விழிம்பு நிலை விசனங்கள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 2,237

மேக்கப் உதவியால் பூரண நிலவு போல் ஒளி முகத்தில் பிரகாசிக்க, வானவில்லையே சேலையாக உடுத்திய நறுமணம் மிக்க பூஞ்சோலையாக நகரத்திலேயே மிகவும் பிரமாண்டமாகவும், நாட்டிலேயே நூறாவது கடையாகவும் துவங்கப்பட்டிருந்த துணிக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை கயா, கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து, வெள்ளை நிற பென்ஸ் காரிலிருந்து இறங்கியபோது அந்த இடமே கூட்டம் நிரம்பி களைகட்டியபடி ஆர்ப்பரித்தது.
‘கனவுக்கன்னி கயா வாழ்க….’, ‘வருங்கால முதலமைச்சர் கயா வாழ்க….’, ‘பளிங்கு சிலையே வருக….’, ‘அழகின் ஓவியமே வருக….’ ‘நடிப்பின் சிகரமே வருக….’ என நடிகையைப்புகழ்ந்து, வரவேற்று ரசிகர் மன்றத்தினர் பல கட்டவுட்களை தங்களின் படங்களோடு வைத்திருந்தனர்.
“அவங்க டெய்லியும் ஃபாரின் சரக்கு அடிப்பாங்க. ஏஸிலயே தூங்குவாங்க” என சிலரும், “பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரின்னு சாப்பிடுவாங்க, கடல்ல கெடைக்கிற வெலை அதிகமான மீன் வாங்கி சாப்பிடுவாங்க” என சிலரும், “அதெல்லாங்கிடையாது ஒரு படத்துக்கு அஞ்சு கோடி வாங்கறதால வந்த சந்தோசந்தாங்காரணம்” என கற்பனையாக ஒரு சிலரும் பேசிக்கொண்டார்கள்.
ஜவுளிக்கடையை ரிப்பன் வெட்டித்திறந்த போது கடை முதலாளி நடிகையுடன் மிகவும் நெருக்கம் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததைப்பார்த்து அவரது மனைவியின் முகம் நெருப்பாக மாற, ஒதுங்கி ஓரமாக நின்று கொண்டார்.
பலர் செல்பியும், போட்டோவும் எடுத்து மகிழ்ந்தனர். “சுக்கிரன் உச்சமா இருக்கும், அதனால ஒதட்டுக்கு மேல மச்சம் இருக்கு பாரு”
சாமுத்திரிகா லட்சணமும், ஜோதிடமும் படித்திருந்த இரண்டு பேர் பேசிக்கொண்டனர்.
பேசிய படி கடைதிறக்கும் தேதியிட்டு செக்காக கொடுக்கப்பட்ட தொகை தன் கணக்கிற்கு மாறியதை தனது மேனேஜரை அழைத்துக்கேட்டு உறுதி செய்த பின்பே ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தபடி கடையை விட்டுக்கிளம்பிச்சென்றாள் நடிகை கயா.
அழகென்றால் கொள்ளை அழகுதான். ஒட்டு மொத்த சாமுத்திரிகா லட்சணமும் அவளிடம் கொட்டிக்கிடந்தது. பெண்களையே பொறாமைப்பட வைக்கும், ஆண்களை மயங்கச்செய்ய வைக்கும் வசீகரிப்பு முக அமைப்பில் நிறைந்திருந்தது.
இலக்கண சுத்தமாக கொஞ்சும் தமிழில் பேசிய கேரளாவைப்பூர்வீகமாகக்கொண்ட மலையாளப்பெண். சாதிக்க வேண்டும் எனும் வெறி இருந்ததால் தாய் மொழி தவிர ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி என பேசுவது போக எழுதவும் கற்றுக்கொண்டிருந்தாள் இருபத்தைந்து வயதான கயா. மருத்துவப்படிப்பை முடித்துள்ளது கூடுதல் சிறப்பு.
கொஞ்சும் விதமாக கெஞ்சிப்பேசி காரியத்தை கச்சிதமாக யாரிடமும் முடித்துக்கொள்ளும் சாணக்யம் இருந்தது. கொடுக்கும் வசனத்தை விரைவில் உள் வாங்கி மனப்பாடம் செய்து கொண்டு வார்த்தை சிதறாமல் சொந்தக்குரலிலேயே டப்பிங்கிலும் அசத்துவதும், அவரது தேனினும் இனிய குரலைக்கேட்கவே சில காட்சிகளை ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டதும் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே இதுவே முதல் முறை.
முதல் படமே மூன்று தேசிய விருதுகளைப்பெற்றுத்தந்திருந்தது. நடிப்பென்றால் வெறித்தனமான நடிப்பு. பொம்பள சிவாஜி கணேசன் என்று படம் பார்த்த வயதானவர்கள் கூறிச்சென்றனர். இதன் காரணமாகவே ரசிகர்கள் பலரை ஒரு சில மாதங்களிலேயே சேர்த்திருந்தது.
நாளுக்கு நாள் புகழ் கூட கடை திறப்பு விழாக்களுக்கு கால்சீட் கொடுக்கவே நாட்கள் போதாததால் அடுத்த பட சூட்டிங் தள்ளிப்போனது. பல தயாரிப்பாளர்கள் கயாவின் கால்சீட்டுக்காக காத்துக்கிடந்தனர். ஒரு படத்தில் வரும் வருமானம் நான்கு விளம்பரங்களில் கிடைத்திருந்ததால் பணத்தைச்சேர்க்கும் முயற்ச்சியிலேயே அவளது பெற்றோர் குறியாக இருந்தார்கள்.
“ராகு திசைல சுக்கிரன் புத்தி மொத்தம் மூணு வருசந்தானாம். அது முடிஞ்சா இவ்வளவு பிரபலம் இருக்காதாம். பணமும் வராதாம். பத்து வருசத்துக்கு முன்னாடியே உன்னோட ஜாதகத்தப்பார்த்த பாலக்காடு நாராயணன் நம்பூதிரி சொல்லியிருந்தார். எழுதியே கொடுத்திருக்கார். புத்தி வந்து ஆறு மாசத்துல நீ நடிச்சபடம் பிச்சிகிட்டு ஓடறதுனால எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. புத்தி முடிஞ்சா இந்த மாதிரி பணம் வராதுங்கிறதும் நம்பிக்கை வந்திருச்சு. அதுக்குள்ள சொத்து சேத்துக்கனம்னு பத்துக்கோடில கேட்டேடு கம்யூனிட்டில சென்னைல வீடு வாங்கியாச்சு. ரெண்டு கோடில பென்ஸ் கார் வாங்கியாச்சு. கடன்ல வாங்கியிருந்தாலும் இப்படியே கடை திறக்கப்போனாலே நாலு மாசத்துல வீட்டுக்கடனையும், கார் கடனையும் கட்டி உன்னோட கல்யாணத்துக்காக ஐநூறு பவுன் நகையும் எடுத்திருவேன். அப்புறம் வேணும்னா படத்துல நடிச்சுக்க. ஆசைப்படறத அடையறத விட தேவையானத அடையறதுதான் புத்திசாலித்தனம். காத்துள்ள போதே தூத்திக்கனம். நெறைய பணம் சேத்திக்கனம்….” தமிழைத்தாய் மொழியாகக்கொண்டு மலையாளியைக்காதல் திருமணம் செய்திருந்த தாய் மஞ்சுளா கூறியதைக்கேட்டு ‘படத்தில் நடிக்கும் ஆசைக்கு தடை போடுகிறார்களே…. படம் தானே காலத்துக்கும் அழியாத புகழைச்சேர்க்கும்…’ என தாய் மீது கோபத்தைக்காட்டியதோடு, கவலைப்பட்டாள்.
உடன் நடிக்கும் ஆண்கள், ஒளிப்பதிவாளர்கள், மேக்கப்மேன், இயக்குனர் என யாரிடமும் தன் மகள் மனம் விட்டுப்பேசிவிடாதவாறு உடனிருந்தே தாய் கவனித்துக்கொண்டது நடிகைக்கு பிடிக்கவில்லை. நம்முடைய கனவை நிறைவேற்றுவதை விட தாயின் கனவு நிறைவேற உழைக்கவேண்டியுள்ளது என நினைத்து வருந்தினாள்.
கயாவின் மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமானது. பத்து கோடியில் வாங்கியிருந்த வீட்டை வரதட்சணையாகக்கொடுப்பதாகக்கூறி பெரிய இடத்து சம்மந்தத்தை முடித்திருந்த பெற்றோரிடம் சண்டை போட்டாள்.
“இன்னும் நிறைய நீ சம்பாதிக்கத்தானே போறே. நல்ல இடம். அவளால உன்னோட அளவுக்கு சம்பாதிக்க முடியாது. நல்ல இடத்துலயாச்சும் கட்டிக்கொடுத்தாத்தானே உனக்கு அக்கான்னு சொல்லிக்கிறதுக்கு உனக்கும் பெருமையா இருக்கும். நல்லா யோசிச்சுப்பார்த்தோம். இதே வேகத்துல வளர்ந்தீன்னா நீ சென்னைல இருக்கிறது சரிப்பட்டு வராது. ஹிந்தில இப்பவே வாய்ப்பு வருது. மும்பைல உனக்கு வீடு வாங்கிக்கலாம்” என ஆசையை பேராசையாக்கி சாந்தப்படுத்தினர்.
விடிய விடிய பயணம், பயணத்திலேயே உறக்கம். மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க வரும் வாய்ப்புகளை விடாமல் அட்வான் வாங்கி குவித்தனர். நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்தியதால் பெற்றோர் எடுக்கும் முடிவுகளுக்கு மறுப்பு சொல்லாமல் கட்டுப்பட்டாள்.
மீண்டும் சென்னையில் வீடு, ஹைதராபாத்தில், பெங்களூருவில், மும்பையில் என வாங்கி குவித்தார்கள். அதில் ஒரு வீடு கூட கயாவின் பெயரில் வாங்கவில்லை.
வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போகும் போது உறவினர்களையும் கூட்டிச்சென்று தயாரிப்பாளருக்கு எக்கச்சக்கமாக செலவு வைத்தனர். தனது குடும்பத்தினரும், உறவுகளும் செய்த செலவில் பாதியைக்கூட தனக்காக செலவிட முடியவில்லை என்பதை விட ஷூட்டிங் போகவும், ஓய்வெடுக்கவும் நேரம் சரியாக இருந்ததால் வெளியில் சுற்றுலா செல்ல இயலவில்லை.
மூன்று வருடங்களில் முப்பது படங்களில் நடித்திருந்தாள். அதில் பத்துப்படங்கள் நூறு நாட்களைத்தாண்டி ஓடியது. பத்து படங்கள் நஷ்டம் கொடுக்கவில்லை. பத்துப்படங்கள் பாதியிலேயே முடங்கியிருந்தது.
நன்றாகப்போய்கொண்டிருந்த வாழ்வில் ஒருநாள் ஷூட்டிங்கில் மயக்கமடைந்து கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட பின் மருத்துவமனையிலிருந்து வெளியே வர அதிக நாட்களானது. ‘கற்ப மயக்கம்’ என பத்திரிக்கைகள் ஐந்து படத்தில் உடன் நடித்த நடிகருடன் சேர்த்து கிசுகிசு எழுதியிருந்தன.
“சுய நினைவு வந்தாலும் நியாபகம் முழுமையாக வரவில்லை. அமெரிக்கா கொண்டு போனால் சரியாக வாய்ப்புள்ளது. பல கோடி செலவாகும். ஆனால் பழைய நிலைக்கு வருவது கடினம்” என மருத்துவர் கூறியதைக்கேட்டு, “இங்கேயே முடிந்தவரை பாருங்கள். அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது” என தாய் உறுதியாகக்கூறியது மட்டும் கயாவிற்கு புரிய, ஒரு நோயாளியாக மருத்துவ மனையில் உள்ள பெட்டில் பேச முடியாத நிலையில் விசனம் மேலோங்க படுத்திருந்த அவளது கண்களிலிருந்து கண்ணீர் துளி தெறித்து விழுந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
