வாணீபுர வணிகன்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 749
(1957ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் அங்கம் | மூன்றாம் அங்கம் | நான்காம் அங்கம்
முதற் காட்சி
இடம் – வாணீபுரம்.ஓர் வீதி.
சோமேஸ்வரனும் சாமிநாதனும் வருகிறார்கள்.
சோ. என்ன, ஐயா, இப்பொழுது ரேவில் விசேஷம்?
சா. ஏன், விலை யுயர்ந்த சரக்குகள் நிறைந்த அநந்தநாதருடைய கப்பலொன்று நடுக் கடலில் முழுகிப்போனதாக எல்லோ ரும் பேசிக்கொள்ளுகிறார்கள். அது பொய்யென்று மறுப் பாரைக் காணோம். முழுகிப்போன இடத்தின் பெயர் பாம் பன் குடா என்று சொல்கிறார்களென நினைக்கிறேன். அது மிகவும் அபாயகரமான இடமாம். அவ்விடத்தில், அநேகம் பெரிய கப்பல்கள் இதுவரையில் முழுகிப் புதைந்து கிடக் கின்றனவாம், வதந்தி உரைப்பதை உண்மையென நாம் நம் பக்கூடுமாயின்.
சோ.மற்ற அநேக விஷயங்களில் பொய்யா யிருப்பதுபோல், இதி லும் வதந்தி பொய்யா யிருக்குமாக. ஆயினும் வீண் வார்த் தை யாடாமல், வெறும் வார்த்தைகளில் காலம் போக்கா மல், உண்மையைக் கூறுமிடத்து, – நமது தர்ம புருஷனா கிய அநந்தநாதர் – உத்தமனான அநந்தநாதர்– அவருடைய பெயருடன் சேர்த்துச் சொல்லத் தகுந்த யோக்யதையுடைய பட்டம் ஒன்று இருக்கலாகாதா!
சா. முடிவைச் சொல்லும், சீக்கிரம்.
சோ. ஆ!-என்ன கேட்கின்றீர்?- ஏன், முடி வென்னவென்றால், அநந்த நாதருடைய கப்பலொன்று அமிழ்ந்து போனது தான்.
சா. இதுவே அவருடைய துர் அதிர்ஷ்டத்தின் முடிவும் ஆகுமெனக் கோருகிறேன்.
சோ. ‘ததாஸ்து’ என்று நான் சொல்லும்முன், மாறுபாடி வடிவு கொண்ட இந்த மாயாவி வருகிறான்.
ஷாம்லால் வருகிறான்
ஷாம்லால், என்ன விசேஷம்? வர்த்தகர்களுக்குள் ஏதாவது விசேஷம் உண்டா?
ஷா. என் பெண் வீட்டைவிட்டு ஓடிப்போன விஷயம் உங்களுக் குத்தான் தெரியுமே. உங்களுக்குத் தெரிந்தபடி வேறு யாருக்குத் தெரியும்?
சா. அதுவாஸ்தவம் ; என் வரைக்கும், அவள் பறந்துபோவ தற்காக பட்சி இறகுகள் செய்துகொடுத்தானே, அந்த தையற்காரன் எனக்கு நன்றாய்த் தெரியும்?
சோ.அவன் வரைக்கும், ஷாம்லாலுக்கு, அந்தப் பட்சிக்கு இறகு உண்டாகிவிட்டது என்று தெரியும். அந்தப் பருவம் வந்த பிற்பாடு, அந்த ஜாதிப் பட்சிகளெல்லாம் தாயைவிட்டுப் பறந்து போவது சுபாவம்தான்.
ஷா. அப்படிச் செய்ததற்காக அவள் நாசமாய்ப் போகட்டும்!
சோ. உன்னை நியாயாதிபதி யாக்கினால் அப்படித்தான் தீர்மானம் செய்வாய்.
ஷா. என் சொந்த உதிரமும் ஊனும், எனக்கே விரோதியாகிறதா?
சா. கிழப் பிணமே ! இன்னும் அந்த நினைவா? இத்தனை வய தாகியும் இந்த விரோதமா?
ஷா. என் பெண் என்னுடைய சொந்த உதிரமும் ஊனும் என்று சொல்கிறேன்.
சா. உன் உடலுக்கும் அவள் உடலுக்கும், அட்ட கரிக்கும் அழ கிய தந்தத்திற்கும் உள்ள பேதத்தைவிட, அதிக பேத மிருக்கிறது. அழகிய ‘கோவைக்கும், அவிந்த கொள்ளிக் கும் உள்ள வர்ண பேதத்தைவிட, உங்களிருவருடைய உதிரத்திற்கும் அதிக வித்யாச மிருக்கிறது.- அதிருக்கட் டும், அநந்தநாதருக்குக் கடலில் ஏதாவது நஷ்டம் நேரிட்ட தாகக் கேள்விப்பட்டாயா இல்லையா? சொல் எங்களுக்கு.
ஷா. அதோ, அது ஒரு பேரிழவு. கையிலே இருக்கிறதை யெல் லாம் அழித்துவிட்டு திவாலானான்; தலையைக் காட்ட மாட்டேன் என்கிறான் ரேவில்; முன்பெல்லாம் என்ன ஒழுங் காக வருவான் கடைத் தெருவில், பிச்சைக்காரன்! அவன் பத்திரத்தின்மீது கவனம் வைக்கட்டும்! என்னை அநியாய வட்டி வாங்குபவன் என்று ஏளனம் செய்தவ னல்லவா? அவன் பத்திரத்தின்மீது கவனம் வைக்கட்டும்! பணத்தை வட்டியில்லாமல் பட்சத்துக்காகக் கொடுப்பவனல்லவா? அவன் பத்திரத்தின்மீது கவனம் வைக்கட்டும்!
சா. இதென்ன! அவர் பத்திரத்தின்பிரகாரம் கொடுப்பதற்குத் தவறினால் அவருடைய மாம்சத்தையோ எடுத்துக்கொள் ளப் போகிறாய்? சீ! அது எதற் குபயோகப்படும்?
ஷா. மீன் பிடிக்க! அது வேறொன்றின் பசியைத் தீர்க்கா விட்டாலும் என் க்ஷரத்திரத்தின் பசியையாவது தீர்க்கும்! அவன் என்னை அவமானப்படுத்தி, ஒரு அரைகோடி பொன் நஷ்டம் விளைத்திருக்கிறான். என் நஷ்டத்தைக் கண்டு நகைத்திருக்கிறான். நான் லாபம் பெறுவதைப் பார்த்து ஏளனம் செய்திருக்கிறான். என் ஜாதியைப் பழித்திருக்கி றான். என் லேவாதேவிகளுக் கெல்லாம் குறுக்காக வந்து கெடுத்திருக்கிறான். என் சினேகிதர்கள் பிரீதியையெல்லாம் தணித்திருக்கிறான். என் பகைவரை யெல்லாம் தூண்டிவிட் டிருக்கிறான்! இவ்வளவுக்கும் அவனுடைய காரணம் என்ன? – நான் ஒரு ஜைனன்! ஜைனனுக்குக் கண்களில்லையா? ஜைனனுக்குக் கைகளில்லையா? அவயவங்க ளில்லையா? அந்தக்கரணங்க ளில்லையா? இந்திரியங்க ளில்லையா? ஆசா பாசங்க ளில்லையா? ஹிந்துவைப்போலவே ஒரே உணவைக் கொள்கிற தில்லையா? ஆயுதத்தால் காயப்படுத்தினால் இவ னுக்கிருப்பது போலவே அவனுக்கும் நோயிராதா? இவ னுக்கு வருவதுபோலவே அவனுக்கும் வியாதி வருவ தில்லையா? ஒரேவித சிகிச்சையால் இருவரும் சுவஸ்தப் படுகிறதில்லையா? வெயிலினால் தாபமும், மழையினால் குளிர்ச் சியும், இவனுக் குண்டாவதுபோலவே அவனுக்கு முண்டா வதில்லையா? நீங்கள் ஊசி எடுத்து எங்களைக் குத்தினால் எங்களுக்கு இரத்தம் வருவதில்லையா? நீங்கள் எங்களுக்குக் கூச்சம் காட்டினால் நாங்கள் நகைப்பதில்லையா? எங்களுக்கு நீங்கள் விஷம் கொடுத்தால் நாங்கள் சாவ தில்லையா? இதெல்லாமிருக்கும்பொழுது, நீங்கள் எங்களுக்குத் தீங் கிழைத்தால் நாங்கள் பழி தீர்த்துக் கொள்ளமாட்டோமா? மற்ற விஷயங்களிலெல்லாம் உங்களை யொத்திருந்தால், இதிலும் உங்களை ஒத்திருக்கிறோம். ஒரு ஜைனன் ஒரு ஹிந் துவுக்குக் கெடுதிசெய்தால், எப்படிப் பொறுக்கின்றான்? உடனே பழி வாங்குகிறான். ஒரு ஹிந்து ஜைனனுக்குக் கெடுதி செய்தால், ஹிந்து நடந்து காண்பித்த வழியின் படியே, ஜைனன் அதை எப்படிப் பொறுக்க வேண்டும்? ஏன், உடனே பழி வாங்க வேண்டியதுதான். பழி வாங்கும் விதத்தை நீங்கள் எனக்குக் கற்பித்தபடி,நானும் செய்து முடிக்கிறேன்; அதுவும் நீர் கற்பித்ததை விர்த்திசெய்து காட்டுகிறேன்.
ஒரு வேலையாள் வருகிறான்,
வே. ஐயா, என்னுடைய எஜமானர், அநந்தநாதர், வீட்டி லிருக் கின்றார் ; உங்களுடன் ஏதோ பேசவேண்டுமென்று விரும்பு கிறார்.
சா. அவரைத் தேடித்தான் நாங்கள் இங்கும் அங்குமாய் அலைந்து கொண்டிருந்தோம்.
சோ.இதோ இவன் ஜாதி மனுஷ்யன் இன்னொருவன் வருகிறான். இவ் விருவர்களுக்குச் சமானமான மூன்றாவது ஆசாமி வேண்டுமானால், க்ஷாம தேவதைதான் மாறுபாடி வேஷம் போட்டுக்கொண்டு வரவேண்டும்.
[சோமேஸ்வரன்,சாம்பநாதன், வேலையாள், போகிறார்கள்.]
தூப்லால் வருகிறான்.
ஷா. என்ன சமாசாரம், தூப்லால்? தூத்துக்குடியிலிருந்து ஏதாவது சமாசாரம் வந்ததா? என் பெண்ணைக் கண்டுயிடித்தனையா?
தூ. நான் தேடிப்போன இடங்கள் அநேகத்தில், அவளைப்பற்றி கேள்விப் பட்டேனே யொழிய, அவளை நேராகக் கண்டு பிடிக்கவில்லை.
ஷா. ஐயோ! போச்சே! போச்சே! போச்சே! போச்சே! போச்சுது, இரண்டாயிரம் பொன் கொடுத்து பினாங்கு கோட்டையில் வாங்கிய வயிரம் போச்சுது! இப்பொழுதுதான் நம் முடைய ஜாதிக்கு சனியன் பிடித்தது! இதுவரையில் என்னை வந்து அது பிடியாம லிருந்தது.- அது ஒரு இரண் டாயிரம் பொன்; இன்னும் எத்தனை எத்தனை விலை யுயர்ந்த நகைகள்!- ஐயோ! அந்தப் பாழாய்ப்போன பெண் என் காலண்டை செத்துக்கிடந்தாலும் பெரிதல்ல; அந்த நகை கள் மாத்திரம் அவள் காதிலிருந்தால் போதுமெனக்கு! என் கண்ணெதிரிலேயே அவளுக்குப் பாடை கட்டினாலும் பார்த் திருப்பேன்,பக்கத்திற் பணமிருந்தால் போதுமே! அவர் களைப்பற்றி ஒரு சமாசாரமும் தெரியவில்லையா? அது ஏனப்படி? – தேடிக் கண்டு பிடிக்க எவ்வளவு செலவாச் சுதோ அறிகிலேன் நான். ஐயோ!நஷ்டத்தின்பேரில் நஷ்டமா? திருடிக்கொண்டுபோன தெவ்வளவு! அவளைத் தேடிக் கண்டுபிடிக்க எவ்வளவு ! ஐயோ ! இவ்வளவுக்கும் திர்ப்தி ஒன்றையும் காணோம், பழி வாங்கல் ஒன்றையும் காணோம். உலகத்திலுள்ள துர் அதிர்ஷ்டமெல்லாம் என் தலையில் தானா வடியவேண்டும் ! உலகத்திலுள்ள பெரு மூச் செல்லாம் என்னுடையதுதானா? உலகத்திலுள்ள கண்ணீ ரெல்லாம் நான் சொரிவதுதானா?
தூ. ஆம், ஐயா ; மற்றவர்களுக்கும் தூரதிர்ஷ்டம் நேர்கிறது. நான் தூத்துக்குடியில் கேள்விப்பட்டபடி அநந்தநாதருடைய
ஷா. என்ன! என்ன! என்ன! துரதிர்ஷ்டமா?- துரதிர்ஷ்டமா?
தூ. – திருப்பாப்புலியூரிலிருந்து சரக்குகள் கொண்டுவந்த பெருங் கப்பலொன்று, முழுகிப் போய்விட்டதாம்.
ஷா. கடவுளுக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன்! கடவுளுக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன்! இது உண்மைதானே? இது உண்மைதானே ?
தூ. முழுகிப் போன கப்பலினின்றும் தப்பிவந்த சில மாலுமிகளுடன் நேராகப் பேசினேன் நான்.
ஷா. தூப்லால், தூப்லால், உனக்கு வந்தனம் செய்கிறேன்! நல்ல சமாசாரம் கொண்டுவந்தாய் ! சுப சமாசாரம்! ஹா! ஹா! – எங்கே அது எங்கே அது? தூத்துக்குடியிலா?
தூ. தூத்துக்குடியில், நான் கேள்விப்பட்டபடி உமது பெண் ஒரு இரவில் எண்பது பொன் செலவழித்தாளாம்.’
ஷா. ஐயோ! என் ஹிருதயத்தில் ஈட்டியால் குத்துகின்றாயே! போன பொன்னை நான் திரும்பிப் பார்க்கப்போகின்றதில்லை; உட்கார்ந்தபடி எண்பது பொன் ! எண்பது பொன்!
தூ. என்னோடு அநந்தநாதருக்குக் கடன் கொடுத்திருக்கும் அநே கர் வாணீபுரத்துக்கு வந்தனர், அவர்கள் அவன் எப்படி யும் திவால் எடுக்கவேண்டியதுதான், என்று சொல்லுகிறார்கள்.
ஷா. நிரம்ப சந்தேரஷம்! விடுகின்றேனா பார் அவனை! உயிரோடு வதைக்கின்றேன்!மிகவும் சந்தோஷம்!
தூ. அவர்களில் ஒருவன் உன் மகளுக்குத் தான் கொடுத்த ஒரு கிளிக்குப் பதிலாக அவள் கொடுத்த ஒரு மோதிரத்தைக் காண்பித்தான்.
ஷா. அவள் பாழாய்ப்போக! தூப்லால், என்செவியில் நாரா சத்தை விடுகிறாயே! அது என் மாணிக்க மோதிரமாயிற்றே, அது லலிதா விவாஹ மாவதன் முன்பு எனக்குக் கொடுத்த தாயிற்றே! கோடி கிளிகளைக் கொடுப்பதானாலும் அதை நான் கொடுத்திருக்கமாட்டேனே!
தூ. ஆனாலும், அநந்தநாதர் என்னவோ திவால்தான்.
ஷா. ஆம், ஆம். அது உண்மையே, மிகவும் உண்மையே! தூப் லால், போய் உடனே எனக்காக ஒரு நியாயவாதியை ஏற்பாடு செய்துவை. பதினைந்து நாள் முன்பாகவே பேசிவிடு. அநந் தநாதன் தவறிப் போனால், அவன் ஹிருதயத்தை வெட்டி எடுக்கிறேன். அந்தப் பாபி எப்படியாவது வாணீபுரத்தை விட்டுத் தொலைந்தால், என் வியாபாரத்தை என் னிச்சை படி நடத்துவேன். போ! போ! தூப்லால், நமது மடத் தண்டை வந்து என்னோடுசேர். போ, அப்பா, தூப்லால் – நம்முடைய மடத்தண்டை, தூப்லால்! [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
இரண்டாம் காட்சி.
இடம் – மணிபுரம். சரோஜினியின் வீட்டில் ஓர் அறை.
பானுசேனன், சரோஜினி, கிரிஜாநாதன், நீலகேசி, பரிஜனங்கள் வருகிறார்கள்.
ச. உம்மை நான் வேண்டிக்கொள்ளுகிறேன்,பொறும். நீர் உமது அதிர்ஷ்டத்தைப் பார்ப்பதன்முன், ஒரு ரு நாள் இரண்டு நாள் நிதானியும்; நீர் தவறாகக் கோரினால், உம்மை நானிழக்கவேண்டி வரும் ; ஆகவே கொஞ்சம் நிதானியும். எனக்குள் ஏதோசொல்லுகின்றது, உம்மை நான் இழக்க மாட்டேன் என்று. ஆயினும் அது காதல் அல்ல.- வெறுப் பினால் இம்மாதிரியான யோசனைகள் உண்டாகமாட்டா, என் பது உமக்கே தெரியும். மங்கையர் மனத்தி லெண்ணுவ தொழிய, மற்றும் வாய் திறந்து மொழிதல் அழ கலாத தாயினும், என் உள்ளத்தை எங்கு நீர் நன்றாய் அறியா திருக்கிறீரோ என அஞ்சினவளாய், நீர் எனக்காகத் துணி வதன் முன், உம்மை ஒரு இரண்டு மாத காலம் இவ் விடத்தே தங்கியிருக்கச் செய்வேன். நீர் சரியாகக் கோரும் படி சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியும்.- ஆனால் அப் படிச் செய்வே னாயின், செய்த சத்தியம் தவறினவளாவேன், அப்படி ஒருகாலும் நான் ஆகமாட்டேன்; ஆகவே நீர் என்னை இழக்க வேண்டி வரினும் வரும். அப்படி இழப்பீ ராயின் சத்தியம் தவறியாவது நடந்திருக்க லாகாதா, என்று அந் தப் பாபத்தைக் கோரும்படிச் செய்வீர் என்னை. ஐயோ!
பா. உமது கண்கள் செய்யும் கொடுமையைப் பாரும்! அவைகள் என்மீது பட்டபோதே என்னை இரண்டு பிரிவாக்கின ! என் னில் பாதி பாகம் உம்முடையதாம்.– மற்றொரு பாதி யும் உம்முடையதாம் என்னுடையது என்று சொல்ல வேண்டும், ஆனால் என்னுடையதானால், உம்முடையதே! ஆகவே, எல்லாம் உம்முடையதே! என்ன கலிகால மி து சொந்தக்காரர்கள் சொத்தை அனுபவிப்பதற்குத் தடை களைப் போடுகின்றதே! ஆகவே உம்முடையதா யிருந்தா லும், உம்முடையதல்ல! உம்முடைய தென்று ரூபியும்.- அதன் பொருட்டு அதிர்ஷ்ட வசமானது அரு நரகிற்குப் போகட்டும்,- நான் போகேன். நான் அதிக நாழிகை பேசு கிறேன், ஆயினும் அங்ஙனம் செய்வது காலத்தை நீட்டி வளர்த்தி, அதிகப்படுத்தி, உம்மைக் கோருமுன் நிதானிக் கும்படிச் செய்யும் பொருட்டே.
பா. நான் கோருகின்றேன் விரைவில்,-ஏனெனில் இப்படி இருப் பது, முப்பீப்பாயில் இருப்பதுபோ லிருக்கின்ற தெனக்கு.
ச. முட் பீப்பாயிலா? ஆனால் உமது காதலுடன் என்ன துரோகமும் உம்மிடத் திருக்கிறது சொல்லும்.
பா. என் காதலை நான் அனுபவிப்பேனோ என்று எனக்குள் பயப்படுகின்றேனே, அந்த அவலக்ஷணமுடைய சந்தேக மெனும் துரோகம் தவிர வேறொன்றுமில்லை. என் காத லுடன் துரோகமானது கலந்திருப்பதை விட, நீரும் நெருப் பும் ஒருங்கே சினேகமாய் ஓரிடத்தில் வாழும்.
ச. ஆம், ஆயினும் முட் பீப்பாயி லிட்டால், பலாத்காரமாம் மனிதர் எதையும் சொல்வதைப்போல், நீரும் இவ்வண்ணய் கூறுகிறீர் என்று அஞ்சுகின்றேன்.
பா. எனக்கு உயிரளிப்பதாகச் சொல், உண்மையை உரைக்கின்றேன்.
ச. சரி! உண்மையை உரைத்து உயிர்வாழும்,
பா. உண்மையை உரைத்து உன் காதலைப் பெறவேண்டு மென் பதே என் உட்கருத்தாம் – ஹா! என்ன சுகமான ஹிம்சை! என்னை ஹிம்சிப்பவளே அந்த ஹிம்சையினின்றும் நீங்க வழி கற்பிக்கிறாள்! அதிருக்கட்டும், பெட்டிகளைக் காட்டச் சொல், என் அதிர்ஷ்டத்தை நான் பார்க்கவேண்டும்.
[பெட்டிகளின் முன்னிருக்கப் பட்ட திரையானது தள்ளப் படுகிறது.]
ச. சரி, போம் ஆனால்; அவைகளி லொன்றில் நான் பூட் டப்பட் டிருக்கின்றேன். என்மீது உண்மையான காதல் உமக்கிருக்குமாயின், எப்படியும் என்னைக் கண் டெடுப்பீர். – நீலகேசி, நீயும் மற்றவர்களும் ஒரு புறமாக நில்லுங்கள்; அவர் கோரும்பொழுது சங்கீதம் வாசிக்கப்படட்டும்; அவர் தோல்வி யடைவாராயின், கோரிக்கைகள் மரிக்கும் காலத் தில் பாடிய பாடல்களாகும். அந்த உபமானமானது முற்றி லும் சரியாகும்படி, என் கண்ணீரானது அவர் மூழ்கி மரித் திடும் வெள்ளப் பெருக் காகுக! ஒரு கால் அவர் ஜெயிக்க லாம்; அப்பொழுது இந்தச் சங்கீதம் என்னாம் ? அப் பொழுது இச் சங்கீதமானது, புதிதாய் மகுடாபிஷேகம் செய்துகொண்ட சக்கிரவர்த்திக்கு, சத்யவந்தர்க களான பிரஜைகள் பணியுங்கால் முழங்கும் வாத்ய கோஷமாகும். அன்றியும், மணநாளில் அருணோதய காலத்தில்,சுகமாய் நித்திரை செய்துகொண்டிருக்கும் மணமகன் காதில் மிருது வாய் நுழைந்து, அவனை மணப் பந்தலுக்கு அழைக்கும், மங்கள வாத்தியத்திற்குச் சமான மாகும்.- அதோ போகின் றார், புவியினிற் பிறந்த பூவியல் ஜானகியை மாலையிடப் புண்ணிய புருஷனான ஸ்ரீராமன் வில்லை யெடுத்து நாணேற் றிடப்போன காம்பீரத்துடனும், அவரைவிட அதிக காத லுடனும். நான் தான் மைதிலி, ஒரு புறமாய் நிற்கும் இ பரிஜனங்கள், ஜானகியின் மணத்துக்கு வந்து, எப்படி முடியுமோ என்று ஏங்கி நிற்கும் அரசர்கள். காதலா, போம், நீர் வாழ்ந்தால் நான் வாழ்வேன். அமர் புரியும் உம்மைவிட, பார்த்திடும் நான், அதிக பயமுள்ளவளா யிருக்கிறேன்.
[பானுசேனன் தனக் குள்ளாகப் பெட்டிகளைப்பற்றி யோசிக்குங் காலை சங்கீதம் முழங்கப்படுகிறது.]
(திரையுள் பாட்டு)
“இச்சை யெனும்பொருளுக் கெங்ஙனே யுற்பத்தி
மெச்சுமித யத்திலோ புத்தியிலோ – உச்சிதமாய்
எவ்வாறு தான்தோன்றி யெவ்வாறு தானோங்கும்
அவ்வாற்றைச் சொல்சொல்வை யால்
கண்ணிலே தோன்றுமது காட்சியா லேயோங்கும்
மண்ணில் தன் தொட்டிலிலே மாய்ந்துபோம் – எண்ணரிய
இச்சையின் சாவுமணி எல்லோரு மாட்டிடநா
னுச்சரிக்க ஒங்டாங் மணி.”
பா. ஆகவே, வெளித்தோற்றம் ஒன்றுக்கும் உதவாததா யிருக்க லாம். வெளி ஆபரணத்தைக் கண்டே உலகம் ஏமாந்து போகின்றது என்றும். நியாயஸ்தலத்தில் எப்படிப்பட்ட கெட்ட வழக்கும் எடுத்துப் பேசுபவன் இனிய குரலால் குற்றமெல்லாம் மறைக்கப்பட்டு குணமாய்த்தோற்றுகிறது! மத விஷயத்திலோ, எப்படிப்பட்ட நிகிரிஷ்டமான காரியமா யிருந்தாலும், அது பூஜிதமானது என்று புராண மெடுத் துக் கூறி, அவலட்சணத்தை மறைத்து அழகாய்த் தோற் றும்படி வியாக்யானம் செய்யும் புண்ணியவான்களு மிருக் கிறார்கள். எப்படிப்பட்ட தீய குண மாயினும் வெளிக்கு நற்குணம்போல் கொஞ்சமாவது வேடம் பூணாதது ஒன்று மில்லை. மண்ணினால் கட்டிய மெத்தையைப்போல் பலமற்ற ஹிருதயத்தை யுடைய எத்தனைப் பயங்காளிகள், பீமனை நிகர்த்த பலாட்டியாள் போலவும் தோற்றுகிறார்கள். உள்ளே ஆராய்ந்தாலோ ஓணான் பிடிக்கவும் தைரிய மற்ற வர்கள்! இவர்களெல்லாம் வீரர்களைப்போல் வெளி வேஷம் தரிக்கின்றனர், மற்றவர்கள் கண்டு மருண்டிட! அழகைப் பார். ஆடை யாபரணங்களின் இடையினால் அது விலைக்கு வாங்கப்படுகின்றது, என்பதைக் காண்பாய். அவைகளை அதிகமாய் அணிபவர்களின் சுபாவத்தை, ஆச்சரியப்படும் படி முற்றிலும் மாற்றி, அதிக அழ குடையவர்கள்போல் காட்டுகின்றது. காற்றில் அசைந்து விளையாடும், கட்டழகி எனக் கருதப்படும் காரிகையின் கரு முகில்போன்ற அளக் பாரம், கிட்டிப் பார்த்தால் மொட்டைத் தலையிடத்திருந் தும் ஸ்வீகாரம் வாங்கியதா யிருக்கும் பெரும்பாலும்; அல்லது அதை உண்டுபண்ணின மண்டை மடிந்து மண்ணாய்ப்போ யிருக்கலாம். இவ்வாறு வெள் ஆபரணமெல் லாம் அபாயகரமான சமுத்திரத்தின் மோசகரமான கரை யாகும், உள் ளிருக்கும் அசங்கியத்தை மூடும் வெளி உத் தரியமாம். ஒரு வார்த்தையில், விவேகிகளையும் மயக்கி, வலையிற் சிக்கச்செய்ய, மேலுக்கு வாஸ்தவம்போல் வேடம் தரிக்கும் கபடமே யாம். ஆகவே ஆடம்பரத்தோடு கூடிய ஆணிப் பொன்னே, ஆன்றோர் ஓட்டுக் கொப்பாய் மதித்த அபரஞ்சியே, நீ வேண்டா மெனக்கு. ஒருவர் கையினின்றும் ஒருவர் கைக்கு மாறிக்கொண்டிருக்கும், அற்பமாம் வெளுத்த வெள்ளியே, நீயும் வேண்டா மெனக்கு.- அழகிலா வெறும் ஈயமே, நீஏதேனும் கொடுப்பதாக வாக்களியாது பயமுறுத் திய போதிலும்,நீ ஒன்றும் கூறாமலிருத்தலே, எனக்கு அதிகமாய்க் கூறுகின்றது. உன்னையே நான் கோருகின் றேன்; எனக்கு சந்தோஷ முண்டுபண்ணுவையாக?
ச. இதுவரையிலும் எனக் கிருந்த சந்தேகமான எண்ணங் கள், ஆய்ந் தறியா நிராசை, ஒடுக்க முறும் பயம், பொறாமை முதலிய இவைகளெல்லாம் எப்படிக் காற்றாய்ப் பறந்தோடுகின்றன! காதலே! பொறுமையை வஹி! உனது ஆனந்த பரவசத்தைத் தணித்துக்கொள்! உன் சந்தோஷத்தை அத்துமீற விடாதே, இந்த அதிகத்தை அடக்கிக்கொள் ! உன்னால் எனக் குண்டாகும் சந்தோஷம் பொறுக்கமுடியவில்லை; அதைக் குறைத்துக்கொள், இல்லா விடின் இது எனக்குத் தெவிட்டப்போகுமென அஞ்சுகிறேன்.
பா. என்ன காண்கின்றேனோ இங்கு நான்? [ஈயப் பெட்டியைத் திறந்து] ஒப்பு உயர்வு இல்லா சரோஜினியின் உருவமா சிருஷ்டிக்கு ஒப்பாக அவ்வளவு அழகாய்ச் சித்திரம் எழுதிய தெய்வீகம் பொருந்தியவன் யார்? இந்தக்கண்கள் அ அசை கின்றனவோ? அல்லது, எனது கண்களில் பிரதிபிம் பிப்பதினால், சலனப்படுவனபோல் தோற்றுகின்றனவா? இதோ இவ் வதரங்கள் பிரிந்திருக்கின்றன சுகந்த சுவாசத் தினால், இத்தனை இனிய பிரிவே அத்தனை இனிய நண்பர் களைப் பிரித்திடல் வேண்டும். இவ்விடம் இவளது அளக பாரத்தை சித்தரித்தவன், சிலந்தியின் வலையில் ஈக்கள் சிக்குவதைவிட அதிகமாய், ஆண் மக்களுடைய ஆவி யெல்லாம் இந்த அழகிய வலைக்குட் சிக்கச்செய்ய வேண்டு மென்று, இவ்வாறு வரைந் தனன். ஆயினும் இந்தக் கண் களை எப்படி வர்ணித்தான்? இரண்டையும் வர்ணிக்கும் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது? ஒரு கண்ணைத் தீட்டியவுடன், அவனது இரு கண்களையும் அது வுள்ளே பறிக்கும் சக்தியைப் பெற்றதாகி, மற்றொரு கண்ணை எழுத அசக்த னாயிருக்குமே அவனை ! ஆயினும் இப்படத்தைத் தக்கபடி மதிக்கவல்ல என் வார்த்தைகள் எவ்வளவு குறை படுகின்றனவோ, அவ்வளவு குறை படுகின்றது இப்பட மானது அதோ இருக்கும் நிஜ உருவை வர்ணிப்பதில்.என் அதிர்ஷ்டத்தை திரட்டிச் சுருக்கிய சுருள் இதோ இருக்கின்றது.
“வெளியுருவைக் கண்டு மோசம் போகாதே
விரும்பியது சரியே,வேண்டு மிச்சுகம்
பெற்றத்து பெறும்பே றெனவே,
உற்று நீர் ஒன்றை, உள்ளத்தி லெண்ணீர்.
இது உமக்கு இன்பம் தருவதேல்,
இவ் வதிர்ஷ்டமதை யேசுகமெனக் கொள்வீர்
காதலி யவளைக் கருணையாய் நோக்கி
ஏதமி லவள்வாய் முத்தம் கொள்வீர்!”
இன்பமாம் சாசனம்!- கருத்தினிய மானே, உன் விருப்பத் தின்படியே! [அவளை முத்தமிட்டு) கட்டளைப்படி கொடுக்க வும் கொள்ளவும் காத்து நிற்கின்றேன். பந்தயத்தின் பொருட்டு யுத்தம் புரியும் வீர ரிருவருக்குள், ஜனங்கள் மெச்சும்படி ஜெயித்ததாக எண்ணு மொருவன். கல்லென ஒலிக்கும் கரகோஷத்தைக் கேட்டு மதி மயங்கினவனாய், அச் சந்தோஷ ஆரவாரம் தன் பொருட்டோ அல்லவோ என்று சந்தேகித்துக் கண்ணை விழித்து விழித்துப் பார்ப் பது போல், கவினுடைக் காதலியே, நானும், காண்பது கனவோ, உண்மையோ வென உள்ளத்தில் ஐயம் கொண்ட வனாய், உன் வாயால் உண்மையென ஒப்புக்கொள்ளப்பட்டு ஊர்ஜிதமடையக் காத்து நிற்கின்றேன்.
ச. பிராணநாதா, இதோ நிற்கின்றேன் நான். இப்பொழுது என்னை உள்ளபடி காண்கின்றீர். என்னைப்பற்றி மாத்திரம் நான் கருது வேனாயின், இப்பொழுது இருப்பதைப் பார்க் கிலும் மேம்பட்டிருக்க வேண்டுமென்று கோருவது பேராசை யாகும். ஆயினும்,உமக்காக இதைவிட இருபது மடங்கு மேலான ஸ்திதியில் இருக்கக் கோருவேன்; அழகில் இன் னும் ஆயிரமடங்கு அதிகப்பட்டவளாயும், பணத்தில் இன் னும் பதினாயிர மடங்கு அதிகமா யுள்ளவளாயு மிருக்க விரும்புவேன். உம்மால் அதிகமாய் நன்கு மதிக்கப்படும் பொருட்டு, அழிவிலா நற்குணத்திலும், அழகிலும், அருஞ் செல்வத்திலும்,ஆப்த நண்பரிலும், இன்னும் அதிகப்பட்ட வளாயிருக்கவேண்டு மென்பதே என் கோரிக்கை. என்னிடத் துள்ள குணங்களை யெல்லாம் ஒருங்குசேர்த்தாலும் ஒன்று மில்லாதவளாவேன்! விவரமாகக் கூறுமிடத்து, நான் ஒன் றுமறியாப் பேதை, ஒன்றும் கற்றவளல்ல, ஒன்று மனுபவ மற்றவள். ஆனால் இந்த ஒரு நற் பாக்கிய முண்டு; இனிமேற் கற்கக் கால மல்ல என்கிற வயதாகவில்லை. இதைவிட மேலான பாக்கிய மொன்றுண்டு; அதாவது, கற்பித்தால் வராது என்று சொல்லும்படியாக அவ்வளவு மந்த புத்தி யுடைவளாய் வளர வில்லை. இவையெல்லாவற்றையும் விட மேலான பாக்கியமு மொன்றுண்டு; அதாவது, வணக்க முடைய என்பேதை யறிவை, நல் வழியில் பயிற்றுவிக் கும்படி, எனது நாதனாகவும், நாயகனாகவும், அரசனாக வும் உம்மிடம் ஒப்புவிக்கின்றேன். நான் உம்முடையவளாயி னேன் இட்சணமுதல். என்னுடைய வெல்லாம் உம்முடை யதாக மாற்றப்பட்டன. இதுவரையில் இந்த அழகிய மாளி கைக்கு அரசியாயிருந்தேன்,என் வேலைக்காரர்களுக் கெல் லாம் எஜமானியா யிருந்தேன்,நான் எனக்கே சொந்தமா யிருந்தேன். இப்பொழுதோ, இந்தவீடும், இந்த வேலைக் காரர்களும், இந்தச்செல்வமும்,நானும்,உம்முடைய வாகி விட்டோம். பிராணநாதா, இவைகளை யெல்லாம் இந்த மோதிரத்துடன் உமக்குக் கொடுக்கிறேன். இந்த மோதி ரத்தை இழந்துவிட்டாலோ, அல்லது கழற்றி விட்டாலோ, அல்லது யாருக்காவது கொடுத்துவிட்டாலோ, அதை உமது காதல் குன்றினதற்கு அறிகுறியாகவும், உம்மை நிந்திக்க எனக்கொரு காரணமாகவும், கொள்வேன்.
பா. என் அழகியே, என்னை வாய்திறந்து பேச வகையறியா தவ னாய்ச் செய்துவிட்டாய் நீ. என் உடலிலுள்ள உதிரமே உரைத்திடுகின்றது என்காதலை; பிரஜைகளைப் பிரியமாய் ஆண்டிடும்படி அரசன் ஒருவன், அருமையாம் பிரசங்கம் அழ குறச் செய்து முடித்ததும், சந்தோஷத்தினால் சப்தித்திடும் ஜனங்கள் ஒன்றாய்ப் பேசும் எல்லாவார்த்தைகளும் ஒருங்கு கூடி, அர்த்தமொன்று மில்லா ஒரே கோஷ்டமாகி, தெரி வித்தும் தெரியாமலும் இருக்கிற களிப்பினைக் குறிக்கும் குழப்பத்தைப்போல, என் அறிவானது கலங்கி நிற்கிறது. ஆயினும் இந்த மோதிரத்தை என் விரலை விட்டு நீக்கினால், உடனே என்னுயிரும் என் உடலை விட்டு நீங்கும். அந்தச் சமயம் வந்தால். பானுசேனன் பரலொகம் போய்ச் சேர்ந்து விட்டான் என்று உறுதியாய்க் கூறு.
நீ. ஐயா,- அம்மணி, நாங்களெல்லாம் இதுவரையில் எங்கள் எண்ணம் ஈடேறவேண்டுமென்று காத்திருந்ததற்கு, இப் பொழுது அப்படியே நேர்ந்தமையால், உங்களை வாழ்த்துவதற்கு இதுதான் எங்களுக்குச் சமயம். நீங்க ளிருவரும் நீடுழி காலம் சுகமாய் தம்பதிகளாக வாழ்வீர்களாக!
கி. ஐயா, பானுசேனரே,- என் அம்மணி, நீங்கள் என்ன சந் தோஷத்தை யெல்லாம் விரும்புவீரோ, அந்தச் சந்தோஷத் தையெல்லாம் பெறுவீரெனக் கோருகிறேன். ஏனெனில், என்னிடமிருந்து ஒன்றையும் விரும்பமாட்டீர் என்று உறுதி யாய்க் கூறுவேன். உங்களுடைய வாக்குத் தத்தத்தின்படி உங்களுக்கு விவாகத்தை முடித்திடுங்கால், எனக்கும் விவா கத்தைச் செய்துமுடிக்க வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்ளுகிறேன் உங்களை.
பா. மனப் பூர்த்தியாய் ; ஆயின் மனைவி யொருத்தியை நீயும் சம்பாதித்துக் கொள்ளல் வேண்டும்.
கி. நீரே எனக்குச் சம்பாதித்துவிட்டீர். அதற்காக உமக்கொரு நமஸ்காரம்! உமது கண்களைப்போலவே எனது கண்களும் சீக்கிரத்தில் பார்க்கும் சக்தியுள்ளன. நீர் தேவியைப் பார்த் தீர்,நா னவளது தோழியைப் பார்த்தேன். நீர் காதல் கொண்டீர்,நானும் காதல் கொண்டேன். தாமதம் என்பது உம்மிடத்தி லெப்படி யில்லையோ, அப்படியே என்னிடத் திலும் இல்லை. உம்முடைய அதிர்ஷ்டம் அந்தப் பெட்டி களிடத்தில் இருந்தது, என் னதிர்ஷ்டமும் அங்கேயே இருந்தது, நடந்ததை நோக்குங்கால். ஏனெனில், இதோ நிற்கும் மங்கையுடன் என்னா லானமட்டும் கஷ்டப்பட்டு வேண்டிப் பார்த்தேன்,வா யுலர்ந்து போகும்படி என் காத லைக் குறித்து எத்தனையோ சத்தியங்கள் செய்து பார்த்தேன். யால் இந் நிருபம் உமக்குக் கொண்டுவரும் விஷயத்திலும் ஆட்சேபனையின்றி பாதியை நான் பகிர்ந்து கொள்ளலாம்.
பா. கண்ணே, சரோஜினி! உலகத்தில் எவ்வளவு துக்ககர மான சமாசாரம் ஒரு நிருபத்தில் எழுதக்கூடுமோ, அவ் வளவும் இந் நிருபத்தில் அடங்கி யிருக்கின்றது. காதலியே என் காதலை உனக்கு நான் முதலில் வெளியிட்டபொழுது, என் செல்வமெல்லாம் என் குடிப் பிறப்பே – நான் உத்தம குலத்தில் உதித்தவன், அவ்வளவே – என்று வெளிப்படை யாய்க் கூறினேன். நான் அங்ஙனம் கூறிய துண்மையே ஆயினும் பெண் ணரசியே,நான் ஒன்று மில்லாதவன் என்று கூறினதிலும் அதிக வீம்பு பேசினேன் என்பதை, இப்பொழுதறிவாய். நான் செல்வ மொன்று மில்லாதவன் என்று உன்னிடம் கூறினபோதே, அம்மட் டன்று, ஒன்று மில்லாத வனினும் ஹீன ஸ்திதியை யுடையவன், என்று சொல்லியிருக்கவேண்டும். என் செலவின் பொருட்டு, கடன் வாங்கி, என் ஆருயிர் நண்பனுக்கு அதற்காகக் கட்டுப்பட் டிருக்கிறேன்,அந்த நண்பனை அவனது ஜன்மத் துவே ஷிக்குக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். கண்ணே, இதோ இந் நிருபத்தைப்பார்? இக் கடிதத்தை என் நண்பனது உடலென எண்ணுவாய். இதிலுள்ள ஒவ்வொரு வார்த் தையும், அவனது உடலினின்றும் உயிர் நிலையான இரத்தத்தைச் சொரியும் ஆழமான காயமெனக் கருதுவாய். ஆயினும் சோமேஸ்வரரே ! இது உண்மைதானா அநந்தநாதனுடைய கப்பல்கள் எல்லாம் அழிந்துபோயி னவா ? திரிபுரம், மலையாளம், சிங்களம், தூத்துக்குடி, வங்காளம், குர்ஜரம் முதலிய இடங்களுக் கெல்லாம் சென்ற கப்பல்களில், ஒன்றாவது திரும்பி வரவில்லையா? கப்பல்களை யழிக்கும் கற்பாறைகளில் தாக்காது ஒன்றாவது தப்பி வர வில்லையா?
சோ. ஒன்றும் தப்ப வில்லை! அன்றியும், இப்பொழுது அக் கட னைத் தீர்க்கக் கையில் ரொக்கப் பணமிருந்தாலும், அந்த மாறுபாடி அதை வாங்கிக்கொள்ளமாட்டேன் என்கிறா னாம். ஒரு மனுஷ்யனை அடியுடன் அழிக்க வேண்டுமென்று பேராசை கொண்டிருக்கும் அவனைப்போன்ற மனுஷ்ய உரு வம் படைத்த ஒரு பிராணியை, அவனியில் எங்கும் கண்ட தில்லை நான். காலையும் மாலையும் அரசனிடம் போய்க் காத் திருந்து நிர்ப்பந்திக்கின்றான். தனக்கு நியாயப்படி தீர்மா னிக்காவிட்டால் அநியாய ராஜ்யமென்று முறையிடுகின் றான் ; பெரிய வர்த்தகர்கள் இருபது பெயர், உயர்ந்த பதவி யிலிருக்கும் மந்திரி முதலானோர், அரசன், எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்திப் பார்த்தார்கள். தன் பத் திரத்தின்படி நியாயம் நடத்தி அபராதத்தைப் பெறவேண்டு மென்னும் குரூரமான பிடிவாதத்தினின்றும் அவனைத் திருப்ப, ஒருவராலும் முடியாமற் போயிற்று.
ஜ. தன்னுடைய பந்துக்க ளாகிய தூப்லாலிடமும், சேஷலா லிடமும், அநந்தநாதரிடமிருந்து தனக்குச் சேரவேண்டிய தொகையை இருபது மடங்கு அதிகமாகப் பெறுவதைப் பார்க்கிலும், அவருடைய சதையையே பெறுவேன் என்று சத்தியம் செய்ததை, அவருட னிருந்தபொழுது நான் கேட்டிருக்கின்றேன். அன்றியும், ஐயா. அதிகாரிகள் நியாய சட்டத்தைக் கொண்டு அவரை அடக்காவிட்டால், அநந்தநாதர் பாடு கஷ்டமாய்த்தான் முடியும் என்பதை நான் அறிவேன்.
ச. இவ்வாறு ஆபத்தில் அகப்பட்டிருப்பவர் உமது ஆப்த ரான நண்பரா?
பா. அவனைவிட ஆப்தன் அவனியில் எனக்கு வேறொருவரில்லை. இணை யிலாக் கருணையுடைவன், அண்டினவரை ஆதரிப் பதில் அத்தனை அன்பன், உதவி புரிவதில் ஒருகாலும் தள ராத தயாள குணமுடையவன் ; இவ்வுலகில் உயிர் வாழும் வேறெம் மனிதனைவிட அவனிடம் பூர்வீகமான தண்ணளி யானது அதிகமாய்க் குடிகொண்டிருக்கிறது.
ச. அந்த மாறுபாடிக்கு அவர் கொடுக்கவேண்டிய தொகை எவ்வளவு?
பா. என்பொருட்டு, மூவாயிரம் பொன்.
ச. என்ன! இவ்வளவுதானா? அவனுக்கு ஆறாயிரம் பொன் கொடுத்து அந்தப் பத்திரத்தைக் கிழித் தெறியும். உம் முடைய தவறினால் இப்படிப்பட்ட உத்தமனான நண்பனது கேசத்தி லொன்று கெடுமுன், அந்தத் தொகைக்கு இரட் டிப்பாய்ப் பன்னீராயிரம் பொன் கொடும்; அதுவும் போதா மற் போனால், அதற்கு மும்மடங்கு கொடும். முதலில், இன் றைத் தினமே நமது கலியாணச் சடங்கை முடித்துவிடும். உடனே உமது நண்பரிடம் வாணீபுரம் போய்ச் சேரும். உமது மனத்தில் இக்குறையை வைத்துக்கொண்டு நீர் என் பக்கத்தில் இருப்பது எனக் கிஷ்ட மில்லை. இச்சிறு கடனை இருபது மடங்கு அடைக்கத் தக்க பொன்னை உமக்குத் தரு கிறேன். அதைக் கொண்டுபோய் அக்கடனை யடைத்தபின், உமது ஆப்தரை அழைத்து வாரும்; இங்கு என் தோழி நீலகேசியும் நானும், அதுவரையில் கன்னிகைகளாகக் காலம் கழிக்கின்றோம்.வாரும் விரைவில் ; நமது விவாகம் முடிந்த வுடன் நீர் புறப்படவேண்டும்.உமது நண்பரை யெல்லாம் அழையும் நமது மணத்திற்கு ; உற்சாகத்துடனிரும்.கஷ் டத்தினால் உம்மைப் பெற்றமையால், காத லும்மீது அதிகங் கொண்டிருக்கிறேன். முதலில் உமது சிநேகிதர் என்ன எழுதியிருக்கின்றார் கேட்போம்.
பா. (படிக்கிறான்.) “என்னினிய நண்பனே! பானுசேனா ! என் மரக்கலங்களெல்லாம் மாண்டுபோயின! என் கடன்காரர் கள் எல்லாம் நிர்பந்திக்கின்றார்கள். என் கையில் சொத் தில்லை. மாறுபாடிக்கு நான் எழுதிக் கொடுத்த பத்திரம் தவணை கடந்துவிட்டது. அதில் குறித்த அபராதத்தைக் கொடுத்து நான் உயிர் வாழ்வது அசாத்திய மாகையால், என்னுயிர் போகுமுன், உன்னை ஒரு முறை காண்பேனாயின், என் கடனையெல்லாம் எனக்குத் தீர்த்தவனாவாய்! ஆயினும், உனக்கெப்படி சவுகர்யமோ அப்படிச்செய். உன்னுடைய அன்பானது இங்கு வரும்படி உன்னை உந்தாவிட்டால், என்னுடைய நிருபமானது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.
ச. பிராணநாதா, சீக்கிரம் எல்லா வேலையையும் முடித்துக் கொண்டு போகப் புறப்படும்.
பா. போய்வரும்படி நீயே உத்தரவளிப்பதினால், நான் உடனே புறப்படுகின்றேன். நான் மீண்டு வருமளவும் அரைக் கண மும் அவ்விடம் அதிகமாகத் தாமதியேன். காதலியே, மீட் டும் உன்னைக் காணுமளவும் கண்ணுறங்கேன். [எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
மூன்றாம் காட்சி
இடம் – வாணீபுரம். ஓர் வீதி.
ஷாம்லால், சாம்பநாதன், சிறைச்சாலைச் சேவகன் வருகிறான்.
ஷா. காவற்காரா! ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள் இவனை பச்சாத்தாபத்தைப்பற்றி என்னிடம் பேசவேண்டாம்- பணத்தை வட்டியில்லாமல் கொடுத்த முடன் இவன்- காவற்காரா ! ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள் இவனை.
அ. அப்பா, ஷாம்லால் நான் சொல்வதைச் சற்றே கேள்.
ஷா. நான் என் பத்திரத்தின்படி நடத்துவேன். என் பத்திரத் திற்கு விரோதமாக ஒன்றும் பேசாதே! பத்திரப்படி நிறைவேற்றுவதாக நான் சத்தியம் செய்திருக்கிறேன். ஒரு காரணமு மில்லாதிருக்கும் பொழுது என்னை நாயென்ழைத்தாயல்லவா? ஆகவே, நான் நாயானபடியால், என்பற்களுக்குப் பயப்படு. இராஜா இருக்கின்றார் எனக்கு நியாயம் நடத்த. என்ன பயித்தியக்காரனாய் இருக்கிறாய் நீ, காவற்காரா! அவன் கேட்டானென்று, அவனை எப்படி வெளியில் அழைத் துக் கொண்டு புத்தியில்லாத்தனமாய் வருகின்றாய்? எனக்கு ஆச்சரியமா யிருக்கின்றது.
அ. உன்னை வேண்டிக்கொள்கிறேன், நான் சொல்வதைச் சற்று கேள்.
ஷா. நான் என் பத்திரத்தின்படி நடத்துவேன்,நீ சொல்வதை ஒன்றும் நான் கேட்கமாட்டேன். நான் என் பத்திரத்தின் படி நிறைவேற்றுவேன். ஆகையால் நீ பேசுவதிற் பிர யோசன மில்லை. ஹிந்துக்கள் வந்து வேண்டுகிறார்களே என்று, தலை யசைத்து, என் மனமிளகி, பெருமூச் செறிந்து, மதி மயங்கி, பச்சாத்தாபப்பட்டு, உள மிரங்கும் மந்த புத் தியை யுடைய மடையனல்ல நான் – பின் தொடராதே!- உன் பேச்சு வேண்டாமெனக்கு! என் பத்திரத்தின்படியே நான் நிறைவேற்றுவேன். (போகிறான்.)
சா. மனிதர்களுடன் சகவாசம் செய்யும் இத்தனைப் பிடிவாத முள்ள நாயை இதுவரையில் நான் கண்டதில்லை.
அ.அவன் போகட்டும். வீணாக நான் இனி அவனைப் பின் தொடர்ந்து வேண்டமாட்டேன். அவன் வேண்டுவது என் னுயிர்போலும்; அதற்கு நியாயமும் எனக்கு நன்றாய்த் தெரியும். அவனுக்குக் கடன்பட்டு அவன் கையிற் சிக்கிய அநேகரை, அவர்கள் என்னிடம் வந்து துக்கப்பட்ட பொழுது, நான் மீட்டிருக்கின்றேன் ; ஆகவே என்னைத் துவேஷிக்கிறான் அவன்.
சா. இந்த அபராதத்தின்படி நடப்பதற்கு அரசர் ஒருகாலும் உடன்படார் என்று உறுதியாய் நம்புகிறேன்.
அ. நியாத்திற்கு விரோதமாய் நடக்க முடியாது. இந்த வாணீபுரம் வையகத்திலுள்ள நானா ஜாதி வர்த்தகர்களும் வந்து சேருமிடம், அதனால் நமது பட்டணம் பெரும் லாபத் தை அடைகிறது; ஆகவே நியாய சட்டப்படி நடத்தாவிட் டால், ராஜ்யத்திற்கு அதனால் பெரும் அவதூறு உண்டா கும். ஆகவே நீர் விடை பெற்றுப் போம். இந்த நஷ்டங் களும் துயரமும் என்னுடலை மிகவும் மெலியச் செய்திருக்கின்றன; இந்தக் கொடியனான மாறுபாடிக்கு நான் என் னுடலிலிருந்து நாளை ஒரு ராத்தல் மாமிசம் கொடுக்கமுடியுமோ என்று சந்தேகப்படுகிறேன்.-நட, அப்பா காவற் காரா, நட,- ஈசனருளால் அவன் கடனை நான் தீர்ப்பதை பானுசேனன் வந்து பார்த்தாற் போது மெனக்கு! அப்புறம் எனக் கொன்றும் கவலையில்லை. [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
நான்காம் காட்சி
இடம்.. மணிபுரம்.சரோஜினியின் வீட்டில் ஓர் அறை.
சரோஜினி, நீலகேசி, வீலாதரன்,ஜலஜா பாலதாசன் வருகிறார்கள்.
லீ. அம்மணி, நான் அதை உம்மெதிரில் எடுத்துரைப்ப தாயி னும் நீர் மேன்மையாம் தெய்வீகமான நட்பின் திறத்தை உண்மையாய் அறிந்துடையீர் என்று நான் கூறவேண்டும்; உமது பிராணநாதன் உம்மை விட்டுப் பிரிந்திருப்பதை நீர் பொறுத்திருப்பதில், அது நன்றாய் விளங்குகின்றது. ஆயி னும், இந்தப் பெருமையை யாருக்காகக் காட்டுகிறீர் என் பதையும், எப்படிப்பட்ட உத்தம புருஷனுக்கு நீர் உதவு கிறீர் என்பதையும், உமது கணவனுக்கு அவர் எவ்வளவு ஆப்த நண்பன் என்பதையும்,நீர் அறிவீராயின், உமக்கு வழக்கமாம் உதாரத்தினால் உண்டாகும் சந்துஷ்டியைவிட, இவ் வேலையில் அதிக சந்துஷ்டி யுடையவராவீர் என்பதை நான் அறிவேன்.
ச. பிறருக்கு நன்மை செய்த விஷயத்தில், பிறகு நான் எப்பொழுதும் துக்கப்பட்டேனில்லை, இப்பொழுதும் துக்கப்படப் போகிறதில்லை ஒன்றாய்ச் சம்பாஷித்து ஒன்றாய்க் காலம் கழிக்கும் அன்பு சமமாய் ஒருவர்மீதொரு வர் வைத்த சினேகிதர்களுக்குள், சாயலிலும் நடை யுடை பாவனைகளிலும், நற்குணத்திலும் சமத்வம் இருக்க வேண்டும்; ஆகவே இந்த அநந்தநாதர் என்பவர், எனது பிராணநாதருடைய அத்யந்த நண்பரா யிருப்பதால், எனது பிராணநாதரைப் போலவே யிருக்கவேண்டு மென்று நான் எண்ணவேண்டியிருக்கிறது. அங்ஙனம் இருக்கு மாயின் என் உயிருக்குச் சமானமானவரை, நரகத்தின் குரூரத் தினின்றும் மீட்க, நான் செய்யும் காரியமெல்லாம் எவ்வளவு அற்பமானது! இது சற்றேறக்குறைய என்னையே நான் புகழ்ந்துகொள்வதாகும்; ஆகவே இனிவேண்டாம் அதைப் பற்றி. வேறு விஷயங்களைக் கேளும் லீலாதரரே, என் னுடைய நாதன் திரும்பிவருமளவும், என் வீட்டின் காரியங் களையெல்லாம் உமது கையில் ஒப்புவிக்கின்றேன்; அவை களை யெல்லாம் நீர் எஜமானனாய்ப் பார்த்து வாரும். என் வரையில், நீலகேசி ஒருத்தியை எனக்குத் துணையாகக் கொண்டு அவளது புருஷனும் எனது நாதனும் திரும்பி வருகிறவரையில், ஜகதீசனைக் குறித்துப் பூஜை செய்து விரதமாய் இருக்கவேண்டுமென்று, சுவாமிக்கு ஒரு பிரார்த் தனை செய்துகொண்டேன் இரகசியமாய். இதற்கு இரண்டு காத தூரத்தில் ஒருமடம் இருக்கிறது. அங்கு போய் நாங்கள் தங்கியிருக்கிறோம்.எனது அன்பினாலும், தற்கால அவசியத்தினாலும், நான் உம்மீது சுமத்தும் இவ்வேலையை நீர் மறுக்கலாகாதென வேண்டுகிறேன் நான்.
லீ. அம்மணி,நியாயப்படி நீர் எனக்கிடும் கட்டளைகளை யெல் லாம் நான் நிறைவேற்றுவேன், மனப்பூர்வமாய்.
ச. எனது பரிஜனங்கள் எல்லாம் இவ் விஷயத்தில் என் எண் ணத்தை அறிவார்கள் முன்பே. ஆகவே எனது பிராண நாதருக்கும் எனக்கும் பதிலாக, உம்மையும் ஜலஜாவையும் எஜமானனும் எஜமானியுமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே நாம் மறுபடியும் சந்திக்கும் வரையில் சுகமாய் இங்கு இருப்பீராக.
லீ. நீங்கள் உமது காலத்தைச் சந்தோஷமாய்க் கழித்து சுக மாய் வாழ்வீராக!
ஐ. அம்மணி, உமது மனோபீஷ்டம் நிறைவேறுமாக என்று நான் பிரார்த்திக்கின்றேன்.
ச. அந்தப் பிரார்த்தனைக்காக உனக்கு வந்தனம் செய்கின்றேன். அவ்வாறே, உனது மனோபீஷ்டமும் நிறைவேறுமாக என்று நான் கோருகிறேன். ஜலஜா, நான் போய்வருகிறேன்.
[லீலாதரனும், ஜலஜாவும் போகி றார்கள்.]
பிறகு, பாலதாசா, – இதுவரையில் உன்னை யோக்யனாகவும் உண்மை யுடையவனாகவும் கண்டேன், இனிமேலும் அங் ஙனமே காணுவேனாக. இந்த நிருபத்தைக்கொண்டு, மனித னால் எவ்வளவு வேகமாய்ப் போகமுடியுமோ, அவ்வளவு வேகமாய், மதுரா நகரம் போய்ச் சேர். என்னுடைய தாயாதி பல்லவராயரிடம், அவரது கையில், நேராக இதைச் சேர்ப்பா யாக; அன்றியும், அவர் உனக்குக் கொடுக்கும் உடைகளை யும், காகிதங்களையும், மனோ வேகமாய், வாணீபுரம் போகும் பொதுத் துறை யருகில், கவனமாய் என்னிடம் கொண்டு வந்து சேர் – வார்த்தை யாடுவதில் காலத்தைப் போக் காதே, உடனே புறப்பட்டுப் போ; உனக்குமுன் அங்கு வந்திருப்பேன் நான்.
பால. அம்மணி,நான் கூடிய சீக்கிரத்திற் போகிறேன். [போகிறான்)
ச. வா, நீலகேசி ; நான் இப்பொழுது செய்யவேண்டிய வேலை இருக்கின்றது; அது இன்னதென்று உனக்கு இன்னும் தெரியாது. அவர்கள் நம்மைப்பற்றி நினைக்குமுன், நமது கணவர்களை நாம் காண்போம்.
நீ. அவர்கள் நம்மைப் பார்ப்பார்களா?
ச. பார்ப்பார்கள், நீலகேசி ; ஆயினும் நம்மிடத்தில்லா ததை நாம் உடையவர்களென்று அவர்கள் எண்ணும்படியான உடையில் நம்மைக் காண்பார்கள்; நாமிருவரும் இரண்டு வாலிபர்களைப் போல் வேடம் தரித்திடுங்கால், உன்னைவிட அதிக அழகுடை இளைஞனாய்க் காண்பேன், உன்னைவிட அதிக தைரியத்துடன் எனது உடைவாளைத் தரிப்பேன், என்று என்ன பந்தயம் வேண்டுமென்றாலும் கட்டுகிறேன் நான்; பாலப் பருவம் போய் யௌவனம் வருமுன் இருக்கும் கீச்சுக் குரலுடன் பேசுவேன்; மெல்லிய நடையை ஆடவர்க் குரிய கம்பீர நடையாக்கிடுவேன்; சச்சரவுகளைக் குறித்து டம்பனாம் வாலிபனைப்போல் வார்த்தை யாடுவேன்; உத் தமிகளான காரிகைகள் என் காதலைப் பெறவேண்டினார்கள் ளென்றும், நான் அவர்களை வெறுக்க, வெய்துயிர்த்து ஆவியை விட்டனரென்றும், விசித்திரமான பொய்களை விளம்பிடுவேன் ; அதைத் தடுக்க என்னால், முடியாமற் போயிற் றென்பேன்; பிறகு நான் பச்சாத்தாபப்பட்டு அவர் களைக் கொல்லா திருக்கலாகாதா எனக் கோரியதாகக் கூறு வேன்; இம்மாதிரியான இருபது பொய்களைப் பேசி, ஒரு வருஷத்துக்கு முன்பாகவே நான் பள்ளிக்கூடத்தை விட் டிருக்கவேண்டுமென்று மனிதர்கள் சத்தியம் செய்யும்படிச் செய்வேன். டம்பம் பேசும் காளைகளின் விகடங்கள் ஆயிரம் என் மனத்தி லிருக்கின்றன, அவைகளையெல்லாம் நடத் திக் காட்டுவேன்.
நீ. ஏன், நாம் ஆடவர்களாய் மாறிடுவோமா?
ச. சீ! இதென்ன கேள்வி? என்ன அசங்கியமான அர்த்தம் செய்கிறாய்? அதிருக்கட்டும்; போவோம் வா, நமக்காகத் தோட்டத்தின் வாயிலில் காத்திருக்கும் வண்டியில் நாம்ஏறி யதும், எனது சூழ்ச்சியை முழுவதும் உனக்குத் தெரிவிக் கின்றேன்; ஆகவே துரிதப்படு, இன்றைத்தினமே ஆறு காதம் செல்லவேண்டும் நாம். [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
ஐந்தாம் காட்சி.
இடம் – வாணீபுரம், ஒரு தோட்டம்.
லாவண்யனும், ஜலஜாவும் வருகிறார்கள்.
லா. ஆம், உண்மையில்-இதோ பாருங்கள், தாய் தந்தைகள் செய்யும் பாபமெல்லாம் அவர்கள் குழந்தைகளின் தலையின் பேரில்தான். ஆகவே உண்மையைக் கூறுமிடத்து, உங்களைக் கண்டால், எனக்குப் பயமா யிருக்கிறது. நான் உங்க ளிடத்தில் எப்பொழுதும் ஒன்றையும் ஒளித்த தில்லை; ஆகவே, இவ் விஷயத்தில் எனக் கிருக்கும் பயத்தை உமக் குத் தெரிவிக்கிறேன் ; ஆகவே சந்தோஷமா யிரும்; ஏனெ னில் வாஸ்தவமாய் நீங்கள் நரகம் போகவேண்டியதுதான். அதிலிருந்து தப்ப ஒரு கோரிக்கை யிருக்கிறது, அதுவும் சரியான கோரிக்கை யல்ல, பாவமான கோரிக்கை.
ஐ. அதென்ன கோரிக்கை யப்பா, சொல்; உன்னை வேண்டு கிறேன்.
லா. உம்முடைய தகப்பனாருக்கு நீர் பிறக்கவில்லையென்று கொஞ் சம் கோரலாம் – அதாவது, நீர்ஜைனன் மகளல்ல வென்று.
ஐ. அதுவும் ஒருவிதத்தில் பாபமான கோரிக்கையாம்; ஏனெ னில் அப்பொழுது என் தாயார் செய்த பாபமானது என் தலையில் வந்து விடியுமன்றோ?
லா. ஆயின் உண்மையில் உமது தந்தை தாயர் இருவராலும் நீர் சபிக்கப்பட் டிருக்கிறீரென அஞ்சுகிறேன்; தாயாருடைய பாபத்தினின்றும் தப்பினால், தகப்பனாருடைய பாபத்தில் வீழ்கிறீர், தகப்பனாருடைய பாபத்தினின்றும் தப்பினால் தாயாரின் பாபத்தில் வீழ்கிறீர். ஆகவே இரண்டு விதத் திலும் நீர் நரகத்திற்குப் போகவேண்டியதுதான்.
ஐ. அந்நரகத்தினின்றும் என் கணவர் என்னைக் காப்பற்று வார்; அவர்தான் என்னை ஹிந்து வாக்கிவிட்டாரே.
லா. உண்மையில், அவ ரிழைத்த பாபம் எல்லாவற்றையும் விட அதிகமாம். ஒருவனைக் கொன்று மற்றொருவன் வாழும்படி யான ஸ்திதியில், இவ் வுலகில் எத்தனை ஹிந்துக்கள் உயிர் வாழ முடியுமோ, அத்தனை பெயர் முன்பே யிருந்தோம். இப்பொழுது சமணர்களை யெல்லாம் ஹிந்துக்க ளாக்கிவிட் டால், மாம்சத்தின் விலை அதிகப்பட்டுப் போம். நாம் எல் லோரும் மாமிசம் தின்பவர்களாக மாறிவிட்டால், அதிக பணம் கொடுத்தாலும் அனலில் வதக்க அத்தனை மாம்ச மும் அகப்படாது.
ஐ. இதோ,லாவண்யா. என் பிராண நாதரிடம் நீ கூறுவதைச் சொல்கிறேன். இதோ வருகிறார் அவர்.
லீலாதரன் வருகிறான்.
லீ. லாவண்யா, நீ இவ்வாறு எனது மனைவியுடன் மூலைகளில் இரகசியம் பேசிக்கொண் டிருப்பாயாயின் நான் உன்மீது பொறாமை கொள்வேன் சீக்கிரத்தில்.
ஐ. பிராணநாதா, எங்களைப்பற்றித் தாங்கள் பயப்படவேண் டாம்; லாவண்யனும் நானும் சண்டைபோட்டுக்கொண்டி ருந்தோம். நான் சமணனுடைய பெண்ணாய்ப் பிறந்ததினால், எனக்கு மோட்சம் கிடைக்காதென்று உறுதியாய்க் கூறுகிறான் ; நீர் மகாராஜாவுக்குத் தக்க பிரஜையல்லவென்றும் கூறுகிறான்; ஏனெனில் சமணர்களை யெல்லாம் ஹிந்துக்க ளாக மாறச் செய்வதினால், மாம்சத்தின் விலையை உயர்த்தி விடுகின்றீராம்.
லீ. அந்த அபராதத்திற்கு நான் தக்க நியாயம் சொல்லிக் கொள்ளுகிறேன் மகாராஜாவிடம் – லாவண்யா, நேற்றிரவு அந்த சமணப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாயே நீ, அது என்ன சமாசாரம்? அதற்கு யார் உத்தரம் சொல்வது?
லா. அந்தப் பெண் என்னை தன் மதத்தில் சேர்த்துக்கொள்ளப் பார்த்தாள். அதற்கு நான் என் மதமே நல்ல மதம், நீ சொல்வது சம்மதமல்ல என்று சொல்லிவிட்டேன்.
லீ. மடையர்களாலும் பதங்களை மாற்றிப்பேச எவ்வளவு முடி கிறது! சீக்கிரத்தில் அறிவிற்குச் சிறந்த அழகு மௌனமா யிருத்தலாய் முடியுமென்றும், வார்த்தையாடல் கிளிப் பிள்ளைகளிடம் மாத்திரம் மெச்சப்படுமென்றும், நினைக்கின்றேன் – அதிருக்கட்டும் அடா, உள்ளே போய் போஜனம் ஆய்விட்டதா என்று விசாரி.
லா. இன்னும் ஆய்விட வில்லை. அப்படியே இருக்கிறது, ஒரு வரும் சாப்பிடவில்லை இன்னும்.
லீ. ஈசனே! என்ன படுங்காளிப் பயல் இவன் ! வேலைக்காரர்களை சாப்பாட்டுக்குச் சித்தமா யிருக்கின்றார்களா என்று விசாரி.
லா. காலைமுதல் சித்தமா யிருக்கிறார்கள்! இப்பொழுது விட் டால் அல்லவோ தெரியும், அரை க்ஷணத்தில் தீர்த்துவிடுவார்கள்!
லீ. என்னடா கஷ்டமா யிருக்கிறது! போஜனத்துக்கு நாங்கள் வரலாமா என்று கேட்டுவா.
லா. அதை அவர்களைக் கேட்பானேன்? உங்களுக்கல்லவா தெரிய வேணும், உங்களுக்குப் பசிக்கிறதா இல்லையா என்று?
லீ. சந்தர்ப்பம் கிடைக்கும்பொழு தெல்லாம் சச்சரவுதானா! ஒரே விசையில் உன் புத்தியின் குவியலை யெல்லாம் கொட்டி அளக்கமாட்டாயா? நான் ஸ்பஷ்டமாய்ச் சொல்வதை நீ அறிந்துகொள்ளமாட்டாயா? உள்ளே வேலைக்காரர்களிடம் போய், உடனே இடம் செய்து, இலையைப் போட்டு, உணவைப் பரிமாறச் செய்.
லா. இதோ உள்ளே போகிறேன்! உடனே இடம் செய்யச் சொல்கிறேன்! இலையைப்போடச் சொல்கிறேன்! சாப்பாட் டைப் பரிமாறச் சொல்கிறேன் – நீங்கள் வரும்போது மூன்று சாமான்களைக் கொண்டு வாருங்கள் ஒவ்வொருவரும் – ஒரு வாய், ஒரு கை, ஒரு வயிறு. (போகிறான்.)
லீ. என்ன புத்தி கூர்மை! அவனது வார்த்தைகள் என்ன பொருந்தினவா யிருக்கின்றன! இவன் தன் மனமெனும் களஞ்சியத்தில் எத்தனை வார்த்தைகள் சேகரித்து வை திருக்கிறான்! இவனைப் பார்க்கிலும் உயர்ந்த பதவியிலிருந் தும், இவனைப்போல் அநேகம் வார்த்தைகள் அறிந்தவர்க ளாயினும், கடினமான பதமொன்றைத் தக்கபடி உபயோகிக்க அறியாதவர்களாய், அர்த்தத்தை அழித்திடும், அநேகரை நான் அறிந்துள்ளேன் ஜலஜா, நீ என்னவா யிருக்கின் றாய்? அப்புறம், என் இனிய கண்ணே, உன்னுடைய உண் மையான எண்ணத்தைக் கூறு; பானுசேனருடைய மனை வியைப்பற்றி என்ன நினைக்கின்றாய்?
ஐ. அவர்களது அருங் குணமானது உரைக்கற்பால தல்ல, பானுசேனர் யோக்யமான வாழ்க்கை யுடையவரா யிருத்தல் அவசியம்! இப்படிப்பட்ட குணவதியை மனைவியாகப்பெற்ற புண்ணியத்தினால், இவ் வுலகின்கண்ணே மேலுலகத்தின் ஆனந்தத்தை அனுபவிக்கின்றார்; அவ்வாறு இவ்வுலகில் அதை அவர் அறியாவிட்டால், அவர் நியாயப்படி சுவர்க்கம் ஏகத் தக்கவ ரல்ல; தெய்வலோக வாசிகள் இருவர், பூமண் டலத்திலுள்ள புண்ணியவதிகள் இருவரைப் பந்தயமாக வைத்து விளையாடினால், அவர்களுள் ஒருத்தி சரோஜினி யாவாள், மற்றொருத்தியுடன் மற்றும் செல்வத்தைச் சேர்த் தால்தான், இவளுக்குச் சமமாகுவாள்; ஏனெனில் இந்த அதிர்ஷ்ட ஹீனமுடைய அவனியில், அவளுக் கிணையே கிடையாது.
லீ. பானுசேனருக்கு எப்படி அவள் மனைவியாக வாய்த் தனளோ, அவ்வண்ணமே நான் உனக்குப் புருஷனாகக் கிடைத்திருக்கிறேன்.
ஜ. அன்று; அதைப்பற்றியும் என் எண்ணத்தைக் கேட்கின்றீரா?
லீ. பிறகு கேட்கின்றேன் நான், முன்பு போஜனம் கொள்ள உள்ளே போவோம்.
ஐ. அப்படி யல்ல; நான் பசியுட னிருக்கும்பொழுதே உமது குணங்களைப் புகழ்கின்றேனே.
லீ. வேண்டாம், உன்னை வேண்டுகிறேன், விருந்தான பின்பு அந்தப் பேச்சை வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீ எதைச் சொன்னபோதிலும் எல்லாவற்றையும் ஜீர்ணித்து விடுவேன்.
ஐ. சரி ! ஆனால் வாரும், வர்ணிக்கிறேன் உம்மை. [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
– தொடரும்…
– வாணீபுர வணிகன் (நாடகம்), நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, மூன்றாம் பதிப்பு: 1957.