அன்னியன்…
பிறந்த மண்ணில் கால் வைக்கும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கும் திரு என்றழைக்கப்படும் திருமலைக்கு…
இருபத்து மூன்று வயதில் தாய்நாட்டு மண்ணை உதறிவிட்டு வெளிநாட்டில் படிக்கப்போனவன் அந்த மண்வாசனையால் இழுக்கப்பட்டு அங்கேயே தங்கி விட்டவன் , இருபது வருடங்களுக்கு பிறகு , மீண்டும் தனது ஊரின் மண்ணை மிதிக்கிறான்…
ஒவ்வொரு முறை வரும்போதும் புதிதாய் பிறப்பான்.. வயது குறைந்து பழைய திருமலையாய் , பத்து வயது பாலகனாய் , தாத்தாவின் செல்ல’ராசாக்குட்டியாய்’…
ஆனால் இப்போதோ பத்து வயது கூடிப்போனதுபோல்…
இடையில் என்ன ஆயிற்று..? ரிப் வான் விங்கிள் போல உறங்கி எழுந்திருக்கும் போது இருபது வருடங்கள் ஓடிவிட்டதா?
ஊரும் மாறிவிட்டது.. மனிதர்களும் மாறிவிட்டார்கள்… அவன் மட்டும் மாறாமல் இருப்பானா…?
ஆனாலும் அடையாளமே தெரியாமல்..? அவன் வீடு இருக்கும் தெருவுக்கு போகும் வழி மறக்கும் அளவுக்கா?
வெட்கப்படவேண்டிய விஷயம்…!
இந்த ஐம்பது வயதில் இத்தனை மறதியா…?
யாரிடம் கேட்பது…?
பள்ளியில் படிக்கும் போது, வீட்டை விட்டு வெளியில் போய்த் திரும்பினாலே பஸ் ஸ்டாப்பில் குறைந்தது பத்து பேராவது,
“வாங்க தம்பி. ! நம்ப வண்டியில ஏறுங்க..! பத்து நிமிஷத்துல வீட்டு முன்னாடி போயி நிப்பானே நம்ப மருது…!”
ஆளாளுக்கு அவனை மொய்த்துக்கொள்வார்களே….!
இன்றைக்கு அடையாளம் எல்லாம் தொலைத்துவிட்டு , தன்னந்தனியாக , வீட்டைக் தேடும் அவல நிலை !
டெக்சாஸ் நகரின் ஒரு பெரிய பன்னாட்டு பங்குச்சந்தை நிறுவனத்தின் உயர் அதிகாரியாய் இருந்தென்ன?
இங்கு, அவனது சொந்த மண்ணில், அவன் யாரோ ஒருவன் !
“ஐயா..! என்ன தேடிக்கிட்டிருக்காப்ல…?யாரு வீட்டுக்கு போவணும்….?”
“இங்க….விசுவநாத நாயக்கர் வீடு….! மணிக்கூண்டு வீடுன்னு சொல்லுவாங்களே….!”
“அப்படி சொல்லுங்க…! நீங்க அவருக்கு…?”
“பேரன்….மகவயத்து பேரன்…சுந்தரவல்லி மகன்….!”
“வாங்கய்யா… ! எம்பேரு பழனிச்சாமி…! எனக்கு உங்க பாட்டனார தெரியாது. ஆனா, சுந்தராம்மாவத் தெரியதவுங்க இந்த போடியில இருக்கமுடியுங்களா….? வாங்க… கூட்டிப் போறேன்….”
“எந்த வீடு…?”
“என்ன சாமி…! நெசமாலுமே தெரியலீங்களா…?வீட்டு முன்னாடி நின்னுகிட்டே எங்க வீடுன்னு கேக்கிறீங்க?”
“இதுவா..? இதுவா எங்க தாத்தா வீடு? மணிக்கூண்டு எங்க…? சினிமாவுல காட்ற பாழடைஞ்ச பங்களாமாதிரி…?”
திருமலைக்கு ரத்தக் கண்ணீர் வடிந்தது..
வினோதினி “உங்களோட இனிமே சேர்ந்து வாழ என்னால் முடியாது “ன்னு சொன்னபோது கூட வராத அதிர்ச்சி…! ஆத்திரம்! கோபம்…! கண்ணீர்….!
“சாமி..நீங்க வருவீங்க..வருவீங்கன்னு , அம்மா கடோசி மூச்சு வரைக்கும் உசிர கையில பிடிச்சு வச்சிகிட்டுத்தானே வாழ்ந்திட்டு இருந்தாங்க…! ஏமாத்திப்புட்டீங்களே….”!
ஆமாம்… அவனைப் பிடித்தவர்களையெல்லாம் ஏமாத்திவிட்டான்..!
அவனுக்கு பிடித்தவர்களிடம் ஏமாந்தும் இருக்கிறான்…!
வாழ்க்கை அவனை ரங்க ராட்டினம் போல் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது…
இங்கேயே இறங்கிக் கொள்ள வேண்டுமா…?
மறுபடியும் ஏறி ஒரு சுற்று சுற்ற வேண்டுமா…?
இன்னும் பத்து நாளில் தெரிந்து விடும்….
***
“சாமி ! சாவி குமாரசாமி நாயக்கர் ஐயா வூட்லதாங்க இருக்கும்.வாங்கிட்டு ஓட்டமா ஓடியாந்திடுதேன்..!”
ஒரு தள்ளு தள்ளினாலே திறந்துவிடும்போல சிதிலமடைந்திருந்தது கோட்டை கதவு….
அதற்கெதற்கு சாவி…?
***
“சுந்தரா.. வெரசா வா…! ஆரத்தி கரைக்க இம்புட்டு நேரமா…? ராசுக்குட்டி வந்துட்டாரு.பாரு…!”
கோட்டை வாசல் கதவு வழியாக யானையில் அம்பாரியே வரலாம்..
பேரன் திருமலயை அப்படியே தழுவிக் கொள்ளுகிறார் கிழவர்…
“சீம தொர கணக்காவுல்ல இருக்கான் நம்ம திருமல… திருஷ்டி சுத்தி போடச்சொல்லு…!
திருமலையின் கண்கள் நிலைகொள்ளாமல் நாலு பக்கமும் துழாவுகின்றது…
இவளா…? இவளா என் பானு… ?ஒரு வருடத்துக்குள் இப்படி ஒரு வளர்த்தியா?”
அருகே …! சம்பூர்ணத்தம்மா..! பானுவின் தாய்…!
இன்னும் தளர்ந்து , தலை நரைத்து….!
“முகம் , கைகால் கழுவிட்டு பலகாரம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கப்பா….எல்லாம் அப்புறம் வெவரமா பேசிக்கலாம்…!”
***
“சாமி…இப்ப வீடு இருக்கிற நெலையில நீங்க உள்ள கால வைக்க முடியாது…உங்களுக்கு நம்ப ராமசாமி ஐயா வீட்டுல தங்க ஏற்பாடு பண்ணியிருக்காரு நாயக்கரு….ரவைக்கு படுக்க இங்க வந்திடலாம் சாமி..அதுக்குள்ள எல்லாம் தூத்து வாரி சரி பண்ணிப்புட மாட்டேன்….”
***
தேக்குமரக் கட்டில்..நாலு பேர் உருளலாம்… தலைமாட்டில் இழைத்து இழைத்து பண்ணிய யானைக் கூட்டம்.. தாயிலிருந்து குட்டிவரை…வரிசை வரிசையாய்..
நிசமான தந்தத்தில் கொம்புகளுடன்..
படுத்ததுமே ‘க்ரீச்..க்ரீச்..’ என்ற சத்தம்..
புரண்டு புரண்டு படுத்தான் …
தூக்கம் வராது.. ஜெட் லாக் வேறு…!
அந்த அறை அவனுக்காக ஒதுக்கப்பட்டதுதான்… உள்ளதுக்குள் பெரிய, வெளிச்சமான , காற்றோட்டமுள்ள அறையைப் பேரனுக்காகவே தயாராக்கி இருந்தார் விசுவநாதன்…
அறையில் அவனது தந்தையின் படம்.. உள்ளே பாதிப்படம் அரித்திருந்தது.. நல்லவேளை முகம் மட்டும் பளிச்சென்று… அந்த ஒளிவீசும் கண்கள்..
“திருமல. உங்கண்ண நேருக்கு நேர் பாத்து பேசவே கூசுது ஐயா….!அப்பாரை அச்சா உரிச்சு வச்சாப்ல….”
சுந்தராம்பா உண்மையிலேயே அவன் கண்களைப் பார்த்து பேசுவதைத் தவிர்த்துவிடுவாள்…….
தாயின் அறையில் நுழைந்தான்..
அதெற்கென ஒரு பிரத்யேக வாசனை உண்டு…. சாம்பிராணி , சந்தன ஊதுபத்தி மணமும் , அம்மா உபயோகிக்கும் மல்லிகை சென்ட்டின் மணமும்…
அப்பாவும் அம்மாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரே புகைப்படம்….சந்தன மாலையுடன்…!
அப்பா சிரித்தபடி..அம்மா அளவான புன்னகையுடன்…!
நிஜ வாழ்விலும் அப்படித்தான்…
அப்பா நிறைய சிரிப்பார்.ஆனால் சீக்கிரமே அம்மாவை அழவைத்துவிட்டு போய்விட்டார்.
எல்லா அறைகளிலும் தேக்கு மர அலமாரிகள் வைத்து கட்டின முதல் வீடு அந்த’மணிக்கூண்டு ‘வீடுதான்…..
அம்மாவின் புடவைகள்…அம்மா வாசனை இன்னமும் மிச்சமிருக்கிறதா என்று மோந்து பார்த்தான்..!
கீழ் தட்டில் பெரிய ஆல்பங்கள்..
இரண்டைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தான்..
திறந்ததும் முதல் பக்கத்தில் பெரிய முருகன் படம்..அம்மா ஒரு முருக பக்தை..
அடுத்தடுத்த பக்கங்கள் காலியாய் இருந்தன..
அடுத்ததில் விசுவநாத நாயக்கர் , மனைவி விசாலாட்சியுடன்…
“சுந்தரா…உங்கம்மாவப்போல ஒரு பொண்ணு இந்த பூமியில தேடினாலும் கெடைக்கமாட்டா… எனக்குத்தான் குடுத்துவைக்கல…சொந்தத்துல பெண்ணெடுத்தா நம்ம குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொன்னத நம்பலியே…இருபது வயசுல உன்னிய பெத்துப் போட்டுட்டு அவசரமா எமன் கிட்ட போவான்னு தெரிஞ்சிருந்தா நானு இந்த கலியாணத்த முடிச்சிருக்க மாட்டேனே..! என் ஆசைக்கு அவள பலி கொடுத்துபுட்டேனே…!”
இதோ அவன் தேடிய அந்த போட்டோ… எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது.
ஒரு தீபாவளிக்கு அவன் லீவில் வந்தபோது எடுத்தது…
கீழ்வரிசையில் நாற்காலியில் அவன்.. அவனுக்கு நேர் பின்னால் பானு…அவனது பானு…!
தற்செயலா….அல்லது…?
பானுவின் முகத்தை தடவிப் பார்க்க முன் வந்த விரல்கள் சட்டென்று இழுத்துக் கொண்டன..!
அவள் இப்போது யார் மனைவியோ…? அவன் பானு இல்லை…வேறு ஒருவனுக்கு சொந்தமாய், அம்மாவாய் , மருமகளாய்….! பானு…. பானு….நீ எப்படி இருக்கிறாய்..?
உனக்கு , அம்மாவுக்கு , தாத்தாவுக்கு நான் செய்த துரோகம்தான் என்னை இப்படி தனிமையில் தவிக்க விட்டதோ…?
***
போடிநாயக்கனூரில் விசுவநாத நாயக்கரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது..
தென் காசியம்பதியிலிருந்து போடிநாயக்கனூராய் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் விசுவநாதன் , விசாலாட்சி தம்பதியரை , அந்த காசி விசாலாட்சியாய் கையெடுத்து கும்பிட்டாதவர்களே இல்லை எனும்படி வாழ்ந்தவர்கள்…
ஆனால் அவருக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை…
மனைவியும் மருமகனும் அவரைவிட்டு பிரிந்து போன வருத்தமெல்லாம் திருமலை ஒருவனால் தான் தீர்த்து வைக்க முடிந்தது..
திருமலை அப்பாவின் மறைவுக்குப் பின் தாத்தா தான் எல்லாமும் என்றிருந்தான்.
அவனுக்கு பதினைந்து வயது இருக்கும்போது அவன் வாழ்வில் நுழைந்தவள்தான் பானு…
சுந்தராம்பாளுக்கு உதவிக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதும் அவர்கள் வீட்டில் சமையல் செய்ய ,பதிமூன்று வயது பானுவின் கையைப் பிடித்தபடி அடைக்கலமானவள்தான் சம்பூர்ணம்..
***
“நாய்னா..! எனக்கு உதவிக்கு ஆளு தேவதான்…சம்பூர்ணத்த ரொம்ப பிடிச்சிருக்கு..ஆனா..அந்த பொண்ணு பானு..! வயசு பதிமூணூ..நம்ப பையனுக்கும் இரண்டும் கெட்டான் வயசு.. அதான்…..”
“சுந்தரா! நானும் அதைப்பத்தி யோசிக்காம இல்ல…நம்ப திரு மதுரை ஹாஸ்டல்ல தங்கியில்ல படிக்கப்போறான்..லீவுக்கு வரயில பொண்ண யாராவது ஒறவுக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வச்சா போகுது….”
பானு அடக்கமான பெண்தான்… திருமலை முன் அநாவசியமாய் வந்து நிற்கமாட்டாள்.
ஆனால் மூடிவைத்தாலும் மல்லிகைப்பூ எட்டூருக்கு மணக்குமே….
விடுமுறைக்கு திரு வரும்போதெல்லாம் அவளைத் தனியாக சந்திக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டான்..
இது சுந்தராம்பாள் கண்ணிலும் படாமலில்லை…
இன்னும் ஒரே வருடத்தில் மேற்படிப்புக்கு அமெரிக்கா போகப் போகிறான்.. அதற்குள் என்ன வந்துவிடப் போகிறது என்று அலட்சியமாய் விட்டு விட்டாள்..
“பானு… ரெண்டு வருஷத்துல படிப்பு முடிஞ்சிடும்.. அப்புறம் நம்ப கல்யாணம்தான்…!”
கையிலடித்து சத்தியம் செய்யாத குறை..
கிளம்பிவிட்டான் திரு…..
***
“சுந்தரா…இங்கிட்டு வா.. ஒரு முக்கிய சமாசாரம் சொல்லணும்..பொறுமையா கேக்கணும்….சொந்தத்துல சம்பந்தம் பண்ணி நீயும் வாழல.. நானும் வாழல..பேருதான் பெத்த பேரு…பணமிருந்தென்ன ? பவிசிருந்தென்ன? நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திட்டேன்.. பானு தான் நம்ப மருமக..இந்த வருசம் படிப்பு முடிஞ்சு வந்ததும் கலியாணம்.அவன் இங்கேயே தங்கினாலும் சரி..பானுவ கூட்டிக்கிட்டு அமெரிக்கா போனாலும் சரி.. நான் முடிவு பண்ணிபுட்டேன்…”
“நாய்னா…எம்மனசுக்குள்ளாறயும் இதே எண்ணம் ஓடிட்டுத்தான் இருக்கு….அவுங்களுக்குள்ள பிரியம் இருக்காப்லதான் தோணுது..
ஏதுக்கும் அவன் வந்ததும் ரெண்டு பேத்தையும் ஒண்ணா வச்சு கேட்டுப்புடலாம்…. சம்பூர்ணம் நிச்சயம் சம்மதிக்கும்….
***
முதல் வருடம் விடுமுறையில் வந்த திரு இது இல்லை.. அப்படியே ஆள் மாறியிருந்தான்..
பெட்டி நிறைய பானுவுக்கு பரிசுப் பொருட்கள்…..
மணிக்கணக்காய் தாத்தாவுடன் பேச்சும், சிரிப்பும்….பானு வையே சுற்றி சுற்றி வந்ததை கிழவரும் கவனித்து விட்டார்..
அடுத்த விடுமுறையில் திருமணத்தை நிச்சயித்து விட வேண்டியதுதான் என்றும் மனதுக்குள் தீர்மானம் செய்துவிட்டார்….
ஆனால் இந்த முறை…?
திருவின் இந்த மாற்றம் சுந்தராவுக்கும் மனதில் ஒரு இனம்புரியாத கலக்கத்தை உண்டாக்கியது.
பாட்டனாரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவில்லையே தவிர முன்பிருந்த அன்னியோன்யம் முற்றிலும் குறைந்திருந்தது..
பானுவைத் திரும்பி கூடப் பார்க்கவில்லை..
கேள்விகளுக்கும் ஒற்றை வார்த்தையில் பதில்..
“திரு..இங்க வா.. உன்னோட ஒரு முக்கியமான சமாசாரம் பேசணும்..சுந்தரா.. !பானுவையும் சம்பூர்ணத்தையும் கூப்பிடும்மா….!”
“திரு..இந்த வருஷம் படிப்பு முடியுதுல்ல தம்பி… மேற்கொண்டு என்ன செய்யலாமுண்டு …?”
“தாத்தா… எனக்கு படிப்பு முடிஞ்சதுமே வேல ரெடியா இருக்கு… அப்படியே ஜாயின் பண்ணலாம்னு…..”
“தம்பி..எல்லாமே கூடி வந்திருக்கு.
இப்ப நான் என்ன முடிவெடுத்திருக்கேன்னு சொல்ல வேண்டிய நேரமும் வந்திருச்சு…
“என்ன தாத்தா..? என்னென்னவோ சொல்றீங்க…?”
“எல்லாம் சந்தோஷமான சமாச்சாரம் தான்..நீ படிப்பு முடிஞ்சு திரும்பி வர..நல்ல முகூர்த்தத்துல உனக்கும் பானுவுக்கும் கல்யாணம்.. அவளையும் கூட்டிகிட்டு அமெரிக்கா போற..என்ன? ராசுக்குட்டி…? தாத்தாவுக்கு எல்லாம் தெரியும்…!”
பானுவின் கன்னம் சிவந்தது…
திருவின் கண்களும் சிவந்தன..
திரு இத்தனை கோபப்பட்டு யாருமே பார்த்ததில்லை…
“தாத்தா.. என் கல்யாணத்த யாரும் நிச்சயம் செய்ய வேண்டாம்..அந்த எண்ணமே இப்ப எனக்கு இல்ல..இன்னொரு தடவ இந்த பேச்ச எடுக்காதீங்க…!”
எல்லோர் கன்னத்திலும் பளார் என்று அறைந்ததுபோல் அறைக்குள் போய் படீரென்று கதவை அறைந்து சாத்திக்கொண்டான்…
***
ஆல்பத்தின் அடுத்த பக்கத்தில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது..
அவனும் வினோதினியும்… பாரீஸ், லண்டன் , நியூயார்க்…தேனிலவு புகைப்படங்கள்..
சத்தியமாக திரு இதை எதிர்பார்க்கவில்லை…!
“திரு…! .நாயினா இன்னமும் உம்மேல கோபமாத்தான் இருக்காரு.. உங்கிட்ட இருந்து வர கடிதாசு , ஃபோட்டோ எல்லாத்தையும் கிழிச்சு போட சொல்றாருப்பா..வீட்டுப்படி ஏற விடமாட்டேன்னு சொல்லிட்டு திரியராரு…
நீ எங்கண்ணுக்குள்ளயே இருக்க ராசா..? ஏம்பா இப்படி ஒரு காரியத்தை செஞ்ச…?”
அப்போ தாத்தா சொன்னது பொய்யா..? அவனது படத்தை கிழித்துப் போடாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாரா…? அவனை மன்னித்து விட்டாரா…?
தாத்தா.! கடைசியா உங்க முகத்த கூட பாக்கலியே…!
தாத்தா செய்யாததை அவன் செய்யப் போகிறான்..
திருமலை வெறி பிடித்தவன் மாதிரி அந்த படங்களை எடுத்து கிழித்துப் போடுகிறான்…அவளே போனபின் அந்த படங்கள் அங்கு இருப்பது நியாயமில்லை.
***
பத்து வருட திருமண பந்தம் வினோதினிக்கு கசந்துவிட்டது..
ஏழு வயது வயது அதிதியுடன் பென்னட்டுடன் வாழ முடிவு செய்துவிட்டாள்..
தனிமை..தனிமை..தனிமை..
தாத்தா , அம்மா மறைவுக்குக் கூட வரமுடியாத அளவுக்கு மன அழுத்தம்..
அப்போதுதான் அவனுக்கு அந்த செய்தி வந்தது..
அவர்களுடைய வீட்டை விலைக்கு வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட ஒரு ரியல் எஸ்டேட் முன்வந்தது.. அவனுடைய வரவு அவசியமானது..
இதோ..! திருமலை! இருபது வருடங்களுக்கு பிறகு! சொந்த மண்ணில் கால் வைக்க கூசியபடி , வீட்டையே மறந்தவனாய்.., சொந்தங்களை தொலைத்தவனாய் , சொந்த ஊரில் அடையாளம் தெரியாத ஒருவனாய் , அன்னியனாய்….!
***
ஆல்பத்தின் கடைசி பக்கத்தில் ..
தாத்தாவும் அம்மாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களின் தோளைத் தழுவிக்கொண்டு திரு..
அவன் வெளிநாடு புறப்படுமுன் எடுத்தது…
அந்த படத்தை மட்டும் எடுத்து பத்திரமாய் தன் பெட்டியில் வைத்துக் கொள்கிறான்.
இதைவிட பெரிய சொத்து அவனுக்கு கிடைத்துவிடுமா…..?
***
இன்னும் ஒரே ஒரு வேலை மிச்சமிருக்கிறது…
பானு….! அவள் எங்கிருப்பாள்…?
பழனிச்சாமிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்….
***
அமைதியான பசுமையான சூழலில் , அடக்கமான சின்ன வீடு..
வாசலில் இரண்டு சிறுவர்கள்..எட்டு வயது இருக்கும்…ஓடிப் பிடித்தபடி.. இரட்டைக் குழந்தைகள்..பானு வையே உரித்துக்கொண்டு..
அருகே பத்து வயது சிறுமி..
“அம்மா…வெளிய வாங்க… நம்ம வீடு தேடி யாரோ வந்திருக்காங்க….!”
“ஆம்.. யாரோ தான்….”
வெளியே வந்த உருவத்தைப்பார்த்து திகைத்துப்போய் நின்றான்..
உடலுக்குத்தானே வயசெல்லாம்….!மனதுக்கு இல்லையே..!
ஆனால் பானு விஷயத்தில் இது பொய்த்துப் போனதா…?
பானு…உனக்கு என்றும் இளமையா?
முன்னைவிட அழகாக , இளமையாக.!
மனம் நிறைய மகிழ்ச்சி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்….!
“நீங்க… ??பாத்த மொகமா இருக்கு..ஆனா சட்டுன்னு புரிபடல….”
“நான் திருமலை..திரு…. மணிக்கூண்டு வீடு…. போடிநாயக்கனூர்….””
“திரு…. வாங்க…உங்கள திரும்பவும் பாப்பேன்னு கனவு கூட கண்டதில்ல…
பாப்பா…பாபு… இங்க வாங்க…இது யாரு தெரியுமில்ல ? நம்ம திரு மாமா….”
பானுவின் வீடு மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது..
“இது மூத்த மக பொன்னி.அடுத்து இரட்ட வாலுங்க.. சுந்தர்…திரு…”
நான் சொல்லுவேனே….திருமாமா… இவுங்க தான்…
மாமா வர பொழுதாயிடும்..பசங்களோட வெளையாடிட்டிருங்க…சாப்பிட்டு , ரெஸ்ட் எடுத்தா சரியா மாமா வந்திடும்….”
“இல்ல பானு.. நான் அவ்வளவு நேரம்…!”
“அதெல்லாம் நடக்காது..நாம பேச எத்தனை இருக்குது….?”
பழைய மணிக்கூண்டு வீட்டை கண்முன் கொண்டுவந்தாள் பானு…
திரும்பவும் பழைய திருமலையாய் , சுந்தராம்பா மகனாய் , விசுவநாதன் பேரனாய்….
பானுவால் மட்டும்தான் இது முடியும்.
வாசலில் பைக் சத்தம்…
“மாமா வந்திருச்சு….”
“அப்பா…அப்பா….!”
குழந்தைகளை அணைத்தபடி இறங்கிவருகிறான் பானுவின் கணவன்..
“வாங்க மாமா…! நம்ம வீட்டுக்கு முக்கியமான விருந்தாளி…யாருன்னு நெனக்கிறீங்க. ? நம்ப திரு மாமா..”
“நம்ம “வில் அவள் கொடுத்த அழுத்தம் அவனை அவள் எத்தனை அருகாமையில் வைத்திருக்கிறாள் என்பதைக் காட்டியது…
“ஓ…திருமலையா…?வாங்க வாங்க… உங்களைப் பத்தி உங்களவிட எனக்கு நல்லா தெரியும்… ஒருநாளைக்கு ஒம்பது மொறையாவது உங்களைப் பத்தி பேசாட்டா எம்பானுவுக்கு சோறு எறங்காது…
பானு ஏதாவது செஞ்சு போட்டுதா…? பசங்க உங்கள ஒரு வழி பண்ணியிருப்பாங்களே….உங்க பேருதான் இந்த பயலுக்கு…”
“நேரத்திலேயே வந்திட்டாங்க! பழைய கதைய பேசி முடிக்கவே நேரமில்ல…!”
“திரு..உங்கள பார்த்ததுல பானுவுக்கு மட்டுமில்ல… எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு… இன்னிக்கு தங்கிட்டு மீதிக் கதைய பேசிட்டு காலையில போகலாம்….”
“இல்ல… கொஞ்சம் வேல பாக்கி இருக்கு.. அதான்…”
“பானு..நீ சொன்னா கேப்பாரு…நீங்க என்ன அந்நியமா? உங்க தாத்தா தான் எங்களுக்கு எல்லாமே..!
பானு எங்கிட்டயிருந்து எந்த உண்மையும் மறச்சதில்ல. ஒரு வசதியும் இல்லாத எனக்கு , நல்லா படிச்சிருக்கேங்கிற ஒரே காரணத்துக்காக ஊரே அடைக்க பந்தல் போட்டு , பெத்த மகனப்போல கல்யாணம் கட்டி வச்சாங்களே . அவுங்க மனசு யாருக்கு வரும்….. நீங்க எனக்கு அண்ணன் முறையாகுது…
தம்பி சொல்ல தட்டாதீங்க…!
பழைய உறவுகளை கள்ளமில்லா மனசுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எத்தனை தம்பதிகளுக்கு இடையில் இருக்கும்…?
பானு.. இது போதும் எனக்கு….!
சொந்தங்கள் அன்னியமாய்ப் போனபின் , உறவு முறை இல்லாத ஒருவன் அவனை அண்ணனாக்கிவிட்டானே!
சொந்தங்களை இழந்து அன்னியனாய், தாய் மண்ணில் கால் வைக்கக் கூசியவனாய் , வந்த திரு இப்போது புத்தம் புது மனிதனாய் , மண்ணின் மணத்தை மறுபடியும் நுகரத்தொடங்கியவனாய்…
“தம்பி., பானு….! நான் முடிக்க வேண்டிய வேல பாக்கி இருக்கு..ஆனா திரும்பவும் கட்டாயம் வருவேன்…இது என் பாட்டனார் வாழ்ந்த பூமி..என்னோட தாய் மண்ணு… என் கடைசி மூச்சு இங்கதான்….”
திரும்பிப் போகிறான் திருமலை..
மனசு நிறைய பழைய நினைவுகளை சுமந்தபடி.. நிச்சயம் திரும்பி வருவான்.
அன்னியனாக அல்ல….