அண்டமும் அற்பமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 165 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணுக்குத் தெரியாத வரிசை கட்டிச்செல்லும் சிற்றெறும்புக் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பேரிசை ஒன்று எழுந்து விரிகின்ற பரவச உணர்வு எனக்குள்! எனக்குள்ளிருந்தா இது எழுகிறது? அல்லது வெளியிலா? அல்லது அந்தச் சிற்றெறும்பின் வரிசையிலிருந்தா? 

இக்கேள்வி என்னை நோக்கிக் கவிந்தபோது, ‘நான்’ என்ற ஒன்று அக்கணப்பொழுதில் நழுவிச்சென்று அப்பேரிசையில் மிதப்பதுபோல் தெரிந்தது. அடுத்த நொடிப்பொழுதில் அப்பேரிசை யாகவே நான் மிதப்பது தெரிந்தது. 

இப்போ நான் மிதந்துகொண்டிருக்கிறேன். அண்டத்தின் இசைவிரிவில் அள்ளுப்பட்டுச் செல்கிறேன். ஏகாந்தமான பிரபஞ்ச விரிவில் எங்கோ இன்மையாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன். 

இந்நேரம் எங்கேயோ அண்டத்தின் ஒரு மூலையில் பிர மாண்ட நட்சத்திரக் கோளம் ஒன்று வெடித்துச் சிதறி ஆயிரம் சூரியன்களின் ஒளிபரப்பிக்கொண்டிருக்கும். அந்த ஒளிப் பிரமாண்டம் பூமியை வந்தடைய எத்த னையோ ஆயிரம் ஒளியாண்டுகள் எடுக்கலாம். இதற்கிடை யில் பிறிதோர் வேற்றுலகாளரின் கலாசாரம் பிரபஞ்சத்தின் வேறோர் எல்லைப்படுகையில் விரிந்துகொண்டிருக்கலாம். பல்லினக் கலாசாரம், பல்வகை உலகங்களில். 

ஓர் அற்ப நேரந்தான் இந்த உணர்வு. மறுகணம் திடீரென எதனாலோ துண்டிக்கப்பட்டவனாய்க் கீழே வீழ்கிறேன் – மேனகை யின் யதார்த்த ஈர்ப்பில் சிக்குண்ட விஸ்வாமித்திரன்போல. இத்தனைக்கும் என் வீட்டு வாசல்படியில் இருந்தவாறு சிறுதொலை வில் வரிசையிட்டுச் செல்லும் சிற்றெறும்புக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நான், எதனாலோ உந்தப்பட்டவனாய் அதனருகே சென்று, அக்கூட்டத்தில் ஊர்ந்துகொண்டிருந்த ஓர் எறும்பைத் தனித்தெடுத்து என் விரலில் ஏற்றுகிறேன், விஸ்வாமித்திரன் தூக்கிய திரிசங்குபோல். 

என்முன் விரியும் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் முன் இந்த எறும்பின் பாத்திரம் என்ன? இது என்ன செய்தியை இப் பிரபஞ்ச வெளியில் காவித்திரிகிறது? இந்த அற்பத்தின் இன்மையும் இருப்பும் எழுப்பும் பிரச்சினையின் மையம் எது? எனக்குள் ஆச்சரியம் இசைபோல் குடைவிரிக்கிறது. 

இதிலிருந்து நான் என்ன உயர்த்தி? 

என் இருப்பும் இன்மையும் இப்பிரபஞ்சத்தில் என்ன தாக் கத்தை ஏற்படுத்தப்போகிறது? இன்னும் மேலேபோனால், இந்த உலகம் இப்பிரபஞ்ச வெளியில் இந்த எறும்பைவிட என்ன உயர்த்தி? ஊதிவிட்டால் பறந்துபோய்த் தொலைந்துபோகும் எறும்புபோல் ஓர் சின்னப் பூகம்பக் கிளர்வில் இது பாழ்! ஒரு சிறுநகையில் எரியும் திரிபுரம் என் கண்முன் தெரிகிறது. இந்தப் பூமியின் இன்மையால் என்ன கெட்டுவிடப்போகிறது? என்ன சுருதிபேதம் ஏற்படப்போகிறது? 

என் கையில் ஊர்ந்துகொண்டிருக்கும், என் பார்வையின் ஈர்ப்புக்குள் புக மிகக் கஷ்டப்படும் இந்த ‘சித்துநுள்ளான்’ என்ன செய்ய முயற்சிக்கிறது? என் புறங்கையின் ரோமங்களுக்கூடாக நெளிந்து நெளிந்து, தரித்துத் தரித்து நகர்கிறது. எனது கையின் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும் அதற்குப் பேர் விருட்சங்களாகத் தெரியுமோ? பெருங்கானகத்திற்கூடாகப் பயணிக்கும் ஓர் அற்ப மனிதனாக அது பட்டது. அது படும் பேரிடரை உணர்ந்து மெதுவாக அதை என் மயிர்க்காட்டிலிருந்து விடுவித்து நிலத்தில் ‘தூக்கி’ விடுகிறேன். எனது இந்த ஜீவகாருண்யச் ‘சேவை’யில் அதன் உயிர் போய்விடுமோ என்ற பயம் வேறு. 

நிலத்தில் ‘இறங்கிய’ அது, சிறிது நேரம் தன் முன்கால்களைத் தூக்கி எழுந்துநின்று ஆறுதல் மூச்சுவிடுவதுபோல் செய்துவிட்டு விடுவிடுவென வேகமாகச் செல்கிறது. அப்போது, அதன் எதிரே அதையொத்த அதன் சகஎறும்பொன்று, எதையோ யோசித்து யோசித்து அங்குமிங்கும் பார்த்து மெல்லமெல்ல வந்துகொண்டிருக் கிறது. நேரெதிரே இரண்டும் சந்தித்துக்கொள்கின்றன. அவ்வளவு தான், ஒன்றையொன்று கட்டிப்பிடித்து, முத்தமிடுவனபோல் காலுயர்த்தி ஏதோ கதைத்தனவா? 

அந்தக் கணப்பொழுதில் வான்வெளியில் ஓர் பேரிடி அதிர்ந்து மின்னல் பெயர்ந்து பிரபஞ்சம் அனைத்தையுமே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்திச்செல்வதுபோல்பட, அது விட்டுச் சென்ற எச்சம் பேரிசைபோல் என்னைச் சூழ்ந்து அதிர்ந்தது. அந்தச் ‘சித்துநுள்ளான்’களிடையே நிகழ்ந்த ‘உரையாடல்’ எவ்வாறு இப்பேரண்டமாய் விரிந்து ஒளி பரப்பி என்னுள் அதிர்ந்தது? அல்லது நான்தான் உணர் வேற்றப்பட்டு அவ் அணு நிகழ்வினுள் இருந்து எழுந்து விரிகிறேனா? 

அந்த இரண்டு சித்துநுள்ளான்களும் ‘செய்தி’ பரிமாறிக் கொண்டபின் வெவ்வேறு திசையில் சென்றுகொண்டிருந்தன. இரண்டும் எங்கோ எங்கோ சென்று இன்மையாக மாறும்வரை பார்த்துக் கொண்டிருந்த போது, அவை மறைந்த வெற்றுப்புள்ளியில் ஓர் பிரமாண்ட வெளி, வாய்பிளந்தெழுகிறது. அதற்குள் எண் ணிறந்த ராட்சத நட்சத்திரக் கோளங்களின் பேரசைவு, அவற்றைச் சுற்றிக் கும்மியடித்துவரும் கோள நிரைகளின் பேரிசை. 

இவ்வேளை திடீரென என் இருப்புக் குறுகிக்குறுகி இன்மை யாகிக் கரைந்துகொண்டிருந்த இன்மைப் புள்ளியில் ஓர் அணுவின் சுழற்சி. அந்த அணுவின் மையமாம் புறோட்டோன் நியூட்றோன் களை எலெக்ட்றோன் வலம்வரும் கோள நிரைகளின் செவிகடந்த இசை எங்கோ கிணுகிணுப்பதுபோல்… அதோ, அங்கே நிரையிட்டுச் செல்லும் அந்த சிற்றெறும்புக் கூட்டத்திலிருந்தா, அது எழுகிறது? 

ஓர் அணுவுள் அண்டத்தின் பிரமாண்டம் அடக்கம். அண்டப் பிரமாண்டமே ஓர் எறும்பின் பிரசவிப்பாய் என்முன் விகசித் தெழுகிறது. இத்தகைய ஒவ்வொரு தரிசன விகசிப்பிலும் ஓர் இசை வடிவம் அதற்கு உறையிட்டு எனக்குள் அதிர்கிறது. 

திடீரென ஏதோ என் நெற்றியில் கடிப்பதுபோல்பட்டது. சுட்டுவிரலை எடுத்து அவ்விடத்தைச் சொறிந்துவிட்டு என் விரல் மீண்டபோது எனக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. எனது சுட்டுவிரல் நகத்தின் விளம்பில், வரிசைகட்டி மண்ணில் ஊர்ந்துகொண்டிருந்த சிற்றெறும்பில் ஒன்று நசியாத குறையாகத் துடித்துக்கொண்டிருந்தது. 

நல்ல காலம், அது நசிந்துசிதையாது உயிர்பிழைக்கும் நிலை யில் இருந்தது. 

என் முகத்திற்கு நேரே பிடித்து அதை ஆச்சரியத்தோடு பார்த்தேன். அந்த அற்பத்தின் துடிப்புக்கு இப்பிரமாண்டப் பின்னணி அழகேற்றுவதுபோல் பட்டது. இல்லை, இந்தப் பிரபஞ் சமே அதற்குள் இருந்து பிரசவிக்கப்படுகின்ற அழகின் பீறிடல் என் கண்களைக் கூசவைப்பதுபோல்… 

என் சுட்டுவிரல் விளிம்பின் நக இடுக்கைவிட்டு ஒருவாறு வெளிவந்து, அது ஏதோ யோசிப்பதுபோல்பட்ட டது. 

எவறெஸ்ற் மலையின் உச்ச சிகரத்தில் ஏறிய ஹிலறியும் டென்சிங்கும் இவ்வாறுதான் யோசித்திருப்பார்களோ? 

என் விரல் நுனியில் நின்ற எறும்புக்கு, கீழே இருந்த தரை அதல் பாதாளமாய்ப் பட்டிருக்குமோ? 

அந்த எறும்பைப் பார்த்துக்கொண்டிருந்த நான், அதை அப்படியே ஒரு ஊது ஊதிவிட்டேன். 

அது, சூறாவளியில் அள்ளுப்பட்ட தூசாய் எங்கு பறந்ததோ! என்னுள் ஒரு பேரினவாதியின் அகங்காரமும் உதாசீனமும் குடி புகுந்தமாதிரி. 

என்முன்னே எவறெஸ்ற் சிகரத்தில் இருந்து தள்ளப்பட்ட மனிதனொருவன், எத்தனையோ ஆயிரம் அடிகளுக்குக் கீழே விழுந்து துண்டுதுண்டாகச் சிதறிப்போவது தெரிந்தது. 

ஆனால், எறும்பின் எடையின்மை அதை அந்த நிலைக்குத் தள்ளியிருக்காது. பரசூட்டில் போயிறங்கும் ஒருவனைப்போல் அது ஆடி அசைந்து நிலத்தில் போய்த் தரித்திருக்கும். 

ஆனால், எனது ஊதல் ஒரு வன்முறையாகவே பட்டது.

ஏன் அப்படிச் செய்தேன்? 

வெறும் காரணமற்ற உந்துதல்? 

இல்லை, நான் அப்போது, திரிசங்குவை ஏற்க மறுத்த தேவர்கள்போல் சிற்றுயிர்களை, சிற்றினங்களைத் துச்சமாக மதிக்கும் பேரின மனநிலைக்குள் வீழ்ந்திருந்தவன்போலவே பட்டது. 

இன்னிசை மீட்டிய தந்திகள், திடீரென அறுபட்டு ‘டண்’ என்ற அவல இசை எழுப்பி ஒன்றோடொன்று மோதிச் சுருண்டன. 

பிரபஞ்ச வெளியில் சுழன்றகொண்டிருந்த கோடானுகோடி கோள நிரை அடுக்குகளிலும் அதிர்வுகள் ஏற்பட்டு, அவை தாம் ஓடிய அச்சிலிருந்து சற்று விலகிச் சுழன்றன. அடுத்த நொடி எண்ணிறந்த எரிகற்கள் ஒவ்வோர் கோள மண்டலங்களிலும் உதிர்வுற்றுச் சொரிந்தன. 

நான் ஊதிவிட்ட எறும்பு எங்கே அள்ளுப்பட்டுப் போனதோ! அதை நினைக்க எனக்குள் ஒருவகைத் துக்கம் கசிவதுபோல் தெரிந்தது. 

நான், வரிசைகட்டிச் செல்லும் எறும்புக் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 

சிற்றெறும்பென்றால் அது அற்பமா? அல்ல; அது ஓர் அண்டம். அண்டமென்றால் சிற்றெறும்பைவிடப் பெரிதா? அல்ல; அதைவிடச் சிறிதே, அப்படியா? 

அதோ எறும்புக் கூட்டம் பேர்மௌனமாய் ஊர்ந்துகொண் டிருக்கிறது. 

ஒவ்வொரு எறும்புக்குள்ளும் ஒவ்வோர் அண்டம் உருண்டு கொண்டிருப்பதுபோல் பட்டது. அந்த உருளலில் எத்தனை எத்தனையோ கோடி ஒளிவருடங்களுக்கப்பால் உள்ள பிரபஞ்சக் கோடியில் மாபெரும் நட்சத்திரத் தொகுதிகள் ஒன்றோடொன்று மோதிப் பால்வீதியாய் மாறிப் பளீ ரிட்டுக்கொண்டிருக்கிற காட்சி… 

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *