கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 7,724 
 

கான் எனத் துணைப்பெயர் கொண்ட சில மேதைகள் நினை வில் நின்றனர். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், எப்போது கேட்டாலும் கண்கள் நிறைறந்து சொட்ட ஷெனாய் வாசித்த உஸ்தாத் பிஸ்மில்லா கான், ‘பாபா ஹாஜி அலி’ எனத் தொடங்கிப் பரவசத்தில் ஆடச் செய்யும் பாகிஸ்தானி சூஃபி பாடகர் நுஸ்ரத் ஃபத்தே அலிகான், இந்திய இசை மேதைகள் அலி அக்பர் கான், ரஷீத் கான், அம்ஜத் அலி கான், யாவர்க்கும் மேலான உஸ்தாத் படேகுலாம் அலிகான்.

உங்கள் விருப்பமாக, சினிமா நடிகர்கள் சஞ்சய்கான், அம்ஜத் கான், சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான் என பட்டியலை நீட்டிக் கொள்ளலாம், எமக்கு எதிர்ப்பில்லை.

இவ்வனைத்துக் கான்களையும் மீறி, என் சொந்த வாழ்வில் குறுக்கிட்டு, பாதித்து, கடந்தும் போனதோர் கான் பற்றி இவண் பேசலானேன். ஈண்டு அவரது இயற்பெயரைப் பயன்படுத்தப் போவதில்லை. இதுவோர் தன்வரலாற்றுக் குறிப்பா எனில் ஆம் என்றும் இஃதோர் சிறுகதைப் புனைவா எனில் ஆம் ஆம் என்றும் அறையும் பம்பாயின் அலைகடற் காற்று.

சாதத் ஹசன் மண்டோ வாசித்த ஞாபகம் இருப்போர்க்கு இந்த வடிவம் ஆச்சரியம் ஊட்டாது எனும் உறுதியுண்டு எனக்கு.

1972-ம் ஆண்டு, நவம்பர் மாதம், தீபாவளி முடிந்த மூன்றாம் நாள், வரலாற்று முக்கியத்துவம் உள்ள நாளென்று இந்திய வரலாற்று ஆசிரியர்களால் கொளப்படவில்லை. அன்றுதான் பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் தொடர்வண்டி நிலையத்தில் இந்தக் கதாசிரியன் கால் குத்திய நாள்.

இங்கிலாந்துப் பேரரசர் ஜார்ஜ் V-ம் ராணிமேரியும் 1911-ல் கடல் மார்க்கமாக பம்பாய் கொலாபா கடற்கரையோரம் அப்பலோ பந்தரில் வந்து இறங்கியதன் நினைவாக 1924-ல் ‘கேட் வே ஆஃப் இந்தியா’ கட்டப்பட்டது. சென்றிறங்கி இன்று முப்பத்தேழு ஆண்டுகள் நடந்து போயின எனினும் எந்த நினைவுச் சின்னமும் எழுப்பப் படாமற் போன காரணத்தினாலேயே, எனது செல்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் எதுவும் இல்லையெனப் புரிந்து கொள்ளலாம்.

இறங்கிய அன்று தானே எனக்கு கான்சாகிப் அறிமுகமாகி விடவில்லை . உண்மையில், சரியான உருது உச்சரிப்பில், அவர் பெயரை KHAN SAHEB என்று எழுதவேண்டும். எல்லா வேற்று மொழிப் பெயருக்கும் நம் மொழி சில சலுகைகளை வழங்கிக் கொள்கிறது. அதற்காக ஷேக்ஸ்பியரை, செகப்பிரியர் எனச் சலுகை கொடுப்பதை நம்மால் சகித்துக் கொள்ள இயலாது. இரண்டு மேதைகளின் அறிமுகம் – சந்திப்பு, அத்தனை எளிதில் நடந்து விடவும் வாய்ப்பு இல்லை . எனினும் இருவரும் சமகாலத் தில் ஒரு மாநகரில் வாழ்ந்து கொண்டிருந்தோம், சந்தித்துக் கொள்ளாமலேயே!

இதில் அதிசயம் கொள்ள ஒன்றுமே இல்லை. பிரபஞ்ச வெளியில் ஏற்கனவே பெயரிடப்பட்ட கோள்களும், பின்பு காணப்பட்ட கோள்களும் இன்னும் அறிந்துகொள்ளக் காத்திருக் கின்றன கோள்களும் ஒன்றையொன்று முட்டிக் கொள்வதில்லை. மோதிக் கொள்வதில்லை. உராய்ந்து கொள்வதும் இல்லை. ஒரு கோளின் ஓட்டுநர் எட்டிப் பார்த்து அடுத்த கோளின் ஓட்டுநரை, “தாய்ளி, லெப்ட் சிக்னல் போட்டுக்கிட்டு ரைட்ல திரும்பறான் பாரு” என வாழ்த்துவதும் இல்லை.

வேறு வேறு கதிகளில், திசைகளில் பயணம் செய்தும்கூட, கோள்களுக்கு என்று போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை கிடையாது. பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளும் சிக்னல் எனக் கிடையாது. சிட்டி போலீஸ் கமிஷனர்களும் இல்லை.

கவிஞர் தில்லை வேலன் எனக்கு நண்பர். சிதம்பரத்துக்காரர் எனச் சொல்ல வேண்டியதில்லை. தில்லை வேலனை அறிந்திராத நீங்கள் அவர்க்கும் மூத்த தில்லை வில்லாளனை எங்கே நினைவு வைத்திருக்கப் போகிறீர்கள்? பம்பாயில் நடந்ததோர் தமிழ் நாடக விழாவின்போது, தில்லை வேலன் எனக்கு கான் சாகிபை அறிமுகம் செய்வித்தார்.

“ஜப்பானுக்கு தோல் ஏற்றுமதி செய்றாரு… உருதுல கவிதை எல்லாம் எழுதுவாரு.”

எனக்கு இரண்டாவது தகவல் கவர்ச்சியாக இருந்தது. பின்னர் தெரிந்து கொண்டேன். இந்தியாவில் இருந்து தோல் இறக்குமதி செய்கிற ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்கு பம்பாய் முகவர் என்றும் தீவிர உருதுக்கவிதை வாசகர், ஆனால் கவிஞர் அல்ல என்றும்.

அப்போது கான் சாகிப் கார் வைத்திருந்தார். நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகம் முடிந்தபிறகு, காரில் புறப்பட்டோம். கான் சாகிப் சயான் இரயில் நிலையம் அருகில் ஹோட்டல் கம்ஃபர்ட்டில் மாதவாடகைக்குத் தங்கி இருந்தார். எனக்கு அங்கிருந்து தாக்குர்லிக்கு ரயில் பிடிக்கலாம். இரவு ஒன்றரை முதல் அதிகாலை மூன்றரை மணி வரைக்கும் இரயில் போக்குவரத்துக்கு இடைவெளி. இது 1972-ன் நிலைமை.

எனக்குக் கட்டுப்படியாகிற வாடகைக்கு நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து 50 கி.மீ. வெளியே குடி இருந்தேன். தாக்குர்லியில் இறங்கி, குறுக்குவழியாக ஒற்றையடிப் பாதையில் நடந்தால் இருபது நிமிட நடை. கள்ளர் பயம் கிடையாது, காட்டு வழி ஆனாலும். காலாண்டு சீசன் ரயில் பயணச் சீட்டும், ஏழாண்டு பழகிய கைக்கடிகாரமும், பத்து ரூபாய்க்கும் குறைவான கையிருப்பும். மாதம் இருநூற்றுப் பத்து ரூபாய் சம்பளக்காரனுக்கு அதுவே பெரிய காரியம். கண்மணி குணசேகரனின் சொல்லாட் சியை இரவல் வாங்கினால் – ‘இதுல பயப்பட என்ன கெடக்கு?’

கான் சாகிப் காரோட்டிய விதம் கவலைக்கிடமானது. தவளை போல் காரோட்ட முடியும் என்பது அன்றுதான் எனக்குத் தெளிவானது. சயான் சர்கிளில், இரவு பத்து மணி தொடங்கி அதி காலை இரண்டரை மணிவரை இயங்கிய தட்டுக்கடைகள் உண்டு. அல்லது செம்மொழியில் மொழிமாற்றம் செய்தால், ‘கையேந்தி பவன்’. தாராவி, கோலிவாடா, கோவான்டி வாழ் தமிழர்கள் நடத்திய கடைகள். ஆம்லெட்-பாவ், பாவ்-புர்ஜி, வடா-பாவ், இட்லி, தோசை கிடைக்கும். எப்படியும் உருதுக் கவிஞர் பணம் தருவார் எனும் நம்பிக்கையில் சுடச்சுட இட்லி-சாம்பார்-சட்னிஆம்லெட் குலுக்கிக் கட்டினேன்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. ஸ்டேஷனில் இரவு 01 – 35க்குப் புறப்படும் அன்றைய கடைசி கர்ஜத் லோகல் 01 – 50க்கு சயான் வரும். புறப்பட யத்தனித்தேன்.

“எத்தன மணிக்குப் போய்ச் சேருவே, பாய்?” என்றார் கான் சாகிப்.

“தாக்குர்லி ஸ்டேஷனுக்கு ரெண்டு நாப்பதுக்குப் போகும். பொடி நடையாப் போன இருவது நிமிஷம்.”

“படுக்கச்சிலே சாடே தீன் பஜேங்கா?”

“திரும்ப காலம்பற எப்ப லவுட்டேங்கா?” “ஆட் பஜே!”

“பேசாம என் ரூமிலே படு… காலம்பற ஸ்நான் கரோ, தப்தர் சலோ …”

“இல்ல பாய், போயிருவேன்…” “அரே சலோனா சாலா… மை துஜே காண்ட் நை மாரேங்கா”

அப்போது நான் சற்று புஷ்டியாக இருந்தேன். தில்லை வேலன், அவரைப் பட்டாணிய இனம் என்று வேறு சொல்லி இருந்தார். எனது அச்சத்துக்கு அந்தரங்கமாய் ஆதாரம் இல்லை என்று சொல்ல இயலாது. நண்டுக்கு நாவூறாத நரி உண்டா ?

1972-லேயே பழைய காலத்து விடுதி. எனினும் விசாலமான காற்றோட்டமான அறை. பத்துக்கு இருபது அடி. ஒரு பீரோ, ஒற்றைக் கட்டில், மேஜை, நாற்காலி, துணி கிடக்கும் கொடி, தண்ணீர்ப் பானை, துவைக்கும் குளிக்கும் பித்தளை வாளி, மக், நாளிதழ்கள், வாராந்தரிகள், புத்தகங்கள், சோனி மோனோ கேசட் பிளேயர் எனக் கிடந்தது அறை.

பாத்ரூம், சண்டாஸ் வெளியே, பொது.

பீரோக்குப் பின்னால் மறைவாக இருந்த வர்ணக் கோரம் பாயும் தலையணையும் போர்வையும் எடுத்துப் போட்டார். பீரோவைத் திறந்து மூட்டிய சங்கு மார்க் லுங்கியும் வர்ணத் துண்டும் தந்தார். விரித்துப் படுத்தேன். இரா முழுக்கப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசினால் சிரித்துச் சிரித்துக் குடலறுந்து போகும். காலை ஐந்து மணிக்கு, சோக்ராவைக் கூப்பிட்டு சாய் சொன்னார். அப்போதுதான் முதன்முறையாக அவருக்கு கான் சாகிப் என செல்லப்பெயர் வைத்தேன்.

அப்படித்தான் தொடங்கியது. ‘நஞ்சும் நா நாழியா வேணும்?’ என்பார்கள் எதிர்மறையில். ஒரு சேக்காளி, சகா, தோஸ்த், நண்பன் எனப் பாய்ந்து போயிற்று காலம். என்னைவிட நாலைந்து ஆண்டுகள் இளையவர். எனினும் எமக்குள் பேதங்கள் இல்லை . வாரம் ஒருநாள் என ஆரம்பித்து பெரும்பாலும் தினமும் எனும் ரீதியில் சந்திப்பு. நான் பணிபுரிந்த இடம் சென்ட்ரல் ரயில்வேயின் ஹார்பர் பிராஞ்சு தடம். சயான் இருந்தது மெயின் தடத்தில். ரேரோடு நிலையத்தில் மின்வண்டி பிடித்து எதிர்த்திசையில் இரண்டு ஸ்டேஷன் பயணம் செய்து, சாண்டர்ஸ் ரோடு நிலையத்தில் இறங்கி, தடம் மாறி, வண்டி பிடித்து சயானில் இறங்க வேண்டும். மாலை ஐந்தேகாலுக்கு தொழிற்சாலையில் புறப்பட்டால் ஆறு மணிக்கு சயானில் இறங்கி சாலை கடந்து, ஓட்டல் கம்ஃபர்ட்டின் இரண்டாவது மாடியில் இருக்கலாம். பத்து மணிக்கு மேல் வீட்டுக்குப் புறப்படுவேன். அல்லது அங்கேயே தங்கியும் விடுவேன்.

அவர் தாய்மொழி உருது. அதற்காக நீங்கள் கன்னித் தமிழ் நாட்டில் அந்நியர் ஆதிக்கம் என்று புருவம் தூக்க வேண்டாம். நடப்பு மாநில சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் 234 பேரில் வீட்டில் தாய்மொழியான தெலுங்கு 42 பேரும் கன்னடம் 18 பேரும் மலையாளம் 6 பேரும் பேசுகிறார்கள் என்று எனக் கொரு குறுஞ்செய்தி வந்தது சில மாதங்கள் முன்பு.

பயஸ் அகமது பயஸ் கவிதைகளை கான் சாகிப் சொல்லிக் கேட்க வேண்டும். அல்லாமா இக்பால் அவருக்குப் பிரியமான இன்னொரு கவிஞர். உமர் கயாம் பெருவிருப்பு. ஆனால் அவர் பாரசீகக் கவி. அவர் போன்று மிர்தாத், காலிப், கலீல் கிப்ரான்.

எப்போதும் கேசட் பிளேயரில் மன்னா டே, கிஷோர் குமார், மொகம்மது ரஃபி, பேகம் அக்தர், சம்ஷாத், அலி பேகம், நூர்ஜ ஹான், கீதா தத், சுரையா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இடையிடையே மலபாரின் மாப்பிள்ளைப் பாட்டுக்கள். ‘முழுவன் கோழி பொரிச்சு வச்சு’ என்று தொடங்கும் ஒரு பாடல் இன்னும் என் உட்செவியில் ஒலிக்கும்.

அவரது அறையின் துணிக்கொடியில் நான் பயன்படுத்தும் சாரமும் துண்டும் தொங்கிக் கிடக்கும். டூத் பிரஷும் நாக்கு வழிப்பானும் என் செலவில் வாங்கி வைத்திருந்தேன். சோப்பு, பவுடர், எண்ணெய், பற்பசை எல்லாம் பொதுக்கணக்கு. அன்று கைபேசிகளைக் கண்டதில்லை. விடுதித் தொலைபேசிதான். விடுதிக்கு கூப்பிட்டால் கீழே இருந்து அறைக்கு மணி அடிப்பார்கள்.

“கான் சாகிப்… மை நாஞ்சில்.” “கிதர் ஜாக்கே மர் கயா? சூத்தியா ஸாலா… கபி ஆத்தா ஹை ?” |

“ஆறு மணிக்கு வாறேன்.”

“டீக் ஹை… கானா ஹமாரா ஸாத் காவ்” – இரவு உணவு அவருடன் – என்று சொல்லி போனை வைத்து விடுவார்.

கான் சாகிபின் அம்மா, அவருடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரம். ஆம்பூரிலும் இராணிப்பேட்டையிலும் சென்னையிலும் வர்த்தகம், நல்ல செல்வந்தர். எதிர்பாராத தகப்பன் மரணம். சொத்துக்கள் யாவும் முதல் தாரத்து மக்களுக்குப் போய்விட்டன. பி.காம். படித்திருந்த கான் சாகிப் தோல் மண்டிக்கு வேலைக்குப் போனார். ஆட்டுத் தோல், உப்பிட்டது, பதப்படுத்தியது என தொழில் கற்றுக்கொண்டார். இது முன்கதைச் சுருக்கம்.

கிட்டத்தட்ட ஓட்டல் கம்ஃபர்ட் எனது இரண்டாவது வீடு. பின்னாளில், நான் மேலாளராகப் பணியாற்றிய நிறுவனத்தின் எம்.டி. லண்டனைத் தனது செகண்ட் ஹோம் என்பார், ஒவ்வொரு மீட்டிங்கிலும் இருமுறை. அதுபோல் அல்ல இது. எனது பிற நண்பர்கள் கேலி பேசுவார்கள் – சீக்கிரம் சுன்னத் கல்யாணம் செய்து மார்க்கத்துக்கு மாறிவிடு என்று. பாபா சாகேப் அம்பேத் கருக்கும் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் அந்த எண்ணம் இருந்தது. அது பெரியார்தாசனுக்காவது நிறைவேறி இருக்கிறது.

வழக்கம் போல, மாலை ஓட்டல் கம்ஃபர்ட் சென்று சேர்ந்த போது, கான் சாகிப் மக்ரீப் தொழுது முடிக்கும் தறுவாயில் இருந்தார். தொழுகை முடிந்து என்னைப் பார்த்தபோது முகத்தில் நல்ல மலர்ச்சி இருந்தது. எப்போதும் போல. அஃதோர் வியப் பூட்டும் அனுபவம் எனக்கு. அடுத்தது, “சாய் பீயெங்கே?” சாய் பருகத் தொடங்குககையில் மொழிமாற்றம் பெற்று உலகாயத சலிப்போ, உற்சாகமோ!

எனக்குத் தெரிந்து தமிழில் வெளியான முதல் கமலாதாஸ் நேர்காணல், பாவை சந்திரன் ஆசிரியராக இருந்த காலத்தில், குங்குமத்தில் வெளிவந்தது. நேர் கண்டது கான் சாகிப். எந்தக் குறுக்கீடும் இன்றி நானும் உடனிருந்தேன். ஆனால் கமலாதாஸ் பின்னாளில் சுரையா பேகம் ஆனது கான் சாகிப் தூண்டுதலால் அல்ல. அப்போது ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட அவரது நாவல் My Story நான் வாசித்திருந்தேன். படைப்பாளுமையைத் தாண்டி, தாயின் கனிந்த முகம். கான் சாகிப் அடுத்துச் செய்த நேர்காணல் BLITZ ஆசிரியர் ஆர்.கே.கரஞ்சியா. முதலெழுத்துக்களை ஒத்துப் பார்க்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அவர் Best Dressed Indian என அக்காலத்தில் புகழப் பெற்றவர்.

எனது நற்பேறு கான் சாகிப் காரை விற்றுவிட்டார். அவருக்கு வேலை நெருக்கடி இல்லாத நாட்களில் ‘மனசு போல அலைந் திருக்கிறோம். சாபில்தாஸ் மேல்நிலைப்பள்ளி, சிவாஜி நாடக மந்திர், ரவீந்திர நாட்டிய மந்திர், பிரித்வி தியேட்டர் என மராத்தி, இந்தி, வங்காளி நாடகங்கள். ‘அத்ரக் கே பாஞ்சே’, ‘ஸாலி அர்தா கர்வாலி’, ‘புட்டானு சடாஜவானி’ எனும் சிந்தி, பஞ்சாபி நாடகங் கள் பார்த்துக் குலுங்கிய சிரிப்பு. சிலசமயம் சண்முகானந்தா சபா, டாட்டா தியேட்டர் என்று கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதம். மரைன் டிரைவ், சௌபாத்தி, ஜூஹு கடற்புறங்கள். அல்லது மஸ்ஜித் பந்தர், கர்னாக் பந்தர், அப்பலோ பந்தர், அல்லது மும்ப்ரா , தலோஜா எனும் மீன்பிடிக் கிராமங்கள்.

நகரில் எந்த மூலைமுடுக்கில் ஆனாலும் நெரிசலான, சந்தடி யான, தூசுதும்பான சூழல் ஆனாலும் அங்கிருந்த முஸ்லிம் உணவு விடுதிகளின் சுவை குறித்து என்னையும் அலைக்கழித்து நடப்பார். சுக்கா ரொட்டி, டால் ஃபிரை, வெங்காய எலுமிச்சைத் துண்டு களே ஆனாலும் அவற்றில் தனித்துவம் இருக்கும். கோஷ் சாப்பிடு வதானால் அவர் இந்து, கிறிஸ்துவக் கடைகளில் உண்பதில்லை. ஹலால் செய்திருக்க மாட்டார்கள் என்று.

அவருக்கு இருபத்திரண்டு வயதிலேயே திருமணம் ஆகி விட்டிருந்தது. ஆங்கிலம் போதிக்கும் மனைவியும் இரு மக்களும். எனக்கோ, பம்பாய்க்குப் பெண் தரத் துணியாத வெள் ளாளக் குடும்பங்களில் தப்பிக்கொண்டிருந்தனர். எட்டு வருடங் கள் காதலித்துத் திருமணம் செய்தவர் கான் சாகிப். அதாவது பதினான்கு வயதில் இருந்து. எனினும் தான் பட்டாணிய இனம் என்றும் மனைவி லெப்பை வகுப்பு என்றும் அவருக்கு ஒரு கர்வம் இருந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில், வாடகைக்கு ஒரு ஃப்ளாட் பார்த்து, ஓட்டல் கம்ஃபர்ட் அறையைக் காலி செய்யலாம் எனும் உத்தேசத் தில் வீடு தேட ஆரம்பித்தோம். மாலை நேரங்களில், சயான், கிங் சர்கிள், மாதுங்கா, வடாலா என. வெளிப்படையாகவும் மறைமுக மாகவும் பெயர் கேட்டதுமே முகம் கறுத்தனர். “விடுயா, தர மாட்டானுவோ” என்றார் சலிப்பின் உச்சத்தில். எனது நண்பர் வட்டத்திலும் பலர், கான் சாகிபுடன் இயல்பாய்ப் பழக மறுத்த தில் அவருக்கு வருத்தம் உண்டு. தமிழ்ச் சங்க விழாவொன்றில் மனைவியுடன் வந்த நண்பர், அவளுக்கு கான் சாகிபை அறிமுகம் செய்து வைத்தவுடன் அந்த சீரங்கத்துப் பெண்ணின் முகம் காட்டிய மருட்சியும் ‘துலுக்கனா’ எனும் கேள்வியும் என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாதது.

அன்றிரவு நெடுநேரம் கான் சாகிப் சமாதானம் ஆகவில்லை .

பள்ளி விடுமுறைகளில் ஒரு மாதம் அவரது மனைவியும் குழந்தைகளும் பம்பாயில் வந்து தங்கிப் போவார்கள். ஒருமுறை அவர்கள் திரும்பியபோது, திருவனந்தபுரம் வழியாக ஊருக்குப் போகும் நான், துணையாகப் பயணம் செய்தேன். பம்பாயில் இருந்து ஆம்பூர் வரை முப்பது மணி நேரம்.

திரும்பி வந்த முதல் சந்திப்பில், கான் சாகிப் சொன்னார் காட்டமாக “ஓ மாகி சூத் பூஸ்த்தா ஹை, எப்பிடி உன்னோட என் குடும்பத்தை அனுப்பினேன்னு?”

“யாரு?” | “துமாரா தோஸ்த் சகாபுதீன்.” உண்மையில் சகாபுதீன் அவருக்குத்தான் நண்பர். எனக்கு அறிமுகம், பழக்கம்.

நான் கேட்டேன். “ஆப் கியா போலே?”

“அவுர் கியா? என் நண்பன் பேர்லயும் நம்பிக்கை இருக்கு, என் பீவி மேலயும் நம்பிக்கை இருக்குண்ணேன்.”

“ஃபிர் கியா, சோடோ.”

ரமலான் நோன்பு தினங்களில், இஃப்தார் நேரத்தில் கம்ஃபர்ட் ஓட்டலுக்குப் போவேன். தொழுகை முடிந்து எனக் காகக் காத்திருப்பார். தாராவியில் இருந்து சைக்கிளில் நோன்புக் கஞ்சி வரும் இருவருக்கும் சேர்த்து. ஒருவேளை அந்த நோன்புக் கஞ்சிதான் இழுத்துக் கொண்டுபோய் நிறுத்திற்றோ? ஒன்றிரண்டு முறை நோன்பு தொடங்கும் ஸகரின் போதும் உடன் இருந்திருக் கிறேன்.

நோன்பு நாட்களில், இரவு முழுக்க, பம்பாயின் பிரதான பள்ளிவாசல்களைச் சுற்றிலும் கல்யாணக் கோலமாக இருக்கும். எத்தனை வகை, எத்தனை வாசம், எத்தனை நிறம், எத்தனை சுவை ?

எனக்கு காதுக்குள் பாடுவது போலிருக்கும். மதுரை சோமு. பம்பாய் சண்முகானந்த சபாவில் கேட்டது

“ஓ ராம நீ நாமம் ஏமி ருசி? ஏமி ருசிரா ராமா நீ எந்து ருசி”

பத்ராச்சல ராமதாசர் சாகித்யம், பூர்வி கல்யாணி ராகம். இராமனின் சுவையை வியந்து, வியந்து, வியந்து பாடியது. ஆழ்வாரின் மனோபாவம் தான் – உண்ணும் நீர், தின்னும் வெற்றிலை யாவும் நாராயணா எனும் நாமம். இரவு முழுக்க பார்த்தும் கேட்டும் வாசனை பிடித்தும் தின்றும் நடக்கையில் – யாரோ மகான் ஒருவர் சொன்னது போல – இறைவன் ஏழைகளுக்கு ரொட்டி வடிவில் வருகிறான். பசித்தவனுக்கு உணவும் இறையனுபவம் தான். ஆனால் அதைப் பசித்தவன் மட்டுமேதான் பெறவும் இயலும்.

கான் சாகிப் கையில் காசிருந்தால் என் பைக்குள் என் கை போகாது. அவர் கையில் காசில்லை எனில் என் சீசன் டிக்கட் முதற்கொண்டு அடமானம் தான். ஜப்பான் போய் வந்தபோது எனக்கு ‘சாக்கே’ வாங்கி வந்தார். அரிசியில் செய்த மது அது. ஆரம் பத்தில் எனக்கதை எப்படிக் குடிக்கவேண்டும் என்று தெரியாது. சோடாவா, தண்ணீரா, லைம் கார்டியலா? ஆன் த ராக்ஸா? பின்பு தெளிவாயிற்று, பீர் போல அப்படியே குடிக்கவேண்டும் என்று.

அவர் அறை மூலையில் சாம்பிளுக்காக வந்த, பதப் படுத்தப்பட்ட, பல் வகை ஆட்டுத் தோல்கள் கிடக்கும். வெள் ளாடா, செம்மறியா, குரும்பையாடா, கம்பளி ஆடா என்றெல் லாம் எனக்கு பேதம் தெரியாது. பதப்படுத்தப்பட்டு, தவிட்டுக் கலரில் சாயம் ஏற்றப்பட்டிருந்தாலும் அதற்கென ஒரு வாசம் உண்டு .

அந்தக் காலத்தில் அலுவலகம் போகும்போது என் கையில் எப்போதும் ஒரு ரெக்சின் பை இருக்கும். பம்பாயில் தமிழ்ப் பார்ப் பனப் புரோகிதர் பலரும் வைத்திருந்தது போல. ரெக்சினுக்கு தீட்டுக் கிடையாதாம். விளையாட்டாகக் கான் சாகிப் அதைத் தூக்கி விசிறுவார். அதனுள் பெரும்பாலும் ஒரு புத்தகம், ஒரு பருவ இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், மதியம் சாப்பிட என ஏதும் கொண்டுபோனால் அலுமினிய கன செவ்வக டப்பா.

ஒருநாள் ஓட்டல் அறைக்குப் போனபோது, தோளில் தொங்கப் போடும் விதத்தில், 14 x 10 அங்குல அளவில், தோற் பை ஒன்று எடுத்து முன்னால் எறிந்தார்.

“சுத்தமான பக்ரி கா சம்டா! எக்ஸ்போர்ட் குவாலிட்டி. தையல் கூலி மாத்திரம் நூற்றைம்பது கொடுத்தேன். பிக்காரி ஸாலா, இனி அந்த ரெக்சின் கையைக் கடாசு.”

என் தோளுக்கு அந்தப் பை வந்து முப்பதாண்டுக்கும் மேலாயிற்று. எழுத்தாள, வாசக நண்பர்கள் கவனித்து இருக்கக் கூடும், என் தோளில் தொங்கியதை. தருமமிகு சென்னையில் வலப்பக்க விலாவில் நீளமாக பிளேடு போட்டான் ஒருவன். அண்ணன் அதைத் தைத்துக் கொடுத்தார். கோவை வந்த பிறகு ஒரு முறை மராமத்து செய்தேன். என்னுடன் அந்தத் தோற்பை, தோட் பை, மராத்தியம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், சோனார் பங்களா, ஆந்திரம், கர்நாடகம், கோவா, தேனி ருந்து மழை பொழியும் தீந்தமிழ் நாடு, கடவுளின் சொந்த தேசம் கேரளம், பாண்டிச்சேரி என பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்திருக்கிறது. சுக்காய்க் காய்ந்த முரல் கருவாடு, காஜூ ஃபென்னி, சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி வீடியோ கேசட் எனப் பலவும் சுமந்திருக்கிறது. கண்டக்டர் பை என நண்பர்கள் பகடி செய்திருக்கிறார்கள்.

காலம் என்பது கறங்கு, காட்டு ஓடை, மழைப் புயல், கோடைக் கானல்.

காலி செய்துவிட்டு சென்னை வந்தார் கான் சாகிப். நான் கோவைக்குப் பெயர்ந்தேன். தோல் மண்டிகளும் அலுவலகங் களும் தட்சண மாற நாடார் மகமைக் கட்டிடங்களும் இருந்த பெரியமேடு குறுக்குச் சந்து ஒன்றில் முதல் மாடியில் அவர் அலு வலகம். ஆள் நடக்க இடம் விட்டு தோல் மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்கும். ஆளுக்கு ஒரு பாய் விரித்து, தலைமாட்டின் தோல் வாசனை காற்றாட விடிய விடியப் பேசிக்கொண்டிருப்போம். ஈண்டு பகிர்ந்து அளிக்க இயலாத ஒரு சுவை ஊற்று அது.

எப்போதாவது மேலும் ஒரு குப்பி பீர் கேட்டால், “ஸாலா, பீவோ, பீக்கே மரோ” என்பவர் சுத்தமாய்க் குடியை நிறுத்தி இருந் தார். ரோத்மான்ஸ், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் புகைப்பது இல்லை. வெள்ளிக்கிழமை ஜமாத் முடிந்து ரயில் பிடித்து ஆம்பூர் புறப் பட்டுச் சென்று, திங்கள் முற்பகலில் திரும்புவார்.

நீண்டகாலம் குடி இருத்த நீரிழிவின் தாக்கம் முகத்தில், உடலில், நடையில் தோற்ற ஆரம்பித்தது. இன்சுலின் போட்டுக் கொண்டிருந்தார். எனினும் சிறுநீரகங்கள் தோற்றுக் கொண்டி ருந்தன.

பம்பாயில் இருந்தபோது ஒருமுறை சொன்னேன். “கான் சாகிப், ஒருமுறை கிராண்ட் ரோடு போகணும்.”

“தெனமுந்தானே வெஸ்டர்ன் ரயில்வேலே போயிக்கிட் டிருக்கே ?”

“அதைச் சொல்லல்லே நான்.” “ஓ! ஜக்மார்னே கேலியே! கந்தா ஹை ஸாலா தும்.”

“எனக்கு அந்த இடங்களைப் பாக்கணும், போதும், வேற ஒண்ணும் வேண்டாம்.”

“அதுக்கு தில் வேண்டாமா? ஓ, துமாரா பாஸ் கஹாங்?”

பல்லாண்டு பம்பாய் வாழ்க்கையில் கேள்விப் பட்டிருந்தேன். ஃபால்க் லேண்ட் ரோடு, நவால்கர் லேன், பீதாம்பர் கல்லி காமாட்டிப்புரா என சிவப்பு விளக்குப் பகுதிகளை. லோயர் பரேலில் மொரார்ஜி கோகுல்தாஸ் மில் -II பார்த்து விட்டுக் குறுக்கு பாதையில் பிரமல் மில்லுக்குப் போகும்போது கொஞ்சம் ஆந்திராக்காரிகள் சாட்டின் பாவாடை யும் பாடியும் மட்டும் போட்டுக்கொண்டு தத்தம் குடிசை வாசல் களில் நிற்பார்கள். அழைப்பு இருக்கும், ஆனால் அடாவடி இருக்காது. |

சயானில் இருந்து அறுபத்தாறு பிடித்து லேமிங்டன் ரோட்டுக்குப் பயணமானோம். மாடி பஸ், முன் சீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தவாறு. டிக் டிக் என ஒலி எழுப்பி கொண்டு கண்டக்டர் வந்தார்.

“ஒனக்குத் தெரியுமாய்யா? பெஸ்ட் கண்டக்டர் ஒரு நாளைக்கு பஸ்சுக்கு உள்ளேயே பதினாறு கிலோமீட்டர் நடக்கான். ஆயிரத்து முந்நூறு பயணிகளைப் பாக்கான்.”

டெல்லி தர்பார் ஓட்டலுக்குப் பின்புறம் நாலைந்து நான்கு மாடிக் கட்டிடங்கள். டெல்லி தர்பார், நகரின் முக்கியமான உணவு விடுதி. தினமும் நாலாயிரம் கோழிகள் அறுபடுவதாகச் சொல்வார்கள்.

கான் சாகிப்புக்கு ஒரு ஆளுமை உண்டு. நடக்கும் தோரணை, பார்க்கும் விதம், கண்ணாடியினுள் உருளும் பெரிய கண்கள். ‘கியா ஹை?’ என்ற அதட்டல். பார்க்கும் ஆசை எனக்குத்தான் என்றாலும் நான் கூசிக்கூசி நடந்தேன். கறுப்பு, புதுநிறம், சிவப்பு, வெளுப்பு என எல்லா நிறங்களிலும் நின்றுகொண்டிருந்தனர். ஏற்றிக் கட்டப்பட்ட முலைகளும் தொப்பூழுக்குக் கீழே இறக்கிக் கட்டப்பட்ட பாவாடையும்… அடிவயிற்றுப் பரப்பு ஆலிலைபோல் பரந்திருந்தது. தோள் தெரியும் சோளி அல்லது பாடி. கண்ணுக்கு அஞ்சனம், கன்னத்தில் செம்மினுக்கம், கொண்டையில் பூ, வாயில் மிட்டா பான், உதட்டுச் சாயம்…

‘தில்லானா தில்லானா, நீ தித்திக்கின்ற தேனா’ என்றொரு சாய்வு இடுப்பு நிலை. எனக்கு நெஞ்சில் திக் திக்’ என்று அடித்தது. இரண்டு கட்டிடங்கள், எட்டுத் தளங்களையும் சுற்றி வந்தோம்.

“காய் சேட், பைட் தூஸ் கா?” “பஸ் கியா?”

“சலோனா அண்ணா … பைட்டோ !”

என ஆந்திர, மராத்தி, உ.பி., நேப்பாளிக் கொஞ்சல்கள். நெஞ்சு படபடப்பாக இருந்தது.

“என்னய்யா? ஆத்மா சாந்தி ஆச்சா?” என்றார் கான் சாகிப். முன்னிரவு எட்டு மணி ஆகிவிட்டது. டெல்லி தர்பாரில் முழுக் கோழி தந்தூரி, பியாஸ் ரைத்தா, ரொட்டி, சலன்.

கடைசியாக, கடைசி என்று தெரிந்திராமலேயே பெரியமேடு போனபோது, அவர் குடும்பமும் இருந்தது. பி.காம் படிக்கிற மகள், பத்தாவதில் மகன்.

வாரம் இரண்டு டயலிசிஸ், உப்பில்லாமல் உணவு, அளந்து குடிநீர். நொந்து போய்விட்டது மனது.

வழக்கமாய், பம்பாயில், ஓட்டல் அறையில் பாய் விரித்து, சுற்றி அமர்ந்து நாங்கள் சாப்பிடுவது நினைவு வந்தது. தலையில் கர்ச்சீப் போட்டு, தண்ணீர்த் தம்ளரைப் பிடித்திருந்த இடது கையை வலது கையால் தாங்கிக் குடித்து…

“நீ நமக் போட்டுக்கையா!” என்றார்.

“வேண்டாம் கான் சாகிப். இண்ணைக்கு நீ சாப்பிடுவதை நானும் சாப்பிடுகிறேன்.”

இருவருக்கும் கண்கள் கலங்கின. நாட்கள் எண்ணப்பட்டு விட்டனவா என குடும்பத்தினருக்கும் உள்மனம் ஓங்கி ஒலித்தது. அவர் அடிக்கடி சொல்லும் கவிதை வரியொன்று – யாவர் வீட்டு முற்றத்து நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம் ஒன்று ஓடுகிறது கப்ருஸ்தானுக்கு.

சாப்பிட்டு முடிந்ததும் உள் அலுவலக அறையின் கதவைச் சாத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.

“உங்கிட்டே சொல்ல்ல்லே … ரொம்ப நாளா மத்தவனுக்கு தம் இல்லே! முட்டுக் கொடுக்கதுக்கு கண்ட கண்ட மாத்திரை… ரெண்டு கிட்னியும் போச்சு… பாய், ஒரு விளம்பரத்தையும் நம்பாதே! எந் தப்புத்தான்…”

அவரது பெரிய கண்கள் கலங்கிப் பாய்ந்தன. பெரிய கனத்த சோடாப்புட்டிக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார். பம்பாயில் எனக்கு முதலில் அறிமுகமான கான் சாகிப் அல்ல இது. கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாய ஒதுக்கம் கொண்ட வேறேதோ மானுடன்!

சஞ்சய் கான் படம் ‘திப்பு சுல்தான்’ பார்க்க அன்று இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கியவரல்ல. என்னை விட கணக்க்கு ஒரு குப்பி பீராவது அதிகம் குடிக்க வேண்டும் என வாசிக்கு விரல் உயர்த்தியவர் அல்ல. இரண்டு டால் ஃபிரை வாங்கி மொத்தமாய்ப் பீங்கான் தட்டில் கவிழ்த்து, தலைக்கு ஒரு லோஃப் பிரட் பிரித்து வைத்து வெங்காயம் பச்சை மிளகாய் கடித்துத் தின்ற வரும் அல்ல . முங்கக் குடித்துவிட்டு உறங்கியவனைப் பாயோடு கரகரவெனச் சேர்த்து இழுத்துச் சுவரோரம் போட்டவரல்ல. பம்பாயின் நவீன நாடக முயற்சிகளில் நடித்துப் பங்காற்றிய வரல்ல. ஃப்ளோரா ஃபவுண்டன் பக்கம் வேலையிருந்தால், நான் வேலை முடித்து வரும் வரை, வரவேற்பறையில் காத்துக் கிடந்தவர் அல்ல.

கையறு நிலையில் இரு கையும் நீட்டி, குதாவிடம் வாழ்நாள் யாசித்து நின்ற ஜீவன் ….

வழக்கம் போல் தோள் தழுவி, “குதா ஹாஃப்பீஸ்” சொல்லி விடை கொடுத்தார். இருவர் புறமுதுகிலும் சொட்டி நனைத்த சோகத் துளிகள். திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.

புறப்படுமுன், வெள்ளையில் இள நீல ஒற்றைக் கோடுகள் போட்ட சங்கு மார்க் லுங்கியொன்று தந்தார் புதியதாய். அண்மை யில் கோலாலம்பூரில் கிராண்ட் சீசன்ஸ் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்தபோது கட்டி இருந்தேன், கவனித்தீர்களா ஜெய மோகன்?

அதன்பிறகு கான் சாகிபை நான் பார்க்கவில்லை. உயிருடனோ, மையத்தாகவோ!

அந்தத் தோற்பைக்கும் முப்பத்திரண்டு வயது ஆகிறது. ஓரங்கள் வெளிறி , நைந்து, தையல் விட்டு, உள்ளே நட்டக்குத்தற போடுகிற பேனா ஒழுகிக் கீழே விழுந்துவிடுகிற அளவு நான்கு மூலைகளிலும் ஓட்டைகளுடன்.

எல்லோரும் எறிந்து விடச் சொல்கிறார்கள். ஆனால் புறத்தே, ஸ்தூலமாய் நான் சுமக்கும் கான் சாகிப் அது. போன வாரம், கோவை – ராஜவீதி அஞ்சு முக்கில், தோற்பைகள் பெட்டி கள் சீர்திருத்தும் கடையொன்றில் முன் நின்றிருந்தேன். தோள் பையைக் காட்டி, அதைப் பிரித்து வெட்டி, சின்னதாகவேனும் ஒரு பவுச் செய்து தரமுடியுமா எனக் கேட்டேன். அடுத்த வாரம் வரச்சொல்லி இருக்கிறான்.

– ஆனந்தவிகடன் தீபாவளி மலர், நவம்பர் – 2010.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *