வேலை… வேலையே வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 1,724 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைக்கோழி கூப்பிட்டதும் வழக்கம்போல் முழிப்புத் தட்டியது. தொழுவில் மாடுகள் மணியோசையும் அவைகள் கூளம் தின்னும் போது காடிப் பலகையின் சத்தமும் கேட்டது. 

கெங்கம்மா படுக்கையில் இல்லை; படுக்கையின் கதகதப்பு ஆறி ஜில்லிட்டிருந்தது. அவள் மாடுகளுக்குக் கூளம் போட்டுவிட்டு இன்னேரமெல்லாம் முற்றம் தெளித்து சாணிப்பால் கரைத்துக் கொண்டிருப்பாள். நாகையா புரண்டு படுத்தார். அடித்துப் போட்டது போல மேலெல்லாம் ஒரு அசதி போர்த்திக்கொண்டிருந்தது. கட்டிய வேட்டியைக் காதோடு சேர்த்து முக்காடிட்டுக்கொண்டு ஒருக்களித்துப் படுத்து, கைகளிரண்டையும் தொடை இடுக்கில் சொருகிக்கொண்டு, விட்ட தூக்கத்தைப் பிடிக்க முயன்றார். முற்றம் தெளிக்கும் சத்தம் கேட்டது. 

ராத்திரி போடவேண்டிய நாத்துக் கூளத்தை மண்போக நன்றாகத் தட்டியெடுத்து நாகையா வைத்துவிடுவார். ரெண்டுதரம் எழுந்து அவர் கூளம் போடமாட்டார்; அதை கெங்கம்மாவே செய்துவிடுவாள். மத்தி யில் இவருக்கு ஒரு தரம் ‘ஒண்ணுக்கு’ எழுந்திருப்பதே பெரிய காரியம்! 

கெங்கம்மா பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்துவிட்டாள். ரெண்டாங்கோழி கூப்பிட்டது. இனி அவள் தன்னைத் தூங்கவிட மாட்டாள்; எழுந்திருந்துவிட வேண்டியதுதான். எழுந்து வேட்டியைக் கட்டிக்கொண்டார். சுருக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணை லாந்தரைத் தூண்டினார். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டி ருந்தன. ரோகினி வழக்கம்போலப் பாயிலிருந்து உருண்டு விலகிப் போய் தரையில் ஒரு மூலையில் கொடுவாய் வழியத் தூங்கிக்கொண்டி ருந்தாள். அவளைப் பிரியத்தோடு எடுத்து படுக்கையில் படுக்கவைத் தார். தூளியில் கைக்குழந்தையும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. 

பருத்திமார் முடியினால் தொழுவைத் தூத்த ஆரம்பித்தார். தூத்த சாணியை அள்ளிப் பெரிய கூடையில் எடுத்து வைத்தார். அந்தக் கை களைத் தொழுவின் கல்தூணில் தேய்த்துத் துடைத்துவிட்டு, கோவணத்தை ஒரு தரம் இறுக்கிக் கட்டிக்கொண்டு, பழைய கோணிச் சாக்கை நாலாக மடித்து தலையில் போட்டுக்கொண்டார். கெங்கம்மா வந்து சாணிக் கூடையைக் கூடப்பிடித்துத் தலையில் தூக்கிவிட்டாள். 

தொழுக் குப்பையை எடுத்து முடித்ததும், கண்டாங்கிச் சேலையில் கிழித்த துண்டை வேட்டியின் மேல் இடுப்பில் சுற்றிக்கொண்டு பானை யில் நனையப்போட்டு வைத்திருந்த பருத்தி விதையை ஆட்டுரலில் போட்டு ஆட்ட ஆரம்பித்தார். ஆட்டும்போதே ‘இந்தப் பருத்தி விதையை ஆட்டுகிறது ஒரு பெரிய பாடு’ என்று அவர் மனசு முணங்கிக் கொண்டது. பருத்தி விதையை மெஷினில் கொடுத்து வைத்துக்கொண்டு இந்தத் தொல்லைபடாமல் பவுடராக்கி மாட்டுக்குக் கலக்கிவிட்டால் என்ன என்று நினைத்தார். 

மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தார். மனுசர்களில் உள்ளது போலவே மாடுகளிலும் புத்திகெட்டதும் உண்டும்! என்ன நொறநாட்டியம் பண்ணுகிறதுகள் இந்த மாடுகள். கலக்கி விட்டோம் குடிச்சோம் என்று உண்டுமா; சனியன்; ஒரு மாடு உப்பைப்போட்டு கலக்கிவிட்டால்தான் குடிக்கும். ஒரு மாட்டுக்கு ஊரலோடு காடித் தண்ணீர் விடவேண்டும். ஒரு மாட்டுக்குத் தவிடு. ஒரு மாட்டுக்குத் தனீ பருத்தி விதைப் பால். இன்னொரு மாட்டுக்குப் புண்ணாக்கும் ஊரல் கலந்த பருத்தி விதைப் பாலும். அடுத்த மாட்டுக்கு பருத்தி விதைத் தொக்கு கட்டியாக. மற்றதுக்கு அதோடு கம்பஞ்சோறு கலந்து பிசைந்து வைக்க வேண்டும். அதிலும் இந்தப் பால் மாடு இருக்கே; ரொம்பச் செல்லம். பால் கொடுக்கிறோம் என்கிற மேட்டிமை அதுக்கு ரொம்ம்ப! 

பால் மாட்டுக்கு மட்டும் தண்ணீர் காட்ட அவருக்குப் பொறுமை இருப்பதில்லை; அதை அவள்தான் காட்டி அடைக்கணும். கெங்கம்மா பால் மாட்டுக்கு ‘ஒரு அஞ்சலில்’ தண்ணீர் காட்டி விடுவாள். ‘பசுமாடுகளே ரொம்ப நுட்பமுடையதுகள்’. நம்முடைய ஆத்திரப் படுதல் பொறுமையின்மை இதுகளை எப்படியோ தெரிந்துகொண்டு விடுகின்றன! நிச்சயம் இவைகளுக்கெல்லாம் அவை பணிந்து போவதில்லை. 

அவருடைய அம்மா இருந்தபோது அடிக்கடி சொல்லுவாள். “ஓ நாகையா, மாடுகளுக்குக் கூளம் போட்டதும் அதுகளைத் தட்டித் தடவிக்கொடு. மனசோடு, பிரியமாய்த் தண்ணீர் காட்டு. முக்கியமாக தண்ணீர் காட்டும்போது கோபப்படாதே” என்று பாடிப் பாடிச் சொல்லியிருக்கிறாள். ஆனால் நாகையா தண்ணீர் காட்டும்போதுதான் மாடுகளுக்கு அடிவிழும். 

கெங்கம்மா கம்பம்புல் குத்தி, இடிக்க ஆரம்பித்தாள். அவளுடைய வலுவான ஒவ்வொரு உலக்கைப் போட்டுக்கும், வீட்டின் கதவுத் தாட்பாள் அதிர்ந்து சத்தம் கொடுத்தது. இப்படிக் கம்பம்புல் இடிக்கும் போதெல்லாம் நாகையா நினைப்பார், இந்த தானியத்தை மட்டும் சமைக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கிறதே! பேசாமல் மில்லில் கொண்டுபோய் அரைத்து வைத்துக்கொண்டால் எவ்வளவு செளகரியமாக இருக்கும்? இந்த அபிப்பிராயத்தை அவர் முதலில் வெளியிட்டபோது வீட்டுப் பெண்கள் சிரித்தார்கள். அம்மா மாத்திரம் அவருக்கு படும்படி பதில் சொன்னாள். “உலையை அடுப்பில் வச்சிக் கிட்டுதானே கம்பம்புல்லை இடிக்க ஆரம்பிக்கோம். இடிச்சி, கொஞ்ச நேரமாயிட்டாலுங்கூட சோறு காரல் ஆகி கசக்கவும் ஆரம்பித்து விடுமே. அரைச்சி வச்சிக்கிட்டு சமைக்கிறதாவது! அதென்ன நெல்லரிசியா!” 

ஆனாலும், இந்த அநியாயப்பாடு வேண்டாம். ஏதாவது ஒரு மாற்றம் செய்தே ஆகணும். உடல் தைரியத்தில் இந்த மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று எண்ணுவார் நாகையா. 

குழந்தைகள் படுக்கையிலிருந்து ஒவ்வொருத்தராய் எழுந்திருக்க. ஆரம்பித்தார்கள். ஆரோக்கியமான குழந்தைகள் சிரித்துக்கொண்டே எழுந்திருக்கின்றன. அனாரோக்கியமான குழந்தைகள் அழுது கொண்டே எழுந்திருக்கின்றன. நாகையா தம்பதிக்கு இரண்டு மாதிரி சளிலும் குழந்தைகள் இருந்தன. 

அடுப்பில் அவள் கம்பஞ்சோற்றைக் கிண்டிக்கொண்டே குழந்தை களை சமாதானப்படுத்தினாள். காப்பி போட்டு எல்லோருக்கும் தந்தாள். கைக்குழந்தைக்குப் பால் கொடுத்து இறக்கி கீழே விளையாட விட்டாள். 

எரியும் அடுப்புக்குப் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் கைக்குழந்தை, வேலைக்காரர்களான ஆடு மேய்க்கிறவன், மாடு மேய்க்கிறவன், குடிமகள், ஏகாலி இவர்களுக்குச் சோறு போடுதல், வீட்டைப் பெருக்குதல், ஓசி மோர் கேட்க வந்தவர்களுக்குக் கொடுத்தல், ‘வெளிக்கு’ போய்விட்டு வரும் குழந்தைகளுக்கு ‘கால்’ கழுவிவிடுதல் இப்படியாக அவள் ஒரு அட்டாவதானம் செய்து கொண்டிருந்தாள். 

காலை ஆகாரம் முடிந்து நாகையா உழவுக்குப் புறப்பட்டார். கெங்கம்மா தலையில் தண்ணீர் செம்புடனும் கையில் செடி வெட்டும் வாச்சாத்துடனும் அவருக்கு முன்னதாகவே புறப்பட்டுப்போய் புஞ்சையில் முள்ளையெல்லாம் பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து ஒரு இடத்தில் போட்டு தீ வைத்துப் பொசுக்கினாள். கற்களைப் பொறுக்கி தண்ணீர் போகும் தத்துகளில் போட்டாள். முள்செடிகளை யும், மஞ்சணத்தி, சாரணத்தி முதலிய செடிகளையும் வாச்சாத்துவால் தோண்டி வெட்டினாள். 

நாகையா வந்து கலப்பைகட்டி உழத் தொடங்கினார். அதற்கு முன்னால் இருவரும் ஒருவாய் வெற்றிலை போட்டுக்கொண்டார்கள். கஞ்சிக் கலயத்தை காக்காய் வந்து உருட்டிவிடாமல் இருக்க ஓர் இடத்தில் கொஞ்சம் மண் பறித்து அதில் கலயத்தைப் பதித்து வைத்தாள் அவள். இனி அவள் அவசரமாய்ப் புறப்பட்டுப்போய் ஆட்களை சத்தம் காட்டி கூட்டிக்கொண்டுபோய் தோட்டத்தில் அவர்களோடு சேர்ந்து களை வெட்டவேண்டும். மதியத்துக்கு வீட்டுக்குவரும் சாப்பாட்டு வேளையில், ராத்திரிக்குக் கிண்ட வேண்டிய களிக்கு கேப்பை திரித்து வைத்துவிட்டுப் போகவேண்டும். நாகையாவுக்கு அவள் செய்யும் வேலையும் அதன் நேரங்களும் அத்துபடி. நாளில் கொஞ்ச நேரம்கூட உஸ் என்று உட்காரமாட்டாள்: தூங்கும் நேரம்தவிர மற்ற நேரமெல்லாம் வேலைதான். தூக்கமும்கூட அவள் ஒரு வேலையாகத்தான் செய்கிறாள்! இப்படி ஏன் செய்ய வேண்டும்; எதுக்காகச் செய்யவேண்டும் என்று கேட்டால் அவளுக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒன்றுமட்டும் தெரிகிறது; வினாடிகூட வேலை செய்யாமல் இருக்கமுடியாது அவளால். 

சித்திரை மாசத்தின் கரிசல் காட்டு ஏறுவெயில் தாங்கமுடியாத தாய் இருந்தது. வியர்வை பெருகி வழிந்தது. மாடுகள் இளைத்தன. தூரத்தில் கானல் நீராகத் தெரிந்தது. இந்த வேனாவெயிலில் அவள் மற்ற பெண்களோடு நிறை போட்டுக்கொண்டு வேகமாய் களை வெட்டிக்கொண்டிருப்பாள். மாடுகளின் வாயிலிருந்து சொங்கு நுரை யாக வழிந்தது. காரணமில்லாமல் அவர் வலவனைத் தூண்ட தார்க் கம்பால் குத்தினார்; அடித்தார். 

தூரத்தில் ஓர் அண்டங்காக்கை கரைந்தது. அவர் எதிர்பார்த்த படியே அது கலயத்தைப் பார்த்து வந்தது. கோபத்தோடு ஒரு மண் கட்டியை எடுத்து அதை நோக்கி எறிந்தார். 


உழுதுவிட்டு அவர் சாயந்திரம் வீட்டுக்கு வந்தபிறகு கெங்கம்மா வரவில்லை, “அம்மா எங்கலே?” என்று கேட்டதற்கு “களை கொஞ்சந் தான் பாக்கி இருக்காம்; செதுக்கீட்டுத்தான் வருவாளாம்; சொன்னா” 

மாடுகளுக்குத் தண்ணிகாட்டி கூளத்தைப் போட்டார். விளையாடச் சென்றிருந்த குழந்தைகளும் பள்ளிக்கூடம் போயிருந்த குழந்தை களும் ஒவ்வொன்றாக வந்தன. கடையில் ‘வாங்கித் திங்க’ ஏதாவது – தானியமோ பருத்தியோ கொடுக்கச்சொல்லி கேட்டுக் குழந்தைகள் சிணுங்கின. நாகையா முகத்தை உம் என்று வைத்துக்கொண்டார். 

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கெங்கம்மா களை சுரண்டியுடன் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். சிரிப்புக்குக் காரணம் அவள் தெருவில் வரும்போதே வீட்டில் குழந்தைகளின் சிணுக்கட்டத் தையும் புருஷனின் எரிச்சலான சத்தத்தையும் கேட்டதுதான். கைக் குழந்தை அவளை நோக்கி ‘பறந்துகொண்டு’ வந்தது. அவசரமாக முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்தவள் முகத்தைத் துடைத்தும் துடைக் காமலும் குழந்தையை வாங்கிக்கொண்டாள். 

எல்லாக் குழந்தைகளுக்கும் வாங்கித்திங்க பருத்தி கொடுத்தனுப் பினாள். குத்துக்காலிட்டு முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந் திருந்த புருஷனின் முதுகுப்புறமாக அருகே வந்து உட்கார்ந்துகொண்டு குழந்தைக்குப் பால் கொடுத்தாள். நாகையாவின் மௌனம் அவளுள் புன்னகையை வரவழைத்தது. மெதுவாக புருஷனின் முதுகின்மேல் ஒருக்களித்துச் சாய்ந்துகொண்டு திரும்பி, அவருடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்கு அவர் நறுக்கென்று அவளை ஒரு கிள்ளு வைத்தார். வலியால் முகத்தை சுளித்துக்கொண்டு அவருடைய புஜத்தைப் பிடித்துத் தள்ளினாள். 

அவர் லம்பி கீழே சாயாமல் கையை ஊன்றிக்கொண்டார். தாயார் தகப்பனாருக்கு இடையில் நடக்கும் இந்த விளையாட்டை என்ன என்று தெரியாமல், காம்பிலிருந்து முகத்தைத் திருப்பி அதிசய்த்தோடு அவர்களைப் பார்த்தபோது குழந்தையின் தோளின் மேல் பால் சொட்டியது. 

குழந்தையை இறக்கி விளையாட விட்டுவிட்டு கெங்கம்மா திரும்பவும் பம்பரமாக இயங்க ஆரம்பித்தாள். கேப்பைக் களி கிண்டி கருவாட்டுக் குழம்பு செய்தாள். ஊர்ப் பொதுக்கிணற்றிலிருந்து தண்ணீர் சுமந்துகொண்டு வந்து பானைகளிலும் தொட்டிகளிலும் ரொப்பினாள். ஒரு நாளைக்குத்தான் கிராமத்தில் சம்சாரி வீட்டுக்கு எத்தனை குடங்கள் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கிறது. எருமை மாடுகளுக்கும் பசு மாடுகளுக்கும் உழவு காளைகளுக்கும் நாளைக்கு ரெண்டுதரம் குடிக்க தொட்டி தொட்டியாய் தண்ணீர் வேண்டும். குழந்தைகள் பெரியவர்கள் குளிக்கணும். குடிக்க, கைகால் முகம் கழுவ, பண்டபாத்திரங்கள் கழுவ, சை; சன்னத் தண்ணீரா சுமக்க வேண்டி யதிருக்கிறது. நாகையாவுக்கு வேலை இல்லாத நாட்களிலும் மனசு ஆரோக்கியமுள்ள நாட்களிலும், அவளோடு சேர்ந்து தண்ணீர் சுமப்பார். கோடை நாட்களில் – கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள காலத்தில் சுமந்தே தீரவேண்டும். இதனால் அவருக்கு உச்சந் தலையில் ஒரு ரூபாய் அகலத்தில் பொட்டல் விழுந்துவிட்டது. 

அனைவரும் குளிக்க பெரிய மடாவில் வென்னீர் காய்ச்சி முடிந்தது. கூட்டில் அடைய வந்த கோழிகளுக்குத் தவிடு போட்டுப் பிசைந்த கம்மஞ்சோற்றை வைத்தாள். நாய்க்கு சோறு போடப்பட்டது. கறவை மாடுகளில் பால் கறந்தாள். பூனைக்கு பாலும் சோறும் கலந்து வைத்தாள். குழந்தைகளைக் குளுப்பாட்டி, புருஷனுக்கு முதுகில் அழுக்குத் தேய்த்துவிட்டு, வேலைக்காரர்களுக்கெல்லாம் சோறு படைத்து, பிச்சைக்காரர்களுக்கும் போட்டு, யாவரும் உண்டு படுத்தபிறகு கெங்கம்மா குளித்து, சாப்பிட்டு அடுப்பங்கூடத்தை ஒதுங்க வைத்து காய்ச்சி ஆறிய பாலை இதம் பார்த்து உரைகுத்தி, மாடுகளுக்கெல்லாம் ஒருதரம் கூளம் போட்டுவிட்டு வந்து படுக்க வர ஊர் அரவம் ஒடுங்கிவிட்டது. 

புருஷன் பக்கத்தில் வந்து படுக்கையை விரித்தாள். லாந்தரை சுருக்குவதற்குமுன் நாகையா அவளை ஒரு தரம் பார்த்தார். அந்த முகத்தில் துளிகூட களைப்போ ஆயாசமோ இல்லை. எப்படி அவளால் இப்படித் திகழமுடிகிறது? அந்தக் கணத்தில் அவருக்குப் பளிச்சென்று மனசில் ஒன்று தட்டுப்பட்டது. ‘நாம் வாழ்க்கை வேறு வேலை வேறு என்று நினைக்கிறோம்; இவளோ வேலையே வாழ்க்கையாக விளங்குகிறாள்’. தன் அருகே தலைசாய்த்த தன் மனையாட்டியை இறுகப்பற்றி முகர்ந்தார். பூசுப் பொடியோ சோப்பு வாடையோ முதலிய எதுவும் இன்றி சுயம்பான, தனீ மனுஷி வாடைதான் அவளிடம் இருந்தது. 

– நீலக்குயில், டிசம்பர் 1974.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *