அது அவர் குணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2025
பார்வையிட்டோர்: 267 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(குண்டும் குழியுமான அறை. கட்டிலில் சாவித்திரி. (வயது 40) தலையணையை இரண்டாக மடித்துச் சுவரில் முட்டுக் கொடுத்துச் சாய்ந்திருக்கிறாள். தலையணையின் பின்னே மறைத்து வைத்துள்ள ஒரு புகைப் படத்தை அடிக்கடி ரகசியமாக எடுத்துப் பார்க்கிறாள். பல நாள் காய்ச்சலில் முகம் உப்பி, கண்கள் பஞ்சடைந்திருக்கின்றன. அவள் நகரும் போதெல்லாம் கட்டிலின் குட்டையான காலொன்று நொடிக்கிறது.)

சாவி : ஏன்னா, உங்களைத்தானே? ஒரு பழைய காகி தம் ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்களேன்!

(அதே அறையின் இன்னொரு மூலையில் குமுட்டி அடுப்பை விசிறிக் கொண்டிருக்கும் அவள் கணவன் ராஜா மணி, புகையினால் கரிக்கும் கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டு திரும்பிப் பார்க்கிறார். அடுப்பில் ஒரு சின்ன டப ராவில் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கிறது.)

ராஜா : என்ன கேட்டே?

சாவி : ஏதாவது பழைய பேப்பர் இருக்கான்னு கேட் டேன்.

ராஜா : (அங்கே இங்கே தேடி காகிதத்தை எடுத்து விளக்கு வெளிச்சத்தில் பார்க்கிறார். 25 வாட் பல்பு, அடுப்புப் புகை படிந்து படிந்து மஞ்சளாய் ஒளிவீசுகிறது) என்ன காகிதம் இது? ஏதாவது பிரிஸ்கிரிப்ஷனாய் இருக்கப் போகிறது! இந்த வீட்டில் இடறி விழுந்தால் டாக்டர் சீட்டு தானே! இதோ ரசீது. இந்தா.

சாவி (கசப்புடன் சிரித்து) : கொஞ்சம் பெரிசாய் எதுவும் கிடைக்கலியா? இந்தக் கட்டில் கால் நொடிக்கிறது. காகி தம் மடிச்சு வைத்தால் ஆடாமல் இருக்குமேன்னு பார்த் தேன். இந்தக் காகிதம் எப்படிப் போதும்?

ராஜா : நீ இப்படியும் அப்படியும் ஆடாம ஒரே பக்க மாய் இரு. கட்டில் ஆடாது. எதுக்கு இப்ப உட்கார்ந்திட்டு இருக்கே? படுத்துக்கோ முதல்லே.

சாவி : கஞ்சி வைக்கிறீங்களேன்னு பார்த்தேன். குடிச் சிட்டு ஒரு வழியாய்த் தூங்கலாம்.

ராஜா : இதோ ஆச்சு. (தரையில் கொஞ்சம் எடுத்துப் போட்டுத் தேய்த்துப் பார்க்கிறார்) நொய் வெந்துட்டுது.

சாவி : நொய்க் கஞ்சியா வைச்சிருக்கீங்க?

ராஜா : ஆமாம்,ஏன்?

சாவி : டாக்டர் பார்லி கஞ்சின்னா சாப்பிடச் சொன்னார்?

ராஜா : டாக்டருக்கென்ன, ஆப்பிளும் ஹார்லிக்சும் கொடுங்கன்னு கூடத்தான் சொல்றார். வெறும் கையை வச் சிட்டு முழம் போடறோம்னு அவருக்கு என்ன தெரியும்?

(கஞ்சியில் ரசமும் உப்பும் போட்டு ஆற்றிக் கொண்டு வருகிறார்).

சாவி (குடித்துக் கொண்ட) : வேணு வந்திருந்தான் மத்தியான்னம்.

ராஜா : கஞ்சிக்கு உப்பு சரியா இருக்கா? நீ பாட்டுக் குக் குடிக்கிறியே?

சாவி : நாக்கு மரத்துப் போய் ரொம்பக் கால மாகிறது. ஷெல்பு மேலே எக்ஸ்ரே படம் கிடந்ததை எடுத்துப் பார்த்தான்.

ராஜா : யார்?

சாவி : வேணுவைத்தான் சொல்றேன். ‘என்ன சித்தி, ரொம்ப மோசமாயிருக்கே லங்ஸெல்லாம்? ஆஸ்பத்திரி யிலே அட்மிட் ஆகக் கூடாதோ’ன்னு கேட்டான்.

ராஜா : ஆமாம். பெரிய எம்.டி. இவன். லங்ஸ் மோச மாயிருக்கிறதைக் கண்டுபிடிச்சுட்டான்!

சாவி : ஏதோ அவனுக்குத் தோணியிருக்கு. சொன்னான். ஒரு வருஷம் அவன் அம்மா உடம்பாய்க் கிடந்தாளே அவன் பார்த்ததில்லையா? அதனாலே தெரிஞ்சிருக்கும்.

ராஜா : கொஞ்சம் மோர் ஊத்திக்கிறியா, இல்லே ரசம் மட்டும் போதுமா?

சாவி : ரசம் போதும். ராத்திரி எனக்குக் காம்போஸ் மாத்திரை தேவைப்படாது.

ராஜா : இந்த நைஸ் வேலையெல்லாம் வேண்டாம். ஞாபகம் இருக்கு. இப்பப் போய் வாங்கிட்டு வர்றேன்.

சாவி : மாத்திரை இல்லாமலே, எனக்குத் தூக்கம் வரும் போல இருக்குன்னு சொன்னேன். பார்மஸி வரையிலே எதுக்கு அனாவசியமாய் நடக்கணும். அவன் வேறே…

ராஜா : கடன் தரானோ இல்லையோன்னு குத்திக் காட்டறியாக்கும்? எல்லாம் கொடுப்பான். படுத்துக்கோ பேசாமல்.

(சாவித்திரி, மடிந்த தலையணையைப் பிரித்து நீவி விடுகிறாள். தொளதொளவென்று ஆடுகிறது. மறுபடியும் அந் தப் புகைப்படத்தை ரகசியமாய்ப் பார்த்துக் கொள்கிறாள்.)

ராஜா : போய் மாத்திரையும் க்ளூகோசும் வாங்கிட்டு வர்றேன். கதவைச் சாத்திக் கொண்டு கொஞ்ச நாழி படுத்திரு.

சாவி : கொஞ்ச நாழி என்ன, நாள் பூரா அதைத்தானே செஞ்சிட்டு இருக்கேன்.

(ராஜாமணி போகிறார். சாவித்திரி எழுந்து சுவரைப் பிடித்து கொண்டே போய்க் கதவைத் தாளிட்டு விட்டு வரு கிறாள். திரும்புகையில் அலமாரியில் சுவாமி படத்தின் முன் கை கூப்பிக் கொண்டு சற்று நிற்கிறாள். பிறகு, கட்டிலுக்குத் திரும்பி வந்து அந்தப் புகைப்படத்தை எடுக் கிறாள். அது ஒரு இருபது வயதுப் பெண்ணின் படம்.)

சாவி (கண்ணில் நீர் தளும்ப) : ஜகதா! அடியே ஜகதா! இப்படி எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போய் என்ன சுகத்தைடி கண்டுட்டே! பாவிப் பெண்ணே!

(மார்போடு அணைத்துக் கொண்டு அழுகிறாள். பிறகு படத்தைக் கண்ணெதிரில் எட்டப் பிடித்துக் கொண்டு பார்க்கிறாள். தயங்கித் தயங்கி அதைத் திரும்ப வைக்கிறாள். கண்ணைத் துடைத்துக் கொண்டு படுக்கிறாள். கன்னத்தில் வடிந்த கண்ணீர்க் கோடுகள் மெல்ல மெல்லக் காய்கின்றன.)

2

(மருந்து ஷாப், கடைக்குச் சொந்தக்காரர்களான அண்ணனும் தம்பியும் ஒருவன் மருந்துப் புட்டிகளை அடுக்குவதும் இன்னொருவன் கணக்குகளைப் பார்ப்பதுமாக இருக்கிறார்கள்.)

அண்ணன் : ஜானி! அந்த ராஜாமணி வர்றார். பாலன்ஸ் ஏற்கெனவே ரொம்ப ஏறியிருக்கு. இனிமேல் கடன் கொடுக்காதே.

தம்பி : நான் பார்த்துக்கறேன்.

(ராஜாமணி படியேறி வருகிறார். தெருவில் மெல்லிசாய்ப் போட்டுக் கொண்டிருந்த தூறல் பலத்த மழையாக வடிவெடுக்கிறது.)

அண் : வாங்க, வாங்க! சார் தன் கணக்கு மொத்தமும் இன்னிக்குத் தீர்த்துடறதுன்னு வந்திருக்கார் போலிருக்கு. அதான் மழை கொட்டுகிறது?

ராஜா : (முகம் கறுத்தவராக) பாக்கி எங்கே போயிட றது? அடுத்த மாசம் தீர்த்துடறேன்.இப்ப…. (பையிலிருந்து மருந்துச் சீட்டை எடுக்கிறார்.)

அண்: ஸாரி சார்! வெரி ஸாரி! கடன் கொடுக்கறதுக்கு இல்லை…

தம்பி (குறுக்கிட்டு) : என்னண்ணே! சார் ரொம்ப நாளைய கஸ்டமர்! அவருக்குக் கொடுக்க மாட்டேன்னு சொன்னால் எப்படி?

அண் : நீ சும்மா இரு! இந்தக் கிரெடிட் கணக்குகள் பூராவையும் ஒத்துக்க முடியாதுன்னு ஆடிட்டர் சொன்னப்போ நீ எங்கே போயிருந்தே?

ராஜாமணி : (புரிந்து கொண்டு)எனக்காக உங்களுக்குள் ஏன் சண்டை? வர்றேன்.

(வெறுப்பும் கோபமுமாகத் தெருவில் நடக்கிறார். மழை சோவென்று கொட்டுகிறது. லட்சியம் பண்ணாமல் நடக்கிறார்.)

ராஜா : திருட்டுப் பசங்கள்! என்ன நாடகம் நடிக்கிறாங்க!

(ஒரு கார் அவரை உரசினாற் போல் வந்து நிற்கிறது. அதை ஓட்டி வரும் யுவதி, பக்கத்துக் கதவைத் திறந்து விடுகிறாள்.)

பெண் : அப்பா! ஏறிக்குங்க. ஒரே மழையா இருக்கு.

(அவளை அவர் திரும்பிப் பார்க்கிறார். உடனே வெறுப்புடன் மேலே நடக்கிறார்.)

பெண் : அப்பா, அப்புறம் கோவிச்சுக்கலாம். காரில் ஏறிக்குங்க. அப்பா!

ராஜா : (சீற்றத்துடன்) சீ! அப்பான்னு என்னைக் கூப்பிடாதே! நடுரோட்டில் மானம் கெட்டுப் போற மாதிரி பேசிடுவேன்! அப்பாவாம் அப்பா! பல்லை உடைச்சிடுவேன்!

(அவள் கலக்கத்துடன் சாலை இரு பக்கமும் மழைக் காக ஒதுங்கியிருப்பவர்கள் தங்களை வேடிக்கை பார்ப்பதை உணர்கிறாள். ஒரு பெருமூச்சுடன் திறந்த கதவைச் சாத்திக் கொண்டு காரை ஓட்டுகிறாள்.)

ராஜா : அப்பாவாம் அப்பா. வெட்கமில்லாமல் கூப்பிட வந்து விட்டாள்.

3

(ராஜாமணி வீட்டுக்குள் நுழையும்போது சாவித்திரி புஸ் புஸ்ஸென்று மூச்சு இரைக்கப் படுக்கை கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறாள்.)

சாவி (திணறி) : வந்துட்டீங்களா? அப்போ பிடிச்சு எனக்கு…

ராஜா : (அலுப்புடன்) எதுக்கு எழுந்து உட்கார்ந்திட்டிருக்கே? படுத்துக்க.

சாவி : மாத்திரை… வாங்கிட்டு வந்தீங்களா?

ராஜா : அதான் வேணாம்னியே? இப்ப ஏன் கேட்கிறே?

(வெறுப்புடன் பையை விசிறியெறிகிறார் கட்டிலில். மூன்று நாலு பத்து ரூபாய் நோட்டுகள் அதனுள்ளிருந்து வெளியே விழுகின்றன.)

சாவி : ஏன்னா, ஏது, இது?

ராஜா : (திடுக்கிட்டு) ஏது? (கையில் எடுக்கிறார். முகம் வெக்கிறது. பல்லைக் கடிக்கிறார்.) அந்தச் சண்டாளி போட்டிருக்கிறாள் எனக்குத் தெரியாமல்! பிச்சை போடறாளா பிச்சை!

(நோட்டுக்களைச் சுக்கு சுக்காய்க் கிழித்து எறிகிறார்.)

சாவி : யார் போட்டாங்கறீங்க? ஜெகதாவா? பார்த்தீங்களா அவளை? எங்கே? எப்போ?

ராஜா : (கிழித்த துண்டுகளை வெளியே எறிந்து விட்டுத் திரும்பி) அவள் பேரைச் சொன்னால் பல்லை உடைச்சிடுவேன்! படுத்துக்க பேசாமல்.

சாவி : ஏன்னா, எங்கே பார்த்தீங்க அவளை? சொல்லக் கூடாதா? அவள் இங்கே வர வேண்டாம். பேச வேண் டாம். பார்க்க வேண்டாம். வழியிலே பார்த்தால் அதைக் கூட என்கிட்டே சொல்லக் கூடாதா?

ராஜா : கூடாது, கூடாது, கூடாது! அவள் செய்த துரோகம் லேசுப்பட்டதா? எத்தனை கஷ்டப்பட்டு, யார் யார் காலையெல்லாம் பிடிச்சு அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன்! இந்தக் குடும்பத்துக்கு ஒத்தாசை பண்ணுவாள்னு எத்தனை நம்பியிருந்தேன்!

சாவி : (கோபத்தின் பலத்துடன்) நம்மோடு இருந்திருந்தால் என்றைக்கு அவளுக்கு வழி பண்ணியிருக்கப் போறீங்க? ஆயுசுக்கும் நமக்குச் சம்பாதிச்சுப் போட்டுக் கொண்டு, கிழவியாவே ஆயிருப்பாள்.

ராஜா : அதுக்காக? அதுக்காக?

சாவி : அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக் கொண் டாள். நல்ல பணக்கார மேலதிகாரி. ஆசைப்பட்டான். உங்களைக் கேட்டான். முடியாதுன்னு ஒத்தைக் காலில் நின்னீங்க. அவள் பண்ணிக் கொண்டு விட்டாள்.

ராஜா : அவன் என்ன ஜாதிடி? என்ன ஜாதி?

சாவி : நல்ல ஜாதி. இருதயமுள்ள ஜாதி. பெருந்தன்மையான ஜாதி. நீங்க கோவமாய் இருக்கிறீங்கன்னு தெரிஞ்சும், அவமானப்படுத்தறீங்கன்னு தெரிஞ்சும், ஜெகதாவை இங்கே வந்துட்டுப் போயிட்டு இருக்கட்டும்னு சொல்லியிருக்கான். நீங்கதான் அவள் இங்கே வரக் கூடாதுன்னு….

ராஜா : வர்றதா? அவள் நிழல் கூட இங்கே படக் கூடாதுடி. பட்டால் ஒரு கொலை விழும்! புரிகிறதா? கொலை விழும்னேன்!

(உணர்ச்சி வசப்பட்டதால் இருமுகிறார்.)

சாவி : சரி, சரி. உடம்பெல்லாம் ஈரம் சொட்டு கிறது. தலையைத் துவட்டிக்குங்க.

ராஜா : (தலையைத் துவட்டியபடி) சாகறேன்டி நான்! சாகறேன்! நீ அந்தத் துரோகியோடு ஆனந்தமாயிரு! அந்த ஜாதி கெட்ட மாப்பிள்ளையோடு குடித்தனம் நடத்து.

4

(ஒரு மாதம் கழித்து ஏறத்தாழ அதே நேரம். அடுப்பில் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்தில் உட்கார்ந்திருப்பது சாவித்திரி. ராஜாமணி கட்டிலில் படுத்திருக்கிறார்.)

சாவி : ஏன்னா, கஞ்சிக்கு ரசம் ஊத்திக்கிறீங்களா?

ராஜா : வந்து… ஏதோ சொல்ல வாயைத் திறக்கிறார். அடுக்கடுக்காய் இருமல் வருகிறது) சாவித்திரி… சாவித்திரி…

சாவி : (அருகில் வந்து) மருந்து தீர்ந்து போச்சு. இன்னொரு பாட்டில் வாங்கணும். மருந்துக் கடைக்குப் போய்….

ராஜா : வேண்டாம், வேண்டாம். அவன் கிட்டே போகாதே. (இருமல்) அத்தோட… அத்தோட…

சாவி : சொல்லுங்க.

ராஜா : பழைய மருந்தெல்லாம் இனிமே பிரயோசன மில்லேன்னு நேத்து என்கிட்டே டாக்டர் சொல்லிட்டார்.
சாவி : பின்னே?

ராஜா : இரண்டு நாளைக்கு ஒருமுறைன்னு மூணு மாசம் இஞ்செக்ஷன் போட்டுக்கணுமாம். ஒரு ஊசி பதினெட்டு ரூபாயாம். அப்புறம் டாக்டர் பீஸ் வேறே. மூணு மாசத்துக்கப்புறம் ஆபரேஷன் பண்ணிக்கணுமாம்.

சாவி : பண்ணிடறது.

ராஜா : பண்ணிடறதா? என்னத்தை வைச்சுப் பண்றது?

சாவி : நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அந்த ஒற்றை வடம் சங்கிலி அறுந்து துண்டு துண்டாய்க் கிடந்தது. இப்பத்துக்கு உதவாமல் எப்ப உதவப் போறதுன்னு வித்துட்டேன்.

ராஜா : நல்ல வேளை… நான் என்ன நினைச்சேன்னா…

சாவி : உங்க சந்தேகம் புரியறது. நான் அந்தப் பாவி கிட்டே போய் பணம் வாங்கியிருப்பேனோன்னுதானே பயப்படறீங்க! மாட்டேன்னா! மாட்டவே மாட்டேன். உங்க உடம்பிலே என்ன ரத்தம் ஓடறதோ, அதேதான் என் உடம்பிலேயும் ஓடறது.

ராஜா : அதானே பார்த்தேன். ஜகதா கிட்டே ஒரு பைசா கூட வாங்கிக்காதே!

சாவி : நம்ம குடும்பத்துக்கு அப்படியொரு அவமானம் ஏற்படுத்தினவள் மூஞ்சியில் முழிக்கவே மாட்டேன்! நான் உங்கள் பத்தினி! நீங்க கிழிச்ச கோட்டை என்ன நேர்ந்தாலும் தாண்ட மாட்டேன். உங்களுக்கே ஆபத்தாயிருந்தால் கூட சரி!

(வாசல் கதவை யாரோ தட்டுகிறார்கள்.)

சாவி : (எழுந்து சென்று) யாரது? (கதவைத் திறந்தவள் சட்டென்று வெளிப்புறம் போய் கதவைச் சாத்திக் கொள்கிறாள். தாழ்ந்த குரலில்) என்னத்துக்குடி ஜகதா இந்த வேளையிலே?

ஜகதா : அப்பாவுக்கு உடம்பு தேவலையா? மருந்து வாங்கிக் கொடுத்தியா?

சாவி : எல்லாம் வாங்கித் தரேன். கவலைப்படாதே.

ஜகதா : நான் பணம் தந்தேன்னு சொல்லிடாதே!

சாவி : (விரக்தியுடன் சிரித்து) சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவருக்குத் தெரியும் நீதான் கொடுத்திருப்பேன்னு. என்கிட்டே ஒரு திருகாணி கூடக் கிடையாதுன்னு நன்றாகத் தெரியும். இருந்தாலும் வறட்டு ஜம்பத்தை விட்டுக்க மாட்டார்! சரி, சரி. நீ போ.

ராஜா : யார் வந்திருக்கிறது அங்கே?

சாவி : அந்தக் கடன்காரிதான் (இரைந்து) போடி சொல்றேன்! உன் நிழல் கூட இந்த வீட்டு வாசலில் விழக்கூடாது! போ! உள்ளே ஒரு அடி எடுத்து வைச்சியோ ஒரு கொலை விழும்! (உள்ளே திரும்புகிறாள்).

ராஜா : அந்த நாய்கிட்டே ஒரு பைசா வாங்காதே!

சாவி : சே! சே! வாங்குவேனா என்ன? நீங்க மருந்தைச் சாப்பிடுங்க.

(மருந்து கொடுக்கிறாள். அவர் குடிக்கிறார்.)

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *