விரல்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 3,706
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெள்ளைய நாயக்கர் ஈரத்துணியாய் துவண்டு விட்டார். கிழிந்த கந்தல் துணியாக, கிறுக்குப் பிடித்த வரைப் போல காற்றில் அலைந்து கொண்டிருந்தார். ரொம்பக் கிழடு தட்டிவிட்டது. வயசு அறுபதுக்கும் மேலே. சாவு வரமாட்டேங்குதே என்று ஏங்கித் தவிக்கிற அளவுக்கு நரகாவஸ்தையாகிப் போன முதுமை.
கட்டிலில் ‘சட்டடியாய்’ படுத்து விட்டார்.
மல்லாக்கப் படுத்துக் கொண்டு, பானைபோல உப்பிப் போயிருந்த தன் வயிற்றையே உற்றுப் பார்த்தார்.
அப்பவும்…ஆம்பளைக்குக் கர்ப்பமாகுமா’ என்ற சந்தேக நினைப்பே வரவில்லை அவருக்கு. ‘இத்தனை வயசுக்குப் பிறகு, கிழட்டுக்கழுதைக்குக் கர்ப்பம் தரித்துவிட்டதே’ என்ற வெட்கக்கேடுதான் அவரைப் போட்டுக் குழப்பி வாட்டி வதைத்தது. வெளியே தலைகாட்ட முடியாத கேவலக்கூத்து. பிடுங்கித் தின்கின்ற அவமான அவஸ்தை.
இன்றைக்கு என்னடாவென்றால்… கர்ப்பவயிறு தாறுமாறாக உப்பிக்கொண்டே போகிறது. காற்றடிக்கிற கார் டியூப் மாதிரி. விம்மி விம்மி உப்புகிற-ரோமம் படர்ந்த-வயிற்றைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் ‘திக், திக்’ கென்கிறது. பயத்தில் மூச்சுப் பிரிய மறுக்கிறது. மனத்திணறல். கண்களில் வந்து அப்பியிருக்கிற பீதி.
வெடித்துவிடுமோ என்ற நினைப்பு, திடுதிப்பென்று! ‘வகுறு வெடிச்சுச் செத்த நாயக்கர்’ என்று ஏழேழு தலைமுறைக்கும் நையாண்டி பண்ணிச் சிரிக்கிற கேலிக்கூத்தாகி விடுமோ என்ற பயம்.
பக்கத்தில் யாரோ நடந்து வருகிற உணர்வு. அழுத்தமாய் தடம் பதித்து வன்ம உணர்வோடு நெருங்குகிற பாதங்கள். கடைக்கண்ணால் மெல்லப் பார்த்தார். ஓங்கு தாங்கான ஆண் திரேகம். உடம்பு பூராவும் ரோம அடர்த்தி. வைரம் பாய்ந்த ஆண் உடற்கட்டு. கழுத்துக்கு மேல் மட்டும் பெண் முகம். வெறி கொண்டலைகிற பேய்க்கண்கள். பெண் முகம் முழுக்க வன்மவெறி. விரிந்து கிடக்கிற ஈரக்கூந்தல். ஈரச் சொட்டடிக்கிற கூந்தல் நுனி.
ரோமம் அடர்ந்த ஆண் கையில் நீளமான வீச்சரிவாள், பளபளவென்று.
வெள்ளைய நாயக்கருக்குள் குலை நடுக்கம். வயிற்றை வெட்டி வகிர்கிற குரூரம் நிகழப் போகுதோ என்ற பதற்றம். மனசுக்குள் வியர்வை. தேகம் பூராவும் புல்லரித்தோடிப் பரவுகிற மரண பயம்.
பழிவெறி கொண்ட அந்தப் பெண் முகத்தின் பேய்க்கண்கள். தலைக்குமேல் நிதானமாக ஓங்குகிற அரிவாள்.
‘ஐயய்யோ… என்னைக் காப்பாத்த ஒரு நாதியில்லையா?’ அலற நினைத்தார். வாய்வரவில்லை. நெஞ்சுக்குள் உயிர்ப்பறவையின் தவிப்பு.
அதற்குள்-
சதக்கென்று விழுகிற வெட்டு, வெட்டு, நாலாபக்கமும் சள்ளென்று தெறிக்கிற ரத்தம். பிளந்த வயிற்றிலிருந்து பொதுக்கென்று சரிகிற ஈரக்குடல்.
‘செத்தேனே’ என்ற பீதியில் நனைந்த அவல நினைப்பில் சரிந்த குடலை அள்ள வலது கையால் துழாவ… அது நாலாபக்கமும் வழிந்தோடும் நீராக மாயம் காட்ட…
2
‘ஆஹ்… ஹ்…. ஹ்… ஹய்யய்யோ…ஹ்… என்ற குழப்பமான கதறலோடு பதறிப்போய் கண்விழித்தார், வெள்ளைய நாயக்கர். சட்டென்று பதைப்போடு வயிறைப் பார்த்தார். நல்லவேளை! சேதாரமில்லாமல் ஒட்டிக் கிடந்தது. வெடித்து விடுவதைப் போல நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது, பயத்தில். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இன்னும் விலகாத மனப் படபடப்பு. தேகமெல்லாம் நடுக்கச் சிலிர்ப்பு.
“ச்சே! எம்புட்டுப் பயங்கரமான கனா. நெனைச்சாலே குலை பதறிக்கிட்டு வருதே!” வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்ட வெள்ளைய நாயக்கர், கண்ட கனாவை மறுபடியும் நினைத்துப் பார்க்க முயன்றார். தெளிவாகத் தெரியவில்லை. ஞாபகத்தில் பிடிபடாமல் நழுவிக் கொண்டோடிய மங்கலாகத் தெரிந்த ஒரே காட்சி! விரிந்த ஈரக் கூந்தலோடு பழிவெறி கொண்ட ஒரு பெண்முகம்.
சுற்றுமுற்றும் பார்த்தார். கனத்த இருட்டு. சுவர்க்கோழியின் ரீங்கரிப்பு ‘ஙய்ய்ய்’ யென்று.
உள்மனசின் மூலைகளிலும் ‘ஙய்ய்ய்’ யென்கிற இரைச்சல். மனசாட்சியில் சுயகுரல். ‘என்ன இது..? தெனந் தெனம் இப்படி கெட்ட கெட்ட கனாவா வருது? செத்துச் செத்துப் பெழைச்ச பெழைப்பாய்ப் போச்சே… இந்த நரகத்துலே கெடந்து சீரழியுறதை விட, ஒரேயடியா செத்துத் தொலைஞ்சிட்டா… நிம்மதியாய்ப் போயிடுமே’
மனஉளைச்சல். நச்சரிப்பான சுயபரிதாப நினைவுகள். காரணம் புரியாத மனப்புழுக்கம்.
மனசின் ஆழத்துக்குள் புதையுண்டு மக்கிப்போன ஞாபக் நெடிகள். பழைய ஞாபகங்களின் உயிர்ப்பு. உளைச்சல். இவரது வக்ர மனசின் குரூரத்துக்கும், குரோதத்துக்கும் இரையாகி மடிந்த உயிர்களின் உக்ரப் பாய்ச்சல்கள்.
3
கிராமத்தின் விளிம்பைத் தழுவிக் கொண்டு வளைந்து கிடக்கிற ஓடை. நீர்ப்பிறப்பே கிடையாது. மூஞ்சி சிதைந்த பாறைக்காடு, ஓடை முழுக்க துருத்திக் கொண்டு நிற்கும் அடர்த்தியான வேலிமரக் காடு. அதைக் கடந்து…
ரெண்டு புஞ்சை தாண்டினால்… சேரி. பத்து நாற்பது கூரைக்குடிசைகள். கட்டை மண் சுவர்கள். வாலை யாட்டிக் கொண்டு ‘உர்ர், உர்ர்’ ரென்று உலாவும் பன்றிகள். கொடிகட்டி காயப் போட்டிருக்கிற மாட்டுச் சவ்வுகளின் வீச்சம்.
வெள்ளைய நாயக்கர் மட்டுமல்ல, மொத்த ஊர் ஜனமே இதைச் ‘சேரி’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ‘தெற்குத் தெரு’ என்பதுவும் கௌரவமாகிவிடுமே என்று நினைப்பார்கள். வாய் கூசாமல் ‘சக்கிலியக்குடி’ என்று மூஞ்சியில் அடித்த மாதிரிச் சொல்வார்கள்.
சக்கிலியக்குடி ஜனம் என்றாலே ஊர் ஜனத்துக்கு இளப்பம் தான். மனுச மக்களைப்போல சமதையாக நினைக்க மாட்டார்கள். பன்றிகளை நடத்துகிற மாதிரித்தான். அண்டவிட மாட்டார்கள். தூரமாய் தள்ளிவைத்தே பேச்சு, காரியம் எல்லாம்.
வெள்ளைய நாயக்கர் இதில் பல படிகள் உசத்தி. அவருக்கு இளப்பம் மட்டுமல்ல, எரிச்சல் வரும். கிட்டத்தில் நெருங்க விடமாட்டார். பகையாளிகளைக் கண்ட மாதிரி இவருக்குள் ஒரு குலை நடுக்கம். ரொம்பப் பயப்படுவார். அந்தப் பயம்தான், வெறுப்பாக-குரோதமாக-வெளிமுகம் காட்டும்.
அதுக்கும் காரணம் இருக்கிறது.
சேரியை ஒட்டித்தான் அவரது புஞ்சை. சக்கிலியக் குடியின் தலைமாட்டில் புஞ்சை. நற்சதுக்கமாய் நாலு குறுக்கம். கிணறு, பம்ப் ஷெட் மோட்டார். சரளைக் கற்குவியல். தோட்டத்தில் எல்லாக் காலத்திலும் வேறு வேறு வெள்ளாமைகள்.
சக்கிலியக்குடி ஜனங்கள் அண்டிப் பழகவிட்டால், புஞ்சையில் அழிமானம் உண்டாகும் என்ற பயம், வெள்ளைய நாயக்கருக்கு. பயத்திலேயே அவர்களைப் பயமுறுத்தி வைப்பார். குரூரமான காரியங்களை நிறையச் செய்து அச்சுறுத்துவார்.
புஞ்சைப் பொழிகளில் விஷம் குழப்பிய கடலைப் புண்ணாக்கைப் போட்டு வைப்பார். புண்ணாக்கு வாசத்தில் ஈர்க்ப்படுகிற பன்றிகள் அதைத் தின்று விட்டு மல்லாந்து விடும்.
பன்றிகள் அவர்களுக்கு ஜீவனப்பிராணி. பணம் பெற்ற பன்றிகள் செத்துக் கிடக்கிற பாதரவைப் பார்த்து அந்த ஜனங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத அழுகைகள், கதறிய கதறல்கள். கொதித்த மனசிலிருந்து பீறிட்ட சாபங்கள், வேறு என்ன செய்துவிட முடியும்?
பொழி ஓரங்களில் ஊன்றப்பட்டு, காய்ந்த முள் வேலியில் படர்ந்த கொடிகளில் வெளியே தொங்குகிற பீர்க்கை, சுரைக்காய்கள், பார்க்கிற யாருக்கும் எச்சில் ஊற வைக்கும். ஒரு சில சிறுமிகள் குழம்புக்கு ஆசைப் பட்டு பிடுங்கி விடுவார்கள்.
அம்புட்டுத்தான். வெள்ளைய நாயக்கருக்கு மிளகாயை அரைத்து அப்பிய மாதிரி பற்றிக் கொண்டு வரும். விசாரித்து அந்தச் சிறுமிகளைத் தேடிக் கண்டு பிடித்து சகட்டுமேனிக்கு அடித்துப் போடுவார். தாட்சண்யமில் லாமல் பின்னி எடுத்து விடுவார். வாய் கூசாமல் மானக்கேடாகக் கேட்பார்.
“உங்க ஆத்தா எனக்கு முந்தி விரிச்சா ஒன்னைப் பெத்தா? என்ன தைர்யத்துலே காய்கனிமேலே கைவைச்சே? சின்னச் சாதி நாயே.”
அடிபட்ட பிள்ளைகள் பயத்தில் பாவாடையை நனைத்துவிடும். அழுகையில் துடித்தவழும். சகிக்க மாட்டாமல் சில தகப்பன்மார்களும் பணிவு குறையாமல் கொதிப்பார்கள். “மாட்டை அடிச்ச மாதிரி பச்சை மண்ணை அடிச்சிருக்கீகளே… சாமி, இது ஞாயமா?”
“களவாண்ட சிறுக்கிக்கு முத்தமா குடுப்பாக?”
“சின்னஞ்சிறுசுக தெரிஞ்சும் தெரியாம செய்ஞ்ச தப்புக்கு, எல்லாந் தெரிஞ்ச பெரியாள் நீங்க… இம்புட்டுப் பெரிய வார்த்தை பேசலாமா…சாமி?”
“ஏலேய் சக்கிலியப் பயலே… செய்றதையும் செய்ஞ்சுட்டு பேச்சுமா பேசுறே? ஊரு சரியில்லே… அதான் இந்தக் குதி குதிக்கீக? படுவா ராஸ்கல்… இப்படிக் களவாண்டு திங்கணுமோ? நாக்கு கேக்குதோ? ஓம் பொண்டாட்டியை ‘கூட்டிவிட்டு’ வாங்கித் திங்கலாம்லே?”
இப்படித்தான் வெள்ளைய நாயக்கர் மூர்க்கமாக நடந்து கொள்வார். நா கூசாமல் நரகல் வார்த்தைகளை வீசுவார். அந்த ஊமை மக்களின் தன்மானத்தை தாட்சண்யமில் லாமல் கிழித்துப் போட்டு, காலால் மிதிப்பார்.
அவ்வப்போது உறுத்துகிற மனசாட்சிக்கு நியாயப் படுத்தி முணுமுணுத்துக் கொள்வார். “இந்தக் கழுதைகளை இப்படி அரட்டி மிரட்டி ‘வைக்கிற இடத்திலே வைச்சாத்தான்… வசங்கியிருப்பாக. மிஞ்சவுட்டுட்டா… தோள்லே ஏறி காதைக் கடிக்க ஆரம்பிச்சுடுவாக.”
4
இளவட்டமாக இருந்த நாளில் இவர் இம்புட்டு சாதி வித்தியாசம் பாராட்டவில்லை. தெரு ஜனத்தோடு ரொம்பச் சரசம். கூனைத்தோல் தைக்க, செருப்பு தைக்க, களத்து வேலைக்கு ஆள் சொல்ல, என்று வருகிற நேரங்களில் மட்டுமல்ல… எல்லா நேரங்களிலும் அங்கேயே கிடையாய் கிடப்பார்.
வாலிபமுறுக்கு. கறித்திமிர். வயசுக் கோளாறு. தெருப்பெண்டுகளோடு இளித்து இளித்துப் பேசுவார். குழைந்து குழைந்து பழகுவார். இசகுபிசகாக நடந்து கொள்வார்.
செக்கை கண்டதா, சிவலிங்கம் என்று கண்டதா… தெரு நாய்? அவரும் அப்படித்தான். வயசு வரைமுறையே கிடையாது. நடுவயசைத் தாண்டிய பெண்டுகளோடு கூடச் சகவாசம். அந்தத் தெருவில் இவர் ஜாடையில் ஒன்றிரண்டு பிள்ளைகள் உண்டு என்று ஊருக்குள் ஒரு பேச்சு,
இப்படியான சமயத்தில் தான்-
வருசநாட்டிலிருந்து வாழ்க்கைப்பட்டு வந்து இருந்தது ஒரு சிட்டு. ரொம்ப இளசு. தெருவுக்குப் பொருந்தாத அழகு. வீச்சரிவாள் மாதிரி கச்சிதமான திரேகக்கட்டு. மஞ்சள் கிழங்கு நிறம். சீலைக் கட்டும், சிங்காரிப்பும் நாகரீகப் பாங்காக…
மனிதர் கிறுகிறுத்துப் போனார்.
போனார். ஆணியடித்த பார்வையாக பார்த்தார். நஞ்சடித்த கெண்டையாக சுற்றிச் சுற்றி வட்டமடித்தார். கிழடுகட்டைகளை கைக்குள் போட்டுக் கொண்டு தூதுவிட்டுப் பார்த்தார். கதையாகிற மாதிரித் தெரியவில்லை.
மோகத்தீ திகுதிகுவென்று தகித்து அவரைத் தாறுமாறாக்கியது.
ஒரு நாள் நடுச்சாமத்தில்-
வீட்டுக்குள் நுழைந்து விட்டார், புருஷன் ஊரில் இல்லை என்ற தைர்யத்தில் இருந்திருக்கிறான். காரியம் கை மீறிப் போயிற்று.
அன்றைக்கு, அவருக்கு மூச்சுமுட்டச் ‘சாப்பாடு.’ வீட்டுக்குள்ளேயே போட்டு புருஷனும் பெண்டாட்டியும் சேர்த்து ‘மிதி, மிதி’ என்று மிதித்து, கந்தர் கோளமாய் கிழித்துப் போட்டு விட்டனர்.
இவரால் வாய்விட்டுக் கத்தவும் வழியில்லை. ஊமை கண்ட கனா.
வருசநாட்டுக்காரி அத்தோடு விடவில்லை. விடிந்த வுடன் ஊர் நாட்டாண்மையிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு வந்து விட்டாள். வெள்ளைய நாயக்கரின் மானம் அன்றைக்குக் கன்னங்கரேலென்று கறுத்துப் போயிற்று.
‘சாமி, சாமி’ என்று சொல்லிக் கொண்டு, அவ்வப்போது ரெண்டும் மூன்றுமாக ரூபாய் கறந்து கொண்டு, காலைச் சுற்றிக் கொண்டு, அந்தரங்கமாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்த கிழடு கட்டைகளெல்லாம் பஞ்சாயத்தில் இவருக்கு எதிராக சாட்சி சொல்ல…
மனிதர் ஆழமாய் அதிர்ந்து போய்விட்டார்.
அந்த அதிர்வே ஓர் அனுபவத் தழும்பாக… அத்தோடு சமூகக் கசடும் அவருள் ஒரு குணமாகப் படிய… அவரைச் சாதிவெறி கவ்விக்கொண்டது.
காலைப் பிடிக்கிற இதுகளை நம்பிவிடக் கூடாது. அசந்தால்… கழுத்தை பிடித்து விடுவார்கள் என்கிற பயமே… அவருள் நிரந்தர உணர்வாக-
பயம் என்பதே ஒரு புதர்தானே! அதில் வக்ர நாகங்களும், வெறுப்பு விஷ ஜந்துகளும்தானே அடையும்!
5
வெள்ளைய நாயக்கருக்கு வயசு அம்பது இருக்கும். பெண் பிள்ளைகளையெல்லாம் கட்டிக் கொடுத்து விட்டார். மகனுக்கும் கல்யாணம் ‘மூய்த்து’ வைத்து விட்டார். அப்போது-
ஊருக்குள் கரண்டு வந்த புதுசு. வரிசை வரிசையாக மின்கம்பங்கள். ஆகாய வலைப் பின்னல்களாக குறுக்கு நெடுக்காக ஓடும் ஒயர்கள்.
கமலை, கூனை, உருளை எல்லாம் மூலை சேர்ந்து விட்டன. புஞ்சைக்கு பம்ப் ஷெட் மோட்டார். அந்த இரும்பு ஜென்மம் கிணற்றுத் தண்ணீரை அள்ளி ஊற்றுகிற மாய மந்திரத்தில் ஜனங்கள் அசந்து போய் நின்றார்.
அள்ளி ஊற்றுகிற நீரும் சாதாரண வேகமா? தலையந்துபோகிற ஸ்பீடு. உருக்கி வார்த்த வெள்ளிக் கற்றையாய்….
அதில் குளிப்பது என்றால்… ஊர் ஜனத்துக்கு ஒரே குஷி. இமயமலையை எட்டிப் பிடித்த சந்தோஷம். ஆனந்தப் பரவசம்.
“மோட்டார்லே தலையை குடுத்து குளிச்சிட்டா… அந்தச் சொகமே தனிதானப்பா. ச்சே! என்ன வேகம்! சப்சப்புன்னு அறையுதே.. குத்தால மெல்லாம் பிச்சை வாங்கணும்.”
ஊர் ஜனத்தின் இந்த உல்லாசப் பேச்சுகளை சக்கிலியக்குடி ஜனம் ஆச்சர்யமாகக் கேட்பார்கள். மிட் டாய்க் கடையைப் பார்க்கும் ஏழைப் பையன்கள் மாதிரி ஏங்கித் தவித்துக் கேட்பார்கள். வேறு என்ன செய்ய?
மேல்சாதிக்காரர்களின் பம்ப்ஷெட் மோட்டாரில் போய் சக்கிலியன் குளித்துவிட முடியுமா? தொட்டிக்குள் இறங்கி நீர்க்கற்றையில் தலையைக் கொடுத்துவிட முடியுமா? தொலியை உரித்து உப்பு தடவி விடமாட்டார்களா… என்ன!
அப்பத்தான்… ஒரு நாள்-
வெள்ளைய நாயக்கரின் பம்ப்ஷெட் மோட்டார் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வாய்க்கால் ததும்ப ஓடிய தண்ணீர், மிளகாய்த் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தது.
மிளகாய்ச் செடி அந்த வருஷம் திகிடு முகிடான வளர்ச்சி. இடுப்பு உயரத்துக்குச் செடிகள், கொம்பும் கொழையுமாக பச்சைப் பசேரென்று கடலாய் அடர்ந்த செடிகள்… வெள்ளி மூக்குத்திகளை அள்ளிச் சிதறின மாதிரி பூக்கள். நிறைமாசக் கர்ப்பிணியாக காயும் பூவுமாகத் ததும்பி நின்ற வெள்ளாமை.
மகன்தான் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான், தூரத்தில், நடுவில் சோளப்பயிர், கரும்புத் தோட்டம் மாதிரி. மகன் நிற்கிற இடத்திலிருந்து பார்த்தால் பம்ப் ஷெட் தெரியாது.
வெள்ளாமைகளைப் பார்த்துக் கொண்டே பொழியில் நடந்து வந்தார், வெள்ளைய நாயக்கர்.
கன்னிப் பெண்ணாக திமிறிக் கொண்டு வளர்ந்திருந்தது சோளப்பயிர். அகலத் தோகைகளில் காற்றின் மெல்லிய உரசல். சலங்கை சிணுங்குகிற சங்கீதச் சப்தம். பால்பிடிக்கிற பருவம். சோளப் பாலின் மிருதுவான லாகிரி வாசம்.
வாய்க்கால் தண்ணீருக்குள் அவர் நடக்கிற போது… ‘சளப், சளப்’ பென்று ஒரு சுகமான சப்தம். தற்செயலாக அவரது பார்வை பம்ப்ஷெட்டை ஏறிட்டுப் பார்த்தது. தொட்டியில் யாரோ குளிக்கிற மாதிரி தோற்றம். நாலாபக்கமும் சிதறிக் தெறிக்கிற நீர்த்திவலைகள்.
பார்த்தால்… ஒரு பெண் போலத் தெரிகிறது. இன்னாரென்று பிடிபடவில்லை. வயதாகிவிட்டது. கண் பற்றவில்லை. சாயங்காலச் சூரியன் வேறு கண்ணைக் குத்திக் கூசவைக்கிறது. நெற்றிக்குக் கீழே கண்ணுக்குக் குடையாக உள்ளங்கையை வைத்து… உற்றுப்பார்த்தால்-
குளிப்பது ஒரு பெண்தான். நிறைமாசக் கர்ப்பிணி. ஈரச் சேலை படிந்த உப்பிய வயிறு. சக்கிலியக்குடிப் பெண் போல ஒரு தோற்றம்.
அவருக்குள் குப்பென்று பற்றிக் கொண்ட ஒரு தீ. கண்மூக்கு தெரியாத கோபவெறி.
ஓர் ஈங்குஞ்சைக்கூட அண்டவிடாமல் அதட்டி வைத்திருக்கிறார். வேலி போட்டிருக்கிறார். சின்னஞ் சிறுசுகளைக்கூட நெருங்கவிடாமல் அடி பின்னியெடுத் திருக்கிறார். பன்றிகளைக் கொன்றிருக்கிறார்.
இத்தனையையும் மீறிக் கொண்டு ஒரு பொட்டச்சி நுழைந்து விட்டாளா? அவளுக்கு அம்புட்டுத் திமிரா? பயமற்றுப் போயிற்றா? ஒரு சக்கிலிச்சி வந்து குளிக்கிற அளவுக்கு-தன் கிணறு இளப்பமாகி விட்டதா?
அவருக்குள் ஒரு தகிப்பு. தாங்க முடியாத ஆத்திரத்தில் மட்டியைக் கடித்தார். வேரோடு ஒரு சோளத்தட்டையை விருட்டென்று பிடுங்கினார். மளமளவென்று நெருங்கினார். அவரை முந்திக் கொண்டு அவரது கோபவெறி…
இவரை அவள் கவனிக்கவில்லை.
சக்கிலியருக்கு எட்டாக்கனியான மோட்டார் குளிப்பு. கர்ப்பிணிக்குரிய ஆசைவெறியில் வந்து விட்டவள். நியாயமான ஆசை. குற்றமில்லாத ஆசை.
ஆசைத்தீரக் குளித்தாள். காணாததைக் கண்டு விட்ட பரவசத்தில் மூழ்கித் திளைத்துக் குளிக்கிற குளிப்பு. மனசும் சேர்ந்து குளிக்கிற குளிப்பு. ஆசைப் புருஷனோடு பின்னிக்கிடக்கிற சுகமயக்கத்தில் லயித்துப் போய்- ‘தன்னை மறந்து அனுபவித்து’ குளித்துக் கொண்டிருந்தாள்.
கிட்டத்தில் போய்ப் பார்த்தார். அவருள் பற்றிய தீ கற்றைகற்றையாய் ஜூவாலை நீட்டியது. அவரது சாதிவெறி, சொந்த வன்மமாயிற்று.
வருசநாட்டுக்காரியின் மகள். இருட்டு வீட்டுக்குள் தன்னைப்போட்டு மிதிமிதியென்று துவைத்தெடுத்தவளின் ரத்தத் தொடர்ச்சி.
அடிவாங்கிய அந்த வலி, கேவலப்பட்ட அந்த அவமானம், சாதிவெறி எல்லாம் கூடிக்கலந்து அவருள் ஒரு பிசாசாக இறங்க-
சாட்டை போன்ற பச்சைச் சோளத் தட்டையால் ஓங்கிய கை மாறாமல் அடித்தார். சுளீரென்று விழுந்த ஈரத்தட்டையடியின் உக்கிரம்.
பின்னிக்கிடந்த மயக்க சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்த அந்தக் கர்ப்பிணிப் பெண், இந்த அடியின் சுழற்சியில் மனசின் ஆணிவேர் வரை அதிர்ந்து போனாள். அவளைத் தூக்கிச் சுழற்றிப் போட்ட மாதிரி தோன்றியது. நடுங்கிப்போய் நிமிர்ந்து பார்த்தால்-
பிசாசாக இவர். மாறிமாறி சோளத் தட்டையைச் சுழற்றினார். பளிச்பளிச்சென்று மின்னலாய் வெட்டிய அடிகள், தட்டை பிய்ந்து நார்நாராகச் சிதைகிற வரைக்கும்!
அவள் கத்தவில்லை. கதறவில்லை. வாங்கிய அடியை யெல்லாம் தின்று செத்தவள் மாதிரி, பயத்தில் அப்படியே உறைந்து போய் இவரைப் பார்த்தாள். மிரட்சியான பார்வை. வெலவெலத்துப் போன பார்வை. பேயடித்த மாதிரியோர் உயிரற்ற பார்வை!
நடக்கமாட்டாமல் நடந்துபோய் குடிசையில் விழுந்தாள். ராத்திரியே அவளுக்குக் காய்ச்சல். குக்கிராமம். சக்கிலியக்குடி ஜனம். ஏழ்மையோடு பின்னிய அறியாமை. நடந்ததை யாரிடமும் சொல்ல அவளுக்கு மதியில்லை.
‘பச்சைத்தண்ணீரில் குளித்ததால்தான் காய்ச்சலாக்கும்” என்று நினைத்து கசாயம் போட்டுக் கொடுத்தனர். கைப்பக்குவம் செய்தனர்.
மறுநாள் குளிர்காய்ச்சல். உணர்வு தப்பிய புலம்பல். பயந்து பயந்து அலறிய காட்டுக்கத்தல்.
‘பேய் பிடித்துவிட்டதோ… காற்று கறுப்பு அடித்து விட்டதோ’ என்ற நினைப்பில் திருநீறு பூசினர். சாமி யாடியை வரவழைத்தனர். மந்திரித்தனர்.
மூன்றாவது நாள். செத்தே போனாள்!
6
‘நிறைமாச கர்ப்பிணியின் சாவு’ என்பது சக்கிலியக் குடியை மட்டுமல்ல… சாதி கடந்த மனித நேயத்தில் மொத்த ஊரையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. “ஐயய்யோ பாதரவே” என்று சகல சனமும் அங்கலாய்த்தனர்.
வேலை ஜோலியையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காமல்… சகல சாதி ஜனமும் சேரிக்குள் வந்து விட்டனர். “ஐயோ கொடுமையே, இப்படியுமா ஒரு சாவு வரணும்” என்று ஆளாளுக்குப் புலம்பினர். கூடிக்கூடி மனம் புழுங்கினர். அடிவயிறு பிசைய கண்கலங்கித் திகைத்தனர்.
சாவின் குரூரம் சாதியைப் பொய்யாக்கி, மானுடத்தை சத்தியமாக்கி விட்ட அதிசயம்…
சடபுடவென்று காரியம் செய்து புதைக்கவோ- எரிக்கவோ முடியாது. நிறைமாசக் கர்ப்பிணி. வயிற்றில் முழுக் குழந்தை. அப்படியே புதைத்தால் ஊருக்கு ஆகாது. ஊரே நாசக் காடாகிவிடும் என்றொரு ஐதீகம்.
வயிற்றில் கிடக்கும் குழந்தையை எடுத்து தனித் தனியாகத்தான் புதைக்க வேண்டும். பேய்பூத நம்பிக்கை நிறைந்த கிராமம். செத்துப்போன பிரேதத்தின் வயிற்றைக் கீறிக் கிழித்து, குழந்தையை எடுக்கிற தைர்யம் யாருக்கு வரும்?
என்ன செய்ய? எல்லா ஜனமும் கண்ணீரும் கம்பலையுமாய் பதைத்தனர். ஊர் ஜனம் பூராவும் வழி தொகை தெரியாமல் திகைத்துப் புலம்ப… சுற்று பட்டி பத்து ஊருக்கும் ஆட்கள் பறந்தனர், ‘அப்படி தைர்யமான ஆள் கிடைப்பானா’ என்று.
கடைசியில் ஒருத்தன் அகப்பட்டான். அவன் வந்து சேரச் சாயங்காலமாகி விட்டது. அவனும் மூக்குமுட்ட சாராயம் குடித்து விட்டு… அந்த போதைத் தைர்யத்தில்தான் ‘தன்னை மறந்து’ அந்த ‘அறுப்புக் காரியத்தை’ முடித்தான்.
மயானக்கரை வேலைகள் முடிந்து… எல்லா சாதி ஜனமும் வீடு திரும்ப பொழுது இருட்டி விட்டது. யாருக்கும் பசி ஞாபகமில்லை. எதுவும் பேசத் தோன்றவில்லை. கற்றைச் சோகம். துயரமிக்க மன இறுக்கம். ‘இப்படியொரு சாவா’ என்ற அதிர்விலிருந்து மீள முடியாத வருத்தம். கலக்கம்.
ஆனால்-
‘இது ஒரு சாவு இல்லை, கொலை’ என்பது வெள்ளைய நாயக்கருக்கு மட்டுமே தெரியும். இவர் அடித்த சோளத் தட்டையடியில் பதறிப் போய்த் தான்-அந்த மன அதிர்வில் தான்-இந்தக் கொலை பாதகம் என்ற சேதி, வேறு ஒரு சுடுகுஞ்சுக்குக் கூடத் தெரியாது.
‘நீ ஒரு கொலைகாரன்’ என்று யாரும் விரல் நீட்டிக் குற்றம் சொல்ல வழியில்லை. விரலை நீட்டவுமில்லை. ஆனால்-
இவருக்குள் ஒரு விரல். கத்தியாக நீண்டு உள்ளுக்குள் உறுத்துகிற விரல். குத்திக் குடைகிற விரல். மிச்ச ஆயுள் பூராவையும் நரகமாக்கி அவஸ்தைப்படுத்துகிற சுயவிரல். ரவ்வும் பகலும் ரணமாக்கி வாட்டி வதைக்கிற விரல்.
பிறகென்ன?
(முதல் அத்தியாயத்தை மீண்டும் படித்தால் புரியும்!)
– இதயம் பேசுகிறது, 20.11.94
– வன்முறை எதிர்ப்புச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ. 5000 பெற்ற கதை.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
