வேர்கள் வெளியே தெரிவதில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 924 
 
 

அந்த முதியோர் இல்லத்து வாசலுக்கு வந்த ராமனுக்கு லேசாக கண் கலங்க ஆரம்பித்தது பிள்ளை மனம் கல் தான்.

இல்லாவிட்டால் பெற்றவர்களை இந்த இல்லத்தில் சேர்க்க இயலுமா!

கடந்த சில மாதங்களாகவே மனைவி மீனாவின் போக்கு சரியில்லாததை அவனும் உணர ஆரம்பித்தான் .

உடல் தள்ளாமை காரணமாய் கிராமத்தை விட்டு தன் வீட்டிற்கு வந்த பெற்றோர்களை ராமன் ஒரு பாரமாகவே நினைக்கவில்லை.

ஆனால் மீனா முதலில் ஒழுங்காக இருந்தவள் பிறகு ஓரிரு வருடங்களில் சிறுசிறு சண்டை சச்சரவுகளுடன் அடியோடு மாறிப் போனாள்.

சில நாட்கள் முன்பு நிலைமை விபரீதம் ஆகிவிடும்முன்பு ராமன் வேறு வழி இல்லை என்று பெற்றோரை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

50 வயதிற்கு ராமனும் அரை முதியவன் தான் பெண் ஒன்றும் பிள்ளை ஒன்றுமாய் இரண்டு பெரும் இருபத்தி ஐந்து வயதிலும் இருபது வயதிலும் இருக்கிறார்கள்.

பழங்கள் ஹார்லிக்ஸ் அடங்கிய பாலிதீன் பையை ஞாபகமாய் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரைப் பூட்டினான் .

மாலைநேரம் ஆனதால் இல்லத்தின் வெளித்தோட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக முதியவர்கள் கூடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களில் தனிமையின் சோகமும் ஏக்கமும் தெரிவது போல இருந்தது.

பையுடன் அந்த புல் வெளியை ஒட்டிய கான்கிரீட் பாதையில் நடந்தான்.

“உன்னி கிருஷ்ணா எண்டமோனே” என்று மலையாளத்தில் கூறியபடி வேகமாய் நடந்து வந்த ஒரு வயதான பெண்மணி ராமனின் அருகில் போய் நின்று கொண்டு “சுகந்தன்னே ?”என்று பாசமும் பரிவுமாய் அவன் தலையை தடவி கேட்டாள்.

ராமன் தயக்கமும் குழப்பமாய் நிற்கும்போது இல்லத்து பணிப்பெண் ஓடி வந்து “அம்மா அம்மா! அவர் உங்கள் மகன் உன்னிகிருஷ்ணன் இல்லைமா வேறு யாரோ நீங்க அவருக்கு வழி விடுங்க” என்று வேறு புறம் அழைத்துச் சென்றாள்.

ராமனுக்கு அந்தப் பெண்ணை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது.

இதேபோன்று முதியோர் இல்லத்தில் பெற்ற மகன் நினைவுகளில் கடந்து தவித்து அதை வார்த்தைகளில் கூற இயலாமல் நடைப்பிணமாய் இன்னும் இன்னும் எத்தனை முதியவர்களோ!

அறை வாசலுக்கு வந்தவனை தாயின் குரல் வருடியது.

“ராமா! வாப்பா வா!” எழுபது வயதிலும் உடல் மெலிந்து தளர்ந்து இருந்தாலும் இன்னமும் மனதில் உறுதி இருப்பதை உணர்த்தும் குரல்.

“இன்னைக்கு நீ வருவேன்னு தெரியும் நானும் உங்க அப்பாவும் கடிகாரத்தை பாத்துட்டு இருக்கோம்” என்றாள்.

“ஆமா வீட்ல மினா குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?” என்று அம்மா கேட்டதும் ராமனுக்கு அடித்து துரத்திய தன் மனைவி பற்றி அக்கறையாய் கேட்கும் தன் தாயின் மீது பச்சாதாபம் ஏற்பட்டது.

இதற்கு என்ன பதில்சொல்வது!அப்பாவின் மௌனம் தேவலை போல் இருந்தது.

அவர் எதுவுமே பேசாமல் இருப்பதில் ஏதோ ஒரு தாக்கத்தை உனர முடிந்தது. அதையே தனக்கு தண்டனையாக ராமன் ஏற்றுக் கொண்டான்.

“ஆமா ராமா ஏதோ வசுமதிக்கு வரன் பார்த்து மெயில் போட்டியே அதுக்க்பதில் வந்ததா? வயசு 25 ஆகிறதுப்பா..நல்ல வளத்தியா இருக்கா. சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்”

“அம்மா! மாப்பிள்ளை வீட்ல போட்டோ எல்லாம் பார்த்து பிடிச்சுட்டு தான் எழுதி இருக்காங்க இரண்டு ஒரு நாளில் பெண் பார்க்க வருவதையும் எழுதி இருக்காங்க”

“நிஜமாவா! ரொம்ப சந்தோஷ செய்தி !இத நீ வந்ததுமே கண்டேன் சீதையை என்கிறமாதிரி சொல்லி இருக்க வேண்டாமா?” என்ற ராமனின் தாய் மகிழ்ந்து போனவளாய் “என் பேத்தி கல்யாணம் கூடி வரப் போறது எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று அக்கம் பக்கம் இருக்கிற முதியோர்களிடம் தெரியப்படுத்தினாள்.

ராமனுக்கு கண் பனித்து போனது. பெற்றவர்களை உடன் வைத்துப் பேண இயலாத தனது கையாலாகாத தன்மைக்கு தன்மீது கோபமாய் வந்தது.

அப்போது பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் ஒலித்தது எடுத்துப்பேசும் முன்பாக திரையில் whatsappபில் அவன் மனைவியிடம் இருந்து செய்தியும் வந்தது.

‘அவசரம் உடனே வீடுவரவும்’ என்று.

என்னமோ ஏதோ என்று குழப்பம்மேலிட. “ஆபீஸ் வேலை வந்திருக்கும்மா. அப்பா! அப்புறம் வரேன்”
என்று சொல்லிக் கிளம்பினான்.

உடன் வீட்டிற்கு ஓடி வந்தவனை எதிர்கொண்டாள் அழுதபடி வந்த மீனா.

“என்ன ஆச்சு என்ன ஆச்சு?” என்று கேட்டான் ராமன் அதிர்ச்சியுடன்.

“அய்யோ மோசம் போயிட்டோம். தன்னுடைய மாணவிகளோட போன டூர் இடத்துல தொழிலதிபர் விஸ்வநாத் மகள் ஊர்வசியுடன் நம்ம பெண் வசுமதியும் கடத்தப்பட்டிருக்கிறாங்களாம்” கதறினாள் மீனா.

ராமன் திடுக்கிட்டு நின்ற அந்தக் கணம் அக்கம் பக்கம் எல்லோரும் கதறல் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர்..

“கல்யாணத்துக்கு இடம் பார்த்துட்டு இருக்கிற பொண்ண கடத்தியிருக்காங்களே!”

“இனிமே எப்படிக்கல்யாணம் காட்சின்னு நடக்கும்?”

ஆளாளுக்குபேசிக்கொண்டு போனார்கள்.

தொழிலதிபர் அதட்டலில் பயந்து போலீஸ் தீவிரமாய்த்தேடி இருவரையும் மீட்டுவிட்டனர்.

ராமனுக்கும் மீனாவிற்கும் போன உயிர் திரும்பிவந்தது.தொழிலதிபர் மகள் கல்லூரி மாணவி. அவளைக் கடத்தும் போது கல்லூரிப் பேராசிரியையான வசுமதி அருகில் நிற்கவும் இருவரையும் சேர்த்துக் கடத்தி விட்டிருக்கின்றனர். எந்தவித சேதமுமின்றி இருவரும் காவல்துறையின் உடனடித் தேடலில் மீட்கப்பட்டனர்.

அன்று..

வசுமதியைப் பெண்பார்க்க வந்தவர்கள் விலாசம் தேடிவருகையில் அக்கம் பக்கத்துவீட்டு மனிதர்களால் வசுமதி கடத்தப்பட்ட விஷயமும் அவர்கள் காதிற்கு வந்துவிட்டன.

மாப்பிள்ளை பையனின் தாயார் சற்று தயக்கமுடன் கணவரைப் பார்த்து “என்னங்க பிக்னிக் போன இடத்துல கடத்தப்பட்டு மீண்ட பெண்ணாமே..சந்தேகப்படுகிற மாதிரி எதுவும் நடந்திருக்க கூடுமோ?” என்று கேட்டாள்.

“எதற்கு தீர விசாரிக்காமல் யாரையும் எதுவும் சொல்லக்கூடாது வாய மூடிட்டு வா” என்றார் பையனின் அப்பா கைலாசம். ஆனால். அவர் மனமும்சலனம் அடைந்து தான் போனது.

ராஜேந்திரன் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த அங்கேயே பணிபுரிகிற இளைஞன் ஊரார் பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் வசுமதியை நேரில் பார்க்கப் போகும் உற்சாகம் குறையாமல் அவர்களை தொடர்ந்தான்.

“வாங்க வாங்க” என்று மீனாவும் ராமனும் வரவேற்றனர்.

சோபாவில் அமர்ந்ததும் ராஜேந்திரனின் அப்பா கைலாசத்தின் கண்களில் ஹால் சுவரில் மாட்டி இருந்த அந்த புகைப்படம் அவரை உடனே யோசிக்க வைத்தது.

“ஆமாம்…அந்த போட்டோவில் இருக்கிற பெரியவர் யாருங்க?” என்று ராமனிடம் கேட்டார்.

ராமன் சட்டென “என் அப்பா! பெயர் நடராஜன் ஸ்கூல் டிச்சர்” என்றான்.

“திருவாரூர்பக்கத்துல அந்த திரு மேலூர் கிராமத்து வாத்தியார் தானே?”

“ஆமாங்க”

“அவர்கிட்ட தான் நான் படிச்சேன் அப்போ வசுமதி, நடராஜன் சாரோட பேத்தியா! பலே.. சார் இப்போ எங்கே இருக்கார்?”

“இப்போது…இப்போது…” என்று ஆரம்பித்த ராமன் “எங்களுடன் தான் இருக்கிறார்.. அம்மாவும் அப்பாவும் தீர்த்த யாத்திரை என்று வடக்கே போயிருக்கிறார்கள்” என்றான் சற்று தடுமாறும் குரலில்.

வசுமதி வந்து நின்றாள். பெண் பார்த்தல் நிகழ்ச்சி முடிந்தது.

“நடராஜன் வாத்யார் நேர்மையின் மறு உருவம் பாருங்க இன்னைக்கும் நான் நேர்மை நாணயமா மன உறுதியோடு மற்றவர்களை மதிக்கும் பண்புடன் இருக்கிறேன் என்றால் அதற்கு வித்திட்ட ஆசான் உங்க அப்பா தான்.. அவர் குடும்பத்தில சம்பந்தம் வைத்துக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி, பெருமையும் கூட! நீங்கள் ஆலோசித்து முகூர்த்தத்துக்கு நாள் குறித்து சொல்லி அனுப்புங்க மத்தபடி சீர் செனத்தி எதுவும் செய்யக்கூடாது எளிமையான திருமணம் அதுதான் என் பையன் ராஜேந்திரனோட விருப்பமும்” என்றார் கைலாசம்.

“ஆமாம் அப்பா சொல்லுக்கு மறு பேச்சு கிடையாது.நன்றி, வருகிறோம்” என்று ராஜேந்திரன் எழுந்து கொண்டான்.

வாசலுக்கு வந்ததும் ராஜேந்திரனின் அம்மா ஏதோ பேச வாய் எடுக்கும் முன், “தெரியும் நீ என்ன கேட்கப் போகிறாய் என்று. இது நடராஜன் வாத்தியார் வீட்டு குடும்பமடி. எந்தவித சந்தேகமும் தயக்கமும் இல்லாமல் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். இங்கே எந்தவிதத் தவறும் நுழையவே வாய்ப்பில்லை” என்று அழுத்தம் திருத்தமுமாய் கூறி முடித்தார்.

அவர்களைப் பின் தொடர்ந்து வெளியே வந்த ராமனுக்கும் மீனாவுக்கும் இதைக் கேட்டு கண் பணித்தது. வேர் உறுதியாக இருந்திருந்தால் மரத்தை அசைக்க முடியாதுதான்.

ராமன் ஒரு முடிவுடன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான் அடுத்த அரை மணியில் அவனது ஸ்கூட்டர் அந்த முதியோர் இல்லத்து வாசலில் போய் நின்றது அப்படி நிற்கப் போவதில் இதுவே கடைசி முறை என்பது ஸ்கூட்டருக்குத் தெரியாது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *