இறைவனில்லா இடம் எது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 8,817 
 

இறைவன் எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் என்றே உலக அறிஞர்கள் எல்லாம் கூறுகின்றனர். அத்தகைய இறைவன், மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைகின்றான் என்பதும், மக்கள் தொண்டு ஆற்றுவதே இறைவன் பணி ஆற்றுவதாகும். என்பதும் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய: தொன்றாகும். இதனை விளக்க உருசியப் பேரறிஞர் தால்ஸ்தாய் கூறியுள்ள கதையொன்றினைத் தழுவிப் பின்வரும் கதை கூறப்படுகிறது:

பொன்னூரில் வாழ்ந்த சின்னப்பர் நெசவுத். தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்;

“நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை” என்றபடி அத்தொழிலில் ஆர்வங் கொண்டு, அன்றாடம் அவ் வேலையில் ஈடுபடுவார். சோம்பித் திரிவதோ, வீண் பேச்சுப் பேசுவதோ அவரிடம் காண முடியாதவை.

சின்னப்பர் எவரிடமும் இனிமையாகப் பேசுவார்; விளையாட்டுக்குக் கூடப் பொய்பேச மாட்டார்; ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்யமாட்டார்; நேர்மையும் கண்டிப்பும் உள்ளவர்; எல்லாரிடமும் அன்புடன் பழகுவார்; அவ்வூரார் அனைவரும் அவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டு பழகினர்.

சின்னப்பருடைய மனைவி இறந்துவிட்டாள். அவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. கடைசிக் குழந்தையான ஒரு மகனைத் தவிர மற்றக் குழந்தை கள் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து விட்டனர். உயிரோடு இருந்த கடைசிப் புதல்வனைச் சின்னப்பர் மிகவும் அருமையாக வளர்த்து வந்தார். அப்பிள்ளையிடம் அவர் கொண்டிருந்த அன்பு அளவிடற்கரியதாகும். அப்பிள்ளை கட்டழகனாக, கல்வி அறிவுடையவனாக, தந்தையின் தொழிலில் பங்கு கொண்டுழைத்து, அவரை மகிழ்விப்பவனாக வளர்ந்தான். சின்னப்பன் தம் புதல்வன் மனிதருட் சிறந்த மாணிக்கமாக வாழ்ந்து முதுமைப் பருவத்தில் தமக்குப் பேராதர வாய் விளங்குவான் என்று எண்ணிப் பெருமகிழ்வுடன் இருந்தார். ஆனால், அப்புதல்வனும் பிணி வாய்ப்பட்டு ஒரு நாள் இறந்துவிட்டான். என்ன செய்வார் சின்னப்பர்! அவர் உள்ளம் உடைந்துவிட்டது.

அவர் நம்பிக்கை சிதறிப் போயிற்று; எவராலும் ஆற்றமுடியாத பெருந் துன்பத்துக்குள்ளானார். “இன்று வரை எவர்க்கும் நான் எத்தீங்கும் செய்ததில்லையே! பிறர் மனத்தைச் சுடும் சொற்களையும் நான் பேசியதில்லையே! இறைவா, உன்னை மறந்து ஒருநாளும் கழிக்கவில்லையே! அப்படியிருந்தும் என் ஒரே மகனை, என் அன்பான மைந்தனை, என் உள்ளங் கவர்ந்திருந்த ஒரே செல்வனை, என் முதுமைக் காலத்தில் என்னைக் காப்பாற்றக் கூடிய ஒரே புதல்வனைப் பறித்துக் கொண்டனையே!

“என் அன்புடைய மனைவி இறந்தாள். மக்கள் பலர் பிறந்து இறந்தனர். எனக்கென்று விடப்பட்டிருந்த இவ்வொரு மகனையும் பறித்துக் கொண்டனையே இறைவா! முதுமைப் பருவத்தில், உடல் தளர்ந்த நிலையில் இன்னும் ஓயாதுழைத்து உயிர் வாழுமாறு என்னை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கின்றாய்? என்னையும் அழைத்துக் கொள். நானும் இறந்து தான் ஆகவேண்டும். என் மைந்தனைப் பிரிந்து நான் மட்டும் உயிர் வாழ்வதென்பது இயலாது. இறைவா! என்னையும் அழைத்துக் கொள்!” என்று கதறினார்.

மகன் இறந்த துன்பம் அவரை வாட்டி வதைத்தது. அதனால் அவர் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். நாள்தோறும் செய்யும் பூசை வகைகளைக் கைவிட்டார், வாழ்க்கையை வெறுத்தவராக நடைப்பிணம்போல் அவர் வாழ்ந்து வந்தார். எவரிடமும் அவர் பேசுவதில்லை; ஒரு வேளை மட்டுமே உண்ணத் தொடங்கினார்.

சின்னப்பருக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் ஒரு நாள் சின்னப்பரின் வீட்டுக்கு வந்தார். அவர் அறிவும் ஒழுக்கமும் நிறைந்த சான்றோர். சின்னப்பர் அவரை வரவேற்று விருந்தளித்தார்; தம் ஆறாத் துயரத்தை அவரிடம் எடுத்துரைத்தார்.

சின்னப்பரின் துன்பங்களை எல்லாம் அவர் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். “சின்னப்பா! இறைவன் இயல்பு சிந்தைக் கெட்டாதது; வியப்புக்குரியது; விளக்குவதற்கு இயலாதது; நம் அறிவைக் கொண்டு பகுத்தறிய முடியாதது. அவன் இயக்குமாறு எல்லாம் இயங்குகின்றன; நாம் எண்ணுவதுபோல் எதுவும் நடைபெறுவதில்லை. அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை. உன் மகன் இறத்தல் வேண்டு மென்பது இறைவன் நாட்டம். அதனால்தான் அவன் இறந்தான். நீ வீணாக வருந்துகிறாய். உன் முதுமைப் பருவ வாழ்வு இன்பமாகக் கழிவதற்கு உன் மகனைக் கருவியாக்க எண்ணினாய். உன் எண்ணம் நிறைவேறவில்லை. அதனால்தான் நீ இவ்வாறு வருந்துகிறாய்” என்று அப்பெரியவர் சின்னப்பரைப் பார்த்துக் கூறினார்.

“அப்படியாயின் வேறு எதற்காகத்தான் மனிதன் வாழுகின்றான்? முதுமைப் பருவத்தில் உதவுவதற்குத்தானே மகனைப் பெறுகின்றோம்!”

“சின்னப்பா, நீ வாழ்வது உன் இன்பத்திற்காக வன்று. இறைவன் உன்னைப் படைத்தான். நீ இறைவனுக்காகவே வாழ வேண்டும். நீ இதை உணர்ந்து கொண்டால் ஒவ்வொரு செயலும் உன்னால் நடை பெறவில்லை என்பதை நீ அறிந்து கொண்டால், உன்னை நீ அவனிடம் ஒப்படைத்து விட்டால், உனக்குக் கவலை ஏது? துன்பம் ஏது? நடப்பன எல்லாம் நன்மைக்கே என்பதையும், இறைவன் நாடியபடி நடப்பவற்றை மனிதன் மாற்றியமைத்து விட முடியாது என்பதையும் நீ நன்கு உணர வேண்டும்” என்றார் பெரியவர்.

சின்னப்பர் சிறிது ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், “இறைவனுக்காக வாழ்வதற்கு, என்னை அவனிடம் ஒப்படைப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“நாள்தோறும் அரைமணி நேரமாயினும் நீ திருமறை நூலைப்படி! ஏழைகளுக்குத் தொண்டு செய்! ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறை வனுக்குத் தொண்டு செய்வதாகும். உனக்கென்று எதனையும் கருதாதே! “நான்” எனும் சொல்லையே நீ மறந்துவிடு! ஏழைகளுக்கு உதவுவதற்காக உன் வாழ்வைப் பயன்படுத்து! இதுவே உன்னை நீ இறைவனிடம் ஒப்படைத்துக் கொண்டதாகும்” என்று கூறிவிட்டு, அப்பெரியவர் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற திசையையே, நெடுநேரம் பார்த்துக்கொண்டு நின்ற சின்னப்பர் அன்றே சந்தைக்குச் சென்றார்; திருமறை நூல் ஒன்றை வாங்கி வந்தார்; நாள்தோறும் அரைமணி நேரமாயினும் அதைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்; தம்மாலியன்ற வகையிலெல்லாம் ஏழை மக்களுக்கு உதவி செய்வதென்று உறுதி பூண்டார்.

பெரியவர் வந்து போனபின் சின்னப்பர் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன் இரவு படுக்கும் போதெல்லாம் மகனைப் பற்றிய எண்ணம் தோன்றி அவர் மனத்தை வாட்டும். அதனால் அவர் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக உறங்குவார். ஆனால் இப்பொழுது அவ்வெண்ணம் அடியோடு மறந்து தம்மை நாடிவரும் ஏழைகளுக்கு எவ்வெவ்வாறு உதவி செய்யலாம் என்பது பற்றிய எண்ணத்துடன் உறங்கத் தொடங்கினார். அவர் மனம் கவலையற்றுத் தெளிவாக இருந்தபடியால் நிம்மதியாகத் தூங்க முடிந்தது.

உன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு இல்லை யென்னாமல் கொடு; உன்னால் இயன்றவரை கொடு. உன்னிடம் வாங்கிச் சென்றவர்களிடமிருந்து நீ மீண்டும் பெற முயற்சி செய்யாதே. பிறரிடமிருந்து நீ எதிர்பார்ப்பது எதுவோ, அதை முதலில் நீ பிறருக்குச் செய். இறைவனுடைய வழியில் நடவாமல் ‘இறைவா, இறைவா!’ என்று நா வரளக் கத்துவதால் பயன் என்ன? சமயச் சின்னங்கள் பூணுவதால் பயனென்ன?

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்; ஆகுல நீர பிற” என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். இறைவன் காட்டும் வழி பற்றி ஒழுகிச் செயல் ஆற்றுபவன் எவனோ அவன் பாறை மீது இல்லம் அமைத்தவனாவான். இறைவன்காட்டும் வழியில் நடப்பதாக நடித்து, வெளியலங்காரத் தோற்றத்துடன் விளங்கிச் செயலில் மாறுபட நடப்பவன் மணல்மீது இல்லம் அமைத்தவனாவான்.

மழை பெய்து வெள்ளம் பெருகிப் புயலும் வீசினால், பாறைமீதமைந்த இல்லம் உறுதியாக நிற்க, மணல் மீதமைந்த இல்லம் வெள்ளத்திற்கு இரையாகி விடுமன்றோ?” இவைபோன்ற மறை மொழிகள் சின்னப்பரின் உள்ளத்தில் பசு மரத்தாணி போலப் பதிந்தன. ஒரு நாளிரவு திருமறை நூலைப் படித்த வண்ணமாக, அப்படியே உறங்கிவிட்டார். எவரோ தன் காதருகில் வந்து “சின்னப்பா!” என்று அழைத்தது போன்று செவியுற்றுத் திடுக்கிட்டு எழுந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார்; எவரும் காணப்படவில்லை! “யாரது?” என்று குரல் கொடுத்தார். விடை இல்லை. கதவருகில் கூர்ந்து நோக்கினார். எவரும் காணப்படவில்லை. ஆனால் அதே ஒலி மீண்டும் தெளிவாகக் கேட்டது.

“சின்னப்பா! நாளை நான் உன் வீட்டிற்கு வருவேன்” என்ற சொற்களைச் சின்னப்பர் தெளிவாகக் கேட்டார்; மும்முறை அதே போன்ற குரலைக் கேட்டார். அதற்குமேல் சின்னப்பருக்கு உறக்கம் வரவில்லை. தாம் கண்டது கனவா அல்லது உண்மையில் நிகழ்ந்ததா என அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. தம் கண்களைக் கசக்கிக் கொண்டார்; எழுந்து நடமாடினார்.

இறைவனைப் போற்றிய வண்ணம் மீண்டும் படுத்துறங்கி விட்டார். மறு நாள் விடியற் காலையில் விழித்துக் கொண்டார். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குளிர்ந்த நீரில் குளித்தார். இறைவனை வணங்கினார். பின் அடுப்பில் தீ மூட்டிக் காலையுணவுக்கு வேண்டியவற்றைச் செய்தார். இடையிடையே அவர் இரவு நடந்தவைகளைப் பற்றி நினைத்து கொண்டார். இரவு தாம் கண்டது கனவா? அல்லது உண்மை நிகழ்ச்சியா? தாம் கேட்ட சொற்கள் உண்மையா? அப்படியாயின். அவற்றைக் கூறியவர் எங்கே? என்றெல்லாம் அவர் எண்ணிய வண்ணம் இருந்தார். காலை உணவை முடித்துக் கொண்டபின், சின்னப்பர் தம் வேலையைத் தொடங்கினார். “நாளை நான் உன் வீட்டிற்கு வருவேன்” என்று இரவு தாம் கேட்ட சொற்கள் அவர் மனத்தில் பதிந்திருந்தன. எனவே அடிக்கடி தம் வேலையை விட்டுச் சாளர ஓரத்தில் நின்று வெளியில் பார்த்த வண்ணம் இருந்தார். தம் இல்லம் நோக்கி இறைவன் எவ்வடிவில் வருவாரோ என்று, எண்ணினார். தெருவில் போவோர் வருவோர் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனிக்கச் செய்தார். சின்னப்பர் எதிர்பார்த்தவாறு எவரும் இவரில்லம் நோக்கி வராமல், அவரவர் வேலையைக் கவனித்த வண்ணம் வருவதும் போவதுமாக இருந்தனர்: அவ்வமயம் ஒருவன் சின்னப்பன் இல்லம் நோக்கி வந்தான். அவன் தெருக்கூட்டும் தோட்டி. நாள் தோறும் தெருக் கூட்டுபவன். அன்றும் வழக்கம் போலத் தெருக்கூட்டி வந்தவன். அவன் சின்னப்பரின் வீட்டருகில் கூட்டுவதற்காக வந்தான். அவனைக் கண்ட சின்னப்பர் மனத்திற்குள் சிரித்துக் கொண்டார்.

“இவன் நாள்தோறும் நம் தெருவைக் கூட்டி, வரும் தோட்டியல்லவா? தொலைவில் அடையாளம்தெரியாமல் இறைவன்தான் நம் வீட்டை நோக்கி வருகிறான் போலும் என்று எண்ணிவிட்டேன்! எவ்வளவு முட்டாள் நான்! மூப்பினால் எனக்குக் கண் பார்வை சரியாகத் தெரியாமையால் இவனைப் பார்த்து இறைவன் என்று எண்ணிவிட்டேனே” என்று கூறிக்கொண்டு தம் வேலையில் ஈடுபட்டார். இவ்வாறு சிறிது நேரம் கழிந்தது.

சின்னப்பரின் மனம் நிலைப்படவில்லை. முன்னிரவு நினைவே அவருக்கு வந்து கொண்டிருந்தது. மறுபடியும் வேலையைவிட்டுச் சாளரத்தின் வழியே பார்த்தபோது, அந்தத் தோட்டி, தெருக்கூட்டும் விளக்குமாற்றைச் சுவரோரமாகச் சார்த்திவிட்டுக் களைப்புற்றவனாய் அவ் வீட்டருகில் ஓய்ந்து உட்கார்ந்தான்.

“வயது முதிர்ந்தவன் உழைப்பின் மிகுதியால் களைத்துவிட்டான் போலும்! அவனை உள்ளே அழைத்துச் சிறிது மோர் கொடுக்கலாம்” என்று சின்னப்பர் எண்ணினார். உடனே கதவைத் திறந்து அந்தத் தோட்டியை உள்ளே அழைத்துவந்து உட்கார வைத்தார். உள்ளே வந்த தோட்டி, “கடவுள் உம்மைக் காப்பாராக” என்று கூறிக் கொண்டே, கால்களை நன்றாக உதறிவிட்டு வர முயன்றவன் முடியாமல் தள்ளாடினான். தன்னால் அந்த வீட்டின் தரையில் தூசியும் மண்ணும் படிந்து விடக் கூடாதே என அவன் எண்ணினான்.

அவன் தள்ளாடுவதைக் கண்ட சின்னப்பர், “தரை மண்ணாகி விட்டால் என்ன! வாரும் மணை மீது உட்காரும். நான் என் வேலை முடிந்ததும் வீட்டைக் கூட்டுவேன். அது என் அன்றாட வேலைகளுள் ஒன்று; எப்படியும் கூட்டியே ஆகவேண்டும் அல்லவா? நீர் வந்து அமர்ந்து மோர் பருகும்” என்று. சின்னப்பர் அன்புடன் கூறியது அந்தத் தோட்டி யின் மனத்தை மகிழ வைத்தது. சின்னப்பர் தோட்டிக்கு ஒரு குவளையில் மோர் ஊற்றிக் கொடுத்தார். தாமும் ஒரு குவளையில் மோர் ஊற்றிக் கொண்டு இருவருமாகக் குடித்தார்கள்.

தோட்டி மோரை ஒரே விழுங்காகக் குடித்து விட்டான். அதைக் கண்ட சின்னப்பர், அவன் மிகுந்த களைப்புடன் இருப்பதைக் கண்டு மீண்டும் அக்குவளை நிறைய மோர் ஊற்றிப் பருகுமாறு வேண்டினார். மோர் குடித்துக் கொண்டிருக்கையில், சின்னப்பர் அடிக்கடி சாளரத்தின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அந்தத் தோட்டி, “எவரையாவது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“ஆம்; எவரை எதிர்பார்க்கிறேன் என்று சொல்ல முடியவில்லை. அதை எப்படிச் சொல்வ தென்பதும் எனக்குப் புரியவில்லை. உண்மையாகவே என் மனம் எவரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அது எவர் என்று சொல்லவும் தெரியவில்லை. எதிர்பார்த்துக் கொண்டில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. நேற்றிரவு நான் காதால் கேட்டது, என் மனத்தினின்று அகலவில்லை. நீ மறை நூலைப் படித்திருக்கிறாயா?” என்று; சின்னப்பர் தோட்டியைப் பார்த்துக் கேட்டார்.

“ஐயா, நான் எழுதப் படிக்கத் தெரியாதவன். திருமறை நூலைப் படித்ததில்லை. ஆனால் இறைவனுடைய கருணையைப் பற்றிப் படித்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்,” என்றான் அந்தத் தோட்டி.

“நேற்றிரவு திருமறை நூலைப் படித்தபடியே நான் தூங்கிவிட்டேன். நான் ஆழ்ந்த தூக்கத்தி லிருந்தபோது, “நாளை நான் உன் வீட்டிற்கு வருவேன்; என்னை எதிர்பார்” என்னும் சொற்கள் என் காதருகில் தெளிவான குரலில் கேட்டன. இவ்வாறு மிகத் தெளிவாக மும்முறை கேட்டது. இது என் மனத்தில் நிலையாகப் பதிந்துவிட்டது. ஆதலால் சாளரத்தை அடிக்கடி பாராமல் இருக்க என்னால் முடியவில்லை. இச்செய்தியை உன்னிடம் சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது. எனினும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை,” என்று கூறினார் சின்னப்பர்.

தோட்டியால் ஒன்றும் கூற முடியவில்லை. பேசாமல் தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சின்னப்பரோ மூன்றாம் முறையாக அந்தத் தோட்டியின் குவளையில் மோர் நிரப்பினார். அவன் “போதும் போதும்” என்று கூறியும் குடிக்குமாறு வேண்டினார் சின்னப்பர்.

“இறைவன் பாமர மக்களிடை, வறிய மக்களிடை, நம் போன்ற ஏழைகளிடை, ஆதரவற்றவர்களிடையே தான் நடமாடுகின்றார்; இரக்கமுடையவர்கள், அடக்கமுடையவர்கள், பணிந்து நடப்பவர்கள், ஏழைகளாக வாழ்பவர்கள் ஆகியோரே இறைவனது அன்பிற்கு உரியவர்களாவார் கள்” என்று திருமறை நூல் கூறுகின்றது. எவர் பிறர்க்குத் தொண்டாற்றுகின்றாரோ, அவரே இறை வனின் தொண்டர் எனவும், மக்கட்பணியே இறை வனின் பணியாகும் எனவும், ‘ அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும்’ எனவும் திருமறை கூறுகிறது” என்று சின்னப்பர் கூறினார். இவற்றைக் கேட்ட தோட்டி, கையில் பிடித்துள்ள குவளையில் ஊற்றப்பட்ட மோரைக் குடிக்காமல் கண்களில் நீர் சோரச் சின்னப்பரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் பேச்சை நிறுத்தியதும், “பெரியவரே! என் பசியையும் களைப்பையும் போக்கி என் உடலுக்கு மட்டுமல்லாமல் என் உள்ளத்திற்கும் ஆறுதல் அளித்துவிட்டீர். உங்களுக்கு என் மன மார்ந்த நன்றி, என் உள்ளமும் உடலும் உங்கள் பொன்னுரையால் உறுதி பெற்ற ” என்று அந்தத் தோட்டி கூறி, மோரைப் பருகினான்; பிறகு விடை பெற்று வெளியே சென்றான்.

சின்னப்பர் மீண்டும் தம் வேலையில் ஈடு பட்டார்; சிறிது நேரம் வேலை செய்வதும், சாளரத்தின் வழியே வெளியில் பார்ப்பதுமாக வேலை செய்து கொண்டிருந்தார். இவ்வாறு ஒரு மணி நேரம் சென்ற பிறகு, கிழிந்த உடையணிந்த பெண் ஒருத்தி கையில் ஒரு குழந்தையுடன் தன் வீட்டுச் சாளரத் தின் சுவர் ஓரமாய் வந்து நின்றாள். அந்தக் குழந்தை ஓயாமல் அழுது கொண்டிருந்தது. அதற்கு அவள் பால் கொடுக்க முயன்றும் பாலில்லாமையால் அதன் அழுகை ஓயவில்லை.

வெளியில் மழைக்காற்று வீசியதால், குளிரினின்று பாதுகாக்க அக்குழந்தையின் மேல் ஒரு துணியுமில்லை. குளிரும் பசியும் வாட்டவே, அக்குழந்தை வீறிட்டழுது கொண்டிருந்தது. என்ன செய்வ தென்றறியாமல் அந்தத்தாய் காற்றடிக்கும் திசையில் முதுகைத் திருப்பிச் சுவரோடு ஒட்டி நின்று குழந்தை மீது காற்றுப்படாமல் அதனை அணைத்துக் கொண்டாள். இந்த நிலை சின்னப்பரின் மனதை உருக்கிவிட்டது.

சின்னப்பர் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்று அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஏன் அங்கே குளிர்காற்றில் நின்றுகொண்டிருக்கிறாய் உள்ளே வா; குழந்தைக்குப் போர்த்தத் துணி தருகிறேன்” என்று அழைத்தார்.

அவள் அவர் பின்னால் வீட்டுக்குள் வந்தாள்; தன் சோகக் கதையை அவரிடம் கூறினாள்.

அவள் பசியால் களைப்புற்று இருப்பதை அறிந்த சின்னப்பர் முதலில் அவளுக்கு உணவு கொடுத்து உண்ணும்படி வேண்டினார். தயிராக்கு வதற்காகத் தாம் வைத்திருந்த பாலைக் குழந்தைக்குப் புகட்டுமாறு செய்தார். பசியாறியபின் அக் குழந்தை விளையாடத் தொடங்கியது. அக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்க வைத்தவாறு அவள் கூறிய கதையைச் சின்னப்பர் கேட்கத் தொடங்கினார்.

“என் பெயர் வள்ளி. நான் ஒரு படைவீரனின் மனைவி. போர்க்களம் சென்ற என் கணவர் திரும்பி வரவேயில்லை. கடந்த எட்டு மாதங்களாக அவரிட மிருந்து எவ்விதத் தகவலும் இல்லை. இந்தக் குழந்தை பிறக்கும் வரையில் ஒரு வீட்டில் சமையற் காரியாக வேலை செய்தேன். இக்குழந்தை பிறந்த பின் அவர்கள் வேலையினின்று என்னை நீக்கி விட்டார்கள்.

கடந்த மூன்று மாதங்களாக நான் வேலை யின்றித் திண்டாடுகிறேன். என்னிடமிருந்த விற்கக் கூடிய பொருள்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். இறுதியர்க ஒரு வணிகரின் மனைவி என்னை வேலைக்கு அமர்த்திக்கொள்ள இணங்கினாள். ஆனால் அடுத்த வாரம் முதல் வேலைக்கு வரச்சொன்னாள்.

அவள் இருக்கும் ஊர் இன்னும் பத்துமைல் தொலைவில் இருக்கிறது. நடந்துவந்த இளைப்பும், நேற்றிரவு முதல் உணவில்லாமையால் வந்த களைப்பும் சேர்ந்து என்னை மேற் கொண்டு ஓரடியும் எடுத்து வைக்க முடியாமற் செய்துவிட்டது. என் குழந்தையோ பசியாலும் குளிராலும் கதறத்தொடங்கி விட்டது. தக்க சமயத்தில் நீங்கள் உதவி செய்தீர்கள்” என்று வள்ளி என்ற அப்பெண் கூறினாள்.

“குழந்தையைக் குளிர் தாங்காமல் காக்கப் போர்வை ஒன்றும் உன்னிடம் இல்லையா?” என்று சின்னப்பர் கேட்டார்.

“எப்படி இருக்க முடியும்? கடைசியாக. வைத்திருந்த ஒரே ஒரு சால்வையைக் கூட நேற்று எட்டணாவுக்கு அடகுவைத்து விட்டேனே!” என்று கூறிய வள்ளி தன் குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானாள். சின்னப்பர் தம் பெட்டியைத் திறந்து ஒட்டுப் போட்டுத் தைக்கப் பட்டிருந்த தம்முடைய போர் வையைக் கொண்டு வந்து கொடுத்து, “அம்மா, இது கிழிந்தது. ஆனால் ஒட்டுப் போட்டுத் தைத்திருக்கிறேன். குளிருக்காக நான் வைத்திருக்கும் ஒரே போர்வை இதுதான்; இதை நீ எடுத்துக்கொள். இது குழந்தையைக் குளிரினின்று காக்கும்” என்று கூறினார். அவரே அந்தப் போர்வையைக் குழந்தை உடலில் போர்த்தார்.

வள்ளி அந்தப் போர்வையைப் பார்த்தாள்; பிறகு. சின்னப்பரை பார்த்தாள். “ஆண்டவன் உமக்கு அருள் புரிவாராக. எனக்கும் என் குழந்தைக்கும் உதவி செய்யக் கடவுள் தான் உம்மைச் சாளரத்தின் அருகில் அனுப்பினார் போலும்! நீர் தக்க சமயத்தில் உதவினீர். இல்லை என்றால் என் குழந்தை பசியால் வாடிக் குளிரால் ஒடுங்கி இறந்து விட்டிருக்கும். இறைவன் உமக்குக் கோடி நலன்கள் அருளுவாராக” என்று வாழ்த்தினாள்.

வள்ளி அப்போர்வையால் தன் குழந்தையை நன்கு போர்த்தி மீண்டும் ஒரு முறை சின்னப்பருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

சின்னப்பர் அவளிடம் சிறிது காசு கொடுத்து, “அடகு வைத்த போர்வையை வாங்கி நீ போர்த்துக்கொண்டு போ!” என்று கூறி வழியனுப்பினார்.

சின்னப்பர் பழையபடி வேலை செய்வதும் தெருவில் பார்ப்பதுமாக இருந்தார். பழையபடி அவருடைய கண்கள் தெருவில் போவோர் வருவோரைக் கவனித்த வண்ணம் இருந்தன. “கடவுள் இன்னும் வாவில்லையே! அவர் எந்த வடிவில் வருவாரோ?” என்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தார். அச்சமயம் அவர் வீட்டுச் சாளரத்தின் எதிரில் பழக்காரி ஒருத்தி வந்து நின்றாள். அவள் தலைமீதிருந்த கூடையில் சில பழங்கள் இருந்தன. தோளில் தொங்கிய ஒரு கோணிப் பையில் அவள் சுள்ளிகளைப் பொறுக்கித் திணித்து வைத்திருந்தாள்.

அந்தக் கோணிப் பையை மற்றொரு தோளுக்கு மாற்றுவதற்காக அவள் பழக்கூடையைக் கீழே இறக்கி வைத்தாள்.

கிழிந்த ஆடையணிந்த ஒரு சிறுவன் பழம் ஒன்றை அக் கூடையிலிருந்து எடுத்துக் கொண்டு ஓட முயன்றான். ஆனால் பழக்காரி அவனைப் பிடித்துக் கொண்டாள்; ஏசினாள்; இரண்டடியும் கொடுத்தாள்; நகரக் காவலரிடம் ஒப்புவிப்பதாக அவனை இழுத்தாள். இவற்றை யெல்லாம் சாளர வழியே சின்னப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உடனே வெளியே ஓடிவந்து பழக்காரியிடம் கெஞ்சி, அச்சிறுவனை விட்டு விடுமாறு வேண்டினார்.

அவருடைய கெஞ்சுதலைக் கண்ட பழக்காரி மனமிரங்கி அவனை விட்டுவிட்டாள்:

விட்டால் போதும் தப்பியோட என்றிருந்த அச்சிறுவனைச் சின்னப்பர் பிடித்துக் கொண்டு, “நீ பழம் திருடியதை நான் பார்த்தேன், பழக்காரியிடம் மன்னிப்புக் கேள். மறுபடியும் இந்தத் திருட்டு வேலையைச் செய்யாதே! உழைத்துப் பிழைக்கக் கற்றுக்கொள்!” என்று அறிவுரை கூறினார்; பழக்காரியிடமிருந்து ஒரு பழத்தை விலைக்கு வாங்கி அச்சிறுவனிடம் கொடுத்தார்.

அச்சிறுவன் அழுதவண்ணம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். “இனி எப்பொழுதும் திருடுவதில்லை” என்று வாக்குறுதி கொடுத்தான். ஆனால் அப்பழக்காரியோ, “இவ்வாறு இத்தகைய கீழ்மக்களிடத்தில் நீர் இரக்கம் காட்டுவதால் இவர்களை மேலும் கெடுப்பவராகின்றீர். இவர்களைச் சாட்டையாலடித்துத்தான் திருத்த வேண்டும்” என்று கூறினாள்.

“அம்மா! அடித்துத் திருத்துவது நாம் செய்யும் வேலை; இறைவன் நெறி அது அன்று. ஒரு பழம் திருடியதற்காகக் கசையடி என்றால், நாம் செய்யும் எவ்வளவோ தவறுகளுக்கு எத்தகைய தண்டனைகளைப் பெறுதல் வேண்டும்? மன்னிப்பது நமது கடமை. இல்லையெனில் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார். அதிலும் சிறியவன் செய்த இச்சிறு பிழையைப் பெரியவர்களாகிய நாம் பொறுப்பது நம் கடமையாகும். “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்” அல்லவா!” என்று அப்பழக்காரிக்குச் சின்னப்பர் அறிவுரை கூறினார்.

“ஆம், நீர் கூறுவது உண்மையே. ஆனால் இவர்கள் மன்னிக்கப்பட்டால் மேலும் கெட்டு விடுவார்களே!” என்றாள் பழக்காரி.

“அவர்கள் கெடாமல் இருக்க, பெரியவர்களாகிய நாம் நன்னெறியைக் கடைப்பிடித்து நடந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டிகளாக வும் விளங்க வேண்டும்” என்றார் சின்னப்பர்.

பிறகு கிழவி, கோணிப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டுப் பழக்கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ள முயன்றாள். உடனே அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன், “அம்மா, நானும் இந்த வழியே தான் வருகிறேன். கூடையை என் தலைமீது வையுங்கள், சுமந்துகொண்டு வருகிறேன்”, என்றான். பழக்காரி அதற்கு இணங்கினாள். பழக்காரியும் சிறுவனுமாக அவ்விடத்தை விட்டுச் சென்றனர். சின்னப்பர் உள்ளே வந்து பழையபடி தம் வேலையைத் தொடர்ந்து செய்தார். ஆனால் கதிரவன் மறைந்து இருள் எங்கும் சூழத் தொடங்கி விட்டது.

சின்னப்பர் வேலைகளை நிறுத்திவிட்டு, அவ் வறையைக் கூட்டினார்; விளக்கேற்றினார்; முகம் கைகால்களை அலம்பிக் கொண்டு பிறகு திருமறை நூலை எடுத்து வைத்துக் கொண்டுப் படிக்கத் தொடங்கினார்.

திருமறை நூலைப் பிரித்தவுடனே முன்னாளிரவு கண்ட கனவின் நினைவு அவர் மனத்தில் தோன்றியது. அதே நேரத்தில் தமக்குப் பின்னால் எவரோ நடமாடுவது போன்ற ஓசை அவர் செவியிற்பட்டது.

சின்னப்பர் திரும்பிப் பார்த்தார். அந்த அறையின் மூலையில், மங்கிய ஒளியில், எவரோ நிற்பது போலத் தோன்றியது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. சின்னப்பர் கூர்ந்து நோக்கினார்.

“சின்னப்பா! என்னைத் தெரியவில்லையா? நான் தான் தோட்டி” என்ற சொற்கள் அவர் செவியில் தெளிவாகக் கேட்டன. மூலையிலிருந்து தோட்டி ஒரு நிமிட நேரம் விளக்கொளியில் நின்று புன்சிரிப்புச் சிரித்துவிட்டு மறைந்து விட்டான்.

“என்னைத் தெரியவில்லையா உமக்கு? இதோ பாரும் என் குழந்தை” என்று கூறிக்கொண்டே, கையில் குழந்தையுடன் காலையில் வந்த அதே பெண் வள்ளி, அந்த இருட்டு நிலையிலிருந்து விளக்கொளியில் ஒரு நிமிடநேரம் வந்து நின்று சிரித்தாள். அக் குழந்தையும் சிரித்தது. பிறகு தாயும் குழந்தையும் மறைந்து விட்டனர்.

“எங்களைத் தெரியவில்லையா உமக்கு?” என்று கூறிக்கொண்டே அந்த மூலையிலிருந்து பழக்காரியும் சிறுவனுமாக விளக்கொளியில் வந்து நின்று விட்டுச் சின்னப்பரைப் பார்த்துப் புன்முறுவல் செய்தவண்ணம் மறைந்து போய்விட்டனர்.

சின்னப்பர் மன நிறைவு பெற்று மகிழ்ச்சியுடன் திருமறை நூலைப் புரட்டியபோது, “நான் பசியுடனிருந்தேன். நீ உணவளித்தாய். நான் நீர்வேட்கை யுடனிருந்தேன், நீ பருகக் கொடுத்தாய். நான் உனக்குப் புதியவனாக இருந்தேன், நீ என்னை உன் இல்லத்திற்கு அழைத்து அமர்த்தி ஆதரவு காட்டினாய். என் குழந்தைகளுள் மிகக் கீழான நிலையிலிருந்தவர்களுக்குக் கூட நீ செய்த உதவி எனக்குச் செய்த உதவியே ஆகும்” என்ற சொற்றொடர்களைப் படித்தார்.

தம் கனவு பலித்துவிட்டதென்றும், இறைவன் தோட்டி வடிவிலும், பெண் வடிவிலும், பழக்காரிசிறுவன் வடிவிலும் தம் இல்லம் வந்தாரென்றும் உணர்ந்து சின்னப்பர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்…எளிய மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும். அன்பர் பணி செய்வதொன்றே நம்மை இறைவனுடைய அருள் நெறியில் கூட்டிவைக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.

பயிற்சி
1. சின்னப்பர் நடைப்பிணம் போல வாழ்ந்த வரலாறு.
2. சின்னப்பருக்குப் பெரியவர் செய்த உபதேசம்.
3. சின்னப்பரும் தோட்டியும்.
4. சின்னப்பரும் ஏழைப்பெண்ணும்.
5, சின்னப்பரும் பழக்காரியும்.
6. சின்னப்பரின் கனவு பலித்த விதம்.

(இவற்றுள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றரைப் பக்கங்களுக்கு மிகாமல் ஒவ்வொரு கட்டுரை வரைக)

– சிறுவர் கதைச் சோலை (சிறுகதைத் தொகுப்பு), ஆறாம் வகுப்புத் துணைப்பாட நூல், முதற் பதிப்பு: அக்டோபர் 1965, திருமுருகன் பதிப்பகம், வேலூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *