கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 2,854 
 
 

பொதுவாக மார்கெட் வேலைக்கெல்லாம் ரமணி போக மாட்டாள். வெளிவேலை களையெல்லாம் அவள் கணவன் சிங்காரமே பார்த்துக் கொள்ளுவான்.

காலை வேளையில் இரு பிள்ளைகளையும் புறப்படப் செய்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கிற வேலை அவளுடையது.

ஆனால், இப்பொழுது வேறு வழி தெரியவில்லை.அவள் கணவனை அவன் பணிபுரியும் கம்பெனி, போபால் வரை அனுப்பியிருந்தது. வரபத்து நாட்கள் ஆகும்.

அவனும் நூறு தடவை புத்தி சொல்லிவிட்டுத்தான் போனான்.

“ரமணி பத்திரமா இரு…. உனக்கு மறதி அதிகம்…ஒரு பொருளை எடுத்தால் எங்க வச்சேன்னு உனக்கே தெரியாது..பால், காய்கறி யெல்லாம் வாங்கறதுக்கு சின்னாவை ஏற்பாடு பண்ணிக்க…”

சின்னா வீட்டு வேலைக்காரி.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவள் மகளுக்கு டெலிவரி என்பதால் பத்து நாட்களுக்கு லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போய் விட்டாள்.எல்லா வேலையும் இவள் தலையில் விடிந்தது.

புறப்பட்டு விட்டாள்.வெள்ளிக் கிழமை சந்தைக்கு.தேவையானதை வாங்கி ஃபிரிட்ஜில் போட்டு விடலாம் என்று கட்டைப்பையுடன் கிளம்பி விட்டாள்.

வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய் கொஞ்சம் நாட்டுக் காய்கறிகள் என்று பையை நிரப்பிக் கொண்டாள்.பணம் கொடுக்க 

பர்ஸைத் தேடினாள்.சிறிய லேடீஸ் ஹாண்ட் பேக் காலியாக இருந்தது.

எவனோ டவுன் பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் !

அவள் தடுமாறுவதைப் பார்த்த கடைக்காரப் பெண் நிலைமையைப் புரிந்து கொண்டாள்.

“என்னக்கா பர்ஸைக் காணமா ?”என்றாள் தன் குழந்தைக்கு சோறு ஊட்டியவாறே.

“ஆமாம்… அதைத்தான் தேடிட்டிருக்கேன் “

“நல்லாத் தேடிப் பாருக்கா… கட்டைப் பைக்கு அடிலே கெடக்கப்  போகுது …”

“இல்லேம்மா…காணலே..”

“பணம் நிறைய இருந்துச்சா ம்மா..”

“அப்படியில்லேம்மா… ஒரு நூறு ரூபா நோட்டு..ஒரு ஐம்பது ரூபா நோட்டு.. அப்புறம் கொஞ்சம் சில்லறைக் காசு… அவ்வளவுதான்”

“ஒண்ணும் பிரச்சினை இல்லே… அடுத்த வாரம் கொண்டாங்க..இதே கடைதான்..உங்க கணக்கு நூத்தி இருபத்தேழு..”

ரமணிக்கு தர்மசங்கடம்.

“நீங்க ரொம்பப் பதட்டமா இருக்கீங்க போல.. இந்தாங்க ஐம்பது ரூபா.. ஆட்டோவிலே போயிருங்க … மொத்தமா அடுத்த வாரம் வாங்கிக்கறேன் ” 

அதற்குள் அவள் குழந்தை அழ ஆரம்பித்தது.

அவள் அந்தப் பெண்ணை இல்லை, மனிதாபிமானம் மிக்க ஒரு தாயை மனதளவில் வணங்கிவிட்டு ஒரு போக்கு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

உள்ளே ஏறிய மாத்திரத்தில் அவளுக்கு ஓர் அதிர்ச்சி.

கீழே காலுக்கடியில் ஒரு சிறிய மணிபர்ஸ் !

“ஏப்பா டிரைவர்! எனக்கு முன்னாலே யார் ஏறினாங்கன்னு தெரியுமா..பர்ஸை விட்டுட்டு போயிட்டாங்க”

அவள் அதையெடுத்து டிரைவரிடம் நீட்டினாள்.

அதை வாங்குவதற்காக டிரைவர் திரும்பிய போதுதான் 

தெரிந்தது – அது ஒரு பெண் என்று .

“அடே! ஒரு வயசான அம்மாதான் ஏறினாங்க.. ஆஸ்பத்திரி போகனும்னு சொன்னாங்க. திரும்ப அவங்களை வீட்ல விட்டுட்டு வந்திட்டிருக்கேன்… உங்களை இறக்கி விட்டுட்டு பர்ஸைக் கொண்டு போய் கொடுத்திடறேன் ..ஒரே பதட்டமா இருப்பாங்க.. நல்ல வேளை மேடம்..உங்க கண்ணுலே பட்டுச்சு!”

“கொடுத்துரும்மா… புண்ணியமாப் போகும்” என்ற ரமணியிடம் அந்தப் பெண் ஓட்டுநர் சொன்னாள்:

“ஆமாம்மா.. எனக்குக் கல்யாணம் ஆகி மூணு பொண்ணுங்க மேடம்.. இந்த பர்ஸை கொடுக்காம நானே வச்சுக்கிட்டா எம் பொண்ணுகளுக்கு வாழ்க்கை நல்லா அமையுமாம்மா..எம் புருஷன் ஆக்சிடென்ட்லே போயிட்டாரு…அவரு வேலையைத்தான் இப்ப நான் செய்யறேன்.. ஊரார் காசு நமக்கு எதுக்கு?”

ரமணி அந்தப் பெண்ணை மூன்று பிள்ளைகளுக்காக நேர்மை தவறாது உழைக்கிற ஒரு தாயைப் பெருமையாகச் பார்த்தவாறே, ஆட்டோவை விட்டு இறங்கினாள்.

வீட்டைத் திறக்கும்போது அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.

போர்ட்டிகோவில் கிடந்த மர பெஞ்சு மீது அப்படியே அமர்ந்திருந்தது…

அவளுடைய பர்ஸ்!

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *