அடகு




(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ஏங்கறேன்! இன்னும் எத்தினி நாளைக்கு அவன் கிட்ட கிடந்து சாவணுங்கரே?’
‘ஏங்குட்டி, ஏன்?’

‘ஏங்கறயே? அவன் புடுங்கித் தின்னறான். பத்து ரூபாயை கடன் வாங்கிட்டு மூணு மாதத்துக்குத் தானே அடகு பேசி வச்சியாம்.’
‘ஆமா.’
‘மாசம் ஆறல்ல ஆச்சு! கடன் சோறு போடறான். நிதம் கடன் சோறுன்னு ஏசிக் காட்றான். அது போவு துன்னா, நம்ப மவனுக்குச் சோறு போட மகார் பண் றான்.
‘அப்பொ என்ன பண்ண?’
‘என்ன பண்ணவா?…சரி நானும் மவனும் கல்லைக் கட்டிக்கிட்டு கிணத்துலே குளத்துலே விழுந்து சாவ றோம். நீ மாத்திரம் கள்ளும் கைமாவும் சாப்பிட்டுக் கிட்டு கிட.’
‘அடி களுதை! சமாசாரத்தைச் சொல்லு.’
‘அவன் கடனைக் கொடுத்தூட்டு, என்னையும் பிள்ளை யையும் அழச்சுக்கிட்டுப்போ.’
‘பணம்? பன்னியை வித்து மீட்டுக்கிட்டு போகட்டுமா?”
‘பன்னியை விக்கப்படாதுன்னு தானே கடனே வாங்கிச்சு. இப்பொ விக்கணுமாங் காட்டியும்!ஏன் இந்த மாசம் சம்பளம் வருமல்ல?’
‘வரும்.’
‘மாச மாசம் தண்ணி போடறாப்போல இந்த மாச மும் போட்டூடாதே. தீவளிக்கு நான் ஊட்டுக்கு வந்துட ணும். இல்லேன்னா. அவ்வளவு தான் பாத்துக்கொ.’
‘அதெல்லால் சரிதான். அவன் என்ன தான் சொல்றான்?”
‘நான் சம்பாரிக்கிற காசெல்லாம் வட்டிக்கின்னு எடுத்துக்கறான். முனிசிபாலிடிலே எனக்குக் குடுக்கிற சம்பளத்தை என் சோத்துக்காக எடுத்துக்கறான். நம்ப மவனை பட்னி போட்டுக் கொல்றான்.
‘போவுதுபொ. பாவம் செஞ்சால் மண்ணாப்போறான் ‘
‘அது அப்பறமல்ல. இப்பொ எனக்கு என்ன சொல்றே?’
‘அழுவாதே, அழுவாதே. சும்மா இரு. தீவளிக்குள் ளார ஊட்டுக்கு இட்டுக்கிட்டுப் போரேன்.’
‘பன்னி இன்னியே, எதுனாச்சும் குட்டிகிட்டி போட் டுச்சா?’
‘ரெண்டு செத்துப்போச்சு. ஒண்ணெ வித்தூட்டேன்.’
‘நீ பாவிப் பயலல்ல! நீயும் உருப்படமாட்டே, என் னையும் உருப்பட விடமாட்டே ஒனக்கு சூடு சொரணை இருந்தா அழச்சுக்கிட்டுப்போ, இல்லாட்டி சாமி இருக்கு.’
பேசியவர்கள் தோட்டி பிரமனும், தோட்டி குப்ப முத்துவிடம் பத்து ரூபாய் கடன் வாங்கியதற்காக அவ னிடம் அடகு வைக்கப்பட்டிருந்த பிரமன் மனைவி கருப்பியும்.
மறு நாள் வாய்க்கால் கரையில் தோழன் நல்லு பிர மனைக் கண்டான்.
‘என்னா அண்ணே! கண்ணுலியே உளறதில்லெ?’
‘உளாமெ என்னா?’
‘தீவளி வருதாமே?’
‘நல்லா வரட்டும்.’
‘ஏன் சொரத்தில்லாமெ பேசறே?’
‘அந்த காலாடி குப்பமுத்து குட்டிக்கும் மவனுக்கும் சோறு தண்ணிகூட போடல்லியாம். பத்து ரூபாய் கடன் கொடுத்தானல்ல. அடகு கெடு தாண்டிப் போயிருச் சாம். தீவளிக்கு முன்னே பணத்தை எறிங்கறான்.’
‘ஊம். அப்பறம்?’
‘இத்தெ என் கிட்டெ நேத்து சொல்லி அவ அளுதா பாரு, அப்பவே பிடுச்சு எனக்கு ரொம்ப வருத்தமா யிருக்கு.’
‘சரி, என்ன பண்ணப்போறே?’
‘சம்பளத்தை வாங்கி அவன் கிட்டெ மொதல்லே தொலைச்சூட்டு,குட்டியையும் மவனையும் இழுத்துக்கிட்டு வரவேண்டியதுதான்.’
‘அதான் சரி. இந்த மாச சம்பளம்கூட முனிசி பாலிடிலே நாளைக்குக் குடுக்கப் போறாங்களாம்.’
‘நல்ல தாச்சு – ஆத்துலெ இருக்கிற கண்டை துள்ளி சட்டிலெ விளுந்தாப்பலே.’
‘ஆமா. கடன் குடுத்திட்டின்னா, புதுச்சேலை, வேட்டி வாங்கப் பணம் வேண்டாமா?’
‘இன்னும் ரென்டு பன்னி இருக்குதல்ல. அதை பட்லர் கிட்டச் சொல்லி தொரைக்கு வித்தூடறேன்.’
‘சபாஸ்– சரியான ரோசனை.’
தோழன் நல்லமுத்து சொன்னதுபோல, மறுநாள் மாலை தோட்டிகளுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப் பட்டது. பிரமன் கையிலும் பணம் ஏறிற்று. பலாப் பழத்தில் ஈ மொய்ப்பது போல பிரமனோடு நாலு ஐந்து சகாக்கள் மஜாவாகக் கிளம்பினார்கள்.
மணி ஏழரை. ஒண்ணாம் நம்பர் கள்ளுக்கடைக்கார னுக்கு வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை. ஒரே கூட்டம். வலுத்த வியாபாரம். கடைக்கருகில், வழியெல்லாம் சிம் ணிக்காய்கள் இருட்டில் சிகப்பு நாமம் சாத்தின. நிழல் நிழலாக தோசை, கைமா, சுண்டல் முதலிய கார வியா பாரிகள் கீழே உட்கார்ந்திருந்தார்கள்.
பிரமன் கள்ளுக்கடைக்குள் புகுந்துவிட்டுத் திரும்பி ஆச்சியிடம் சுண்டல் முறுக்கு வாங்கியபொழுது இடுப் பில் சம்பளத்தில் பாக்கியிருந்தது ஐந்து ரூபாய். விபர மென்ன வென்றால் சகாக்கள் உள்பட நெஞ்சை நனைத் துக்கொண்டதில் செலவு ரூபாய் இரண்டரை; பிந்திய நாட்களுக்காக கடைக்காரனிடம் அட்வான்ஸ் இரண் டரை. கையில் பணமிருந்தால் செலவழிந்து போகுமல்லவா?
தோழர்கள் வீடு நோக்கிக் கிளம்பினர். கால்கள் காற்றை மிதித்தன. வாய்கள் பாட்டையும் பேச்சையும் சிதைத்தன. திடீரென்று பிரமன் ஓரிடத்தில் நின்றான்.
‘டே அப்பா! எத்தான் பெரிய பாம்பு போவுது?’
‘எங்கேறா?’
‘அந்தாலே?’ என்று சொல்லிக்கொண்டு ஒரு வேலிக் காலைப் பிடுங்கி ஓடும் சாக்கடை ஜலத்தை ஓங்கி ஓங்கி அடித்தான் பிரமன். அந்த வேகத்தில் இடுப்பு வேஷ்டி அவிழ்ந்து போய்ப் பணங்களெல்லாம் சிதறி ஓடின. தட் டித் தடவி தோழர்கள் பொறுக்கிக் கொடுத்தது ரூபாய் நான்கு.
பாம்பு செத்துப்போய் விட்டதாக முடிவு கட்டி விட்டு பிரமன் தள்ளாடித் தள்ளாடி வீடு போய்ச் சேர்ந்தான்.
மறுநாள் நடுப்பகலில்தான் பிரமன் போதை தெளி ந்து எழுந்தான். முதலில் தோன்றிய எண்ணம் கருப் பியைப்பற்றி. வீட்டிலிருந்தால் சோறுஆக்கி வைத்திருப் பாள் அல்லவா? பிறகு தான் சமைக்க முயன்றான்; முடிய வில்லை. குடிசையை விட்டுக்கிளம்பி ஆச்சி கடைக்குச் சென்று, நாலு இட்லியும் கால்சேர் மிளகாய் பொடியும் தின்றுவிட்டு ஒரு செம்பு ஜலத்தைக் குடித்து வந்து மரவட்டையைப்போல் சுருண்டு படுத்துக்கிடந்தான்.
மாலை மூன்று மணிக்குத் தோழர்கள் வந்துவிட்டார்கள்.
‘ஏன் அண்ணே! நாய் மாதிரி சுருட்டிக்கிட்டுப் படுத் துக்கிடக்கறே!’
‘என்ன பண்ணனும்?’
‘புதுக்கடை ஓண்ணு இன்னிக்கி வக்கறான். அங்கே புட்டி ஓரணா இன்னிக்கு. நாங்க போரோம். ஒன்னையும் பார்ப்போமுன்னு வந்தோம்.’
கருப்பி, மகன் எல்லாம் மறந்துபோயிற்று. பிரமன் நண்பர்களுடன் புதுக்கடைக்குக் கிளம்பி விட்டான், அதற்குப் பிறகு அவன் கையில் மிச்சமிருந்தது ரூபாய் இரண்டு.
திரும்பி வருங்காலில் ஒருவன் தவிர மற்ற தோழர்க ளெல்லாம் மெதுவாக நழுவிவிட்டனர்.
இருவருமாக கடைத்தெருவிற்கு வந்து சேர்ந்தனர். புதுக்கோட்டை சாயவேஷ்டியும் ஒரு பிள்ளையார் துண் டும் பிரமன் வாங்கினான்-தீபாவளிக்காக.
தீபாவளி நாள் இரவுவரையில் ஒவ்வொரு நாளும் கருப்பி பிரமனை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் வரவில்லை. தீபாவளிக்கு அடகு மீண்டு தன் குடிசைக்குப் போகமுடியவில்லையே என்ற துக்கத்தோடு. தன் மகனுக்கு வேஷ்டியும் தனக்குப் புடவையும் இல் லாது போய்விடுமே என்ற கவலையும் சேர்ந்துகொண் டது.
அப்பொழுதுதான் குப்பமுத்து கடைத்தெருவி லிருந்து தன் குடும்பத்திற்குத் தேவையான துணிமணி களை வாங்கிக்கொண்டு வீடு வந்து நுழைந்தான். நுழைந் ததுதான் தாமதம். அவனைக் கருப்பி கேட்டாள்.
‘ஏன் மாமா! புருசன் தான் தீவளிக்கு மீட்டுக்கிட்டுப் போகல்லியே, எனக்கும் மவனுக்கும் புதுசு எடுத்துக் கிட்டு வந்தீங்களா?’
‘ஒன் புருசன் ரோக்கிதைக்கும் ஒன் லச்சனத்திற்கும் புதுசு வேணுமாங்காட்டியும்! கொள்ளை அடிச்சுப் பணம் கொண்டா, புதுசு வாங்கலாம்.’
‘இத்தினி மாசமா சம்பாரிக்கரேனே, அந்தப் பணத் திலே வாங்கிக் குடு’
‘மாடு வாங்கினா கண்னுக்குட்டி தானே வருது. உன்னை என் கிட்ட அடகு வச்சானே, சம்பளம் உனக் கேன் வரும்? உனக்கும் உன் மவனுக்கும் சோறு போட றது புண்யம்னு நெனைச்சுக்கோ.’
‘பாவி, படுபாவி! இப்படிப் பேசறியே, வவுறு எரியுது.’
‘பச்சைத் தண்ணியைக்குடி. தலையைச் சுத்தி காசை எறிஞ்சூட்டு மவறோஜியாய் மவனையும் கூட்டிக்கிட்டு போயேன் புருசன் கிட்டெ.’
கருப்பியின் முகம் கறுத்தது. நெஞ்சத்தில் தீ எழுந் தது. என்ன செய்யமுடியும்? அதை அடக்கிக் கொண் டாள்…
தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து முழுகும் நேரம் வந்தது. குப்பமுத்து, அவன் மனைவி, குழந்தைகள் எல் லோரும் எண்ணெய் தேய்த்து முழுகினார்கள். புதுசு உடுத்தார்கள். சீனுவெடிகூடச் சுட்டார்கள்.
கருப்பியும் அவள் மகனும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கிழக்கு வெளுத்தது. கருப்பி மகனைக் கூட்டிக் கொண்டு தன் தினசரிவேலை செய்யப் போய்விட்டாள். வேலை முடிந்த பிறகு ஒவ்வொரு வீடாகப் போய் தீபா வளி இனாம் வாங்கினாள். சுமார் முக்கால் ரூபாய் சேர்ந் திருக்கும்.
அப்பொழுது அங்கே வந்தான் குப்பமுத்து-தீபா வளிக் குடி குடித்துவிட்டு.
‘என்னா இனாம் சம்பாரிச்சிருக்கே?!
‘ஏன்?’
‘என்னா ஏன்கறயே?’
‘ஒனக்கேன் சொல்லணும்?’
‘காசைக் கணக்குப்பண்ணி என்கிட்ட நீ குடுக்க வேண்டியவளல்ல?’
‘குடுக்கறென்-விளக்குமாறு’ என்று சொல்லிச் சிரித்தாள் கருப்பி.
நடுத்தெருவிலே, நாலுபேர் கேட்கும்படி, ஒரு ஆண் பிள்ளையை ஒரு பெண் பிள்ளை இப்படிச் சொல்லும்படி ஆச்சே என்று நினைத்தபொழுது குப்பமுத்துவுக்கு அவ மானம் தாங்கமுடியவில்லை. பளீர் என்று அறைந்துவிட் டான் கருப்பியை. கருப்பி அழவேயில்லை. அவள் மகன் அழுதான். அதற்குள் தெருவில் கூட்டம் சேர்ந்துபோய் விட்டது.
கூட்டத்தில் பின்னும் ஒரு ஆள் வந்து சேர்ந்தான். அவன்தான் தீபாவளிக் குடி குடித்துவிட்டு வந்த பிரமன். கூட்ட நடுவில் கருப்பியும் குப்பமுத்துவும் சண்டைக் கோழிகள் மாதிரி நிற்பதையும், மகன் பக்கத்தில் அழுது கொண்டிருப்பதையும் பார்த்தான். ஒன்றும் யோசியா மல் குப்பமுத்துவின்மேல் பாய்ந்து ஒரு குத்து விட்டான். திரும்பிக் கருப்பியை நோக்கிப் பார்த்தான் – விஷயம் என்ன என்று கேட்பது போல. பிரமனைப் பார்த்ததும் கருப்பிக்கு வெறுப்பு பொங்கி எழுந்தது. அவன் தன்னை வந்து தீபாவளிக்கு மீட்டுக்கொண்டு போகாத கார ணத்தை ஊகித்தறிந்துவிட்டாள். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல இஷ்டப்படவில்லை. சும்மா நின்றாள்,
அடி வாங்கிக்கொண்ட குப்பமுத்து விஷயத்தைப் பிரமனுக்குத் தெளிவாகச் சொல்லி முடித்தான்.
‘அதெப்படி இனாம் காசைக்கூட நீ பிடுங்கித் தின்னு ஏப்பம் விடப் பாக்கறே?’ என்றான் பிரமன்.
அந்தக் கேள்வி கேட்டதுதான் தாமதம், அது வரை யில் இனாம் காசைத் தர மறுத்து ஆக்ஷேபித்துக் கொண் டிருந்த கருப்பி திடுமென்று காசை எடுத்து குப்பமுத்து விடம் கொடுத்தாள். இருட்டறையில் சூரிய கிரணம் நுழைந்தது போல் பிரமனுடைய குழம்பிய மனதில் அவள் செய்கையின் பொருள் தெரிந்தது. மார்பு மீது கையைக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷம் நின்றான். அதற் குள் அங்கு கூடியிருந்தவர்கள் தெருவில் பூசல் நடப்பதை ஆக்ஷேபித்து இவர்களை யெல்லாம் கலைத்து விட்டார்கள்.
கருப்பி மகனை அழைத்துக்கொண்டு குப்பமுத்து வுடன் குடிசைக்கு வந்து சேர்ந்த அரை மணிக்குள் பிர மன் அங்கு வந்து சேர்ந்தான்.
“இந்தா உன் பணம்?’
குப்பமுத்து எண்ணிப் பார்த்தான்.
கருப்பி திகைப்படைந்தாள். ‘ஏது பணம்?’
‘எதாயிருந்துச்சுன்னால் உனக்கு என்ன? கிளம்பு.’
குடிசைக்குப் போனபிறகல்லவா வீட்டிலிருந்த பன்றிகளை ஒரு நிமிஷத்தில் பட்லரிடம் விற்றுவந்த பணம் அது என்று தெரியப் போகிறது! அதுவரையில் கொண் டாட்டம்தானே!
குப்பமுத்துவிடம் விடைகூடப் பெற்றுக்கொள்ளாமல் கருப்பி மகனுடன் கிளம்பினாள்.
– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.