விட மாட்டேன்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 503
அகல்யாவின் கண்களில் சோகம் அதிகமாக வெளிப்பட்டது. கண்ணீர் சிந்த முடியாமல் அவளது கண்களில் நீரே வற்றிப்போனது எனலாம். ஒரு முறை கிடைத்ததை மீண்டும், மீண்டும் பெற தன் மனம் ஏங்குவதை அறிவாளியான அவளால் தடுக்க இயலவில்லை.‘மனம் எதை விரும்புகிறதோ அதை உடனே அடைய நினைக்கிறது. அதற்கு பின் விளைவுகளைப்பற்றியெல்லாம் எப்போதும் கவலை இருப்பதில்லை’ என்பதை நன்கு அறிந்த அறிவாளியாக இருந்தாலும் கட்டுப்படுத்த இயலாதவளாக அறிவிடமிருந்து முற்றிலும் விலகி மனதிடம் சரணடைந்திருந்தாள். என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உடனே பதில் சொல்பவள் தற்போது பதில் பேசாத ஊமையைப்போல் காட்சியளித்தாள்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? ன்னு என்னால மத்தவங்க கேட்கிற கேள்விய என்னால உன் கிட்ட கேட்க முடியல. ஏன்னா எனக்கு நல்ல ஆலோசகரா நீ இருக்கே. நல்ல ஹெல்பரா இருக்கே. நல்ல சினேகிதியாவும் இருக்கிறே. என்னோட கணவரோட நான் வாழவே முடியாதுன்னு முடிவெடுத்தப்ப பெத்த தாய் மாதிரி பேசி தடுத்தவதா நீ. அப்படிப்பட்ட நீயே இப்படியொரு நேர்மாறான முடிவு எடுத்திருக்கிறத நெனைச்சு எனக்கு ரொம்ப கவலையா, வருத்தமா இருக்கே தவிர கோபமே வரலே. இப்படியொரு அறிவாளிக்கே இந்த நெலைமைன்னா எங்களை மாதிரி சாதாணமானவங்கள சொல்லறதுக்கு எதுவுமே இல்லை…” சொல்லிய ரம்யா கண்ணீர் சிந்தினாள்.
“நான் ஒரு மோசமான சூழ்நிலைல மாட்டியிருந்தப்ப உன்னோட அறிவுரைதான் என்னை மீட்டு கொண்டு வந்திச்சு. நான் அந்த சூழ்நிலைல இருந்து வெளில வராம போயிருந்தா நான் வீணா போயிருப்பேன். நான் என்னோட அறிவ சுத்தமா இழந்து யாருக்கும் உபயோகப்படாம போயிருப்பேன். ஆனா அத விட மோசமான சூழ்நிலைல, நீ மாட்டியிருக்கிறதப்பத்தி மட்டும் யோசிக்காம இருக்கியே….?” பக்கத்து வீட்டு கயா பேசியதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் மதன் பற்றிய சிந்தனையிலேயே, அவன் கூறிய சில வார்த்தைகளைப்பற்றிய ஆராய்ச்சியிலேயே மூழ்கியிருந்தாள் அகல்யா.
“மதன்…. வேற லெவல் மனுசன். என்னோட இயந்திரமா இருந்த வாழ்க்கை, மனுசத்தனமானதா மாறினதே அவரால தான். அவர மாதி ஒருத்தர சந்திச்சதே இல்லை. இனிமே சந்திக்கப்போறனான்னு தெரியல. ஒரு சிலரோட பேசினா மனசுக்கு பிடிக்கும், அறிவுக்கு பிடிக்காது. ஒரு சிலரோட பேசினா அறிவுக்கு பிடிக்கும். மனசுக்கு பிடிக்காது. ஒட்டு மொத்தமா மனசுக்கும், அறிவுக்கும், ஏன் உணர்வுக்கும் சேர்த்து பிடித்தவரா அவரு இருக்காரு. இது சாத்தியமே இல்லை. அவருக்கும் எனக்கும் இருக்கிற வித்யாசத்தையே யோசிக்கத்தோணல. அவரு யாரோட வீட்ல இருக்காருன்னு கேட்கவும் தோணல. அறிவால பேசத்தொடங்கினேன். மனசுக்கு நெருக்கமானாரு. மனசால நேசிக்கத்தொடங்கினேன். உணர்வால நெருக்கமானாரு. உணர்வால நெருங்கினதும் அறிவுக்கண்ணும், மனக்கண்ணும் குருடாயிடுச்சு. அப்புறம் உடலால அது நடந்திருச்சு. அந்த நேரம் மனுசங்களா? மிருங்களா? இயந்திரமான்னு? ன்னு புரியல. எதுவுமற்ற நிலை. எதுவுமற்ற நிலை தான் ஏகாந்தம். அந்த நிலைய எனக்குள்ள ஒவ்வொரு நொடியும் அவர்கிட்டிருந்து இல்லை….இல்லை…. அவர் மூலமா இந்த பிரபஞ்சத்துகிட்டிருந்து பெற்றேன். அதை மறுபடியும், மறுபடியும் பெற விரும்பறேன். அதனால மதனை நான் விட மாட்டேன்” அகல்யா சொல்லச்சொல்ல கயாவிற்கும் உடனே மதனோடு அப்படிப்பட்ட ஏகாந்த நிலையை தானும் பெற வேண்டும் என்கிற பேராவல் எழுந்தது.
“அகல்யாவுக்கு நான் கொடுத்த அந்த ஏகாந்த நிலையை உனக்கும் கொடுக்கனம்னு நீ கேட்க்கிறே. நல்லது. ஆனா ஆசைப்படற எல்லாருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தை என்னால கொடுக்க இயலாது” என மதன் உறுதியாகச்சொன்னதும் கவலையே உருவாக மாறியது கயாவின் முகம்.
இவர்களின் உரையாடல்களை கேட்ட ரம்யா உடனே தனது நண்பன் ரகுவிடம் செல்போனில் அழைத்து பேசினாள். “நான் உங்கிட்ட கேட்டது வீட்டு வேலைக்கு உதவறமாதிரியும், ஏதாவது கேள்வி கேட்டா பதில் சொல்லற மாதிரியும் தான்” சற்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நிறுத்தினாள்.
“ஏ ரம்யா… என்னாச்சு? கவலைப்படாதே…. அஞ்சு வருசம் வாரண்டி இருக்கு”
“எனக்கு வேற ரோபோட் மாத்தி தருவியா?”
“அது மட்டும் முடியாது”
“அப்படின்னா என்னோட ஹஸ்பெண்டு மதனை நான் டைவர்ஸ் பண்ண வேண்டியதிருக்கும்”
“ரம்யா…. என்ன சொல்லறே…?”
“ரொம்பவே எல்லை மீறி போயிடுச்சு. கேட்கற கேள்விக்கு பதில் சொன்னா போதுன்னு தானே சொல்லி உங்கிட்ட அதை வாங்கினேன். ஏற்கனவே சில பிரச்சினைல என்னோட ஹஸ்பெண்ட டைவர்ஸ் பண்ண நினைச்சு கேட்டப்ப என்னோட அம்மா மாதிரி அகல்யா ரோபோட் என்னோட மனச மாத்திச்சு. சந்தோசப்பட்டேன். கொடுத்த பணத்துக்கு வொர்த்துன்னு நெனைச்சேன். இப்ப ஒரு வாரம் நான் என்னோட அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த பின்னாடி பார்த்தா மறுபடியும் என்னோட ஹஸ்பெண்டு என் கூட முகம் கொடுத்து பேச மாட்டீங்கறாரு. மனசு, உணர்வு இருக்கிற ரோபோட் எதுக்கு கொடுத்தே? இப்ப அதோட தான் குடும்பமே நடத்தறாரு. பத்தாதுன்னு பக்கத்து வீட்ல இருக்கிற என்னோட பிரண்டோட ரோபோட் கயா கிட்டவும் என் ஹஸ்பெண்ட பத்தி சொல்லி இப்ப அதுவும் அடிக்கடி மதன் கிட்ட வந்து ஏதேதோ கேட்குது. இப்ப அதுங்களுக்கு அறிவே வேலை செய்யறதில்லை. ரோபோட்டுக்கு மட்டுமில்லை. என்னோட ஹஸ்பெண்டுக்குந்தான்”
” இதொரு பிரச்சினையில்லை. உன்னோட ரிமோட்ல இருந்து H- ஹார்ட், F- ஃபீலிங் ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன்னோட ஹஸ்பெண்டு கண்ணுல படாம மட்டுமில்ல, ரோபோட் கண்ணுல படாம பக்கத்து வீட்ல கொடுத்திடு. பிரச்சினை சால்வ்.” ரகு சொல்லியதை உடனே செய்து முடித்தாள் ரம்யா.
ஒருமாதம் பின் ரகு ரம்யாவிற்கு போன் செய்து “இப்ப நிம்மதியா இருக்கா? என கேட்க, ரம்யா கண்ணீர் விட்ட படி “ரோபோட்டோட ஹார்ட்டையும்,ஃபீலீங்ஸையும் ஆப் பண்ணிட்டேன். என்னோட ஹஸ்பெண்டோட ஹார்ட்டையும், ஃபீலிங்ஸையும் ஆப் பண்ண வழி இல்லாததுனால மறுபடியும் ரிமோட்ட அவருகிட்டையே கொடுத்துட்டு நான் டைவர்ஸூக்கு அப்ளை பண்ணிட்டேன் ” என கூறியதைக்கேட்டு ரகு அதிர்ச்சியில் உறைந்து போனதோடு, தன் வீட்டிற்காக இதே போன்ற ஒரு ரோபோட் ஆர்டர் போட்டதை உடனே கேன்சல் செய்தான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
