அனுபவம்





“மிஸ்டர் ஷியாம், புதுசா நம்ம விளம்பர கம்பெனிக்கு சேர்ந்திருக்கீங்க, அதனால, நாம எடுக்கப் போற விளம்பரப் படத்துக்கான மாடலைப் போட்டோ எடுக்கணும். அதுக்கு ஐடியா வேணுமின்னா நம்ம சீனிவாசனைக் கேட்டுக்கோங்க” என்றார் நிறுவனத்தின் எம்.டி.
”ஐடியாவா? அவரிடமா? பத்தாவது படிச்சிட்டு காமிரா புடிச்சிட்டா, அவர்கிட்ட என்ன கிடைக்கும்? லட்சக்கணக்கில் செலவு செய்து படிச்சுட்டு… அவர்கிட்ட எதுக்கு கேட்கணும்? அலட்சியமாய் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான.
மாடலிங் நடிகையை வளைச்சு…வளைச்சு போட்டோ ஷூட் செய்தான். அத்தனையும் பக்காவாய் இருந்தது.
எம்.டியிடம் கொண்டு போய் காண்பித்தான்.
”இதெல்லாம் ஒரு போட்டோவா? வீசியெறிந்தார் எம்.டி. கீழே விழுந்தவற்றை எடுத்துக் கொண்டு சீனிவாசனின் அறைக்குச் சென்று அவரிடம் காண்பித்தான்.
என்னப்பா ஷியாம்! போட்டோக்களை எம்.டி. வீசியெறிந்திருப்பாரே” என்று கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
”ஸார் ! எப்படி ஸார்?”
”ஏம்ப்பா! நாம விளம்பரப் படம் எடுக்கறது முகத்துக்கான கிரீம் விளம்பரப்படம், நீ எடுத்திருக்கிறதோ ! புடவைக்கடைக்கு எடுப்பாங்களோ அது மாதிரி” என்றார்.
படிப்புக்கும்…அனுபவத்திற்கான வித்தியாசத்தை உணர்ந்தான் ஷியாம்.
– ஒரு பக்க கதை (குமுதம் இதழில் 31-1-2018ல் வெளியானது)