அன்புச்சங்கிலி
பெங்களூரின் ஒரு குளிர் கால மாலை.
சர்ச்சிலிருந்து குழந்தை ஜூலியை தோளில்போட்டுக்கொண்டபடி ஜான்சி வெளியே வரவும் துபாயிலிருந்து அவள் கணவன் ஜோசப் செல்போனில் அழைக்கவும் சரியாக இருந்தது.

ஒருகையால் குழந்தையை அணைத்தபடியே மற்றொரு கையால் கைப்பையிலிருந்து செல்போனை எடுத்தவள்,
“ஹலோ ஜோ! குழந்தை சர்ச்சிலேயே தூங்கியேபோய்ட்டா ..நான் கார்லகொண்டு அவளைப்படுக்கவச்சதும் உங்ககிட்ட பேசட்டுமா டியர் ப்ளீஸ்?’ என்றாள் கெஞ்சுதலும் கொஞ்சுதலுமான குரலில்.
“நோ ப்ராப்ளம்.ஜான்சி. நீ வீட்டு்க்குப்போனதுமே பேசறேனே…கவனமா ட்ரைவ் பண்ணிட்டுப்போம்மா…பெங்களூர் ட்ராஃபிக் பத்தி உலகமே பேசுது!”
“ஷ்யூர் ஜோ.. உங்க பொண்டாட்டியாச்சே .கேர்ஃபுல்லாத்தான் இருக்கேன். மேலும் எனக்கு அப்பா இல்லை என்கிற குறையே இல்லாதபடி ஒன்றுக்கு இரண்டு அப்பா வேற கிடைச்சிட்டாங்க, அதனால இப்போதெல்லாம்ரொம்ப பாதுகாப்பாய் உணர்கிறேன் ஜோ!” சிரித்தபடி செல்லை ஆஃப் செய்தாள்.
பன்னார்கட்டா சாலையின் இருந்த அந்த சர்ச்சின் வளாகத்திலிருந்து காரை நிதானமாய் வெளியே ஓட்டிக்கொண்டுவந்த ஜான்சி , தூரத்தில் சாலையில் நடந்துபோய்க்கொண்டிருந்தவரை வியப்போடு பார்த்தாள் .
அவர்அருகில்காரினை மெல்ல செலுத்தி .சட்டென ப்ரேக் போட்டு நிறுத்தியவள் , காரின்ஜன்னல் கண்ணாடியை இறக்கியபடியே,”அங்கிள்! ” எனக்கூவினாள்.
நடந்தவரும் திகைப்புடன் அப்படியே நின்றுவிட்டார்.
”அப்துல்லா அங்கிள்!எங்கே இந்தப்பக்கம், அதுவும் உங்க அருமை நண்பர் இல்லாமல் தனியா நடந்துவரீங்க?” எனக்கேட்டபடி காரினின்றும் கீழே இறங்கினாள்.
“அவருக்காகதான்மா இந்தப்பக்கம் கடைக்கு வந்தேன்..திருச்சிக்காரர் ஒருத்தர் கடைல நல்ல மலைவாழைப்பழம் கிடைக்கும்னு அரைடஜன் வாங்கிட்டு அப்படியே ஐயர்கடைலேருந்து சூடா பால் ஃப்ளாஸ்க்கில் வாங்கிட்டும் போயிட்டு இருக்கேன்..” என்று் அந்தப் பெரியவர் அப்துல்லா, தனது வெண்தாடியை வலது கைவிரல்களால் தடவிவிட்டபடியே சொல்லி முடிக்கையில் குரல் கேட்டு ஜூலி எழுந்தது.
“தாத்..தாத்..!” என்று கூவியபடி கைகளை நீட்டியது.
“ பாலும் பழமும் உங்கமுதியோர் இல்லத்தில் கிடைக்காதா இதுக்கா ரெண்டுகிலோமீட்டருக்கு மேல நடந்து வரீங்க?எனக்கொரு போன் செய்திருந்தால் நான் வாங்கிட்டுத்தான் வரமாட்டேனா? ‘என் மகள்மாதிரி’ன்ன்னு சொல்றீங்க ஆனா ஒரு அப்பா மாதிரி நீங்க உரிமை எடுத்துக்கிறதில்லை”ஜான்சி செல்லக்கோபத்துடன் கேட்டாள்
ஜூலி, கீழே இறங்க வேண்டுமென கைகால்களை ஆட்டியது. பத்துமாதகுழந்தைதான் ஆனாலும் அதிகதுறுதுறுப்பு. மனிதர்களை அடையாளம் கண்டுவிட்டால் உற்சாகம் கரைபுரண்டோடும்.ஜான்சி பின்கதவைத்திறந்து பின் இருக்கையில் குழந்தைகளுக்கான சிறு இருக்கையில் அமரவைக்கப்பட்டிருந்த குழந்தையின் சீட் பெல்ட்டைக்கழற்றி குழந்தையை கீழே மெல்ல இறக்கினாள்
அப்துல்லா, குழந்தையைக் குனிந்து ஒருகையால் அணைத்துக்கொண்டபடியே“பாலும் பழமும்இல்லத்தில்குறிப்பிட்ட நேரம் வரைத்தான் கிடைக்கும். இன்னிக்கு ஏகாதசி..சேது மாதவன் ஐயா கடும் விரதமிருக்கும் நாள். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிச்சிக்கிட்டு இருக்காரு.அவருக்கு ஆசாரமாய் ஐயர்கடைல பாலும் அவரோட அபிமான ஊர்க்காரர் கடைலிருந்து பழமும்வாங்கிகொண்டுபோலாம்னு தோணிச்சிம்மா ..நீயே சின்னக்குழந்தையை வச்சிட்டு கஷ்டப்படறே உன்னைப்போய் தொந்தரவு செய்யலாமா அதுவும் எங்கமுதியோர் இல்லமும் உன் குடி இருப்பும் ஒருமைல் தொலைவுக்கு மேலே இருக்குஜான்சி” என்றார் மென்மையான குரலில்
“ரொம்பநல்லாருக்கு அதுக்காக இப்படி நடந்தாவருவீங்க நான் கார்லதான் சர்ச்சுக்கு ப்ரேயருக்கு வந்தேன் …நல்லவேளை இங்க உங்களைப்பார்த்தேன் ஏறுங்க கார்ல?”
”ஜான்சி உனக்கு எதுக்கும்மா சிரமம்? ஏதோ தினம் பார்க்குல என்னையும் அவரையும் ஆறுமாசமா பார்த்து உனக்குப்பழக்கம் ஜூலியும் தாத்தான்னு எங்கரெண்டுபேருகிட்ட ஒட்டிக்கிட்டது…..உறவுகள் ஒதுங்கி இருக்கிற நிலையில ஆதரவற்றவங்களாய் நாங்கமுதியோர் இல்லத்துல சேர்ந்து இருக்கோம்..எங்க கிட்ட பேரன்புகாட்டுகிற மகளா நீ இருப்பதில் அல்லாவுக்கு என்னிக்கும் நன்றி சொல்லிக்கறேன்மா”.
“நானும் ஜீசசுக்கு நன்றி சொல்லியே ஆகணும்..துபாய்ல வேலை காரணமாய் புருஷன் அங்கே போயிருக்க, நானும் புறநகர்ப்பகுதி ஃப்ளாட்ல தனியா குழந்தையுடன் இருக்குறேன்..எனக்கு நீங்களும் சேது அங்கிளும் அப்பாமாதிரி தான்.. அப்பாவுக்கு செய்வதை எந்தமகளாவது சிரமம்னு நினைப்பாளா? அடிக்கடி நீங்க சொல்வீங்களே’வாழ்வின் உன்னதமான விஷயங்கள் தன்னுள்ளே பொதித்து வைக்க வேண்டியவை அல்ல… பரிமாறிக் கொள்ள வேண்டியவையே’ என்று இந்தமாதிரி நண்பருக்காக நீங்க செய்கிற உன்னதமான பணிக்கு என்னுடைய பங்காய் உங்களோடு இந்த உதவியைப் பரிமாறிக்கொள்கிறேனே அங்கிள்?”
ஜான்சி உரிமையுடன் இப்படி சொல்லவும் வேறுவழியின்றி ஏறிக்கொண்டவரின் மடியில் ஜூலி உட்கார்ந்துகொண்டது.
.போகிறவழியில்ஜான்சி கேட்டாள்.” அங்கிள்! சமீபத்துல மனம்விட்டு சேது அங்கி்ள்கிட்ட பேசினப்போ தெரிஞ்சது அவரோட ஒரேமகனும் மருமகளும் இவர்கிட்ட பைசா காசு இல்லைன்னு வீட்டைவிட்டுத் துரத்திட்டதை கேட்டதும் மனசுக்குக் கஷ்டமாகிப்போச்சி… பள்ளிக்கூடவாத்தியாரா இருந்து ஓய்வு பெற்ற மாமனுஷரை இப்படியா விரட்டுவாங்க? கதைலதான் நான் இப்படியெல்லாம் படிச்சிருக்கேன்”
“ஒவ்வொரு மனிதன்கிட்டயும் கதை இருக்குதும்மா..எனக்குக்குழந்தைகளே இல்லை ..ஆனா இளம்வயசுல செத்துபோன தம்பியின் மக பர்வின் பானுவை சொந்தமகளா நினச்சி நல்ல இடத்துல கட்டிக்கொடுத்தேன், ஆனா மூணு பொட்டைப் புள்ளைங்களைக் கொடுத்திட்டு அந்தப்பையன் எங்கிட்டோ கண்காணாம போயிட்டான் சீக்காளி மாமியார வச்சிக்கிட்டு அந்தப்பொண்ணு குழந்தைகளோட கஷ்டப்படுது தையல்மெஷினை வச்சிட்டு ஏதோ தைச்சி சம்பாரிக்குது அங்கிட்டு நானும் தொல்லை கொடுக்கவேணாமுன்னுதான் இங்கே பெங்களூர்ல ஒரு நல்ல மனுஷன் எங்களைமாதிரி ஏழைமுதியவர்கள்கிட்ட காசு கேட்காம இலவசமா வச்சிக்காப்பாத்தறதைக்கேள்விப்பட்டு இங்க வந்தேன்…”
”அங்கிள்!அந்த நல்லமனுஷன் மாதிரி நாங்களும் ஒரு முதியோர் இல்லம் துவங்க ஆர்வமா இருக்கோம்! உண்மைல என் வீட்டுக்காரர் சமூகநலக் காரியங்களுக்காகத் தான் அதிகம் சம்பாதிக்க அயல்நாடு போயிருக்கிறார்.”
:நல்ல எண்ணம் ஜான்சி !ஆனா என்னைக் கேட்டால் நாட்டுல முதி்யோர் இல்லமோ அனாதை இல்லமோ இருக்கவேகூடாது. அப்படி ஒரு நிலமை வர சமூகம் காரணமாகக்கூடாதுன்னு நினைக்கிறேன்..”வேதனையும்விரக்தியுமாய் முடித்தவர் இல்லத்து வாசல்வந்தும் நன்றிகூறி இறங்கிக்கொண்டார்.
“தா..தா…..” ஜூலி சிணுங்கியது.
“ஜூலிக்குட்டி..நாளைக்கு ஈவ்னிங் பார்க்குல உன்கூட விளையாட வருவார் தாத்தா..இப்போ பைபை சொல்லு
ஸ்வீட்டி ”என்று ஜான்சி சொல்ல ஜூலி கையசைத்தது.
சில மாதங்களுக்குப்பிறகு…
அன்றைக்கு மாலை பார்க்கிற்கு சேதுமாதவன் மட்டும் தனியாக பெஞ்சில் அமர்ந்திருக்கவும் ஜான்சி வியந்தாள். ஜூலியை ஊஞ்சலில் ஆடவைத்துவிட்டு சேதுமாதவன் அருகில் வந்தாள்.
“வாம்மா” என்றார் சேதுமாதவன் தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஜூலியை பார்த்தபடியே. அடிக்கடி தனது கதர்சட்டையின் உட்புறம் கை
விரல்களைவிட்டு நெஞ்சப் பகுதியை நீவிக் கொண்டபோது பூணூல் வெண்மையாய் மின்னுவதை ஜான்சி ரசித்தாள்
”என்ன அங்கிள் ‘டல்’ ஆ இருக்கீங்க ஆமா உங்க நண்பர் இல்லாமல் தனியாக வந்திருக்கீங்க?”
“அப்துல்லா நோன்பில் இருக்கிறாரம்மா..ரம்ஜான் வருகிறதே?”
”சக்கரை நோய் இருக்கே அவருக்கு எப்படி பட்டினி கிடைக்கிறார் பாவம்?”
”எல்லாத்தியும் அல்லாபாத்துக்குவார் என்கிற மனோதிடம் அதிகம் அவருக்கு.”
“உங்க ரெண்டுபேரையும் என்னால புரிஞ்சிக்கவே முடியல அங்கிள்!” சிரித்தாள் ஜான்சி.
“மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக்மண்ட் ஃப்ராய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமையான புரிதலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவணைப்படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனிதனால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!வாத்தியாரா இருந்தவன்கிட்ட வாயைக்கொடுத்தால் இப்படித்தான் வள வள என்ற பேச்சைக்கேட்கவேண்டி வரும் இல்லையாஜான்சி?” சேதுமாதவனும் புன்னகை தவழ கேட்டபோது ஜான்சியின் செல்போன் ஒலித்தது.
பேசிமுடித்தவள் சட்டென சேதுமாதவனிடம் கெஞ்சுதல் குரலில், “அங்கிள் ஒரு ஹெல்ப்?” என்றாள்.
“என்னம்மா சொல்லு?”
“ஒண்ணுமில்ல அங்கிள்..வீட்டுக்கு இப்ப போய் காஸ் சிலிண்டர் வந்திருக்கு.. ஃப்ளாட் செக்யூரிடி போன் செய்தார் இப்போ..நான் போயி சிலிண்டரை வீட்டுல வைக்க வச்சிட்டுபதினைஞ்சி நிமிஷத்துல வந்திடறேன் அதுவரைக்கும் ஜூலியைப்பார்த்துக்க முடியுமா அவளையும் தூக்கிட்டு வேகமா நடக்கமுடியாது அதான்..”
“அட அட…! என்னம்மா நீ இதுக்கெல்லாம் முடியுமான்னு கேட்டுட்டு? நான் பாத்துக்கறேன் நீ போய்ட்டு நிதானமா ஆற அமர வா… அவசரமே இல்லை என்ன?” என்றார் உற்சாகக்குரலில்.
ஆனால்அடுத்த அரைமணீயில் ஜான்சி திரும்பிவந்தபோது அவள் கண்டகாட்சி அவளை திடுக்கிட வைத்தது.
சேதுமாதவன் தன் முழங்கையில் ரத்தம் வடிய நின்றுகொண்டிருந்தார் .ஜூலி திருதிருவென விழித்துக்கொண்டிருக்க அருகில் நாலைந்துபேர் பதட்டமுடன் கைகளைப்பிசைந்தார்கள். ஒருவர், “கள்ளா.. கள்ளா..தப்பிஸ்கொண்டோகிதானே” என்றார் கன்னடத்தில்.
”கள்ளனா திருடனா? ஐயோ..என்ன ஆச்சி?” ஜான்சி வீறிட்டாள்.
”அம்மாடி! நல்ல வேளை..பெரியவர் கழுத்துல கத்தி படல இல்லேன்னா பெரியவர் உயிரேபோய்ருக்கும்” என்று ஒரு பெண்மணி பரிதாபக்குரலில் சொன்னாள்.
”ஐய்யெயோ அங்கிள் ஆர் யூ ஒகே? ரத்தம் ரொம்பக்கொட்டிட்டு இருக்குதே?”
“பெரியவர் பார்க்கின் அந்தப்பக்கம் ஜனநடமாட்டம் அதிகமில்லாத பகுதிலே குழந்தையோட பந்து தூக்கிப்போட்டு விளையாடிக்கிட்டு இருந்திருக்கிறாரு.. அப்போ குழந்தை கழுத்துல கிடந்த செயினை எவனோ அறுத்து எடுத்துப் போக வந்திருக்கிறான்..பெரியவரை முட்டிப்புதர்ப் பள்ளத்துல தள்ளிவிட்டு குழந்தை கழுத்துச் செயினை பறிக்க வந்திருக்கிறான்..இவரு அவனைத் தட்டிவிட முயற்சி செய்கிறபோது பெரியவர் கையை கத்தியால கீறிட்டு செயினையும் எடுத்துட்டு ஓடிட்டானாம் பெரியவர் அபயக்குரல் கூச்சல் கேட்டு புதர்ப்பக்கம் போயி மீட்டுக்கிட்டு வந்தோம்..”
ஜான்சி பதறினாள்.”ஐயோ சேது அங்கிள் என்னாலதானே உங்களுக்கு இப்படி ஆச்சு? ஐயாம் சாரி அங்கிள்” என்றாள் நெகிழ்ந்தகுரலில்.
“பரவால்லம்மா..குழந்தைக்கு ஒண்ணுமில்லாம போச்சே அந்தவரை சந்தோஷம் .ஆனா கழுத்து செயின் தான் பறிபோனதை என்னால தடுக்கமுடியல.”
“போகட்டும் அங்கிள் ‘ஒருபவுன் செயின்’ போனா போகுது உங்களுக்கு பெரிய அளவில் ஏதும் ஆகாமல்போனதே! ஜீசஸ் காப்பாற்றிவிட்டார்.”
ஒருவாரம் கழித்து ஜான்சி தோழிவீட்டுப்பிறந்த நாள் வைபவத்திற்கு ஜெயநகருக்குப் போனாள். அங்கே ஒரு பிரபல கோட்டலில் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்குழந்தை ‘ஜே’ என்ற ஆங்கில எழுத்து பொறித்த டாலர்பதித்த செயினைப்போட்டுக்கொண்டிருப்பதை கவனித்தாள்
ஒரே மாதிரியான நகை பலரிடம் இருக்கலாம் தான் ஆனாலும் அந்த மல்லிகைப் பூவின் சிறுமொக்கு டிசைனில் டாலருடன் கூடிய அந்த செயினை .ஜூலி கழுத்தில் பல மாதங்களாய் பார்த்த பழக்கத்தில் முதலில் தயங்கியவள் பிறகு அந்த குழந்தையின் தாயிடம் கேட்டேவிட்டாள்.
“செயின் ரொம்ப அழகா இருக்கே எங்க வாங்கினீங்க? ?”
அந்தப்பெண் சிரித்தபடி,”எங்க குடும்பத்துக்கு ஒரு மார்வாடிக்கடைக்காரர் நண்பர். அவர் கடைக்கு இத யாரோ பணதேவைக்காக வித்தாராம் டிசைன் பிடிச்சதாலே அவர்கிட்ட விலைக்கு நான் வாங்கிட்டேன் குழந்தை பேரு வேற ஜான்வின்னு இருக்கே அந்த டாலரில் இருக்கிற ஜே என்கிற எழுத்து பொருத்தமாயிருக்கும்னு வாங்கினேன். அவர் அட்ரஸ் தரேன் நீங்களும் இதேபோல இருந்தா இன்னொரு செயின் வாங்கிக்குங்களேன் நல்லமனுஷர் திருட்டுப்பொருளை வாங்கமாட்டார் அதே நேரம் பணத்தேவைக்கான தக்க காரணத்தோடு வருகிறவர்களை திருப்பி அனுப்பவும் மாட்டார். இந்த செயினைக்கூட ஒரு வயசானவர்..பேருகூட..சேதுமாதவன்னோ என்னவோ சொன்னார் அவருக்கு அவசர தேவைக்காக வித்தாராம்.” என்று ஜான்சி கேட்காமலேயே முழுவிவரமும் கூறிவிட்டாள்.
“ஓ அப்படியா?” என்றபோது ஜான்சியின் மனம் சற்று எரிச்சலும் குழப்பமுமாக ஆனது.
ஆக அன்று பார்க்கில் நகையைத்திருடன் பறித்துப்போனதாக சொல்லி சேதுமாதவன் தான் திருடியிருக்கிறார்! சே! நல்லபெரியமனிதர் என நினைத்தேனே!
அதற்குப்பிறகு ஜான்சியால் அங்கே இருக்கமுடியவில்லை,’குழந்தை அழுகிறது’ எனக்காரணம் சொல்லிவிட்டு விரைவில் விடைபெற்றுக்கொண்டாள்.
வீடுவரும் வழியில் மனம் குமைந்து கொண்டே இருந்தது. அப்போதுதான் சாலை ஓரமாய் அப்துல்லா கைவீசியபடி நடந்துபோவதைபார்த்து காரை நிறுத்தினாள். கீழே இறங்கினாள்.
அப்துல்லா திகைப்புடன் “அடடே ஜான்சியா? நானே உன்னைப்பார்க்கவே முடியலையேன்னு நினச்சேன். ஆனா ஒரு வாரமா நான் ஊர்ல இல்ல…ரம்ஜான் கொண்டாட, வாணியம்பாடிக்குப்போனேன்…சேது ஐயா மட்டும் அன்னிக்கு பதினைஞ்சாயிரம் ரூபா பணம்-எனக்குக்கொடுக்கலேன்னா என் பேரக்குழந்தைங்க முகத்துல ரம்ஜான் திருநாளுக்கான குதூகலத்தைப்பார்த்திருக்கவே முடியாதும்மா… பல மாசம் கழிச்சி குழந்தைங்க நல்லா சாப்பிட்டாங்க…புதுத்துணி உடுத்திட்டாங்க..
ஒவ்வொரு வருஷமும் நமக்கு தேவை போக மீதம் உள்ள பணத்துல 2.5% ஏழைகளுக்கு ஸகாத் (zakat) கொடுக்கணும்னு இஸ்லாம் சொல்லுது. நான் ஒவ்வொரு வருஷமும் கொடுக்க நினைப்பேன். ஆனா செருப்பு தைச்சிட்டு இருந்த எனக்கு முடியாதும்மா. எங்க போனார் எப்படி யார்கிட்ட கடன் வாங்கினார்னு தெரியலம்மா. சரியான நேரத்துல கொண்டு வந்து கொடுத்தார். இந்த வருஷம் சேது ஐயா கொடுத்த பணத்துல ஐநூறு நூவா மிச்சம் செய்துட்டேன். அதை எங்களை வச்சிக்காப்பாத்தற மனசால மட்டும் தனவான் ஆன எங்க முதியோர் இல்ல உரிமையாளருக்குக் கொடுக்கப் போறேன்மா..சரிதானே ஜான்சி?”
“சரிதான் அங்கிள் “ என்று சொல்லிவிட்டு கோபம் குறைந்தாலும் குழப்பம் குறையா நிலையில் தன் ப்ளாட்டுக்கு வந்தவளை எதிர்வீட்டுப்பெண்மணீ, “சேதுமாதவன் என்பவர் இந்த கவரை உங்ககிட்ட கொடுக்க சொன்னார். இங்க வந்தார் நீங்க இல்லைன்னதும் என்கிட்ட கொடுத்து உங்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்” என்றாள்.
அவள் நீட்டிய கவரை வாங்கியவள் அவசர அவசரமாய்பிரித்தாள். உள்ளே இருந்த கடிதத்தை கண்களால் வாசிக்க ஆரம்பித்தாள்
‘மகளே ஜான்சி! என்னை மன்னிக்கணும்மா.. அன்னிக்கு திருடன் உன் குழந்தையின் கழுத்து நகையைத்திருடிவிட்டானே தவிர பதட்டத்திலோ என்னவோ கீழே போட்டு விட்டுப் போயிருக்கிறான். பார்க்கில் நீண்ட நேரம் உட்கார்ந்து எழுந்தவனின் கண்ணில் ‘அது’பட்டது. உடனே உன்னிடம் கொடுக்கத்தான் நினைத்தேன். ஆனால் அருமை நண்பர் அப்துல்லாவின் ரம்ஜான் நினைவுவந்தது. அவருக்கு முதலில் இது உதவட்டும் என்று அதை விற்று பணத்தைக் கொடுத்து விட்டேன். ஊருக்குப் போய் பழைய நண்பரிடம் கடனாய் பணம் வாங்கி, அதே போல செயின் வாங்கி விட்டேன்..செயின் இந்தக் கவரில் உள்ளது. இதை சொல்லதான் நேரில் இங்கே வந்தேன். உன்னைக் காணாததால் கடிதம் எழுதி கவரில் போட்டுக் கொடுக்கிறேன். மகளே என்னை மன்னிப்பாய் என நினைக்கிறேன். அப்துல்லா, இந்த ரம்ஜானை நிறைவாகக் கொண்டாட எனக்கு இதைவிட்டால் அப்போது வேறு வழி தெரியவில்லை. பெரிய மனிதனின் சின்ன புத்தியை மன்னிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சேதுமாதவன்.’
கடிதம் படித்ததும் கண்பனித்துப்போனாள்.
அடுத்த ஐந்து நிமிஷத்தில் முதியோர் இல்லத்திற்கு காரை விரைந்து கொண்டு போன ஜான்சி ,”எனக்கு ரெண்டு அப்பாக்கள் இருக்காங்கன்னு நான் உரிமையாப் பழகினால் நீங்க என்னை வித்தியாசமாய்ப் பார்க்கறீங்க இல்ல? என் மகள்ன்னு வாய்ல மட்டும் சொல்லிக்கிட்டா போதுமா? தெரியாமத்தான் கேட்கிறேன், உங்க இன்ப துன்பங்களில் எனக்கும் பங்கு இல்லையா என்ன?” என்று அன்பும் உரிமையுமாய் கத்திக்கொண்டே சேதுமாதவனின் கையில் அந்தக் கவரைக் கொடுத்தாள். தீர்க்கமாய் அவரை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்தப் பார்வையின் அர்த்தம் சேதுமாதவனுக்குப் புரிந்தது..விரைவில் அப்துல்லாவிற்கும் புரிந்து விடும்..ஆனால் வேடிக்கைபார்ப்பவர்கள் தான் திகைப்போடு நின்றபடி இருக்கிறார்கள்!