தீர்க்கதரிசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 2,828 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாரிஸ்டர் பரநிருப சிங்கர் பாமரனாக மதிக்கப்பட்டார்.

நேற்றைக்கு இருந்த கௌரவம்? அந்தஸ்து ? இராஜ நடை போட்ட மிடுக்கு ? எல்லாம் ஒருசேர நொறுங்கி…

தாங்க இயலாத நெஞ்சக்குமுறல். பெரிய மனிதத் தனத்திற்கே எமதூதுவனாக விளங்கும் விழுக்காடு…

‘சே! என்ன வாழ்க்கை ?’

நெஞ்சைப் பிளந்து வெளிக்கிளம்பும் வெறுப்பின் எதி ரொலி. இரண்டு பரம்பரை காலமாக, கொழும்பையே தான் பிறந்த திருவிடமாகக் கொண்ட அவருக்கு, அங்கேயே அப கீர்த்தி , அவமதிப்பு என்றால்?

கொழும்பிலே அல்லது இலங்கையிலே பாரிஸ்டர் என்ற பட்டத்துடன் பலர் வாழலாம். ஆனால் அந்தக் கௌரவம் பரநிருபருக்கு இருந்த செல்வாக்கு பாரிஸ்டர் என்ற விருதும் அவரும் இரண்டறக் கலந்த மாண்புமிக்க வாழ்க்கை வேறு யாருக்கு அமைந்தது? தொழிலில் அவரைப் போன்று கொடிகட்டிப் பறக்க விட்டவர் யார்? கொழும்பில் வாழ்ந்த ‘ஏனைய அப்புக்காத்தர்களும், புரக்கதாசிகளும் அவருடைய புகழ் என்ற சூரிய வெளிச்சத்திற்கு முன், மின்மினிப் பூச்சிகள்.

இன்று?

எல்லாம் அஸ்தமித்து-எல்லாமே சுருங்கி- சூனியத்திலும் சூன்யமான ஒரு நிலையில்…பரநிருபர் நிலைகுலைந்து விட்டார். விரக்தியின் விளிம்பிற்கு உந்தப்பட்டு, அவஸ்தைப்பட்டார். ‘துரை’ ‘மாத்தயா’ ‘ஸேர்’ என்றெல்லாம் கௌரவம் கொடுத்த அங்காடிப் பதர்கள்கூட, இன்று ‘நீ, நான்’ என்று பேசும் அளவுக்கு அவருடைய பெருமைகள் இலந்தைப்பழப் பரிமாணமாகிவிட்டது.

நீர்விழ்ச்சியின் இன்னிசை ஒலித்துக் கொண்டிருந்த அவர் நெஞ்சைக் கலங்கிய குளமாக்கியது எது?

இனக்கலவரத்தின் தீ நாக்குகள் இன்னமும் அவர் மனதைச் சுட்டுக் கொண்டேயிருக்கிறது. சிங்களச் சமூகத்திற்கு-அவர் அகராதியில் ‘மோடையச் சிங்களவ’ருக்கு அடங்கி யொடுங்கி வாழ்வதா? அழகாபுரிவேந்தன் குசேலனிடம் பிச்சையெடுக்கச் செல்வதென்றால்?

‘இனிக் கொழும்புப் பட்டணத்திலே எப்படி வாழ்வது?’

பிறந்த ஊரான-அல்ல, முப்பாட்டன்களின் ஊரென்ற காரணத்தினால் அதீத இனப்பற்று ஞானம் உதயமாகுங்கால் தன் பூர்விக மண் என்ற அவரால் கற்பிக்கப்பட்ட-யாழ்ப் பாணக்குடா நாட்டிலுள்ள கரவெட்டிக்குச் சென்று விட்டால்?

கரவெட்டி?

கிளப், டென்னிஸ், குதிரை ரேஸ், பார், எதையுமே ரேடிமேடாக வாங்கும் வசதிகள் ஏதாவது உண்டா? ஏழடுக்கு மாளிகையில் வாழ்ந்தவனால், சுடுகாட்டின் பக்கத்தில் குடிசை கட்டி வாழமுடியுமா?

இந்த நினைவு தன் நெஞ்சில் தளிர்விட்டதற்கு, தன் மீதே எரிச்சல்.

அவருக்கிருந்த செல்வாக்கு?

சாதாரணச்செல்வாக்கா அது? நாவசைத்தால், நாடசையுமாமே, அவ்வளவு செல்வாக்கு! மந்திரிமார்கள் தொடக்கம், அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் மிதப்பவர்களெல்லாம் அவர் காலடியை அன்று நாடி ஓடிவந்தார்களல்லவா? இன்று ‘கில்ட் பல்லிழிக்க’ உண்மைப் பித்தளையின் சொரூபம் தெரியும் போலியா, அவர்?

‘இந்நிலை வருமென்று நாம் அன்று பயந்தோம். இன்று வந்துவிட்டது. ஜனநாயகமாம் –வெகு ஜனவாக்குரிமையாம்! பன்றிக் கூட்டத்திற்கு என்ன வாக்கும் – உரிமையும்? அன்று வெகுஜன வாக்குரிமையை ஏற்றுக் கொண்டபடி யாற்றானே, இன்று இந்நிலை ஏற்பட்டது? பாமர ஜனங்களுக்கு வாக்குரிமை வழங்குவது தப்பு, தப்பு என்று அன்று நான் தொண்டை கிழியக் கத்திச் சொன்னேன். கேட்டார்களா? இன்று அனுபவிக்கிறோம்….’

அசைபோடும் மாடு மாதிரி, காலத்தின் அடிவயிற்றுக்குள் அமிழ்ந்த சம்பவத்தீனி, நினைவு வாய்க்கு வந்து கொண்டிருக்கின்றது….

காலையில், வீட்டு வாசலைத்தாண்டி, தலையில் கூடையுடன் மாட்டீன் சென்றான். கூழைக் கும்பிடுபோடும் அவன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு… “அடே, மாட்டின்!”

“மொணவதே ? ‘அட’ கியாண்டெப்பா?’!

‘அடேயென்று அழைக்கப்படாதா!’ எவ்வளவு திமிர், கூடை தூக்கித் திரியும் இவனுக்கு?

நெஞ்சம் வேதனையால் வேகிறது.

நெஞ்சில் புரையோடிய வேதனையைத் தெளிவாக்க – சத்திர சிகிச்சை செய்துவிட, வக்கீல் ஞானத்திற்குத் திராணியில்லையா? வக்கீல் ஞானம்! அது கூட அவருடைய குழம்பிய நிலையைத் தெளிவாக்க உதவவில்லை..ஆழ வேரூன்றி, நெஞ்சில் ஆணி வேராகி-கிளைபரப்பி நிற்கும். அந்தச் சகதியையெல்லாம் தூளாக்கி..சின்னஞ் சிறு குளத்தில், சமுத்திரத்தின் ஹூம்கார ஒலி கக்கும் மலையனைய அலைகள் மேலெழுந்து…

விடுதலை?

வழி?

இங்கிலாந்துக்குப் போய் விட்டால்?

அந்த நினைவிலே தான் எவ்வளவு ‘குளிர்மை! அவரது வதனத்தில் முதுமையின் வடுக்கள் மறைந்து, இளமையின் வாளிப்புப் புகுந்து கொண்டதா? நினைவின் பூரிப்பில், தன்னைத்தானே ஒரு தடவை பார்த்துக் கொண்டார். ஆங்கிலேயனைப் போன்ற நீள் காற்சட்டை, கழுத்துப்பட்டி, கோட், நிமிர்ந்த எடுப்பு…ஆங்கிலேயனின் ஒரு பிரதிமையாகத்தான் தோற்றமளிப்பதாகக் கற்பித்துக் கொண்டார்…

இதிலென்ன விந்தை? அவரது சிந்தனையில் உருவாகும் அனைத்தும் ஆங்கிலத்தின் மூலதனம் தானே!

***

பாரிஸ்டர் பரநிருபர் இங்கிலாந்துக்குக் கப்பலேறி விட்டார்.

வழியனுப்ப வந்தவர்களின் உருவங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களான பொம்மைகளாகச் சிறுத்து…. அவர் ஒருகாலத்தில் தனது பெயரைக் கொடிகட்டிப் பறக்க விட்ட கொழும்பு நகரம் பின்னே செல்ல…நீலத்திரைகளைக் கொண்ட ஆழ் சமுத்திரம் முன்னே விரிய… கப்பல் செல்கின்றது.

பஞ்சார்ந்த படுக்கையில் மிஸிஸ் பரநிருபசிங்கம் – அவர் மனைவி. அவளுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் முழுக் கவனத்தையும் புதைத்துவிட்ட மூத்தமகன். ஆசைக்கொரு பெண்ணாக வளர்ந்து வரும் மகள் கோழித் தூக்கத்துடன்… இலங்கை இனி அவருக்குத் தேவையற்ற நாடு. குடும்பத்துடன் செல்கின்றார், புதிய ஒரு நாட்டில், காணப் போகும் சூரியோதயத்தைப் பார்க்கும் ஆசையில்…

அவருடைய நினைவில் ஊஞ்சலாடுவது முழுவதும் இலண்டன் மாநகரம் தான். இலண்டன்? – உலகத்தையே ஒரு காலத்தில் ஒரு குடையின் கீழ் கட்டியாண்ட வெள்ளைக்காரர்களின் தனிப்பெரும் தலை நகரம்.. மாபெரும் பட்டணம்.

இருப்பினும், அது அவருக்குக் கனவுலகமல்ல. அவருடைய பெயருக்கு முன்னால் தலை நீட்டிக் கொண்டு, அவரை அந்தத் தனிப் பெயருடன் வாழ வைத்த அந்த ‘பாரிஸ்டர்’ பட்டம் அவர் இலண்டன் மாநகரில் சம்பாதித்த சொத்துத் தானே?

வாழ்க்கையில் அவரை உச்சாணிக்கொப்பில் தூக்கி வைத்த அந்த நாடு, எதிர்கால வாழ்வில் அவரை மீண்டும் தூக்கி வைக்கப் போகிறது.

பாம்பு தன் தோலை உரிப்பது போல, தினம் தினம் இலங்கையில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்களைச் சமுத்திரத்திற்குள் வீசிக் கொண்டே சென்றார்.

***

கடைசியில் கப்பல் இலண்டன் துறைமுகத்தை அடைந்தது.

சுவர்க்கத்தில் நுழைவதைப் போன்ற பிரமை. இல்லை, பூதவுடலுடன், கைலாசம் சேர்ந்து விட்ட பக்தனின் நெஞ்ச நிறைவு.

பிரச்னைகள்-உணர்ச்சிகளின் மோதல்கள்-மொழி வெறிப் பூசல்கள்-நாகரிகமற்ற காட்டுமிராண்டி எண்ணம் படைத்த மக்கள் கூட்டம் – அத்தனையும் கனவுலகாய்…மனிதத் தன்மைகளை மதித்து நடக்கவல்ல புண்ணிய பூமியை அடைந்துவிட்ட மன நிறைவு; மனப் பூரிப்பு..

துறைமுகத்தை விட்டு வெளியே வந்தார்.

அங்கு வாழும், தன் இலங்கை நண்பர்கள் பலருக்குத் தன்னைத் துறைமுகத்தில் சந்திக்கும்படி தந்தி கொடுத்திருந்தார்.

அவர்கள் எங்கே?’

மூளை குழம்பியது. ஆனால் பரநிருபர் சமாளித்துக் கொண்டார், என்ன அவசரம்? அவர்களைப்பற்றி ஆறுதலாக விசாரித்துக் கொள்ளலாம்.

குறுக்கும் நெடுக்குமாக டாக்ஸிகள் பல ஓடியவண்ண மிருந்தன. அவற்றுள் ஒன்றை கைகளை நீட்டி நிறுத்த முயன்றார்.

அது அவருடைய நீட்டிய கரங்களுக்கு மதிப்புக் கொடுத்து நிற்கவில்லை.

‘இந்த டாக்ஸிக்காரருக்கு என்ன வந்துவிட்டது?’

வாய் முணுமுணுக்க, மனைவியும் மக்களும் சூழ்ந்து வர, கையிற் கொள்ளக்கூடிய பளுவுடன் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தார். அவரால் சுமக்க இயலாத சுமைதான். இதே வீதியில், முன்னர் பாரிஸ்டருக்குப் படித்துக்கொண்டிருந்த காலத்தில், வெள்ளைத்தோல் மங்கையருடன் கரம் கோர்த்து உலாவி மகிழ்ந்த அதே வீதியில், கேவலம் கூலியைப் போன்று சுமையையும் தூக்கிக்கொண்டு…

பெரிய ஜங்ஷனுக்கு வந்து விட்டார். அதைத் தாண்டினால், அவர் தற்காலிகமாக ஜாகை அமர்த்தக் கருதியிருந்த பெரிய ஹோட்டலை அடைந்து விடுவார்.

சந்தியில் ஜனக்கூட்டம். அழுகிய பண்டத்தை மொய்க்கும் ஈக்களைப்போல…அங்கிருந்து வரும் கோஷம்…?

‘கறுத்த நாய்களைக் கொல்லுங்கள்-கறுத்தப் பன்றி களைத் தூக்கிலிடுவோம். மிலேச்சப் பன்றிகளைக் கொன்று குவிப்போம்.’

சூடேறிப் பறக்கும் இக்கோஷங்களை அவர் கற்பனையிலே கூட எதிர்பார்த்தவரல்ல. கால்களிலும் கைகளிலும் நடுக்கம்…

‘கறுத்தப் பன்றிகள்!’

தன்னை ஒருமுறை பார்த்தார். அவர் என்னதான் நாகரிகத்தைக் கையேற்றிருந்தபோதிலும், விடுபடாத அந்தக் கறுத்த நிறம் அப்படியே அவரைப் போர்த்து மூடியிருந்தது. சமீபத்தில், இலங்கையின் வெள்ளவத்தையில் நடந்த வெறியாட்டத்தைப் பிரத்தியட்சமாகப் பார்த்தவர் அவர். இந்த வெறியாட்டத்திற்கு அது உறைபோடக் காணாது. வெறியாட்டம் சுடலைப் பேய்களின் முழுவேகத்துடன் நர்த்தனமாடுகிறது. புதிய அனுபவம். வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். எதிலும் நிறைவு காண்பவன். வெறியாட்டத்திலும் நிறைவு காண்கின்றான்.

தயக்கம். ‘ஆபத்து நெருங்கி வருவதை உணரலானார்.

டாக்ஸி டிரைவர்களின் அலட்சியம்; இலங்கை நண்பர்கள் துறைமுகத்திற்கு வராத காரணம் – எல்லாமே துலாம் பரமாக விளங்குகின்றது. ‘தனது கரிய நிறத்தை நினைத்து, மனச்சுமையை இறக்குமட்டும் அழுது தீர்க்க வேண்டும் போல இருந்தது…… தர்க்கக்கலை, அவரை முற்றாகக் கைவிட வில்லை .

‘நான் என்ன நீக்ரோவனா? அவர்களைப்போன்று அடிமையாக ஏலத்தில் விற்கப்பட்டவர்களின் பரம்பரையா? விகாரத்தின் பிண்டங்களான அவர்கள் எங்கே? நான் எங்கே? நான் ‘ஆக்ஸ்போர்ட்’ தொனியில், ஆங்கிலேயர்களையும் மிஞ்சும் வகையில், ஆங்கிலம் பேசவல்ல பாரிஸ்டர். கௌரவமிக்க காமன்வெல்த் பிரஜை. அரசியல் செல்வாக்குள்ளவன். முன்னை நான் ஆங்கிலேயத் தேசாதிபதிகளுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தவன். இங்கே எனக்குச் சொந்தமான தோட்டங்கள் இருக்கின்றன. வெள்ளைக்காரர்களையே என் பணியாட்களாக வைத்து, நரிவேட்டையாடியவன் நான். இந்த நீக்ரோப் பயலுகள் இப்படித்தான். அதுகளுக்கு இது வேணும். இல்லாதுபோனால், அவர்கள் ஒரு காலத்தில் இங்கிலாந்திற்கே சொந்தம் கொண்டாடுவார்கள்…

இருப்பினும் எதிரே வரும் ஆவேசம் மிக்கக் கூட்டத்திற்கு நானும் நீக்ரோவனாகப் பட்டுவிட்டால்?

பாதுகாப்புணர்ச்சி மேலிட்டது.

விரைவாக மனைவி, மக்கள் சகிதம் அந்தப் பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்தார். அங்கு, ஒரு வெள்ளைக்காரப் பணியாள் தடுத்து நிறுத்தினான். விஷயம் விளங்காது விழித்தார். அவரை இழுத்துப் பறிக்காத குறையாக ஹோட்டலின் நுழைவாயிலுக்கு இழுத்து வந்து, ஒரு விளம்பரத்தைக் காட்டினான், அவன்.

கண்களை அகலத் திறந்து, அந்த விளம்பரத்தை வாசித்தார். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இதுதான்:

“நாய்களும் கறுத்தவர்களும் இந்த ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்”

– 10-11-1958 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *