கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 8,494 
 
 

(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

முப்பத்தாறாம் அத்தியாயம்

அர்ச்சுனன் சுபத்திரையை மணத்தல்

பரீக்ஷித்து மகாராஜா சுகப்பிரம்ம ரிஷியை நோக்கி அர்ச்சுனன் சுபத்திரையை மணந்தது எப்படி என்று கேட்டான். 

ஸ்ரீ சுகர் கூறுகிறார்: 

வேந்தே, அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை புறப்பட்டு நெடுகிலும் போய் ஆங்காங்குள்ள தீர்த்தங்களில் நீராடி முடிவில் துவாரகை வந்தான். அங்கே பிரபாஸம் என்கிற தீர்த்தத்தில் நீராடினான். அவனுக்குக் கிருஷ்ணபகவா னுடைய தங்கை சுபத்திரையை மணந்து கொள்ளவேண்டு மென்கிற விருப்பம் இருந்தது. சுபத்திரையைத் துரியோதனனுக்குக் கொடுப்பதாகப் பலராமர் வாக்களித் திருக்கிறாரென்று இச்சமயம் அவன் கேள்விப்பட்டான். அவன் மனங்கலங்கி என்ன செய்வதென்று ஆலோசித்துப் பகவானைத் தியானித்தான். கண்ணபிரான் உடனே அவன் முன் தோன்றி அர்ச்சுனனை ஸந்நியாஸி வேஷம் பூண்டு பக்கத்திலிருந்த ரெய்வதகபர்வதக் குகையில் வந்து இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். 

அர்ச்சுனன் அவ்வாறே ஸந்நியாஸி வேஷம் பூண்டு ரெய்வதக பர்வதக் குகையிலிருந்தான். கொஞ்சநாளைக்குப் பி றகு ஓர் உற்சவம் வந்தது. யாதவர்கள் அந்த உற்சவத்தை ரெய்வதக பர்வதத்திற்கருகே நடத்துவது வழக்கம். அந்த வழக்கப்படி உற்சவத்தன்று சகல யாதவர்களும் அங்கே வந்தார்கள். யாவரும் அர்ச்சுன ஸந்நியாஸியைக் கண்டு தொழுதார்கள். பலராமருக்கு ஸந்நியாஸிகளிடம் அதிக அன்பு உண்டு. இவரும் அவரைக் கண்டதும் வந்தனம் செய்தார். கிருஷ்ண பகவான் இந்த ஸந்நியாஸியை நம்பலாகாதென்று கூறி, தூரவே நின்று விட்டார். பலராமர், “பெரியவர்களைத் தூஷியாதே” என்று சொல்லிவிட்டு ஸந்நியாஸியைத் துவாரகைக்கு வரும்படி அழைத்தார். அர்ச்சுனன் வர இணங்கினான். கிருஷ்ணமூர்த்தி பலராமரைப் பார்த்து, “ஸந்நியாஸியை ஊருக்குள் அழைத்துப் போவானேன்? வேண்டாம் ” என்று தடுத்தார். அவர் கேட்காமல், அர்ச்சுனனை அழைத்துக்கொண்டுபோய்ச் சுபத்திரை முதலியவர்கள் இருக்கும் கன்னியா மாடத்தருகில் ஒரு தோட்டத்தில் வைத்து, சாதுர்மாஸ விரதம் முடிகிற வரையில் அங்கேயே இருக்கும்படி வேண்டிக்கொண்டு, சுபத்திரையை அவனுக்குத் தொண்டு செய்துவரும்படி ஏற்பாடு செய்தார். 

சாதுர்மாஸ முடிவில் துவாரகைக்குச் சமீபத்திலுள்ள பிண்டாரக தீர்த்தத்தில் ஒரு பெரிய உற்சவம் நடப்பது வழக்கம். அந்த உற்சவம் வந்தது. அதை நடத்துவதற்காக யாதவர்கள் எல்லோரும் பிண்டாரக தீர்த்தம் சென்றார்கள். அர்ச்சுன ஸந்நியாஸியும் ஸுபத்திரையும் ஒரு யாதவ சேனாதிபதியும் போகவில்லை. அன்றிரவில் அர்ச்சுனன் சுபத்திரைக்குத் தன் சுயரூபத்தைக் காட்டித் தன்னை மணந்துகொள்ளச் சொன்னான். சுபத்திரை கிருஷ்ணமூர்த்தி யில்லாமல் மணம் செய்துகொள்ள முடியாதென்றாள். அர்ச்சுனன் கிருஷ்ணமூர்த்தியைத் தியானம் பண்ணினான். கோபாலர் உடனே அங்கே தோன்றி, அந்த இடத்திற்குத் தேவேந்திரன் பிரகஸ்பதி முதலியவர்களைத் தம் மகிமையினால் வருவித்து விதிப்படி அவர்களிருவருக்கும் விவாகத்தை நடத்தி முடித்தார். சுபத்திரைக்கு ரத ஸாரத்யம் தெரியும். ஒரு ரதத்தை ஸித்தம் செய்துகொண்டு, “இப்பொழுதே நீயும் அவளும் புறப்பட்டுப் பொழுது விடிவதற்குமுன் இந்திரப்பிரஸ்தம் போய்ச் சேருங்கள்’ என்று கிருஷ்ணர் கட்டளையிட்டுச் சென்றார். 

அர்ச்சுனனும் சுபத்திரையும் அவ்வாறே புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் அவர்களை ஒரு யாதவ சேனாதிபதி எதிர்த்தான். அவனைக் கிருஷ்ணபகவானே அனுப்பி யிருந்தாராதலால் அவன் அர்ச்சுனனைத் தடுத்துப் போர் புரிவதுபோலச் சற்று நேரம் பாசாங்கு செய்துவிட்டுத் திரும்பிவிட்டான். 

அர்ச்சுனன் பொழுது விடிவதற்குள் இந்திரப்பிரஸ்தம் போய்ச் சேர்ந்தான். 

இதையறிந்த பலராமர் அர்ச்சுனனிடம் பெருங் கோபங்கொண்டார். அவனைக் கொல்லவேண்டுமென்று பெருஞ் சேனையோடு புறப்பட்டார். புறப்படுகையில், “முதலில் கிருஷ்ணன் ஸந்நியாஸியை நம்பலாகாதென்று சொன்னான். அவன் பேச்சைக் கேளாமற் போனதனால் இந்தத் தொந்தரவு வந்தது. இப்பொழுது அவனைக் கலந்து பேசுவோம் ‘ என்று எண்ணிக் கிருஷ்ணரிடம் ஆலோசித்தார். அவர், “அண்ணா, அர்ச்சுனனோடு சண்டையிட்டு அவனைக் கொன்றால் நம் சுபத்திரைக்கு அது பெருந் துன்பமாகும். நாம் தோல்வி அடைந்தோமானால் அது நமக்குப் பெரிய அவமானம். அந்தச் சண்டையால் இருவிதத்திலும் நமக்குச் சங்கடம் இருக்கிறது. ஆகையினால் நாம் சண்டைக்குப் போவது உசிதமல்ல. நாமே விரும்பி நம் சுபத்திரையை அர்ச்சுனனுக்குக் கொடுத்ததாகக் கொண்டு, வேண்டிய சீர்வரிசைகளை அனுப்பிக் கொடுத்துச் சமாதானமாய்ப் போவதே நல்லது ” என்றார். பலராமருக்கும் மற்ற யாதவர்களுக்கும் அப்படிச் செய்வதே யுக்தமென்று தோன்றியபடியால் அவ்வாறே செய்து ஒருவிதமான குற்றம் குறைகளில்லாமல் நடந்துகொண்டார்கள். 

இன்னும் பகவான் செய்த லீலைகளைக் கேள்:- 

இதன் பின்பு பகவான் மிதிலா நகரம் போனார். அங்கிருக்கும் தம் பக்தரான சுருததேவர் என்னும் ஏழைப் பிராம்மணர் வீட்டில் தமது பரிவாரத்துடன் உண்டு அவரைத் திருப்தி செய்வித்தார். அதே சமயத்தில் அந் நகர அரசன் அரண்மனையிலும், தம் பரிவாரத்துடன் உண்டு அவனையும் திருப்தி செய்வித்தார். அப்பால் அவர்களிருவருக்கும் உபதேசம் செய்துவிட்டுத் துவாரகை வந்தார். 

துவாரகையில் வசித்த ஒரு பிராம்மணனுக்குக் குழந்தைகள் பிறந்து உடனுக்குடன் இறந்துகொண்டே வந்தன. இப்படி ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. அந்தப் பிராம்மணன் ஒவ்வொரு தடவையும் பகவானுடைய அரண்மனைக்குப் போய் முறையிட்டுப் பார்த்தான். அவனை ஒருவரும் கவனிக்கவில்லை. அவனுக்குப் பத்தாவது குழந்தை பிறக்கும் தருணத்தில் அர்ச்சுனன் துவாரகைக்கு வந்திருந்தான். அவனிடம் பிராம்மணன் தன் குறையைச் சொல்லிக்கொண்டான். அர்ச்சுனன், “நான் உன்னுடைய இந்தக் குழந்தையைக் காப்பாற்றுகிறேன்” என்று வாக்களித்தான். கிருஷ்ண பகவான், “நீ எப்படிக் காப்பாற்றுவாய்? உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அர்ச்சுனன், 

“நான் எப்படியாவது காப்பாற்றுகிறேன்” என்று கூறி அந்தப் பிராம்மணன் வீடு சென்று பிரசவ அறையைச் சுற்றிச் சரக்கூடு போட்டு வெகு ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் மாயமாக மறைந்து விட்டது.அர்ச்சுனன் இது என்னவென்று வியப்படைந்து பகவானிடம் போனான். பகவான், “நான் முன்பே சொல்லவில்லையா? உன்னால் என்ன செய்ய முடிந்தது?” என்று கூறிப் பரிஹாஸம் செய்தார். அாச்சுனன் தன் வாக்கைக் காப்பதெப்படி யென்று மயங்கினான். பகவான் உடனே அவனுடன் வைகுண்ட லோகம்போய் மகாவிஷ்ணுவை வணங்கினார். மகாவிஷ்ணு, “உங்களிரு வரையும் இங்கு வருவிக்கவே நான் பிராம்மணனுடைய பத்துக் குழந்தைகளையும் இங்கே கொண்டுவந்தேன். குழந்தைகளை இனிப் பிராம்மணனிடம் சேர்ப்பிக்கலாம் ” என்றார். பிறகு கண்ணபிரானும் அர்ச்சுனனும் குழந்தை களுடன் பூலோகம் வந்து பிராம்மணனிடம் அவற்றை ஒப்பித்தார்கள். அர்ச்சுனன் இப்பொழுது பிராம்மண னுக்கு மகாவிஷ்ணுவின் மகிமையை எடுத்துக் கூறினார். 

அப்பால் கோபாலர் எப்பொழும் தம்முடைய அரிய பெரிய செயல்களாலே தர்மத்தை உலகத்துக்கு விளக்கிக் கொண்டு சுகமாக இருந்தார். இப்படிப்பட்ட மகா மகிமை வாய்ந்த பகவானுடைய சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குச் சித்தசுத்தி உண்டாகும்; முடிவில் அவர் மோக்ஷ ஸாம்ராஜ்யமும் பெறுவர் – என்று கூறி முடித்தனர். 

முப்பத்தேழாம் அத்தியாயம்

யாதவர்களின் சாபம், உத்தவருக்கு உபதேசம்

துவாரகைக்கு அருகே பிண்டாரக தீர்த்த மென்றொரு தீர்த்தம் இருக்கிறது. இந்தத் தீர்த்தத்தில் பகவானைத் தரிசிப்பதன் பொருட்டுச் சில ரிஷிகள் வந்து தங்கியிருந்தார்கள். யாதவப் பிள்ளைகளிலே சிலர், சாம்பனுக்குக் கர்ப்பிணியைப்போல் வேஷம்போட்டு அழைத்துக்கொண்டு ரிஷிகளின் முன்புபோய் அவனைக் காட்டி, “இந்த மாதுக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்று கேட்டார்கள். ரிஷிகள், இவர்கள் பின்னே பரிகாசஞ் செய்ய எண்ணியிருப்பதை அறிந்து மிகுந்த கோபங்கொண்டு, ” உங்கள் குலத்தை முழுதும் நிர்மூலம் ஆக்கும் உலக்கையையே இவள் பெறுவாள்” என்று கூறினார்கள். 

இதைக் கேட்டதும் யாதவப் பிள்ளைகள் பயமடைந்து சாம்பனது வேஷத்தைக் கலைத்தார்கள். இரும்பு உலக்கை யொன்றிருந்தது. அதைக்கண்டு வியப்படைந்து என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டு உலக்கையுடன் ஊருக்குள் வந்து நடந்ததை யாதவப் பெரியவர்களுக்குச் சொன்னார்கள்; எல்லோரும் பயந்து அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக அரங்கொண்டு அராவி, கடலில் எறிந்தார்கள். கடைசியில் ஒரு சிறு துண்டு மிஞ்சியது. அது எவ்வளவு அராவியும் குறையவில்லை. அதையும் அவர்கள் கடலில் எறிந்துவிட்டனர். 

பிறகு கொஞ்சநாளில் அந்த இரும்புத் தூள்கள் எல்லாம் மண்ணோடு கலந்து கோரைப்புற்களாக. முளைத்தன. அராவ முடியாமற்போய் எறிந்துவிட்ட சிறு துண்டை ஒரு மீன் விழுங்கிவிட்டது. அதை ஒரு செம்படவன் பிடித்து அறுக்கையில் அந்த இரும்புத் துண்டு அவன் கையில் அகப்பட்டது. அதை அவன் ஒரு வேடனுக்குக் கொடுத்தான். வேடன் அதைத் தன் அம்பின் நுனியில் வைத்துக் கட்டிக் கூர்மையாய்த் தட்டிக் கொண்டான். 

இது இப்படி நடந்து முடிந்தபின், ஒரு நாள் வசுதேவர் நாரதரை வணங்கி, “மோக்ஷபதமான ஞானோபதேசம் செய்யவேண்டும்” என்று கேட்டார். 

நாரதர், பகவத் அவதார புருஷர்களுள் ஒருவரான ரிஷபயோகியின் பிள்ளைகளுக்கும், நிமி சக்கரவர்த்திக்கும் நடந்த சம்பாஷணையின் மூலமாக அவருக்கு ஞானோப தேசம் செய்வித்தார், “வஸுதேவரே, உமக்குப் பகவானே பிள்ளையாகப் பிறந்திருக்கிறபடியால் உமக்கு மேன்மை உண்டாவதில் தடையிராது” என்று கூறியருளினார். 

இதன் பிறகு பகவானைப் பார்க்கப் பிரம்மா முதலிய தேவர்களும் ரிஷிகளும் வந்து பகவானைப் பணிந்து வைகுண்டம் வரும்படி அழைத்தனர். கிருஷ்ணர், “என் காரியம் முடிந்துவிட்டது. யாதவர்களுக்கும் முடிவு வந்து விட்டது. நீங்கள் போங்கள். விரைவில் உங்களைத் திருப்தி செய்விக்கிறேன்” என்று கூறி அவர்களை அனுப்பினார். 

அப்பால் துவாரகையில் பல அப் சகுனங்கள் தோன்றின. அதனால், ரிஷிகளின் சாபம் பலிக்கும் என்று யாதவர்கள் தெரிந்துகொண்டார்கள். பகவான் அவர்களைப் பார்த்து, “இனி நாம் இங்கிருப்பது கூடாது. பிரபாஸ தீர்த்தம்போய்த் தான தர்மாதிகளைச் செய்து நம் பாபங்களைத் தொலைப்போம்” என்று கூறினர். யாதவர்கள் அப்படிச்செய்ய உடன்பட்டார்கள். 

அப்பால் துவாரகாநாதர் தனித்திருக்கையில் அவரிடம் உத்தவர் போய் வணங்கி, “உம்மை விட்டுப் பிரியச் சமயம் வந்துவிட்டதே” என்று துக்கித்தார். கண்ணபிரான் அவரைத் தேற்றி மகாராஜனுக்கும் தத்தாத்திரேயருக்கும் நடந்த சம்பாஷணையின் மூலமாக உபதேசம் செய்வித்தார். 

தத்தாத்திரேயர், “பூமி,வாயு, ஆகாசம்,நீர்,நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், தேனீ, சந்திரன்,சூரியன், விட்டில், யானை, கருவண்டு, மான், மீன், பிங்களை என்னும் தாஸி, மீன்கொத்தி, குழந்தைகள், குளவி, புழு ஆகிய இவைகளையே நான் குருவாகக்கொண்டு உபதேசம் பெற்று மேன்மை அடைந்தேன் ” என்றார். 

யது மகாராஜன் அதை விளக்கும்படி கேட்டான். தத்தாத்திரேயர் கூறுகிறார் :- 

“பூமியை நாம் எவ்வளவு வெட்டி உழுது வருத்திய போதிலும் அது நமக்கு வேண்டிய பழங்களைக் கொடுக்கக் கூடிய மரங்களை வளரச்செய்கின்றது. அவைகள் வெட்டுந் தோறும் வளர்ந்து நமக்கு நிழலையே கொடுக்கின்றன. மலைகளும் அவ்வாறே நமக்கு வேண்டியவைகளைத் தருகின்றன. ஆதலால் பூமியினிடமிருந்து பரோபகாரம், பொறுமை முதலியவைகளைத் தெரிந்துகொண்டேன். 

காற்று, துர்க்கந்தமான வஸ்துக்களை அடித்துக் கொண்டுபோகிறது. ஆயினும் துர்க்கந்தம் அதிற் சம்பந்தப் படுவதில்லை. அதுபோல் பிரபஞ்ச விஷயங்களின் மத்தியி லிருந்தாலும் ஞானிகள் அவற்றிற் சம்பந்தப்படாமல் இருப்பார்கள் என்று தெரிந்துகொண்டேன். 

ஆகாயத்தில் ஓடியாடி வரும் மேகங்களை ஆகாயம் உள்ளே அடங்கிக்கொண்டு அதன் உள்ளும் வெளியும் எங்கும் சம்பந்தமில்லாமலே பரவியிருக்கிறது. இதனால் பரப்பிரம்மத்தோடு இரண்டறக் கலந்த ஞானிக்கு ஆத்மா இவ்வாறு எங்கும் பரவி நிறைந்திருக்கிறது என்பது தெரியும் என அறிந்துகொண்டேன். 

ஜலம் தன்னை அண்டினவர்களைப் பரிசுத்தப்படுத்து கிறது. ஆனால் அது அதனால் மாசடைவதில்லை. இது போலவே ஞானிகளும் பிறரால் மாசடைவதில்லை. அவர் களாலே பிறர் பரிசுத்தமடைவார்கள் என்பதை உணர்ந்தேன். 

சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருந்தாலும், அதனால் யாதொரு குறைவும் அடையாதிருப்பதுபோல், ஞானிகளும் காமக்குரோதாதிகள் ஆத்ம தர்மமல்ல வென்றும், அவைகளால் ஆத்மாவுக்கு யாதொரு கேடு மில்லை என்றும் இருப்பார்கள் என்பதை உணர்ந்தேன். 

சூரியன், கடல்நீரை ஆவியாகும்படிச் செய்து மழை யாக்குகிறான். அவன், தான் ஒருவனாகவே இருந்தும் நீர் நிலைகளிலும் அலைகளிலும் வெவ்வேறாகப் பிரதிபிம்பிக்கி றான். அதுபோல் ஞானிகள் சகல விஷயங்களையும் கிரகிப் பார்கள். ஆனால் அவர்கள் அவைகளில் தாக்கற்றிருந்து தம்மிடம் வருபவர்களுக்குக் கொடுப்பார்களென்றும், ஆத்மா பாமரர்களுக்குப் பலமாகத் தோற்றினாலும், ஞானிகளுக்கு அது ஒன்றாகவே தெரியும் என்றும் உணர்ந்தேன். 

ஒரு மரத்தில் ஓர் ஆண் புறாவும், ஒரு பெண்புறாவும் வெகுகாலமாக வாழ்த்துவந்தன. அவைகளுக்குச் சில குஞ்சுகள் உண்டாயின. ஒரு நாள் அவை இரைதேடப் போயிருந்தன. அப்பொழுது வேடன் வலைவீசிக் குஞ்சுகளைப் பிடித்துவிட்டான். அதைத் தாய்ப் பறவை அறிந்தும் துக்கப்பட்டுத் தானும் அந்த வலையிலே போய்ச் சிக்கிக்கொண்டது. பிறகு ஆண் பறவையும் அவ்வாறே துக்கமடைந்து அந்த வலையிலேபோய்ச் சிக்கிக்கொண்டது. இதனால் மக்கள் மனைவியிடத்தில் கொள்ளும் பற்றே நாசத்திற்குக் காரணமென்று உணர்ந்தேன். 

மலைப்பாம்பு அசையாமல் ஓரிடத்திலே படுத்துக் கிடக்கும். அதன் அருகே ஏதாவது வந்தால் அது அதை இன்னதென்று கவனியாமற்கூடப் புசிக்கும் ; இல்லா விட்டால் ஆகாரமில்லாமல் கிடக்கும். இதுபோலவே ஞானியும் இருப்பான் என்று உணர்ந்தேன். 

கடலில் நதிகளெல்லாம் வந்து கலக்கின்றன. கலந்த போதிலும் அது மாறுவதில்லை; அவற்றையெல்லாம் தன் மயமாக்குகிறது. அது குறைவதுமில்லை; மிகுவதுமில்லை. அதுபோல் ஞானிகள், உலகவிஷயம் எது வந்து தங்களை அண்டினாலும் அதனால் விகாரப்படாமல் இருப்பார்கள். எதையும் தம்மய மாக்கிக்கொண்டு அவைகளின் கெட்ட குணங்கள் பயன்படாம லிருக்கும்படிச் செய்வார்கள் என்பது தெரிந்துகொண்டேன். 

விட்டில் பூச்சி விளக்கில் ஆசைகொண்டு அதில் விழுந்து இறக்கிறது. அதுபோல் உலகத்தில் மானிடர் களும் விஷய சுகங்களில் மயங்கி விழுந்து அழிகிறார்கள் என்று உணர்ந்தேன். 

தேனீ, மலர்கள்தோறும் சென்று தேனைச் சேக ரிக்கிறது.ஆனால் மலர்களைக் கெடுப்பதில்லை. அதுபோலவே ஞானிகள் வீடுகள்தோறும் சென்று ஒருவரையும் வருத்தாமலே உணவையேற்று உண்கிறார்கள். அவர்கள் சேர்த்து வைப்பதில்லை. சேர்த்துவைத்தால் தேனிக்கள் சேர்த்து வைத்து நாசமடைவது போல் நாசமடைவார்கள். இதனையன்றி,தேனீ அநேக மலர்களி லிருந்து தேனைக் கிரகிப்பதுபோல் ஞானிகள் அநேக சாஸ்திரங்களிலிருந்து உண்மைகளை தேடி அடைவார்கள். இவற்றையும் உணர்ந்தேன். 

யானைக் கூட்டங்களுள், பழகிய யானை சென்று அவைகளிலொன்றைத் தொட்டுத் தன்னிடம் ஆசை காட்டி அதனைப் பாகனிடம் கொண்டுவந்துவிடும். இதனால் ஸ்பரிச சுகத்தில் ஆசைவைப்பது கூடாது என்று கண்டேன். 

வண்டு, தாமரை மலரின் வாசனையில் ஈடுபட்டு நாள் முழுவதும் அதிலேயே கிடந்து, பிறகு அஸ்தமனவேளையில் அது மூடிக்கொள்ளும்போது அதில் அகப்பட்டு இறக்கிறது. இதிலிருந்து வாசனையில் ஈடுபட்டால் அபாயம் வருமென்று உணர்ந்தேன். 

வேடர்கள் குழல் ஊதக் கேட்டு, மான்கள் அவர்களைத் தொடர்ந்து வலையில் அகப்படுகின்றன. இதனால் சப்தத்தில் ஈடுபடுவதும் தவறென்று உணர்ந்தேன். 

மீன், தூண்டில் முள்ளிலிருக்கும் சிறிய உணவிற்கு ஆசைப்பட்டுப் பிடிபடுகின்றது. இதனால் நாக்கின் சுவையில் ஆசை கொள்வதும் தவறென்று உணர்ந்தேன். 

பிங்களை யென்னும் தாசி, பணத்தாசை கொண்டிருந்தாள். ஒருநாள் ஒருவரும் அவளை விரும்பி வந்து பணம் கொடுக்கவில்லை. அன்றிரவு அவள் வெகு நேரம் விழித்து எவரேனும் வருவாரென்று எதிர்பார்த் திருந்தாள். அவள் அப்பொழுது, அந்தோ, நான் இந்த ஆசையைப் பகவானிடம் வைத்து ஆராதித்திருந்தால் மனத்துக்கு எவ்வளவு சுகமிருந்திருக்கும்?’ என்றெண்ணிப் பணத்தாசையை விட்டொழித்துப் பகவானைத் தியானித் துக்கொண்டு சுகமாக நித்திரை போனாள். இதனால் விஷயங்களில் நிராசையே பரம சுகம் என்று உணர்ந்தேன். 

மீன்கொத்திப் பறவை, மீனைக் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து போகிறது. அதை அநேகம் பறவைகள் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன. அதனால் அப்பறவை மீனை எறிந்துவிடுகிறது. அதற்காக மற்றப் பறவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் பலர் விரும்பக் கூடிய ஒன்றை ஒருவர் விரும்புவதனால் சண்டை உண்டாகுமென்று உணர்ந்தேன். 

குழந்தைகளுக்கு அவமானமும் மானமும் தெரியவில்லை. அவர்களுக்கு மனச் சஞ்சலம் இல்லை. அது போலவே ஞானிகளும் ஒன்றிலும் பற்றில்லாதிருக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். 

ஒரு வீட்டில் ஒரு கன்னிகை இருந்தாள். அந்த வீட்டிற்குச் சில விருந்தாளிகள் வந்தனர். அந்த வீட்டில் அந்த வேளையில் அந்தக் கன்னிகையைத் தவிர வேறொருவரும் இல்லை. ஆகையினால் அந்தக் கன்னிகையே வந்தவர்களை உபசரிக்கவேண்டியதாயிற்று. வீட்டில் அரிசியில்லை. அதனால் அவள் நெல்லெடுத்துப் போட்டுக் குத்தினாள்; குத்தும்போது அவள் கைகளிலணிந்திருந்த வளையல்கள் சத்தப்பட்டன. அதனால் வந்தவர்கள் தன் வீட்டு நிலையை அறிந்து கொள்வார்களென்று அஞ்சிக் கைவளையல்களில் இரண்டைத் தவிர மற்றவைகளை உடைத்தெறிந்து விட்டுப் பழையபடி குத்தினாள். அப்படியும் சத்தமுண்டாகியது. பிறகு ஒரு வளையை உடைத்தெறிந்தாள்; சத்தம் உண்டாகவில்லை. இதனால், அநேகம்பேர் ஒன்றுகூடுவதனால் வீண் சண்டை சச்சரவு வந்துசேருமே யல்லாமல் வேறு பயனிராது; ஆதலால் ஏகாந்தமே இனிது என்று தெரிந்துகொண்டேன். 

அம்பு செய்வோன் வெகு கவனமாய்ச் சாணைபிடிக்க வேண்டும். தப்பினால் அம்பு கையைத் துண்டித்துவிடும். ஆகையினால் அவன் அதிலேயே கவனமாயிருப்பான். அப்படி ஒருவன் அம்புசெய்தான். அவன் பக்கமாக ஓர் அரசன் பரிவாரங்களோடு போனான். அது அவனுக்குத் தெரியவில்லை. இதனால், ‘மனோ நிரோதமுடையவனுக்கு உள்வெளிப் பிரபஞ்சங்களே கிடையா. அவை உண்டு என்கிற நினைப்பே அவனுக்கு இராது’ என்று தெரிந்து கொண்டேன். 

பாம்பு, கறையான் புற்றையே தனக்கு வீடாக்கிக் கொள்கிறது. அது மறைந்து வெகு ஜாக்கிரதையாய் உலாவுகிறது. இதனால், தனக்கென்று சொந்தமில்லாத மடம் சத்திரம் முதலியவைகளில் ஞானி தங்கவேண்டு மென்பதையும், பாம்பைப்போல் மறைந்து உலகத்தவரோடு அதிகமாகப் பழகாமலிருக்க வேண்டுமென்பதையும் உணர்ந்தேன். 

சிலந்திப்பூச்சி, தன்னிடமிருந்தே நூலை உண்டாக்கிக் கூடுகட்டி அதனைத் தானே காக்கிறது. அதைத் தான் உள்ளே அடக்கிக்கொள்கிறது. அதுபோல் பிரம்மமும் சிருஷ்டி ஸ்திதி லயகர்த்தாவாக விளங்குகிறது என்பது தெரிந்துகொண்டேன். 

குளவி புழுக்களை எடுத்துச் சென்று தன் கூட்டினுள் வைத்து அவற்றைக் கொட்டிவிட்டு அவற்றின்முன் போய்ச் சப்திக்கின்றது. அதையே நினைத்துக்கொண்டிருக்கும் புழு, காலக்கிரமத்தில் குளவியாய் விடுகின்றது. அது போல்,மனிதனும் விஷயங்களுக்குப் பயந்து பிரம்மத்தைத் தியானஞ் செய்வதால் முடிவில் பிரம்மம் ஆகலாம் என்று தெரிந்துகொண்டேன்” என்று கூறி மகாராஜனிடம் விடைகொண்டு சென்றார்.”ஆதலின், மனிதன் பலத்தை விரும்பாமலே தன் கருமத்தைச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவன் பந்தத்திலிருந்து விடுபடுவான். 

என்னை அடைவதற்கு ஸத்ஸங்கமே காரணமாகும். யோகம், வேதாத்தியயனம் முதலிய வழிகளால் என்னை அடைவது அரிது. ஆதலின் எதையும் நீ கவனியாமல் கோபிகைகளைப் போல் என்னிடம் அன்புகொண்டு சரணமடை. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்று பகவான் உத்தவருக்கு உபதேசித்தார். 

பிறகு அவ சரணாகதி விஷயத்தை விளக்கி யருளினார்; அப்பால் பகவத் தியான விஷயத்தையும் அணிமாதி சித்திகளையும் கூறினார். முடிவில் பகவான் உத்தவரைப் பதரிகாசிரமம் போய்க் கங்கையில் ஸ்நானஞ் செய்து காட்டிலுள்ள பழங்களைப் புசித்துத் தம்மைத் தியானஞ்செய்து பரமபதம் அடையும்படிக் கட்டளையிட்டு அனுப்பினார். 

முப்பத்தெட்டாம் அத்தியாயம்

ஸ்ரீகிருஷ்ணர் பரமபதம் செல்லல்

முன்பு பகவான் சொல்லியபடி யாதவர்கள் எல்லோரும் பிரபாஸ தீர்த்தம் சென்று ஸத்கருமங்களைச் செய்தார்கள், வெகு ஜாக்கிரதையாக இருந்துவந்தார்கள். இருந்தும், குடிவெறியால் அவர்களுக்குள் . கலகம் நேர்ந்தது. அதனால் ஒருவரை ஒருவர் சமுத்திரக் கரையில் முளைத்திருந்த கோரைப் புற்களைப் பிடுங்கிக்கொண்டு அடித்துக்கொண்டனர். கோரைப்புற்கள் அவர்கள் கையில் இரும்பு போன்ற கடின வஸ்துக்களாயின. ரிஷிகளின் சாபத்தினால் வந்த இரும்புலக்கை யல்லவா அவை? அவர்களுடைய கலகத்தை அடக்கப் பலராமரும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் முயன்றனர். அவர்களையும் யாதவர்கள் அடிக்கத் தொடங்கினார்கள். அதனால் அவர்கள் ஒதுங்கிவிட்டனர். பலராமர் தமது காலம் முடிந்துவிட்டதை அறிந்து சமுத்திரக்கரையில் உட்கார்ந்து பரம்பொருளைத் தியானம் செய்துகொண்டே தேகத்தை நழுவவிட்டுப் பரமபத மடைந்தார். பகவானும் தமது வாழ்நாள் முடிவடைந்ததைக் கருதி ஓர் அரச மரத்தடியிலே போய்ச் சதுர்புஜரூபத்தோடு வீற்றிருந்தார். அம்மூர்த்தியை வெகு தூரத்தில் வந்த ஜரன் என்ற வேடன் கண்டான். அவனுக்குப் பகவானது நான்கு புயங்களும் நான்கு கால்கள் போலவும், பகவானுடைய சிவந்த உள்ளங்கால் முகம்போலவும் தோன்றின. அதனால் அவன் பகவானை,மானொன்று படுத்திருக்கிறது என்று நினைத்து அவர்மீது அம்பெய்தான். அவன்தான் தன்னுடைய அம்பு நுனியில் ரிஷிகளுடைய சாபத்தினால் வந்த இரும்புலக்கையின் அராவமுடியாத துண்டைப் பொருத்தி வைத்துக்கொண்டவன். இப்பொழுது பகவான் மீது பாய்ந்த அம்பு அதுதான். அம்பு பகவான்மீது பட்டதும், வேடன் ஓடிவந்து பார்த்துப் பகவானாயிருக்கக் கண்டு, தான் அறியாமற் செய்ததை எண்ணி எண்ணி வருந்தினான். பகவான், “துக்கப்படாதே! நடக்க வேண்டியது நடந்தது” என்று கூறி அவனைத் தேற்றி அவனுக்கு நற்கதி அளித்தார். பிறகு அந்த இடத்திற்குப் பகவானுடைய சாரதி தாருகன் வந்தான். பகவான் அவனைப் பார்த்து, “நீ போய் உக்கிரஸேனர் முதலியவர் களிடம் உங்களுக்கு நேர்ந்த கதியைச் சொல். சிலநாட்களில் சமுத்திரம் பொங்கித் துவாரகையை அழிக்கப்போகிறது. ஆகையினால் நீயும் வைராக்கியமடைந்து சாந்தநிலையை மேற்கொள் ” என்று கூறி அனுப்பினார். 

தாருகன் அவ்வாறே சென்று உக்கிரஸேனன் முதலியவர்களுக்குச் செய்தி தெரிவித்தான். உக்கிரஸேனன், வசுதேவர் முதலியவர்களும் அவர்கள் மனைவிமார்களும் உடனே பிரபாஸம் வந்து பார்த்துத் துக்கம் பொறுக்க முடியாமலிருந்தனர். அர்ச்சுனன் அவர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்துமுடித்தான். பிறகு அவன் சில யாதவச் சிறுவர்களுடனும் சிறுமிகளுடனும் பரதகண்டம் வந்து அவர்களை ஓரிடத்தில் வைத்து வஜ்ரன் என்ற யாதவ குலத்தலைவனை அவர்களுக்கு அரசனாக்கி விட்டு இந்திரப்பிரஸ்தம் போனான். 

பிறகு பகவானைத் தரிசிக்கத் தேவர்கள் எல்லோரும் அந்த மரத்தடிக்கு வந்தனர்; மலர்மாரி பொழிந்து பகவானைத் துதித்தனர். பகவான் அவர்களைப் பார்த்ததும் தம் திரு நயனங்களை மூடிக்கொண்டார். உடனே அவர் தமது திருமேனியுடனே பரமபதம் சென்றார். அவர் சென்றது தேவர்களுடைய கண்களுக்கு மட்டுமே புலப்பட்டது. 

முப்பத்தொன்பதாம் அத்தியாயம்

யுக தர்மங்களின் விவரணம்

இதன் பின்பு சுகப்பிரம்மரிஷி பரீக்ஷித்துவுக்குக் கலி யுகத்தில் அரசாளப்போகிற அரசர்களைப்பற்றிக் கூறினார்; கலியுக தர்மம் இன்னதென விளக்கினார்: 

கலியுகத்தில் வருணாசிரம தருமம் குறைந்து கேவலம் வேஷ மாத்திரத்தில் நிலைத்திருக்கும். பலமுடையவனே பெரியவன். அவனே நியாயவாதி, தர்மிஷ்டன் என்று புகழப்படுவான்; பணக்காரனே உயர்ந்த குடிப்பிறப்பு உரிமைபெற்று விளங்குவான்.விவாகம் பெரியோருடைய சம்மதப்படி நடவாமல் மணமகன் மணமகளுடைய சம்மதப்படியே நடக்கும். மோசமே வியாபாரமாயிருக்கும். வாக்குச் சாதுரிய முடையவனையே நன்றாய்ப் படித்தவ னென்றும், ஸத்தியஸந்தனென்றும் நினைப்பார்கள். அருகிலிருக்கும் கோயில் குளங்களை விட்டுத் தூரத்தி லிருக்கும் கோயில் குளங்களையே விசேஷமாகக் கொள்வார்கள். தலைமயிரைப் பலவிதமாக வெட்டிக் கொள்வார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமே விருந்து செய்வித்து மகிழவார்கள். கீர்த்தியின் பொருட்டே தருமம் அநுஷ்டிக்கப்படும். ஜனங்களுக்கு வரிகள் அதிகப் படும். மழையில்லாமல் பஞ்சமும் உண்டாகும். அடிக்கடி சண்டைகளும் ஏற்படும். ஜனங்கள் உறுதியான மன முடையவர்களாய் இருக்கமாட்டார்கள். அவர்கள் அக்கிரமங்கள் செய்யத் தலைப்படுவார்கன். அதனால் அவர்களுக்குப் பலக்குறைவு உண்டாகும். ஆயுளும் குறையும். புருஷாயுள் ஐம்பதாய்விடும். ரிஷி ஆசிரமங்க ளெல்லாம் கிருஹஸ்தர்களுடைய வீடுகள்போ லாகும். பெண்சாதியைச்சார்ந்த உறவினரையே ஒவ்வொருவரும் தம்முடைய நெருங்கிய பந்துவாய் எண்ணுவார்கள் மருந்துகளுக்கும் வீரியம் குறைந்துபோகும். பொதுவாகக் கலியுகத்தில் ஜனங்களுக்குக் கஷ்டமே மிகுதியாகும். 

இந்தச் சமயத்தில் பகவான் சம்பளம் என்னும் ஊரில் விஷ்ணுயக்ஷன் என்னும் பிராம்மணனுக்குப் பிள்ளையாகப் பிறப்பார். இதுதான் கல்கி அவதாரம். 

அவருக்குத் தேவர்கள் ஒரு குதிரை கொடுப்பார்கள். அதில் அவர் ஏறிக்கொண்டு ஆங்காங்குச் சென்று தருமம் தவறி நடப்பவர்களைத் தண்டிப்பார். தண்டனை ஏற்படுங் காலத்தில் மனிதர்கள் மனக்களங்கம் நீங்கிச் சுத்தமடை வார்கள். இந்த அவதாரம் முடிந்ததும் கிருதயுகம் தொடங்கும். 

இந்த யுகத்தில் ஜனங்களெல்லோரும் ஸத்தியம், தயை, தவம், கொடை முதலிய உத்தம குணங்களோடு விளங்குவார்கள். எல்லாவற்றையும் அவர்கள் சமமாகப் பார்ப்பார்கள். பகவத் தியானத்தினால் இந்த யுகத்தில் முக்தி பெறுதல் கூடும். 

பிறகு திரேதாயுகம் உண்டாகும். அதில் தர்மம் நான்கில் ஒரு பங்கு குறைந்துவிடும். ஜனங்கள் பொறாமை, பொய், கோபம் முதலிய தீய குணங்களுக்கு இருப்பிட மாவார்கள்.ஆனால் அவர்களுக்குத் தவம் முதலியவற்றில் சிரத்தை இருக்கும். பிராம்மணர்கள் வேதசாஸ்திர ஞானமுடையவர்களாக இருப்பார்கள். யாகம், பகவத் ஆராதனம் முதலியவைகளால் இந்த யுகத்தில் முத்தி சித்திக்கும். 

அப்பால் துவாபர யுகம் உண்டாகும். அதில் தர்மம் பாதி குறைந்துவிடும். க்ஷத்திரியர்கள் அக்காலத்தில் விருத்தியாவார்கள். அவர்கள் வேதசாஸ்திர விற்பன்னராய் வீளங்குவார்கள். ஸத்கர்மங்களை அனுஷ்டித்துக்கொண் டிருக்கிற இல்லற வாழ்க்கையிலேயே இருப்பார்கள். அந்த யுகத்தில் பகவத் கைங்கரியத்தினாலே முக்தி யுண்டாகும். 

அதன் பிறகு கலியுகம் உண்டாகும். இந்த யுகத்தில் தர்மம் கால் பங்காகக் குறைந்துவிடும். பிறகு வர வர அதுவும் குறைந்து போய்விடும். ஜனங்கள் தகாத வழியிலே சென்று கஷ்டப்படுவார்கள். குழந்தைகள் அதிகமாகப் பிறக்கும். ஸ்திரீகள் தங்கள் கற்புநிலை தவறி நாணமொழிந்து அலைவார்கள். அவர்களிடம் திருட்டு முதலிய தீய குணங்கள் குடிகொள்ளும். பிராம்மண க்ஷத்திரிய வைசியர் முதலியவர்கள் தங்கள் சுகத்தையே பெரிதாகக் கொள்வார்கள். துறவிகள் ஆசைக்குள்ளாகி அலைவார்கள். யஜமானன் வேலைக்காரன், குரு சிஷ்யன் இவர்களுள் மரியாதைக் கிரமம் வெளிக்கு மாத்திரமே இருக்கும். பொதுவில் ஜனங்கள் அவரவர் கர்மங்களை விட்டுப் பல வழியில் உழன்று திரிவார்கள். ஆனால் இந்த யுகத்தில் சுலபமான வழியில் முக்தி யுண்டாகும். பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்துவந்தால் போதும்- 

அப்பால் உலகமெல்லாம் பிரளயத்தினாலே அழியும். மறுபடியும் சிருஷ்டி உண்டாகும். பரீக்ஷித்து மகாராஜனே, கேள். பகவானுடைய உண்மைச் சொரூபத்தைக் கூறுகிறேன். பகவான் எங்கும் பரவியிருப்பவர் ; அழிவற்றவர். மரணம் என்பது உண்மையானதல்ல; தேகம் அநித்தியமானது; ஆத்மா அழிவற்றது. இதையறிந்து நடப்பவனே பரம்பொருளோடு கலப்பான். ஆகவே மனத்தைச் சஞ்சலப்பட் விடாமல் உன் ஆத்மாவைத் தியானஞ்செய்து பரம்பொருளை அடை. தக்ஷகன் உன்னை வந்து கடிப்பான். கடித்தபோதிலும் உன்னைக் கொல்ல முடியாது. ஏனெனில் நீ மரணத்திற்கு அப்பாற்பட்டவனாய் விடுகிறாய். 

இவ்வாறு கூறி மரணத்தை ஜயிக்கும்படி அநுக்கிரகம் செய்துவிட்டு, சுகர் ரிஷிகளுடன் புறப்பட்டு நெகிடுலும் சஞ்சாரம் செய்யச் சென்றார். 

நாற்பதாம் அத்தியாயம்

பரீக்ஷித்து மோக்ஷமடைதல்

சுகப்பிரம்மரிஷி சென்ற பிறகு பரீக்ஷித்து அவர் உபதேசித்தபடியே தியானம் செய்யத் தொடங்கினான். அவன் மனம் பரம்பொருளில் லயித்துவிட்டது. அவனுக்குத் தேக நினைப்பே இல்லாமற் போய்விட்டது. இப்படி யிருக்கையில் தக்ஷகன் பிராம்மண உருவங்கொண்டு அரசனைக் கடிப்பதற்காக வந்தான். வழியில் காசியபன் என்ற பிராம்மணனொருவன் தன் மந்திர பலத்தினால் தக்ஷகன் விஷத்தை இறக்கி அரசனைப் பிழைப்பித்து அவனிடம் பெரும் பரிசுபெற வேண்டுமென்ற நோக்கத் துடன் வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட தக்ஷகன், ‘நீர் யார்? எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான். காசியபன் தான் செய்யப்போவதை மறைக்காமல் சொன்னான்.தக்ஷகன் இந்த அந்தணனுக்கு விஷத்தை இறக்கும் தன்மை உண்டாவென்று அறிய எண்ணி, “ஸ்வாமி, நீர் ஏன் போய் இதில் கஷ்டப்படுகிறீர்? தக்ஷகன் கொடிய விஷமுள்ள பாம்பு. அது கடித்தால் அந்த விஷத்தை உம்மால் இறக்கமுடியாது. வீணாசை ஏன்? திரும்பிப் போம் ” என்றான். 

காசியபன். “நான் எப்படிப்பட்ட விஷத்தையும் இறக்கிவிடுவேன். அந்தச் சக்தி எனக்குண்டு” என்றான். உடனே தக்ஷகன் தன் உண்மைச் சொரூபத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு மரத்தைக் கடித்து, “இதனை முன்போல் தழைக்கும்படி செய்யும் பார்க்கலாம்” எனவே, காசியபன் தன் கையிலிருந்த மந்திர ஜலத்தில் கொஞ்ச மெடுத்து மந்திரம் உச்சரித்து மரத்தின் சாம்பலின்மேல் தெளித்தான். தெளித்த மாத்திரத்தில், மரம் முன்போல் தழைத்து வளர்ந்தது. இதைக் கண்டதும் தக்ஷகன், “சரி, நீர் சாமர்த்தியமுடையவரே; ஆனால் பிராம்மண சாபத்தை மாற்றமுடியாது. உமக்குப் பொருள்தானே வேண்டும்? நான் தருகிறேன்; பெற்றுக்கொண்டு வந்தவழியே திரும்பி விடும்” என்று கூறி நாகரத்தினத்தைக் கக்கி அந்தணன் கையில் கொடுக்க அவன், ‘நமக்கேன் வீண் சங்கடம்? நாம் விரும்பியது நமக்குக் கிடைத்துவிட்டது’ என்றெண்ணிச் சந்தோஷத்துடன் திரும்பிவிட்டான். 

பிறகு தக்ஷகன் பிராம்மண ரூபங்கொண்டு பரீக்ஷித்து வினிடம் போய் அவனைக் கடித்தான். கடித்ததும் அவன் தேகம் அந்த விஷத்தினால் பஸ்மமாயிற்று. அவனுடைய ஆத்மா பிரம்மத்தோடு கலந்தது. 

அப்பால் பரீக்ஷித்துவினுடைய பிள்ளை ஜனமேஜயன் என்பவன், தன் தந்தை சர்ப்பத்தினால் இறந்தபடியினால் ஸர்ப்பங்களின்மீது கோபங்கொண்டு அவைகளையெல்லாம் அழிக்க ஒரு யாகம் செய்தான். அந்த யாககுண்டத்தில் சகல ஸர்ப்பங்களும் வந்து விழுந்து இறந்தன. ஆனால் தக்ஷகன் மட்டும் பயந்து இந்திரனுடைய கட்டிற்காலைச் சுற்றிக்கொண்டு ஒளிந்திருந்தான். யாக மகிமையானது தக்ஷகனைக் கட்டிலோடு யாக குண்டத்துக்கு நேரே அந்தரத்தில் கொண்டுவந்து விட்டது. அப்பொழுது அஸ்தீகர் என்னும் ரிஷி அங்கே தோன்றி, “போதும், இந்த யாகத்தை இப்படியே நிறுத்திவிடவேண்டும் ” என்று கேட்டுக்கொண்டார். அரசன் அவர் சொல்லை மறுக்க மனம் வராமல் யாகத்தை நிறுத்திவிட்டான். 

இவ்வாறு பாகவதம் முடிந்தது. பிறகு ஸுத புராணிகர் சௌனகாதி மகரிஷிகளுக்கு, வேதம் பிரம்மா வினிடமிருந்து வந்த வரலாற்றையும், வேதவியாஸர் வேதத்தை நான்கு வகையாகப் பிரித்ததையும், புராணங் களின் கணக்கையும், அவற்றின் லக்ஷணங்களையும் விளக்கி யருளினார். பிறகு மார்க்கண்டேயர் தவம் செய்ததையும் கூறியருளினார்:- 

மார்க்கண்டேயர் மிருகண்டு என்பவரின் புத்திரர். அவர் சிறுவயதிலேயே தவஞ்செய்து மரணபயத்திலிருந்து நீங்கினார். பிறகு ஒரு சமயம் அவர் மகாவிஷ்ணுவை நோக்கித் தவஞ்செய்து, “உமது மாயையை உள்ளபடி உணர வேண்டும்” என்று வரங் கேட்டார். பகவான் பிரத்தியக்ஷமாகி, “அவ்வாறே செய்வோம்” என்று வரமளித்து மறைந்தார். 

அப்பால் ஒருநாள் மார்க்கண்டேயர், புஷ்பபத்திரா நதிக்கரையில் உட்கார்ந்து ஜபம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது பெரிய புயல்காற்று அடித்தது. உடனே ஆகாயத்தில் மேகம் பரவிக் கவிந்துகொண்டு பெரு மழை பொழிந்தது. அப்பால் கொஞ்ச நாழிகையில் கடல்பொங்கி உலகமெல்லாம் பெருகிவிட்டது. அந்தப் பிரளயத்தில் மார்க்கண்டேயர் மாத்திரம் நீந்திக்கொண்டு தத்தளித்தார். பிரவாகம் அவரைக் கடலிற் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதில் ஒரு பெரிய ஆலமரம் மூழ்கியிருந்தது. அதன் நுனியில் ஓர் இலையில் ஒரு சிறு குழந்தை படுத்திருக்கக் கண்டார். அதனுடைய தேஜஸ் அவருடைய கண்களைக் கவர்ந்தது. அது புன்னகை செய்துகொண்டு தன் காற்பெரு விரலை வாயில் வைத்துச் சப்பிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் மார்க்கண்டேயருக்கு ஆனந்த முண்டாயிற்று. அதனால் அவர் பரவசமடைந்தார். பின் அதனருகே நீந்திக் கொண்டு போய் அதை உற்று நோக்கினார். உடனே ஒரு கொசுவின் உருக்கொண்டு அந்தக் குழந்தையின் மூக்கினுள் நுழைந்து வயிற்றுக்குள் போய்ப் பார்த்தார். வயிற்றில் அண்டபிண்ட சராசரங்கள் அனைத்தையும் கண்டு பிரமித்துப் பரவசரானார். 

உடனே திடீரென்று அந்தக் குழந்தையின் மூச்சு வழியே அவர் வெளியே வந்தார். வந்ததும் அந்தக் குழந்தையை நாராயணமூர்த்தியென உணர்ந்து ஆனந்த மடைந்து துதித்து அவரைக் கட்டிக்கொள்ளப் போனார். அக்கணமே பகவானுட்படச் சகல தோற்றங்களும் மறைந்தன. மார்க்கண்டேயர் முன்போல் புஷ்பபத்திரா நதிக்கரையில் வீற்றிருந்தார். 

இவ்வாறு பகவான் மார்க்கண்டேயருக்குத் தமது மாயா தரிசனம் செய்வித்தார். பிறகு மார்க்கண்டேயருக்குப் பரமசிவம் தமது தரிசனம் தந்து,”என்றும் மாறாப் பெரும் புகழுடன் விளங்கக் கடவாய்” என்று வாழ்த்தி மறைந்து அருளினார். 

இதை இவ்வாறு கூறியபின், தபுராணிகர் தந்திர மார்க்க ஆராதனைக் கிரமத்தையும், மகாவிஷ்ணுவின் விசுவரூபவர்ணனையையும், பகவான் சூரிய ரூபமாகவிருந்து உலகத்தைச் செழிப்படையச் செய்வதையும் கூறி யருளினார். பாகவத ஸாரம், வைதிகதர்ம ஸாரம் முதலியவைகளையும் விளக்கியருளி அவர் பாகவதத்தை முடித்தார். 

(முற்றும்)

– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *