பெண் குடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,399 
 

ஆரல்வாய் மொழியின் சுற்றுப்புறச் சூழலும், அதன் மடியில் கிடந்த அரண்மனை மாதிரியான அந்த வீடும், பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அப்போதைய நாஞ்சில் நாட்டின் வட எல்லையான இந்த ஊரை வளைத்துப் பிடித்திருப்பதுபோல், அதற்கு வடக்குப் பக்கமாய் திரும்பி நிற்பதால் வடக்கு மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை. ஊரையே வழிமறித்து நிற்கும் இந்த மலைக்கு எதிரே மல்லுக்கு நிற்பது போன்ற பெருங்குன்றான குருசடி மலை. இந்த இரண்டிற்கும் இடையே நூறடி இடைவெளி… கீழே அதல பாதள கணவாய். இதற்கு பாயிட்டு மெத்தையிட்டது போன்ற மணல்தேரி. தென்மேற்கில் பெயருக்கேற்ற தாடகை மலை… தென் கிழக்கில் ஈட்டியும், வாளுமான கொலை வீரர்களைக் கொண்ட சமஸ்தான கோட்டைக் கொத்தளம்…

இந்தப் புறச்சூழலின் அடிவாரத்தில் ஒரு அகச்சூழலாய் கொல்லைப்புறக் குளமும், தோப்பும் துறவுமாய் விளங்கிய அந்த “தறவாடு’, நான்கு பக்கமும் நாலு நாலு அடுக்குகளைக் கொண்டது. மேலே மகுடம் சூட்டியது போல் ஒரு மாடியையும் கொண்டது. வீட்டின் முகப்பிற்கு அடுத்த வெளிச் சுவர் ஈட்டி, வேல், துப்பாக்கி போன்ற வேட்டைக் கருவிகளை அப்பி வைத்திருந்தது.

ஆனாலும்

அந்த பீதிக்கு ஒரு விதி விலக்காய், அந்த வீட்டுப் பெண்கள் தோன்றினார்கள். ஏமான் வீட்டுப் பெண்கள், என்பதால் ஊராருக்கு பயம். அதே சமயம் அழகாய் இருந்ததால், ஒருவித ரசனைச் சுவை. ஏமானின் காவலாளி எவனாவது ஒருவன் மனதைத் தோண்டி அந்த ர்சனையை கண்டுபிடித்து விடுவான் என்ற அச்சத்தில் ஏற்படும் ஒரு பயபக்தி.

இப்படிப் பட்ட அந்த பயபக்திப் பெண்கள், அன்றும் மலையடிவார அம்மன் கோவிலுக்குப் போய்விட்டு, மாலையில் காலக் கட்டாயத்தைக் கருதி, அவரச அவரசமாய் நடந்து, தறவாடு வீட்டின் நடுமுற்றத்தில் வந்த பிறகுதான், சிறிது நிதானித்து நின்றார்கள். வண்ண வண்ண மலர்களால் “நெய்யப்படும்” ஒணக்கம்பளம் நிமிர்ந்து பார்ப்பது போன்ற ஒட்டு மொத்தமான அழகு தோரணை.

மொத்தம் எட்டுப் பெண்கள். முதிய தாயான குஞ்சம்மா, சித்திக்காரிகள் வேக்காளி, குன்னிக்குட்டி. எஞ்சிய ஐவர் உடன்பிறப்புகள் அல்லது ஒன்று விட்ட சகோதரிகள். எழுபது முதல் இருவது வரையான வயதுக்காரிகள். இன்னென்ன வயதுகளில் இப்படி இருந்தோம், இருப்போம் என்று அத்தனைப் பெண்களும் தத்தம் வயதுக்கேற்ப ஏழு பெண்களையும் கண்ணாடியாய் ஆக்கிக் கொள்ளலாம். முன் தலைகளில் வலதுபக்கம் தலைமுடியை பந்து போல் சுருட்டி ஒரங்கட்டி, அதன் அடிவாரத்தில் பூவேலி போடப்பட்ட கொண்டைக்காரிகள். தொள்ளையாகவோ, மொக்கையாகவோ இல்லாமல், காலணா பரிணாமத்திற்கு ஒட்டை போட்ட காதுகளுக்குள் உருளை வடிவமான காதணிகளையும், கழுத்து, கை, மார்பு, கால்களை மறைக்கும் பொன் நகைகளையும் கொண்ட நடமாடும் நகையலங்காரிகள்.

அந்த முற்றத்தில் அரைக்கால் நாழிகை இளைப்பாறி முடித்துவிட்டு, அந்த எட்டு பெண்களில் ஏழு பேர், ஆண்கள் நுழையக் கூடாத மாடியில் உள்ள தங்களது சயன அறையை நோக்கி, கிழக்குப் பக்கமாக உள்ள ஏணிப்படிகளில் ஏறியபோது, கடைக்குட்டியான பாருக்குட்டி, கண்ணுக்கு எதிரே தொலைவில் உள்ள கொல்லைப்புறத்தில் தெரிந்த காரணவான் எனப்படும் மூத்த தாய்மாமனையும், அம்மாயி என்று அழைக்கப்படும் அவன் மனைவியையும், படபடத்து பார்த்தாள். மடித்து வைத்த முழங்கை போன்ற ஏணிப்படிகளின் திருப்புத்தளத்தில், தாய்க்காரி குஞ்சம்மா, அவளை வாய்விட்டு கூப்பிட்டபோது, பாருக்குட்டி கொல்லைப்புறம் தாவிய கண்களை எடுக்காமலே பதிலளித்தாள்.

“இன்றைக்கும் காரணவான் கிட்ட கேட்டுப் பார்க்கேன் அம்மச்சி

“பக்குவமாய் மோளே… பக்குவமாய்…”

தனித்துவிடப்பட்ட பாருக்குட்டி, கண்காட்டும் வலப்பக்கம் முதலாவது சுற்றில், அந்த வீட்டிலேயே மிகப்பெரிய கூடம் மாதிரியான அறையை வெறித்துப் பார்த்தாள். அவள் நினைவுகள் நிகழ்கால நிகழ்வுகளை துளைபோட்டு, கடந்தகால ஊற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தன.

அதே அறையில்தான், ஆறுமாதத்திற்கு முன்பு, ஒரு மங்கள இரவு வேளையில், அரிசி, நெல், தென்னம்பாளை, அம்பு, பித்தளைச் சட்டமிட்ட கண்ணாடி, கொழுந்து விட்டெரியும் கரி நெருப்பு, சின்னதோர் மரப் பெட்டியான செப்பு ஆகிய அஷ்ட மங்கலப் பொருட்களின் இருபக்கமும் அவள் மேற்கு நோக்கியும், மணமகனான சங்குண்ணி கிழக்கு நோக்கியும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராய் முதல்தடவையாக பார்த்துக் கொள்கிறர்கள். மணமகன், குத்து விளக்கை ஏற்றிவிட்டு மாப்பிள்ளைத் தோழனிடம் உள்ள பட்டு, பீதாம்பர முண்டுகளையும், துண்டுகளையும் வாங்கி, நாணிக்கோணிய பாருக்குட்டியின் கையில் திணிக்கிறான். உடனே உற்றார், உறவினர் இருவர் மீதும் மங்கள அரிசிகளை தூவி முடிக்க, முண்டு கொடுத்து ஏற்பட்ட சம்பந்தம் நிறைவு பெறுகிறது.

மூன்று நாழிகைக்குள் அந்த சம்பந்த அறையே, சம்போக அறையாக மாற்றப்படுகிறது. அந்நிய ஆண்வாடை அறியாத பாருக்குட்டி, முதலில் முரண்டு பிடிக்கிறாள். சிறிது நேரத்தில், காய்ந்த மாடு கம்மாவிற்கு போன கதையாகிறாள்.

மறுநாள் மாத்தாண்டத்தில் உள்ள மாப்பிள்ளை தறவாட்டில் மறுஇரவு. அது முடிந்ததும், அன்றே பிறந்த வீட்டிற்கு திரும்பிய இவளை, ஒருமாதம் கழித்து “சம்பந்தக்கார” தறவாட்டு “அம்மாயி மங்கலப் பெண்களோடு வந்து மார்த்தாண்ட தறவாட்டிற்கு அழைத்துப் போகிறாள். ஆர்த்தி வரவேற்போடு, நாழி அரிசி, ஊதுபத்தி, வாழைப்பழ படையலுக்கு முன்னால் பாருக்குட்டியை ஒரு பாயில் உட்கார வைக்கிறாள். தறவாட்டு பெண்ணொருத்தி, அவளுக்கு படையலில் உள்ள ஒரு வாழைப் பழத்தை எடுத்து வாயில் ஊட்டுகிறாள். இந்த “மதுரம் திண்டல்” என்ற வைபவம், பாருக்குட்டிக்கு கணவன் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தங்குவதற்கு உரிமை அளிக்கிறது. நிரந்தரமாக தங்கமுடியாதுதான். ஆனால், தற்காலிகங்களே நிரந்தரமாக்கப் பட்டதில், மருமக்கள் தாயப் பெண்கள் அத்தனை பேரையும் போல, அவளுக்கும் கொள்ளை மகிழ்ச்சி.

என்றாலும், சாஸ்திர சம்பிரதாயம் வழங்கிய இந்த அரைகுறை வரத்தை காரணவானான தாய்மாமன் இடைமறித்து கிடப்பில் போட்டார். அவளது உரிமையை செயல்படுத்த வேண்டிய தனது கடமையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. பாருக்குட்டியும், தனது கணவன் வீட்டுக்குச் செல்வதற்கு, தனது தாயான குஞ்சம்மாவை அனுப்பி அவரிடம் அனுமதி கேட்டாள். அவர் அசைந்து கொடுக்காதபோது, இவளே ஏதோ ஒரு சாக்கில் அவரிடம் எதிர்பட்டு சாடைமாடையாக கேட்டு அசைக்கப் பார்த்தாள். அவர் பார்த்த பார்வையில், அவள் குடைசாயப் போனாள். எந்தப்.பதிலும் இல்லை. ஒரே ஒரு தடவை தாய்க்காரி வலுக்கட்டாயமாக உண்டா இல்லையா என்று கேட்டபோது, அவர் எனக்கு தெரியும் எப்போன்னு என்று மட்டும் பதில் சொன்னார்.

அந்த எப்போ என்பது “இப்போவாக இருக்கக்கூடாதா என்று பாருக்குட்டி, ஒவ்வொரு இரவையும் எதிர்பார்ப்பாய் கழித்து பகலில் அவர் பக்கத்தில் போய் நிற்பாள். அவரோ, அவள் அங்கே இல்லாததுபோல் அனுமானிப்பார். போதாக்குறைக்கு, இரவில் வந்து பகலில் திரும்பும் கணவன் சங்குண்ணியை, எள்ளும் கொள்ளுமாய் பார்ப்பார். அவனை காணும் போதெல்லாம் பட்டும் படாமலும் காறித் துப்புவார். அப்போதுதான் சங்குண்ணிக்கும் மோகமான முப்பது நாட்களும், ஆசையான அறுபது நாட்களும் முடிந்துபோன வேளை. இதனாலும், காரணவானின் அவமதிப்பாலும் பாருக்குட்டியிடம் திட்டவட்டமாய் சொல்லிவிட்டான். மேல்முறையீடு இல்லாத திர்ப்பு.

“நீ என் வீட்டுக்கு வந்துபோயி இரு… நான் இங்கே தாமசிக்க வரமாட்டேன்.”

பாருக்குட்டி, நினைவுகளை அசைபோடாமல், அவற்றாலேயே அசைபோடப்பட்டு, கோபமும், தாபமுமாய் குமுறி நின்றாள். மாமன்களுக்கு வாரிசுகளாகி, மூத்தமாமனை காரணவான் என்று பெயரிட்டு, அவனை, குடும்ப சர்வாதிகாரியாக்கி, கணவர்களை வெறும் விருந்தாளியாக்கி அவன் கொடுக்கும் குழந்தைகளை பாதி அனாதைகளாக்கும் மருமக்கள்தாய முறையை தீர்த்து முடிக்காமலே மனதுக்குள் திட்டிக் கொண்டாள். அந்த கோபவேசத்தில், அன்றைக்கு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற மனத்திடத்தோடு, மூன்று தாழ்வாரங்களையும் தாவித்தாவி, மூன்று வாசல்களையும் தாண்டித் தாண்டிகொல்லைப்புறம் வந்தாள். காரணவான்.அம்மாயி, சில அந்நியர்களோடு இருப்பதை பார்த்துவிட்டு, சிறிது நிதானப்பட்டு கூப்பிடு தொலைவில் நின்று, அங்கே ஏறிட்டுப் பார்த்தாள்.

ஆனாலும், அம்மாயியைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு கோபம். பிறந்த தறவாட்டில் இருக்க வேண்டியவள், இங்கே அம்மானுடன் வந்து நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டாள். இந்த தறவாட்டுப் பெண்களுக்குரிய அசையா சொத்துக்களை, இவள், தனது பிள்ளைகளுக்கு கடத்தி குடும்ப அரசியல் நடத்துகிறாள். இந்த கள்ளக்கடத்தலை அடிக்கடி தட்டிக்கேட்கும் பாருக்குட்டியை, காரணவானுக்கு காதுகுத்தி கணவனிடம் போகவிடாமல் தடுக்கிறாள். நாலுந்தெரிந்த சங்குண்ணி, அங்கே வந்தால், குட்டு அம்பலமாகிவிடும் என்று அவனையும் இழிவுசெய்யும்படி கணவனை ஏவி விட்டிருக்கிறாள்.

தறவாட்டு குடும்ப அரசியலில், தான் ஒரு பகடைக்காயாய் மாறிப்போன வெறுமையில், பாருக்குட்டி குவியலாய்க் கிடந்த அந்த மனிதர்களைப் பார்த்தாள். காரணவான், தனது கொழுத்த உடம்பை கடைந்தெடுத்த தேக்கிலான சாய்வு நாற்காலியில் போட்டு அதற்கு பாடைபோல் அமைந்த துணிச்சாய்வில் தன்னைத் தானே தாலாட்டிக் கொள்கிறார். நெத்தலிக்கருவாடு அம்மாயி, அவர் பின்பக்கமாய் நின்று அந்நியர்களுக்கு தெரியாதபடி அவரது பிடரியை கோதிவிடுகிறாள். காரணவானுக்கு அருகே சரிநிகர் சாமானமாக, அதே சமயம் ஒரு முக்காலியில் ஒரு மினுக்கான மனிதர் உட்கார்ந்திருக்கிறார். கடுக்கன், நேரியல், இரட்டைமடிப்பு வேட்டி வகையறாக்களைக் கொண்டவர். காரணவானின் காலடிப் பக்கம் ஒரு பலாப்பலகையில் ஒலைக்கரணம். மடித்துப் போட்ட கால்களை சதைப்பலகையாக்கி, இடது கை, பனையோலை சுவடியை பிடித்திருக்க, மாட்டுக் கொம்பு பிடிகொண்ட எழுத்தாணியால், வாய்க்குள் வார்த்தைகளை பிரசவித்தபடியே எழுதுகிறார். பார்ப்பதற்கு எழுத்தாணி நகர்வதுபோல் தோன்றினாலும், ஒலைதான் நகர்கிறது. அருகே இரண்டு சுமார் மனிதர்கள். சிறிது தொலைவில் கைகட்டி, வாய்புதைத்து நிற்கும் காவலாளிகளும், ஏவலாளிகளும். அவர்கள் இளக்காரத் தோற்றமாய் நின்றாலும், சில கைகள் வேல்கம்புகளை பிடித்திருந்தன. சில ஈட்டிகளை பற்றியிருந்தன. இந்த ஆயுதங்கள் அந்த இளக்காரத்தையே கம்பீரப்படுத்தின.

இதற்குள் ஒலைக்கர்ணம், தான் எழுதி முடித்த ஒலைச்சுவடி அடுக்கின் முனையில் மேலும் கீழுமாய் இரு துவாரங்களைப் போட்டு, அவற்றுக்குள் செப்புக் காசுகள் கட்டப்பட்ட கயிறுகளை விட்டு, பின்பக்கமாய் இழுத்து கட்டிமுடித்துவிட்டு, காரணவானையும், அந்த மினுக்கு மனிதரையும் மாறிமாறி பார்த்தபடியே, ஒலையை வாசித்தார். அந்த வாசிப்பு வரிகளுக்கு காற்புள்ளி, அரைபுள்ளிபோல் இருவரையும் அவ்வப்போது மாறிமாறி பார்த்துக் கொண்டே வாசித்தார்.

“நாஞ்சில் நாட்டு தாமரைக்குளம் கணக்கு ஆறுமுகப் பெருமாள் உள்ளிட்டாருக்கு, ஆரைவாய் மொழியில் பார்வதிக்காரர் நந்திஸ்வரன், பறையடிமை விலையோலை எழுதிக் கொடுத்த கரணமாவது.”

“நாங்கள் குருபரமுடை யோராக ஆண்டு அனுபவித்து வருகிற ஆரைவாய் மொழி ஸ்ரீபால பொய்கை புறஞ்சேரியில் கிடக்கும் திண்டாதாரில் பறை இசக்கிமாடத்தியை, சனம் நாலும் விலை கொள்வாருளதோ, கொள்வாருளதோ என்று நாங்கள் முற்கூற, விலை கொள்வோம் என்று இவர்பிற்கூறி எம்மிலிசைந்து, எதிர் மொழி மொழிந்து, மறுமொழி கேட்டு உறுமொழி பேசி தம்மில் பொருத்தி ஆரைவாய்மொழி மன்றருகில் நிறுத்தி நால்வர்கூடி நடுவர் மூலமாக விலை நிச்சயித்த அன்றாடகம் வழங்கும் நெல்மேனி கலியுக ராமன் பணம் நாற்பது… இப்பணம் நாற்பதுக்கும் விலையாவணக்களத்தை காட்டி பெற்று கை செலவாக கொண்டு விலையற விற்று பொருளறப்பற்றி விற்று விலைப்பிரமாணம் செய்து கொடுத்தோம். இது விலையோலை ஆவதாகவும், இதுவல்லது வேறு விலையாவன பொருளாவன சிலாவன, பொருள் மாண்டறுதிபொருள் செலவு ஒலை கரணமும் காட்டவும் கடவதன்றியென ஒரு காலாவது இருகாலாவது முக்காலாவது, ஒலைக்குற்றம், எழுத்துக்குற்றம் சொல் குற்றம், பொருள் குற்றம் வெட்டுச்செருக்கு, வரிமாறாட்டம், வரி நுழைந்தெழுதல் வாசகப்பிழை, மறு எக்குற்றமும் குற்றமின்றி வியாபித்து விலைப் பிரமாணம் செய்து கொடுத்தோம். பார்வதிக்காரர் நந்திஸ்வரன் உள்ளிட்டார். இதற்கு சாட்சி இராமலிங்க நல்ல சிவன் (ஒப்பு) தானுவன் பிச்சையாண்டி (ஒப்பு) இப்படி இவர்கள் சொல்ல இந்த பறையடிமை ஒலைக்கரணம் நடுவெழுதின ஆரைவாய்மொழி தேசம் ஊர்கணக்கு வன்னியப்பெருமாள் நந்திஸ்வரன் (ஒப்பு)”

அந்த ஒலைவாசிப்பு கிளப்பிய ஒலிஅலைகள், அதிர்ச்சி அலைகளாகி, பாருக்குட்டியின் காதுகளில் மோதின. ஒவ்வொரு வரியும், வார்த்தை, வார்த்தையாய் குத்தியது. அந்த ஒலைக்கட்டில் உள்ளடங்கிய அத்தனை உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் ஒற்றை ஆயுத எழுத்தாகி, அவளை கூறுபோட்டது. விலைபோன இசக்கி புரசமாடத்தியை அவள் அறிவாள். அந்த தறவாடு கோலோச்சும் அடிமைகளில் மின்னும் கருப்பி. வீட்டில் கொல்லைப்புற முனையில் படிக்கட்டுகள் கிழ்நோக்கி இட்டுச் செல்லும் தறவாட்டு குளத்தை அடுத்துள்ள முக்கனி மரங்களோடு, பனையும், தென்னையும் இடையிடையே கொன்றையும், தேக்கும் ஊடுபயிராக காணமும் விளையும் தோப்புக்காட்டின் மறுமுனையில் மூன்றடி உயர, இரண்டரையடி அகல குடிசைகள் ஒன்றில் வசிப்பவள். பாருக்குட்டியை, அந்தத் தோப்பில் பார்க்கும்போதெல்லாம், வீட்டுக்காரனான புலைமாடனை அதட்டி, உருட்டி, அந்தப் பக்கமாய் கொண்டுவந்து, ஒரு தென்னை மரத்தில் தாவவிடுகிறவள். இரண்டு இளம் தேங்காய்கள் உதிர்ந்ததும், அவற்றை அரிவாளால் கும்பங்களாய் செதுக்கி, அவற்றின் முனைகளை உடைத்து சிறிது தொலைவில் உள்ள கமலைக்கல்லில் வைத்துவிட்டு, ஒரு தென்னை மரத்திற்கு பின்னால் மறைந்தபடியே கூவுகிறவள். தேங்காமோ… தேங்காமோ

இப்படிப்பட்ட இசக்கி மாடத்தி, இப்போது விலைபோகிறாள். ஒருவேளை அவள் தன்மீது கொண்ட தனியன்பே அவளை கணவனிடம் இருந்தும், குழந்தைகளிடம் இருந்தும் நிரந்தரமாய் பிரித்து, கண்காணா இடத்திற்கு திவாந்தரமாய் போகவேண்டிய கட்டாய அபாயத்தை கொடுத்திருக்கலாம். அம்மாயி என்பவளின் குடும்ப சதுரங்கத்தில் இந்த அப்பாவியும் ஒரு பகடைக்காயாகி விட்டாள்.

பாருக்குட்டி, அடங்காச் சினத்திற்கு ஆட்பட்டாள். அப்படி ஆட்பட ஆட்பட அவளை பெரும்பாலும் இன்பமயமாயும், இடையிடைய துன்பமயமாயும் ஆட்டிவைத்த சங்குண்ணி காணாமல் போய்விட்டான். காரணவான், தறவாடு, அம்மாயி, அம்மா, உற்றார், உறவினர் அத்தனைபேரும், அத்தனையும் காணாமல் போனார்கள். போயின. அவளுக்கு, தான் என்பதும் நினைவற்றுப் போனது. அவள் உடல், பொருள், ஆவி அனைத்திலும் இசக்கி மாடத்தி ஒருத்தியே வியாபித்து நின்றாள்.

பாருக்குட்டி, அந்தக் கும்பல் பக்கம் சென்றாள். மூத்த தாய்மாமனான காரணவானுக்கு மரியாதை தெரிவிக்கும் சம்பிரதாய உணர்வில்லாமல், மார்பு துணியை விலக்கிக் கொள்ளாமலே, அவரை நேருக்கு நேராய் பார்க்கப் போனாள். அவர் போட்ட எதிர் பார்வையில் அப்படி பார்க்க முடியாமல், அம்மாயியைப் பார்த்து கேட்டாள்.

அம்மாயி! நம்மோட அடிமையை அந்நியருக்கு விற்கிற அளவுக்கு நாம செல்வத்தில குறைஞ்சு போகல, அதோட ஒரு பெண்ண அதிலயும் ஒரு இளம் பெண்ண அவள் குடும்பத்தில் இருந்து பிய்த்து எறிவது மகாபாவம். இந்த பாவத்தை இப்போ நாம நிறுத்தா விட்டால், “நாமே அடுத்த ஜென்மத்துல அடிமையா பிறப்போம்”.

பாருக்குட்டி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், எப்படியோ பேசி, காரணவான் முகத்தை கூம்ப வைத்து விட்டாள். அம்மாயிகாரியின் உதடுகளை துடிக்கச் செய்துவிட்டாள். காரணவான் அவளிடம் பேசுவதை தனது தகுதிக்கு கீழான காரியமாக நினைத்து சொல்லிக்கொடு… கிள்ளிவிடு. இல்லாட்டி தள்ளிவிடு என்ற பழமொழியான சாஸ்திர வார்த்தைாகளை வாயிலி ருந்து கீழே உதிர்த்துப் போட்டார். பிறகு, அவள் முன்னால் தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் மினுக்கு மனிதரைப் பார்த்து அங்கே போய், இசக்கி மாடத்திய இழுத்துட்டுப் போகலாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் மாயாவிடோல் மறைந்து போனார். அம்மாயியும் பாருக்குட்டியை கண்களால் எரித்து அவளைக் கடித்துத் தின்பதுபோல் நாக்கை நீட்டி, கணவர் பின்னால் ஓடினாள்.

ஆண்டையான ஆறுமுகப்பெருமாள், ஒலைக்கர்ணம், ஊர்க்கர்ணம், ஆகியோர் ஏவலாளிகளோடு கொல்லைப் பக்கமாய் போனார்கள். முன்னவர் மூவரும் தோப்புக்குள் நின்றபோது, ஏவலாளிகள் சேறும் சகதியுமான அந்த குடிசை மண்டிக்குள் மூன்றாவது குடிசை முன்னால் போய் நின்றார்கள்.

ஒரு முண்டாணி நாழிகைகளுக்குள், அந்தக் குடிசையே அங்குமிங்குமாய் ஆடியது. அதன் உச்சி குலுங்கியது. இந்த குலுக்கலுக்கு, ஏற்பட்ட கூக்குரல், தொலைவில் உள்ள பாருக்குட்டியை உறைய வைக்கிறது. சிறிது நேரத்தில் இசக்கி மாடத்தி, உச்சிமுடி இழுக்கப்பட்டு குடிசைக்கு வெளியே கொண்டுவரப் படுகிறாள். பிள்ளை குட்டிகள், ஏவலாளிகளின் கால்களை கட்டிக் கொள்கின்றன. கணவன் புலைமாடன், அவர்கள் முன்னால் படுத்து பாம்புபோல் தலைநிமிர்த்தி கையெடுத்து கும்பிடுகிறான். அவர்களோ, இசக்கி மாடத்தியின் கால்கள், அவன் தலையில் மோதும்படி, அவளை இழுக்கிறார்கள். இழுத்து அடிக்கிறார்கள். வழிமறிக்கும் பிள்ளைகளை கணுக்கள் புடைத்த மூங்கில் தடிகளால் குத்துகிறார்கள். அக்கம்பக்கத்துக்கு குடிசைக்கார அடிமைகள், இத்தகைய அமங்கலத்திற்கு பழக்கப்பட்டுப் போனதால் வாயடைத்து, காதைடைத்து நிற்கிறார்கள். பூமத்தியரேகை போல் கற்பிதமான ஒரு அடிமைச்சங்கிலியை அவர்களால் உடைக்க முடியாமல் உழல்கிறார்கள்.

இந்த அவலத்தையும், ஒலத்தையும் காணச் சகிக்காததுபோல், நெற்றி திருநீர் மேல் வைக்கப்பட்ட மஞ்சள் குங்குமமாய் ஒளிர்ந்த அந்திமச் சூரியன், தாடகமலைக்குள் ஜீவ சமாதியாகிறது. பாருக்குட்டி, தறவாட்டின் தென்மேற்கு மூலையில் புதர்மண்டிய நாகராஜா சிலைகளை கொண்ட தனிக்கோவி லான சித்திரக்கூடத்திற்கு முன்னால் ஓடிப்போய் விழுந்து விழுந்து கும்பிடுகிறாள். மறுபடியும் எழுந்து நின்ற இடத்திற்கு தாவுகிறாள். தோப்புப்பக்கம் வேகவேகமாய் நடக்கிறாள். நடந்தவேகத்திலேயே திரும்புகிறாள். தறவாட்டிற்குள் முயலாய் ஓடி, ஆமையாய் திரும்புகிறாள்.

அதற்குள், இசக்கிமாடத்தி இழுத்து வரப்படுகிறாள். அவள் முடியே மூக்காணங்கயிறாகி ஒருவனின் கைப்பிடிக்குள் அடங்குகிறது. வைரப்பட்ட நிலக்கரித் துண்டம் ஒன்று கைகால் முளைத்து பெண்ணுரு பெற்றது போன்ற அவள் உடம்பின் ஒவ்வொரு அங்கங்களையும் ஒவ்வொருத்தன் பிடித்துக் கொள்கிறான். முரண்டு பிடிப்பவளை ஒருவன் மூங்கில்தடியால் மாறிமாறி அடிக்கிறான். இன்னொருத்தன், சாட்டைக்கம்பால் முன்னாலும், பின்னாலும் இடிக்கிறான். ஆறுமுகப் பெருமாள் அதை அங்கிகரிப்பதுபோல், மேலும் கிழுமாய் தலையாட்டுகிறார். இசக்கி மாடத்தியோ ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு துள்ளலாய் குதிக்கிறாள். ஒவ்வொரு புலம்பலாய் வெளிப்படுத்துக்கிறாள்.

இறுதியில், புதிய ஏமான் எதிர்பார்த்ததுபோல, அடிபட்ட மாடாய் படிகிறாள். அவைைள நோக்கி அலறியடித்து ஓடிவரும் புலைமாடனையும், நாலைந்து சிறுவர் சிறுமிகளையும் நோக்கி, இருவர் ஈட்டிகளோடு ஒடுகிறார்கள். அவர்கள், ஈட்டியைப் பார்த்து பின்வாங்குவதும், ஈட்டிக்காரர்கள் பின்வாங்கும்போது முன்வாங்குவதுமாய் அலைமோதுகிறார்கள். தொலைதுார குடிசைப் பகுதியில் இவர்களின் நெருக்கமான உறவினர்கள் குய்யோ, முறையோ என்று கூக்குரலிடுகிறார்கள். மாரடிக்கிறார்கள். கிழே குனிந்து மண்ணள்ளி வாயில் போட்டுக் கொள்கிறார்கள்.

ஆறுமுகப்பெருமாள் தலைமையிலான அந்தக் கும்பல், இசக்கி மாடத்தியோடு, பாருக்குட்டியை கடக்கப்போனது. உடனே அடிமைக்காரி, அவன்ளப் பார்த்து தனது கைகளை தலைக்குமேல் துக்குகிறாள். அவள் காலில் விழுவதற்காக முன்பக்கமாக சாய்கிறாள். அதற்குள் முன்பக்கமாய் நின்ற ஒரு ஏவலாளி, தனது ஒரு கால்களை குறுக்காய் நீட்டி, அவள் சரிந்து விடாமல் முட்டுக் கொடுக்கிறான். பின்பக்கமாய், நின்றவன் அவளின் கைகளை முதுகின் இருபக்கமும் வளைத்து பிடித்து வைத்துக் கொள்கிறான்.

பாருக்குட்டி, அந்தக் கும்பலை வழிமறிப்பதுபோல் குறுக்கே நின்று ஆறுமுகப் பெருமாளிடம் கெஞ்சுகிறாள்.

“நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமனாலும் கொடுக்கேன். இவளை என்கிட்ட விட்டுடுங்க. என் சம்பந்தக்கார தறவாட்டுல இருந்து எனக்கு நாலு, எட்டுன்னு பனிரெண்டு ரூபா வந்திருக்கு. முழுசையும் கொடுத்துடறேன்.”

மாடத்தியை வாங்கிய ஆறுமுகப் பெருமாள் கணக்குப் போட்டுப் பார்த்தார். அவள் ஒரு எருதின் விலைபெறுவாள். அதாவது பதினெட்டு ரூபாய் பெருவாள். அதோடு இவளிடமே விற்பது பார்வதிக்காரரை அவமானப்படுத்தும் காரியமாக கருதப்படும். மண்ணிற்காகவும், மரத்திற்காகவும் மனத்தாங்கல் வரலாம். கேவலம் ஒரு அடிமைக்காக வரலாமா…

ஆறுமுகப் பெருமாள், பேச்சை மாற்றினார்.

‘பணம் கிடக்கட்டும். இவளும் இருக்கட்டும். மொதல்ல பெரிய மனிதரப் பார்த்தா, மார்புத் துணியை எடுக்கணும் என்கிற மரியாதையை தெரிஞ்சுக்கம்மா.”

“நல்லா கேளுங்க அய்யா! நீங்க சமசாதியா இருந்தாலும் எங்க சாதியில்லை. அதனால நீங்க எனக்கு பெரியவர் இல்ல. அதோட ஒரு மனித ஜீவன ஆடுமாடு மாதிரி விலைக்கு வாங்குற எவரும் பெரியவரும் இல்ல. இதனால நான் மார்பு துணிய எடுக்க வேண்டிய அவசியமும் இல்ல. “

“தப்பா பேசிட்டேன் தாயி… பொறுத்துக்கோ. நல்லா இரு.”

ஆறுமுகப் பெருமாள் நக்கலாகப் பேசிவிட்டு, தனது கோபத்தை இசக்கி மாடத்தி மீது ஒரு உதையாக காட்டினார். இரும்பாணி அடிவாரம் கொண்ட செருப்புதை… செத்துப் போனவளாய் நின்ற அந்த பெண்ணடிமை, அப்போது உயிர்த்தெழுந்து கத்தியது. அவர் மீண்டும் காலை தூக்கியபோது மாடத்தியே அவர்களுக்கு முன்னால் ஓடினாள். இழுத்து வரப்பட்டவள் அவர்களை இழுத்துப் போவுதுபோல், பின்னால் திரும்பி திரும்பி அவர்களை வரவேற்பதுபோல் நின்று நின்று கால்களை முன்னே முன்னே இயக்கிக் கொண்டிருந்தாள்.

தறவாட்டு முகப்பிலிருந்து ஆண்டைக்கூட்டமும், அடிமைப் பெண்ணும் மறைந்து விட்டார்கள். எல்லாம். ஆடி அடங்கிய வேளை.

பாருக்குட்டி, தன்னைதானே நொந்து கொண்டாள். அந்த மனிதரிடம் அப்படி பேசியிருக்கக்கூடாது என்பதுபோல் நாக்கை கடித்துக் கொண்டாள். வீரியமாகப் பேசி காரியத்தை கெடுத்து விட்டோமே என்று மனதுக்குள் அரற்றினாள். இந்த குற்றவுணர்வு தாக்கத்தில், இருட்டிற்குள் சுயமாய் நடக்காமல் அனிச்சையாய் நடந்து கொண்டிருந்தாள். கொடுங்கோலின் ஆதிக்கமாய் தோன்றிய வீட்டிற்குள்ளே போக முடியாமலும், வெளியே நிற்க முடியாமலும் அந்த கொல்லைப் புறத்தையே சுற்றிச் சுற்றி வந்தாள். அடிமைகள் வியாபாரத்தை அவள் அறிவாள். அவர்களை மாறுகால் மாறுகை வாங்குவதற்கு ஏமான்களுக்கு உரிமை இருப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் அந்த தறவாட்டில் இப்படிப்பட்ட ஒரு அடிமை வியாபாரம் நடப்பது, அதுவே முதல் தடவை. கண்முன்னால் நடக்கும் கொடுரத்தை அவளால் காணச் சகிக்கவில்லை.

பாருக்குட்டி ஆவேசியாகி, சித்திரக் கூடப் பக்கமாய் ஓடி திற்கிறாள். உள்ளே ஊடுருவி அங்குள்ள நாகச்சிலைகளை தூக்கி குளத்தில் போட நினைக்கிறாள். அப்போது

கட்டுக்கடங்காத காது தாங்காத பிளிறல். “ஏய்… ஏய்…” என்ற எமக்கத்தல். பூமியை, மலை இடிப்பதுப் போன்ற சத்தம். நிமிர்ந்து திரும்பிய பாருக்குட்டியை ஒரு இரும்புக்கரம், கழுத்தோடு சேர்த்து தனது கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு, அவளுக்கும் சேர்த்து கத்துகிறது. அந்த தறவாட்டையே குலுக்கும்படியான பூகம்பக் கத்தல். அந்தக் கத்தல் புறப்பட்ட தொண்டை எரிமலையாகிறது. நாக்கு எரிஈட்டியாகிறது. பிடி இறுகிக் கொண்டே போகிறது.

அந்த அதிரடி குரல்கேட்டு தறவாட்டில் உள்ள அத்தனைபேரும் அலறியடித்து ஓடி வருகிறார்கள். “விருந்தாளி சம்பந்தக்கார கணவர்களோடு தனித்தனி அறைகளில் உறவாடிக் கொண்டிருந்த சகோதரிகள், அரைகுறை உடம்பை பொருட்படுத்தாது அங்கே குவி கிறார்கள். காரண வானும், அம்மாயியும் பனைமட்டையில் ஒடுங்கிக் கட்டப்பட்ட பனையோலையில் நெருப்பேற்றிய ‘சூட்டுத்தியோடு வெளிப்படுகிறார்கள். பாருக்குட்டியின் அம்மாவான குஞ்சம்மா மகளை அந்த பிடிக் கோலத்தில் பார்த்தவுடனேயே, கிழே விழுகிறாள். இருக்காளோ செத்தாளோ… அவள் மகள்களும் சகோதரிகளும், பாருக்குட்டிக்கு அழுவதா, அவளுக்கு அழுவதா என்று புரியாமல் மாறிமாறி இருவரையும் பார்த்துப் பார்த்து திரும்பி திரும்பி அழுகிறார்கள். ஆசையைப் போல் துக்கத்திற்கும் வெட்கமில்லை. அந்தப் பெண்கள் வெட்கம் விட்டு, உடலெல்லாம் வீபரித வெளிப்பாடுகளாக மாரடிக்கிறார்கள். விசித்திர உயிரினங்கள்போல் விநோதமாக குரலிடுகிறார்கள்.

இதற்குள், அக்கம் பக்கத்து தறவாட்டுக்காரர்கள் திப்பந்தங்களோடு கூடுகிறார்கள். குருசடி மலைக்குன்றில் குண்ட்டிப் டட்டு மரித்த தேவசகாயம் பிள்ளையின் நினைவால் உள்ள சிலுவை மேட்டிற்கு அருகே மண்ணெண்ணய் விளக்குகளோடு வில் வண்டியில் தனித்து ஏறப்போன ஆறுமுகப் பெருமாள், அதே ஆள் பலத்துடனும், அடிமை இசக்கி மாடத்தியுடனும் அங்கே ஓடிவந்து விட்டார்.

இசக்கிமாடத்தியின் கணவன் புலைமாடனுக்கு ஆவேசம் அடங்க வில்லையானாலும், குறைந்தது, அவனைத் தொடக்கூடாது என்பதற்காகவும், தொடப்பயந்தும், பாருக்குட்டியை மீட்காமலும் என்னச் செய்வது என்று புரியாமலும் கண்களை வெறுமனே திறந்து வைத்துக் கொண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் அவன் பாருக்குட்டியை விடுவித்தான். வாய்மொழியும், உடல் மொழியும் அற்றுப்போய் எலும்பு மரங்களைக் கொண்ட மனிதக் குன்றாய் சுயமிழந்து நின்றான்.

அம்மாயி, தறவாட்டுப் பெண்களின் ஒலக் குரல்களையும் மீறி, பாருக்குட்டியைப் பார்த்து போலி வருத்தத்தோடு அழுகை அழுகையாய் கேவிக்கேவி பேசுகிறாள்.

“இது புலப்பேடி மாதமுன்னு உனக்குத் தெரியாதா? இந்தக் காலத்து ராத்திரியில, ஆண்துணை இல்லாம வீட்டுக்கு வெளியே வரும் நம்ம சாதிப்பெண்ண திண்டப்படாத சாதிக்காரன் அவள்மேல் ஒரு கல்லை வீட்டெறிஞ்சாலும் போதும், இல்லன்னா ‘கண்டேன் அம்மையை என்று கத்தினாலும் போதும். அவனுக்கு அவள் அடிமையாகணும் என்கிற சாஸ்திரம் உனக்கு தெரியாதா? கடைசில நம்ம வீட்டு அடிமைக்கே அடிமையாயிட்டியே. இனிமே இந்த வீட்ல நீ இருக்க முடியாதே… எந்த நேரத்துல நாமெல்லாம் அடிமையா பொறப்போமுன்னு சாபமிட்டியோ அது உனக்கே பலிச்சுட்டதே…. குருவாயூரப்பா…. குமாரபுரம் முருகப்பா… தானுமாலையன் சாமியே… நாங்க என்ன செய்வோம். ஏது செய்வோம்.”

இதற்குள், ஆறுமுகப் பெருமாள், ஒரு நமுட்டுச் சிரிப்போடு வயிற்றோடு சேர்த்து இடுப்பில் ஒட்டிக்கிடந்த மடிச்சிலைக்குள் கைவிட்டு, சில சக்கரங்களை வெளிப்படுத்தி புலைமாடனின் முகத்திற்கு எதிராய் ஆட்டினார். அவனும் பழக்கத் தோசத்தில் கிழாய் விழுந்த சக்கரங்களை இரண்டு உள்ளங்கைகளை குவித்தபடி தாங்கிக் கொண்டான்.

குடும்ப சர்வாதிகாரியான காரணவான் பார்வதிக்கார நந்திஸ்வரனுக்கு, அப்போது தானும் ஆடியது, சதையும் ஆடியது” பாருக்குட்டி, அவர் தோளில் தூக்கி இடுப்பில் ஏந்தி வளர்த்த குழந்தை. காலப்போக்கில் சொந்தக் குழந்தைகள் தோன்றத் தோன்ற, இவளும் குமரியாய் ஆக ஆக, பங்காளி வாரிசாய் மறுதோற்றம் காட்டினாள். அவரை பட்டும் படாமலும் தட்டிக் கேட்கும் எதிராளியாய் ஆனாள். அவர், ஒரு தடவை தனது சாதியின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தபோது, எந்த சாதியிலும் பெண் என்பவள் கிழ்சாதிதான் என்று இவள் போகிற போக்கில் சொல்வதுபோல் சொல்லி அவரை சிறுமைப்படுத்தி இருக்கிறாள். அத்தனைக்கும் வட்டியும் முதலுமாக அவளை ஆக்கிக் கொண்டுதான் இருந்தார். ஆனாலும், அந்த வேளையில், பாருக்குட்டியை மீண்டும் குழந்தையாக்கிப் பார்த்தார். அந்த கற்பிதத்தில் கண்ணிர் மல்க கூட்டத்தினரைப் பொதுப்படையாகப் பார்த்து கெஞ்சினார்.

“இவன்… என்னோட அடிமை. அதனால இவனுக்கு அடிமையான பாருக்குட்டியும் எனக்கு அடிமை. தோப்புக்குள்ள ஒரு குடிசை போட்டு, இவளுக்கு கொடுத்துடறேன். இவ அங்கேயே இருந்துட்டுப் போகட்டும்.”

ஆறுமுகப்பெருமாள், தனது கணக்கு புத்தியை காட்டிப் பேசினார்.

“இதோ நிக்கானே இவன் யாரோ எவனோ… அறியேன். ஆனாலும் பாருக்குட்டி இவனுக்கு அடிமை என்கிறது மட்டும் தெரியும்…. அந்த அடிமைய, அவன் கிட்ட இருந்து, நான் விலைக்கு வாங்கிட்டேன். இப்போ இவள் எனக்கு அடிமை.”

“அதையும் பார்த்துடலாம்… என் பாருக்குட்டிய எங்கயும் விடமாட்டேன்.”

காரணவான், அந்தஸ்து மாயிைலிருந்து விடுபட்டு, ஒரு சாதாரண மனிதனாய் வேட்டியை தார்பாய்த்தபோது, பிற தறவாட்டுக்காரர்கள் அவரை பிடித்துக் கொண்டு, உருட்டி மிரட்டி யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.

“நீங்க சொல்வது நிசமாவே இருக்கட்டும். ஆனாலும் திண்டத்தகாதவன் திண்டுன பெண்ணை, ஒன்று வீட்டை விட்டுத் துரத்தணும். இல்லன்னா கண்டந்துண்டமா வெட்டிப் போடணும். இதுதான் நம்ம சாதி சாஸ்திர சம்பிரதாயம். அப்படிச் செய்யாது போனால், ராஜ தண்டனைக்கு ஆளாக வேண்டியது வரும். சித்திரை திருநாள் மகாராஜா, இங்கே வந்து கோட்டையில் முகமாமிட போகிறாராம். உங்களுக்கு உடந்தைன்னு நாங்களும் ராஜ கோபத்திற்கு உள்ளாக வேண்டியது வரும். எப்படியோ நம்ம அந்தஸ்துள்ள சாதிக்காரர்கிட்டதான் அவள் அடிமைப் பட்டிருக்காள். இப்படி நினைச்சு மனச தேத்திக்குவோம். இல்லாட்டி நம்மள கழுவுலகூட மகாராஜா ஏத்தலாம்.”

காரணவான் வாயடைத்துப் போனார். இதற்குள் தனித்துவிடப்பட்ட இகச்சி மாடத்தி, புலமாடன் மீது பாய்ந்தாள். அவன் தலையை முடியோடு சேர்த்து பிடித்து உலுக்கினாள். அவன் முகத்தில் காறிகாறித் துப்பினாள். மலையாளமும் தமிழும் கலப்பு மொழியாகாமல் முற்றிலும் மாறான கூட்டாகி அழுகிப்போன ஒரு புதுமொழியில் அவள் ஏதேதோ பேசினாள். அதன் சாரம் இப்படிதான் இருக்க வேண்டும்.

“என்னை மாதிரி அம்மையை ஆக்கிட்டியே. நமக்காக இரக்கப்படுற தாயாச்சே. நான் இப்ப எப்படி துடிக்கேனா அப்படித்தானே அம்மா துடிப்பாள். நீ உருப்படிவியா. புலப்படுவியா.”

புலைமாடனுக்கு, தான் செய்த காரியத்தின் தாத்பரியம் அப்போதுதான் புரிந்திருக்க வேண்டும். கையிலிருந்த சக்கரங்களை வீசியடித்தான். ஆறுமுகப்பெருமாளோ சட்டம் பேசினார்.

“நீ சக்கரத்த வீசினாலும் சரி, விழுங்கினாலும் சரி. உன் அடிமையை நான் வாங்குனது வாங்குனதுதான். இந்த சவுத்து மூளி மாடத்திய ஒரு போடு போடுங்கடா.”

இசக்கி மாடத்தி, அடி, உதை வாங்கிக் கொண்டிருந்தபோது, புலைமாடன், ஒரு மதயானையைபோல் ஆறுமுகப் பெருமாளை நோக்கி, தலையை அங்குமிங்குமாய் ஆட்டி நடந்தான். அவர் பயந்துபோய் பின்வாங்கினார். கூட்டம் லேசாய் சிதறியது. அப்போது அச்சத்தால் நடுங்கிய ஒரு ஏவலாளியின் கையில் ஆடிய மூங்கில்தடி, புலைமாடனின் கண்முன்னால் அங்குமிங்குமாய் ஆடியது. காலங்காலமாக அடி உதை பட்ட அவனுக்கு, அதுவே அங்குசமாகியது. உடனே லேசாய் எரியப் போன ஐம்பொறிகளும் அணைந்து போயின. திடீரென்று நெடுஞ்சாண் கிடையாய் தரையில் விழுந்து அங்குமிங்குமாய் தவழ்ந்து ஒவ்வொருவர் காலையும் தொட முயற்சித்தான். அவனால் திட்டு ஏற்படும் என்று ஒவ்வொருவரும் விலகி விலகி போனார்கள். அதற்குள் ஆறுமுகப் பெருமானின் காவலாளிகளில் இரண்டு மூன்றுபேர், அவனை பன்றிைைய இழுப்பதுபோல் தரையோடு தரையாக இழுத்து, கொல்லைப் பக்கமாக கொண்டுபோய், கை, கால்களை கயிற்றால் கட்டி அந்த கயிறை தறவாட்டு மரம் ஒன்றில் கட்டி விட்டு திரும்பினார்கள்.

பாருக்குட்டி, ஆறுமுகப் பெருமாளுக்கே அடிமை என்பது கூட்டத்தின் மவுன சம்மதத்தின் மூலம் நிச்சயமாகிவிட்டது. தறவாட்டு காரணவான்களும் அவர்களது கையாட்களும், காலாட்களும் கண்முன்னால் நடக்கப் போகிற அந்த விபரீதத் தொடரை பார்க்க விரும்பாதவர்கள் போல், தத்தம் வீடுகளுக்கு திரும்பிக்

சித்திகளும், தமக்கைளும் இன்னும் மயக்கம் தெரியாத குஞ்சம்மாவை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். காரணவான் நந்திஸ்வரன் கண்ணிரும் கம்பலையுமாய் வீட்டுக்குள் பாய்ந்தார். அம்மாயி மட்டும் அங்கேயே நின்றாள்.

பாருக்குட்டியின் முகம் வெறும் சதை பந்தாகிறது. காதில் குலுங்கிய உருளை வடிவிலான தக்கா, கரங்களை மறைத்த வளையல்கள், கை நிறைந்த மோதிரங்கள், மார்பில் கவசமான மின்னுமானி, முல்லைமொட்டு, முத்துமாலை, அவல் மாலை ஆகிய தங்க நகைகளையும், காலில் கிடந்த தண்டை கொலுசு வெள்ளி நகைகளையும் ஒவ்வொன்றாக எடுத்தாள். அதை வாங்கப் போன அம்மாயியை திண்டத்தகாதவளாக நினைத்ததுபோல் அவற்றை தரையில் வீசி எறிந்தாள்.

ஆறுமுகப் பெருமாளுக்கு அடங்காச் சினம். அந்த அடிமை தனக்கு சேரவேண்டிய நகைகளை தறவாட்டுக்கு கொடுத்து விட்டாளே என்கிற தாங்க முடியாத கோபம். அந்தக் கோபத்தை செயலில் காட்டினார்.

பாருக்குட்டியின் மார்பு துணியை எடுத்து மாடத்தியின் இடது கையையும், இவளின் வலது கையையும் சேர்த்து கட்டிவிட்டு சவுத்து மூளிகளை இழுங்கடா என்று ஆணையிட்டார்.

அவருடைய அவசரம் அவருக்கு. ஆரல்வாய் மொழியில் இருந்து இருபது மைல் தொலைவிலுள்ள மனித அடிமை வியாபரச் சந்தையான இரணியலுக்கு அவள்களை, அப்போது இழுத்துப் போனால் தான், மறுநாள் காலையில் விலைப் பொருளாய் நிறுத்த கருப்பும், சிவப்புமான இசக்கி மாடத்தியும், பாருக்குட்டியும் அந்த இரவில் ஒரே நிறமாய், இருள் நிறமாய் ஏமான்களின் இழுத்த இழுப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லாடி, தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அந்தப்புர சயனஅறைக்குள் “எந்த குடியிலும் பெண் என்கிறவள் கிழ்குடிதான் சொல்வியே… சொல்வியே” என்று ஒற்றைக் குரலில் ஒப்பாரி வார்த்தைகள் வீட்டை ஊடுருவி விம்மி புடைத்து வெளிப்படுகின்றன. இதையடுத்து, எஞ்சிய பெண்களின் ஒலப் புலம்பல்கள் அந்த ஒப்பாரிக்கு தாரை, தப்பட்டங்கள் ஆகின்றன. கொள்ளை புற மரத்தில் கட்டப்பட்டு கிடக்கும் புலை மாடனின் அவள ஒலி ஊமை குழலாய் ஓங்கி ஒலிக்கிறது.

தறவாட்டு மரத்தில் கட்டப்பட்ட புலைமாடன், வார்த்தைகளை வெளிப்படுத்தாமல், இழவு மேளத்தட்டலுக்கு ஊமைக்குழலாய் இரைகிறான். கரைகிறான்.

அருகேயுள்ள வடக்குமலையின் உச்சியில் ஊற்றெடுத்த காற்று, கிழேயுள்ள கணவாய் மண்ணை அள்ளி அள்ளி வீசியடிக்கிறது.

– சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *