட இந்த மண்தான்ரா. இந்த மண் சுதந்திரம் அடையாவிட்டால், எங்கட அம்மா அப்பாமாரும் தம்பி, தங்கச்சி, அக்கா, அண்ணாமாரும் அடிமைகளாகச் சாக வேண்டியதுதான், தெரியுதா?”
அன்பு சொல்லிக்கொண்டுபோவான். அது எவ்வளவு உண் மையானது. ஆனாலும் ஏதோ ஒன்று நெருடுவதுபோல அவன் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு நின்றது.
“என்ன யோசிக்கிற, சொல்லு” என்று அன்பு உற்சாகப்படுத் தவே விக்கி கேட்டான்.
“அப்ப, எங்களை நம்பி வளர்த்து ஆளாக்கிய அம்மா, அப்பாவை இப்பிடி போராட்டம் என்று சொல்லிக் கைவிட்டால், அது பெரும் பாவமல்லவா, அது எங்கட போராட்டத்தையே பின்னடைய வைக்காதா?”
“இங்கேதான் நீ பிழை விடுகிறாய்.” – அன்பு சொல்லத் தொடங்கினான். “நீ உன்ர அம்மா அப்பாவை உன் தனிப்பட்ட சுயநலத்துக்காக கைவிட்டால் அது பாவம். அது தியாகம் அல்ல. ஆனால், நீ இப்போ உன்னைத் தந்திருப்பது முழுத் தமிழினத்தின் சகல அம்மா, அப்பா சகோதரங்கள் எல்லாரினதும் விடுதலைக்காக. அது பெரும் தியாகம். எந்தவொரு இனம் தன் தேசத்தின் விடுத லைக்காக தேசியரீதியான தியாகத்துக்கு தயாராகிறதோ, அது தன் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்கிறது என்பது ஒரு பெரியாரின் வாக்கு.” அன்பு கூறி முடித்தான்.
கொஞ்சக் காலம் விக்கிக்கு இதை விளங்கிக்கொள்வது சற்றுக் கஷ்டமாகவே இருந்தது.
ஆனால், சிறிது காலம் போகப்போக அன்புவின் வழிகாட் டலில் பல நூல்களைப் படித்தான். நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்த வீரர்களின் வரலாற்றை அறிந்தான். கூடவே, அன்புவின் அறிவூட்டல் அடிக்கடி தொடர்ந்தது.
இப்போ விக்கிக்கு, தன் கொள்கையில் புதிய ஆரோக்கிய மான பற்று ஏற்படத் தொடங்கிற்று. தான் சரியான வழியிலேயே செல்கிறேன் என்பதை அவன் உள்ளுணர்வு உணர்த்தியபோது, அவன் ஆயிரம் யானைப் பலம் மிக்கவனாய் ஏறுநடை போட்டான்.
இப்போ விக்கிக்கு, அன்புவின் பெயருக்கேற்ப அவனிடமிருந்து கட்டற்றுப் பெருகும் அன்புக்கும் வீரத்துக்கும் தியாகத்திற்கும் காரணம் புரிந்தது. “ஓர் பெரிய உன்னத லட்சியத்தை அடைய வேண்டுமானால் ஒருவன் தன் சுயநலத்தையெல்லாம் ஒதுக்கும் பெருந்தியாகத்தினாலேயே முடியலாம். அதற்கெல்லாம் ஊற்றுக் கண் அன்புதான் – தன் நாட்டிலும் மக்களிலும் கொண்ட அன்பு.” ஒருமுறை அன்பு கூறியது நினைவுக்கு வந்தது.
“தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா”
விக்கி தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டான். அது கூட அன்புவிடமிருந்து அவனைத் தொற்றிக்கொண்ட பாடல் வரிகளே.
ஒருநாள் அன்புவோடு பேசிய விஷயங்கள் விக்கிக்கு நினை வுக்கு வந்தன.
“முந்தியெல்லாம் தற்கொலை செய்கிறவர்களையும், அந்த மாதிரி தாக்குதல் செய்கிறவர்களையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்று விக்கி சொன்னபோது, “ஏன்?” என்று கேட்டான் அன்பு.
“அதையெல்லாம் அவர்களால் எப்படிச் செய்ய முடிகிறது என்று எனக்கு வியப்பு, ஆனால் இப்போ..” அவன் இழுத்தான்.
“ஆனால், இப்போ என்ன?” அன்பு கேட்டான்.
“இப்போ உன்னோட பழகிய பிறகு, அது ஒரு சின்ன விஷயமாகவே போயிற்று. இதெல்லாம் அர்ப்பணிப்புத் தொடர்பானது இல்லையா?” என விக்கி முடித்தபோது, “ஏன், இதெல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் செய்யிற வேலை எண்டு சொல்லிறவையை நீ கேட்டதில்லையா?” என்று அன்பு கிண்டினான்.
“கேட்டிருக்கிறன், கேட்டிருக்கிறன்” என்று உடன் பதில் அளித்த விக்கி, “அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று அவனையே திருப்பிக் கேட்டான்.
“இதில் நான் என்ன சொல்ல இருக்கு, நீ ஏற்கனவே சொன் னது போல ஓர் உன்னத லட்சியத்துக்கான அர்ப்பணிப்பிலேயே அவையெல்லாம் தங்கியிருக்கு… சிலர் இந்த அர்ப்பணம் உள் ளோடியிருக்கவே பிறக்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம்…”
“என்ன, இந்த அர்ப்பணம் உள்ளோடியிருக்கவே சிலர் பிறக்கின்றார்களா?” விக்கி ஆச்சரியத்தோடு கேட்டான்.
“ஓம், மகாபாரதத்தில் வரும் கர்ணன் இதற்கு நல்ல உதார ணம். கர்ணன் பிறவிக் கொடையாளி. அவனது கொடைபற்றி எல்லாருமே புகழக்கேட்ட துரியோதனனுக்குச் சிறிது பொறாமை. தான் கொடுத்த ராஜ்ஜியத்தை வைத்தே தன்னைவிடக் கொடை செய்து புகழடைகிறானே, இவனைவிடக் கொடை கொடுத்துக் காட்டுகிறேன் என்று தனக்குள் தீர்மானிக்கிறான். ஆனால், அவனால் அது முடியாதென்பதைக் காட்டக் கிருஷ்ணன், ஓர் ஏழைபோல் வடிவம் தாங்கித் துரியோதனனிடமும் கர்ணனிடமும் அவரவர் மாளிகைக்கு யாசகம் கேட்கச் செல்கிறான். அவர்கள் என்ன வேண்டும் என்று கேட்க, அவன், தான் தேவைப்படும்போது தனக்குத் தேவையானதைக் கேட்க, அதை அவர்கள் தரவேண்டும் என்று வாக்குப் பெற்றுச் செல்கிறான். ஒரு நாள் நல்ல அடைமழை. அப்போது, அந்த ஏழை துரியோதனிடம் செல்கிறான். அவன், “என்ன வேண்டும்?” என்று கேட்க, ஏழை, “விறகு வேண்டும்” என்று சொல்கிறான். இதைக் கேட்டு துரியோதனன் யாசித்தவனைக் கேலி பண்ணி, “இந்த நேரத்தில் விறகுக்கு எங்கே போவது? பிறகு வா” என்று சொல்லி அனுப்ப, அவன் கர்ணனிடம் நேராகச் சென்று, விறகு கேட்கிறான். கர்ணன், உடனே எதுவும் பேசாது, தனது மாளிகையில் உள்ள தளபாடங்களை உடைத்து அவனுக்கு விறகு தானம் செய்கிறான். பார்த்தாயா?” என்று சொன்ன அன்பு, “இது ஏன் துரியோதனனுக்குத் தோன்றவில்லை?” என்று விக்கியைப் பார்த்துக் கேட்டான்.
“அதுபற்றித்தான் நானும் யோசிக்கிறேன்.” விக்கி சொன்னான்.
“அதுதான் நான் சொன்னேன், அந்த அர்ப்பணம் இருந்தால் தான் அது தோன்றும். அந்த அர்ப்பணத்தோடு சிலர் பிறக்கிறார்கள் என்று நான் சொன்னதும் இதுதான்.”
அன்பு கூறிவிட்டு, விக்கியைப் பார்த்தான்.
விக்கி பேசாது, அவன் பேசுவதை ரசித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தான். அன்பு அன்புதான்…!
திடீரென்று காலையில் கண்ட பெரும் நட்சத்திரக்கோளம் வெடித்துச் சிதறுவது அவன்முன் மீண்டும் விரிகிறது.
அதன் பின்னர் உடம்பைவிட்டுத் தனியாகக் கிடக்கும் தலை.
அந்தத் தலை அன்புவினுடையதாக மாறுகிறது. உடனே விக்கிக்குப் பழைய நினைவு வருகிறது.
அன்று, அன்புவின் முகாமில் ஏதோ ஓர் ஆலோசனைக் கூட்டம்.
முக்கியமான அரசியல், ராணுவப் பொறுப்பாளர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களையெல்லாம் அன்புதான் ஓடி ஓடிக் கவனித்துக்கொண்டிருந்தான்.
கலந்துரையாடல் முடிந்து தேநீர், சிற்றுண்டிகள் பரிமாறப் பட்டுக்கொண்டிருந்த வேளை.
பகிடிகளும் கேலிகளும் கிண்டல்களும் போராளிகளிடையே எழுந்துகொண்டிருந்தன. அன்பு தன் சகாக்களுக்கு ஒவ்வொன்றை யும் கவனிக்கும்படி கட்டளையிட்டுக்கொண்டு தானும் பகிடி, கேளிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்தான்.
வெடிச் சிரிப்புகள் மேலெழுந்தன.
ஒருவன் சிரிப்பை அடக்க முடியாமல் துள்ளிக் குதித்தான்.
அப்போது, திடீரென அவன் இடுப்பிலிருந்த கிறனேட் ஒன்று, கிளிப் கழன்ற நிலையில் கீழே விழுந்தது.
அங்கிருந்த அத்தனை பொறுப்பாளர்களும் உடல் சிதறுண்டு போகின்ற ஒரு கணப்பொழுது. விக்கி உட்பட அங்கிருந்த எல்லோரும் என்ன செய்வது என்று தோன்றாது ஸ்தம்பித்து நின்ற கணப்பொழுதில்… அன்பு அந்தக் கிறனேட்டை தன் மார்போடு அணைத்தவாறே அதன்மேல் குப்புற விழுந்தான்.
அடுத்த வினாடி, அன்பின் வாட்டசாட்டமான உடல் சிதற, அதன் சதைத் துணிக்கைகள் அங்கிருந்த நான்கு சுவரிலும் எழுந்து படிகின்றன. அங்கிருந்த அத்தனை பேரையும் காப்பாற்றிய அன்புவின் இரத்தம் அங்கிருந்த எல்லோரிலும், எல்லாவற்றிலும் தெறித்துச் சிந்துகின்றது.
பழைய நினைவின் அள்ளலில், இப்போ தன் பணிக்காக விரைந்துகொண்டிருந்த விக்கியின் கண்களில் கசிவு.
விக்கிக்கு ஏன் அன்பு செய்த அந்தச் செயல் அப்போது தோன்றவில்லை? அதுதான் அன்பு கூறிய பிறப்போடு ஒட்டி வரும் ஒன்று?
பரவாயில்லை. தன்னைத் தேற்றிக்கொண்டு விக்கி வேகமாக நடக்கிறான்.
மாபெரும் கப்பலின் புகைப்போக்கிக்குள் யப்பானிய வீரன் குண்டு கட்டிக்கொண்டு விழுகிறான்.
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.