அதிதி




(இதற்கு முந்தைய ‘மனு சாஸ்திரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).
‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்’ என்று வணிக குலப் பெண்ணான காரைக்கால் அம்மையார் பாடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ‘எண்ணும் எழுத்தும்’ பெண்கள் கற்ற பாடங்கள் என்பதும் தெரிகிறது.
பெண்கள் கல்வி மற்றும் தொழில்கள் பற்றி இடம் பெறும் பல பாடல்கள நற்றிணை; இறையனார் சூத்திர உரை; பூ வியாபாரம்; குடும்ப விளக்கு; பஞ்சி நூற்பாள் பருத்திப் பெண்டு; மற்றும் நன்னூல் சூத்திரம் ஆகியவற்றில் உள்ளன.
தன் சொற்கள் பஞ்சாகவும்; செய்யுள் இழையாகவும்; செவ்விய சொற்களை அறிந்த புலவன் நூற்கின்ற பெண்ணாகவும்; குறையாத வாய் கையாகவும்; அறிவு காத்திருக்கவும்; குற்றமில்லாத கல்வி நூலானது முடியும் வழி.
இது, பஞ்சு – சொற்கள்; இழை – செய்யுள்; பருத்திப் பெண்டு – செஞ்சொற் புலவன்; வாய் – கை; கதிர் – அறிவு; மை இலா நூல் – (இறையனார் உரை) நன்னூல் விளக்கத்தில் தரப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தில் பெண்கள் நூல் நூற்பதைத் தொழிலாகக் கொண்டனர். அதிலும் குறிப்பாக கணவனை இழந்தோர் பருத்திநூல் நெய்வது வழக்கம்.
குமாரில பட்டர் என்ற பெரிய அறிஞருடன் வாதம் செய்யச் சென்றார் ஆதி சங்கரர். ஆனால் குமாரிலர் இறக்கும் தருவாயில் இருந்ததால், தனது சீடரான மண்டன மிஸ்ரரை சந்தித்து வாதிடும் படி சொன்னார். மண்டன மிஸ்ரரின் வீட்டைத் தேடிச்சென்ற ஆதிசங்கரருக்கு ஒரு வியப்பான அனுபவம் காத்திருந்தது.
மிதிலை நகருக்கு அருகில் ஒரு கிராமத்தின் நதியில் பல பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். மண்டன மிஸ்ரரின் வீட்டிற்கு வழி சொல்லும்படி அவர்களிடம் ஆதிசங்கரர் கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள் சமஸ்கிருத மொழிப் பாடலில் பதிலளித்தார்கள்.
“எந்த ஒரு வீட்டின் திண்ணையிலுள்ள கூண்டுக் கிளிகள் வேதம் சொல்லிக் கொண்டிருக்கின்றனவோ அதுதான் மிஸ்ரரின் வீடு…” என்று பதில் சொன்னார்கள். (இதில் பல விஷயங்கள் தெரிகின்றன. அந்தக் காலத்தில் பிராமணர் வீடுகளில் கிளிகளை வளர்த்தனர். அவைகளும் வேதம் ஓதின).
இதை திருஞானசம்பந்தர் தேவாரமும் உறுதிப்படுத்துகிறது. நாட்டின் வட கோடியிலிருந்து தென்கோடி வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழக்கம் இருந்திருக்கிறது. அக்காலத்தில் நாட்டின் பொதுமொழி சம்ஸ்கிருதம். ஆகையால் ஆதிசங்கரர் சம்ஸ்கிருதத்தில் கேள்வி கேட்டவுடன் அந்தப் பெண்கள் அதிலேயே கவிபாடி பதிலளித்துள்ளனர். பெண்கள் கவி பாடும் திறம் கொண்டதும் இதில் தெரிகிறது. இதில் வியப்பொன்றும் இல்லை.
ஒரு பார்ப்பனப் பெண், அவசர ஆத்திரத்தில் கோபித்துக்கொண்டு ஒரு கீரிப் பிள்ளையை கொன்ற காரணத்துக்காக அவள் கணவன் வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறான். அப்போது அவள் கையில் பிராயச்சித்தப் பரிகாரம் எழுதிய சமஸ்கிருத ஓலையைக் கொடுக்கிறான்.
அந்த சமஸ்கிருத ஓலைக்கு கோவலன் அர்த்தம் சொல்லவதாக சிலப்பதிகாரம் இயம்புகிறது. அந்த அளவுக்கு சோழ நாட்டிலும் சமஸ்கிருதம் பரவியிருந்தது.
கிராமப் பெண்களுக்கு சமஸ்கிருத மொழியில் கவி புனையும் ஆற்றலைக் கண்டு வியந்த ஆதிசங்கரருக்கு விஷயம் விளங்கியது. ஊர்ப் பெண்களே இந்த அளவுக்கு சக்கைப்போடு போட்டால், மண்டன மிஸ்ரர் எவ்வளவு பேசுவார் என்று நினைத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றார்.
தான் பரப்பும் அத்வைதக் கருத்துக்களே சிறந்தவை; தான் சொல்லும் ஞான மார்க்கமே சிறந்தது என்று ஆதிசங்கரர் சொன்னார். இருவரும் வாக்குவாதம் நடத்துவோம், யார் வெல்கிறாரோ அவரது கட்சிக்குத் தோல்வி அடைந்தவரும் வந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
மண்டன மிஸ்ரரோ மாபெரும் அறிவாளி. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல மிஸ்ரரின் வீட்டுக் கிளிகளும் வேதம் ஓதும். ஆகையால் இந்த ஆதிசங்கரர்–மண்டன மிஸ்ரர் பட்டிமன்றத்துக்கு நடுவர் வேண்டுமே! அந்த ஊரில் மிஸ்ரருக்கு சமமான அறிவு படைத்தவர் அவர் மனைவி ஸரஸ்வாணி ஒருவர்தான் என்றும் தெரியவந்தது. அந்தப் பெண்மணி கலைமகளின் மறு அவதாரம். முகத்தில் லெட்சுமிகரம், நாவில் சரஸ்வதி நடனமாடும் அறிவாளி. அவரும் நடுவராக இருக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவரும் ஒரு நிபந்தனை விதித்தார்.
கணவர் பங்குபெறும் பட்டிமன்றத்தில் உண்மையிலேயே கணவர் வெற்றி பெற்றதை தான் அறிவித்தாலும் உலகம் நம்பாது… கணவனுக்கு சாதகமாக ஓட்டுப் போட்டுவிட்டாள் இந்தப்பெண் என்று உலகம் சொல்லும். ஆகையால் நான் திரைமறைவில் இருந்து நடுவர் பணி ஆற்றுவேன். இருவர் கழுத்திலும் புதிய பூமாலை அணிந்து கொள்ளுங்கள். யார் ஒருவரின் மாலை முதலில் வாடி விடுகிறதோ, அவரே தோல்வியுற்றவர் என்றார்.
இதில்தான் விஞ்ஞானமும் சைக்காலஜியும் அடங்கி இருக்கிறது. எவர் ஒருவருக்கு வாதிடும் திறன் இல்லையோ, நல்ல பாயிண்டுகள் இல்லையோ அவர் உரத்த குரலில் கூச்சல் போடுவார். அவர் உடல் பதட்டத்தில் வெப்பம் அடையும். அவர் மாலை முதலில் வாடிவிடும். எவர் ஒருவர் அமைதியாக, வலுவாகத் தன் கருத்துக்களை எடுத்துரைப்பாரோ அவரே வென்றவர்.
பின்னர் எதிர்பார்த்தபடியே ஆதிசங்கரர் வென்றார். கணவனும் மனைவியும் சங்கரர் கட்சியில் சேர்ந்தனர்.
இதில் ஒரு துணைக்கதையும் உண்டு. என் கணவரை வென்ற நீவீர் என்னையும் வெல்லுங்கள் பார்ப்போம் என்று ஸரஸ்வாணி சவால் விட்டதாகவும் அதற்கு ஆதிசங்கரர் இசைவு தெரிவித்தபோது அப்பெண்மணி குடும்ப வாழ்வுபற்றி (செக்ஸ்) கேள்விகள் கேட்டு சங்கரரை கேள்விக் கணைகளால் துளைத்தார் என்றும் பின்னர் சங்கரர் ‘வாய்தா’ வாங்கிக்கொண்டு ‘கூடுவிட்டு கூடுபாயும்’ அஷ்டமா சித்திரையை பயன்படுத்தி கிரகஸ்தாச்ரஸ்யத்தில் ஈடுபட்டு குடும்ப வாழ்வு ரகசியங்களை அறிந்து ஸரஸ்வாணியையும் வென்றார் என்பது உபகதை.
பெண்கள் வாதாடும் திறத்தை திரவுபதி, சீதாதேவி, கண்ணகி கதைகளிலும் பார்க்கிறோம். ஆக அவர்களுக்கு இயற்கையிலேயே இந்த அறிவு இருக்கிறது. இந்துமத தத்துவ விஞ்ஞான நூல்கள் அனைத்தும் பார்வதி கேள்விகேட்க சிவன் பதில் சொன்னதாகவே அமைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலை நாடுகளில் இதுபோன்ற அறிவாளிகளைக் காண்பது அரிது. ஜோன் ஆப் ஆர்க் போன்ற வாதாடிகளும் மிகவும் பிற்காலத்தவரே.
இந்து சமயப் பெண்கள்தான் உலகிலேயே மிகவும் திறமைசாலிகள் என்பதற்கு காரணங்கள் உள்ளன.
பழங்கால உலகில் பெண்களுக்கு ஸ்வயம்வரம் வழங்கிய ஒரேநாடு இந்தியா. நூற்றுக்கணக்கான மன்னர்கள் தங்கள் கழுத்தில் மாலை விழாதா என்று ஏங்கித் தவித்த காட்சியையும்; தேவர்களும் பூவுலகிற்கு வந்து மன்னர்களுடன் நின்ற காட்சியையும் உலகில் வேறு எங்கும் காணமுடியாது. இதன் மூலம் இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள் என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்று பொய் கூறுவோருக்கு சவுக்கடி கொடுக்கிறது.
உலகிலேயே அதிகமான பெண் கவிஞர்கள் இருந்த நாடும் இந்தியாதான். உதாரணமாக தொல்காப்பியருடன் அகஸ்தியரிடம் தமிழ்கற்ற பெண்மணி காக்கைபாடினியார். ரிக்வேதமும், யசூர்வேதமும் பெண்களைக் கடவுளராக வர்ணிக்கின்றன.
அதிதி என்பவள்தான் கடவுளர்க்கு எல்லாம் தாய் என்று உலகின் பழைய நூலான ரிக்வேதம் கூறுகிறது. அந்தப்பெயரை இன்றும் பெண்கள் வைத்துக்கொள்வதோடு, இன்றுவரை பெண் தெய்வங்களை வணங்கும் ஒரேமதம் இந்துமதம்தான்.
நான்கு வேதங்களிலும் போற்றப்படும் இந்து மதத்தின் மிக முக்கியமான மந்திரம் ‘காயத்ரி’ என்பதும் பெண்ணே; காயத்ரியை வேதமாதா என்று அதர்வண வேதம் புகழ்கிறது.
பைபிள், குரான் போன்ற சமயப் புஸ்தகங்கள் கடவுளை ஆண்பாலில் மட்டுமே பேசும். ஆனால் இந்துக்களோ கடவுளுக்கு தாயே அதிதி என்று போற்றும். பெண்களுக்கு சக்தி என்று பெயர் கொடுக்கும் ஒரேமதம் இந்துமதம். சிவனை இயக்கும் விசையே சக்தி என்று சொல்லி அவளை மாதா (அன்னை) என்று போற்றும் மதம் இந்துமதம்.
பெண்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தனர் என்பதை ரிக்வேதம் காட்டுகிறது. வேதகாலப் பெண்களை பாரதியாரும் பாடி மகிழ்கிறார். கார்க்கி வாசக்னவி; மைத்ரேயி; கல்பா போன்ற பெண்மணிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக அகில இந்திய தத்துவ மாநாட்டில் பேசியதையும் உபநிஷத்துக்கள் எடுத்துரைக்கின்றன. கண்ணகி, திரவுபதி, சீதாதேவியின் வாக்குவாதங்களை நம் இலக்கியங்கள் பகர்கின்றன.
சோழமன்னன் ஜஸசூய யாகம் நடத்திய பின்னர், சேர சோழ பாண்டியர் அனைவரும் ஒரேமேடையில் அமர்ந்தபோது ஒளவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. அவருக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தது என்பதை அந்தப் பாடலில் காணலாம்.
உலகையே துறந்த சன்யாசியும்கூட அம்மா ஒருவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை தரலாம் என்பதை ஆதிசங்கரர், பட்டினத்தார் வாழ்வு காட்டும். சிதைக்குத் தீமூட்ட அவர்கள் வந்தனர். தந்தை இறந்தால் இது கிடையாது. ஒரு அன்னை ஆயிரம் தந்தைக்குச் சமம் என்று மனுநீதி நூல் புகழும்.
உலகில் பெண்களுக்கு ஆதரவு கொடுத்த ஒரே பழங்கால நூல் மனு ஸ்ம்ருதி ஒன்றுதான்.
மனு ஸ்ம்ருதியும், சங்க இலக்கியமும் பெண்களைக் குடும்ப விளக்கு என்று போற்றுகின்றன. உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எந்த இலக்கியத்திலும் இதைக் காணமுடியாது.
பெண்களை ஆண்களின் மறுபாதி என்றழைக்கும் சொல் சதபத பிராமணத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது. அதை இன்றும் அர்த்தநாரீ வடிவத்தில் இந்துக்கள் வணங்கி வருகின்றனர்.
பத்தினிப் பெண்களின் சக்தியை விளக்கும் பாடல்களும் நிகழ்ச்சிகளும் இந்து மதத்தில் மட்டுமே உள்ளன. “பெய் எனப் பெய்யும் மழை” என்ற குறளிலும், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” சம்பவத்திலும், வள்ளுவர்—வாசுகி வாழ்வில் நடந்த அற்புதங்களும் இவைகளுக்குச் சான்று.
அனுமன் தோளில் ஏறி தப்பிக்க மறுக்கும் அசோகவன சீதையும் “சொல்லினால் உலகைச் சுடும் சக்தி தனக்குள்ளது; ஆயினும் ராமனுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது; அவன் வந்து தன்னை மீட்பதே முறை…” என்கிறாள்.
சப்த மாதர், பஞ்ச கன்னியர் என்று ஸ்லோகங்கள் மூலம் தினமும் புண்ணியவதிகளை நினைவுகூறும் வழக்கம் வேறு எதிலுமில்லை. புனிதவதி, திலகவதி, சாவித்ரி, கண்ணகி, திரவுபதி போன்ற புரட்சிகரப் பெண்களை வேறு எங்கும் காணமுடியாது.
கங்காதேவி என்ற மறவர்குல மங்கை கணவனின் படைகளுடன் மதுரை வரை வந்து போர்க்கள நிருபர் போல ‘மதுரா விஜயம்’ புஸ்தகம் எழுதியதையும் வேறு எங்கும் காணமுடியவில்லை…