உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 4,157 
 

இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது ‘மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது’ என்கிற செய்தி சர்வ சாதாரணமாக நம் காதுகளில் விழுகிறது. ஒரு தந்தையைப் போல் நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்து கொள்கிறாரே என்று நாம் நொந்து கொள்வதுதான் சமீப காலமாக நம் அனுபவம்.

தருமபுரியில் லளிகம் ஒரு சிறிய கிராமம். அங்கு அரசினர் கோ-எஜுகேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஆங்கில டீச்சராக இருக்கிறார் எஸ்தர். மிகவும் மரியாதைக்குரியவர். பண்பானவர்.

பள்ளிக் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாகப் பேசுவார்; எளிமையாகப் பாடம் நடத்துவார்; நிறைய ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொடுத்து மாணவ மாணவியரை ஆங்கிலத்தில் பேசச் செய்வார். யாரையும் அடிக்க மாட்டார். படிக்காத அல்லது வீட்டுப் பாடம் செய்யாத மாணவர்களை திட்டாமல், ஏன் செய்யவில்லை என்பதை அறிந்து, படிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு அன்பாகப் புரிய வைப்பார்.

எஸ்தர் டீச்சரின் சுறு சுறுப்பும்; அறிவுத்திறனும்; நேர்மையும் பிற ஆசிரியர்களுக்கு அவரிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தன.

பள்ளியின் தலைமை ஆசிரியர் நமச்சிவாயம், மற்ற பெண் டீச்சர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி ஏகத்துக்கும் ஜொள்ளு விடுவார். ஆனால் எஸ்தர் டீச்சரிடம் மட்டும் பண்புடன் விலகி நிற்பார்.

அன்று திங்கட்கிழமை காலை…

அசெம்பிளி முடிந்ததும் பள்ளிக் குழந்தைகள் அவரவர் வகுப்பறைக்குச் சென்றனர். தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தன்னுடைய அறையில் வந்து அமர்ந்தார். பியூன் உள்ளே வந்து. “சார்… எஸ்தர் டீச்சர் உங்களைப் பார்க்க வெளியே காத்திருக்கிறார்…” என்றான்.

“வரச் சொல்.”

எஸ்தர் டீச்சர் உள்ளே வந்தார்.

“ப்ளீஸ் சிட் டவுன் மேடம்.”

எஸ்தர் தலைமை ஆசிரியருக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்தார்.

“நம் பள்ளியின் ஆசிரியர் ஒருவரே கல்வி பயில வரும் ஸ்டூடென்ட்ஸ்களிடம் ஒழுக்கக் கேடாக, தவறாக நடந்து கொள்வது நமக்கு மிகப் பெரிய அவமானம்…”

“என்ன சொல்ல வருகிறீர்கள் மேடம்.?”

“ஆம். நம்முடைய பள்ளி ஆசிரியர் பரமசிவம் சார், அவரிடம் கல்வி பயிலும் ஸ்டூடென்டிடம் செக்ஸ் வைத்துள்ளார்…இது மிகவும் வேதனையான விஷயம். விசாரணைக்குப் பின், அவரை நீங்கள் உடனடியாக நம் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும்…”

“எதை வைத்து இந்தக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துகிறீர்கள்?”

“சென்ற சனிக்கிழமை பள்ளி முடிந்து மதியம் ஒரு மணிக்கு மேல், மற்ற மாணவர்கள் வீட்டிற்கு சென்றபிறகு, தன் வகுப்பறையிலேயே அவர் செக்ஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்… அதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டூடென்டும் உடந்தை…”

“இது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“சென்ற சனிக்கிழமை எட்டாம் வகுப்பு ‘ஏ’ பிரிவில் பதினோரு மணியிலிருந்து பன்னிரண்டுவரை எனக்கு ஆங்கில வகுப்பு… அது முடிந்து நான் வெளியேறியதும், பரமசிவம் சார் சயின்ஸ் பாடத்தை பன்னிரண்டிலிருந்து ஒரு மணிவரை அதே வகுப்பில் தொடர்ந்தார்… பள்ளி ஒரு மணிக்கு முடிந்ததும், அரைநாள் விடுமுறையில் மாணவர்கள் உற்சாகமாக வீட்டிற்கு திரும்பினர். எல்லோரும் வெளியேறியதும், வகுப்பறையின் கதவுகளை மூடிவிட்டு பரமசிவம் குறிப்பிட்ட அந்த ஸ்டூடென்டுடன் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டார். பள்ளியின் பியூன் முனுசாமி இரண்டு மணிக்கு மேல்தான் ஒவ்வொரு வகுப்பறையாக பூட்டிக்கொண்டு வருவான் என்பது பரமசிவத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் தைரியமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்… அவரை நம் பள்ளியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்…”

“சரி… இதற்கு என்ன ஆதாரம்?”

“ஆதாரம் என்னிடம் இருக்கிறது. என்னுடைய மாணவர்கள் என் வகுப்பில் எப்படி பிஹேவ் பண்ணுகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமலேயே படம் பிடித்து, பின்பு அவர்களிடமே அதை லேப்டாப்பில் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த நினைத்தேன். அதற்காக ஒரு புதிய முயற்சியாக ரகசியக் காமிரா பொருந்திய ஒரு பேனாவை வகுப்பறை ஜன்னலில் மறைவாக வைத்தேன்… மூன்று மணி நேரங்கள் ஓடும் அந்த ரகசியக் காமிராவை என் வகுப்பு முடிந்ததும் பன்னிரண்டு மணிக்கு நான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அன்று எடுத்துச் செல்ல மறந்து சென்று விட்டேன்….”

“அப்புறம்…”

“அந்த ரகசியக் காமிரா பரமசிவம் சயின்ஸ் க்ளாஸயும் கவர் பண்ணி, ஒரு மணிக்கு மேலும் தொடர்ந்து, இரண்டு மணிவரை ஓடி நின்றுவிட்டது.”

“புரிகிறது…”

“டீச்சர்ஸ் ரூமில் இருந்த எனக்கு, இரண்டு மணி வாக்கில் காமிரா நினைவுக்கு வர, உடனடியாக எட்டாம் வகுப்பு ‘ஏ’ பிரிவை நோக்கி விரைந்தேன்… அப்போது பரமசிவமும் அந்த ஸ்டூடென்டும் அந்த வகுப்பறையை விட்டு வெளியேறுவதை நான் பார்த்தேன்…”

“………………………”

“அதை மிக இயல்பாக எடுத்துக்கொண்டேன். அவர்கள் சென்றபிறகு நான் வகுப்பறைக்குள் நுழைந்து, அந்த ரகசியக் காமிரா உள்ளடக்கிய பேனாவை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.”

“முதலில், மாணவர்களை அவர்களை அறியாமல் ரகசியக் கேமிராவில் படம் பிடித்தது உங்களுடைய தவறு….”

“சாரி சார்… ஆனால் நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று…”

“சரி, அந்தப் பேனா தற்போது எங்கே? உங்கள் கணவருக்கு, அல்லது வேறு யாருக்கேனும் இந்த விஷயம் தெரியுமா?”

“யாருக்கும் தெரியாது. பேனாவை தங்களிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன். இதை தாங்கள் லேப்டாப்பில் போட்டுப் பார்த்துவிட்டு, என்னுடைய குற்றச்சாட்டை உறுதி செய்து கொண்டவுடன், உடனடியாக ஒழுக்கக்கேடான பரமசிவத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும்.”

“நல்லது… நான் லேப்டாப்பில் பார்த்துவிட்டு முடிவு செய்கிறேன். அதுவரை தாங்கள் மெளனம் காக்க வேண்டும்…”

“எத்தனை நாட்கள்?”

“அடுத்த திங்கட்கிழமை வரை…”

எஸ்தர் டீச்சர் அந்தப் பேனாவை தன்னுடைய ஹான்ட்பேக்கிலிருந்து எடுத்து நமச்சிவாயத்திடம் கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் வெளியேறினாள்.

நமச்சிவாயம் உடனே தனது லேப்டாப்புக்கு உயிரூட்டி அந்தப் பேனாவை அதில் சொருகி பர பரப்புடன் அதை முழுதும் பார்த்தார். பரமசிவம் அசிங்கமாக நடந்து கொண்டதை உறுதி செய்துகொண்டார். எஸ்தர் டீச்சர் சொல்வது முழு உண்மை என்பதை உணர்ந்துகொண்டார்.

ஒருவாரம் சென்றது…

அடுத்த திங்கட்கிழமை எஸ்தர் டீச்சர் ஒன்பது மணிக்கு பள்ளிக்குள் நுழையும்போது மாணவர்கள் வெளியே கூடி நின்றனர். ஒரு விதமான பதட்டம் நிலவியது. கூடி நின்ற மாணவர்கள் எஸ்தர் டீச்சரை இளக்காரமாகப் பார்த்தனர்.

சில சீனியர் மாணவர்கள் “ஹிந்துக்களுக்கு எதிரியான எஸ்தர் டீச்சர் ஒழிக” என்று கோஷமிட்டனர்.

பியூன் ஓடிவந்து, “மேடம் நீங்க உடனே ஹெட் மாஸ்டரைப் பார்க்க வேண்டுமாம்…” என்று அவளை அவரின் அறைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றான்.

அங்கு தலைமை ஆசிரியரைச் சுற்றி சில ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். அதில் பரமசிவமும் இருந்தார்.

“எஸ்தர், நீங்க நம்முடைய பள்ளி மாணவர்களை நெற்றியில் சந்தனம், குங்குமம், வீபூதி இட்டுக்கொண்டு வகுப்பறைக்கு வரக்கூடாது என்று சொன்னீர்களாம்… இதுபற்றி என்னிடம் புகார் வந்துள்ளது… ஹிந்து அமைப்பினர் சிலர், மாணவர்களை மதச் சார்புடன் நடத்தும் உங்களின் நடவடிக்கையை கண்டித்து போராடப் போவதாக நம் பள்ளியை எச்சரித்துள்ளனர். நான் இது குறித்து உயர் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன்… அவர்கள் தீர விசாரித்து முடிவு செய்யும்வரை, உங்களை சஸ்பென்ட் செய்துள்ளோம்… நீங்கள் திரும்பிப் போகலாம்…”

எஸ்தர் அதிர்ந்தார்.

“சார், என்னிடம் கல்வி பயிலும் ஒவ்வொரு குழந்தையையும் கனிவுடன், நேர்மையாக நடத்துகிறேன். நான் இதுவரை ஜாதியைப் பற்றியோ, மதங்களைப் பற்றியோ அவர்களிடம் எதையும் பேசியதில்லை…”

“அதயெல்லாம் என்கொயரில சொல்லுங்க… இப்ப ஹெட் மாஸ்டர் டையத்தை வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க…” பரமசிவம் குறுக்கிட்டுச் சொன்னார்.

எஸ்தர் தலை குனிந்தபடியே வெளியேறினார்.

கணவன் பீட்டரிடம் அன்று மாலை நடந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லி வருந்தினாள். டிவி செய்திகளில் எஸ்தர் மாணவர்களிடம் மத உணர்வுகளைத் தூண்டி விட்டதுபோல் பரபரப்புச் செய்திகள் வெளியிட்டனர்.

பீட்டர் தருமபுரியின் ஜூனியர் விகடன் பத்திரிகை நிருபர்.

பீட்டர், “நீ தைரியமா இரு… உண்மை தோற்றதாக என்றைக்குமே சரித்திரம் கிடையாது. உனக்கு எங்கிருந்து அந்த ரகசிய காமிரா கிடைத்தது?”

“நீங்கள்தான் இன்வஸ்டிகேட்டிவ் ஜேர்னலிசம் செய்யும்போது உபயோகமாக இருக்குமே என்பதற்காக எடுத்து வந்து என்னிடம் சில மாதங்களுக்கு முன்பு காட்டினீர்கள்…”

“ஓ காட்… உன்னை யார் அதையெல்லாம் தொடச் சொன்னது? சரி அந்தக் காமிரா எங்கே?”

“ஹெட் மாஸ்டரிடம் கொடுத்தேன்… ஆனால் நல்ல வேளையாக அதை என் லேப்டாப்பில் பதிவு பண்ணி வைத்திருக்கிறேன்…”

பீட்டர் உடனே லேப்டாப்பைத் திறந்து அந்தப் பதிவை நிதானமாகப் பார்த்தான்.

நிருபர் தொழிலில் இருக்கும் அவனுக்கு எல்லாமே புரிந்தன.

ஜூனியர் விகடன் ஆசிரியரின் அனுமதியுடன், அன்று மாலை ஏழு மணிக்கு, நமச்சிவாயத்தைப் பேட்டி எடுக்க அவரது வீட்டிற்கு பீட்டர் சென்றான்.

அவர் பள்ளியில் இருப்பதாக அவரது மனைவி சொன்னாள்.

பீட்டர் பள்ளிக்கு விரைந்தான்.

பள்ளி எங்கும் ஒரே இருட்டு மயம். வகுப்பறைகள் வெறிச்சோடி குழந்தைகள் இல்லாத பள்ளி, மயான அமைதியில் இருந்தது.

ஹெட்மாஸ்டர் அறை அமைதியாக இருந்தது. உள்ளே மிக மெல்லிய வெளிச்சம்தான் இருந்தது. அறையின் கதவைத் தட்டினான். சிறிது நேரம் கழித்து ஹெட்மாஸ்டர் வந்து கதவைத் திறந்தார்.

“நான் ஜூனியர் விகடன் நிருபர்… என் பெயர் பீட்டர். உங்களைப் பேட்டிகண்டு பள்ளியின் பக்கம் இருக்கும் நியாயங்களை எழுத வேண்டும்…”

ஹெட்மாஸ்டர் அவனை உள்ளே அழைத்து டியூப்லைட்டை போட்டு அவனை அமரச் செய்தார். .

உள்ளே டிரவுசரில் சிவப்பாக ஒரு பையனும் தனியாக அமர்ந்திருந்தான்.

பீட்டருக்கு அவனை எங்கோ பார்த்த ஞாபகம்…

அட… இவன்தான் பரமசிவம் வாத்தியாருடன் ரகசிய காமிராவில் அசிங்கமாகப் பதிவானவன்.

இப்போது அந்தப் பையன் பள்ளியின் தலைமை ஆசிரியருடன் தனியாக…

அடச் சீ தெரு நாய்களா…

ஹெட்-மாஸ்டரிடம் நெஞ்சை நிமிர்த்தி, “நான் எஸ்தர் டீச்சரின் கணவன்… உங்களை ஜூனியர் விகடனில் நான் தோலுரித்து காட்டுவேன். கல்வி உயர் அதிகாரிகளிடம் நடந்த உண்மையை ஆதாரத்துடன் விளக்குவேன்…” என்று சொல்லி வெளியேறினான்.

அந்த வார ஜூனியர் விகடனில் ‘உள்ளும் புறமும்’ என்கிற தலைப்பில் அட்டைப்பட செய்தியாக நடந்த அசிங்கங்கள் அரங்கேறியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *