அனுசரி. அதுதான் சரி




ஏய்! சிவகாமி, என்ன இது சாம்பாரா? ஒரேயடியா புளிக்குது, என சாப்பாட்டில் பாதியிலே கோபித்து எழுந்துப் போனார் கனகசபை எண்பது வயதைக் கடந்த சிவகாமி அம்மாளின் கணவர், ஓய்வாக வாழ் நாளை கழிக்கும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர்.
ஏன் இதுக்கு என்ன? புளி புதிசு. அதுதான், உங்க வாயை முதலில் கட்டனும், நல்லா வாய்க்கு வக்கனையா இந்த முடியாத வயசிலேயும், உப்பு உரைப்பா ஆக்கிப் போடறேன்ல அப்படித்தான் பேசுவீங்க, இது சிவகாமி அம்மா, வயது எழுபத்தெட்டைத் தாண்டியவள், மணம் முடித்து மருமகளோடு வெளிநாடு போனவன்தான் இவர்களின் தனிக் குடித்தனத்திற்கு காரணமான மகன் கணபதி.
சாப்பாட்டில் பாதியில் எழுந்து சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே போனார் கனகசபை.
சண்டையைத் தவிர்க்கும் உத்தியே அந்த இடத்திலிருந்து முதலில் வெளியேறுவதுதான் என நன்கு அறிந்தவர்.
தட்டை எடுத்து அதிலே கொஞ்சம் தயிர் ஊற்றிக் கொண்டு போய் வெளியே இருந்த நாய்க்கு உணவைப் போட்டாள் சிவகாமி, அது கிட்ட வந்து தட்டை கூர்ந்துப்பார்த்துவிட்டு அவளைப் பார்த்தபடி நகர்ந்துச் சென்று படுத்துக்கொண்டது.
இதற்கும் கொழுப்பு கூடிடுச்சு போல, தினமும் சாப்பிடும், இன்றைக்கு என்னாச்சு தெரியலையே, இரண்டிற்கும் என்று புலம்பியபடி அடுப்படியில் மற்ற வேலைகளைப் பார்த்தாள்.
என்ன கனகு, அதற்குள்ளே வந்திட்டே, தூங்கலையா ? என்று கேட்டு அவரை வரவேற்றார் நீண்டக்காலமாக தெருவில் வசிக்கும் கனகசபையின் நண்பர் நாராயணன்.
இல்லைபா, தூக்கம் வரலை, என்று பொய் சொன்னார்.
நீ சாப்பிட்டாயா நாராயணா? கேட்டார் கனகு.
சீக்கிரமே சாப்பிட்டேன், என்றார் நாராயணன். ஏன்?
ஏதோ நாக்குப் பூச்சி மாதிரி ஒன்று பேரு …கி நூடுல்ஸாம் நேரமாகிட்டா ஆறிடும் நல்லா இருக்காது . சீக்கிரமா சாப்பிடுங்க என மருமகள் வேலைக்குப் போகும்போது சொல்லிச் சென்றாள்,
அது போதுமாடா உனக்கு? சமையல் இல்லையா? என்ற கனகுவைப்பார்த்து,
சமையலா? அதெல்லாம் விடுமுறை நாட்களில்தான். மகன் மருமகள் இருவரும் வேலைக்குப் போறதினாலே, ஏதோ ஒரு சாதம் செய்வாங்க, அதையே சாப்பிட்டு, மதியத்திற்கும் அதையே எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க எனக்கும் அதுதான் என்ற நாராயணன், மனைவியை இழந்து இரண்டு வருடமாக மகனுடன் வசிக்கிறார்.
என்னடா சொல்றே? உன் மகன் ஒன்றும் சொல்றதில்லையா?
அவனுக்கும் அதுதான்டா, இதுதான்டா யதார்த்தம்.. மனைவி என்னை விட்டுப் போனதில் இருந்து இப்படித்தான் நடக்குது காலத்திற்கேற்ப நாமும் மாறிகிட வேண்டியதுதானே,
மனைவி போனபின்னே உயிருக்கான உணவுதாண்டா குடலிலே இறங்குது.
அவ இருந்தவரை யார் யாருக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காதுனு பார்த்துப் பார்த்து சமைத்து அன்பாக பரிமாறி, உடம்புக்கு முடியலைன்னாலும் இழுத்துப் போட்டுகிட்டு எல்லா வேலைகளையும் முடித்து வச்சிடுவா,மருமளுக்கு இரவு சிற்றூண்டி பண்ணுகிற வேலைமட்டும்தான் இருக்கும். அந்தளவிற்கு வீட்டையும் என்னையும் கவனித்தாள் என்று சொல்லும்போதே கண்கள் கலங்கியது நாராயணனுக்கு.
இறுதி காலத்தில் மனைவியின் இறப்பு என்பது கணவர்களுக்கு பெரும் இழப்பு மட்டுமல்ல, அது தண்டனை என்ற நாரயணன்,
அதை அனுபவிப்பவர்களாலே மட்டுமே புரிந்துக் கொள்ளமுடியும் என்றார்.
நமக்கு சாப்பாட்டில் தான் பிரச்சினை வந்தது. ஆனால் இவனுக்கு சாப்பாடே பிரச்சினையா இருக்கு என்று நினைத்த கனகு,
சரிப்பா, வா நம்ம வீட்டிற்கு போகலாம், சேர்ந்து சாப்பிடலாம், என கூப்பிட்டார்.
இல்லை கனகு, நீ போய் சாப்பிடு, என்று வாஞ்சையாக கனகின் கையை வருடியபடி நாரயணன் கூறியது, இவரின் மனத்தைப் பிசைந்தது.
வீடு வந்த கனகு, சிவகாமியின் முறைப்பான பார்வையைக் கண்டு அமைதியாய் உள்ளே வந்த அமர்ந்து இருந்தார்.
என்னங்க பசிக்கலையா? வாங்க சாப்பிடுங்க, உங்களுக்கு சாம்பார் போடலை ரசம் இருக்கு, சாப்பிடுங்க, பசி தாங்க மாட்டீங்க எனக் கெஞ்சினாள்.
தட்டின் அருகே படுத்திருந்த நாய் இருவரையும் மாறி மாறிப் பார்த்தது.
சாப்பிட அமர்ந்தார், ஆனால் எனக்கு சாம்பார்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார், கனகு.
சிரித்துக்கொண்டே பரிமாறிய சிவகாமி, கோபம் இருந்த என்கிட்டே காட்டுங்க, சாப்பாட்டில் காட்டாதீங்க, என்றபடி பரிமாறினாள் அன்பையும் சேர்த்து..
சாப்பிடச்சொல்லி உண்மையாக கெஞ்சுவது அம்மாவிற்குப் பிறகு மனைவியால் மட்டுமே நடக்கும்.
அன்பு மனதில் சேர்ந்ததும், சாம்பாரில் புளிப்பு காணாமல் போயிருந்தது.
இதற்காகவே காத்திருந்தது போல நாயும் தட்டில் இருந்தவைகளை சாப்பிட ஆரம்பித்து இருந்தது.
மனைவியின் இழப்பு நமக்கு பாடம் புகட்டுவதற்கு முன், இருக்கும் போதே பாடம் படித்து விடுவோம்.