கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 67,802 
 

தீபாவளி அன்று நண்பன் சேஷாத்ரியின் அழைப்பு வந்தபோது வழக்கமான தீபாவளி வாழ்த்து என்றுதான் எண்ணினேன்.

“டேய், இன்னைக்கு நீ ஃபிரீயா இருக்கும் போது லாபுக்கு வா” என்று சொல்லி வைத்துவிட்டான். அவ்வளவுதான். வாழ்த்துமில்லை ஒன்றுமில்லை. எனக்கு ஆச்சரியம். இந்த மாதிரி விசேஷ நாளில் கூட லாபில் என்ன வேலை?

நாங்கள் சேர்ந்து படித்தபோது, நாங்கள் பெரும்பாலானோர் சினிமா கதாநாயகிகளைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு அலைந்தபோது ஃபிஸிக்ஸ் புத்தகம் படித்துக் கொண்டிருப்பான் நண்பன் சேஷாத்ரி.

ரொம்பவே புத்திசாலி. அறிவாளி. அவன் ஆசைப்பட்டது போலவே ISRO வில் சேர்ந்து எங்கோ போய்விட்டான். அமெரிக்க NASA வரைக்கும் சென்று நிறைய ஆராய்ச்சி முடிவுகள் சமர்ப்பிப்பது / கலந்துரையாடல்கள் / விரிவுரைகள் என்றெல்லாம் நிறைய செய்திருக்கிறான். ஆனாலும், தலைக்கனம் இல்லாத நல்ல நண்பன். படித்து முடித்துப் பலவருடங்கள் ஓடிவிட்டாலும் தொடர்ந்து தொடர்பில் இருப்பவன். என்னுடன் அவன் தொடர்பு தொடர்ந்ததற்கு இரு முக்கிய காரணங்கள்; என்னுடைய புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் ஆங்கிலப் படங்கள் பார்க்கும் பழக்கம்.

இருவரும் பெரியவர்களான பிறகு சேர்ந்து படம் பார்ப்பது / படிப்பது போன்றவை குறைந்தாலும், தனித்தனியே பிடித்தததை செய்து கொண்டுதான் இருந்தோம். புத்தகங்கள் விலையேறிவிட்டன எனவே வாங்குவதில்லை என சில நண்பர்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அரிசி எவ்வளவு விலை ஏறினாலும் வாங்கிச் சாப்பிடுவது போலவே எனக்கு இதுவும்.

மாலை சேஷாத்ரியின் லாபை அடைந்தபோது எப்போதும் போல ஒரு புத்தகத்தில் இருந்தான் அவன். “வாடா” என்றான். இது லாப் என்றால் சாதாரண கெமிஸ்ட்ரி லாப் போல, சில குடுவைகள்,ரசயானத் திரவங்கள், புன்ஸன் பர்னர் என்ற சாதாரண லாப் இல்லை. சென்னைக்கு வெளியே, ஏராளமான பொருட்செலவில் கட்டப்பட்ட அதி நவீன ஃபிஸிக்ஸ் ரிஸர்ச் லாப்.!!…. அவனுடைய வேலையில் / ஆராய்ச்சியில் சம்பாதித்தது நிறையப் புகழ்தான். பெற்றோரின் எண்ணிலடங்கா சொத்து அவன் பலம்….

“டைம் ட்ராவல் பத்தி கேள்விப்பட்டிருக்கல்ல?” என்றான் எடுத்தவுடன். சேஷாத்ரியிடம் ஒரு நல்ல பழக்கம். அனாவசிய பேச்சே கிடையாது. எடுத்தவுடன் விஷயத்துக்கு வந்து விடுவான்.

“தெரியும், சேஷு. நிறைய படம் பார்த்திருக்கேன். சில நல்ல புத்தகங்கள் படிச்சிருக்கேன்” என்றேன்.

“ஓகே” என்றான். அவன் பாஷையில் ‘அப்புறம்?’ என்று அர்த்தம்.

“எனக்குப் பிடிச்சதுன்னா, Back to the Future ஸீரீஸ், அப்புறம், Time Traveler’s Wife, Time Cop. Looper, Primer, Predestination…” எனக்கு நினைவில் இருந்த ஆங்கிலப்படங்களின் பெயர்களை அடுக்கினேன்.

“முக்கால்வாசி ட்ராஷ், 1 – 2 பரவாயில்ல” என்றான். பிறகு, சிறிது நேரம் இடைவெளிவிட்டு,

“சமீபத்துல வாஷிங்டன்ல ஒரு கான்ஃபிரென்ஸ், அதுல ஒரு பேப்பர் சப்மிட் பண்ணேன். ஆனா, இவ்வளவு சீக்கிரம் அது பாஸிபிள் ஆகும்னு நினைக்கல..” என்று அவன் சொல்லி சிறிய இடைவெளி விடவே, எனக்கு ஆர்வம் எகிறியது.

“சொல்லு, சேஷு” என்று ஊக்கப்படுத்தினேன்.

“டைம் ட்ராவல்” என்றான் மொட்டையாக.

“அதுக்கு…??”

“தியரடிக்கலா முடிச்சுட்டேன், செய்முறைதான் பாக்கி. அதுக்கு முன்னால ஒரு ட்ரெயல் பாக்கணும்” என்றான் கொஞ்சம் கூட அசராமல்.

எனக்கு BP எகிறியது. “என்னடா சொல்ற, இவ்வளவு வருஷமா யாராலயும் நிஜமா நிரூபிக்க முடியாத டைம் ட்ராவலை நிரூபிச்சுட்டியா?? எப்படி??” என்றேன். எல்லா அதிர்ச்சியையும் குரலில் அடக்கி.

“இல்லை, நிரூபிக்க முடியலைன்னு சொல்றது நிஜம் இல்ல. நிறையவே செஞ்சுட்டாங்க. அதெல்லாம் வெளியுலகத்துக்கு தெரிய வரல / வராது. ஆனா, ப்ராக்டிகலா அதை நிரூபிக்கறதுக்கு நிறையத் தேவை இருக்கு. முக்கியமா, வாலண்டியர்ஸ்…..யாரும் முன் வரல. இதுல சின்னத் தப்பு ஆனாக்கூட, பெரிய பிரச்சனை, திரும்ப வரமுடியாது…..டைம் லூப், டைம் வார்ப், M-Factor ன்னு நிறைய ஜிப்பரிஷ் இருக்கு…அதெல்லாம் சொல்லி உன்னை பயமுறுத்த இஷ்டமில்ல எனக்கு, ரெண்டாவது, உனக்குப் புரியவும் புரியாது ..” என்றான்.

“சரி, இப்போ என்ன ஸ்டேஜுல இருக்கு, உன் ஆராய்ச்சி??” என்றேன்.

மேஜை மேல் வைத்திருந்த கோப்பையிலிருந்த காஃபியை ஒரு முழுங்கு எடுத்துக் கொண்டான். “இல்லடா ஸ்ரீ, அதுதான் சொன்னேன், தியரி ஓவர், இப்போ நடைமுறையில செயல்படுத்தறதுக்கு ஒரு ஆள் தேவை…” என்று சொல்லி, என்னைப் பார்த்து உள்ளர்த்ததோடு சிரித்துவிட்டு, ஒரு சிறிய இடைவெளி விட்டான்.

“சேஷு, ப்ளீஸ்” என்றேன் பதைபதைப்புடன்.

“பயப்படாத ஸ்ரீ, டைம் ட்ராவல் பண்ணி ஃப்யூசர்ல போறது எப்போதுமே சாத்தியம். ஆனா, கஷ்டம் பாஸ்ட்ல போக முடியாது அப்படிங்கறது உலகம் பூராவும் இருக்கிற / இருந்த விஞ்ஞானிகளோட சித்தாந்தம். இது பத்தி, ஐன்ஸ்ட்டின்ல ஆரம்பிச்சு, இப்போ, ரீஸண்டா மார்ச்ல போன ஸ்டீஃபன் ஹாக்கிங் வரைக்கும் நிறைய பேர் – எதிர்காலத்துல போறது கம்பேரேடிவ்லி ஈஸி, ஆனா, கடந்த காலத்துக்குப் போகறது ப்ராக்டிகலி சாத்தியம் இல்லனு – ஃபீல் பண்ணாங்க. அதுக்கு நிறைய காரணங்களும் இருக்கு. You are not supposed to disturb the fabric of time…” கொஞ்சம் இடைவெளி விட்டுக்கொண்டான். “எதிர்காலத்தை எப்பிடி வேணும்னாலும் டிஸ்டர்ப் பண்ணலாம். ஏன்னா, அது இனிமேதான் நடக்கப்போறது…பாஸ்ட் அப்படி இல்ல. நடந்துடுச்சு….” பேச்சை திடீரென வெட்டிவிட்டு, “ஆர்னி (ஆர்னால்ட்டை அப்படிதான் சொல்லுவான் அவன்) நடிச்ச Termiantor படம் நீ பாத்திருப்ப, அதுல என்ன நடக்கும்னு ஞாபகம் இருக்கா?” என்றான்.

தலையை ஆட்டினேன். “இருக்கு, சேஷு. நல்லா இருக்கு…..பார்ட் 1 ல நடக்கற சம்பவமே ஒரு பெரிய முரண்பாடுதானே?? கிபி 2029ல நம்ம உலகமே cyborg (ஸைபோர்க் – மனிதனைப் போல இருக்கும் ரோபோக்கள்- நாம் செய்ய முடியாத / நினைத்தும் பார்க்க முடியாத- நிறைய விஷயங்களை சாதிக்கக்கூடிய ரோபோக்கள்) வசமாகும் போது, ஜான் என்கிற மனிதன், இந்த இயந்திர ஸைபோர்க்குகளை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் நடத்துவான், அவனால், ஸைபோர்க்ஸ் பாடு ரொம்ப கஷ்டமாகிடும். இதுனால, ஸைபோர்க்ஸ் திட்டம் போட்டு தங்கள் நடுவே இருக்கிற ஒரு புத்திசாலி ஸைபோர்க்கை (ஆர்னால்ட்) பூமிக்குக் கடந்த காலத்துக்கு அனுப்பி, ஜானோட அம்மாவான ஸாரா கானர்ஸைக் கொல்ல முயற்சிப்பாங்க……..”

மூச்சு வாங்கிக் கொண்டு மேலும் தொடர்ந்தேன், “இதுமூலமா, ஜான் பிறக்கறதுக்கு முன்னாடியே அவங்க அம்மாவைக் கொன்னுட்டா, ஜான் பிறக்கவே மாட்டான், எதிர்காலத்துல இந்தப் புரட்சியே நடக்க விடாம பண்ணிடலாம் இல்லையா?அதுனால, 2029 ல இருந்து 1984 க்குப் போகும் அந்த ஆர்னி சைபோர்க். இது தெரிஞ்சுக்கிட்டு, ஸாராவைக் காப்பாத்த கைல் ரீஸ் (Kyle Rees) அப்படிங்கிற மனுஷன் கடந்த காலத்துப் போய் ஆர்னியோட திட்டம் நடக்காம இருக்க பாடுபடுவான். ஸாராவை ரொம்பக் கஷ்டப்பட்டுக் காப்பாத்துவான். இதுல என்ன காமெடினா, இந்தப் போராட்டத்துல, எதிர்காலத்துல இருந்து, அவளைக் காப்பாத்த வரும் கைலுக்கும், ஸாராவுக்கும் இணக்கம் உண்டாகி, ஸாராவோட உறவு கொண்டு அவளைக் கர்ப்பம் ஆக்கிடுவான் கைல். இதுல என்ன முரண்பாடுன்னா (paradox), எதிர்காலம் வரதுக்கு முன்னாடியே நிஜமான கடந்த காலத்துல ஜான் எப்படிப் பிறந்தான், அப்போ அவனோட அப்பா ?? திரும்பவும் எதிர்காலத்துல இருந்து வர்ற கைல் ஸாராவை எப்படி கர்ப்பமாக முடியும் ? இது முரண்பாடு இல்லையா?” என்று சொல்லி, மூச்சு வாங்கினேன்.

பொறுமையாக, எங்கேயும் குறுக்கிடாமல் கதை கேட்ட சேஷாத்ரி, சிரித்துக்கொண்டே, “நல்ல ஞாபக சக்திடா, உனக்கு” என்றான்.

NASA வில் புகழ்பெற்ற விஞ்ஞானி சேஷாத்ரி ராமானுஜமே (அவன் முழுப்பெயர்) நான் பேசுவதைக் கவனிக்கும்போது, எனக்கு என்ன வேண்டும்? மகிச்சியில், தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தேன், ” சேஷு, உனக்குத் தெரியாததில்லை, இந்த முரண்பாடு (paradox) – எதிர்கால டைம் ட்ராவல் பொறுத்த வரைக்கும்- ஒண்ணுல்ல, ரெண்டுல்ல, அஞ்சு இருக்கு….” நான் தொடரும் முன் குறிக்கிட்டான், சேஷாத்ரி.

“ஓகே, ஓகே, அதெல்லாம் தெரியும், இப்போ விஷயத்துக்கு வருவோம், இப்போ நான் செஞ்சுகிட்டு இருக்கிற இந்த ஆராய்ச்சில, கடந்துகாலத்துக்குப் போகிற நபர், எந்தக் காரணம் கொண்டும் கடந்தகாலத்துல நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை மாத்தக்கூடாது, உதாணரத்துக்கு, நீ 1947 க்குப் போனா, ஜனவரி 30ம் தேதி டெல்லி போய், காந்தி சாகறதுக்கு முன்னாடி அவரைக் காப்பாத்தக் கூடாது. இதுனால நிறையப் பிரச்சனைகள் வரலாம், அதுனாலதான், you should not disturb the fabric of time னு நான் ஏற்கனவே சொன்னேன். ஆனால், எதிர்காலம் அப்படி இல்ல. எதுவுமே predestine ஆகாதபோது, நாம தாராளமா சம்பவங்களைச் செய்யலாம், அதுக்கு முழு சுதந்திரம் உண்டு…” என்றான்.

“உண்மை, ஆனா, பாஸ்ட்ல சில சம்பவங்கள் நடக்காம தடுத்துட்டா, மனித குலத்துக்கு நல்லதுன்னா, அதைச் செய்யலாம் இல்லையா?” என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“ஸ்ரீ, நாம கடவுள் இல்ல. எதிர்காலத்துல சில விஷயங்களைச் செய்றது மூலம் பாஸ்ட்ல செஞ்ச சில தப்புகளைத் திருத்திடலாம் இல்லையா? உதாரணத்துக்கு, எதிர்காலத்துக்குப் போய் அணுசக்தி உபயோகத்தை ஒழுங்கா streamline பண்ணிட்டோம்னா, அணுஆயுதப் போரை to a very great extent தடுத்துடலாம் இல்லையா? அது முக்கியம்” என்றான்.

“சரி, என்னோட உதவி இப்போ எங்கே தேவை சொல்லு?” என்றேன் துடிப்புடன்.

“என்னோட டைம் ட்ராவல் எக்ஸ்பெரிமெண்ட்டுக்கு கினி பிக் (guinea pig) நீதான்,” என்றான் முகத்தில் ஒரு புன்னகையோடு.

ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை, “கம் அகைன்” என்றேன்.

“என்னோட டைம் ட்ராவல் எக்ஸ்பெரிமெண்ட்டுக்கு கினி பிக் (guinea pig) நீதான்,” என்றான் மறுபடியும்.

“என்ன சேஷு, வெளயாட்டா சொல்ற ?” என்றேன் ஏகப்பட்ட கேள்விகளுடன்.

“சீரியஸ். இன்ஷ்யூரன்ஸ் எவ்ளோ வச்சிருக்க?” என்றான் மிக சீரியஸாக.

“சேஷு, சேஷு ?” என்றேன் நம்ப முடியாமல்.

எனக்கும் இன்ஷ்யூரன்ஸுக்கும் ராசி சுத்தமாக இல்லை, 3 – 4 முறை பாலிசி எடுத்துவிட்டு கட்டமுடியாமற்போய் 50 வயதுக்கு மேல் அந்த ஆசை போய், எல்லாம் அவன் செயல் என விட்டுவிட்டேன். இப்படி ஒரு வில்லங்கம் வரும் என்று யார் கண்டது ?

“அப்பிடியே, பண்ணியிருந்தாலும் டைம் ட்ராவலுக்கு அதெல்லாம் எப்பிடி செல்லும்?” என்று கேட்டேன் புத்திசாலித்தனமாக.

சேஷாத்ரி என்னை நிமிர்ந்து பார்த்தான், “இடியட், இந்த மாதிரி பண்ணப்போறது நாம இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும், தெரியணும். உன் வைஃப் கிட்ட இரண்டு பேரும் ராமேஸ்வரம் போறோம். வர்றதுக்கு ஒரு 3-4 நாள் ஆகும்னு சொல்லு. சந்தேகம் வராது,” என்றான்.

“ஏண்டா, நான் இதுக்கு இன்னும் ஒப்துக்கவே இல்லை. அதுக்குள்ள எண்ட் கார்ட் போட்டு, ராமேஸ்வரம் போய் எனக்கு காரியமே பண்ணிடுவ போலிருக்கே,” என்றேன் சிறிது எரிச்சலுடன்.

“லுக், அஃபிஷியலா நான் இந்த மாதிரி செய்யப் போறேன்னு டிக்ளேர் பண்ணல, பண்ணவும் முடியாது. இதை நான் யு.எஸ். போய் பண்ணலாம், ஆனா, அந்த கிரெடிட் எனக்குக் கெடைக்காது. காது, காதும் வச்ச மாதிரி இங்க, என் லாபுல, சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டு, தேவையான அளவு ப்ரூஃப் சேத்துட்டு, யு.எஸ் போய் டிக்ளேர் பண்ணலாம்னு இருக்கேன். அங்க, இன்னொரு தடவ ப்ரூவ் பண்ணச்சொன்னா அப்போ பாத்துக்கலாம் ?” என்றான் கொஞ்சமும் அசராமல்.

நான் அவனையே ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் பார்த்தேன். இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்தவன், மிகப் பெரிய பணக்காரப் பெற்றோர் இருக்கும் வரை எவ்வளவு சொல்லியும் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான்.

நான்?? அவனைப் போல பணமும், புகழும் சேர்க்காவிட்டாலும், ஒரே பையனுக்குத் திருமணம் செய்து, மகனும், மருமகளும் அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார்கள். ஸ்கைப் உதவியால் அவ்வப்பொழுது பேசிக் கொள்கிறோம். மகள் படித்துக்கொண்டிருக்கிறாள், இன்னும் 2 – 3 வருடத்திற்குள் திருமணத்திற்கு ரெடி ஆகிவிடுவாள்.

சுஜாதா எழுதிய ‘சில வித்தியாசங்கள்’ சிறுகதையில் வரும் ராஜாராமனின் மனைவி போல என் மனைவியும்….”இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணம் பற்றாமல் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், ஒருங்கே சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்!”

சுஜாதா உண்மையிலேயே தீர்க்கதரிசி. அப்போதே ‘என் தீவிர வாசகனான உனக்கு வரும் மனைவியும் இப்படித்தான்’ என எனக்குக் கோடு காட்டிவிட்டார்……..சரி அதை விடுங்கள், இப்போதைய முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.

சேஷாத்ரி மேலும் நான் பங்குகொள்ளப் போகும் டைம் ட்ராவல் பற்றி எனக்குப் புரியும் அளவுக்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் :

**கடந்த காலத்துக்கு சென்று திரும்புவது எந்தவிதத்திலும் நிச்சயமில்லை. எவ்வளவோ இடர்பாடுகள் வரலாம் (ஒரே வேளை, நான் திரும்பவில்லை என்றால் என் குடும்பத்துக்கு பண உதவி உண்டு).

**வெற்றிகரமாகத் திரும்பிவிட்டால், இந்த ஆராய்ச்சியில் முழு மனதோடு / எந்தவிதக் கட்டாயாமும் இன்றி பங்குகொண்டதற்காக எனக்குப் பண உதவி உண்டு.

**ஒளியின் வேகத்தைவிட (ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்) வேகமாகச் சென்றால் மட்டுமே டைம் ட்ராவல் சாத்தியம்.

**இவ்வளவு வேகமாக செல்வதற்கு வாகனம் / அதற்கு எரிபொருள் / அதை இயக்கம் லாவகம் எல்லாமே ஒவ்வொன்றாக எனக்கு அறிமுகப்படுத்தப்படும். வீட்டிலிருந்து லாபுக்கு குடிபெயர்ந்துவிட வேண்டும்.

**கடந்தகாலத்துக்குச் சென்றபின், ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட எந்தவொரு நிகழ்ச்சியையும் மாற்ற முயலக்கூடாது.

**என்ன கடந்த காலம் என்றாலும், இதில் ஈடுபடும் டைம் ட்ராவலர்களின் இப்போதுள்ள வயது / தோற்றம் மாறாது.

**இந்தப் பயணம் நிச்சயம் சாத்தியம். ஒருவேளை, ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் ASTRA SCIENTIFIC பொறுப்பேற்காது. (ASTRA SCIENTIFIC என்பது சேஷாத்ரியின் நிறுவனம்)

……………….இதைப்போல இன்னும் (உங்களுக்கு சுவாரசியம் இல்லாத) பல விஷயங்கள்…..

***

வீடு திரும்பியவுடன் மனைவியுடன் பிரச்னை ஆரம்பித்து, இரவு நெடு நேரம் வாக்குவாதம் தொடர்ந்தது வேறுவிஷயம்.

***

காலை சேஷாத்ரியின் லாபை அடைந்தபோது என் கூட இருந்த என் மனைவியைப் பார்த்துவிட்டு அவனுக்கு ஆச்சரியம்,

“ஹாய், என்னம்மா, எப்பிடி இருக்க?” என்றான் மிக சாதாரணமாக.

தீர்மானமான குரலில் என் மனைவி சொன்னாள்,

“ஃபைன் சேஷு, ஆனா இந்த டைம் ட்ராவல் சமாச்சாரத்துல ஸ்ரீ கூட நானும் போவேன். இது ஓகேன்னா உங்க டெஸ்டுக்கு ஸ்ரீ மட்டுமில்ல, என்னையும் சேர்த்து ரெண்டு கினி பிக்…”

அவள் முடிக்கும்முன் குறுக்கிட்ட சேஷாத்ரி, “எனக்கு எந்த ப்ராபளமும் இல்லை. ஆனா, இந்த எக்ஸ்பெரிமெண்ட் ரொம்பவே அன்செர்ட்டன் (uncertain) தெரியுமில்லையா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய், திரும்ப வரலைனா உங்க பொண்ணு…… ?” என்று முடிக்காமல் கேள்வியைத் தொங்கவிட்டான்.

நான் எதுவும் சொல்லவில்லை. இதெல்லாம் ஏன் ஆரம்பித்தது? முதலில் சேஷுவை நான் பார்க்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்றெல்லாம் ஆதாரமான சந்தேகங்கள் வந்தன.

என் மனைவி, “தொண்டையைச் செருமிக்கொண்டு, “சேஷு, நீங்களும் ஸ்ரீயும் 30 வருஷத்துக்கு மேல க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ், எங்களுக்கு எதுவும் வில்லங்கமா ஆற மாதிரி நீங்க செய்ய மாட்டீங்கன்னு நம்பறேன். என் பொண்ணு பத்தி கவலை வேண்டாம். நான் ஏற்பாடு பண்ணிக்கறேன்,” என்றாள் அசராமல்.

பிறகு ஒருமணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு திரும்பிவிட்டோம். கிளம்பும்முன், சேஷாத்ரி மிகவும் தீர்மானமாக சொன்னான், “வெல், உங்க இஷ்டம், ஆனா, இந்த டைம் ட்ராவல் பண்ணும்போது நடக்கிற எல்லாமே ரொம்பவே கான்ஃபிடென்ஷியல், யார் கிட்டேயும் வாய் மூலமாக, எழுத்து மூலமாக பகிர முடியாது, கூடாது தெரியுமில்ல?” என்றான்.

இந்த முறை என் மனைவி எதுவும் சொல்லும்முன் நான், “டன்” என்றேன்.

***

வீட்டுக்கு வரும் வழியில், என் மனைவி எதுவுமே நடக்காத மாதிரி, மறுநாள் சமையலுக்கு வெண்டைக்காய் வாங்கிய போது எனக்கு சுஜாதா எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது:

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சாத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

***

பல்வேறு பரிசோதனைகள், பல்வேறு உபதேசங்கள், பல்வேறு எச்சரிக்கைகள்……எல்லாம் முடிந்து எங்களது சரித்திரப் பயணம் துவங்கி, ஆரம்ப ஏற்பாடுகள் / இயக்கங்கள் முடிந்த சிறிது நேரத்தில் ….நான் மேலே எதுவும் உணரும் முன், நினைவிழ……….

***

நினைவு திரும்பிய போது, மனைவியின் குரல் கேட்டது, “ஸ்ரீ, எங்க இருக்கோம் பாருங்க?”

ஹோட்டல் ரூமுக்கு வெளியே, பெங்களூர் சாலை பரபரப்பாக இருந்தது. “இது நாம செட் பண்ணின வருஷம்தானா, செக் பண்ணிட்டயா?” என்றேன் மனைவியிடம்.

“பண்ணிட்டேன் ஸ்ரீ, 1984 தான்” என்றாள். நண்பன் சேஷு படித்து, படித்து சில விஷயங்களை எங்கள் மண்டையில் ஏற்றியபடி முதலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) சென்றோம். அங்கு சேஷுவின் அனைத்துக் கட்டளைகளையும் செய்து முடிக்கவே இரண்டு முழு நாட்களாக, பிறகுதான் பெருமூச்சு விடமுடிந்தது.

ஜலஹள்ளியில் இருக்கும் BEL அலுவலகத்திற்கு போய் சில விவரங்களை சேகரித்தோம்.

சரியாக விலாசம் தெரிந்துகொண்டு, தொலைபேசியபின், மாலை பார்க்கலாம் என சம்மதம் கிடைத்தது.

***

“இருக்கார், நீங்க? ” என்ற பெண்மணியிடம், நான் என் பெயரைச் சொல்லி காலையில் அவர் கணவரிடம் தொலைபேசியில் பேசிய விவரத்தைச் சொன்னேன். உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது.

என் மனைவியுடன் உள்ளே நுழைய, சிறிது நேரத்தில் அந்த உயர்ந்த மனிதர் வெளியே வந்தார், “உக்காருங்கோ, என்ன அக்கப்போர் இப்போ?” என்றார் வெகு நாள் பழகியவர் போல. என் மனைவி வாயடைத்து அவரையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக, “சார், ரெண்டு பெரும் சென்னையிலிருந்து வரோம். ரொம்ப வருஷமா உங்க கதைகளை ஒண்ணு விடாமப் படிக்கிறோம், இங்க, பெங்களூர்ல எனக்கு ஒரு அஃபீஷியல் கான்ஃபெரென்ஸ், அப்படியே உங்களையும் பார்த்துடலாம்னு வந்தோம்,” என்றேன் மிக சந்தோஷமாக.

அவர் சிரித்துக்கொண்டே உள்ளே திரும்பி, “இதக் கேட்டியா, சார் வந்துட்டு சென்னையில பெரிய டாக்டர், அவர் வைஃப் ஒரு ஸ்கூல் பிரின்சிபால். ரெண்டு பேரும் என் தீவிரமான ஃபேன்ஸ். வீடு விலாசம், ஃபோன் நம்பர் எதுவும் தெரியாம, ஜலஹள்ளில இருக்கிற ஆஃபிஸ் வரைக்கும் போய் டீடைல்ஸ் வாங்கிண்டு வந்திருக்காங்க” என்றார் சிரித்துக்கொண்டே.

சில உபசரணைகளுக்குப் பின் கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரத்திற்கு மேல் பேசிவிட்டுக் கிளப்பும்போது, சட்ரென்று சொன்னேன், “சார், உங்க ஸ்மோக்கிங்கை விட்டுடலாமே, ஒரு டாக்டர்னு சொல்றேன். அது வேண்டாமே?” என்றேன்.

அவர் சிரித்தார். பிறகு கிண்டலாக கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, “ஆஸ் தி டாக்டர் ஸேஸ்,” என்றார். புகை பிடிப்பதின் பாதிப்புகளை சிறுது நேரம் பேசிவிட்டு கிளம்பினோம்.

***

இடைப்பட்ட நாட்களில் நடந்த வேறு சில / பல சம்பவங்கள் எதுவும் விவரிக்கவும் கூடாது, உங்களுக்கு சுவாரசியமும் இருக்காது.

***

மறுபடி அதே பயணம். கிளம்பும் முன் என் இஷ்ட ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டேன். நினைவு வந்து, லாபில் தயாராக இருந்த சேஷாத்ரியிடம், அவன் கேட்டிருந்த விவரங்களையெல்லாம் ஒப்படைத்துவிட்டு, பிற விஷயங்களை அப்புறம் பேசலாம் என அவசரமாக வீடு திரும்பும் வழியில், மறக்காமல் என் மகளை, அவள் மாமா (என்னுடைய மனைவியின் அண்ணா) வீட்டிலிருந்து கவர்ந்து கொண்டு, வீட்டுக்கு வந்து, என் மனைவியிடம் காஃபி கேட்டபோதுதான் பெருமூச்சு விட முடிந்தது.

எவ்வளவு பெரிய விஷயம்!! 2018 லிருந்து 1984 !! சத்தமில்லாமல் முடிந்து விட்டது? இருந்தாலும் என் மனதில் சில ஆதார சந்தேங்கங்கள் இருந்தன,

கையில் காஃபியுடன் வந்த மனைவி என்னைப் பார்த்து மந்தஹாசமாகச் சிரித்துவிட்டு, கையிலிருந்த ஆனந்தவிகடன் புத்தகத்தைக் கொடுத்தாள்.

பிரிந்தவுடன் முதல் பக்கத்தில், பெரிய எழுத்துக்களில்,

” பொங்கல்சிறப்பிதழில்ஆரம்பம் !,
மகத்தானமர்மக்கதை !!
சுஜாதாஎழுதும் !!!,
கணேஷ் / வசந்த் துப்பறியும் !!!!
‘உயர்வுநவிற்சிசதி’ சிலிர்க்கவைக்கும்மர்மத்தொடர்கதை !!!!!

என (சுஜாதா பாணியில் சொன்னால்) அலுவலகத்திலிருந்த அத்தனை ஆச்சரியக்குறிகளையும் உபயோகித்து அறிவிப்பு வந்திருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “டைம் ட்ராவல்

  1. அருமை! சுஜாதா உங்களுக்கு தூரத்துச் சொந்தமோ? அவர் எழுத்தின் சாயல் அங்கங்கே தெரிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *