கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 6,358 
 

(நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்)

அத்தியாயம் இரண்டு | அத்தியாயம் மூன்று | அத்தியாயம் நான்கு

வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. நாகேந்திரமடம் என்று சொல்லப்படுகிற இங்கே மட்டும் தான் ‘பைப்புகள் வசதிகள் இருக்கின்றன‌.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற‌…வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து ,தோளிலே குடத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு ஒரு கையால் ஓடி வாரவன்.அது தூரம்.தோள் மூட்டு வலிக்கும். .இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையிலும் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் சமயத்தில் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள்.

நகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான்.

“எங்க வீட்டுத் தண்ணீர் ஓரே பாசி மணம்..!”என்றான்.

“பரவாய்யில்லை”என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. ‘சரி அப்ப வாருங்கள்”என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள்.

விடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்ற‌ன.”என்ன வேண்டும்”என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும் காய்கறிகள்… சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து “சமைத்துச் சாப்பிடுங்கள் “என கொடுத்தும் விட்டார்கள்.

கிராமங்களில் இயங்கிய பிரஜைகள் குழுவினரின் சேவைகளை பாராட்டவே வேண்டும். இவை, யாழ்ப்பாணப் பகுதிகளில் இந்தியனாமி வந்த பிறகு எழுந்த புதிய‌ அமைப்புகள் .எல்லாச் சாதிகளிலிருந்தும் இரண்டுபிரதிநிதிகள் ஒரளவு படித்தவர்கள், இளைப்பாரியர்கள்,இளைஞர்க‌ள்…. அவர்களைச் சுற்றிக் கொண்டு திரிந்த முற்போக்குத் தனமும் கொண்டவர்களையும் கொண்ட கலவையாக கட்டப்பட்ட அமைப்பு.இந்தியனாமி வந்த போது..மக்கள் நிறைய பாதிப்புகளில் இருந்தார்கள். அச்சமயம் இவர்களே ராணவமுகாம்களிற்குச் சென்று தலைவர் தரத்திலிருந்தவர்களிடம் கதைத்து நிவாரண உதவிகளை மக்களிற்குப் பெற்றுக் கொடுத்தவர்கள்.

‘ சண்டை’ ஏற்பட்ட பிறகு இவர்களை கழுகுக்குப் பிடிக்கவில்லை.”இயங்க வேண்டாம்”என தடை செய்ய முடியவில்லை.ஆனால், “இந்தியனாமியின் முகாமிற்கு மேற்கொண்டு போக வேண்டாம்” என இவர்களிற்கு கடுமையாக கட்டளை இட்டிருந்தது. இவை கழுகின் பேச்சை செவிமடுக்கவே இல்லை.அது கழுகுக்கு சீற்றத்தைக் ஏற்படுத்தியதுஅவர்களை நோக்கியும் துவக்கை திருப்பி வைத்திருக்கிறார்கள்.

கழுகு, இவர்களையும் இன்னொரு இயக்கமாகவே பார்த்தார்கள் .முண்டினார்கள்..’துப்பாக்கியின் முனையிலிருந்தே அதிகாரங்கள் பிறக்கின்றன’என்பது எவ்வளவு உண்மை. தற்போது, சிறிலங்காவின் துப்பாக்கிகள் தற்காலிகமாக செயலற்றுப் போக, கழுகும் நீட்ட, ,இந்தியனாமியும்,கழுகை ஒடுக்கி,தனது நடமாட்டத்தை அதிகரிக்க துப்பாக்கியை நீட்டிக் கொண்டே வெளியில் இருப்பவரிற்குத் தெரியாமலே … ஒபரேசனை லிபரேசன் 2ஐ எடுக்கிறது. அதாவது தமிழ் மக்களிற்கு எதிராக‌ நீட்டுக்கிறது.

பிரஜைகள் குழு, 2,3 நாட்களிற்கான உணவுத் தேவையை நிறைவு செய்திருந்தாலும்,குளிக்க,முகம் கழுவ,காலைக்கடன் கழிக்க …எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.நகுலனிற்கு முன்னால்,பக்கத்தில் இருந்த வீடுகளிற்கும் இவ்வளவு பேர்கள் செல்வதற்கு என கேட்டு அதையும் ஒழுங்கு செய்தது.கூடிய சீக்கிரம் இவர்களை ஏற்கக் கூடியவர்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டுகோள்ளை இரங்கலாக‌ விட்டிருந்தது.

எம்.ஜி.ஆரண்ணையும் பகலில் ஒரிரண்டு தடவை வந்திருந்து கதைப்பார்.அவரும் மனைவி மூலமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். எல்லாமே ஆமை நகர்வுகள் தாம். அம்மியும் நகரும் என்பார்கள்.இங்கே ஒன்றுமே நகர்வதாய் இல்லையே.அவருக்கும் சலிப்பேற்படவே செய்தது.. “அங்கே, வீடு என்ன கதியோ?”என அரற்றுற மனைவியின் கவனத்தை திருப்ப,குஞ்சனிடம் “பாட்டுக் கச்சேரியை தொடங்கடா”என்று இரகசியமாக கூறினார்.

குஞ்சனும், தனி வீடு பார்க்கவில்லை.அதே வீட்டிலே தான் இவர்களும் தங்கியிருந்தார்கள். அவனும் இருளத் தொடங்க வீட்டிலே எம்.ஜி.ஆரண்ணை குஞ்சனுக்கு வெறும் வயிற்றில் பானையை கவ்வ வைத்து கடம் வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்தார் “மாமி,பாலும் பழமும் பாட்டு பாடுங்க”எனக் கேட்டான்.அவர் “ஆலையமணியின் ஒசையை நான் கேட்டேன்…”என்று பாட … குஞ்சனின் மாமி,அவருடைய மஞ்சு அக்கா வெகுவாய் ஆச்சரியப்பட்டாள்.

“எங்கடி பாடக் கற்றுக் கொண்டாய்,நல்லாப் பாடு றாய்யடி,வேற பாட்டுகளும் தெரியுமா?”என்று கேட்க.”அண்ணரும் பாட்டுக்காரர்” என குஞ்சன் தெரிவிக்க ,பாடல்களை அவரும் பாடினார்.குஞ்சன் சுமாராக பாடக் கூடியவனாக இருந்ததால் தான் இந்த விசயங்களில் எல்லாம் ஆர்வமாக இருந்தான். அவனும் ஒரு பாட் டை சுமாராய் பாடினான்.விமல், பாடிய போது “என்ர குஞ்சு “என்று மஞ்சு அக்கா அவனை இறுக கட்டிக் கொண்டாள் .புதுப் பாட்டுகளாக‌ பாடா விட்டாலும் பாடிய பாடல்களிற்கு பின்னணி இசையில் அவன் வெளுத்து கட்டினான்.ஒவ்வொரு நாளும் பாட்டுக்கச்சேரி நடைபெற ஆரம்பித்தன.இசை கவலைகளையும் கூட மறக்கடிக்க வல்லது. இரண்டொரு நாள் வாப்பாவும்,நகுலனும் அவர்களோடு இருந்து ரசித்துக் கேட்டார்கள்.

இப்ப, இவர்கள் வந்த பிறகு தேர்முட்டியில் சந்திக்கிறது நின்று விட்டது.குஞ்சன் நகுலன்ர வருவான்.அன்று மூன்று பேரும் நகுலன் வீட்டில் முன்னறையில் இருந்து அலம்பிக் கொண்டிருந்தார்கள். எம் ஜி.ஆரண்ணையின் தங்கச்சியும் அவருடைய சிறிய மகளும் நகுலன் வீட்ட தண்ணீர் எடுக்க குடத்துடன் வந்தார்கள்.வெளிய வந்த குஞ்சன்”ஏய்க் குட்டி, நீ இந்த பெரிய குடத்தை தூக்குவாயா?”என ஆச்சரியத்துடன் கேட்டான்.”தூக்குவேன்”என அது பதில் அளித்தது.”என்ன அக்கா,இவளை தூக்க விடுறீங்கள்?”என்றவன்,”தாடி குடத்தை நான் கொண்டு வாரன்”என வாங்கிக் கொண்டான்.’

அவனுக்கு,வேற வழி இல்லாமல் இந்த தண்ணிரை எடுத்து குடிக்கிறார்கள்’என்றது சுருக்கென குத்தியது. குஞ்சனிடம் சைக்கிள் கிடையாது.குடவைக்குப் போய் நல்ல தண்ணீர் அள்ளி கொடுக்க முடியவில்லையே என வருந்தினான்.இவனுடைய வருத்தத்தை புரிந்து கொண்ட வாப்பா,”டேய் இவர்களுடைய பின் வீட்டிலே தண்ணீர் பரவாய்யில்லையடா,அங்கே இருந்து அள்ளிக் கொடு.இங்கே தான் எல்லா வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கிறதே”என்று வழியைக் காட்ட,அங்கே இருந்த வேற இரண்டு குடங்களில் அந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு போய்க் கொடுத்தார்கள். அவர்கள் மூன்று பேருக்கும் அந்த தண்ணீரில் தேத்தண்ணீர் போட்டுக் கொடுத்தார்கள். சேலையை மறைப்பாகக் கட்டி ஒருபுறம் அண்ணர் குடும்பம்,மற்றது இவருடையது என இருப்பது பரிதாபமாக இருந்தது.

“முறைக்கு உங்களுக்கு நாங்கள் உதவ வேண்டும்.நாங்கள் உங்களிட்ட இருந்து வாங்கி குடிக்கிறோம்”என்று வாப்பா வருத்தமாகச் சிரித்தான். அவர் ஆதரவாக “நாம் தாம் பெரிய அமைப்பாக இல்லையே,ஒரு எல்லை வரைக்குமே ஒவ்வொருவராலும் உதவ முடியும் த‌ம்பி.உதவோனும் என்ற மனம் உங்களிடம் இருக்கிறதே,அது பெரிய விசயம் “என்றார்.அவர் ‘பெரிய அமைப்பு’ என்று குறிப்பிட்டது மாகாணவரசாக இருக்க வேண்டும்.

அதையே, சரியாக வழங்கப்படாமல் நிறைய வெட்டுக் கொத்துக்களுடன் கிடக்கிறது.

‘இயக்கங்கள்’ மக்களுடன் நன்கு கலந்து தான் விட்டிருக்கின்றன.‌ ‌.அதை, கழுகு போய் புத்திகெட்டு அடித்து குழப்பி விட்டதே,ஆயாசமாகவும் இருந்தது.

அல்லது, அவர் குறிப்பிட்டது தமிழிழ அரசோ? அது பெரிய விசயம்!

எதற்கும், முதலில் கனவு காண்பது அவசியம் தான். பிறகு தான் அதனை அடைய முடியும். சமஸ்டி கிடையாது,கூட்டாட்சி யாக இருந்தால் தாம் எமக்கும் பலம்! எம் பொருளாதாரமும் வளரும்.பிரச்சனை என்றால்,ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி விட்டு பிரிந்து விடக் கூடிய தன்மையும் வேண்டும்.இதுவரையில் இந்த அரசு, கலவரங்களில் தமிழர்களிற்கு நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் இதுவரையில் நிவாரணம் என்று எதுவுமே வழங்கவில்லை.எனவே உறவு கறாராக இருக்க வேண்டியது அவசியம் தான்.

பிறகு, அந்த குடும்பத்தினரை சித்திராவக்காவின் சொந்தக்காரர்கள் சிலர் பங்கிட்டு ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.ஆண்கள் தரப்பினர்,அங்கிருந்து மேசன் வேலைகளிற்கு போறவர்களுடன் மெல்ல மெல்ல போய் வாரது ஏற்பட்டிருந்தது.அந்த வி.சி. கட்டிடம் வெறுமையாக …நகுலன் செட்டுக்கு நிம்மதி ஏற்பட்டது.அந்த கட்டிடக் கட்டில் இருந்து சிலவேளை கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் போய் 2ம் நாள்,

நகுலனின் தங்கச்சி வாசுகி,தின்னவேலியில் ஒரு வீட்டில் அறை ஒன்றை வாடகைக்கெடுத்து , தங்கி இருந்து கம்பஸுக்கு போய் வந்து கொண்டிருந்தவ‌ள்,அந்த வீட்டுக்காரரான சுமதியம்மாவையும்,அவர் மகள் ரேவ‌தியையும் கூட்டிக் கொண்டு கிராமத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.யாழ்க்கோட்டையிலிருந்து அடிக்கிற செல்கள், அவர்கள் அயலில் வந்து விழ,”இனி இருக்கேலாது”என வெளிக்கிட்டு வருகிறார்கள்.இவர்களிற்கு அயலிலே கழுகின் சிறு முகாம் ஒன்றும் இருக்கிறது.அதற்கு அடிக்கிறார்களோ?அல்லது மயிலிட்டி போல அடிக்கிறார்களோ? தெரியவில்லை,பயத்தில் வருகிறார்கள்.

“மக்கள் பேசுறது உண்மையா?’இந்தியனாமி எல்லா முகாங்களிலிருந்தும் வெளிக்கிட்டு யாழ்க்கோட்டைக்குப் போய்ச் சேரப் போகிறார்களாம்’ என்று வதந்தி” வாசுகி அளக்கிறாள்.தொடர்ந்து “நாளை என்ரதோழி ஜமுனாவும், அவள் அம்மாவும் இங்கே வரப் போகினம்”என்று தெரிவித்தாள்.அவர்கள் நல்லூர் கோவிலுக்கு கிட்ட இருந்தார்கள்.மோட்டரில் போட்டு அடிக்கிற செல் ,கோயில்,குளம்,குட்டை,வயல்..எனப் பார்த்தா விழப் போகிறது.எங்கையும் விழலாம்.இந்த செல் விழுகையுடன் கம்பஸ் மூடப்பட்டு விட்டது.

வாப்பா அர்த்தபுஸ்டியுடன் நகுலனைப் பார்த்தான்.”டேய்,நிச்சியமாய் இது ‘ஒபரேசன் லிபரேசன் 2’ தான்ராஎந்த வித்தியாசமும் இல்லை,!”என்றான்.

பூமாலை பாம்பாக மாறி விட்டது. !

நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை.வழக்கத்திற்கு மாறாக புதிய அகதிகள் வருகிறார்கள். ஜமுனாவின் அப்பா,தான் வீட்டிலே இருப்பதாக நின்று விட்டிருந்தார். மினிபஸ்ஸில் வந்து இறங்கினார்கள். இது கிராமம்.”ரீச்சர்ர வீடு”என்றால் கூட்டிக் கொண்டே வந்து விடும்.இவர்கள் வீடும் பிரதான வீதிக்கு அதிக தூரமுமில்லை. வழியில் கேட்க, சிறுமி ஒருத்தி கூட்டி வந்து வந்திருந்தாள்.நகுலனுக்கு தெரிஞ்ச முகம் தான். அவளின் பெயர் தெரிந்திருக்கவில்லை

அம்மா,ஆசிரியர் பயிற்சி வகுப்பு எடுக்கிற போதே மனவியல் வகுப்பும் எடுத்தவர், எனவே அவருடன் அவர்கள் இலகுவாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள். ‘கம்பஸ் பெட்டைகள்’ என்கிறார்கள். ரேவதியும்,ஜமுனாவும் பாவாடையும்,சட்டையும் போடுற ஸ்கூல் பிள்ளைகள் போலவே இருந்தார்கள். இருவரிற்கும் 2ம் நாளே ‘போர்’ அடிக்கத் தொடங்கி விட்டது.

வீட்டிலே,வயரிங் எல்லாம் செய்யப் பட்டேயிருக்கிறது.ஆனால் மின்சாரம் கிடையாது.இந்தியனாமி வந்த பிறகு ஜெனரேற்றர்களை டீசலில் இயக்கி கிராபுறங்களிற்கும் மின்சாரம் கிடைக்கச் செய்தார்கள் தான்.

ஆனால்,கழுகுவோட சண்டை தொடங்கிய பிறகு மின்சாரம் துப்பரவாக‌ கிடைக்கவில்லை.

இந்தியவரசும்,சிறிலங்காவரசு,தமிழருக்கு தடை செய்யப்பட்டவையை கிடைக்க வழி செய்ய‌வில்லை.கிராமப்புறங்களிலிருந்த வானொலிகளில் கிடக்கிற பற்றரிகள் மெல்ல மெல்ல உயிரை விட … அவையும் ஓரேயடியாய் செய்திகளை கூறாமலு செய்திகளை கூறாமலும், பாடாதும் ஒய்ந்து விட்டன.

அப்ப, தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லார் வீட்டிற்கும் வந்திருக்கவில்லை. ஒரு சிலர் வீடுகளைத் தவிர,பெரும்பான வர்கள் வாடகைக்கு எடுத்தே வீடியோக் கொப்பிகளிலிருந்து சினிமாப்படங்கள் வரை பார்தார்கள்.

‘ஒமர்முக்தர்,லோரன்ஸ் ஒவ் அரேபியா,பச்சைப் புலிகள்,தமிழன் சிந்திய ரத்தம்…எல்லாமே வாடகை ரி.வியிலேயே பார்க்கப்பட்டவையே..பூப்புனித விழா,மற்றும் ஏதும் விசேசம் என்றால், வாடகைக்கு பிடித்து …இலவசமாக இரவிரவாக ‌ 2,3 சினிமாப் படங்க ளை ஒரேயடியாய் க் காட்டுவார்கள்; அவற்றைப் பார்த்தார்கள்.

இயக்க எழுச்சிற்கு முதல் சிறிலங்கா ராணுவம் ஆட்சி செய்த வேளையில் வட மாகாணப்பகுதியில், மாணவர்களை எல்லாம் பூசாவிற்கு அள்ளிக் கொண்டு செல்றது இருந்தது.அப்பொழுது நகுலனின் அம்மாவின் தம்பி குலத்தின் இரு மகன்மாரையும் பூசா முகாமிற்கு கொண்டு போய் விட்டார்கள்.அவர்களை திணறி யே மீட்ட மாமா , பிறகு குடும்பமாகவே கனடா போய் விட்டிருந்தார்.போற போது தம்மிடமிருந்த கறுப்பு வெள்ளை ரி.வி.யை நகுலன் வீட்டாரிடம் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். மின்சாரம் இல்லாதபடியால் அந்த ரி.வி ஒரு மூலையி லே கிடக்கிறது.

‘செய்திகளை’ கேட்க முடியவில்லை. கேட்டால் மாத்திரம் லங்காபுவத்தில் வார செய்தி என்ன உண்மையானவையா இருக்கப் போகிறது?.

‘எப்படித் தான் ஒரு அரசாங்கம் பொதுமக்களை கொன்று விட்டு வாய் கூசாமல் “பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விட்டதாக பொய் கூறுகி றதோ தெரியவில்லை.’ இவர்களிற்கு ரூபவாகினியின் பொய்ச்செய்திகளை கேட்கவே வெறுப்பாக இருக்கின்றன‌.

அந்த நேரம்,’உண்மைச் செய்திகளை தருகிற’என்ற லத்தின் சொல்லைக் கொண்ட‌ ‘தமிழ் வெறித்தாஸ் வானொலியே’ … உண்மையான செய்திகளையே தந்து‌. கொண்டிருந்தன‌ . சிலசமயம் பி.பி.சி தமிழோசையை யே அது பீட் பண்ணியது.

.கத்தோலிக்க ஆயர்மார்களிற்கு சிங்களவர்கள்,தமிழர் மத்தியில் நிறைய‌ மரியாதைகள் இருந்தன.அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஆயர்கள் சேகரித்த செய்திகளில் உண்மைத் தன்மை… அதிகமாக இருந்தன.

இந்த சேவையுடன், இன்னொரு விசயத்தாலும் இவர்கள் மறக்க முடியாதவர்கள். யாழ்ப்பாணப்பகுதியில் திறமான கால்பந்தாட்டக்குழுக்களை வளர்த்து விட்ட பெருமையும் இந்த ஆயர்மார்களிற்கும் இவர்களுடைய சேர்ச்சுகளிற்கும் இருக்கின்றன. பல இடங்களில் சேர்ச் வளவுகளில் கால்பந்து விளையாட நிலத்தை ஒதுக்கிஇருக்கிறார்கள்.நாவாந்துறையில்,குருநகரில்…இவர்களின் நெறியாளுகையினாலே ,விளையாட்டு வீரர்களை அழைப்பித்து பயிற்சி அளிக்கப்பட்ட‌ விளையாட்டுக் குழுக்கள், யாழ்ப்பாணத்தையே ஒரு ‌ கலக்கு’ கலக்கின்றன.

இவர்களைப் பார்த்து மற்றவர்களிடமும் சில கோயில் வளவுகளை குத்தகைக்கோ,கோயில்க் குழுக்களின் அனுமதியுடனோ மைதானங்களாகி …கால்பந்தாட்டக் குழுக்களும் எழுந்திருக்கின்றன.

இந்த ஆயர்களிடமிருந்து தொலைபேசிகள் மூலம் செய்திகளைப் பெற் ற பிலிப்பைன்ஸிலிருந்து வெறித்தாஸ் வானொலி செய்திகளை உடனுக்குடன் ஒலிப்பரப்பிக் கொண்டிருந்தது.

‘ மின்சாரம்’ இல்லாத போது இந்த வானொலியும் செயலிழக்க அந்தகாரத்தில் அகப்பட்டது போல எல்லாருக்கும் இருந்தது.கேட்கிற செய்திகளில் துப்பரவாவே உண்மை,,பொய் தெரியவில்லை.

தமிழர்கள், ஒன்றும் ,வ‌தந்திகளிலிருந்து செய்திகளை பிரித்தறியிற அன்ன பட்சிகள் கிடையாதே.

.”கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்…” என்ற இந்தக் குறளை வள்ளுவர் ஏன் எழுதினார் என்பதை நன்கு புரிய முடிகிறது. அந்த நேரம் பத்திரிகையும் வேற‌ இருந்ததாக தெரியவில்லை. எந்த சூழலிலும் வெளிவந்து கொண்டிருந்த “ஈழநாடு” பத்திரிகையை நம்புத்திரர்களே அடித்து வெளிவர விடாமல் சாதனை புரிந்திருந்தார்கள் .
கழுகிற்கு… துப்பரவாக விவேகமே இருக்கவில்லைஅதன் சண்டித்தனம் தான் வளர்ந்து போவதாக இருந்தது.

பார்த்தீர்களா!, பக்கத்து ஊர்களில் நடக்கிற செய்திக ளைக் கூட‌ பிலிப்பைன்ஸ் போய் வந்து தான் அறிய முடிகின்றன‌. மின்சாரம் இல்லை என்றால் அதுவும் இல்லை. இப்படி செய்திகளை குழப்பிக் கொண்டு ஆட்சியாளர் எந்த பெரிய குற்றச் செயலையும் செய்யலாமே. பக்கத்தில் இருப்பவரிற்கே தெரியாமல் படுகொலைகளை கொடூரமாக நடத்தினார்கள். ‘லங்காபுவத்’ ராணுவத்தினர் ஒழுக்கத்திற்கு பேர் போனவர்கள் என்று பொய்களைக் கூறிக் கொண்டிருந்தது. நம்மவர்களிற்கே, பல அவலங்கள் நடைப்பெற்ற தா ?இல்லையா?என்ற மயக்கம் இருக்கின்றன‌.

இந்தியனாமி தனக்கென‌ “அன்பின்கரங்கள்’”என்ற வானொலியை ஒலிப்பரப்ப,இலங்கை ஆமி தனது வானொலியில் கழுகை கொச்சைப்படுத்தி செய்திகளை,வரலாறுகளை ஒலிபரப்பாக்கிக் கொண்டிருந்தது.பற்றரிகள் கிடப்பவரூடாக கசியும் அந்தச் செய்திகளிற்கு கூட செட்டைகள் முளைத்திருந்தன‌.

நண்பர்களான சிங்களவர்கள் சிலர் கொழும்பில் இருக்கிறவர்களிடம் “இப்படி நடந்தது உண்மையா?”என நம்ப முடியாமல் கேட்பதைப் போல ,”மெய்யே”என நாமும் கேட்கிறோம்.

இவர்களிற்கே இப்படி என்றால் புலம் பெயர்ந்த ,மற்றவர்களிற்கு…?,

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *