கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 7,329 
 

“நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் பண்ணுறேன்னு பாக்குறது அவனுக்கு ரொம்ப ஈஸி”

“இண்ட்ரெஸ்டிங்.. அப்புறம்?”

“ஒவ்வொரு விஷயத்துலேயும் என்னை இமிடேட் பண்ண ஆரம்பிச்சான். என்னை மாதிரியே தலை வாருவான். நான் எந்த கலர் ஸ்கூல் பேக் வெச்சிருக்கேனோ, அதே கலர் பேக் தான் அவனும் வெச்சிருப்பான். எங்க ரெண்டு பேரையும் ரெட்டையர்னே எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சாங்க”

“ஓஹோ”

“ஆச்சரியம் என்னன்னா என்னை அப்படியே காப்பியடிச்சதாலே என் லெவலுக்கு அவனுக்கும் இண்டலிஜென்ஸ் இருந்தது. டென்த் ஸ்டேண்டர்ட் வரைக்கும் நான் தான் க்ளாஸ் பர்ஸ்ட். அவன் செகண்ட்”

“ம்”

“டென்த் பைனல் எக்ஸாம்லே தான் முதல் தடவையா அவன்கிட்டே தோத்தேன். அவன் ஸ்கூல் பர்ஸ்ட். நான் செகண்ட். எனக்கு ரொம்பவும் கஷ்டமாயிடிச்சி!”

“ஏன்?”

“அவன் திருடினது என்னோட பர்சனாலிட்டியை மட்டும் இல்லே சார். அறிவு, உழைப்பு எல்லாத்தையும் திருடிட்டான். என்னோட பல வருஷ கடுமையான உழைப்பு மொத்தமா ஒரு போலிக்கு போயிடிச்சி”

“கூல்… கூல்… அப்புறம் என்ன ஆச்சி?”

“அப்புறம் ஹையர் செகண்டரிலே நான் எடுத்த க்ரூப்பையே தான் அவனும் எடுத்தான். மறுபடியும் காம்பெடிஷன்.. ஆனா இந்த முறை அவனை நான் ஜெயிக்க விடலே. அவன் அடுத்தது என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியும்கிறதாலே அவனுக்கு ஏத்தமாதிரி நான் காய் நகர்த்தினேன். +2லே நான் தான் டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட். அவன் ரொம்பவும் நொந்து போயிருப்பான்”

“வெரிகுட்”

“கொடுமை என்னன்னா நான் சேர்ந்த காலேஜிலேயே.. அதுவும் என் க்ளாஸ்லேயே சனியன் மறுபடியும் வந்து சேர்ந்தான்”

“அடக்கடவுளே?”

“அவனாலே பர்சனலா ரொம்பவும் அபெக்ட் ஆனது இங்கே தான் சார்!”

“ஏன்? என்னாச்சி மறுபடியும்?”

“காலேஜ் கிரிக்கெட் டீமிலே சேருரதுக்கு ஏகப்பட்ட காம்பெடிஷன். ஸ்பின் பவுலரான அவன் என்னைப் போலவே ஸ்பீட் போட்டு பிராக்டிஸ் பண்ணான். பேட்டிங்கும் என்னை அப்படியே இமிடேட் பண்ணனுதுனால ஓரளவுக்கு சுமாரா ஆடுவான். செலக்சன் அன்னிக்கு எனக்கு லைட்டா பீவர் இருந்ததால அவன் நல்லா பெர்பார்ம் பண்ணி டீமுலே செலக்ட் ஆயிட்டான். நான் ரிஜக்ட் ஆயிட்டேன்”

“என்ன கொடுமை சார் இது?”

“ஆமாங்க.. அதுக்கப்புறமா தான் ரொம்ப பர்சனலா எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சான். நான் லவ் பண்ண பொண்ணையே அவனும் லவ் பண்ணான். ஆனா எனக்கு ஒருநாள் முன்னாடியே அவகிட்டே காதலை சொல்லி பிக்கப் பண்ணிட்டான். அவனுடைய உருவம், செயல், நடவடிக்கை எல்லாத்திலேயும் என்னோட பாதிப்பு உண்டு. நியாயமா பாத்தா அவ என்னைத்தானே லவ் பண்ணியிருக்கணும்?”

“கேட்குறதுக்கே பரிதாபமா இருக்குங்க”

“காலேஜ் முடிஞ்சது. அடுத்ததா வேலைக்கு அப்ளை பண்ணிக்கிட்டிருந்தோம். நான் எந்த கம்பெனியெல்லாம் அப்ளை பண்ணேனோ அங்கவெல்லாம் அவனும் அப்ளை பண்ணான். நான் அட்டெண்ட் பண்ண இண்டர்வ்யூ எல்லாம் அவனும் அட்டெண்ட் பண்ணான். துரதிர்ஷ்டவசமா ரெண்டு பேரும் ஒரே கம்பெனியிலே செலக்ட் ஆனோம்”

“என்னங்க இது? உங்க நிழல் மாதிரி இருந்திருக்காரே”

“அட. ஆமாங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சி. கொழந்தை கூட ஒரே நாள்ல பொறந்ததுன்னா பாத்துக்குங்களேன்”

“!!!!!!”

“அதுக்கப்புறம் தான் ஆகக்கூடாதது எல்லாம் நடந்துடிச்சி. நீங்களே விரிவா பேப்பர்ல படிச்சிருப்பீங்க. டிவியில பாத்துருப்பீங்க. என் வாழ்க்கை சிரிப்பா சிரிச்சிடுச்சி…” மெலிதான கேவலுடன் சொன்னேன்.

“ராகவ். ப்ளீஸ்… ப்ளீஸ்… கண்ட்ரோல் யுவர்செல்ப். ஆக்சுவலா உங்க ப்ராப்ளம் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. பேசிக்கலா நீங்க ரொம்ப நல்லவர். உங்க போலி கெட்டவர். ஆனா என்ன ஆச்சின்னா உங்களை இமிட்டேட் பண்ணதுனால அவர் பக்காவா ரொம்ப நல்லவரா ஆயிட்டார். அன்பார்ச்சுனேட்லி ஒரு கட்டத்துலே வெறுத்துப் போயி நீங்க அவர் உங்களை இமிடேட் பண்ணக்கூடாதுன்னு உங்களோட ரெகுலர் ஆட்டிட்யூடை மாத்திக்க ஆரம்பிச்சீங்க. சோ, அந்த கட்டத்துலே நீங்க கெட்டவனா மாறிட்டீங்க. ஆச்சரியமான விஷயம் என்னன்னா உங்க போலி நீங்க கெட்டவனா மாறினதுக்கப்புறமா உங்களை இமிடேட் பண்ணுறதை நிறுத்திட்டார். அவர் உண்மையாவே நல்லவனா மாறிட்டார். நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கார். நீங்க இப்படி மாறிட்டீங்க… ஓகே நாளையிலேர்ந்து ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சுடலாம்” என்று சொல்லி “பாய்ஸ்” என்று குரல் கொடுத்தார் டாக்டர் குமார்.

கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த என்னை செல்லில் அடைக்க வீல்சேரில் தள்ளிக் கொண்டு போனார்கள் சிப்பந்திகள். ஏன் கைகள் கட்டப்பட்டிருந்தன என்று கேட்கிறீர்களா? பின்னே? ஒரு தீவிர சைக்கோவின் கைகளை கட்டிவைக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?

– மே 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *