கொட்டுத்தனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 3,251 
 

புத்தூர்ச்சந்தியிலிருந்து கிழக்கு முகமாக சாவகச்சேரி போகும் வீதி, முதல் ஒரு கி.மீட்டர் தொலைவும் இருமருங்கிலும் செறிந்த குடிமனைகளால் நிரம்பியது. அக்குடிமனைகளின் அடர்த்தி பாரிய ஆலவிருட்சத்தோடானதொரு அண்ணமார் கோவிலுடன் முடிகிறது. கோவிலைத் தாண்டியதும் அடுத்த ஒரு கி.மீட்டர் தொலைவுக்கும் இரண்டுபக்கமும் வயல்வெளிகள். மழைக்காலத்தில் வடக்குப் பக்கவயல்களில் தேங்கும் வெள்ளம் வீதியைமேவி தெற்குப்பக்க வயல்களுக்குள்ளும் புகுந்துவிடாதிருக்க, வீதிநீளத்துக்கு வடக்குப்பக்கத்தில் ஒரு மீட்டர் உயரத்தில் கல்லாலான மதிலொன்று வீதியைத்தொடர்கிறது. அதனால் அவ்வீதியை அவ்விடத்தில் ‘சுவர்க்கட்டுவழி’ என்பர். அச்சுவர்க்கட்டுவழி முடியுமிடத்தில் வீதிக்கு வடக்கில் ஒரு கிணறும், எதிராகத்தெற்கில் ஒரு கள்ளுக்கடையும் இருந்தன. கள்ளை இறக்கிய இடத்திலேயே தனியார் நிலங்களில் கொட்டில் அமைத்து விற்கும் முறைமைமாறி, அரசு தெங்கு பனம்பொருள் உற்பத்திச் சங்கங்களை உருவாக்கி அவை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனைசெய்யும் முறைமையும் வந்தபோது கள்ளுக்கடைகள் செல்லமாக ‘கோப்பறேசன்’ என அழைக்கப்படலாயின. கிடுகுகள், மூரிமட்டைகள், கங்குமட்டைகளை ஏற்றிவந்து விற்றுவிட்டு கிழக்கூர்களுக்குத் திரும்பும் மாட்டுவண்டிகள் அவ்விடத்தில் இளைப்பாறிச் செல்லும். கோப்பறேசனுக்கு அப்பாலும் தொடர்கின்ற வயல்களின் முடிவிடத்தில் பிரதானவீதியிலிருந்து வடக்குமுகமாகப் பிரிந்து போகும் தனியார் கையொழுங்கையொன்று வடக்கில் வயல்களின் பின்தொடர்ச்சியாயமைந்த பனங்கூடலுக்கு இட்டுச்செல்லும். செறிவான அப்பனங்கூடலே கொட்டுத்தனையென அழைக்கப்பட்டது. அப்பனங்கூடலுக்குள் பர்ணசாலையைப்போல சுண்ணாம்பாலும் கல்லாலுமான பெரிய பழையவீடு ஒன்றிருந்தது.

இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் அமெரிக்க மிஷனொன்று புத்தூரில் பரி.லுக்காஸ் தேவாலயத்தையும், மருத்துவமனையொன்றையும், கிறித்தவ பாடசாலையொன்றையும் நிறுவியிருந்தது. எனினும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்களை அங்கே மதமாற்றம் செய்ய முடியவில்லை.

பின்நாட்களில் ஊரைவிட்டு விலகியதைப்போலிருந்த அவ்வீட்டில் புத்தூரின் பத்து கிருத்தவக் குடும்பங்களில் பெரிய குடும்பம் ஒன்று வாழ்துவந்தது. அவர்கள் அங்கே முதலில் கிறித்தவத்தைத் தழுவியவர்களின் இரண்டாவது தலைமுறையினர். அக்காலத்தில் மதம்மாறியவர்களுக்கு அரச உத்தியோகங்களும், புறம்போக்காகவிருந்த காணிகளைப்பங்கீடுசெய்து குடியிருக்க காணிநிலங்களும், வதிவதற்கான மனைகள்கூட மிஷன்களால் வழங்கப்பட்டனவாம். அம்மிஷன்களுக்குப் போட்டியாக நிலப்பிரபுக்களாக இருந்த மேட்டுக்குடி வேளாளர்கள் தம்மிடம் புறம்போக்காக இருந்த தரிசுநிலங்களில் தமது வாரக்குடிகளைக் குடிசைகள்போட்டு வாழ அனுமதித்ததினால் மிஷன்களால் கிறித்தவம் பரவும் வேகத்தைத் தணித்துக்கொண்டதாகவும் வரலாறு.

மிஷன்சார்ந்த வெள்ளைக்காரர்கள் எவராவது கிழக்கு நோக்கிவந்தால் அது கொட்டுத்தனைப் பனைக்கூடலுக்காகத்தானிருக்கும். அவ்வீட்டில் வாழ்ந்த குடும்பத்தின் தலைவருக்கு இராசதுரையென்று பெயர். அவர்களுக்கு ஒரேயொரு பெண்குழந்தையும், அவளைத்தொடர்ந்து ஒன்றரையிலிருந்து இரண்டாண்டு இடைவெளிகளில் அடுத்தடுத்துப் பிறந்த நான்கு பையன்களும் இருந்தார்கள். குடும்பத்தின் மூத்தவளான பெண்ணுக்கு சோதிமலர் என்று பெயர், அவள் எனது அக்காவுடன் பத்தாவதுவரையில் படித்தாள். சொர்க்கத்தின்பாதி தங்கள் வீட்டுக்குள் இருப்பதாக வர்ணிப்பாளாம். கொட்டாரங்கள் (ஷெட்டுகள்) அமைக்காமல் திகில்ப்படம் எடுக்கவிரும்பும் ஒரு இயக்குனருக்கு கொட்டுத்தனை உகந்தவொரு அமைவிடமாக (லொகேஷன்) இருக்கும்.

அவர்களின் முதலாவது பையன் சோதிராஜா, எங்கள் இரண்டாவது அக்காவுடன் எட்டாவது படித்தான். இரண்டாவது பையன் ஜெகசோதி என்னுடன் ஐந்தாவது படித்தான். அவன் எப்போதும் வகுப்பில் கடைசிவாங்குப் பையனாக இருக்கவே பிரியப்பட்டான். படிப்பைவிடவும் பள்ளிக்கூடத்தில் மோட்டரைப்போட்டு வாழைகளுக்கு நீர்ப்பாய்ச்சுவதிலும், பூக்கன்றுகளுக்கு அடி கிளறிவிடுவதிலும், தண்ணீர் விசிறுவதிலும் அவனது கவனங்கள் மிகுதியாக இருக்கும். அவர்களின் குடும்பத்திலுள்ளவர்களில் எல்லோருக்கும் பெயர்களில் இராஜ அல்லது சோதி என்கிற ஒட்டு இருக்கும். இராஜமலர், சோதிராசா, அருட்சோதி, குணசோதி. இவர்கள் எவருக்கும் வீட்டில் வந்து புழங்குமளவுக்கு உள்ளூரிலேயோ, அயலூர்களிலேயோ நண்பர்கள் எவருங்கிடையாது.

கொட்டுத்தனையின் அவ்வீடும் சினிமாக்களில்வரும் பண்ணைவீடுகள்போல உள்ளே நாற்சாராக / செவ்வகஅமைப்பில் இருந்திருக்கலாம். முன்பக்க நீளத்துக்கு பெரிய விறாந்தையிருந்தது. அதற்குச் சமாந்தரமாகப் பந்தலிட்டதுபோல் இன்னொரு நீண்ட தலைவாசல் இருந்தது. கிராமங்களில் அவ்வமைப்பை ‘மால்’ என்பார்கள். வளவு முழுக்க தென்னை மரங்களும் மா, பலா, மாதுளை, அன்னமுன்னா, கொய்யாவன்ன பழமரங்களுமாகச் சோலையாக இருக்கும். வெய்யிலேவிழாத அவ்வளவிலமைந்த வீட்டின் உட்பக்கம் எப்படியிருக்கும் படுக்கையறைகள் எங்கே, சமையற்கட்டு எங்கே, களஞ்சியம் எங்கே இருக்கும் என்பது அவர்களைத்தவிர ஊரவர்கள் எவருக்குந் தெரியாது. ஒரு ஆண்டில் புத்தூர் கிறித்தவமிஷன் பரிபாலன சபையினர்களில் எவராவது ஓரிருவர் அங்கே ஏதும் அலுவலாகப் போனால்ச்சரி, நட்பென்றோ, உறவென்றோ, ஊரவர்களோ வேறெவரும் அவர்கள் வீட்டுக்குப் போவதில்லை, போனவர்களை அவர்கள் உள்ளே அழைத்து உபசரிப்பதுவுமில்லை. தபாற்காரரைப்போல வாசலிலேயே வைத்து அனுப்பிவிடுவார்கள். போதாக்குறைக்கு அவர்களிடம் வெள்ளையிலும் கபிலத்திலும் இடுப்பு ஒடுங்கி உடல் நெடுத்த இராஜபாளையம் வகையிலான இரண்டு வேட்டைநாய்களும் இருந்தன.

சாதிய மேலாதிக்க வெள்ளாள சமூகத்தினரான ஊரவர்களுடன் இராசதுரையர் குடும்பம் ஒட்டுறவில்லாமல் புளியம்பழம்போல் தனித்து இருப்பதற்கு அவர்களின் தாயார் எமிலி அக்காலத்திலேயே திருகோணமலையில் மேலாண்மை வேளாளரல்லாத பிறிதொரு சாதியைச்சேர்ந்த ஒருவரைக் கடிமணம் செய்துகொண்டதனால் அவர்களைச் சாதிநிரையில் எங்கே வைப்பதென்பதில் புத்தூரின் ஆதிக்கசாதியினருக்குக் குழப்பமாகவும், பிரச்சனையாகவும் இருந்திருக்கலாம்.

பிரதான வீதியிலிருந்து கொட்டுத்தனைக்குக் கிளைக்கும் சிறு ஒழுங்கை வளர்ந்த பூவரசம் கதியால்களால் இரண்டுபக்கமும் அடைக்கப்பட்டிருக்கும். அதனைக்கடந்து பிரதானவீதியில் கிழக்கே ஒரு கிமீட்டருக்கும் அப்பாலான குடியிருப்பில் எங்கள் வீடும், சுற்றுவட்டத்தில் மேலும் பத்து வீடுகளும் இருந்தன. அச் சிறுகுடியிருப்புக்கு ‘அந்திரானை’ என்று பெயர். எங்கள்வீட்டுக்கும் கொட்டுத்தனைக்குமிடையில் அமைந்த சிறிய கடலேரியை ஊரணியில் கண்மாய் ஒன்று வடக்கு-தெற்காகப் பிரிக்கிறது. வடக்குக்கடலேரிக்கு ‘தனது’ என்றும் தெற்குக்கடலேரிக்கு ‘நாவாங்களி’ என்றும் பெயர். ‘தனது’ கடலுக்கும் அந்திரானைத் திடலுக்குமிடையில் சிறிய தில்லைக்காடு ஒன்றிருந்தது. (தில்லை – கண்டல்/சதுப்புநிலத்ததாவரம்) எம்முன்னோர் அந்திரானையில் நிலம் மலிவாகக்கிடைத்ததென்று வாங்கிபோட்டு வீட்டைக்கட்டினார்களே தவிர, அங்கிருந்து பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதற்குப் சிரமப்படுமே என்கிற முன்நோக்குச்சிந்தனை, கவலையெல்லாம் அவர்களுக்கு இருந்ததேயில்லை. சுன்னாகத்திலிருந்து சாவகச்சேரிக்குப்போகும் அவ்வீதியால் பேருந்துகள் ஒரு நாளைக்கு நாலைந்துதான் வரும், ஒன்று வரவில்லையாயின் அடுத்து வருவதற்குத்தான் காத்திருக்கவேண்டும். அது வராமலும் போகலாம். அதையிட்டு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும் கவலை ஏதுமில்லை. எங்கள் சிறுகுடியிருப்புக்கு இடுகாட்டைத்தவிர சங்க/பலசரக்குக்கடைகள், தபாலகம், மருத்துவமனை, பள்ளிக்கூடமென மற்றதெல்லாம் தொலைவிலேயே இருந்தன.

இளமைக்காலத்தில் இராணுவத்தில் பணியாற்றிய இராசதுரையர் சூரியகாந்தித்தலையோடு நல்ல கட்டிறுக்கமான உடம்புடன் இருப்பார். சான்டோவான அவர் ஐம்பது வயதுகளிலும் தினமும் கரலாக்கட்டையைச் சுற்றி உடற்பயிற்சிகள் செய்து உடலைப் புளியம்வைரம்போல் வைத்திருந்தார். குடாநாட்டில் எங்கேபோவதானாலும் மிதியுந்தைத்தான் மிதிப்பார், அதில் அவர் ஆரோகணித்துவிட்டால் ஏதோ பந்தயத்துக்கு ஓட்டுவதைப்போலிருக்கும் அவரது வேகம். ஒருமுறை எங்கேயோ போய்விட்டு வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தவரைத் தூரத்திலிருந்து அவிழ்த்துவிட்டிருந்த கண்டுவிட்ட அவர்களது நாய் குதூகலத்தில் குறுக்காகப்பாய்ந்து அவரையே விழுத்தாட்டிவிடவும் அதில் அவரது தோளெலும்பு பிசகிப் படுக்கையிலிருந்தார். அன்று வீட்டைவிட்டு ஓடிய அந்நாய் குற்றவுணர்வால் பிறகு வீடு திரும்பவேயில்லை.

எங்களுடைய வீடுகளுக்கும் அப்பால் கிழக்கில் இராசதுரையர் குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டங்களும் துரவுகளுமிருந்தன. அதில் அப்பாவும் பிள்ளைகளுமாகச்சேர்ந்து நல்ல பிரயாசையுடன் வெங்காயம், கத்தரி, மிளகாய், பயற்றை தக்காளியெனப் பயிரிடுவார்கள்.. இராசதுரையரும் பிள்ளைகளுமாக பள்ளிப்பிள்ளைகளைப்போல காக்கித்துணியிலான கட்டைக்களிசான்களை அணிந்துகொண்டு தோட்டத்துக்கும்போவதும் வருவதும் நமக்கு வேடிக்கையாக இருக்கும். இவர்களைத் தூரத்தில் கண்டால் சங்கேதமாய் ‘இராஜதுரைஸ் மிஷன் ஒன் மூவ்’ என்போம். புத்தூரில் எவரிடமும் இல்லாதபடி அவர்களிடம் இரண்டு குதிரைகளும் இருந்தன. இராசதுரையரோ, சோதிகளிலொன்றோ எப்போதாவது அதிலேறிக்கொண்டு தோட்டத்தில் விளையும் காய்கறிகளைச் சந்தைகளுக்கு எடுத்துப்போவார்கள்.

இராசதுரையருக்கும் மூன்று ஆண்சகோதரங்கள், ஆக மூத்தவர் அருட்சோதி. 30 களில் லண்டனுக்குப்போய் அங்கேயேவொரு வெள்ளைக்காரமாதை மணந்துகொண்டிருந்தவருக்குப் பிள்ளைகள் இல்லை. இரண்டாவது சகோதரர் அருமைத்துரை, அவருக்கு ஏனோ பெண்களின்வாசமும் சகவாசமும் பிடிக்காமல்போனதில் அவர் திருமணம்செய்து கொள்ளவேயில்லை. திருகோணமலை கொழும்பு கண்டி யாழ்ப்பாணமென்று வாழ்க்கை முழுவதும் சுற்றுப்பவனிகள் செய்தபடி இருந்த அவர்தான் எங்கிருந்தோ அந்தக் குதிரைகளை அங்கே கொண்டு வந்துசேர்த்தார். பிற்காலத்தில் அவரும் இலேசாக மனவளம் குன்றியிருந்தார்.

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த நேரம் ஒருகாலையில் மிதியுந்தில் வந்துகொண்டிருந்தேன், அவர் கொட்டுத்தனை ஒழுங்கை பிரியுமிடத்தில் வேம்போ பூவரசங்குச்சியொன்றினால் பல்விளக்கிக்கொண்டு நின்றவர் எனக்கு ‘ஸ்தோத்திரம்’ என்று சொல்லிச் ‘சலூட்’டும் ஒன்று வைத்தார். பெரியவருக்கான மரியாதையின் நிமித்தம் நானும் மிதியுந்தை நிறுத்தினேன். அக்காலத்தில் அரச/தனியார் ஊழியர்களும், மாணவர்களுந்தான் நீளக்காற்சட்டை அணிவார்கள். அதனாலோ என் வளர்ச்சியினாலோ இருக்கலாம் அவர் மிதியுந்தின் கைப்பிடியைப் பிடித்தபடி ஆங்கிலத்தில்

”சகோதரர் எங்கே வேலை பார்க்கிறீர்” என்றார் ஒரு உத்தியோகத்தருக்குரிய மரியாதையுடன்.

“இல்லை….. இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் ஐயா” என்றேன்.

“படியும்… நன்கு படியும்….. நீர் படித்துமுடித்தவுடன் உமது படிப்புக்குகந்தபடி நல்லதொரு ஊழியம் கிடைக்க ஆசீர்வதிக்கச்சொல்லி நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்றவர் பல்தீட்டிய குச்சியை தூரவீசிவிட்டு வானத்தைநோக்கி இரண்டுகைகளையும் விரித்து உயர்த்திப்பிடித்துக்கொண்டு ஸ்தோத்தரிக்கலானார்.

“பரலோகத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே………….

நின் நாமம் எல்லா உலோகங்களிலும் அர்ச்சிக்கப்படுவதாக,

உம்முடை ராஜ்யம் வருக, உம் வல்லமையும் மகிமையும் பெருகுக

உம்முடைய சித்தம் அப்பாவியான இச்சிறுவன் படிப்பை முடித்ததும் அவனுக்குத் தகுந்தவொரு ஊழியம் கிடைக்கவும், அவன் குடும்பம் செழித்து வாழவும் நின் கருணையின் கதிர்களை அவன்மேல் பாய்ச்சி ஆசீர்வதியும் எம் பிதாவே………” என்றார்.

நான் “ஆமென்” என்று முடிக்கவும் மீண்டும் எனக்கு மீண்டுமொரு ‘சலூட்’ வைத்தார், நான் மிதியுந்தைக் கிளப்பினேன். காலவோட்டத்தில் அவரையும் பின்னர் ஊர்ப்பக்கத்தில் காணவில்லை, எங்காவது ஓர் ஊரிலிருந்து நித்தியசுவனத்தில் கலந்திருப்பார் என்பது ஊகம்.

மூன்றாவது இளைய சகோதர் இரத்தினதுரையும் இராணுவக்காரர்தான், அவர் மனைவியும் (போர்த்துக்கீஸ்) பறங்கியர், பணி ஓய்வுபெற்றபின் திருமலை சீனன்குடாவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தார். என்னதான் வெள்ளைக்காரன்போல் வழ்ந்தாலும் அவர் குடும்பம் சம்பளமோ ஓய்வூதியமோ வந்தால் முதல்வாரத்திலேயே முழுவதையும் பிறண்டி, சாராயம், பியர், மாட்டிறைச்சி, துணிமணி, விருந்துகள் என்று விட்டுவிட்டு அடுத்தவாரம் பக்கத்துவீட்டுக்காரரின் கதவைத்தட்டி “ Dear Comrade…. if you don’t mind…….. Can we have a few loafs of Bread or One Rupee” என்று யாசிக்குமாம்.

இன்னுமொரு வாழும் அதிசயமாக இந்த சோதி, துரைகள் அனைவரினதும் தாயார் எமிலியா 100 வயதுதாண்டியும் கொஞ்சம்கூடக் கண்பார்வை செவிப்புலன் குன்றாமல், கூன்விழாமல் பஞ்சுத் தலையுடன் வெள்ளைச்சேலை அல்லது கவுண் உடுத்தி அவர்களுடன் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தார். கோதுமைப்பயிர் நிறத்தில் பார்வைக்கு பறங்கியரைப்போலவே இருக்கும் அம்மனுஷி வீட்டுக்கு வெளியே ஒருபோதும் வராவிட்டாலும் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திலுள்ள அத்தனை பிரஜைகளையும் தெரிந்துவைத்திருந்தார்.

கொட்டுத்தனை வளவில் ஏராளம் தென்னை மரங்கள் இருந்ததால் அவர்கள் பறிக்கும் தேங்காய்களைக் கடைவிலைக்கும் சற்றே குறைவாக அயலவர்களுக்கு விற்பார்கள், ஆதலால் எங்களுக்கும் வாரம் ஒரு தடவையாவது இராசதுரையர் வீட்டுக்குப்போக வேண்டிய தேவையேற்படும். அவர்கள் வீட்டுக்குப்போவதாயின் பள்ளிக்கூடத்திலேயே பையன்களிடம் முதலில் சொல்லிவைக்கவேண்டும், அல்லது ஒழுங்கையில் போய்நின்று மிதியுந்தின் மணியை நாலைந்துதரம் ஒலித்தால் புரிந்துகொண்டு நாய்களைக் கட்டிவைத்துவிட்டு வெளியேவந்து விசாரிப்பார்கள். அப்போதெல்லாம் ஒரு தேங்காய் 20 சதந்தான், ஒரு ரூபாய்க்கு கடையில் 5 வாங்கலாமென்றால் இவர்களிடம் 6 கிடைக்கும், அவ்வளவுதான். நாம் செல்லும் வேளைகளில் உரித்த தேங்காய்கள் தயாராக இல்லாதிருந்தால் மின்னல்வேகத்தில் தேங்காய்களைப் பொறுக்கிவந்து பாரையில் உரித்துத்தருவார்கள். தேங்காய் வியாபாரத்தை எப்போதும் மிஸிஸ். இராசதுரையே பார்த்துக்கொண்டார்.

எனக்கு கொட்டுத்தனைக்குப் போவதெனில் அந்த மனுஷியையிட்டுத்தான் பயம். ட்றெஸ்ங் கவுண் அல்லது சோட்டி அணிந்துகொண்டு வாரத்தில் ஒருமுறைதான் சாப்பிடுபவரைபோல ஒல்லியாயிருக்கும் அந்த மனுஷியை வீட்டுக்கு வெளியில், ஒழுங்கையில் தெருவில், கடையில், சந்தையில், புத்தூர் பரி.லூக்காஸ் தேவாலயத்தில்கூட யாரும் ஒரு நாளும் பார்த்திருக்கமுடியாது. ஆனால் இப்படி எங்களைப்போல யாரேனும் போய் மாட்டிவிட்டால், ஆரங்களில் பிறவுண் வரிகளுள்ள பூனைக் கண்களால் ஊடுருவி எமது கண்ணுக்குள்ளே பார்த்துக்கொண்டு ஊரிலுள்ள 3421 பேரைப்பற்றியும் துருவித்துருவி விசாரித்துவிட்டுத்தான் போகவிடும். அந்தவயதில் அவரது பார்வை எனக்குப் பயமூட்டுவதாயிருக்கும்.

“(சாதியையும் சேர்த்து) சிவசம்பு பெண்சாதி முழுகாமல் இருந்தாளே பெத்திட்டாளோ?”

“அப்புத்தளைக்கு படிப்பிக்கப்போன சபாபதியற்ற மகன் அங்கயிருந்தும் ஒருத்தியைச் சாய்ச்சுக் கொண்ணந்திருக்கிறானாம், கண்டனியோ……… எப்பிடிக்குட்டி வடிவோ?”

“உன்ர சித்தப்பா இப்பவும் சாராயம் குடிக்கிறவரோ?”

சித்தப்பா சாராயம் குடிக்கும் சமாச்சாரம் அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

“சாய்………இல்லை இப்ப சாராயம் குடிகிறேல்ல.”

“அப்ப அதைவிட்டிட்டுக் கள்ளுக்கு மாறிட்டாராமோ?”

“சரியாய்த் தெரியேல்ல அடுத்தமுறை வரும்போது கேட்டுவாறன்.”

என் மூத்த அண்ணன் அப்போது கொழும்பில் நிலஅளவைத் திணைக்களத்தில் படவரைஞராகப் பணிசெய்துகொண்டிருந்தார்.

“அப்ப……….. கொண்ணைக்கு எப்பவாம் கலியாணாம்.,…….. அவன் மாதா மாதம் காசு அனுப்பிறவனோ? “

“அனுப்பிறவர்….”

“எத்தனை காசு அனுப்பிறவன்…… அது காணுமோ உங்களுக்கு?”

“சமாளிக்கிறம்.”

“கொப்பர் இப்ப வன்னிக்குப்போறேல்லையே……… அந்தக்காணியை என்ன கைவிட்டிட்டியளோ…… இல்லை இப்பவும் விதைப்புகள் விளைச்சலுகள் உண்டோ?”

“உண்டு….”

“அவர் என்ன இப்பவும் கூத்துப் பாட்டென்றுதான் சுத்துறாரோ… இல்லை அப்பப்ப ஏதும் புனண்டுறவரோ. “ (உழைத்தல்)

“கொம்மா என்னென்ன நகையள் வைச்சிருக்கிறாள், பெட்டையளுக்கு ஏதும் தேடியும் வைச்சிருக்கிறாளோ…… இல்ல அன்றன்டாடு சீவியத்தோட போகுதோ…….”

ஒருநாள் எனக்குப்பதிலாக தேங்காய் வாங்கப்போன அம்மா எமிலிக்கிழவியிடமும், மருமகளிடமும் சேர்ந்தாப்போல வகையாக மாட்டிக்கொண்டார். அவர்கள் கேட்ட 3000 கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு புறப்படும்போது அம்மா தெரியாத்தனமாய் எமிலியிடம் கேட்டாவாம்

“ஏனணை உங்கட லண்டனில இருக்கிற மகன் அப்பப்ப ஏதும் உங்களுக்கும் சிலவு சித்தாயத்துக்கும் அனுப்பிறவரோ………”

எமிலிக்கிழவிக்கு உடனே காது கேட்காமல் போய்விட்டது. அம்மாவும் விகற்பமில்லாமல் கொஞ்சம் சத்தமாகக் கேள்வியைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்.

“என்னவோ தெரியாதம்மா… அதுகள் உவன் இராசதுரையைத்தான் கேக்கோணும்……….” என்று மெழுகினாவாம். ஊர்த்தொளவாரங்கள் இத்தனை கேட்டாலும், பதிலுக்கு அவர்கள் வீட்டுவிஷயம் ஒன்றுகூட வெளியில் கசியாதபடிக்கு கதையைக் கச்சிதமாக முடித்துவிடுவார்கள்.

“அடடா………….. தெரியாமப்போச்சே……… அதை நான் முதல்லயே கேட்டு நேரத்துக்கு வீட்டை வந்திருப்பனே…..” என்று அங்கலாய்த்தார் அம்மா.

அவர்கள் வீட்டில் இன்னுமொரு அதிசயஜீவனும் ஒன்று ஜீவித்திருந்தது. ஒல்லித்தேகமும், குச்சிக்குச்சிக் கைகால்களுடனும் விகாரமான தோற்றத்துடன் ஒரு பையனும் அவர்களுக்கு இருந்தான். ஒல்லித்தேங்காய்போல முகம். அதிலிருந்து கண்கள் பிதுங்கி வெளித்தொங்கும், சூப்பிப்போட்ட பனங்காய்போல கொஞ்சம் முடி தலையில். செவிப்புலனைப்பற்றித் தெரியாது, ஆனால் வாய்பேசவராது, எப்போதும் வாய்நீர் ஊற்றிக்கொண்டிருப்பான். அவன் அவர்களுக்கு எத்தனையாவது பிள்ளையென்றோ, அவனுக்கு என்ன பெயரென்றோ, என்ன வயதென்றொ, யாருக்கும் சரியாகத் தெரியாது. அநேகமான வேளைகளில் அவனுக்கும் இப்போதைய பேர்மூடா களிசான் மாதிரி முழங்காலுக்குக் கீழேவரும் ஒரு களிசானைப்போட்டு இடுப்பில் தோற்பட்டிகட்டி அதிலொரு நாய்ச்சங்கிலியைப்போட்டு அவனைத் தூணோடு பிணைத்துவைத்திருப்பார்கள். அவனை அவிழ்த்துவைத்தால் சோற்றுப்பானைக்குள் மண்ணைக் கொண்டுபோய் கொட்டுவது, கொடியில் தூங்கும் துணிமணிகளை இழுத்து நிலத்தில் வீசுவது, சாளரங்களைப்பிடித்து உத்தரத்திலேறி முகட்டுக்குப்போவது போன்ற தறுதுறும்புகள் செய்வானாம்.

கொட்டுத்தனைக்கு முன்னறிவிப்பில்லாமல் போன ஒரு நாளில் அவனை மாலிற்குள் கட்டிவைத்திருந்தார்கள், என்னைக்கண்டவுடன் பயத்திலோ சந்தோஷத்திலோ சிறு குரங்கைப்போலக் கையை ஆட்டிக்கொண்டு கிறீச்சிட்டுக் கத்தினான். யாரோ ஓடிவந்து அவனை அவிழ்த்துக் சங்கிலியில் குரங்கைப்போலப் பிடித்துப் பின்கோடிக்குக் கொண்டுபோய்க் கட்டினார்கள். அவனைப்பற்றி எதுவும் கேட்பது அவர்களுக்குப் பிடிக்காதென்பதால் நானும் ஏதொன்றும் கேட்கவில்லை.

***

40 வருடங்களுக்குமுன் லண்டன் சீமைக்குச் சென்றிருந்த அருட்சோதி திடீரென்று ஒருநாள் ஒரு புதிய கரும்பச்சை மொறிஸ்மைனர் காரில் வெள்ளைக்கார மனைவியுடன் வந்து இறங்கினார். அக்காரின் இலக்கத்தகட்டில் 128 KME என்றிருந்தது எமக்கெல்லாம் அதிசயம். அருட்சோதிக்கு தமிழ் சுத்தமாக மறந்துபோய்விட்டிருந்தது. மனைவி ஆசிரியையாம், இருவரும் ஓய்வுபெற்றதும் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இராசதுரை குடும்பத்தினர் முதலிலேயே தலைவாசலுக்கும் மாலின் தரைக்கும் கொங்கிறீட்போட்டு, தூவல்த்தாரையுடன்கூடிய (Shower) குளியலறைகள், கழிப்பறைகள் எல்லாம் அமைத்து வீட்டை நவீனப்படுத்திவைத்திருந்தனர். அவர் வந்த பின்னால் எல்லாப் பையன்களுக்கும் முதுகில்போடும் வகையிலான புத்தகப்பைகளுடன் (Rucksack) பள்ளிக்கூடம் வந்தனர். முதல்வாரத்திலேயே எல்லோருக்கும் மிதியுந்துகளும் வாங்கிக்கொடுத்தார். அவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள்நிற ’Raleigh’ றேஸிங்வகையிலான மிதியுந்துகளில் குறுக்கும் மறுக்குமாக சுற்றிக்கொண்டு திரிவதைப் பார்க்கும் வேளைகளிலெல்லாம் எமக்குள்ளே ஒருவிதமறியாத பொருமல்வந்து நெஞ்சை முட்டும்.

கிராமத்துக்கு வந்திருக்கும் வெள்ளைக்காரியைப்பார்க்க நாம் நண்பர்களுடன் கூட்டமாகச் செல்வோம். Mrs.அருட்சோதி ஆசிரியையாக இருந்ததால் நிறைய பென்சில்கள், கொப்பி, வர்ணத்தாள்கள், வர்ண / ஓயில் சோக்கட்டிகளை எங்களுக்குத்தருவார். எம்மைப்பிடித்துவைத்து தலையைத்தடவியபடி ஏதேதோவெல்லாம் கேட்பார். அவர்பேசும் 100 ஆங்கில வார்த்தைகளில் எங்களுக்குத் தெரிந்தவையாக ஐந்தாறுதான் இருக்கும். இருந்தும் எல்லாம் புரிந்ததைப்போலத் தலைகளை ஆட்டிவைப்போம்.

ஒரு மழைபெய்த நாளில் சென்றிருந்த எம்மைப்பார்த்து

”What made you to come between the Strom?” என்று கேட்டார்.

மழையை Strom என்றும் சொல்லலாமென்று அன்றுதான் தெரிந்துகொண்டதுடன். ஏதோ புரிந்துபோலச் சும்மா சிரித்து வைத்தோம். அன்று மழை நிற்காமலே சூரியன் மினுங்கவும் ஆனந்த மிகுதியால் ஒருபாட்டைப் பாடிக்கொண்டு எங்கள் கைகளையும் பிடித்துக்கொண்டு குதித்து மழையில் ஆடத்தொடங்கிவிட்டார்.

ஊரிலுள்ள தோட்டக்காரர்கள் அவர்களுக்கு இளனிக்குலைகள், காய்கறிகள், மாம்பழங்கள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கெக்கரிக்காய், வத்தகைப்பழம் என்பவற்றைக் கொண்டுபோய் அன்பளிப்புச்செய்தனர்.

Mrs. அருட்சோதி எங்களை அடிக்கடி அங்கே வரச்சொல்லிக் கேட்பார். அதைச்சாட்டாக வைத்து அங்கே அடிக்கடி போகும் எங்களுக்கு பியேர்ஸ், திராட்சை, அன்னாசிப்பழங்கள், சொக்களேற்றுக்கள் கைநிறையத்தந்து அசத்துவார்கள். நாங்கள் அங்கே போவது எமிலிக்கிழவிக்கோ, Mrs. இராசதுரைக்கோ பிடிக்காது, ஏதோ தங்கள் வீட்டுப்பண்டங்களை எடுத்து Mrs. அருட்சோதி இறைப்பதைப்போல வருந்துவார்கள்.

கைநிறையப்பழங்கள் சொக்களேற்றுக்கள், கிடைத்ததும் சங்கிலியில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அந்தப்பையன் வந்த்து பிடுங்கிக்கொள்வானோ என்கிற பயத்தில் கண்களை அவ்வளவு முழுவதும் சுழற்றுவேன். அவன் இருந்ததுக்கான தடயங்கள் எதுவும் அங்கிருக்கல்லை. தமையன் குடும்பம் வரமுதலே அவன் எப்படியோ அங்கிருந்து மறைக்கப்பட்டிருந்தான். அவனை வைத்தியம் செய்வதற்காக திருகோணமலைக்கு தம்பி இரத்தினதுரை வீட்டுக்கு அனுப்பியிருப்பதாக முதலில் யாருக்கோ கதைவிட்ட இராசதுரையர், நாட்கள்செல்ல அவன் அங்கேயே இறந்துவிட்டதாகவும் சொன்னாராம், அவனுக்கு என்ன நடந்தது, அங்கிருந்து எப்படி மறைந்தான் என்பது அவர்களைத்தவிர ஊரில் உலகில் எவருக்கும் தெரியவராத மர்மமாகவே இன்னும் இருக்கிறது.

***

இலங்கைவந்து ஐந்தாறு மாதங்களின்பின் ஒருநாள் அருட்சோதியருக்கு அயலவர்கொடுத்த கெக்கரிக்காய், வத்தகைப்பழத்தின் நினைவு வந்துவிட ஊரிலுள்ள பலசரக்குக்கடையொன்றுக்குவந்து “Get me please some வத்தாக்கா and வத்திரிக்கா” என்று கேட்டார். அச்சமயம் தற்செயலாக அக்கடையில் நின்றிருந்த நான் “அவர் வத்தகைப்பழமும் கெக்கரிக்காயும் கேட்கிறார்” என்று மொழிபெயர்த்தேன். பின் அவரிடம் ‘அதுபோன்ற பழங்கள் இங்கே கிடைக்காது, ஒருவேளை சந்தைக்குப் போனால்த்தான் கிடைக்கும்’ என்றும் சொன்னேன். நாங்கள் பொடிநடையாகப் பள்ளிக்கூடம் போகும்போது அவர்களது கார் வந்தால் நிறுத்தி எம்மையும் ஏற்றிச்செல்வார்கள். புதுக்காரில் ஏறும் குதூகலம் சொல்லிமாளாது. அக்காரினுள்ளேயிருந்து புறப்படும் புதுமையானசுகந்தம் இன்னும் நினைவிலிருக்கிறது.

அருட்சோதி குடும்பம் இலங்கைக்கு வந்து இரண்டு வருடங்களாயிற்று. தாயார் எமிலிக்கிழவி இறக்கும்வரையில் அவர்கள் இங்குதான் இருப்பார்கள் என்றொரு எதிர்பார்ப்பு எமக்கு இருந்தது. இடைக்கிடை கண்டி, கொழும்பு நுவர-எலியாவுக்குப் போய்வருவார்கள், அடுத்த மாதம் திருகோணமலைக்கு சகோதரர் இரத்தினதுரையப் பார்க்கப் போய்வருவார்கள். இவ்வாறாக இரண்டு வருடங்கள் ஜாலியாக இலங்கையில் கழித்தவர்கள் மெல்ல சோதிராசாவுக்கும் காரோட்டக் கற்றுக்கொடுத்தார்கள். எமிலியோ பூரண ஆரோக்கியத்துடன் இருந்தார். பிறகு என்ன நினைத்தார்களோ அவர்கள் திடீரென சோதிமலரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சீமைக்குத்திரும்பினர். அடுத்த நாலைந்து மாதங்களில் பத்தாவதே தேறாத சோதிராசாவையும் சீமைக்கு அழைத்துவிட்டிருந்தனர்.

***

மழையோடு மரணம் வரும் என்பார்கள். மழைநாளொன்றில் தன்பாட்டுக்கு நடமாடிக்கொண்டிருந்த எமிலிக்கிழவி காய்ச்சல்கண்டு திடீரெனச் செத்துப்போனார். ஞாயிற்றுக்கிழமைகளில் பரி.லூக்காஸ் தேவாலயத்துக்கு திருப்பலிப்பூசைக்கு வரும் வெள்ளைக்காரப்பாதிரியார் ஒருவர் வந்ததும் ஏனோ உடலைத் தேவாலயத்துக்கு எடுத்துப்போகாமல் வீட்டிலேயேவைத்து

டேவபிடா (தேவபிதா) எங்கள் மேய்ப்பரல்லோ

சிறுமை டாய்ச்சி (தாழ்ச்சி) அடைகிலனே…….

ஆவலதாய்ப் பசும்புல் மீதேஅவர்

மேய்த்தே நீரும் அருள்கின்றார் !

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி

பாங்காய் எமக்கென்றேற்படுத்தி

சுகதைலம் கொண்டே எம் தலையை

இதமாய் அபிஷேகம் செய்வாரே !

என்று பாதிரியார் குத்துமதிப்பான தமிழ் உச்சரிப்பில் தகரக்குரலிற்பாடி இறுதிச்சடங்குகள் செய்ததும் பரந்த கொட்டுத்தனை வளவுக்குள்ளேயே பின்பக்கமாக ஓருமூலையில் எமிலியை அடக்கம் செய்ததும் ஞாபகத்திலிருக்கிறது. பாண்டு வாத்தியக்காரர்கள் உட்பட சரித்திரத்தில் அன்றைக்குத்தான் அவர்கள் வீட்டில் நாற்பது , ஐம்பதுபேர் ஒன்றாகக் கூடியிருந்திருப்பார்கள்.

***

இப்போது சோதிராசாவுக்கு இலங்கைக்கு அருட்சோதியர் வரும்போது அவருக்கிருந்த (70) அகவைகளிருக்கும். அவர்கள் சீமைக்குத்திரும்பி 20 வருடங்களின்பின் 1986 இல் போர் நடந்துகொண்டிருந்தபோது நான் ஜெர்மனியிலிருந்து இலங்கை சென்றபோது எமது வீடிருந்த இடத்தில் அதன் அத்திவாரம் மட்டும் மீந்திருந்தது. குண்டுவீச்சிலோ, அல்லது ஒரு எறிகணைக்கு இலக்காகி எம்வீடு சிதிலமாகியிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வருத்தம் கொஞ்சமாகத்தான் இருக்கும். போர்க்காலத்திலும், போர் நிறுத்தகாலத்திலுமாக அந்தவீட்டின் கூரையிலிருந்து அத்திவாரம்வரையில் அனைத்தையும் கல்லுக்கல்லாக நம்ப சனமே பெயர்த்துக்கொண்டு போய்விட்டது. வீட்டில் களவுபோவதுண்டு, வீட்டையே களவு கொடுத்தவர்கள் தமிழராகத்தானிருக்கும்! முன்னர் எம்வீட்டின் கோடியில் ஒரு சிறிய மருதாணிச்செடி நின்றது. இன்று அதுவே வளவு முழுவதும் காடாக விரவி அத்திவாரம் இருந்த இடத்தையே என்னால் தூர்ந்துபோயிருந்த கிணற்றை வைத்துத்தான் கணிக்கமுடிந்தது. எம்வீட்டின் ஞாபகமாக அதன் நிக்கல்முலாம் பூசிய பித்தளைத்திறப்புக்கள் மட்டும் பத்திரமாக இன்னும் எம்மிடம் இருக்கின்றன.

கொட்டுத்தனை வளவில் இன்னும் யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அறிவதற்காகப் போயிருந்தேன். அவர்களது வளவுக்குள் இராணுவமுகாம் ஒன்றிருந்தது, அவர்களுக்கும் அங்கிருந்தவர்களைப்பற்றி எதுவும் தெரியவில்லை. ஊரில் எஞ்சியிருந்த சிறிய கிறித்தவசமூகத்தில் விசாரித்தபோது ‘இராசதுரை, அவரது சகோதரர்கள், திருமதி. இராசதுரை எவருமே இப்போது உயிருடன் இல்லை, இரண்டாவது பையன் ஜெகசோதியையும் இயக்கமொன்று போட்டுவிட்டது, ஆக இளையபையன் குணராசாவும் இங்கிலாந்துக்கே போய்விட்டான் என்று கேள்வி’ என்றனர்.

மீண்டுமொருமுறை 22 வருடங்களின்பின் 2008 இல் சமாதான காலத்தின்போது இலங்கைக்குப்போக நேரவும் கொட்டுத்தனைக்கும் போனேன். கொட்டுத்தனையில் கூடலாயிருந்த பனைகள், தென்னைகள், மா. பலா மரங்கள் உட்பட எதனையும் காணவில்லை. அங்கே பனைகள் கூடலாயிருந்தபோது இலேசாகக் காற்றடித்தாலே பனைகள் அசைவதும் அதன் காவோலைகள், கங்குமட்டைகள் ஒன்றுடனொன்று உரசி எழுப்பும் ஓசையும் பயங்கரமாக இருக்கும். இராணுவமுகாம் இருந்த இடத்தில் யாரோ சிலர் கல்லுடைக்கும் இயந்திரங்களைப் பொருத்திவைத்துக் கல்லுகளை உடைத்துக்கொண்டிருந்தனர். அந்தப்பழைய வீடிருந்த இடத்துக்கும் பின்னால் மரங்களின் வெறுமைதந்த வெளியினூடாக வல்லைவெளிவரை தெரிந்தது. அந்தப் பெரும் வளவுக்குள் ஐந்தாறு பாரவுந்துகளும், டிப்பர் உந்துகளும் அங்கங்கு இஷ்டத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கல்லுடைக்கும் இயந்திரங்கள் கிளம்பியதூசி மட்டும் நிலத்தில் அரை அடி உயரத்துக்கு பிரதான வீதியையும் தாண்டிக் கோப்பறேசன் வரை பரவியிருந்தது.

(கெக்கரிக்காய் = Cucumbers , வத்தகைப்பழம் = Watermelon)

– கனவு இதழ் (திருப்பூர்) ஜூலை 2020.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *