விக்கிரமாதித்தன் தலைநகர் அமைத்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 325 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்

1-வது வினோரஞ்சிதப் பதுமை சொல்லிய விக்கிரமாதித்தன் பூர்வீகக் கதைகள் 

கதை – 2 | கதை – 3 | கதை – 4

3. விக்கிரமாதித்தன் தலைநகர் அமைத்த கதை

பர்த்ருஹரி ராஜன் துறவியாகிக் காட்டிற்குச் சென்ற பிறகு அவனுடைய சகோதரனா ன விக்கிரமாதித்தன் கன்னியாபுரி மன்ன க முடிசூட்டப்பட் டான். பட்டத்திற்கு வந்த விக்கிரமாதித் தன், தெய்வம், அற நெறியாளர், கூன், குருடு, நொண்டி ஆகிய அனாதைகள் ஆகியோருக்குத் தான தருமங்களைச் செய் தான். நல்ல வார்த்தை களைச் சொல்லி வேலைக்காரர்களை திருப்தி செய்தான். மந்திரி பிரதானி களிடம் சுமுகமாக நடந்து அவர்கள் நம்பிக்கைப் பெற்றான்.

இவ்விதம் இருந்து வரும் நாளையில் விக்கிரமாதித்தன் தன் பிரதம மந்திரியான பட்டியை அழைத்து: “பட்டி! நாம் ஆட்சி செய்யும் பூமி மிகவும் சிறியதாய் இருக்கிறது.

இன்னும் பல நாடுகளைச் சம்பாதித்து. நம் பெயர் உலகம் முழுவதும் பரவும் வகையில் நாம் பரிபாலனம் செய்யவேண்டும். காதவழிக்குக் காதவழி நீளம் அகலம் கொண்ட விசாலமான தலைநகர் ஒன்றை நிறுவி, அதிலிருந்து ஆட்சி புரிய வேண்டும். அத்தகைய நம் தலைநகரின் அருகில் ஒரு நதியும், தேவ சன்னிதானங்களும் அமைய வேண்டும். நீ புறப்பட்டுச் சென்று அதற்குத் தகுதியான இடத்தை அறிந்து வா” என்று சொல்ல, பட்டி அரசனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

வசனகிரி என்ற மலைச்சார்பிலே குணவதி ஆற்றின் கரையோரமாக பட்டி வரும்போது, காட்டிலே ஓர் அதிசய ஸ்தலம் தென்பட்டது. அருகிலே சென்று பார்க்க, விசாலமான அந்தப் பிரதேசம் காதவழி நீளமும் காதவழி அகலமும் கொண்டு மனித சஞ்சாரம் அற்றதா யிருந்தது. அங்கு அநேக ஆல விருக்ஷங் களும், தடாகக் கரையும், பத்திர காளியம்மனின் பொய்கை ஸ்தலங்களும் நிறைந்திருந்தன. அங்கு இருந்த பொய்கையின் கரையில் பத்திர காளியம்மனுக்கு ஒரு கோயில் இருந்தது. நீர்ப் பொய்கையின் அருகேயுள்ள ஒரு ஆலவிருட்சத்தின் கிளையில், சக்கர வளையம்போல் ஏழு உரிகள் கட்டப்பட்டிருப்பதும், பொய்கை நீரின் நடுவே கூர்மையான முனையையுடைய வேலொன்று நடப் பட்டிருப்பதும் அதிசயமாகத் தோன்றின.

பட்டி அப்பொய்கையில் இறங்கி பயபக்தியுடன் ஸ்நானம் செய்து கோயிலில் நுழைந்து பத்திர காளியம்மனை வணங்கினான். ஆங்கார ரூபத்துடன் விளங்கும் பத்திரகாளி அம்மனின் துவஜஸ்தம்பத்திற்கருகே ஒரு குத்துக்கல்லில் பின்வருமாறு சாஸன வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன:

“எவனொருவன் – எந்தக் குலத்தில் பிறந் தவனாயிருந்தாலும் இப்பொய்கையில் ஸ்நானம் செய்து நேம நிஷ்டைகளுடன் இதோ நிற்கும் ஆலவிருட்சத்திலிருந்து தொங்கும் ஏழு உரிகளையும் ஒரே வெட்டில் வீழ்த்தி, அவைகள் கீழே விழுவதற்குள், ஆகாய மார்க்கமாகப் பொய்கையின் நடுவி லிருக்கும் வேல் முனையில் பாய்கிறானோ. அத்தகைய வல்லமைசாலிக்குத் தேவி பிரத்தியக்ஷமாகி சகல சௌபாக்கியங்களையும் அருளி ஆசிர்வதிப்பாள். அவனே ஐம்பத்தாறு தேச அரசர்களையும் வெற்றிகொண்டு அனைவருக்கும் அதிபதியாகி அரசாளுவான்……”

மேற்படி கல்வெட்டைப் படித்த பட்டி, உடனே தன் நகரம் திரும்பி விக்கிரமாதித்த மன்னனிடம் தான் கண்ட அதிசய ஸ்தம்பத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தான். அதன் மீது விக்கிரமாதித்தன் உடனே புறப்பட்டு அந்தப் பொய்கைக்கு வந்து சேர்ந்தான். பொய்கையிலே மன்னன் இறங்கி ஸ்நானம் செய்து பக்தியுடன் கோவிலிலே நுழைந்து அம்மனைத் தரிசித்தான். பிறகு வெளியே வந்து மரத்தின் மீது ஏறினான்.

அப்போது பட்டி, “அரசே! கடைசி உரியிலே காலை வைத்து ஒரு முறை சுழன்றால், கயிறு முறுக்கி ஏழு உரிகளும் ஒன்றாக வரும். அப்போது ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்தலாம்!” என்றான்.

அவ்வாறே விக்கிரமாதித்தன் ஏழு உரிகளையும் ஒன்றாகச் சேர்த்து, வாளை உருவி ஒரே வெட்டாக வெட்டி விட்டு, திட சித்தத்துடன் பொய்கையின் நடுவிலிருந்த கூர்மையான வேல் முனையை நோக்கித் தலை கீழாகப் பாய்ந்தான். உடனே, பத்திரகாளியம்மனும் பிரசன்னமாகி, விக்கிரமாதித்தனை தன் இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு காப்பாற்றினாள்.

பட்டி தேவியை நோக்கிப் பலவாறாகவும் தோத்தரித்துப் புகழவே. பத்திரகாளியம்மன் உச்சி குளிர்ந்து போனாள். விக்கிரமாதித்தனும் மூர்ச்சை தெளிந்து எழுந்தான்.

“விக்கிரமாதித்தா! உன் தீரம் என்னை மகிழச்செய்து விட்டது. உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று அருள, “தேவி, இதோ உன் சன்னிதானத்திலிருந்தே நான் ஆட்சி புரிய விரும்புகிறேன். இந்த நகரத்தில் மாட மாளிகையும், கூட கோபுரமும் உண்டாக்கி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணம் என்கிற நாமதேயத்துடன் சிறப்பாக ஆட்சிபுரிய அருளவேண்டும்! உன் சந்நிதானத்தில் புதைக்கப்பட்டிருக்கும் புராதனமான வெகு கோடி திரவியங்களையும் அடியேனுக்குத் தரவேண்டும்” என்று விக்கிரமாதித்தன் பிரார்த்தித்தான்.

பத்திரகாளியம்மனும் அதற்கிணங்கி அவ்வாறே அருளிவிட்டு மறைந்தாள். விக்கிரமாதித்தனும் அந்த ஸ்தலத்தில் புதிய தலைநகர் அமைத்து தன் நகரத்து மக்களை அப்புதிய பட்டினத்திற்குக் குடியேற்றினான். பத்திரகாளியம்மன் கோயிலுக்குத் தங்கக் கோபுரமும் மகா வினோத மண்டபமும் கட்டினான். அதன் பின்னர் ஐம்பத்தாறு தேசங்களையும் வென்று ராஜராஜாக்களும் வணங்கும்படி செய்து பூலோக அதிபதியாகி, தன் அரண்மனை வாசலில் அசையா ஆராய்ச்சி மணி கட்டி ஒரு குறையுமின்றி அரசாட்சி நடத்தி வந்தான்.

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *