அந்த நிழல்கள் இந்த நிஜங்கள்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதையை எழுதி முடித்ததும் மீண்டும் அதை வாசித்தான். வாசித்து முடித்ததும் அங்கவீனமற்ற அழகான குழந்தையைப் பெற்ற தாய்க்கு ஏற்படுகின்ற பூரிப்பு அவனுக்கும் ஏற்பட்டது. பூரண திருப்தியடைந்தவன், அதை யாரிடமாவது வாசித்துக் காட்ட வேண்டு மென்ற எண்ணம் ஏற்படவே இவளைத் திரும்பிப் பார்த்தான்.
குழந்தையை அணைத்தபடி, சரிந்து ஒருக்களித்துப் படுத்திருந்த இவளின் முகத்திலிருந்த கடுகடுப்பைப் பார்த்ததும் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
கதைக்குத் தலைப்பிட வேண்டும்.
‘என்ன தலைப்பிடலாம்?’ – குழந்தை பிறந்ததும் பெயர் வைப்பதில் பெற்றோர்களுக்கு ஏற்படுகின்ற சுகானுபவம்!
‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ – தலைப்பு அவ்வளவு பொருத்தமாயில்லை என்று எண்ணினான்.
இவளும் அவளும்… சீச்சீ… அவளும் இவளும் என்று வைத்தால் இன்னும் பொருத்தமாயிருக்குமோ? – தலைப்பு அழகாயில்லை.
‘வேறு தலைப்பு …?’ – அதற்காகத் தலையைக் குடைந்தான். மினனலாய் ஒரு தலைப்பு. ‘தேனாக இனித்த தெய்வீக ராகங்கள்’ – முழுத் திருப்தியில்லை. இன்னும் கொஞ்சம் மாற்றவேண்டும்… ஓ… ‘தேனாய் இனித்த ஒரு தேவதை!’ – இதுதான் பொருத்தமான தலைப்பு – தலைப்பை எழுதினான்; திருப்தி!
தேவதை நினைவில் வந்தாள். ‘ஓ மை டியர் சுவீட் சந்திரா… இப்போது நீ எங்கே?’ நீண்ட பெருமூச்சு!
மனைவி அசைந்து படுத்தாள். திரும்பியவன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். “இவள் பெண் – பெண் வடிவம் கொண்ட பிசாசு’ – மனதில் ஒரு நெருடல்.
விளக்கைத் தணித்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.
தூக்கம் வருவதாயில்லை.
இவனது அசைவில் மனைவி விழித்திருக்க வேண்டும்; இவனருகே வந்து படுத்துக் கொண்டாள். “என்ன யோசிக்கிறியள் அத்தான்?” பகல் முழுவதும் அவனோடு சிடுசிடுத்தவள் இப்போது அன்பாக. மிக மென்மையாகக் கேட்கிறாள். “கவலைப் படாதையுங்கோ அத்தான்…கூடிய சீக்கிரம் திரும்பவும் வேலை கிடைச்சிடும்” அன்போடு இவனது தலையைக் கோதுகிறாள். “என்னிலை கோவமே அத்தான்?”
இவன் பதில் சொல்லவில்லை.
”கவலையிலேயும் விரக்தியிலேயும் நான் உங்களைப் பேசிப் போடுறன்… நான் அப்படிப் பேசுறது சரியான பிழை… இப்ப யோசிக்க என்னிலேயே எனக்கு வெறுப்பா யிருக்கு… உங்களை – கவலையோட இருக்கிற உங்களை இன்னும் கவலைப்படுத்திப் போட்டன்… அதுதான் எனக்கிப்ப கவலையாயிருக்கு…ம்… உங்களைப்
பேசுற நேரத்திலே இது எனக்குத் தெரியவேயில்லை…” இவள் மூக்கை உறிஞ்சினாள்.
இவன் இப்பொழுதும் வாய் திறக்கவில்லை: கண்ணை முடியபடியே மெளனமாகச் சிந்தனையில் ஆழ்ந்து போகிறான்.
இவன் இன்னும் அவளை நெருங்கி ஏதாவது ஆறுதல் சொல்லமாட்டானா என்ற தாபத்துடன் அவனது மார்புக் கேசங்களைத் தடவினாள்.
இவளது இப்போதைய தேவை இவனுக்குப் புரிகிறது. எனினும் புரியாத பாவனையில் கண்களை மூடியபடியே
படுத்திருந்தான்.
இவள் விடுகின்ற பெருமூச்சு இவன் மனதை அரிக்கிறது. எனினும் பிடிவாதமாக கண்களை மூடியபடியே படுத்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்கள் மெளனத்தில் கரைகிறது.
அந்த மெளனத்தில் இவள் மனதை அடக்க முடியாமல் விம்மி…அவன் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனா?
இதைத்தான் அவனது மனைவி கேட்டாள். கடந்த மூன்று வருடங்களாக, ஸ்ரைக்கில் அவன் வேலை இழந்த நாட்தொட்டு தினமும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறாள்.
“ஒரு பொறுப்புள்ள கணவனாய் உங்களால் நடந்து கொள்ள முடியாதா?… நீங்கள் உழைத்துக் கொட்டுற பிச்சைக் காசில் என்னதான் செய்ய முடியும்?… இந்த லட்சணத்தில் குடிவேறு…சிகரெட்டையாவது விடுங்கோ எண்டாக் கேக்கிறியளில்லை…” இவள் பேசுவாள். அவன் உசும்பினது கிடையாது.
“உங்களைக் கட்டி நான் என்ன சுகத்தைக் கண்டேன்?” இவள் சத்தம் வைத்துக் கேட்கின்ற போதும் அவன் வாய் திறக்க மாட்டான். நாலாம் திகதியில் பிறந்தவளோடு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள அவன் தயாராக இல்லை.
அவன் பேசாமலிருக்கிறானாம். இவள் குற்றப் பத்திரிகை வாசிப்பாள்.
அதற்கும் பதில் சொல்லமாட்டான் அளவுக்கு மிஞ்சினால் அப்பால் போய்விடுவான். அவன் பதில் சொல்ல அவள் வாய் காட்ட, அவனுக்கு வெறித்தனமான கோபம் வர, கைகளைப் பாவிக்க… வேண்டாம் அந்தத் தொல்லை.
அப்படியான நேரங்களில் அவன், மனைவி, குழந்தை, அந்தப் புனிதமான உறவு எல்லாமே அர்த்தமில்லாதது போல அவனுக்குத் தோன்றும். இதே இவன்தான் திருமணமான புதிதில் சொல்வான். “குடும்பம் ஒரு கதம்பம்!… அதிலேயுள்ள பூக்கள் பலமாக நார்க்கயிற்றால் இணைக்கப்பட்டு, நெருங்கி ஒன்றோடொன்று ஐக்கியமாகி, பூக்களின் தனித்தன்மைகளை இழந்து, மாலையாகி…”
இன்று மாலை கலைந்து பூப்பூவாய்ச் சிதறியிருப்பது போல, அவனும் தனியனாய் உணர்ந்தான்.
எது எப்படியிருந்தாலும் குழந்தையை அவனால் பிரிந்திருக்க முடியாது. இரத்த உறவை அறுத்தெறிவது அவ்வளவு சுலபமா என்ன? குழந்தைக்கு – அதன் எதிர் காலம் நன்றாக அமைய அருகே ஒரு அம்மா என்றும் தேவை; வேறு எந்த அம்மா வந்தாலும் அது இந்தச் சொந்த அம்மா போலாகிவிட முடியாது என்று அவனுக்குத் தெரியும். எனவே அவனால் மனைவியைப் பிரிந்து போக முடியாது. அப்படிப் பிரிந்து போகவேண்டும் என்று அவன் நினைத்ததும் கிடையாது. எனவேதான் குடும்பத் தலைவனாக இருந்து கொண்டே தனியனாய்….
எது எப்படியாயிருந்தாலும் அது அப்படியேயிருந்தது. அவனைப் பற்றியிருக்கும் பழக்கமும், விரக்தியும் ஒழிவதாயில்லை.
இவள் – அவனது அன்புக்கினியவள், இவளைக் கைப் பிடித்த நாளில் இப்படியில்லை. இன்ப ஊற்றாய், இனிய தேனாய் பணிவிடைகள் செய்வதிலும் சரி, படுக்கையறையிலும் சரி. பாசத்தைக் கொட்டுவதிலும் சரி, ஒரு தேவதையாகத்தான் இருந்தாள். அவனும் ஓர் இனிய கணவனாயிருந்து இல்லாளை எந்நாளும் மகிழ்வித்தான்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தில் லிகிதராக இருந்த அவனுக்கு மாதம் எழுநூறு ரூபா சம்பளம்! நூறு ரூபாவுக்குக் குறையாத ஓவர்டைம்; இருநூறு ரூபாவுக்குக் குறையாத கிம்பளம் – அவன் கேட்காமலேயே தேடிவந்த அந்த நாட்களில் வீட்டிலிருந்த குதூகலம்..
ரொபியும் கையுமாக அவன் வீடு திரும்புகின்ற சம்பள நாட்களில் குழந்தையிடமிருந்து குதூகலம்; சுளையாக ஆயிரத்தைக் கொடுக்கின்றபோது மனைவியின் முகத்தில் தெரிகின்ற பிரகாசம்; அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி அவன் இவளைச் செல்லமாய்க் கிள்ள அவள் மெல்லமாய் சினுங்க…. அந்தச் சினுங்கல்களில் தான் எத்தனை அர்த்தங்கள்!
அந்தச் சொர்க்க வாழ்வெல்லாம் ஒரு ஜூலை மாதத்தோடு போக…
மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த ஜூலை மாதத்தில்தான், சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ‘வேலைக்கு வராதவர்கள் வேலை இழந்தவர்களாக கருதப்படுவார்கள்’ என்று வானொலியிலும் பத்திரிகைகளிலும் ஆட்சியாளர்கள் அறிக்கை விடுத்தபோது, அது வெறும் ‘பூச்சாண்டி’ என்றுதான் அவன் நினைத்திருந்தான். பின்னர் வேலை பறிபோன போதுகூட, இரண்டொரு மாதங்களில் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது.
ஆனால்… மூன்று வருடங்களாகிறது இன்னும் இல்லை.
தேர்தல் வந்தபோது – முடிந்தபோது – முடிந்த பின்னர் ‘இப்போ கிடைக்கும்…இப்போ கிடைக்கும்…’ என்று ஆவலாய் எதிர்பார்த்து ஏமாந்து, வேலையிழந்தவர்களுக்காக சக தொழிலாளர்கள் குரல் கொடுப்பார்கள் – போராடுவார்கள் என்றெல்லாம் காத்திருந்து எல்லா எதிர்பார்ப்புகளும் புஸ்வாணமாகிப் போக…
இவள் இப்பொழுதும் குத்திக்காட்டுவாள், “வேலைக்குப் போகும்படி சொன்னேன்… கேட்காமல் வேலை நிறுத்தம் செய்து போட்டு இப்ப இருந்து மாயுறம்…” அவள் குற்றம் சாட்டுகின்றபோதெல்லாம் அவனுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வரும். கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வான்.
வேலை பறிபோன புதிதில், சிறு எதிர்பார்ப்பில் கொஞ்ச நாட்கள் சும்மா இருந்தான். வாழ்க்கைப் பிரச்சினைகளின் பாரம் தாங்காமல் கொஞ்சக் காலம் அவன் அனுபவித்த வேதனைகள் ஈடுசொல்ல முடியாதவை. ‘சீதனமாவது வாங்கிக் கொண்டு கலியாணம் செய்திருந்தால்…’ என்ற நப்பாசை முற்போக்கு எண்ணங்கள் கொண்ட எழுத்தாளனான அவனது அடி மனத்தையும் வேருடவே செய்தது.
‘முடிந்து போனதை நினைத்து ஆவதென்ன?’- ஞானோதயம் பிறக்கும்.
அடுப்பில் உலையேற வேண்டுமே, கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே – புடவைக் கடை தஞ்சம் கொடுத்தது. ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்து அப்பொழுதும்கூட கைமாத்து வாங்குபவனுக்கு நானூறு ரூபா எந்த மூலைக்கு? வாழ்க்கைச் செலவு மலைபோல உயர்ந்துவிட்ட இந்த வேளையில்… யானைப் பசிக்குச் சோளப் பொரிதான்?
படம் – திருவிழா- பயணம் எல்லாவற்றையுமே கட்டுமட்டுப்படுத்தி, வெறும் சோற்றுக்காய் வாழ்ந்து கொண்டு…
இத்தனை வேதனைகளுக்குமிடையில் ஒரே ஒரு ஆத்ம திருப்தி கதை எழுதுவதுதான்.
வேலை நிறுத்தத்தின்போது வேலையிழந்தவர்களின் பிரச்சினைகளை வைத்துப் பல கதைகள் புனைந்தான். ஆட்சியாளர்களுக்குப் பயந்தோ அல்லது அவர்களுக்குக் காக்காய் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, சில பத்திரிகைகள் அவனது அருமையான சிறுகதைகளை கூட நிராகரித்தன. வேறு சில பத்திரிகைகள் பிரசுரிக்கவும் செய்தன. ஆனால் அவன் எதையும் பொருட்படுத் தாமல் எழுதிக் கொண்டேயிருந்தான்.
மனைவி சீறுவாள். “கண்டறியாத கதையும் கவிதையும்… வீணாய் பேப்பர், மை, முத்திரையைச் செலவளிச்சு வேலைமினைக்கட்ட வேலை” இவளின் சீறலில் அவளை நினைப்பான்.
அவனும் அவளும் காதலர்களாக சஞ்சரித்த காலத்தில் அவனது ‘மீன் குஞ்சுகள்’ கதைக்கு இலக்கிய சிந்தனைப் பரிசு கிடைத்தபோதும், ‘புலி’ கதைக்கு தங்கப்பதக்கம் கிடைத்து, பின்னர் அது தெலுங்கிலும், ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்ட போதும் அவள் என்னமாய்ப் பூரித்துப் பாராட்டினாள். இப்பொழுதும் அதை நினைக்கையில் உடலெங்கும் மின்சாரம் பாய்வது போல இன்ப ஊற்றாய்…
அவள்……?
‘ஓ… மை டியர் சுவீட் சந்திரா…’
அப்போது அவளுக்குப் பதினாறு வயது: அவனுக்கு இருபது. இளமையின் முழு வார்ப்புக்களாக அவர்கள் இருந்த காலம் அவள் அவனது வீட்டுக்கு எதிர்வீட்டில் தான் குடியிருந்தாள்.
தினமும் காலையில் அவள் பள்ளிக்கூடம் புறப்படுகின்ற நேரங்களில் அவன் ஜன்னலருகே அவள் வரவுக்காகக் காத்து நிற்பான். அவளது தரிசனத்திற்காக காத்து நிற்கின்ற அந்தக் கணங்கள் தான் எவ்வளவு இன்பமானவை?…ஓ அந்தக் காலங்கள் மீண்டும் வராதா?
இப்பொழுதும்கூட மனதின் பாரங்கள் எல்லாம் அந்தப் பரவசமான எண்ணங்களில் லேசாகி விடுவது போல…
காலை எட்டு மணிக்கெல்லாம் அந்தத் தெரு கலகலப்பாகிவிடும்! வெள்ளை யூனிபோமில் அணியணியாய்ச் செல்கின்ற பாடசாலை மாணவிகள்!அவளும் வாசல் கேற்றைத் திறந்து கொண்டு வெளியே வந்து மற்ற மாணவிகளோடு கலந்து போய்… அந்த ஒரு கணத்தில் கண்ணை வெட்டி அவன் பக்கம் திரும்பி… விழிகளோடு விழிகளைப் பொருத்தி…
நாள் முழுவதும் அந்தத் தரிசனத்தை நினைத்துப் பார்ப்பதிலேயே இன்பமாய்க் கரைந்து போகும். இந்தப் பேரழகி எனக்கும் கிடைப்பாளா? இந்த இனியவன் என்னவளாவாளா?- நித்தம் நித்தம் மத்தாப்பாய் விரிகின்ற இனிய நினைப்புக்கள்… அந்த நினைப்புக்களிலே கிடைக்கின்ற சொர்க்கலோகம்…
மாலை வேளைகளில் அவள் அக்காவின் குழந்தையைத் தூக்கி தாலாட்டும் சாக்கில் வாசல் பக்கம் வந்து குழந்தையோடு விளையாடுவது போல இவனுக்குச் சைகை காட்டி…
அவளோடு கதைக்க வேண்டுமே என்று இவன் துடித்த துடிப்பு…
அந்த வாய்ப்பும் அவனைத் தேடிவர…
கண்ணகை அம்மன் ஆலய மூன்றிலை அவன் அடைந்தபோது அவனது கண்களையே அவனால் நம்ப முடியாமல்…ஓ… அவள் – அவளேதான்! அம்மனின் முன் நின்று மனமுருகி தேவதைபோல்…
அம்மனைத் தரிசிப்பதா? அல்லது அவளைத் தரிசிப்பதா? அவன் மனதில் ஒரு போராட்டம்! – இறுதியில் அம்மன் தான் தோற்றுப் போனார். அவனது கண்களிலும் மனமெங்கும் நிறைந்து நின்றவள் அவள் தான்!
மிகநெருக்கத்தில் முதன் முதலாகப் பார்க்கின்றபோது அந்த அழகான நிலா முகமும், நாகக் கூந்தலும், சந்தன நிறத்தில் பளபளப்பான மெல்லிய இடையும்…
நெருக்கத்தில் அவனது அசைவில் அவள் கண்விழித்து. மருண்டு நோக்கி, நாணம் மேலிட தலையைக் குனிந்து நின்று…
அவன் அவளது அழகில் – நெருக்கத்தில் தடுமாறி நின்று, எப்படிப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருக்கையில் ‘நான் போயிட்டு வர்ரேன் ‘ என்று முணுமுணுப்பதுபோல் கூறிவிட்டு அவள் அவ்விடத்தை விட்டுப் போய் விட்டாள்.
தேவி தரிசனம் கிடைத்து விட்டது! இனி அவளோடு பேசவேண்டும்!
மறுநாள்-
அவளது வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது பார்வைகளைப் பரிமாறி… அவள் சைகை மூலம் அவனை அழைத்தாள்.
அவனும் வாய்ப்பை நழுவ விடவில்லை.
நெருக்கத்தில் நின்று கண்வெட்டாமல் அவளையே விழுங்கி விடுபவன்போல் பார்த்துக் கொண்டு பூரித்துப் போய் அவன் அவளில் ஆழ்ந்து நிற்கையில், அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் அவள் இமைகள் படபடக்க விழிமலர்த்தி அவனது பார்வையுடன் ஒன்றிப்போய்… ஓ… அந்த ஒரு கணத்திற்காகவே பிறப்பெடுத்தது போதும் என்றிருந்தது அவனுக்கு.
அவளது அந்த இனிய நினைப்பில் ஆழ்ந்து இவன் இந்த நீண்ட உறக்கம் வராத இரவில் நெடிய பெருமூச் சொன்றை வெடித்தான். அருகே படுத்திருந்த மனைவி மீண்டும் இவன் பக்கம் திரும்பி தனது கைகளை அவனது மார்பில் படரவிட – ஏனோ இவனுக்கு எரிச்சலாக இருந்தது.
மறுபுறம் திரும்பி ஒரு கணம் கண் விழித்துப் பார்த்த போது, அந்த மங்கலான ஒளியில் எதிரே படுத்திருக்கும் அவர்களது குழந்தை தூக்கத்தில் சிரித்தபடி புரண்டு படுக்கிறான். பிஞ்சுக் கால்களும், கைகளுமாக மெத்தென்ற உடலுடன் அந்தச் சின்ன கப்பளிச் சட்டையுள் அடக்கமாகி அயர்ந்து தூங்கும் தன் குழந்தையைப் பார்த்ததும் மனதெங்கும் ஓர் இன்பப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல உணர்ந்தான்.
இந்த அழகான குழந்தைக்கு தன்னை அப்பாவாக்கி, பெயர் சொல்ல வைத்த பெருமை. பத்து மாதம் சுமந்து பெற்ற இவளுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கையில்… ஓ. இவள் என்னுயிர் மனைவி… என்னோடு இரண்டறக் கலந்து ஐக்கியமானவள் என்ற நினைப்பு ஏற்பட்டது. எனினும் அதையும் மீறி ஒரு மெலிதான வெறுப்பு!
இவளது கைகளை விலக்கிவிட்டு மீண்டும் இனிய நினைப்புகளில் மிதக்க ஆரம்பித்தான்.
அவள் மரத்தில் சாய்ந்து கொண்டு அவனுக்காகக் காத்திருக்க, அவன் பூரிப்போடு அவளருகே வந்து, அவளை ஒரு கணம் உச்சி முதல் பாதம் வரை பார்த்துப் பருகி, “ஷாம்பு” வைத்து முழுகிய கூந்தல் காற்றில் படபடக்கும் அழகை ரசித்து, பேச வார்த்தை வராமல்…
அவளும் நிமிர்ந்து அவனை நோக்கினாள். கண்கள் சங்கமித்ததும் சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
இப்போது அவனது பார்வை அவளது பூரித்து மார்பகங்களைத் தழுவி நின்று, ஒரு கணம் அந்த இளமையில் திளைத்து நின்று,’ ‘ஓ… இவளுக்காக, இந்தக் காதலுக்காக. சுகமான பேரின்பத்திற்காக எதையும் இழக்கலாமே…” என்று பூரித்து நின்றான்.
அவளது இதழ்கள் மெல்லமாய் அசைந்தனவேயன்றி வார்த்தைகள் வரவில்லை.
அவன் தான் பேச்சை ஆரம்பித்தான்.
”சந்திரா…”
நிலம் நோக்கி நின்ற அவள் அந்த இனிய அழைப்பில் சட்டென்று நிமிர்ந்தாள். ‘என்ன?’ என்பது போலப் புருவங்களை நிமிர்த்தி குழி விழப் புன்னகைத்தாள்.
அவன் மெளனமானான். சொல்ல வந்ததைச் சொல்ல முடியாததுபோல ஒரு தவிப்பு.
ஈற்றில் சொல்ல நினைத்ததை ஒருவாறு சொல்லி விட்டான்!
மலர்ச்சி; மகிழ்ச்சி; குறுகுறுப்பு; உள்ளமெல்லாம் இன்ப ஊற்றாய்…
அந்த சுகமான, நினைவை விட்டகலாத காலங்கள் அன்று தொட்டு ஆரம்பமான இனம் புரியாத பிணைப்பில் அவனும் அவளும் காதல் பறவைகளாக உலகை மறந்து, முதல் முத்தத்திற்காகவே பிறவியெடுத்தது போல் பூரித்து நின்று…
எதிர்ப்பிருந்தால்தானே காதல் சுவைக்கும்!… வழமையாகக் காதலர்களுக்கு வில்லன்களாக, வில்லிகளாக… வருகின்ற பெற்றோர்கள். இவர்கள் விசயத்திலும் வில்லர்களாக… அழுகை – கண்ணீர் விரக்தி – பிடிவாதம் – வைராக்கியம்…
அந்த நாட்களை நினைக்கின்றபோது இப்போதும் இவனுக்குப் புல்லரிக்கிறது! அவளுக்காக உயிரை விடவும் தயாராக இருந்த அவன்; அவனுக்காக அதற்கு மேலும் செய்யத் தயாராக இருந்த அவள்!
அந்த நினைப்பில் படுக்கையில் படுத்திருக்கமுடியாமல் அவன் உருண்டு சரிந்தான்.
“ஏன் அத்தான். நித்திரை வரலையே?… என்ன பலமான யோசனை?… எனக்குச் சொல்லக் கூடாதோ? “- மீண்டும் இவள் குறுக்கிடுகிறாள்.
அவன் பெருமூச்செறிகிறான். அவனது மனநிலை இவளுக்கு விபரீதமாகப் படுகிறது. யோசனையுடன் அவனைப் பார்க்கிறாள். அவன் இப்போது மல்லாந்து படுத்தபடி முகட்டை வெறித்துக்கொண்டிருந்தான். அவன் வேறு யாரையாவது மனதில் நிறுத்தித் தத்தளிக்கிறானோ! அந்த நினைப்பையே தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் துடியாய்த் துடித்தது. படுத்திருந்த அடியே அவனைப் பார்த்து இவள் கேட்டாள்.
“இப்படியே யோசிச்சுக் கொண்டு படுத்திருக்கப் போறியளோ காலமை? கடைக்குப் போகவேணு மெல்லே?… நித்திரை கொள்ளுங்கோ… இனி நான் உங்களோட சீறிச் சினக்கமாட்டேன்…” இவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
“என்னைக் கொஞ்சம் நிம்மதியாய்ப் படுக்கவிட மாட்டீரே” அவன் இவள் மீது எரிந்து விழுந்தான். அவனது சீறலில் இவள் ஒரு கணம் திகைத்துப்போகிறாள்.
இப்போது அவனிலிருந்து விலகி ஒருக்களித்துப் படுக்கிறாள்.
கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைகிறது.
பின்னர் இவளிடமிருந்து கண்ணீரும் கேவல்களும் வெடிக்கவே அவன் பதறிப் போகிறான். நிகழ்ந்துவிட்ட சினப்புக்கள் எவ்வளவு அனாவசியமானவை என்ற குற்ற உணர்வு முள்ளாய் அவன் மனதை உறுத்துகிறது. ஆனால் இவளும் நடைமுறையில் இப்படித்தான் என்பதை உணர்கின்றபோது.. ஓ அனுதினமும் முட்டிமோதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் இவளும் ஆத்திரத்தில் சினந்துவிட்டு இப்போது அதுதவறு என்று கலங்கி மன்னிப்புக் கேட்டு… ஓ சந்திரா என்னை மன்னிச்சிடம்மா… மானசீகமாய் ஒலிக்கிறது.
”என்ன சந்திரா அழுகிறீரே?” என்று இவள் பக்கம் திரும்பி கன்னத்தில் வடியும் கண்ணீரைத் துடைத்து அருகே இழுத்தணைத்து “அழாதே சந்திரா” என்று ஆறுதல் சொல்கின்றபோது “சீ… வீணாகக் கோபித்து விட்டேனே” என்ற எண்ணம் பிறக்கிறது.
அவளாக இருந்தபோது இனித்த இதே சந்திரா, காதலி என்ற ஸ்தானத்திலிருந்து மனைவி என்ற தானத்தை அடைந்து, ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்ட இந்த நிலையில் ஏன் இனிக்கக் கூடாது?
இவள் தான் அவள், அவள்தான் இவள் – அவனது காதலி மனைவி இரண்டுமே ஒரே சந்திராதான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, புறச் சூழ்நிலைகள்தான் மனிதனை எவ்வளவு தூரம் பாதித்து விடுகிறது என்று எண்ணிக்கொண்டான்.
இன்னும் இவளது விசும்பல் அடங்கவில்லை. ஈரமாகி விட்ட தலையணையிலிருந்த அவளது முகத்தை மீண்டும் அருகே இழுத்து அணைத்து முத்தமிடுகின்ற இந்த நேரத்தில் இந்த முத்தமும் முதல் முத்தமாக இனிப்பதுபோல…
எல்லாம் மனிதனின் மனதில்தான் தங்கியிருக்கிறது என்று எண்ணினான். இனி இந்த இரவு இவர்களுக்கு இனிக்கும்,
– கணையாழி, டிசம்பர் 1983.
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.