கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 1,420 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மெல்லெனத் தவழ்ந்த தென்றற்காற்று அவன் மேனியிற் பட்டதும் அவன் துடியாய்த் துடித்தான். ஆயிரம் தீப்பந்தங்கள் ஒன்றுசேர்ந்து தன் உடலைத் தகிப்பதைப்போல அவன் நெளிந்து, உருண்டு, புரண்டு படுத்தான். அனிச்ச மலரினாலும் அன்னத்தின் தூவியி னாலுமாய மெல் அமளியில் அவன் உடல் புரண்டு வருந்தியது. ஆயிரம் ஆண்டுகளாக அவன் கண்டறி யாத மன வேதனை உள்ளத்தை அரித்துக்கொண்டிருந் தது. நறுமணம் வீசும் புது மலர்களும் சுகந்தம் மணக்கும் தெய்வ சந்தனக் குழம்பும் அவன் மனதின் ஆசையைத் தீர்க்க முடியாது தேடுவாரற்றுக் கிடந் தன. அரண்மனையின் அந்தப்புரத்தில் இந்திராணி “என் நாதன் ஏன் இன்னும் வரவில்லை?” என்று எண்ணிய வளாய் ஏங்கிக்கிடந்தாள். ஆனால், இந்திரன் சபா மண்டபத்தையடுத்த பளிங்கு மண்டபத்தில் ஏகாந்த மாக இங்ஙனம் கிடந்து துயருற்றான். இவ்வளவுக்கும் காரணம் என்ன? “கிடைத்தற்கரிய பதவி, அழிவில் லாத வாழ்வு, அமர உலகம் இத்தனைக்கும் இறைவ னான இந்திரன் ஏன் இங்ஙனம் துயருற்றான்? அவன் மனவேதனையை வளர்த்தவர் யார்? இந்திரன் மனம் இவ்வாறெல்லாம் கற்பனை செய்து எண்ணத்தொடரைச் சிலந்தி நூல்போல இழுத்துக்கொண்டிருந்தது. 

மகிழ்ச்சி, துன்பம்: இரண்டும் மாறிமாறி வருவது மனிதருக்கல்லவா? தேவர்களுக்கரசனாகிய இந்திரனையே ஒருநாள் அவை பற்றிக்கொண்டால்?  சிந்தனை சிதறியது. 

அன்று நடந்த நாட்டிய விழாக் காட்சி அவன் மனத்திரையில் தோன்றியது. தேவ சபையின் நடுவே அரியாசனத்தில் கம்பீரமாக அவன் வீற்றிருந்த காட்சி அவன் பக்கத்தில் தேவகுருவான பிரகஸ்பதி, இசை முனிவன் நாரதன் முதல் யாவரும் இனிதமர்ந்திருந்த காட்சி, உள்ளத்தை அள்ளும் சௌந்தரியதோற்றத்து டன் உடல் நெளித்து ஊர்வசி நடனமாடிய காட்சி எல்லாம் தோன்றி மறைந்தது. அவன் மனம் கற்பனை செய்வதை நிறுத்திவிட்டு அன்று நடந்த நாட்டியவிழா நினைவுகளைத் தொடர்ந்து எண்ணத் தொடங்கியது. என்ன வாழ்வு? என்ன சுகம்? எல்லாமே துன்பம்! தேவர்க்கரசனாகிய இந்திரன் மனம் புழுங்கியது. 

“ஆ, அந்த ஊர்வசி ஏனிந்த வார்த்தைகளைக் கூறி என் உயிரை வாங்கினாள்? சொர்க்க போகமும், காமதேனுவின் வளந்தரு வாழ்வும் என் மனதிற்கு மகிழ்ச்சி தரவில்லையே! ஐயோ, இது என்ன உலகமடா? அவளுக்கு நான் பரிசு கொடுத்தேன். ஆம்! நான் செய்தது தவறா? உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கச் செய்து என் னைப் பரவசப்படுத்தி, நடனமாடிய அந்தப் பச்சைப் பசுங்கிளிக்கு, நடனராணி ஊர்வசிக்கு நான் பரிசு கொடுத்துப் பாராட்டினேன். அதன் பலன் அவள் தந்த பரிசு என் உள்ளத்தையல்லவா கருக்கி வருத்துகின்றது. “தேவர் தேவே, நீங்கள் என் அழகினை மிகைப்படப் பாராட்டிவிட்டீர்கள். கேவலம்! ஒரு மானி டப் பெண், அதுவும் பழமும் காயும் தின்று முனிவ ரொருவருடன் காட்டில் வதியும் அகலிகை. அவள் அழகில் ஆயிரத்திலொரு மடங்குகூட எனக்கில்லையே. உங்கள் பாராட்டுரையும் பரிசும் என்னழகையல்லவா, ஏளனஞ் செய்கின்றன?’ உணர்ச்சி மிகுதியினால் அவள் கூறிய வார்த்தைகள் என்னை உலைக்களத்திட்ட இரும் பைப்போலல்லவா உருகச் செய்துவிட்டது! என் மனம் இனி எங்ஙனம் ஆறுதலடையும்? அந்த அகலிகை – என் உயிர் பறித்த அகலிகை-அகில சிருஷ்டியிலும் அழகில் உயர்ந்த அகலிகை, அவளைக் காணாது, அவ ளுடன் பேசாது’ அவளுடன் சேராது என் உயிர் பதைபதைக்கிறதே!ஐயோ, அகலிகை! அகலிகை!! அகலிகை!!! 

தேவேந்திரன் வாய் திறந்து புலம்பினான். பளிங்கு மண்டபம் முழுவதிலும் அகலிகையின் அழகு உருவங்கள் பரிணமித்துக்கொண்டிருப்பதாக அவன் எண்ணினான். இந்திராணி- அகலிகை, முருக்க மலரும் முள்ளு ரோசாவும் போலக் காட்சியளித்தனர். அவன் மனம் இந்திராணியை வெளியுலகத்துக்குப் போகுமாறு பல வந்தமாகப் பிடித்துத் தள்ளியது. அகலிகையின் அழகுருவம் அவன் இதயபீடத்தில் ஏகாதிபத்தியஞ் செலுத்திக் கொண்டிருந்தது. அவன் தேகம் ஒருமுறை சிலிர்த்தது. அகலிகையின் அழகினை அணு அணுவாகப் பிரித்து இரசிப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருந்தான் இந்திரன்.

முல்லை மொட்டுகளையொத்த பற்கள், உரோசாவைப் போன்ற சிவந்த உதடுகள், கடல்போன்ற கண்கள், பிறைபோன்ற நெற்றி, கலசம் போன்ற தனங்கள், அதற்குமேல் அவனால் கற்பனை செய்ய முடியவில்லை’ பஞ்சணைமீது வெயர்வை வெள்ளமாக ஓடியது! அவன் மனம் பூவுலகத்தை நாடிப் பறந்தது. அடுத்த கணம்..! 

நள்ளிரவில் வைகறை மலர்ந்தது. புட்கள் சிறகடித்துப் பறந்தன. காலை மலரும் மலர்கள் அப்பொழுதே முகை விரித்து மலர்ந்தன. வண்ணச் சேவல் ‘கொக்கரக்கோ’ என்று கீதமிசைத்தது. கௌதம முனிவர்படுக்கையினின்றும் சுருட்டி வாரிக் கொண்டெழுந்தார். காலைக் கடன் கழித்து வேத மந் திரங்களைச் செபிக்க விரைந்து நடந்தார். அகலிகை நித்திராதேவியின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந் தாள். நிச்சலனமான அவள் முகத்தில் அழகு ஒளி விட்டுக்கொண்டிருந்தது. சாந்தமும், அமைதியும் நிறைந்த சூழ் நிலையில் அவள் ஒரு அழகின் சிருட்டியாகத் துயின்றுகொண்டிருந்தாள். 

கௌதமமுனிவர் விரைந்துவந்தார். அவர் நடையில் வேகமிருந்தது. சாந்தியின் கோரச்சிதைவு அவர் முகத்தில் கறையாகப் படிந்து, அவலட்சணமாகச் சுடர் விட்டது. ஆனால் அவர் எதையும் இலட்சியஞ் செய்ப வராகவில்லை. அவர் உடல் தகித்துக் கொண்டிருந்தது. தாங்கமுடியாத இன்பக் ‘கத, கத’ப்பை நீக்க அவர் அகலிகையை நாடினார். பர்ணசாலையின் கதவை இறுக்கிச் சாத்திவிட்டு அகலிகையின்பக்கலில் வந்த மர்ந்தார். அகலிகை திடுக்கிட்டு விழித்தெழுந்தாள். முனிவரிருந்த நிலை அவளைத் திகைக்கச் செய்தது. ‘சுவாமி’ என்ற அவள்குரல் தொண்டையை விட்டு வெளிவருமுன்னர் கௌதமரின் கரங்கள் அவள் கழுத்தைச் சுற்றி வளைந்தன. பருவத்தின் இனிப்பில் சூழ்நிலையின் மயக்கத்தில் அவள் நினை விழந்தாள், அப்புறம்…இன்பம், இன்பம்…ஊற்றெடுத்துப் பாய்ந்துகொண்டிருந்தது. 

அகலிகை இன்ப வேதனையில் முனகினாள்! கலக்கத்தின் சாயல் அவள் குரலில் கலந்திருந்தது. இந்த இன்பம் கௌதமரோடு காதல் புரிந்த பத்து ஆண்டுகளில் அவள் சுவைத்திராத இன்பம். காயும்,கனியும், கிழங்கும் தின்று உருவாகிய முனிவர் காட்டும் இன்பத்திற்கும், அமிர்தத்தையே புசித்து மதுக் கடலில் மூழ்கியெழும் அவன் காட்டும் இன்பத்திற்குமுள்ள வித்தியாசத்தை மட்டிட முடியாத பேதையா அவள்? ஆனால் அவளால் அதை மறுக்க – தடுக்க முடியவில்லை! இன்ப மயக்கத்தில் கிடந்து ஏதோ உழறினாள். கோட்டான் ஒன்று பயங்கர சப்தத்தில் குழறியது. அகலிகையின் உள்ளம் நடுங்கியது. 

‘அகலிகை’ என்று ஆவேசமான குரலில் அழைத்துக்கொண்டே பர்ணசாலைக் கதவை இடித்துத் திறந்தார், கௌதம முனிவர். கோபத்தினால் அவர் தேகம் துடித்துக்கொண்டிருந்தது. கொடுங்குளிரில் நீரில் இறங்கி ஸ்நானஞ் செய்ததால் அவர் அணிந்திருந்த ஆடையினின்றும் நீர் துளித்துக் கொண்டிருந்தது. இந்திரன் செய்த துரோகத்தை எண்ணியபோது அவர்கண்கள் அனலாய் எரிந்தன. ஞான திருஷ்டியால் அவன் அநியாயத்தை அறிந்து ஓடோடியும் வந்ததால் அவர் நாசியினின்றும் காற்று வேகமாக வெளிவந்துகொண்டிருந்தது. 

ஆபத்தான நிலைமையில் அகப்பட்டுக்கொண்ட அக லிகை செய்வதென்னவெனத் தெரியாது திகைத்தாள். கள்ளக் காதல் புரிந்த இந்திரன் ஒரு வெள்ளைப் பூனையாகப் பர்ணசாலைக் கதவிடுக்கின் வழியாக வெளியேற முயற்சித்துக் கொண்டிருந்தான். ‘அடே துரோகி இங்கே நில்லடா’ என்று உறுமினார் முனிவர். ‘ஐம்புலனும் நடுநடுங்க ஐராவதம் ஊர்ந்த இந்திரன் அடங்கியொடுங்கி நின்றான். ஆசைக்கு இடம் கொடுத்து தேவர்களுக்கே இழுக்குண்டாக்கினாய். அதற் குப் பரிசு, இதோ, “பிடி சாபம்” என்று கர்ச்சித்த முனிவரைக் கண்ணெடுத்தும் பாராது இந்திரன் தலை குனிந்து நின்றான். முனிவர் வாய் ஏதோ முணு முணுத்தது. அடுத்த கணம் அழகேயுருவான இந்திரனது மேனியில் ஆயிரம் கண்கள் – ஓட்டைகள், பித்துப் பிடித்தவன்போல இந்திரன் ஓடினான் – ஓடிக் கொண்டேயிருந்தான். கௌதம முனிவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவரது பயங்கரச்சிரிப்பை எதி ரொலிப்பனபோல அடர்ந்து நெருங்கி வளர்ந்திருந்த தேவதாரு மரங்கள் ஒரு முறை ‘சிலு சிலு’த்துக் கொண்டன. 

அகலிகை இந்தக் காட்சியைக் கண்டு நடுநடுங்கினாள். கௌதமரின் காலடியிலே விழுந்து கிடந்து அழுதாள். ‘தூர நில் பேயே” என்று எட்டி உதைத்தார் முனிவர். அழகேயுருவான அகலிகை படர் கொம்பற்ற முல்லைக் கொடிபோல முனிவரின் முன்னே துவண்டு விழுந்தாள். 

“மன்னியுங்கள் மதிமோசம் போய்விட்டேன், என்னை மன்னியுங்கள்!” என்று அரற்றிய அவளை முனிவர் வெறுப்போடு பார்த்தார். அவர் கோபம் சிறிது ஆறியிருந்தது. 

“தவறுக்கேற்ற தண்டனையை அனுபவித்துத்தானாகவேண்டும். மன்னிப்பிற்கும் ஒரு அளவிருக்கிறது. இதோ தண்டனை”. முனிவர் வாய் முணுமுணுத்தது. அடுத்த நிமிடம் அழகேயுருவான அகலிகை ஒரு பெரிய கல்லாகிக் கிடந்தாள். பாவம்! முனிவர் குறிப்பிட்ட காலம் வரைக்கும் அவள் கல்லுருவில் கிடந்து தானே யாகவேண்டும்.! 

பர்ணசாலை களையிழந்து காணப்பட்டது. ஒரு சூறைக் காற்று முனிவர் கண் முன்னேயே அந்தப் பர்ணசாலையைப் பெயர்த்தெறிந்தது. அவர் சிரித்தார். அந்தச் சிரிப்பிலே அறிவின் ஆழம் புகைபோலத் தென்பட்டது. சுற்றுமுற்றும் ஒரு பார்வையை ஓட விட்ட முனிவர் தண்டுகமண்டலத்தை ஏந்தியபடியே திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தார்! 

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *