சிறுகதைத் துறையைப் பொறுத்தவரை – ப.ஆப்டீன்

 

சிறுகதைத் துறையைப் பொறுத்தவரையில் பழைய கருத்துக்களைத் தவிர்த்து சமகால மக்கள் வாழ்க்கையை ஊன்றிப் படித்து, மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தழுவியதாக புதிய கருத்துக்களைப் பகைப் புலமாகக் கொண்டு எழுதிய சில கதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள என. அதே நேரத்தில் ஒரு நல்ல படைப்பின் சிறப்பியல்புகளுக்கும் காத்திரமான தொனிப் பொருளுக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதுமையான மொழிப்பிரயோகத்துடன் மானுட நேய அணுகுமுறையுடன் எழுத முயன்றுள்ளேன்.

சிறுகதைத் துறையில் ஆழ்ந்த ஞானமும் அனுபவமும் பெற்றவர்கள் கூறுவது போல, சிறுகதைக்கு ஒரு நிரந்தரமான வரைவிலக்கணம் விதிக்கப்படவில்லை. ஒரு கருவை மையமாக வைத்து புனையப்படும் போது கதாபாத்திரங்களை நடமாட விட்டு, வாசகரைக் கவரும் விதத்தில் சொல்ல வேண்டிய செய்தியைச் சிந்தனைக்கு விட்டுவிடும் சாணக்கியம் அது அவரவரது தனித்துவம் வாய்ந்த ஆளுமையைப் பொறுத்துள்ளது.

கதாசிரியனுக்குச் செய்தி என்னும் அந்தச் சுமையை இறக்கி வைக்கும் போது இனம் புரியாத ஆத்ம திருப்தி ஏற்பட வேண்டும்.

ஒரு கருவுற்ற கதை பிறப்பதற்குக் கால வரையறை இல்லை , கருவைப் பல காலம் சுமந்து……. சுமந்து அது பிரசவ வேதனை அடைகிறது என்று சொல்லப்படுவது மூத்த எழுத்தாளர்களின் அநுபவ உண்மை. இது எக்காலத்திற்கும் பொருத்தமான ஓர் உண்மை என்பதில் சந்தேகமில்லை.

எதையும் வாசகரின் உள்ளங்களில் திணிக்காமல் நுணுக்கமாகத் தொட்டுக் காட்டி, ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்திவிட்டாலே ஒரு நல்ல சிறுகதைக்கு வெற்றி தான் என்றெல்லாம் கூறப்படுகிறது.

நிற்க, தொழில் காரணமாகப் பல பிரதேசங்களைத் தரிசித்தவன் நான். படைப்பிலக்கியத் துறையில் நகர்ப்புறங்களை விட எனது இலட்சியங்களுக்குச் சாதகமான சூழலும், ஏற்ற தளமும் கிராமப் புறங்களில் தான் கிடைத்திருக்கின்றன. தேவையான கதா நாயகப் பிரகிருதிகளைத் தரிசித்து அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை அடியிலிருந்து ஆழமாக அவதானிக்க முடிகிறது. கல்லும் மண்ணம், மேடும் பள்ளமும் கதைகளாகின்றன.

மனுக்குலத்தை நேசிக்கும் ஒருவனுக்கு அவன் வேறு, அவன் கதைகளில் வரும் செய்திகள் வேறல்ல. கதா பாத்திரங்களின் ஊடாக அவனைப் புரிந்து கொள்ளவோ இனங்காணவோ முடியும்.

முத்த தலைமுறையினர் ‘புனை கதை சம காலக் கண்ணாடி’ என்று மிகவும் பொருத்தமாகக் கூறியிருக்கிறார்கள். கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பங்கள் எள்ளளவேனும் வேறுபடாது.

ஒரு கால கட்டத்தில் சமூகத்தில் நிலவும், எரியும் சம்பவங்கள் இலக்கிய உள்ளங்களில் கருக்களாகப் பதிந்து அலை கலைத்துவம் மிகுந்த இலக்கியங்களாக உருவெடுக்கும் போது, அப்பதிவுகள் பிற்காலத் தலைமுறையினர்க்கு தகவல்களாக அமைகின்றன.

வரலாறு சில வேளைகளில் உண்மையைத் திரித்து விடக் கூடும். ஆனால் இலக்கியம் காலத்தை யதார்த்த பூர்வமாகப் படம்பிடித்துக் காட்டிவிடும். இலக்கியக் கண்ணின் ‘லென்ஸ்’, ‘கெமரா’வை விடச் சக்தி வாய்ந்தது.

உத்தி முறைகளை அதிகம் கவனியாது வாசகர்களைக் கவரும் முறையில் எழுத முயன்றிருக்கிறேன்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன் வைத்த தெளிவான இலக்கியக் கொள்கையும் இலட்சியமும் என்னைக் கவர்ந்தன. சோசலிச யதார்த்தக் கண்ணோட்டம்: என் மனதில் ஆழப்பதிந்திருந்தது. இலக்கியம் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும் படைக்கப் பட வேண்டும் என்னும் மகத்தான இலட்சியம் எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று.

சூழல் இலக்கிய நெஞ்சங்களை உருவாக்குகின்றது. அந்த வகையில் நான் பிறந்து வளர்ந்த சூழலில் தேயிலைத் தோட்டப் பாட்டாளி வர்க்கத்தின் அவலங்கள் நிறைந்த வாழ்க்கை என் உள்ளத்தை நெகிழ வைத்தது. தோட்ட மண்ணில் வேரூன்றிய இந்த நெகிழ்வு பின்னர் தொழில் ரீதியாக கடமைக்குப் போகும் இடங்களிலெல்லாம் அவலங்களுக்குள் அகப்பட்டு, ஒடுக்கப் பட்டு, நசுக்கப் பட்டுக் கிடக்கும் மக்கள் பிரச்சினைகளையே என் மனம் சுமக்க வைத்தன. என் புனை கதைகளுக்குத் தொனிப் பொருளுமாயின.

கலைத்துவமான படைப்புக்களின் மூலமும் கணிசமான படைப்புகளின் முலமும் கணிசமான அளவு சமூகத்தை மாற்ற முடியும் என்று நினைக்கிறேன், சிருவடிகளில் வாசகரைச் சிந்திக்கத் தூண்டுகின்ற செய்தி எதுவும் இல்லாவிட்டால் எழுத்துக்களில் பிரயோசனம் கிடைக்காது. தமது சிருஷ்டிகளில் மிகவும் நுணுக்கமாகவும் , நாருக்காகவும் வாசகனுக்குச் சமூகச் செய்தியை எட்ட வைக்கும் இலாவகமான உரை நடை இலங்கையின் முத்த எழுத்தாளர்கள் பலரிடம் கை வந்த கலையாகப் பிரகாசிக்கின்றதை நான் காண்கிறேன். அத்தகைய ஆக்கங்களைப் படைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும் கூட, ‘இலக்கியப்பணி’ என்னும் கூற்றுக்கு ஒரு முழுமையான கருத்து இருக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேள். ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்து முடித்த பிறகு வாசகனுக்குள் ஓர் உறுத்தல் உருவாகி அவன் சிந்தனை விரிய வேண்டும்.

ப.ஆப்டீன், நாம் பயணித்த புகைவண்டி – சிறுகதை தொகுப்பு – முதற் பதிப்பு: செப்டெம்பர் 2003
131/9, தெமட்டகொட வீதி, கொழும்பு – 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *