வானம் மட்டுமல்ல… தேசமும்
கதையாசிரியர்: ச.சாரங்கா
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,720

குணாளினி சதாசிவமூர்த்தி என்னும் இயற்பெயருடைய இவர் சாரா நிலாமகள் என்ற புனைபெயர்களிலும் எழுதுபவர். சாவகச்சேரியைச் சேர்ந்தவர். 10-02-1975 ல் பிறந்தவர். ஆங்கில ஆசிரியையாகவும் யாழ் பல்கலைக்கழக ஆங்கில வெளிவாரி இறுதியாண்டு மாணவியாகவும் உள்ளார். சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம் என்பவற்றில் ஈடுபாடுள்ளவர். ஈழநாதம், சஞ்சீவி, தினகரன், கலைமுகம் போன்ற சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். பல்வேறு மட்டங்களில் பல பரிசில்களும் பெற்றவர்.
மழை ஓய்ந்துவிட்டிருந்த ஒரு மார்கழி மாதத்தின் இரவு. பூமி மெதுவாகப் புலர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்ருந்தது. ஈரம் காற்றிற் கலந்து வருடி விலகியது. சிலிர்த்தது தரங்கிணியின் உடல் மட்டுமல்ல, மனமும் தான். மெதுவாகப் பக்கத்தில் படுத்திருந்த பிள்ளைகளின் போர்வைகளைச் சரிப்படுத்தி விட்டாள். இந்த மனதின் நினைவுகளை மட்டும் சரிப்படுத்திவிடமுடிவதில்லையே. போர்வைகள் போல அவற்றையும் சரிப்படுத்த முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். நினைவுகள் மேகங்கள் அவை. கலையும் சேரும். விதவிதமாய் உருக்கொள்ளும். பிறகு கருக்குலையும். சிறுசிறு துணுக்குகளாய் அலையும். அதேபோலத்தானே ண்மைதான் நினைவுகள் மேகங்கள். கொஞ்சம் கவித்துவமாய்ச் சிந்தித்தாள். மனதினுள் கீதனன். அவளது அன்புக் கணவன் நிஜங்களில் நெருக்கமாக இல்லாத விஷயங்கள் பொதுவாக நினைவுகளில் நெருக்கமாக இருக்கும். அதாவது இதயப் பரப்பில் மேலெழுந்து வரும். கீதனனும் அப்படித்தான். கீதனன் அவளது இளைமைக்கால இனிய கனவுகளின் கதாநாயகனும் கூட. அவனது பிரதிகளாக ஒரு மகனும் மகளும் மட்டும் அவளருகில், இதோ பக்கத்தில் படுத்திருப்பவர்கள்.
மனம் தெளிவற்று இருந்தது. நேற்று வந்த நீலவர்ண மடல் மனதிற்கு மிகச் சஞ்சலம் தந்துவிட்டதும் காரணம். இது என்ன வாழ்க்கை? இது தான் வாழ்க்கை என்பதா? கைகளை நெற்றிக்குக் குறுக்காக மடித்துக் கண்களை மூடிய போதும் மனதினுள் கீதனன் தான். ஓ! இது மிகவும் கொடுமையானது. மனதிற்கு மட்டும் ஏன் இறைவன் இமைகளைப் படைக்கவில்லை? கண்களை மூடிக் காட்சிகளை விலக்கிவிட முடிகிறதே. ஆனால் எண்ணப்பிரவாகத் தினை எந்தத் தடை கொண்டு நிறுத்துவது? தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
சேவல் எங்கிருந்தோ கூவியது. சிறு பட்சிகளின் கலவைக் குரல்கள் இன்னதென்று இனங்காண முடியாமல் எழுந்தன. அவளது உணர்வுகளும் கூட அப்படித்தான். இது இன்று நேற்று முதல் அல்ல. கண்களோடு இமைகளும் சேர்ந்து உருவானது போல அவளுக்கு நினைவுதெரிந்த நாள்தொட்டு எடுத்ததெற்கெல்லாம் குழம்பிப் போய்விடுவது அவள் வழக்கம். மெதுவாக இமைகளை விரித்த போது சுவர்க்கடிகாரம் மூன்று சொன்னது. மீண்டும் கண்களை நிர்ப்பந்தமாக மூடிக்கொண்டபோது நினைவுகள் எதுவித நிபந்தனை மற்றுக் கடந்த காலத்தை மூடிப் பரவின.
ஏறத்தாழ எட்டு வருடங்களின் முன்னதாகவே அவள் திருமதி தரங்கிணி கீதனன் ஆகிவிட்டாள். தரங்கிணி அதிஷ்டக்காரி என்று பக்கத்துவீட்டு பார்வதியாச்சி சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்படுவாள். கண்ணிறைந்த புருஷன், கண்மணிகளென இரு குழந்தைகள் என்பதாகத்தான் அவளது வாழ்வு விரிந்தது. காலத்தின் தேவையும் சந்தர்ப்பவசமாய்க் கிடைத்த உதவிகளும் சேர்ந்திருந்த சில வருடங்களின் முன்னால் கீதனனும் பணம் தேடிப் புறப்பட்டவர்களுள் ஒருவனாக அவுஸ்திரேலியாவிற்குப் பயணமானான். தொடக்க நாட்களில் பிரிவு புதிரானதாகவும் மிகத் துயரமானதாகவும் இருந்தது. “அவளுக்கென்ன அவன் வெளியில” ஊர் கதைத்தது. ஆனால் அவளோ பெரும்பாலும் மௌனமாகவும் சிலவேளை வாய்விட்டும் அழுதபடி காலங்களை விரட்டினாள்.
“ஏன் பாட்டி! இப்பிடிப் பிரிஞ்சிருந்து பணம் தேடத்தான் வேணுமா?’ அவள் இதயத்து அழுகை கேள்வியாய்ப் பிறக்கும். “முத்துக்குளிக்க வேணுமெண்டால் மூச்சு அடக்கத்தானே வேணுமம்மா” பாட்டி இப்படித்தான். அருச்சுனனுக்கு ஒரு கிருஷ்ண பரமாத்மா வாய்த்தது போலத்தான் அவளுக்கு பார்வதி ஆச்சி தோன்றுவாள்.
“நிரந்தரமாய் ஒரு தொழில் இல்லாமல் எத்தனை நாளைக்கு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது? உத்தியோகம் புருஷ லட்சணமடி. நாளைக்கு இளையதைக் கரைசேர்க்க இலட்சங்களுக்கு எங்கே போறது?”
பாட்டியின் வார்த்தைகளில் கல்லும் கற்பூரமும் கூடக் கரைந்து போகும். தரங்கிணி என்கின்ற மென்மையான பெண்ணும் அவளது வார்த்தைகளில் கொஞ்சம் ஆறுதல் அடைகின்றாள்.
பிறகு பொழுதுகள் வழமைகள் ஆகின்றன. பிள்ளைகளுக்குத் தந்தை புகைப்படத்தில்தான் இனங்காட்டப்பட்டார். அந்த வேளைகளில் எல்லாம் மனம் துடிக்கும். இது ஏன்? எங்கள் சமூகத்தில் இந்த சாபக்கேடு ஏன் பரவிக்கொண்டே இருக்கிறது. இதன் முடிவு எது? எங்கள் தமிழ்ச் சாதிக்கு எப்போது விடிவு வரும் அவளுக்குள் கேள்விகள் பெருகும். காய்க்காமலே உதிர்ந்து விடுகின்ற பூ மாதுளை மலர்கள் போல் அவளது கேள்விகளும் விடையில்லாமலேயே அழிந்து போகும்.
திருமணம் என்பது சேர்ந்து வாழுகின்ற செயல்தானே. ஏன் எம் பெண்களுக்கு மட்டும் இது வாழ்வைச் சுமக்கும் வேலையாகிக் கிடக்கிறது? கிட்டத்தட்ட பிள்ளைகளின் வாழ்வு முழுவதும் அவளது மடியில்தான் கரைந்திருக்கின்றது. இடம்பெயர்வின் போது கூட கையிலொன்று இடுப்பிலொன்றுமாய் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியபோது கூட கணவனது ஞாபகங்கள் மட்டும்தானே அவளது துணைக்கு வந்தன. சில நேரம் வாழ்வே சலிப்பாக இருக்கும் அவளுக்கு. ஆனாலும் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக குடும்பத்தின் செழிப்புக்காக குளிர்ந்த இரவுகளில் வேலை செய்கின்ற கணவனை நிலையை நினைக்கின்ற போது மனதில் ஒரே எண்ணம் உறுதியாய் எழும்பும். எப்படியும் பிள்ளைகளைப் படிப்பித்து நல்ல இடத்துக்குக் கொண்டுவந்திட வேணும். மீண்டும் இடம்பெயர்ந்த நாட்களின் கோலங்கள் மனதில் ஊர்கோலம் போயின.
ஒரு புலராத பொருளின் கருக்கிருட்டில் கைக்குக் கிடைத் தவற்றோடு வடமராட்சியில் இருந்து தென்மராட்சிக்குப் புலம்பெயர்ந் திருந்தார்கள். பார்வதி ஆச்சி குடும்பத்தினரின் உதவியோடு வாழ்வை சிறு குடிசையில் முடக்கிக் கொண்ட காலம் அது. பசிய தென் இலைகளினூடாக நிலவு எட்டிப்பார்க்கும் ஒரு இரவு. நிச்சயமாக அந்த அழகினை இரசிக்க அங்கு எவரும் இல்லை. பசியும் துன்பமும் இரசிப்புக்கு எப்படி இடம் தரும்? ஆனாலும் செயற்கை விளக்குகளைக் குறைத்தே ஆகவேண்டிய தேவை ஆதலால குடிசையின் வெளியே கூடியிருந்தார்கள்.
பார்வதி ஆச்சிக்கு உடம்பு சரியில்லை. உள்ளே படுத்திருந்தாள். தரங்கிணியும் பிள்ளைகளும் பார்வதி ஆச்சியின் மகளும் அவளது பிள்ளைகளும் அங்கு கூடியிருந்தனர்.
“அம்மா… ஏனம்மா நாங்கள் இங்க வந்திருக்கிறம்’
ஐந்து வயது மகனின் கேள்விக்குத் திரும்பிளாள். “அது எங்கட இடத்தில ஆமி வரும்.”
“ஆமி வந்தால்…” மகனின் கேள்வி முடிக்கப்படாமல் பதில் வேண்டியது. “வந்தால் சண்டை தொடங்கிடும் அப்பன் ஆமிக்கும் இயக்கத்துக்கும் இடையில்” தாயின் பதிலது.
“இயக்கம் எண்டால் என்னம்மா”
“இயக்கமெண்டால் தமிழர் தான். நாங்கள் தமிழர் எங்களுக்கு ஒரு நல்ல தீர்வு தனி நாடு தேவை யெண்டு போராடுற கூட்டம்” சின்ன மகன் நெற்றி சுருக்கிச் சிந்தித்து சிறிது நேரத்தின் பின் கேட்டான் “அப்படியெண்டால் பாட்டி சொல்லுற அண்ணாவை தானே அம்மா ஏனம்மா நாங்கள் தமிழர் நாடு எடுக்கக் கஷ்டப்படுகிறம் அப்பா தமிழர் இல்லையா அம்மா”
கேள்விகள் பல ரகம் ஆனவை. சில சிந்திக்க வைப்பன. சில புத்திசாலித்தனமானவை. சில முட்டாள் தனமானவை. சில பதில் சொல்ல முடியாதவை. சில பதில் சொல்லக் கூடியன. சில தெளிவானவை. சில தெளிவற்றவை. இது எந்தவகைக் குரிய கேள்வி. ஏதோ என்னமோ இது மிகவும் ஆழமானதும் கூர்மையானதுமான கேள்வி என்பது உண்மை. குறுகிய சுயநல வட்டத்தினுள் நின்றுகொண்டிருக்கும் தனது வாழ்வை நினைக்க வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது.
“நாங்கள் சாப்பிட்டுட்டு படுப்பமா அப்பன?”
உடனடியாக எழுந்துவிட்டாலும் குறுகுறுக்கின்ற மனம் அன்றைய தூக்கத்தைத் தொலைத்துவிட்டிருந்தது.
சில நாட்கள் கழிந்தன. பார்வதி ஆச்சியின் நோய் தீவிரப் பட்டிருந்தது. சுவாசிப்பது சாதாரணமாக அன்றி அவளது தொழிலாக மாறியிருந்தது. மூச்சு சத்தத்துடன் வந்து போய்க்கொண்டிருந்தது. “இன்னும் என்ன இரண்டு நாள் தங்கினா அது பெரிய விஷயம்” பக்கத்து குடித்தனகாரரின் தீர்க்கதரிசனத்தில் குழந்தை போல அழுதிருந்தாள். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து விட்டிருந்த அவளுக்கு பாட்டிதான் எல்லாமுமாக இருந்தாள். கீதனன் அவுஸ்திரேலியாவுக்கு போய்விட்ட பிறகு கூட பாட்டி தான் ஓரளவு தனிமையைத் தீர்த்தாள். தோல்விகளில் இவள் துவண்ட பொழுதில் “இழந்துவிட்ட சூரியனுக்காக எப்போதும் அழுது கொண்டிருப்பதைவிட உனக்குக் கிடைத்துள்ள நட்சத்திரங்களை ரசிக்கப் பழகு”. என்பாள். பாட்டிக்குத் தெரியாது அது தாகூரின் வரிகள் என்று. ஆனால் இப்படிப் பல விஷயங்கள் பாட்டியின் செவி வழிச் செல்வங்கள். இத்தனை அறிவான பாட்டி காணிப் பத்திரத்துக்கு கையெழுத்து இடுவதெண்டாலும் கட்டை விரலுக்கு கை நனைக்க வேண்டியவளாகத்தான் இருந்தாள். பத்திரிகைகள் வாசிக்கச் சொல்லிக் கேட்பாள். அரசியலில் பாட்டி வலு ஈடுபாடு. “எங்கடை பிள்ளையள்” என்று உருகிப் போவாள். சந்திரிகாவும் பிரபாகரனும் பாட்டிக்கு மிகச் சின்ன விடயங்கள். கத்தரிக்காய்க் கறிக்கு உப்பினளவு சொல்வது போல வெற்றிலை காயாமல் பேண வழி சொல்வது போல பல ராஜ தந்திரங்களை சிம்பிளாய் எடுத்து வீசுவாள் அவள்.
“இதில் கொஞ்சம் நிதானமாய் நடந்து கொண்டிருக்கலாம் தான். ஆனால் நெருப்பு எப்பிடி சுடாமல் இருக்க முடியும்? சுடுவது அதன் இயல்பு. நாங்கள்தானே அதை அறிவோடை பயன்படுத்த வேண்டும். இவங்கள் துடிப்பான இளங் குருத்துகள். இவர்களுக்குள் கோவம் அடிக்கடி கிளரும். அம்மையார் பொறுத்துப் போகலாம் தானே” என்று வாதிடுவாள்.
“இல்லைப் பாட்டி நாங்கள் தமிழர் எண்ணிக்கையும் குறைவு பொறுத்துத்தானே போகவேணும்” என்று பாட்டியிடம் யாராவது சீண்டினால் போதும் பாட்டிக்குள் எரிமலையே வெடிக்கும்.
“எண்ணிக்கையும் குறைவோடா? வேறு எது குறைவு? நீ தமிழன் தானே எண்டிட்டு துணி உரிஞ்சிட்டுந் திரிவியேடா? மானம் வேணுமடா? மண்ணுக்கு மானம் இருக்கு. அந்த மண்ணைக் காக்க போராடப் பழகு. இல்லையெண்டா அப்பிடிப் பட்டதுகளை மரியாதை செய்ய ஆவது பழகு.”
பிறகு பாட்டியின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சில் தியாகி சிவகுமாரன், தந்தை செல்வா, மாவீரரெல்லாம் வந்து போகும் தரங்கிணி புறநானூற்று வீரத்தாயையும் வேழம் படுத்த வீரத் தாயையும் நினைத்துக் கொள்வாள். வீரம் சேர்ப்பது தாய்முலைப் பாலடா என்ற வரகவியின் கூற்று நினைப்பில வரும். பாட்டி கூட ஒரு பிள்ளையை மண்ணுக்குக் கொடுத்து விட்டவள் தான்.
“தாரா…..டியேய்…தாரா…. பக்கத்திலை நிக்கிறியே மோனை பாட்டி கண்களை மூடியபடியே கேட்டாள்.
“ம்…… சொல்லுங்கோ பாட்டி… ஏதாவது தேவையே…” இவள் குரலில் கவலை கரகரப்பு வடிவத்தில் ஏறி இருந்தது.
“இல்ல மோனை நானும் இனிப் போய்ச் சேந்திடுவன். நீ இந்தக் குஞ்சு குருமனை வைச்சுக்கொண்டு என்னடி யம்மா செய்யப் போகிறாய்? எனி எங்கடை இடத்துக்குப் போகக் கிடைக்குதோ என்னமோ? நோயின் வேதனை பாட்டியைப் பேசவிடாமல் தடுத்தது.
“அதெல்லாம் போயிடுவம் பாட்டி. அரசடிச் சாத்திரியார் அப்பிடித்தானே சொன்னவர்.” தொடர்ந்தவளை பாட்டியின் குரல் இடைமறித்தது.
“அதுக்கில்லை மோனை. எங்கடை வடமராட்சி மண்ணுல புதைக்கக் கிடைக்கேல்லையே எண்டு சின்னக்கவலை ஒண்டு. அது போக, இந்தப் பிள்ளையள் எத்தினை எத்தினையாய்ச் செத்துப் போச்சுதுகள். தமிழனுக்கு எப்பதான் விடியப்போகுதோ?
“பாட்டி பிள்ளைகள்” பற்றிச் சிந்தித்தபடியே செத்துப் போனாள். விறகுத் தட்டுப் பாட்டில் மாறிவிட்ட வழக்கத்தில் பாட்டி பக்கத்துச் சுடலையில் புதைக்கப்பட்டாள். அவளது புதைகுழியில் பூப்பரப்பிய ஒரு பொழுதில் சின்னமகன் மீண்டும் கேட்டான். “அம்மா……. பாட்டி தன்ர விருப்பப்படியே எங்கடை மண்ணுக்கு ள்ளேயே நிறைய நேரம் நித்திரை கொள்ளப் போட்டா. அப்பிடி யெண்டா அப்பம்மா அவுஸ்திரேலியாவில் செத்தாப் பிறகு அவவை இங்கை கொண்டுவர வேணுமா? அம்மா.”
மகனைப் பார்த்தாள் அவள். வேர்களை நன்றாக ஊடுருவ விட்ட மரம் போல ஒரு உறுதியான தேச உணர்வு அவன் விழிகளில் சுடர்ந்து கொண்டிருந்தது.
இப்போது ஏனிந்த பழைய ஞாபகப் பவனி? காரணம் இருந்தது. மீண்டும் தத்தம் இடங்களுக்குத் திரும்பி விட்ட பிறகும் வாழ்வில் ஒரு நிச்சயமற்ற தன்மை. நேற்று வந்த கணவனின் நீலமடலில் இவள் இன்னும் குழம்பிப் போனாள்.
என்றும் என் இனிய தரங்கிணி,
நலம் நலம் அறிந்ததால் சந்தோஷம். குழந்தைகளுக்கு அன்பு முத்தங்களுடன் தொடர்கின்றேன்.
இப்போது உவ்விடம் பிரச்சினை ஏதுமில்லைஎன எழுதி யிருந்தாய். ஆனால் என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் பயத்தின் அதிர்வுகள் தான் நிறைந்திருக்கின்றது. குழந்தைகளும் நீயும் இங்கு வந்து விடுவது நல்லதென்றே தோன்றுகின்றது. எமது இளமைக் கனவுகள் எரிய எரியத் தொழிலுக்குள் மூழ்கிய நாட்கள் தான் எத்தனை? தரங்கிணி, எத்தனையெத்தனை கொடிய இரவுகளில் ன் பிரிவின் கொடுமையில் அழுதிருக்கின்றேன் தெரியுமா? என் வரையில் பிரிவின் வேதனை சொல்லத் தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லையென்பேன்.
வர்ணச் சித்திரத்தை வரைந்துவிட்டுப் பரண்மீது தூக்கிப் போட்டுவிட முடியுமா? இத்தனை நாட்களில் எம் குடும்பத்திற்கான பொருளாதாரச் செழுமையைற் தேடியிருக்கின்றேன். ஆனால் நல்லதோர் வாழ்விற்கு எம்மண் பொருத்தமானதா? நீ முன்னைய நாட்களில் பிறநாட்டு வாழ்வினை விரும்பாதவிடத்தும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டுகின்றேன். இவை வெறும் வரிகள் இல்லை. என் உயிர் உருகி வழியும் வரிகள். உடன் பதில் தேவை.
இன்னும் பதில் எழுதவில்லை. போவதா? எம் தமிழ் மண்ணைவிட்டுப் போய் விடுவதா? தமிழ் கலாச்சாரம் மொழி எதுவுமே இல்லையாகிப் போகுமா? கணவனின் தங்கையின் மகளவை பற்றி நினைப்பு எழுந்தது. ஒருத்தி ‘மல்’ மற்றவள் ‘மங்க்’ இவர்களின் இயற்பெயர் மல்லிகா, மங்கை என்றாலும் நாகரீகம் கருதி மாற்றிக் கொண்டார்களாம். ஓ! என் மலரவனும்… மாதங்கியும்……. அவர்களின் தலை வருடி மீண்டும் சிந்தனைக்குள் மூழ்கிப் போனாள்.
நேற்றைய நிகழ்ச்சி நினைவில் படர்ந்தது. கருமுகில்கள் வான்பரப்பில் ஊர்கோலம் போயின. காரணம் இது மார்கழி மாதம். அடிக்கடி அழுகின்ற தமிழினம் போல எதிர்பாராத தருணங்களில் எல்லாம் அவை மழையைச் சொரியும். மீண்டும் சிறிதாகச் சூரியமுகம் தெரியும். மரங்களிற் செழுமை. குளித்துவிட்டு நிற்கின்ற அழகுப் பெண்ணாக. எங்கள் தேசம்… இத்துணை அழகா என்று ஒரு வியப்பு அலை மனக்கடல் ஓரம் வரை வந்துபோகும். அவ்வாறான ஒரு மங்கலான மாலைப் பொழுதில் “அம்மா….. அம்மா…. நிறையவும் சின்னச் சின்னக் குடைகள் அம்மா” முதலிரு அம்மா என்ற அழைப்புக்கும் பயந்து பதறி தொடர்ந்த செய்தியில் நிதானமாகி வெளியே வந்தாள் தரங்கிணி. மனதினுள் காலையில் வந்த கீதனின் கடிதமும் சிந்தனைக் குழப்பங்களும் சிதறிக் கிடந்த பொழுது அது “ஓ! காளானைக் கூட்டமாகக் கண்டிருக்கின்றான்” தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அங்கு ஒரு அழுக்குச் சேருகின்ற தாழ்வான பகுதி ஒன்றில் நீர்வடிந்த நிலத்தில் செழிப்பாக ஐந்து காளான்கள் நிமிர்ந்திருந்தன.
“இதென்ன இது. எழும்பு அப்பன்….. இந்த ஊத்தைக்குள்ள….. காலில் ஒரு செருப்புக் கூட இல்லாமல்….”
தாயின் அதட்டலில் மெதுவாக எழுந்து வந்தது பிள்ளை. ஆனால் திரும்பித் திரும்பி அந்தக் காளான்களையே பார்த்தபடி….. அந்தக் காளான் கூட்டத்தில் அப்படி என்ன அழகைக் கண்டுவிட் டான்? அவளுக்குப் புரியவே இல்லை. கால்கள் கழுவி வீட்டினுள் கூட்டி வந்த பின்னும் மௌனமாகவே இருந்தான்.
“என்னப்பன்”
தாயின் மிருதுவான குரலுக்குத் திரும்பினான். சின்ன விழிகளின் இமைகள் படபடத்தன. சிறு வண்ணத்துப்பூச்சி செட்டையடிப்பது போலிருந்தது அது.
“அம்மா! முந்திப் பாட்டி சொன்னவ எல்லேயம்மா. அண்ணாவையள் மண்ணைக் காக்கப் போராடினம் எண்டு அந்த அண்ணாவை மாதிரித் தானேயம்மா இந்தக் காளானும்…. என்னம்மா?”
“என்ன மலர்? என்ன சொல்லுறாய்…?”
என்றும் அன்புடன் உன் கீதனன்.
“பாட்டி சொன்னா, தமிழ் மண்ணை அண்ணாவை காக்கினமாம். இந்தக் காளானும் மண் நனையாமலுக்குக் குடை பிடிக்குதம்மா… அதுதான்..”
ஓ! இவன் காலம் வளர்ந்த குழந்தை. இவன் சுவாமிநாதன். இவன் குழந்தைத் தெய்வம். குருவாகிக் குமரப் பெருமான் ஈஸ்வரனுக்கு ஞானம் சொன்னானாமே. இவனும்…. இவன் தாய்க்கு உபதேசிக்கிறான். காளானில் கூடத் தியாக வீரர்களைக் காணுகிறான். தாயின் விழிகளில் பெருமிதம் தெரிந்தது. கலங்கிப் போன கண்களோடு மகனை முத்திமிட்ட போது தமிழின் விடிவு பற்றிக் கொஞ்ச நம்பிக்கை வந்திருந்தது.
தாய்மண் பற்று ஊறிய சிறு செடி இவன். நாளைய தமிழ்க் கலாச்சாரத்தின் மூலமாக விளங்கப் போகிறவன். இவன் மனத்துச் சிந்தனைகள் தமிழ் தேசத்தின் படிமானங்கள். ஒரு தேசத்துக்கான வெளிக்காட்டப்படாத விடிவெள்ளி இவன். இவன் போன்ற குழந்தைகள் இன்றைய எம் தேசத்தின் தேவை. தரங்கிணியின் மனதில் ஆயிரமாயிரம் எண்ண அணிவகுப்புக்கள்!
மெதுவாக எழுந்து கட்டில் சட்டத்தில் முதுகு சாய்ந்து உட்கார்ந்தாள். நேரம் மூன்று மணி கடந்து முக்கால் மணி நேரம் விலகி விட்டிருந்தது. மகன் படுக்கையில் புரண்டான். சிறுபிள்ளைத் தனமான இவனது செயல்களைப் பார்த்து முடிவுகளை எடுக்க முடியுமா? கீதனனுக்கு அவள் சொல்லப் போகின்ற பதில் தான் எது? தவிர்க்க முடியாத காரணங்களில் போனவர்கள் ஒரு புறம். இவள் போவது அவசியந்தானா?
மீண்டும் மகன் அசைந்து படுத்தான். சின்னக் கைகளில் ஒன்று போர்வையின் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. ஏன் கைகளை இறுக மூடியிருக்கிறான்? தனக்குள் முணுமுணுத்தபடி பிஞ்சு விரல்களைப் பிரித்தாள். இளஞ்சிவப்பாய்ப் பூவின் மென்மையுடனான கைகளை நித்திரையிலும் இறுக மூட முயற்சித்தது கண்டு அவளது ஆவல் இன்னும் அதிகரித்தது. மெதுவாக சின்ன விரல்களைப் பிரித்த போது உள்ளே….. காளான்…. அதே வெண்குடைபோல் விரிந்த காளான். சுருங்கிக் கசங்கிக் கிடந்தது.
உடல் முழுவதும் ஒருமுறை சிலிர்த்தது.
“எங்கடை தமிழுக்கும் ஒரு விடிவு வரத்தானே வேணும்”
பாட்டியின் குரல் காதினுள் ஒலிப்பது போலிருந்தது. தரங்கிணி எழுந்தாள். மனதில் சகல உணர்வுகளையும் மீறித் தெளிவு படர்ந்தது. பிள்ளையின் தேச உணர்வுகளை நசிப்பதற்கு அவள் தயாராக இல்லை. அவ்வாறான உரிமை இருப்பதாகவும் புரியவில்லை.
என்றும் என் அன்புக்குரியவருக்கு…. மடல் தொடங்கினாள் தரங்கிணி மனதில் உறுதி, தெளிவு, நம்பிக்கை அவ்வளவுதான்.
மழை முற்றுமாய் ஓய்ந்திருந்தது. புல்நுனிகள், சிறுமரங்கள், பூச்செடிகள், பறவையினங்கள்….. ஏன் உயிரினங்கள் யாவிலும் சடப்பொருட்கள் யாவிலும் உதயத்துக்கான உற்சாகங்கள்! ஓ! வானம் வெளிக்கப் போகிறது. வானம் மட்டுமல்ல…. தேசமும் வெளிக்கத்தான் போகிறது. ஏனென்றால் கீழ்த்திசையில் மட்டுமல்ல. தரங்கிணியின் பக்கத்திலும்… சின்னச் சூரியன்…..
– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
விளக்கேற்ற வந்தவள்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026