அதுதான் பாயின்ட்!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 1,343
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கார் போன வேகத்தை விட அதி வேகத்தில் விநோதா பொரிந்து… புலம்பினாள்.
“அவர் பார்வை வெறுமே பார்க்காது சுஜா. அப்படியே கொத்தியெடுக்கும். வச்ச முழியை எடுக்க மாட்டார் உடம்பெல்லாம் ஊர்ந்து, முழுங்கறாப்போல ஊடுருவும்…”
குறுக்கே நடந்த எருமைக்காய் ஹாரனை அழுத்தி, ஒதுங்கி, கியர் மாற்றினேன் – அது முணங்கியது.
“எங்க வீட்டிலே நேர் மாறு. வச்ச கண்ணை எடுக்காதே. கண்ணு, மனசை ஜோடியாய் ஒரே சுவனத்தில நிறுத்தும்பார்;”
“என்ன சுஜா சொல்ற? சைட் அடிம்பாரா உன்னை…?”
”ஐயோ… உன்னது அரண்டவன் பார்வையாயிடுச்சு. எது அசைஞ்சாலும் பேய்தான்” – சிரித்தேன்.
”அப்ப என்ன சொன்னா?”
கழற்றிய குளிர் கண்ணாடியைப் பத்திரமாய் வைத்தேனா என்ற சந்தேகம் முளைவிட, என் கைப்பையைத் திறந்து துழாவினேன். தேடியது விரலுக்குச் சிக்காததால் குனிய “என்ன தேடற சுஜா? ரோட்டை விட்டுக் கண்ணை எடுக்காதயேன்” படபடத்தாள் விநோதா.
“இதைத்தான் அவரும் சொல்வார். காரில ஒரு கீறல் விழுந்தாத் தாங்காது அவருக்கு, கைக்குட்டை, பேனா, லிப்ஸ்ட்டிக். ஏதாவது தேடுவேன். இல்ல, பொட்டு சரியா நடு நெற்றியில் இருக்கானு ரியர்வ்யூ கண்ணாடியிலே நொடி நேரம் பார்ப்பேன் – பொறுக்காது அவருக்கு.”
”சரிதானே? நீ முழுசா வீடு போய்ச் சேர வேண்டாமா!”
“அப்படிச் சொன்னாத் தேவலையே! ‘இன்னைக்குக் கிழவி உங்கையால டிக்கெட் வாங்கிட்டுப் போகப் போகுது. குழந்தை பாவம்… சின்ன உயிரும்மா! கோழிக்குஞ்சு சூப்புக்கு ரெடி – கியர் பாக்ஸ் முணங்கறது எனக்குத் தாங்கலை சுஜா’ம்பாரு. உருகல், பிறருக்காகத்தான்,”
“அது உம்மேலே உள்ள அக்கறைடீ, எங்கதையைக் கேளு. மேடும் வளைவுமாய் ஒரு பொண்ணு நடந்தா… இவர் பார்வை துரத்தும்..”
“ஒரு ரசனைதாள்,”
“அவ அம்சம் பத்தி என்கிட்டயே அபிப்ராயம், விமர்சனம் எல்லாம்.”
“அப்போ ஆபத்தேயில்லை,”
“போடீ… நான் ஒரு வாரமா அவர்கூட பேசலைத் தெரியுமா?” இடது புறத்தில் உரசலாய் ஓவர்டேக் செய்து பறந்த ஆட்டோக்காரனை முறைத்த என்னை,
“ஏன்னு கேளேன் சுஜா” – துளைத்தாள், தோழி.
“இல்லைன்னாலும் சொல்லப் போற நீ…”
“சொல்றார்… அமலா மெலிசான நளினம், குஷ்பு கவர்ச்சிக் குண்டு. அதுக்கப்புறம் யாரும் சரியில்லை விநோ – நல்லவேளை இப்போ மணிஷா கொய்ராலா வந்தா’ன்றார்.”
“ம்ம்… அசத்தலாத்தான் இருக்கறா.”
“பேரே வேடிக்கை – நீள கழுத்தும் மூஞ்சுமா… கேட்டுட்டேன் சுஜா அவரை ‘என்னை விட அவ அழகா’ன்னு”
எனக்குள் சிரிப்பு குமிழிட்டது.
“என்ன ஒரு அலட்சியமா என்னைப் பார்த்தார் தெரியுமா? அடங்கற பாவத்திலே ஒரு சிரிப்பு பிறகு அழுத்தந்திருத்தமா – ‘ஆமா அவ அழகுதானே’ங்கறார்.”
அழுகையில் உதடுகள் கோணிய விநோதா, அப்பொழுது டி.வி.நட்சத்திரத்தின் ரேஞ்சைக் கூட எட்டவில்லை!
“அசடு… அழாத! நீ பாயிண்ட்டை மிஸ் பண்ணிட்டு சுத்தி சுத்தி வர்ற”
“பாயிண்ட்டுக்கு வரேன் – ‘அவளை விடவும் ஷில்பா ஷெட்டி லட்டு குட்டி’ன்னு உருகறார்!”
“ஓ? தீபாவளிக்கு ‘மிஸ்டர் ரோமியோ’ ரிலீசுன்னு நினைக்கறேன். ஷில்ப்பாவே தன் முதல் தமிழ் ப்ரீவ்யூ ஷோவிற்கு உங்க ரெண்டு பேரையும் அழைக்கிறான்னு வை,”
“ஹே! நல்லாப் போனேனே” நெஞ்சு ஏறி இறங்க சீறினாள்.
“போற, அங்க அந்த சின்னத் தியேட்டரிலே நெருப்புப் பத்திக்குது. ஒரே அமளி துமளி. அத்தனைப் பேரும் கதவுக்காய் ஆவலாய்த் தேடிப் பறந்து, ஒருத்தரையொருத்தர் தள்ளி மிதிச்சு..”
“கண்ராவி கற்பனை.”
“சரி… நிறுத்திக்கறேன். அப்போ குமார் உன்னைக் காப்பாத்துவாரா இல்லை… ஷில்ப்பாவையா?”
சிக்னலில் சிவப்பு கண்டு ப்ரேக்கை அவசரமாய் அழுத்தினேன்.
“சினிமாக்காரியைக் காப்பாத்த நூறு பேர் அலையாய்வானுங்க…”
“கேள்வியைக் கவனி விநோ, உம் புருஷன் யாரைப் பிடிச்சு வெளியே கொண்டு வர முயற்சி செய்வார்? யூ ஆர் ஷில்ப்பா?” ‘ஜோடிப் பொருத்த’ ரெகோவின் கறாரில் கேட்டேன்.
“என்னைத்தான்.”
“அதுதான் பாயிண்ட். அதை சதா நினைவிலே வை. உன்ளை விட அழகா…? (ஆயிரம் என வந்ததை நூறுக்கு வெட்டினேன்!) நூறு பேர் இருக்கட்டுமே.. ஆனா, உலகத்திலே அவருக்கு அதி முக்கியமான பெண் நீ… நீ மட்டுந்தான்..!”
“அப்படீங்கற?” சிரிப்புப் பரவிய அவள் முகத்தின் குழந்தைத்தனம் அழகாய்த்தானிருந்தது.
“ஆம்ம்மாம்… என்னவருக்கு இந்த பென்ஸ் கார் ஒரு பொக்கிஷந்தானுன்னாலும் அதுகூட சுறுசுறுன்னு ஒரு சண்டை போட முடியுமா?”
“அதுக்கு நம்மை விட்டா ஆளேது?”
பச்சை கண் விழிந்தது சிக்னல்.
க்ளட்சை முழுமையாய் அழுத்தாது, ஆக்ஸிலரேட் செய்ய, படகு பென்ஸ் முரண்டி சிலிர்த்து, பின் வேகமெடுத்து மிதந்தது
(முத்தாரம்)
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.