கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 2,960 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாவல்களையும் சிறுகதைகளையும் திடுதிப்பென்று ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் அவை விறுவிறுப்பாக வும், சுவாரஸ்யமாகவும் இருக்குமாம். இப்படி யாரோ ஒரு பெரிய எழுத்துப் புலி சொல்லி இருக்கும் அநுபவ இலக்கியத்தில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு; மதிப்புண்டு.

ஆனால், இது நாவலல்ல; சிறுகதையுமல்ல -வெறும் கடிதம்.

ஆமாம், நண்பா! உனக்கெழுதும் கடிதம் தான் இது…

இக்கடிதத்தை எப்படி ஆரம்பித்து எழுதுவேன்? உன்னை-என் இதயத்துக்கு மிகவும் சமீபமாக இருக்கும் உன்னை, எப்படி அழைப்பேன்? நேரடியாகவே எழுதட்டுமா? ஆம், அதுதான் சரி. என் நெஞ்சகத்து நண்பனாகிய உனக்கு வரட்டுச் சம்பிரதாயம் தான் எதற்கு? நீ, நீயேதான்-என் நண்பன்!

உன்னை எப்படி அழைப்பது என்பதிலும் பார்க்க, கடிதத்தைச் சேர்ப்பிக்கும் முகவரி பிரச்னை தான் என் மனதில் இமாலயப் பிரச்னையாக இடம் பெற்றுள்ளது. இதை எழுதி எங்கே சேர்ப்பிப்பேன்? பாற்கடலில் துயின்று பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் வைகுண்டத்திற்கா அல்லது பஞ்சபாணனை ஒரு பிடிசாம்பலாக்கிய நாட்டியத் திருக்கூத் தனின் கைலாசத்திற்கா?-பார்த்தாயா, என் ஞாபக சக்தியை? நீ கிறிஸ்தவன். அதிலும் கத்தோலிக்கன். ஆசீர்வாதம் என்கிற உனது பெயரில் ‘சிலுவை’ முத்திரை பதிக்கப் பெற்றிருப்பதைக் கூட மறந்து விட்டேனே-என் ஞாபக சத்தியை என்னென்பது? உனது ஆத்மா, கர்த்தரின் பிரதம சீடரான பேதுருவானவரின் கட்டுக் காவலில் இருக்கும் மோட்ச சாம்ராஜ்யமான பரமண்டலத்திற்குத்தான்…

பார்!-சதா உன்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீ-போஸ்ட்மேன் ஆசீர்வாதமாக-நடமாடித்திரிந்த காலத்தில் தெருத் தெருவாக, வீட்டுக்கு வீடு இலக்கங்களைத் தேடிக் கடிதங்களைச் சுமந்து சென்று கொடுக்கும் ஒரு மனித இயந்திரம் என்றுதான் பலர் உன்னைப் பற்றி எண்ணியிருப்பார்கள். உன் வரவைத் தினசரி ஆவலுடன் எதிர்பார்த்து வீட்டு வாசல்களில் எதிர்நோக்கி இருந்தவர்கள் கூட உன்னைப்பற்றி அதிகம் தெரிந்து கொண்டிருக்கமாட்டார்கள். என்ன விசித்திரமான உலகம்? எட்ட எட்ட இருக்கும் இதயங்களையும் ஒட்டுறவு கொள்ள உதவி செய்தவன் நீ. இருந்தும் உன்னுடைய இதயத்து உணர்ச்சிகளை, ஆசைகளை, விருப்பங்களைத் தான் யாருமே புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. மற்றவர்களைப் பற்றிச் சொல்லுவது இருக்கட்டும். என்னையே எடுத்துக்கொள். நான்கூட அன்று உன்னைத் தெரிந்து கொள்ள எவ்வித அக்கறையும் காட்டவில்லையே!

ஆனால் இன்று –

நீ எங்கள் பகுதிக்குத் தபால் விநியோகிக்க வந்த அந்தக் காலம் உன் நினைவிலிருக்கிறதா? என்னைச் சுற்றிச் சுழன்ற பம்பரங்களில் இது ஒன்று என எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இனிமையான; பசுமை நிறைந்த ஞாபகங்களைக் கொண்ட அந்த நாள் உனக்கு ஞாபகமில்லாமல் இருக்கலாம்; உதிர்ந்து விழும். சருகுகளை அலட்சியம் செய்யும் தாய்மர மனோபாவம் உனக்கிருக்கலாம்.

எனக்கு –

எனக்கு நீ முதன் முதலில் கொண்டுவந்த கடிதம் இன்றும் நல்ல ஞாபகத்திலிருக்கிறது. சிறு கதைப் போட்டி யில் முதற் பரிசு பெற்ற செய்தியையும், பரிசுப் பணத்துக் குரிய ‘செக்’ கையுமல்லவா நீ முதன் முதலில் சுமந்து வந்தாய்.

நல்ல கைராசிக்காரனப்பா நீ!

எழுத்தாளன் மீனைப் போன்றவனாம்; பொது ஜனங்கள் தண்ணீரைப்போன்றவர்கள். பொதுமக்கள் என்கிற தண்ணீரை விட்டு எழுத்தாளன் பிரிந்தாலோ, பிரிக்கப்பட்டு விட்டாலோ, அவன் இறந்தவனுக்குச் சமானமாகிறான். இந்தத் தத்துவத்தையொட்டி என்னை உயிர்வாழும் எழுத்தாளர் வரிசையில் இடம் பிடிக்கச் செய்ததற்கு மறைமுகமாக நீயும் ஒரு காரணமாக இருந்திருக்கிறாய். எப்படி என்று திகைக்கிறாயா! என்னைப் போன்ற எழுத்தாளர்கள் புகழ் மாலைகளை, நெருப்பை உண்டு வாழும் தீக்கோழிகளைப் போல உண்டு வாழும் அபூர்வ ஜெந்துக்கள். நீ எனக்கு புகழ் மாலை சூட்டும் ஆயிரமாயிரம் ரசிகர்களின் கடிதங்களைக் கொண்டு வந்திருக்கிறாய். பொதுமக்கள் என்கிற தண்ணீரிலிருந்து என்னைப் பிரிக்காமல் செய்திருக்கிறாய்.

நான் தீடீரென்று முளைத்து, வளர்ந்து பிரபலமாகிவிட்ட எழுத்தாளனல்ல. வானத்திலிருந்து திடீரென்று பூமியில் குதித்துப் பிரபலமடைந்துவிட்ட இலக்கிய கர்த்தாவு மல்ல. அல்லது என்னுடைய ஆத்மசாந்திக்காக, சுயதிருப்திக்காக எழுதிக் கிழிக்கிறேன் என்று கூறித் திரியும் வரட்டுத் தனி மனித வாதத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டு முன்னுக்கு வந்தவனுமல்ல; உழைத்து உழைத்து எழுதினேன். பல காலம் கஷ்டப்பட்டேன். படித்துப்படித்துச் சிந்தித்தேன். எல்லாவற்றையும்விட மனிதர்களிடமிருந்து, மனிதனின் வாழ்க்கையிலிருந்து, அது தரும் போதனைகளி “லிருந்து பாடத்தைப் படித்துக் கொண்டேன். தொடர்ந்து எழுதி முன்னுக்கு வந்தேன். விளம்பரத்தைப் போன்றாவது ஒரு கதை, ஒரே ஒரு கதை, பிரசுரிக்கப்படக் கூடாதா என்று” ஏங்கி இருக்கிறேன். ஒரு காலம் புழுங்கிச் செத்திருக்கிறேன். இருந்தும் திறமையின்மையால் தேங்கி நிற்கவில்லை. தலைக் கனம் என்று இப்பொழுது நீ சொல்லலாம். எனக்கு என் எழுத்தைச் சரியாக எடைபோடும் திராணி இருக்கிறது. எந்தக் காலத்திலும் காக்காய் பிடிக்கும் தனிக் கலை எனக்குத் தெரியாது!

எழுத்தாளன் ஜாதியில் குயவன். பாத்திரங்களைச் சிருஷ் டிக்கிறான். நான் படைத்த பாத்திரங்களோ பல நூறு. என் பாத்திரங்கள் வெறும் மண்பாண்டங்களா? கிடையாது! சதையும், நாரும், எலும்பும், ரத்தமும் கொண்டு உயிருடன் நடமாடியவை, அவை. பாத்திரங்களின் மன உணர்ச்சிகளை ஆசைகளை, விருப்பங்களை, எழுச்சிகளை மக்கள் முன்வைத்து, அவர்களை மக்களுடன் மக்களாக நடமாட விட்டிருக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் நான் எத்தனையோ பேர்களைச் சந் தித்ததுண்டு. அவர்களில் அனேகரிடம் பேசி இருக்கிறேன்; பழகியிருக்கிறேன்; மனந் திறந்து கதைத்திருக்கிறேன், இவர்களில் சிலரை அடிக்கடி தினசரி சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ‘ நிர்ப்பந்தமும் இருக்கிறது. இது தவிர்க்க முடியாத் சங்கதி தான். இப்படியான முக்கிய தினசரி சந்திப்பாளர்களில் ஒருவன் தான் நீ என்று அலட்சியமாக ‘நான் இருந்தது என்னமோ உண்மைதான்.

ஆனால் நீ -நீ –

நீ இன்று சிதையிலே சாம்பலாகி விட்டாய். பார்த் தாயா? மறந்தே விட்டேனே! எழுத்தாளர்களுக்குக் கற் பனைச் சிறகு முளைக்கிறது என்று சொல்லுகிறார்கள்; சுத்த ‘ஹம்பக்!’ அவர்களுடைய மண்டைக்குள் ஞாபக மறதி என்கிற சிலந்திக் கூட்டமல்ல்வா வலை பின்னிக் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.

‘புனிதமான ஞாபகத்திற்காக’ என்று எழுதப்பட்ட கல்லறையின் கீழே, மண்ணிற்கு அடியில் உன் உடல் அணு அணுவாக, கொஞ்சம் கொஞ்சமாக நீ போஸ்ட் மேனா, தபால் கொடுப்பவனாக வருவதற்கு முன்னால், எனக்குக் கடிதங்கள் வரத்தான் செய்தன. நீ இல்லாத இன்றும் கடிதங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. –

இருந்தும் என் மனதில் வெறுமைதான் புரையோடி இருக்கிறது. நீலவானத்தைப் பார்க்கிறேன். புதுப் பொலி வுடன் பூத்துக் குலுங்கும் தோட்டத்து மல்லிகைப் பந்தலையும் ஜன்னலால் பார்க்கிறேன். வாசம் செய்யும் சிட்டுக் குருவிகளையும், அவை தங்கள் குஞ்சுகளுக்கு அடிக்கடி இரை கொடுப்பதையும் பார்க்கிறேன்.

முன்பெல்லாம் இவற்றைப் பார்த்துப் பார்த்தே என் மனம் மகிழ்ச்சி கொள்ளும். உள்ளம் சாந்தமடையும். ஆனால் இன்று? இவற்றைப் பார்ப்பதில் கூட இனம் காண இயலாத, காரணமில்லாத, வார்த்தைகளுக்கடங்காத வெறுமையும் விரக்தியும் தான்!

உயிருக்குயிரான ஒரு ஜீவன் நம் கண் முன்னால் இருக்கும் பொழுதோ, நடமாடும் பொழுதோ அதன் அருமை பெருமையெல்லாம் நமக்குத் தெரிவதில்லை; தெரிந்து கொள்ள முற்படுவதுமில்லை. பாரதியைக்கூட, வாழும் காலத்தில், கஞ்சாக் கவிஞன் என்று தூற்றிய உலகம்தான் இது!

பிரிவு பொல்லாத நோய். மறைந்துவிட்ட பின்புதான் பிரிவுத் துயரம் நம் இதயத்தைப் பிழிந்து வாட்டுகிறது. அதைப் போலத்தான் நீயும் பிரிந்த பின்பு என் நெஞ்சத்தை ….

மலர் எழுத்தாளனாக நான் ‘புரமோஷன்’ பெற்றிருந்த காலத்தில் – அதாவது நான் எழுதுவதெல்லாம் பொன் என்ற பொம்மலாட்ட நினைவுகளைப் பத்திராதிபர்கள் சூத்திரக் கயிற்றில் ஆட்டிக் கொண்டிருந்த காலத்தில் – ஒரு நாள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தாய். ஒரு உந்தல் – ஒரு மிதிப்பு ஒரு தாண்டல், சைக்கிள், உருண்டுகொண்டே வந்தது.

ஒல்லியானவன் நீ. இருபத்தாறு அல்லது இருபத்தெட்டு வயது மதிக்கக்கூடிய வாலிப வயது. காக்கி அரைக்காற் சட்டையும் அதே மாதிரிக் காக்கியில் சட்டையும் அணிந்து – சட்டையின் கழுத்துப் பக்கமுள்ள காலரில் சிவப்பு நிறப்பட்டி தைக்கப்பட்டிருக்கும் – இதற்குச் ஜோடி யாகத் தலையில் தொப்பி தரித்திருப்பாய்.

அன்றும் இதே கோலத்தில் தான் வந்தாய். ஒரு சிறு மாறுதல். தலையில் தரித்திருக்கும் தொப்பி, அன்று சைக்கிளுக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருந்தது. சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ‘மட்காட்’டுடைய உனது சைக்கிளைக் கண்டதும் வீட்டு வாசல்களில் பல முகங்கள் ஆவலுடன் எட்டி, எட்டிப் பார்ப்பதையும் கவனித்தேன்.

தொழில் செய்யும் வேளையில், வேலை செய்யும்போது ஏற்படும் சிரமத்தை எவ்வளவு அலட்சியமாகக் கருதினாய்? வாய்க்குள் பீடா வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே, கனவு காண்பவனைப்போல, சோம்பலாக, ஏதோ பழைய நினைவுகள் தேங்கிய சிந்தனையில் ஆழ்ந்தவண்ணம் கடிதங்களைக் கொடுத்துக்கொண்டு வந்தாய். சாணி உருண்டையில் பிடிக்கப்படும் பிள்ளையார் உருவைப்போல, இனம் தெளிவில்லாத கவலையொன்று உன்னை வாட்டிக்கொண்டிருப்பது உன் முகத்தில் தெரிந்தது.

“என்ன ஆசீர்வாதம், ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம்?” வாசலில் நின்று விசாரித்தேன்.

எனக்குரிய கடிதங்களைத் தந்து கொண்டே, சிரித்துக் கொண்டு, “இங்கே பாருங்க என்னை, இந்தச் சுமையைத் தாங்கத் தரப்படும் சம்பளம் பத்தாது. முந்தி – நான் அலுப்பாந்தியில் மூட்டை சுமக்கப் போவதாக இருந்தேன். இந்த உத்தியோகம் சுகமாக இருக்கும் என்று வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபொழுது…இந்தச் சுமையிலும் பார்க்க பெரிய மூட்டையையா அலுப்பாந்தித் தொழிலாளர்கள் தூக்கிக் கிழிக்கிறார்கள்?”

வாழ்க்கையில் தான் எத்தனை ஹாஸ்யம்!

நான் அன்று உன்னுடைய ஹாஸ்யத் துணுக்கை வெகுவாக ரசித்தேன். அதுகூட என்னுடைய உள்ளத்தில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ஆனால், நீதான் இன்று…..’

அணில் அரிக்க உதிர்ந்து விழும் முருங்கைப் பூக்களைப் போன்று சிரித்துக் கொட்டுவாயே. நீ ஒரு மேதை! ஆமாம், சிரிப்பதில் நீ ஒரு மேதைதான். கடைசியாக அன்றும் சிரித்துக் கொண்டுதான் வந்தாய்.

கடைசி நாள். குறுகிய கடைசி நாள் அன்று. வெளியே சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது.

கை கால் நீட்டித் திமிர் விட்டவண்ணம் சாய்வு நாற்காலியில் சோம்பலோடு சாய்ந்து கிடந்த என்னை, மணிச் சத்தம் நிமிர்ந்து எழும்பச் செய்தது.

“ஐயா…! ஐயா !…”

வெண்கலப் பாத்திரத்தில் மஞ்சாடிக் கொட்டையை எறியும்பொழுது ஒருவிதச் சத்தம் கேட்குமே, அது உன் குரல் தானே? ஆமாம், அது உன் குரல் தான். . ‘ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் பிந்தியது?’ எனக் குள் நானே கேட்டுக் கொண்டேன். அன்றைய கடிதங்கள் இன்னமும் வரவில்லை என்ற ஞாபகம் அப்பொழுது தான் வந்தது.

நாற்காலியைப் பின்னே நகர்த்திவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.

“ஒ ஆசீர்வாதம், நீயா? என்னப்பா இன்றைக்கு இவ்வளவு சுணக்கம்?” என்று கேட்டுக்கொண்டே கடிதங்களை வாங்கினேன். என் கண்கள் வாங்கியவற்றைக் கூர்ந்து பார்த்தன. ஒரு போஸ்ட் கார்ட், இரண்டு கவர், ஒரு மாத சஞ்சிகை, இத்தியாதி மாமூல் சரக்குத்தான்.

நான் கவனித்திருக்கிறேன். சிட்டுக்குருவியைப்போல, விடிந்ததும் விடியாததுமாக பறந்து திரிவாய், நீ! ஆனால் அன்று உன் செயல்களில் உற்சாகமோ, வழக்கமான துடிதுடிப்போ காணப்படவில்லை. குழையக் குழையப் பேசிக் கொட்டினாய். ஏதோ அர்த்தமற்றவைகளை எல்லாம் பேசிப் பேசியே பொழுது போக்கினாய். இந்த விசித்திரமான உன் போக்கு, என் மனதில் வேறோர் எண்ணத்தைக் கொண்டு வந்தது. ஒரு சில தபால் சேவகர்களைப்போல நீயும் ஏதாவது கைமாற்றுக் கடன் காசு கேட்பதற்காக அடி போடுகிறாயோ, ‘தாஜா’ பண்ணுகிறாயோ என்று நினைத்தேன்.

உண்மையைச் சொல்லுகிறேன். உன்மீது எனக்குள்ள அன்பு, நம்பிக்கை எல்லாமே இந்த எண்ணத்தால் சிறிது மட்டுப்படத்தான் செய்தது. எல்லோரைப் போன்றவன் தான் நீயும் என்ற நினைப்பு என் அடி மனதில் குறுகுறுத்தது.

“என்ன ஆசீர்வாதம் ஏதாவது பணம் கிணம். தேவையா? சொல்லு” என்றேன்.

நாக்கு என்பது நாக சர்ப்பம். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வாய் என்ற பொந்திலிருந்து தலை நீட்டி மனிதனைத் தீண்டி விடுகிறது. இந்தக் கடியின் தனி விசேஷம் என்ன வென்றால், புறப் புண்ணில்லை, காயமில்லை, விஷமும் சட்டென்று வேலை செய்வதுமில்லை. ஆனால், மனிதனின் அடி மனத்தை, மிக நுண்ணிய உணர்ச்சிகளைக் கொண்ட இதயத்தின் இதயத்தையே….

நீ சிரித்தாய், முல்லை கட்டவிழ்த்து மலரும் இரகசியத்தை எனக்கு விளக்கும் உன் புன்முறுவல் எங்கே? அன்று அந்தச் சிரிப்பு…பட்ட மரத்திலிருந்து சாரமற்று உதிரும் சருகாகவல்லவா, எனக்குத் தென்பட்டது.

என் நெஞ்சத்து நினைப்பை ஒரு நொடியில் களைந்து எறிந்துவிட்டது உன் பேச்சும், அதையொட்டி எழுந்த சிரிப்பும். அலட்சியமான, சோர்வு கலந்த, சலிப்பு நிரம்பிய பேச்சாகவல்லவா இருந்தன உன்னுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள்.

“பணம் ஒண்ணும் தேவையில்லை. காசைப்பற்றி எந்த விதக் கவலையுமில்லை. சும்மா பறந்து பறந்து வேலை செய்து என்னத்தைக் கண்டது? விடிந்தெழும்பிப் பொழுதுபட்டால், சும்மா வேலை, வேலை! சே!, என்ன வாழ்க்கை ?” வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவனின் பேச்சல்லவா இது.

உன்னை உற்றுக் கவனித்தேன். என் எழுத்தாள மூளைக்கு ஒரு விஷயம் தட்டுப்பட்டது. ‘ஏதாவது காதல் விவகாரமாக இருக்குமோ? காதல் தோல்விகள்-காதல் முறிவுகள் ஏற்பட்டிருக்குமோ?’

வாலிபப் பருவம் கன்னிமை அழியாத நிலம். காதல் என்ற பயிர் சீக்கிரமே வளர்ந்து விடுகிறது. நீ மட்டும் விதிவிலக்கா என்கிற வெகுளி எண்ணம்.

மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். காதல் நோயின் ஆரம்ப அறிகுறி கோழைத்தனம் என்பது எனக்குத் தெரியும். எல்லாம் காலப் போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணியபோது, ஒரு புன்சிரிப்பு வெளி வரலாமோ வரக் கூடாதோ என்று ஆலோசிப்பதுபோல, என் உதட்டோரம் தோன்றி மறைந்தது.

உண்மை என் முன்னால் உன் உருவத்தில் நின்றதை நான் அப்பொழுது கற்பனை செய்து பார்க்கக் கூடவில்லை.

“இன்றைக்கு எல்லா வீட்டுக்கும் காயிதம் கொடுத்து விட்டுக் கடைசியாகத்தான் இங்கே வந்திருக்கிறேன். உங்களோடு கொஞ்ச நேரம் ஏதாவது பலதும் பத்தும் கதைச்சால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்றுதான் வந்தேன். அதுதான்…” நீ வார்த்தைகளை வாய்க்குள்ளேயே முடித்துக் கொண்டாய்.

“உனக்கென்னப்பா கவலை? நீ இளந்தாரி. வாழும் வளரும் வயசு. ஏன் சலிப்பாய் இருக்கிறாய்?”

இருவரும் நெகிழ்ந்த மனதுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

ஏதோ ஒன்றை ஞாபகத்துக்குக் கொண்டு வருவதற் காக நீ தயங்கி நின்றாய். எதையோ மனம் விட்டுச் சொல்லி விட முயற்சித்தாய். வார்த்தைகள் வாயைவிட்டு வெளியே வர மறுத்துவிட்டன. பேச்சு ஒழுங்காக வரவில்லை. திக்கித் திணறினாய். எண்ணிப் பேசியவை சிந்திச் சிதறிக் குழறு படியாக வெளிவந்தன.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு உபசாரக் கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தனர். இடைநடுவில், ஒலி பெருக்கியில் நானும் பேசுவேன் என்று. அறிவித்து விட்டனர். ‘மைக்’கிற்கு முன்னால் எழுந்து நின்ற எனக்கு முகம் சிவந்துவிட்டது. வியர்வையைச் சால்வையால் துடைத்துவிட்டுக் கொண்டேன். கால்கள் ‘ததிகிணதோம்’ போட்டன. கைகள் தந்தி அடித்தன. ஏதோ பேருக்காகப் பேசித் தொலைத்தேன். பேசி முடித்ததும் ‘அப்பாடா’ என்று இருந்தது. நான் அன்று பட்டுவிட்ட பாடு?

இதை வைத்துப் பார்க்கும்பொழுது நீ அன்று பேசுவதற்குப் பட்ட சிரமம், வார்த்னதகளைச் சொல்வதற்கு நீ திணறிய திணறல், வெட்கப்படக்கூடியதல்ல, வேடிக்கையானதுமல்ல.

பார்த்தாயா, என்னை? எங்கேயோ போகிறேன். ஞாபகத்தைக் கோர்வைப் படுத்தி என்னால் சிந்திக்கவே முடிய வில்லை.

இதுதான் என் பலவீனம்.

“எனக்கு – எனக்கு-” இதைத்தான் நீ ‘திரும்பத் திரும்பச் சொன்னாய்.

“உனக்கு?”

“ஒரு கடிதம் எழுத வேண்டும்?”

“கடிதம் சுமக்கும் உனக்குக் கடிதமா?”

“தேவ இரக்கத்தை முன்னிட்டு என்மேல் பட்சம் மறவாத’ என்று எழுதுவதற்கு எனக்கு ஒருவரும் இல்லை. அனாதைபோல், ஒரு நண்பனும் இல்லாமல், ஒரு ஆத்மாகூட ஆறுதல் சொல்லிக் காயிதம் எழுத இல்லாமல் இருக்கும் எனக்கு …”

“யாராவது காதலி…?”

“இந்தப் போஸ்ட் பியூன் சம்பளத்தைப் பார்த்தும் காதலிக்கக் கூடிய யுவதியை நான் பார்க்கவில்லை”.

“நெருங்கிய இன சனம் – அல்லது நண்பர்கள்?”

“எல்லாமே நீங்கள் தான்?”

நான் ஒரு மனித உணர்ச்சி பெற்றவனின் நண்பன்!ஆயிரம் எழுத்தாளர்கள் ஒன்றாகக் கூடி, எனக்கொரு பிரத்தியேக விழா எடுத்திருந்தால்கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டேன்.

எதிர்பாராத ஒன்றைக் கேட்டுவிட்ட அதிர்ச்சியுடன், ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தபடி, ‘ஹா’ என்று வாய் விட்டுச் சொன்னேன். என்னால் பல உணர்ச்சிப் பாத்திரங்களைப் படைத்து அவர்களின் உணர்ச்சிக் கோளத்தில் அவர்களையே மோதவிட்டு ஆட்டிப் படைத்து வேடிக்கை காட்டிய இரண்டாவது பிரம்மாவான எழுத்தாளன் என்று கூறப்படும் என்னால் கூட, உன் விருப்பத்தைப் புரிந்து கொள்ள, கிரகித்துக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது.

“நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல்லாயிரம் வாசகர்கள் வாசித்து ‘சபாஷ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கதையை எழுதுவதிலும் பார்க்க, உனக்கு ஒரு கடிதம் எழுதி ‘என் நண்பன் எனக்குக் கடிதம் எழுதிவிட்டான்’ என்று நீ துள்ளிக் குதித்துக் கூத்தாடும் காட்சியைப் பார்ப்பதில் நான் பெருமைப் படுவேன்!”

என் வாக்குறுதி உன் சோர்வைப் போக்கியது. புது முகமலர்ச்சியுடன், புதுத் தெம்புடன் அன்று நீ போனாய்.

ஆறுதலாக, என் மன உணர்ச்சிகளை, என் விருப்பங்களை, என் நெஞ்சின் அடித்தளத்தில் தேங்கிக் கிடக்கும் சகலவற் றையும் ஒன்று திரட்டி, உனக்கு, என் ஆருயிர் நண்பனாகிய உனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும், எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன் – கதை நீண்டு விட்டது என்று ‘உஷ்’ கொட்டும் பத்திராதிபரல்ல நீ என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், அதற்கிடையில் நீ –

அந்த ‘ஐந்து முச்சந்தி’, ஐந்து குறுக்குத் தெருக்கள் சந்திக்கும் பொல்லாத சந்தி என்பது பழக்கப்பட்ட உனக்குத் தெரியாதா, என்ன? ராணுவ லாரிகள், பஸ்ஸுகள், கார்கள், மாட்டு வண்டிகள், சைக்கிள்கள்…

என்ன இனிய நினைவுகளுடன் சென்றாயோ ?

தீர்க்கதரிசனம் இல்லாத அரசியல் வாதிகளைப் போன்று சென்ற பாதையைச் சரியாகக் கவனித்துப் பார்க்க நீ தவறி விட்டாயா? அல்லது தங்களைக் கற்பனை உலக இலக்கியக் கலைஞர்கள் என்று காட்டிக் கொள்பவர்களைப் போல, கற்பனை உலகிற்குச் சென்று நட்சத்திரத் தாமரைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் பூவுலக நினைப்பே இல்லாமல், எதிரே வந்த ராணுவ லாரியைப் பார்க்காமலே….அபாய கரமான அந்த விபத்தில் அகப்பட்டு –

உன் வாய், பயத்தினால் அடைத்துப் போயிருக்கும். இதயமோ நடுங்கித் துடிதுடித்திருக்கும். இதயத்துடிப்பே சில வினாடிகள் நின்றிருக்கும். அதிர்ச்சியினால், உதவிக்கு ஆளில்லாத அந்தப் பயங்கர நிலையில் எத்தனையோ கொள்ளை ஆசையுடன், கனத்த நெஞ்சுடன்…

உன் கண்களில் நிழலாடிய இனிய கனவுகள் என்று நிறைவேறும், என்றைக்கு நிசமாகும் என்ற நெஞ்சத் தவிப்புடன் தான் நீ…உன் உயிர்…

உன் ஆசைகள், விருப்பங்கள், ஆவல்களால் உருவாக்கப் பட்ட பாரமான சிலுவையை என் தோளின் மேல் சுமத்தி விட்டாய். கல்வாரி மலையில் கிறிஸ்து நாதருக்கு உதவிக்காகச் சிலுவை சுமந்த ‘சீமோன்’ போன்ற உத்தமன் உன் விஷயத்தில் எனக்குக் கிடைக்கவில்லையே?

நான் பாரமான உனது சிலுவையை என் தோளின் மேல் சுமக்கிறேன். அதன் பாரம் என் தோளை மாத்திரமல்ல, என் இதயத்தைக்கூட…

இதோ கடிதத்தை எழுதிமுடித்து விட்டேன்.

இதை உன் கல்லரையுள்ள தோட்டத்துக்கா அனுப்புவது? அல்லது மோட்ச சாம்ராஜ்யத்தின் பாதுகாவலரான அர்ச்சியசிஸ்ட் பேதுருவானவர். உன்னைப்போல அங்கு ஒரு போஸ்ட் மேனாகக் கடமையாற்றினால் –

இதை உனக்கு விநியோகிப்பாரா?

– 25-4-1959 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *