அடுப்புக்கு எதிரில்




(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெந்நீர் அடுப்பின் முன்னால் நான் உட்கார்ந்து கொண்டேன். விறகு புகைந்து வீட்டைத் தேர்தல் காலத்து நண்பர்களைப்போல் சூழ்ந்துகொண்டு வேதனை செய்கிறதே என்று விசிறியும் கையுமாக அடுப்பின் முன் போய் உட்கார்ந்தேன் என்பதைப் பற்றிச் சந்தேகம் இல்லை. ஆனால் ஏதோ இந்திரஜாலம் ஒன்று நடந்து விட்டது. என்ன நடந்ததென்று சொல்லத் தெரியவில்லை.
கண்ணுக்கு எதிரே ஒரு செடி முளைத்தது. அது இரண்டு இலையாகி ஒளியின் வேகத்தில் கொழுகொம் பாகவும், மரமும் பூவும் பிஞ்சும் பழமுமாகச் சிலுப்பிக் கொண்டு பெரிய மரமாக வளர்ந்து விட்டது. பிறகு ஒரு மின்வெட்டு! ஒன்றுடன் ஒன்றாகப் பிணைந்த இரண்டு கிளைகள் என் கவனத்தை ஈர்த்தன. அதில் ஒன்று பட்டுப்போய்க் கொண்டிருந்தது. பலமாகக் காற்று அடித்தது. கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந் தன. முதலில் தீனமான பெருமூச்சு எழுந்தது. பிறகு ஒரு முனகல் தொடர்ந்து ஓய்ந்தது. அதற்குப் பின்பு புலம்பல் ஒன்று குமுறி அலைபாய்ந்தது.
“வாழ்வு பழுத்துப் போச்சு. காம்பு இற்றுப்போச்சு. ஓட்டம் ஒடுங்கிப் போச்சு. இனி கதை அவ்வளவுதான். பகலின் எழுச்சிக்குப் பிறகு இரவின் ஒடுக்கம். முதிர்ச் சிக்குப் பிறகு முறிவு’ என்ற சொற்கள் காதில் விழுந்தன.
யாரையும் காணோமே என்று நினைத்துக் கொண் டேன். மாமரத்தின் அடிப்பாகத்தில் ஒரு கிழவியின் தலை தெரிந்தது. தாமரைக் குளத்தைப்போல் கண்களில் நீர் துளும்பிக் கொண்டிருந்தது.
“ஏன் பாட்டி, வருத்தப்படுகிறாய்?”
“ஐயோ தம்பி ! கதை முடிந்து போச்சு. நான் பூக்க மாட்டேன். காய்க்க மாட்டேன். நிழல தரமாட்டேன். பழம் தர மாட்டேன் குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை மரங்கொத்திப் பறவை வந்து ஏணிமீது ஏறுவதுபோல் படிப்படியாக ஏறி மரப்பட்டையின் இடுக்கிலுள்ள புழுக்களைத் தேடும். நான் ஓய்ந்து விட் டேன். ஒடுங்கி விட்டேன் காய்ந்து விட்டேன்,” என்று கிழவி குமுறினாள்.
“பாட்டி. இதற்காக வருத்தப்படுவானேன் ? பகட் டுடன் பிறருக்குக் காட்சி அளித்தால்தானா உபயோகம்? பிள்ளைப்பூச்சியைப் போல்’ ஓடிக்கொண்டே இருந்தால் தான் சிறப்பா? வாழ்வின் அறம்”
வாக்கியத்தை நான் முடிக்க வில்லை. மறுபடி ஒரு மின்வெட்டு! பிறகு கருந்திரை! திரையைத் தள்ளியது யார்?
கண் முன்னே ஒரு பெரிய மாளிகை தெரிந்தது மைய அறையில் நான் உட்கார்ந்துகொண்டு உத்தரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய உத்தரம். உத்தரத்தின் நடுவில் ஒரு சாளரம். சாளரத்தைத் திறந்து கொண்டு பழைய கிழவி முகத்தைக் காட்டினாள்.
“என்ன பாட்டி, இங்கே எப்பொழுது வந்தாய்?” என்றேன்.
கிழவி சிரித்தாள். இங்கு வந்து நூறு வருஷம் இருக்கும். இந்த வீட்டுச் சுமையைத் தாங்கக கொண்டி ருக்கிறேன். இந்தக் குடும்பச் சுமையை வீடு தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் ஒன்றை அறிந்து கொண்டிருக்கிறேன். வேலை செய்வதும் வேலை தான். வேலை செய்யாமல் இருப்பதும் வேலைதான். இது வேலையைவிடப் பெரிய வேலை. அந்தப் பெரிய வேலையை இப்பொழுது செய்து வருகிறேன். இங்கு வரு பவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?”
“என்ன சொல்லுகிறார்கள்?”
“இந்த உத்தரம் இருக்கும்வரை இன்னும் எவ்வளவு மாடிகள் வேண்டுமானாலும் வைத்துக் கட்டலாம் என்கிறார்கள்.”
“அடங்கி ஆறிப்போன வைரமாச்சே நீ! வாய் திற வாமல் சும்மா சுமக்கப் பூமியைப் போல அன்பு வேண் டும். வெளியைப் போன்ற தெளிவு வேண்டும்.’
“முன்பெல்லாம் ஒவ்வொரு மூச்சையும் காரியத்தை யும் நான் செய்வதாக நினைத்துச் சிலுப்பிக் கொண்டிருக் தேன். பழுப்பு இலைச் சேலையை உடுக்கக் கொடுத்த பொழுது ஐயோ என்று வருந்தினேன். ஆனால் இப் பொழுது புரிந்து கொண்டேன். குயிலும் கிளியும் குருவி யும் உட்காருவதற்குப் பதிலாகக் குழந்தைகளும் பெண் களும் ஆண்களும் என் ஆதரவை நம்பி உட்காருகிறார் கள் எல்லாமே ஒரு விளையாட்டு, ஒரு வேலை என்பதை அறிந்து கொண்டு விட்டேன்” என்றாள்.
மெய் வழி என்று குறுக்கிட்டேன். பாட்டி விட வில்லை.
“அதனால்தான் இப்பொழுதெல்லாம் கவலைப்படு வதே இல்லை. இப்பொழுதுகூடப் பார்! நேற்று இங்கே வந்தவர் ஒருவர் என்னைக் குச்சியால் தட்டிப் பார்த்து விட்டு, ‘உத்தரங்கூடச் சளைத்துப் போக ஆரம்பித்து விட்டதே’ என்றார். வீட்டுக்காரர் வந்து இரண்டோர் இடங்களைக் கிள்ளிப் பார்த்தார். ‘காலம் என்ற ஒன்று இல்லை என்று சிலர் சொல்கிறார்கள் ஆனால் உண்டு என் பதுதான் உண்மை. இந்த உத்தரம்போட்டு நூற்றிருபது வருஷமாச்சு. இந்த உத்தரத்தின் ஜா தகத்தைத் தந்தை யார் ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருக் கிறார். ஒரே வேலையை எத்தனை நாள்தான் இந்த உத்த ரம் செய்துகொண்டிருக்கும் ? ஏதோ இருந்த வரையில் லாபம்’ என்றார். உண்மைதானே? இப்பொழுதானாலும் எப்பொழுதோ ஆனாலும் எனக்கு ஒன்றுதான். உயிரின் சுமையை இறக்குவதென்பதே கிடையாது. உயிர் சுமையா என்ன ? உன்னுடைய குழந்தையைத் தொலை தூரம் தூக்கிச் செல்ல வேண்டியபொழுது கை வலிக்க லாம். மனசு வலிக்குமா ?” என்றாள்.
அநேக சமயங்களில், கேட்ட கேள்விக்கு நம்மால் சரியாகப் பதில் சொல்லக் கூடுவதில்லை சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை; அல்லது தவறாகக் கொண்டு விடுகிறார்கள்.
இப்பொழுது கேட்ட கேள்விக்கு என்னால் விடை அளிக்க முடியவில்லை. திகைப்புடன் நின்றேன். வீடு மரம் ஒன்றையும் காணோம். அடுப்பு மட்டும் ஏழு வர் ணம் விளங்க எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் நடுவில் கிழவியின் முகம் சட்டம் போடட படம் போலத் தெரிந்தது.
“என்ன பாட்டி, அதற்குள்ளாக-” என்று இழுத்தேன்.
“அதற்குள் என்ன வந்தது? உத்தரம் களைத்துப் போய் விட்டதென்று என்னை எடுத்துப் போட்டுவிட்டார்கள். எனக்கு வருத்தம் பிறக்கவில்லை. பிறகு கோடாலிக்காரன் வந்து என்னை விறகாக உடைத்து விட்டான். இப்பொழுது நான் இல்லாமல் சோறாவதில்லை. வெந்நீர் அறை புகைவதில்லை. வெந்நீர் அறை யில் இந்தக் குழந்தைகள் அடிக்கும் கொட்டம் ரொம்பத் தமாஷாக இருக்கிறது. விளையாட்டை எல்லாம் பார்த் தாகி விட்டது. இனிமேல் நானும் விளையாட்டும் ஒன் றாகி விட்டோம். நான் என்பதில் உனக்குக் கிழவிதான் மிச்சம்.”
“ஆனால் உன்னைப் பார்க்க முடியாதா?”
“கண் இல்லாவிட்டால் முடியாது. இருந்தால் காற்றில், நட்சத்திரத்தில், உங்கள் வீட்டுக் குழந்தை யில், நாயில், பசுமாட்டில்-” என்று கிழவி அடுக்கிக் கொண்டே போனாள்.
“அதிருக்கட்டும். இவ்வளவு நாளாகப் பழகி உன் பெயரைத் தெரிந்து கொள்ளவில்லையே!” என்றேன்.
“எனக்குப் பெயரா ?’ என்று கிழவி சிரித்தாள். சிரிப்பின் தசை வட்டம் கொஞ்சங் கொஞ்சமாக விரிந்து கிழவியை விழுங்கி விட்டது. கிழவியைக் காண வில்லை.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எதிரே வெந்நீர் அடுப்பு, பிசாசுபோல் எரிந்து கொண்டிருந்தது. முழங்காலைக் கட்டிக் கொண்டு நான் எதிரிலே உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் என்னால் நம்ப முடியவில்லை.
– பிச்சமூர்த்தியின் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார் பிரசுரம், சென்னை.