வாணீபுர வணிகன்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,331
(1957ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான்காம் அங்கம் | ஐந்தாம் அங்கம்
முதற் காட்சி
இடம் – மணிபுரம். சரோஜினியின் வீட்டைச் சார்ந்த பூந்தோட்டம்.
லீலாதரனும், ஜலஜாவும் வருகிறார்கள்.
லீ. நிலவு மிகவும் பிரகாசமாய்க் காய்கிறது! மந்தமாருதமானது, இச் செடிகளின்மீது மிருதுவாய் அவைகள் ஓசை செய்யாதபடி, சுகந்தமாய் வீசும், இத்தன்மையான ஓரிர வில்தான், ஸ்ரீராமர் கந்தமாதனத்தின் மீதேறி இளங்கொடி யாகிய சீதை காவலிலிருக்கும் இலங்கையை நோக்கி, அவள் பிரிவை யாற்றாது பெருமூச் செறிந்தார்.
ஜ. இத்தன்மையான ஓரிரவில்தான், காதலால் வருந்திய ராதை யானவள், கிருஷ்ணனைத் தேடி,எங்கும் காணாது, கால் சோர்ந்து, இடை துவண்டு, தேகம் மெலிந்து, கண் மழுங்கி கவலையுற்று, கருத்தழிந்தாள்.
லீ. இத்தன்மையான ஓரிரவில்தான், தமயந்தியானவள், கா ரிருளில் தன்னைக் கைவிட்டுப்போன காதலனை நினைந்து கண்ணீர் கலங்கக் காடெங்கும் தேடித் திரிந்தனள்.
ஜ. இத் தன்மையான ஓரிரவில்தான், சகுந்தலையானவள் மறுதினம், துஷ்யந்தனிடம் போகவேண்டி தன் மெல்லிய கைகள் நோக வன மலர்களைப் பறித்து மாலையாகக் கட்டிக் கொண்டிருந்தனள்.
லீ. இத் தன்மையான ஓரிரவில்தான், செல்வ வந்தனான சமணன் வீட்டிலிருந்து ஜலஜா, செலவாளியாகிய தன் காதலனுடன், வாணீபுரம் விட்டோடி மணிபுரம் வந்து சேர்ந் தனள்.
ஜ. இத் தன்மையான ஓரிரவில்தான், லீலாதரர் என்னும் இளை ஞர், அவள்மீது அதிக காதல் கொண்டிருப்பதாகச் சத்தியம் செய்தார். – பல உறுதிமொழிகள் கூறி அவள் மனத்தைக் கவர்ந்தார், ஆயினும் அவைகளில் ஒன்றேனும் உன்மையானதல்ல.
லீ. இத் தன்மையான ஒரிரவில்தான், அழகிய ஜலஜா, சண் டைக்காரச் சிறுமியைப்போல் தன் காதலன் மீது வீணிற் பழி சுமத்த, அவன் அதை மன்னித்து விட்டான்.
ஜ. இம்மாதிரியாக பொழுது விடியு மளவும் உமக்குமேல் பேசிக்கொண்டிருப்பேன், வேறொருவரு மிங்கு வராவிட் டால்.-அதோ கவனியும், யாரோ மனிதனுடைய கால் சப்தம் கேட்கிறது.
ஸ்தாவிரன் வருகிறான்.
லீ. நிசப்தமான இந்நிசியில் இத்தனை வேகமாக வருவது யார்?
ஸ். ஒரு நண்பன்.
லீ. ஒரு நண்பன்! எந்த நண்பன்? அப்பா, நண்பா, உன் பெயரை வெளியிடும்படி வேண்டுகிறேன்.
ஸ். என் பெயர் ஸ்தாவிரன்; எனது எஜமானி பொழுது விடியு முன் இங்கே மணிபுரம் வந்து சேர்வார்களென்று உம்மிடம் சேதி சொல்ல வந்தேன்; தன் கணவனுடன் சுகமாய் வாழ வேண்டி, வழியிலுள்ள கோயில்களி லெல்லாம் தங்கிப் பணிந்து பூஜை செய்துகொண்டு வருகிறார்கள்.
லீ. அவர்களுடன் யார் வருவது?
ஸ். பூஜ்யரான ஓர் சந்நியாசி ஒருவரும், அவர்களுடைய தோழி யும் தவிர, வேறொரு வருமில்லை. எனது எஜமானன் திரும்பி வந்து விட்டாரா? கொஞ்சம் தயவுசெய்து சொல்லவேண் டும்.
லீ. இன்னும் அவர் வர வில்லை; அன்றியும் அவரைப்பற்றி ஒரு சேதியும் நாங்கள் கேட்டோ மில்லை.- ஜலஜா, வா, நாம் உள்ளேபோய், வீட்டின் எஜமானியை மரியாதையுடன் நல் வரவழைப்பதற்குத் தக்க ஏற்பாடு செய்வோம்,
லாவண்யன் வருகிறான்.
லா. பலே, பலே! ஹோ, ஹா! பலே, பலே!
லீ. யார் அது கூவுகிறது?
லா. பலே! எஜமானும் எஜமானியுமாகிய லீலாதரரையும் அவரது மனைவியையும் பார்த்தீரா நீர்? பலே பலே!
லீ. அடே, உன் கூச்சலை நிறுத்து; இதோ.
லா. பலே! எங்கே? எங்கே ?
லீ. இங்கே.
லா. அவரிடம், என் எஜமானிடமிருந்து, நிரம்ப நற் செய்தி யுடன் ஒரு தபால் வந்ததாகச் சொல்லும்; பொழுது விடியு முன் என் எஜமான் இங்கே வந்து சேர்வார்.(போகிறான்.)
லீ. கண்ணே, ஜலஜா, நாம் வீட்டிற்குள்ளே போயிருந்து, அவர் கள் வரவை எதிர் பார்ப்போம்.-ஆயினும் பெரிதல்ல;-நாம் ஏன் உள்ளே போகவேண்டும்; – அப்பா, தோழா,ஸ்தா விரா வீட்டிலே, உங்கள் எஜமானி சமீபத்தில் வந்திருப்ப தாகத் தெரிவிக்க வேண்டுகிறேன் உன்னை ; வாத்தியக் காரர்களை வெளியில் இங்கே அழைத்துவா.
[ஸ்தாவிரன் போகிறான்.]
இந்த உயர் நிலத்தின்மீது நிலவு என்ன சுகமாய் நித்திரை செய்வதுபோலிருக்கிறது!இங்கே நாம் உட்கார்ந்து ச சங்கீதத் தின் ஒலியானது மிருதுவாய் நமது செவிக்குள் புகச் செய் வோம். நிசியும் நிசப்தமுமே, சங்கீதத்திற்கு ஒரு சுருதியைப் போல் மிகுந்த சுகத்தை யுண்டுபண்ணத் தக்கன; ஜலஜா, உட்கார் அதோ பார், ஆகாயத்தின் விதானமானது ஒள் ளிய அபரஞ்சியினால் இழைக்கப்பட்டதுபோல் என்ன அழ காய் விளங்குகின்றது ! நீ கண்கொண்டுகாணும் ஒவ்வொரு சிறிய நட்சத்திரமும், தன் நாதனான சந்திரனது காதலைப் பெற, தன் இனிய குரல் கொண்டு பாடுகின்ற தென நினை. அகிலமெல்லாம் அந்தச் சங்கீதம் நிறைந்திருக்கிறது. ஆயினும் அழிந்திடும் மண்ணாலாகிய இவ்வுட லென்னும் ஆடையானது, நமது ஆன்மாவைக் கவர்ந்திருக்கும் வரை யில், அந்தத் தெய்வலோகத்துச் சங்கீதம் நமது செவிக் குப் புலப்படாது.
வாத்தியக்காரர்கள் வருகிறார்கள்.
ஹா! வாருங்கள், ஒரு பாட்டைப் பாடி உறங்கும் மதியை விழிக்கச்செய்யுங்கள்; உங்களுடைய இனிமையான ஸ்வரங்க ளினால், உமது எஜமானியுடைய காதைத் துளைத்து, வாத் தியத்துடன் வரவழையுங்கள் அவர்களை வீட்டிற்கு.
(சங்கீதம்.]
ஐ. திவ்வியமான சங்கீதம் என் செவியிற்பட்டால் என் மன மானது களிப் படைகிற தில்லை ஒருபொழுதும்.
லீ. அதற்குக் காரணம், உனது ஆன்மாவானது அதிக கவனத் துடன் இருப்பதேயாம்; எதேச்சையாய்த் திரியும் மதர்த்த மிருகங்களின் மந்தையையாவது, உடலி லுற்ற இரத்தக் கொழுமையினால் வெறித்தனமாய்க் குதித்தும் எக்காளமிட் டும் உரத்த சப்தத்துடன் கனைத்தும் திரியும், கைப்பழக்கப் படாத குதிரைக்குட்டிகளின் கூட்டத்தையாவது, கவனித்துப்பார். வாத்யத்தின் கோஷமாவது, அல்லது சங்கீதத்தின் ஸ்வரமாவது அவைகளின் செவியிற் பட்டமாத்திரத்தில் உடனே சங்கீதத்தின் இனிமையான சக்தியினால், தங்கள் குரூரமான பார்வை சாந்தமான பார்வையாக மாற, அவை கள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு அசைவற நிற் பதைக் காண்பாய். ஆகவே கவியானவர், ஸ்ரீகிருஷ்ணனது குழலோசையைக் கேட்டு செடிகள் முதலியனவும், கற்களும், ஆறுகள் முதலியனவும், உருகி ஆனந்த சாகரத்தில் மூழ்கி யதாக வர்ணித்திருக்கின்றார். ஏனெனில், உலகத்தில் எப் படிப்பட்ட ஜடமாயிருந்தபோதிலும், கடினமான தாயினும் எப்படிப்பட்ட மூர்க்கமான தாயினும், சங்கீதமானது தற் சமயம் அதன் குணத்தை மாறச்செய்கிறது. சங்கீத ஞானம் சற்றுமில்லாது மதுரமான சங்கீதத்தைக்கேட்டு மன முருகாத மனிதன் ஒருவன் உண்டேல், அவனை ராஜத் துரோகி யென்றும், சதிக்காரன் என்றும், பறித்துண்ணும் கொடியனென்றும், நாம் மதிக்கவேண்டும். அவனது உணர்ச்சியானது அரு நரகைப்போல் இருண்டதாயும், அவனது ஆன்மா அந்தகாரத்தில் முழுகியதாகவும், நாம் அறியவேண்டும். அப்படிப்பட்ட மனிதனை அரைக்ஷணமும் நாம் நம்பலாகாது. அதோ, சங்கீதத்தைக்கேள்.
சற்று தூரத்தில் சரோஜினியும், நீலகேசியும் வருகிறார்கள்.
ச. அதோ, நமது கண்ணுக்குப் புலப்படுகின்ற விளக்கு எனது அறைக்குள் எரிகின்றது. அந்தச் சிறு விளக்கின் ஒளி யானது எவ்வளவு தூரம் பிரகாசிக்கின்றது! இப்பாழான உலகத்தில் அவ்வாறே நெடுந்தூரம் பிரகாசிக்கின்றது ஒரு நற்செற்கை.
நா. சந்திரன் பிரகாசித்தபொழுது அந்த விளக்கை நாம் பார்க்க வில்லை.
ச. அவ்வாறே பெரிய ஒளியானது சிறு ஒளியை மழுங்கச் செய்கிறது; ஒருமஹாராஜாவின் பிரதிநிதி அம்மஹாராஜா அரு கில் வருமளவும் தான் பிரகாசிக்கின்றான் மஹாரர்ஜாவைப் போல்; அரசன் அருகில் வந்தவுடன். ஓடையானது பெரும் ஆற்றில் கலந்து மறைவதேபோல், அவனது பெருமையெல் லாம் அரசனுடைய தேஜசில் ஐக்ய மாகிவிடுகிறது.– அதோ கேள் ! வாத்யம்!
நா. அம்மா, அது உமது வீட்டில் வாசிக்கப்படும் வாத்தியமே.
ச. அயலி லிருந்தால்தான் அறிகிறேன் ஒன்றின் மகிமையை; இந்தச் சங்கீதம் பகற் பொழுதைவிட, இரவில் அதிக இனி மையாயிருக்கின்றது என்று எண்ணுகிறேன்.
நா. இரவில் நிசப்தமா யிருப்பதால் அது அத்தனை இனிப் பாகக் கேட்கின்றது, அம்மணி.
ச. நாம் கவனிக்காவிட்டால், காக்கையும் குயிலைப்போல் பாடு வதுதான். வானம்பாடியானது பகற் காலத்தில் வாத்து கள் எல்லாம் கத்தும்பொழுது பாடினால் கோட்டானுக்குச் சமானமான சங்கீத வித்வானாக மதிக்கப்படும் என எண்ணு கிறேன். ஒவ்வொரு விஷயமும் இவ்வுலகத்தில் சரியான காலத்திலும் சரியான இடத்திலும் இருந்தால்தான் தக்க படி சோபித்து தக்க புகழ்ச்சியைப் பெறும். பொறு-ஹா! – சந்திர னிவ்விடத்தில் உறங்குவதுபோல நிசப்தமாய் நிலவு உறங்குகிறது; அதற்கு நாம் நித்திராபங்கம் வரச் செய்யலாகாது.
(வாத்யம் நின்று விடுகிறது.)
லீ. அது சரோஜினியின் குரல், அன்றேல் நான் அதிக மோசம் போனவனே.
ச. குருடனானவன் கடுங் குரலைக் கேட்டு, காகம் என்பது போல், என்னைத் தெரிந்துகொள்கிறார் லீலாதார்.
லீ. அம்மணி, வரவேண்டும், வரவேண்டும்!
ச. எங்கள் கணவர்கள் சௌக்கியமாய் வீடு வந்து சேரவேண்டு மென்று பூசனை
இயற்றிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரார்த்தனையினால் அது சீக்கிரம் முடியுமென்று கோரு கிறோம். அவர்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்களா?
லீ. அம்மா, இன்னும் அவர்கள் வந்து சேர வில்லை. ஆனால் அவர்கள் சீக்கிரம் வந்து சேர்வதாக ஒரு தூதன் முன் தாகச் செய்தி கொண்டுவந்திருக்கிறான்.
ச. நீலகேசி, நீ வீட்டிற்குள்ளே போய் நாம் வீட்டை விட்டு வெளியே போ யிருந்ததைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் கவனிக்கவேண்டிய தில்லை என்று உத்தரவு செய், எனது வேலைக்காரர்களுக் கெல்லாம்-லீலாதாரே, நீரு மப்படியே:
ஜலஜா நீயு மப்படியே.
(எக்காளம் ஒன்று ஒலிக்கின்றது.)
லீ. அம்மா, உமது கணவர் அருகில் வந்திருக்கவேண்டும். அதோ அவர் எக்காளத்தின் ஒலி! அம்மணி, நாங்கள் கோள் சொல்லமாட்டோம், நீர் அஞ்சவேண்டியதில்லை.
ச. மலிந்த பகற் பொழுதைப்போ லிருக்கிறது இன்றிரவு; பகலைவிட கொஞ்சம் மங்கலா யிருக்கிறது; சூரியன் சற்றே மறைந் திருக்கும்பொழுது பகல் எப்படி இருக்குமோ, அப்படியிருக்கின்றது இப்பொழுது.
பானுசேனன், அநந்தநாதன், கிரிஜாநாதன் பரிவாரங்களுடன் வருகிறார்கள்.
பா. சூரிய னில்லாத வேளையில் நாம் வெளியே நடப்போமானால், நாகலோகத்தவர் பகலை நாம் கொண்டாடுவதாகும்.
ச. நான் உமக்கு வெளிச்சம் தருகின்றேன் பதிவிரதையான மனைவி தன் புருஷனுக்கு ஒரு விளக்கைப்போ லிருக்க வேண்டும். அதெல்லா மிருக்கட்டும் பிராணநாதா, நீர் திரும்பி வந்தது சந்தோஷம்.
பா. மிகவும் சந்தோஷம். இதோ, என் நண்பர், இவர்தான் அநந்தநாதர், இவருக்கு நல் வரவு கூறுவாய். இவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனா யிருக்கின்றேன்.
ச. நீர் எவ்விதத்திலும் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவரா யிருக்கவேண்டியது நியாயந்தான். ஏனெனில், நான் கேள் விப்படுகிற பிரகாரம், அவர் உமக்காக மிகவும் கடன் பட்டிருந்தா ரன்றோ?
அ. அந்தக் கடனை யெல்லாம் அவர் தீர்த்துவிட்டார்.
ச. ஐயா, தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்கள் பாக்கி யம். தங்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை வாசாவி (60) லன்றி வேறு வழிகளிற் காணப்படவேண்டும்; ஆகவே இந்த மரியாதை வார்த்தைகளை மட்டுப்படச் செய்கிறேன்.
[கிரிஜாநாதனும் நீலகேசியும் ஒரு புறமாகப் பேசுகிறார்கள்.]
கி. அதோ, அந்த சந்திரன்மீ தாணைப்படி, சத்தியம் செய்கிறேன், நீ என்னை வீணாக தூஷிக்கிறாய். வாஸ்தவத்தில் அந்த நியாயவாதியின் கணக்குப் பிள்ளைக்குக் கொடுத் தேன். நீ அதை ஹிருதயத்திற் கொண்டு இவ்வளவு கோபித்துக் கொள்கிற விஷயத்தில், அவன் அலியாயிருக் கானா என்று கோருகிறேன்.
ச. ஆ! இதற்குள்ளாக ஒரு சண்டையா? என்ன சமாசாரம்?
கி. ஒரு சிறிய பொன்வளையம், ஒரு அற்ப மோதிரம் இவள் எனக்குக் கொடுத்தாள், அதைப்பற்றி; “என்மீது காத லோடிரு என்னைக் கைவிடாதே” என்று பழய கதை யொன்று எழுதியிருந்தது அதன்மீதில்.
நீ. என்ன! அதில் எழுதியிருந்த கதையும் அதன் விலையும் பற்றி நீர். பேசுவானேன்; நானதை உமக்குக் கொடுத்த பொழுது, நீர் சாகுமளவும் அதை உமது விரலில் அணிந் திருந்து, சமாதியிலு மும்மை விட்டுப் பிரியாதிருக்கு மென்று நீர் பிரமாணம் செய்தீரா இல்லையா? எனக்காக இல்லாவிட்டாலும், நீர் செய்து கொடுத்த பிரமாணங் களின் பொருட்டாவது, அதை நீர் ஜாக்கிரதையாகப் பாது காத்து வைத்திருக்க வேண்டாமா? நியாயவாதியின் கணக் கனுக்கா கொடுத்தீர்!போம் போம்,சுவாமியறிய அதைப் பெற்ற கணக்கனுக்கு முகத்தில் மீசையே முளையாது?
கி. இப்பொழுது இல்லை,இன்னும் வயதானால் மீசை முளைக்கும்.
நீ. பெண் பிள்ளை ஆண் பிள்ளை யானால்தான் அப்படியாகும்!
கி. இதோ! இந்தக் கையறிய நான் ஒரு பையனுக்குத் தான் கொடுத்தேன்; ஒரு மாதிரியான சிறுவன், சின்ன குட்டைப் பிள்ளை, உன் உயரம் தானிருப்பான், அந்த நியாயவாதி யின் ராயசம்; தான்பட்ட கஷ்டத்திற்கு கூலியாகவேண்டு மென்று கெஞ்சினான், கொடேன் என்று மறுக்க என்மனம் தாளவில்லை.
ச. நீர் செய்தது தவறு; நானும்மிடம் ஸ்பஷ்டமாகச் கொல்ல வேண்டும். உமது மனைவி உமக்கு முதல் முதல் கொடுத்த பொருளை அவ்வளவு சுலபமாகக் கொடுத்து விடலாமா? அதுவும் சத்தியம் செய்து உமது விரலிலிட்டது; ஆகவே ஆணையினால் ஆணியறைந்ததுபோல் உமது விரலை விட்டு நீங்கா திருக்கவேண்டாமா; இதோ என் பிராணநாதருக்கு நான் ஒரு மோதிரம் கொடுத்திருக்கிறேன், அதை ஒரு பொழுதும் விட்டுப் பிரிவதில்லை என்று அவர் பிரமாணம் செய்யும்படி செய்திருக்கிறேன். இதோ இருக்கின்றார்; இவ் வுலகத்தி லுள்ள பொருளை யெல்லாம் கொடுப்ப தானாலும் அதற்காக அதைக் கொடுக்க மாட்டார். அவர் விரலை விட்டுக் கழற்றவு மாட்டார். அதை, என்றும் அவர் பொருட்டு நான்பிரமாணம் செய்வேன்! ஐயா, கிரிஜா நாதரே, உமது மனைவிக்கு மிகவும் வருத்தம் விளைக்கின்றீர் கருணையின்றி; எனக் கிம்மாதிரியான துயரம் நேரிட்டால் பயித்திய மன்றோ பிடித்துப் போம் எனக்கு.
பா. [ஒரு புறமாக] பேசாமல் என்கையை அப்படியே வெட்டிக் கொண்டு, அந்த மோதிரத்தைக் காப்பதில் அந்த கையைப் பறிகொடுத்தேன் என்று சத்தியம் செய்வதே நலம்.
கி. பானுசேனர் தன் மோதிரத்தை, அதைப் பெறுதற்கு மிகவும் அருகனான அந்த நியாயவாதி அதிகமாய் வற் புறுத்தி வேண்டிக் கேட்டதின் பேரில் அவருக்குக் கொடுத்து விட்டார்; பிறகு, எழுதுவதில் கொஞ்சம் கஷ்டம் எடுத்துக் கொண்ட அவருடைய ராயசக்காரனான அந்த கணக்கன், என்னுடைய மோதிரத்தைத் தரும்படி வேண்டி னான்; அவர்களிரண்டு பெயரும் அந்த மோதிரங்களை யன்றி வேறொன்றையும் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.
ச. பிராணநாதா ! நீர் எந்த மோதிரத்தைக் கொடுத்தீர்? என்னிட மிருந்து நீர் பெற்ற மோதிரத்தை யன்றோ?
பா. தவறிழைத்தது மன்றி அதனுடன் பொய் யொன்றும் பேசுவதானால், நான் அதல்ல, என்பேன்; இதோ நீயே பார்க்கின்றாயே அந்த மோதிரம் என் விரலிலில்லை- போய் விட்டது.
ச. கையில் மோதிரம் எப்படி யில்லையோ அப்படித்தான் பொய் யான உமது மனத்திலும் மெய்யென்பதில்லை. ஈசன் மீது ஆணைப்படி, அந்த மோதிரத்தை நான் பார்க்கு மளவும் உமது படுக்கையை நான் அண்டமாட்டேன்.
நா. நானும் என்னுடைய மோதிரத்தைப் பார்க்கு மளவும் உமது படுக்கையை அண்டேன்.
பா. கண்ணே! சரோஜினி! அந்த மோதிரத்தை நான் யாருக்குக் கொடுத்தேன் என்பதை நீ அறிந்திருந்தால், அந்த மோதி ரத்தை யாருக்காகக் கொடுத்தேன் என்பதை நீ அறிந்திருந்தால், எதற்காக அந்த மோதிரத்தைக் கொடுத்தேன் என்பதையும், நான் எவ்வளவு அதிர்ப்தியுடன் அதைக் கொடுத்தேன் என்பதையும், நீ யோசித்துப் பார்ப்பையாகில், இதைத்தவிர வேறொன்றும் வாங்கமாட்டேன், என்று அவர் பிடிவாதம் செய்ததை நீ கருதுவையாயின், நீ உனது கோபத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்வாய்.
ச. அந்த மோதிரத்தின் மகிமையை நீர் அறிந்திருப்பீராயின், அந்த மோதிரத்தைக் கொடுத்தவள் குணத்தையாவது நீர் கொஞ்சம் அறிந்திருப்பீராயின், அதைக் காப்பாற்றுகிறேன் என்று நீர் கூறிய சத்தியத்தின் திறத்தையாவது அறிந் திருப்பீராயின், நீர் அதைக் கைவிட்டிருக்கமாட்டீர்! எந்த மனிதன் – அதை நானொரு விரதமாக அனிந்திருக்கின் றேன், அதைக் கொடுக்க முடியாதென்று கொஞ்சம் உறுதி யாக அதன் பொருட்டு பேசியிருப்பீராயின் – அது தான் வேண்டுமென்று நியாயமில்லாதபடி பலவந்தப் படுத்தி யிருப்பான்? நீலகேசி நான் நம்பவேண்டியதை எனக்குக் கற்பிக்கின்றாள். என் உயிரின் மீதாணைப்படி, யாரோ பெண்பிள்ளைக்குத்தான் அதை நீர் கொடுத்திருக்கின்றீர்!
பா. இல்லை, என் உயிரின் மீதாணைப்படி, அதைப் பெற்றது பெண்பிள்ளை யல்ல, ஓர் நியாயவாதி புருஷன்; அவருக்கு நான் மூவாயிரம் பொன் தருவதாகச் சொன்னேன், வேண்டாமென்று மறுத்து அந்த மோதிரம் தான் வேண்டு மென்று கேட்டார், எனது பிரிய நண்பனது உயிரைக் காப் பாற்றியவரா யிருந்த போதிலும், அவருக்கு அதை நான் கொடுக்கமாட்டேன் என்று மறுத்து அவர் வெறுத்துச் செல்லும்படி விட்டேன். அதன் மீது, கண்மணி! நான் என்ன சொல்வது? அந்த மோதிரத்தை அவனுக்கனுப்பும் படி பலவந்தப் படுத்தப்பட்டேன் ; மானமும் வெட்கமும் என்னை பாதித்தது, நன்றியற்ற மனிதன் என்று பல நகைக்கும்படி, எனது நற்பெயரை நான் அவ்வளவு கெடுத்துக் கொள்ள என்னால் முடியாமற் போச்சுது. என் கண்மணியே என்னை மன்னிப்பாய், இதோ இரவின் தீபங்களா கிய இந்த நட்சத்திரங்கள் சாட்சியாகச் சொல்கின்றேன், அங்கே அருகிலிருந்திருப்பா யாயின், நீயாக அந்த மோதி ரத்தை அந்த புத்திமானான நியாயவாதிக்குக் கொடுக்கும் படி என்னை வேண்டி யிருப்பாய்!
ச. ஆனால் அந்த நியாயவாதி என் வீட்டின் அருகாமையில் வராமலிருக்கட்டும் எப்பொழுதும்; என் பொருட்டு என் றும் காப்பதாக நீர் சத்தியம் செய்த நான் எவ்வளவோ ஆசை வைத்திருந்து அம்மோதிரத்தை நீர் அவருக்குக் கொடுத்துவிட்டபடியால், நானும் உம்மைப்போலவே தயாள குணமுள்ளவளாவேன். என்னிடமுள்ள வஸ்துக்களில் அவர் எதைக் கேட்டாலும் நான் மறுக்கமாட்டேன்,என் உடலைக் கேட்டபோதிலும் கொடுத்து விடுவேன். எப்படி யாவது நான் அவரை அறிவேன், அதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. வீட்டைவிட்டு ஓரிரவும் வெளியில் உறங் காதீர், ஜாக்கிரதையாக என்னைக் காத்திரும். அங்ஙனம் நீர் செய்யாது,என்னைத் தனியே விடுவீராயின், இதுவரை யிலும் அழிந்திடா என் கற்பின் மீதாணைப்படி அந்த நியாயவாதியை என் படுக்கைத் தோழனாய்க் கொள்வேன்.
நீ. நான் அவருடைய கணக்கனை அங்ஙனம் கொள்வேன்; ஆகவே என்னை நானே காத்துக் கொள்ளும்படி என்னைத் தனியே விட்டு ஏகுவதில் ஜாக்கிரதை யாயிரும்.
கி. சரி, செய் அப்படியே, அப்பொழுது நான் அவனைக் கண்டுபிடிக்காம லிருக்கும்படிக் காப்பாற்றிக் கொள்ளட்டும்! கண்டு பிடித்தேனோ அந்த கணக்கன்கதி அதோ கதிதான்
அ. ஐயோ! துர்பாக்கியனான நானன்றோ இவ்வளவு சச்சரவுக் கும் காரணமா யிருக்கிறேன்.
ச. ஐயா, தாங்கள் ஒன்றும் வருத்தப்படவேண்டாம். உமது நல் வரவு இதனாலொன்றும் குறைபடாது.
பா. சரோஜினி, நான் கட்டாயமாய்ச் செய்யும்படி நேரிட்ட இக் குற்றத்தை மன்னிப்பாய். இதோ இத்தனை சிநேகிதர் களும் கேட்கும்படி நான் உனக்கு சத்தியம் செய்கின் றேன்.- எனது உருவத்தை நான் அங்கு காணும், உனது அழகிய கண்களின்மீ தாணைப்படி.-
ச. அது ஒன்றை மாத்திரம் ஆலோசித்துப் பாரும்! என் ரு கண்களில் அவர் தன்னை இரட்டையாகக் காண்கிறார், ஒவ் வொரு கண்ணிலும் ஒவ்வொரு உருவமாக – இரண்டகமான உமது உயிரின்மீது ஆணை வையும், அது நம்பத்தக்க ஆணையே.
பா. இல்லை, நான் சொல்வதைக் கேள்; இப் பிழையைப் பொருத்தருள், இனிமேல் எப்பொழுதும் நான் உனக்குச் செய்துகொடுத்த சத்தியத்தினின்றும் தவறுவதில்லை என்று என் ஆன்மாவின்மீது பிரமாணம் செய்கிறேன்.
அ. ஒரு முறை எனதுடலை அவரது கடனுக்காக ஈடு கொடுத் தேன்; அந்த உடலானது உனது பிராணநாதருடைய மோதிரத்தைப் பெற்றவர் வந்திராவிட்டால் இந்நேரம் அதோகதியா யிருக்கும். இனி உனது நாதன் உனக்குச் செய்த சத்தியத்தினின்றும் தவறமாட்டார் என்று, என்னுடைய உயிரையே ஜாமீனாகக் கொடுக்கத் துணிகிறேன் மறுபடியும்.
ச. சரி, நீர்தான் அவருக்கு ஜாமீனாக இருக்கவேண்டும். இதைக் கொடும் அவரிடம்; முன்பு கொடுத்ததைவிட ஜாக்கிரதையாக இதையாவது பாதுகாக்கும்படி சொல்லும்.
அ. இதோ,பானுசேனா, இதைப் பிரியாது வைத்திருப்பதாகச் சத்தியம் செய்.
பா. ஈசனே! இதுதான் நான் அந்த நியாயவாதிக்கு கொடுத்த மோதிரம்!
ச. அவர் எனக்குக் கொடுத்தார். பிராணநாதா, என்னை மன்னி யும். அவர் இம் மோதிரத்தைக்கொண்டு என்னுடன் இருந்தார் நேற்றிரவு.
நீ. பிராணநாதா, நீரும் என்னை மன்னியும். அந்த சிறிய குட் டையான கணக்கன். நியாயவாதியின் குமாஸ்தா. இதோ இந்த மோதிரத்தை எனக்குக் கொடுத்து நேற்றிரவு என் னுடன் படுத் துறங்கினார்.
கி. ஏன்! இது, வேனிற் காலத்தில், பாதைகளெல்லாம் செம் மையா யிருக்கும்பொழுது அவைகளைச் செப்பனிடுவ தொக் கும். இதென்ன விதி! இதற்குள்ளாகவா நமக்கு இக்கதி வாய்க்கவேண்டும்!
எங்களை தூஷியாதீர் வீணில். உங்களுக்கெல்லாம் ஆச்சரி யமாகத்தா னிருக்கும். இதோ ஒரு நிருபமிருக்கின்றது. அதை சாவகாசமாய்ப் படித்துப் பாரும், அது மதுரையி லிருந்து பல்லவராயர் எழுதியது. அதனால் அந்த நியாயவாதி சரோஜினி யென்றும், நியாயவாதியின் கணக்கன் அதோ நிற்கும் நீலகேசி யென்றும் விளங்கும். இதோ நிற்கும் லீலாதரரைக் கேட்டால், நீங்கள் புறப்பட்டுப்போன உடனே நானும் புறப்பட்டுப்போய், இப்பொழுது சற்று முன் பாகத்தான் திரும்பி வந்தேன் என்று தெரிவிப்பார். இன் னும் நான் என் வீட்டிற்குள் நுழையவில்லை. அநந்தநாத ரே, வாரும், நீர் கோருவதைவிட அதிக சந்தோஷமான சமாசாரம் உமக்கு வைத்திருக்கின்றேன் நான். இந்த நிருபத்தை சீக்கிரம் பிரித்துப் பாரும்; அதனால் உமது பெருங் கப்பல்களில் முன்று அகஸ்மாத்தாய் சகல சரக்குக ளுடன் துறைமுகம் வந்து சேர்ந்ததாக அறிவீர்; எப்படி இந்த நிருபம் எனக்குக் கிடைத்தது என்கிற ஆச்சரியமான விஷயத்தை நான் உமக்குத் தெரிவிக்கமாட்டேன்.
அ. எனக்கு பேச வாயில்லை.
பா. நியாயவாதியாக வந்தது நீயா? உன்னை நான் கண்டு பிடிக்காமற் போனேனே!
கி. தாங்கள் தானோ கணக்குப் பிள்ளை? தாங்கள் தானோ நேற்றிரவு என் மனைவியுடன் படுத்திருந்தவர்?
நீ. ஆம், அதற்காக அவர்மீது நீர் கோபங்கொள்ள வேண்டிய தில்லை, ஒரு பெண் ஆடவனாக மாறினா லன்றி.
பா. என் கண்ணுக்கினிய நியாயவாதியே! நீர் எனது படுக் கைத் தோழனா யிரும்! நானில்லாத காலத்தில் என் மனைவி யுடன் படுத்துறங்கும்.
அ. அழகிய அம்மணி, நீர் எனக்கு உயிரும் அளித்தீர். உயிர் வாழ்க்கைக்குரிய பொருளையும் அளித்தீர். இந்த நிரு பத்தில் எனது கப்பல்கள் உண்மையில் பத்திரமாய் துறை முகம் வந்து சேர்ந்ததாகப் படித் தறிகிறேன்.
ச. என்ன லீலாதாரே, என்னுடைய கணக்குப்பிள்ளை உமக்கும் நல்ல சந்தோஷத்தை யுண்டுபண்ணத்தக்க சமாசாரங்கள் கொண்டுவந்திருக்கிறார்.
நீ. ஆம், அதற்கு கூலியில்லாமலே அதைக் கொடுக்கிறேன் அவரிடம். செல்வ வந்தனாகிய சமணன் மறிக்கும் காலத் தில், அவன் வைத்துப் போகும் பொருள் எல்லாம், உமக் கும் ஜலஜாவுக்கும் சேரும்படியாக, இதோ இத்தான பத் திரத்தின் மூலமாகக் கொடுக்கிறேன்.
லீ. அழகிய வஞ்சியரே, அரை வயிற்றுக் கஞ்சி கேட்பவர் களுக்கு அமிர்தத்தை அளிக்கின்றீர்கள் நீங்கள் !
ச. ஏறக்குறைய பொழுது விடியும் சமய மாயிற்று. ஆயினும் நடந்தேறிய இவ் விஷயங்களைப்பற்றி நீங்கள் எல்லாம் இன் னும் நன்றாய்த் திர்ப்தியடைய வில்லையென்று நம்புகிறேன். வாருங்கள் உள்ளே போவோம். நீங்கள் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டுமோ கேளுங்கள். நாங்கள் உண்மையாய் எல்லாவற்றிற்கும் பதிலுரைக்கின்றோம்.
கி. அகபடியே ஆகட்டும்.என் நீலகேசி சத்தியம் செய்து பதில் சொல்லவேண்டிய முதற் கேள்வி என்னவென்றால், மறு நாள் இரவு வரைக்கும் காத்திருக்க இஷ்டமா? அல்லது பொழுது விடிய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் இப்பொழுது படுக்கப்போக இஷ்டமா ; ஆயினும் பொழுது விடிந்தால், இருட்டா யிருக்கலாகாதா என்று விரும்புகிறேன் நான், நியாயவாதியின் கணக்கனுடன் படுத் துறங்கும் பொருட்டு. சரி, இனி நான் உயிர் வாழ்நா ளெல்லாம், நீலகேசியின் மோதிரத்தைக் காப்பதில் நான் பயப்படுவதுபோல வேறொன்றிற்கும் அத்தனை அஞ்சிடேன்.
[எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது.
– வாணீபுர வணிகன் (நாடகம்), நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, மூன்றாம் பதிப்பு: 1957.