வாணீபுர வணிகன்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 813
(1957ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதல் அங்கம் | இரண்டாம் அங்கம் | மூன்றாம் அங்கம்
முதற் காட்சி
இடம் – மணிபுரம். சரோஜனியின் வீட்டிலோர் அறை வாத்தியகோஷம்,
மார்த்தாண்ட சேதுபதி தன் பரிவாரங்களுடன் வருகிறான். நீலகேசி முதலிய பரிவாரங்கள் சூழ சரோஜனி வருகிறாள்.
மா. ஆயிரங் கிரணங்களுடன் பிரகாசிக்கின்ற ஆதித்யன் அரு காமையில் உதித்து வளர்ந்தமையால் உண்டான எனது நிறத்தைக் குறித்து, நீ என்னை வெறுக்கவேண்டாம். பரிதி யின் கிரணங்கள் பனிக்கட்டிகளையும் உருக்கச்செய்யச் சக்தி யில்லா திருக்கிற இமய மலைச் சாரலிற் பிறந்த அழகனை வரவழை; உன்மீதுகொண்ட ஆசையின்பொருட்டு இரு வரும் எங்கள் இரத்தத்தைக் குத்தி எடுக்கின்றோம்; அவனது இரத்தமோ என்னுடைய இரத்தமோ, அதிக மாய்ச் சிவந்தது என்று நீயே பார். பெண்கள் நாயகமே, உனக் கொன்றுரைக்கிறேன் நான்; எனது இவ் வடிவைக் கண்டு எப்படிப்பட்ட வீரர்களும் பயந்திருக்கின்றனர்.உன் மீது எனக்குள்ள ஆசையின்மீ தாணைப்படி சொல்லுகின் றேன். எங்கள் தேசத்துச் சிறந்த களங்க மற்ற கன்னியர்க ளெல்லாம் இதைக் கண்டு காதல் கொண்டிருக்கின்றனர். அன்றியும், பெண்ணரசே, உன் மனத்தைக் கவர வன்றி என் நிறத்தை மாற்றிக்கொள்ள நான் விரும்பேன்.
ச. புருஷனை வரிக்கும் விஷயத்தில், மற்ற கன்னிகைகள் தம் கண் நிறைந்த கணவனையே வரிப்பதுபோல், நான் வரிக்கும் படியானவ ளல்ல. அன்றியும், எனக்கேற்பட்டிருக்கிற சுல் கத்தின்படி, நானாக வரிக்கச் கதந் தரமற்றவள். உமக்கு நான் தெரிவித்திருக்கிறபடி, அவர் ஏற்படுத்திய பிரகாரம் எந்தப் புருஷன் என்னை வெல்கின்றாரோ, அவருக்கே நான் மனைவி யாகவேண்டுமென்று, என் தகப்பனார் தன் புத்தியின் யுக்தி யால், என் சுதந்தரத்தைக் குறைத்து என்னைக் கட்டுப் படுத்தி யிராவிட்டால், அவனி புகழ் அரசே, இதுவரையில் என் காதலைப் பெற வந்தவர்களைவிட, நான் கண்ணுற்ற வரையில் தாம் ஒன்றுங் குறைந்தபடி யன்று.
மா. அவ்வளவாவது கூறினதற்காக வந்தனம் செய்கிறேன். ஆகவே, என் அதிர்ஷ்டத்தைப் பார்க்கப் பெட்டிகளிடம் தயவு செய்து அழைத்துச் செல்லும்படி உன்னை வேண்டு கிறேன். இந்தக் கத்தியினால், சோழனைக் கொன்றிருக் கிறேன்; சுல்தான் சூலைமானிடமிருந்து மூன்று நாடுகளைச் ஜெயித்த பார்த்திப அரச குமாரன் சென்னியைச் சேதித் திருக்கிறேன். இதன்மீ தாணைப்படி சொல்கிறேன்,உத் தமியே, உன்னைப் பெறவேண்டி, உலகிலுள்ள எப்படிப் பட்ட கடூரமான கண்களையுடைய உத்தம் வீரனையும் என் கண் பார்வையினால் நடுநடுங்கச் செய்வேன்; எப்படிப் பட்ட சூராதி சூரனானாலும் அவனது தைரியத்தை அரை க்ஷணத்தில் நிலை குலையச் செய்வேன்; பெட்டைக் காடியி னின்றும் பாலருந்தும் அதன் குட்டிகளைப் பலாத்காரமாய்ப் பிரித்துவிடுவேன் ; இரை யகப்படாது கோபத்துடன் கர்ஜிக்கின்ற ஆண் சிங்கத்தின் எதிர் நின்று பரிஹசிப்பேன். ஆயினும், என்ன துர்ப்பாக்கியம்! பீமசேனனும் பிருங்கி மஹ ரிஷியும் யார் பலசாலியென்று கண்டுபிடிக்கும்பொருட்டு பாய்ச்சிகை உருட்டினால்,அதிர்ஷ்ட வசத்தால் அதிக பந்தயம் பலஹீனனான பிருங்கியின் கரத்தினின்றும் விழுந் தாலும் விழலாம். அம்மாதிரியே அர்ஜூனனானவன், அவ னது அற்பக் காலாள் ஒருவனால் தோற்கடிக்கப்படலாம். அம்மாதிரி குருட்டு அதிர்ஷ்டத்தால் இவ்விஷயத்தில் நான் தவறிப்போய், ஹீனன ஒருவன் ஜெயித்திட, நான் துயரத் தால் மடிய நேரிட்டாலும் நேரிடலாம்.
ச. உம்முடைய அதிர்ஷ்டத்தின்படி நடக்கவேண்டும்.நீர் கோர முயல்வதை விடவாவது விடவேண்டும், அல்லது கோருவ தானால், அங்ஙனம் செய்யுமுன், ஒரு வேளை தவறாகக் கோரி னால், மறுபடியும் மண விஷயமாக மாதரின் முகத்தைப் பார்ப்பதில்லை என்று பிரமாணம் செய்யவேண்டும். ஆகவே, யோசித்துத் தீர்மானியும்.
மா. நான் யோசியேன் இனி. என் விதியிடம் என்னை அழைத்துச்செல்.
ச. முதலில் கோயிலுக்குப் போம், பிரமாணம் செய்திட; பிறஞ் போஜனம் கொண்டபின், உமது அதிர்ஷ்டத்தின்படி கோரலாம்.
மா. நற் சகுனம் வாய்க்குமாக! ஏனெனில், இதனால் மனிதர்ளுக்குள் நான் அதிர்ஷ்டமுடையவனோ, அதிர்ஷ்ட ஹீனனோ, என்பது தீர்மானிக்கப்படும்.
[வாத்யகோஷம், எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
இரண்டாம் காட்சி.
இடம் – வாணீபுரம். ஒரு வீதி.
லாவண்ய கபீரன் வருகிறான்.
லா. என் எஜமானனாகிய இந்த ஜைனனைவிட்டு நான் ஓடிப்போக என் மனசு எனக்கு உதவி செய்யும். பிசாசு என் பக்கத்தில் நின்றுகொண்டு ‘கபீரா, லாவண்ய கபீரா, நீ நல்லவன், ரொம்ப நல்லவன்; காலை நீட்டு, கம்பி காட்டு, நல்ல வாட் டம், பிடி ஓட்டம்’ என்று சொல்லி என்னை ஏவுகிறது. என் மனசோ, வேண்டாம், ஜாக்கிரதை. நீ நல்ல யோக்கியன். கபீரா, நீ நிரம்ப யோக்கியன், ஜாக்கிரதையாயிரு! ஓடிப் போகாதே! ஓட்டம் பிடிக்கிறது நல்ல தல்ல,’ என்று சொல்லுகிறது. தைரியசாலியான பிசாசு, ‘ஓடிப்போ ‘ என் கிறது; ‘போய்விடு’ என்கிறது பிசாசு; ஓடிப்போ ஓடிப்போ, நிற்காதே, மனசை தைரியம் பண்ணிக்கொண்டு ஓட்டம் பிடி’ என்கிறது பிசாசு. என் மனசோ, என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, புத்திசாலித்தனமாய்ச் சொல்கிறது என் னிடம், ‘அப்பா, கபீரா,நீ நிரம்ப யோக்யன், நல்ல யோக்ய னுக்குப் பிறந்தவன், உம் – யோக்கியமான தாயாருக்கு என்று சொல்லியிருக்க வேண்டும்,ஏன் என்றால் என் தகப்பனார் ஒருமாதிரி, கொஞ்சம் உண்டு, அந்த விஷயத்தில் கொஞ்சம் ருசி.- என் மனசு சொல்லுகிறது; லாவண்யா, போகாதே’ என்று பிசாசுசொல்லுகிறது ‘போ’ என்று.மனசு சொல்லுகிறது ‘போகாதே என்று. நான் மனசுக்குச் சொல்லுகிறேன், “நீ சொல்லுகிற பத்தி சரி தான்” என்று இந்தப் பிசாசுக்கும் ‘நீ சொல்லுகிறபுத்தி சரி தான்’ என்று சொல்லுகிறேன். என் மனசு சொல்லுகிற படி கேட்பதா யிருந்தால், என் எஜமானன் மாறுபாடியிடத் திலேயே காலம் கழிக்கவேண்டியது தான். அவன் என்னமோ ஒருவித பிசாசு! இந்த எஜமானப் பிசாசு, பெரிய பிசாசு இருக்கிறதே-அப்படிச்சொல்வதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது – – அதைவிட்டு, போவது என்றால், சின்ன பிசாசு உத்திரவுபடி கேட்பதாகும். இந்த ஜைனன் என்னமோ சாட்சாத் பிசாசின் அவ தாரம்; ஆகவே, இந்த ஜைனனிடத்திலேயேயிரு என்று எனக்குப் புத்தி சொல்லுகிறஎன் மனசு இருக்கிறதே, நிரம்ப கடினமான மனசாயிருக்கவேணும். ஆகவே இந்தப் பிசாசு சொல்லுகிறது தான் நல்ல புத்திமதி. ஆகவே பிசரசே, நான் ஓடிப்போகிறேன். உன் கட்டளைப்படி கம்பி காட்டுகிறேன், ஒட்டம் பிடிக்கிறேன்.
ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வயோதிக கபீரன் வருகிறான்.
வ.க. அப்பா! பிள்ளையாண்டானே! உன்னைத்தான் கேட்கிறேன். அந்த மாறுபாடி ஐயா வீட்டுக்கு வழி எப்படி?
லா. [ஒரு புறமாக] அட்டா! இதோ என்னைப் பெற்றெடுத்த என் தகப்பனார்; கண்கள் இரண்டும் தெரியாது நல்ல குருடா யிருப்பதனால், என்னை அறிந்துகொள்ள வில்லை. அவரோடு கொஞ்சம் வேடிக்கை பண்ணுகிறேன்.
வ.க .ஐயா! பிள்ளையாண்டான், உங்களைத்தான் கேட்கிறேன். அந்த மாறுபாடி ஐயா வீட்டிற்கு வழி எப்படி?
லா. நேராகப் போய் திரும்பும்போது உம்முடைய வலது கையின் பக்கம் திரும்பும்; அதற்கப்புறம் திரும்பும்பொழுது இடது கை பக்கம் திரும்பவேண்டும்; அதற்கப்புறம் திரும்பும் பொழுது, எந்தக் கையின் பக்கமும் திரும்பாது, மாறு பாடியின் வீட்டுக்குள் மாறித் திரும்பும்.
வ.க. அப்பா ஆணை! நீ சொல்கிற வழி கண்டுபிடிக்க என்னால் முடியாது அப்பா. அவரிடத்திலே இருந்த லாவண்யன் என்ற பையன் இப்பொழுது அவரோடே இருக்கிறானா. இல்லையா? – சொல்லக்கூடுமா உன்னால்?
லா. யாரைப்பற்றி கேட்கிறீர்கள்? வாலிபனான லாவண்ய துரையைப்பற்றியா? [ஒரு புறமாக] இதோ பார் ஒரு வேடிக்கை, வாயைக் கிளப்பிவிடுகிறேன்!- ஏனையா, அந்த வாலிபனான லாவணிய துரையைப்பற்றியா கேட்கிறீர்கள்?
வ.க. அவன் துரை யல்ல, ஐயா. ஒரு ஏழையினுடைய பிள்ளை. அவன் தகப்பன், நானே சொல்லிக் கொள்வதானாலும், நிரம்ப ஏழை; ஏழையா யிருந்தாலும், நிரம்ப யோக்கியன்; சாமி தயவினாலே சாப்பாட்டுக்குக் குறைச்ச லில்லை.
லா. சரி, அவன் தகப்பன் எப்படிப்பட்டவனாகவாவது இருக்கட் டும். நாம் வாலிபனான லாவண்ய துரையைப்பற்றிப் பேசுவோம்.
வ.க. சுவாமி, அந்த லாவண்யன் தங்களுடைய சினேகிதனா?
லா. உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன், ஆகையால், கிழவனாரே, ஆகையால், உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன் – இளைஞனான லாவண்ய துரையைப்பற்றியா பேசுகிறீர் என்று.
வ.க. ஆம், லாவண்யனைப்பற்றி தான், தாங்கள் அடியேன்பேரில் தயவு செய்யவேண்டும்.
லா. அப்படியானால் லாவண்ய துரை என்று சொல்லும். அப்பா! என்னை அந்த லாவண்ய துரையைப்பற்றி கேட்க வேண்டாம் பிள்ளையாண்டான் கலா சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற படி, தலை விதியாலோ, கிரக சாரத்தாலோ, யமன் உத்தரவாலோ மரித்துவிட்டான் உண்மையில்; அதாவது நீர் சொல்லுகிற சாதாரண வார்த்தையின்படி, மேல் உலகத்துக்குப் போய்விட்டான்.
வ.க. ஐ ஐயோ! தெய்வமே! அப்படி யில்லாதிருக்குமாக! அந்தப் பையன் என் கிழ வயதில் எனக்கு ஊன்றுகோ லாச்சுதே – என்னைத் தாங்குவதற்கு!
லா. ஏனையா! என்னைப் பார்த்தால், என்ன உங்கள் கண்ணுக் குத் தடியைப்போ லிருக்கிறேனா, கட்டையைப் போலிருக்கிறேனா, தூணைப் போலிருக்கிறேனா? – அப்பா, என்னைத் தெரிகிறதா?
வ.க. ஐயோ! என்ன கஷ்ட காலம்! ஐயா, பிள்ளையாண்டான். உம்மை எனக்கு இன்னாரென்று தெரியவில்லை. ஐயா! உம்மை வேண்டிக்கொள்கிறேன். என் பையன் – சுவாமி அவனை ரட்சிப்பாராக!- இருக்கிறானா போய்விட்டானா? சொல்லும்.
லா. அப்பா, என்னைத் தெரியவில்லையா உமக்கு?
வ.க. ஐயோ! இரண்டு கண்ணும் பொட்டையா யிருக்கிறேனே? எனக்கும்மைத் தெரியவில்லையே!
லா. அது வாஸ்தவம்தான். உமக்கு இரண்டு கண்ணும் சரியா யிருந்தால்கூட என்னைக் கண்டுபிடிக்கிறது உமக்குக் கஷ்ட மாயிருக்கலாம். புத்திசாலியான தகப்பனுக்குத்தான் பிள்ளையின் சூட்சுமம் தெரியும். சரி! கிழவனாரே, உங்கள் பிள்ளையின் சமாசாரம் சொல்லுகிறேன். எனக்கு ஆசீர் வாதம் செய்யுங்கள். (முழந்தா ளிடுகிறான்.) எப்படியும் உண்மை வெளியாகிவிடும், மூடி வைக்க முடியாது கொலையை நெடுங்காலம். ஒருவனுடைய குமாரன் என் பதைமாத்திரம் அப்படி மறைத்து வைக்கலாம்; ஆயினும் கடைசியில் உண்மை வெளியாகிவிடும்.
வ.க. ஐயா, நீங்கள் எழுந்திருங்கள் கொஞ்சம். நிச்சயமாய் என் பையன் லாவண்யன் அல்ல நீங்கள், என்று கூறுவேன்.
லா. போனது போகட்டும்; இனிமேல் இதைப்பற்றி விளையாட்டு வேண்டாம். எனக்கு உமது ஆசீர்வாதம் கொடுங்கள். நான்தான் லாவண்யன், உங்கள் பையனா யிருந்தவன், உங் கள் குமாரனா யிருக்கிறவன், உங்கள் குழந்தையா யிருக்கப் போகிறவன்.
வ.க. நீதரன் என் பிள்ளை என்று எண்ண முடியவில்லை.
லா. அதைப்பற்றி நான் என்ன நினைக்கவேண்டுமென்பதை அறியேன். நான் தான் லாவண்யன், மாறுபாடியின் வேலைக் காரன். ஆயினும் உங்கள் பெண்சாதி மரகதம்மாள் தான் என் தாயார் என்பதற்கு என்னவோ சந்தேகமில்லை.
வ.க. ஆமாம், அவள் பேர் மரகதம்தான். நீ லாவண்யன் என் பது நிஜமானால், நீ என் சொந்த சதையும் இரத்தமும் என்று நான் சத்தியம் பண்ணுவேன். ஸ்வாமி உன்னைக் காப்பாற்றுவாராக! அப்பா உனக்கு எத்தனைப் பெரிய தாடி யிருக்குதடா! என் டப்பா குதிரைக்கும் வாலிலிருக் கும் மயிரைவிட, உன் முகத்தில் தாடி பெரிதாயிருக்கிறதே!
லா. ஆனால் உங்கள் டப்பா குதிரைக்கு மயிர் குறுகிப்போ யிருக்கவேண்டும். நான் கடைசியில் பார்த்தபொழுது, என் முகத்திலே இப்பொழுது இருக்கிறதைவிட வாலில் மயிர் அதிகமா யிருந்தது.
வ.க.அப்பா,திடீரென்று எவ்வளவு மாறிப்போனாய்! உன் எஐ மானும் நீயும் எப்படி ஒத்து இருக்கிறீர்கள் ? அவருக்குக் காணிக்கையாக இதைக் கொண்டுவந்திருக்கிறேன். இப் பொழுது, எப்படி ஒத்திருக்கிறீர்கள்?
லா. அப்படி இருக்கிறோம், ஒரு மாதிரியாக; ஆனாலும், நான் என்னமோ அவரை விட்டு விட்டு ஓடிப்போகத் தீர்மானித்து விட்டேன்; ஆகவே அவரை விட்டு ஓடிப்போகிற வரையில் என் மனசு சும்மா இருக்காது. என் எஜமான் என்னமோ கேடு கெட்ட மாறுபாடி; அவனுக்குப் போய் காணிக்கை கொடுப்பதாவது! அதைவிட ஒரு கயிறு கொடுங்கள், தூக்குப் போட்டுக்கொள்ள! செத்துப் பிழைக்கிறேன் நான், அவனிடம் வேலைசெய்து. என் கையில் விரல் எத் தனை என்று என் விலா எலும்பினால் எண்ணிப் பார்த்துச் சொல்லலாம். அப்பா! அந்த மட்டும் நீங்கள் சரியான வேளைக்கு வந்தீர்கள்! நல்ல சந்தோஷம்; உங்கள் கையில் கொண்டுவந்ததை பானுசேனர் என்று ஒரு நல்ல பிரபு இருக்கிறார், அவருக்குக் கொடுங்கள். அவ ரென்னமோ நல்ல எஜமான், வேலைக்காரர்களுக்கெல்லாம் நல்ல புதிதான விலை யுயர்ந்த உடுப்புகள் கொடுக்கிறார். அவரிடத்தில் நான் போய் வேலையில் அமராவிட்டால், நான் இந்த உல கத்தையே விட்டு ஓடிப்போய்விடுவேன்.-அடடா! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! இதோ வருகிறார் அவர்! அவ ரிடம் போம். இனிமேல் ஒரு க்ஷணமும் நான் அந்த மாறு பாடியிடம் வேலை செய்வேனாயின், நானும் ஒரு மாறுபாடி தான்.
கேசரிநாதன் முதலிய வேலையாட்களுடன் பானுசேனன் வருகிறான்.
பா. அப்படியே செய்யலாம் நீ, ஆனால் துரிதப்படுத்தி எப்படி யாவது ஐந்து மணிக்குள்ளாக போஜனம் சித்தமா யிருக் கும்படிச் செய். இந்த நிரூபங்களை யெல்லாம் கொடுத்து விடும்படிச் செய். வேலையாட்களுடைய உடுப்புக ளெல்லாம் சித்த மாகட்டும். கிரிஜாநாதரை சீக்கிரம் என் வீட்டிற்கு வரும்படி சொல்,போ.
[ஒரு வேலையாள் போகிறான்.]
லா. அப்பா, போம் அவரிடம்.
வ.க. ஐயா, அடியேன் நமஸ்காரம்.
பா. வந்தனம். என்ன விசேஷம்? என்னுடன் ஏதாவது பேச வேண்டுமோ?
வ.க. இதோ இருக்கிறானே என் பையன், ஐயா, ஏழைப் பையன்.
லா. ஏழைப் பைய னல்ல, ஐயா! பணக்கார மாறுபாடியின் வேலைக்காரன், என் இஷ்டம் இப்பொழுது – என் தகப்பனார் சொல்லுகிற பிரகாரம்-
வ.க. அவனுக் கென்னமோ வேலை செய்யவேணும் என்று நிரம்ப வீக்கம். அதாவது உலகத்தில் சொல்லுகிறார்களே- நிரம்ப=
லா. நான் சுருக்கிச் சொல்லுகிறேன்; இப்பொழுது, நான் மாறு பாடியிடம் இருக்கிறேன், அவரை விட்டுவிட்டு, என் தகப்ப னார் சொல்கிற பிரகாரம்-
வ.க. அவன் எஜமானனுக்கும் அவனுக்கும் – நீங்கள் கோபித் துக் கொள்ளக்கூடாது – அவ்வளவாக வருத்தம் இல்லை –
லா. நான் சீக்கிரம் சொல்லிவிடுகிறேன்! வாஸ்தவத்திலே. இந்த மாறுபாடி என்னைக் கஷ்டப்படுத்துகிறான். ஆகவே, என் தகப்பனார், வயசானவர், அவர் உங்களுக்குத் தெரிவிக்கிற பிரகாரம்-
வ.க. இதோ கொஞ்சம் புறாக் கறி கொண்டுவந் திருக்கிறேன். அதை உங்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்க விரும்பு கிறேன் – நான் கேட்டுக்கொள்வது என்ன வென்றால்-
லா. நான் விரைவிற் சொல்லிவிடுகிறேன். நாங்கள் கேட்கவந்த சமாசாரம் என்னைப் பற்றிக்கொண்டது. அதைப்பற்றி இந்த யோக்கியமான பெரியவர் தங்கள் சமூகத்துக்குத் தெரிவிக்கிறார்; அதைப்பற்றி நானே சொல்வதாயிருந்தா லும், இவர் கிழவனா யிருந்தபோதிலும், எளியவர் – என் தகப்பனார்
பா. இரண்டு பெயருக்காக யாராவது ஒருவன் பேசட்டும். என்ன வேண்டும் உனக்கு?
லா. தங்களிடத்தில் வேலைக்காரனாக இருக்கவேண்டும்,ஐயா!
வ.க. அதுதான் நான் சொல்லவந்த சமாசாரத்துக்கு அர்த்தம்.
பா. உன்னை எனக்குத் தெரியும் நன்றாய். நீ வேண்டியதை உனக்கு அளித்தேன். ஷாம்லா லாகிய உன் எஜமான், இன்றைத்தினம் என்னுடன் பேசியபொழுது உன்னைப்பற்றி சிபார்சு செய்திருக்கிறார். பணக்கார மாறுபாடியிடம் வெலை செய்வதை விட்டு, எளியவனான என்னிடம் வேலை செய்யு உனக்கு விருப்பமானால், அப்படியே செய்.
லா. ‘பணமும் குணமும் ஒரு நிலை நில்லா’ என்று ஒரு பழ மொழியுண்டு. அதன்படி, என் எஜமானனான ஷாம்லா லிடத்தும் உம்மிடத்தும் அது பகிரப்பட் டிருக்கிறது சரியாக, உம்மிடம் அந்தக் குணம் இருக்கிறது, அவரிடம் அந்தப் பணமிருக்கிறது.
பா. அதை நன்றா யுரைத்தாய்.-ஐயா, பெரியவரே, உம்முடைய பிள்ளையோடு போய் அவனுடைய பழய எஜமானைைடய உத்தரவைப் பெற்று, என் வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேரும்.(தன் வேலையாட்களுக்கு] மற்றவர்களுடைய உடையைப்பார்க்கிலும் சிறந்ததான உடுப்பை இவனுக்குக் கொடுங்கள், உடனே செய்தாக வேண்டும்.
லா. அப்பா, இப்படி வாரும்; எனக்கு வேலையே அகப்படாது, வா யில்லை, ஆகவே பிழைப்பது கஷ்டம் என்றீர்களே பார்த்தீர்களா இப்பொழுது! (தன் உள்ளங் கையைப் பார்த்து) என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! இதோ பாருங் கள் என் உள்ளங் கையை ; இதைப்பார்க்கிலும் அதிர்ஷ்ட மான கை வாணீபுர மெல்லாம் சுற்றினாலும் அகப்படாது என்று ராமாயணத்தின்மீது பிரமாணம் செய்வேன் நான். இதோ பாருங்கள் ! ஆயுள் ரேகை எவ்வளவுதூரம் போகி றது. இதோ பெண்சாதிகளின் கணக்கு, ஐயோ! பதி னைந்து பெயர்தான், அதிகமில்லை! பதினொறு கைம்பெண் கள், ஒன்பது கன்னிகள், போதாதா ஒரு மனுஷனுக்கு? பிறகு மூன்று நீர் கண்டம் தப்பவேண்டும். பஞ்சணை மெத் தையின் ஓரத்தினின்றும் பிராண அபாயம் ஒன்று; இவை களை யெல்லாம் இலேசாகத் தப்பித்துக்கொள்ளலாம். லட்சுமி என்னமோ, பெண் பிள்ளையா யிருந்தபோதிலும், நல்ல அம்மாள் தான், இவைகளை யெல்லாம் எனக்குக் கொடுத்தார்களே. அப்பா, போகலாம் வாரும்; கண்ணை மூடித் திறப்பதற்குள்ளாக,மாறுபாடியிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்.
[லாவண்ய கபீரனும், வயோதிக கபீரனும் போகிறார்கள்.]
பா. கேசரிநாதா,நான் கூறியதெல்லாம் கவனத்திலிருக்கட்டும். இவைகளை யெல்லாம் வாங்கிச் சரியாக ஏற்பாடு செய்த பின், சீக்கிரம் வந்துசேர். நான் எனது ஆப்தரான சினேகி தர்களுக்கு விருந்திடுகிறேன் இன்றிரவு.நீ போ சீக்கிரம்.
கே. இவ் விஷயத்தில் என்னா லியன்ற அளவு முயல்கிறேன்.
கிரிஜாநாதன் வருகிறான்.
கி. எங்கே உன் எஜமான்?
கே. அதோ போகிறார்,ஐயா. (போகிறான்)
கி. ஐயா, பானுசேனரே!
பா. கிரிஜாநாதா!
கி, நான் உம்மை ஒன்று கேட்கவேண்டும்.
பா. அதை நீ பெற்றுக்கொண்டாய்.
கி. நீர் என்னைத் தடுக்கக்கூடாது – நானும் உம்முடன் மணி புரத்திற்குப் போகவேண்டும்.
பா. ஆயின், நீ போகத்தான் வேண்டும் – ஆகவே ஒரு வார்த்தை,நான் சொல்வதைக் கேள்,கிரிஜாநாதா, உன் னிடம் அடக்கமென்ப தில்லை, முறட்டுத்தன மிருக்கிறது. உரத்த சத்தத்தோடு பேசுகின்றாய். வைகளெல்லாம் உன் குணத்திற்கு ஒத்தவைகளாகத்தா னிருக்கின்றன ; என்னைப் போன்றவர்களுடைய கண்களுக்கு இவைகள் குற்றமாகத் தோற்றவில்லை. ஆயினும், உன்னை நன்றா யறியாதவர்களுக்கு, அவைகள் தீய குணங்களாகக் காணப் படும். ஆகையால், உன் விளையாட்டுப் புத்தியை, அடக்க ஒழுக்கத்தினால், கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, சாந்தப் பகுத்திக்கொள்ளும்படி வேண்டுகிறேன். உன்னை இல்லா விடின், உன் வேடிக்கை யாட்டத்தில், நான் போகிற இடத் தில், என்னைப்பற்றித் தவறான எண்ணங் கொண்டாலும் கொள்வார்கள். அதனால் என் கோரிக்கைக்கு ஹானி நேரிடினும் நேரிடும்.
கி. பானு சேனரே, நான் சொல்வதைச் சற்றுக் கேளும். அவ் விடத்திலிருக்கும்பொழுது, மிகுந்த அமரிக்கை யுடையவன் போல் நடித்து, நிரம்ப மரியாதையுடன் பேசி, கெட்ட வார்த்தைகளை அதிகமாக உபயோகியாமல், ருத்திராட்சம் முதலியன வெல்லாம் தரித்து, பரிசுத்தமாகக் காணப்பட்டு, போஜனத்திற்குமுன் பட்டை பட்டையாகக் குழையல்க ளெல்லாம் போட்டு, தினம் காலை மாலை சந்தியாவந்தனம் செய்து -, உலக பற்றையெல்லாம் விடுத்த வேதாந்தியைப் போல் மேலுக்கு வேஷம் போட்டு, அவர்களுக்கெல்லாம் நாமம் போடாவிட்டால், என் வார்த்தையை நம்ப வேண் டாம் பிறகு நீர்.
பா. எதோ, பார்ப்போம் உன் நடத்தையை இனிமேல்.
கி. ஆனால் ஒரு சமாசாரம், இன்றிரவு என்னை விட்டுவிட வேண்டும் இன்றிரவு நாம் நடப்பதைக் கொண்டு நீர் என்னை மதிக்கலாகாது.
பா. சே! அப்படிச் செய்தல் தவறாகும்! ன்றிரவு நாம் வேடிக்கையை விரும்பும் நண்பர்களைச் சந்திக்கிறபடியால் உன்னால் எவ்வளவு வேடிக்கையாகக் காலம் கழிக்க முடி யுமோ; அவ்வளவு வேடிக்கையா யிருக்கும்படி யல்லவோ நான் உன்னை வேண்டவேண்டும். சரி, நான் வருகிறேன். எனக்கு கொஞ்சம் வேலை யிருக்கிறது.
கி. நானும் லீலாதரர் முதலானோரிடம் போகவேண்டும். போஜன வேளைக்கு உம்மை வந்து காண்கிறோம்
காட்சி முடிகிறது.
[போகிறார்கள்.]
மூன்றாம் காட்சி
இடம் – வாணீபுரம், ஷாம்லால் வீட்டில் ஓர் அறை.
ஜலஜாவும், லாவண்யனும் வருகிறார்கள்.
ஜ. நீ இவ்விதம் என்தகப்பனாரை விட்டுப் போகின்றாயே என்று வருத்தமா யிருக்கிறது. எங்கள் வீடு நரகந்தான் ஆயினும் அந்த நரகத்தில் உன் வேடிக்கை வினோதத்தி னால், கொஞ்சம் கவலை நீங்கிக் களிப்புற் றிருந்தேன். மாய்ப் போய்வா – இதோ உனக்கொரு பொன். லாவண்யா பானுசேன ராகிய உன் புதிய எஜமான் வீட்டில் விருந் துண்ணச் சீக்கிரம் லீலாதரர் வருவதைக் காண்பாய். இந் நிருப்பத்தை அவரிடம் கொடு, இரகசியமாய் இதைச் செய். போய்வா, உன்னோடு நான் பேசிக்கொண் டிருப்பதை என் தந்தை காண்பது எனக்கிஷ்ட மில்லை.
லா. நான் போய்வருகிறேன் அம்மணி. நான் வாயாற் சொல்ல வேண்டியதை என் கண்ணீரானது தெரிவிக்கின்றது. என் அழகிய அம்மணி, என் இனிய தாயே, எப்படியாவது ஒரு ஹிந்து உம்மைத் திருடிக்கொண்டுபோய் மணம் செய்து கொள்ளாவிட்டால் நான் மோசம்போனவ னாவேன்.நான் வருகிறேன் அம்மணி. இந்த மடத்தனமான கண்ணீரானது என் ஆண்மைக்குரிய தைரியத்தை அமிழச் செய்கிறது, நான் வருகிறேன் அம்மா. (போகிறான்.)
ஜ. போய்வா, லாவண்யா – ஐயோ! என் தகப்பனாருடைய பெண்ணென்று வெளியிற் சொல்லவும் நான் வெட்கப் படும்படி என்ன பாப மிழைத்தேன் நான்! அம்மட்டும் பிறப்பில் அவருக்குப் பெண்ணாகியும், குணத்தில் அவருக் குப் பெண்ணாகாம லிருக்கின்றேனே!-லீலாதரரே, நீர் கூறிய மொழியினின்றும் தவறா திருப்பீராகில்,
கடிதினில் நான் இக் கஷ்டமெல்லாம் நீக்கி, உமதிஷ்டப்படியே ஹிந்து வாகி, உமது இனிய மனைவியுமாவேன். [போகிறாள்.]
காட்சி முடிகிறது.
நான்காம் காட்சி.
இடம் – வாணீபுரம், ஒர் வீதி.
கிரிஜாநாதன், லீலாதரன், சாம்பநாதன். சோமசேனன் வருகிறார்கள்
லீ. அப்படியல்ல, இராத்திரி விருந்தின் மத்தியில் நாம் ஒருவரு மறியாதபடி வெளி வந்து, எனது வீட்டில் நமது உருவை மாற்றி, ஒரு மணி நேரத்திற்குள்ளாகத் திரும்பி வந்துசேரலாம்.
கி. அதற்குத் தக்க ஏற்பாடுகளெல்லாம் நாம் செய்யவில்லையே.
சா. நமக்கு வேண்டிய தீவர்த்தி ஆட்களுக்கு நாம், இன்னும் ஏற்பாடு செய்யவில்லையே.
சோ. எல்லாம் தக்கபடி ஏற்பாடு செய்யாவிட்டால் அசங்கியமாய் முடியும்; அதைவிட இதில் கையிட்டுக்கொள்ளாதிருத்தலே மேலாம் என்று எனக்குத் தோற்றுகிறது.
லீ. இப்பொழுது நான்கு மணிதான் ஆயது; இன்னும் ரண்டுமணி சாவகாச மிருக்கிறது நமக்கு வேண்டியவை களைச் சித்தம் செய்துகொள்ள-
ஒரு நிருபத்துடன் லாவண்யன் வருகிறான்
நேயா, லாவண்யா, என்ன விசேஷம்?
லா. தயவு செய்து இதை நீர் பிரித்துப் பார்ப்பீராயின், விசேஷ வர்த்தமானத்தை அது தெரிவிக்கும்.
லீ. இந்தக் கையெழுத்து எனக்குத் தெரியும். உண்மையில் இது அழகுடைய கையெழுத்தே; எழுதப்பட்ட காகிதத் தைவிட இதை எழுதிய அழகிய கை கை அதிக வெண்மையானது:
கி. ஆயின் உண்மையில் காதற் கடிதமே.
லா. ஐயா, எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்.
லீ. எங்கே போகிறாய் நீ இப்பொழுது?
லா. உண்மையில், என் பழய எஜமானனாகிய ஜைனரை, என் புதிய எஜமானனாகிய ஹிந்துவுடன் விருந்துண்ணும்படி அழைப்பதற்காக
லீ. பொறு கொஞ்சம்; இதைப் பெற்றுக்கொள்.- என் இனிய ஜலஜாவுடன் நான் தவறமாட்டேன் என்று கூறு – அதை இரகசியமாய்ச் சொல், போ. [லாவண்யன் போகிறான்.) ஐயா, இன்றிரவின் வேஷத்திற்கு எல்லாரும் சித்தமாகின் றீர்களா விரைவில்? என் தீவர்த்தியால் ஏற்பாடு செய் தாயது.
சா. சரி யானால், நான் சடுதியிற் போகவேண்டு மதற்காக.
சோ.நானு மப்படியே.
லீ. ஒரு மணி பொறுத்து, கிரிஜாநாதனையும், என்னையும்,கிரி ஜாநாதன் வீட்டருகிற் சந்தியும்.
சா. நாம் அங்ஙனம் செய்வது நலமே,
[சாம்பநாதனும், சோமசேனனும் போகிறார்கள்.]
கி. அழகிய ஜலஜாவிடமிருந்து வந்த தல்லவா அக்கடிதம்?
லீ. உன்னிடம் நான் எல்லாவற்றையும் உரைத்திட வேண்டும். தன்னைத் தன் பிதாவின் வீட்டிலிருந்து எப்படி நான் கொண்டு போகலாமென்றும், தான் எவ்வளவு பொன் நகைகள் எடுத்து வைத்திருக்கிறாள் என்றும், தனக்காக எம்மாதிரியான ஆண் உடை சித்தம் செய்துவைத்திருக்கிறாள் என்றும், எல்லாம் தெரிவித்திருக்கிறாள். அவள் தந்தை எப்பொழுதாவது மோட்சம் எய்துவ தானால், தன் பெண்ணாகிய இவள் செய்யும் புண்ணியத்தின் பலனாகும் அது. சனி எப்பொழுதாவது அவள் பாதத்தைப் பிடிப்ப தானால், ந்த நாஸ்தீகனான ஜைனன் மகளா யுதித்த போக்கைக் கொண்டு தான் அவனைப் பீடிக்கவேண்டும். வா, போவாம் நாம்; போகும் பொழுது இதைப் படித்து பார். அழகிய ஜலஜாவே உன் தீவிர்த்தி ஆளாகப் போகிறாள். [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
ஐந்தாம் காட்சி
இடம் – வாணீபுரம். ஷாம்லால் வீட்டிற் கெதிரில்
ஷாம்லாலும், லாவண்யம் வருகிறார்கள்
ஷா. சரி ! நீயே பார்க்கப்போகிறாய். உன் கண்களே உனக்குத் தெரிவிக்கும், கிழவனான ஷாம்லாலுக்கும், பானுசேன ருக்கும் உள்ள பேதம் – யார் உள்ளே? ஜலஜா!- என் னிடம் தின்று கொழுத்ததுபோல் அங்கே முடியாது. யார் அது ஜலஜா! இங்கே குறட்டை விட்டுத் தூங்கிக் காலம் கழிப்பாயே, உடுப்புகளை யெல்லாம் கிழிப்பாயே, அந்த மாதிரி முடியா தங்கே.-யார் அங்கே? ஜலஜா! நான் கூப்பிடுகிறேன்!
லா. அம்மா, ஜலஜா!
ஷா. உன்னை யாரடா கூப்பிடச் சொன்னது! உன்னைக் கூப்பிடச் சொல்ல வில்லையே நான்.
லா. உத்தரவு கொடுத்தா லொழிய நான் ஒன்றும் செய்யலாகா தென்று பன்முறை சொல்லியிருக்கிறீர்கள் தாங்கள் எனக்கு.
ஜலஜா வருகிறாள்.
ஐ. அழைத்தீரா நீர்? என்னவேண்டும் உங்களுக்கு?
ஷா. ஜலஜா, என்னை விருந்துக் கழைத்திருக்கிறார்கள். இதோ என் சாவிகள்.-ஆயினும், நான் ஏன் போகவேண்டும்? பிரீதியினால் நான் அழைக்கப்படவில்லை என் தயவுக்காக எனக்கிவ்வாறு முகஸ்துதி செய்கிறார்கள். ஆயினும் நான் க்ஷத்திரத்திற்காகப் போகிறேன், அவனுடைய விருந்தைப் புசித்து அச் செலவாளியின் செல்வத்தைக் கரைப்பதற் காக! பெண்ணே ஜலஜா, என் வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்.- போகிறதற் கென்னமோ எனக்கிஷ்டமே யில்லை. நேற்றிரவு பணிப்பைகளைப்பற்றி நான் கனவு கண் டேன்,ஆகவே, என் அமைதியைக் கெடுக்க ஏதோ விபரீ தம் நேரிடப் போகின்றது என்று அஞ்சுகிறேன் நான்.
லா. ஐயா, புறப்படும்படி தங்களை நான் கேட்டுக்கொள்ளுகி றேன். என் புதிய எஜமானன் உங்கள் ‘வரவை’ எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஷா. நானு மப்படியே அவருடையதை எதிர்பார்க்கிறேன்.
லா. அவர்களெல்லாம் ஒன்று கூடி யோசனை செய்திருக்கிறார் கள்.- நீங்கள் ஒரு வேஷத்தைப் பார்ப்பீர் என்று சொல்ல மாட்டேன். ஆயினும் அப்படிப் பார்ப்பீர்களாயின் நான்கு வருஷத்திற்கு முன், பொங்கல் பண்டிகை, திங்கட்கிழமை கருநாளில் வந்தபொழுது, காலை ஆறு மணிக்கு என் மூக்கு தினவு எடுத்த சகுனம், சரியாய் முடிந்தது என்று சொல்வேன்.
ஷா. என்ன! வேஷம் போடப்போகிறார்களோ?-ஜலஜா, நான் சொல்வதைக்கேள். என் வீட்டுக் கதவுகளை யெல்லாம் சாத்தி வை. மேள சத்தமாவது, இந்த குவைகுவை என்று காதுக்கு வெறுப்பாய்க் கூவுகிற குழலோசையாவது கேட்டால், மேல்மாடிக்கு ஓடிப்போய் பலகணி வழியாய்த் தலையை நீட்டிக்கொண்டு, வீதியிற் பார்க்காதே, முகத்தில் வர்ணத்தைப் பூசிக்கொண்டு வருகிற இந்த ஹிந்து முட் டாள்களைக் காண்பதற்காக. என் வீட்டின் கதவுகளை மூடி வை, அதாவது நான் சொல்வதென்ன வென்றால், என் வீட்டு ஜன்னல்களை நன்றாகச் சாத்தி வை. மூடர்கள்போடும் அர்த்த மில்லாக் கூச்சல் என் யோக்யமான வீட்டிற்குள் நுழையவே வேண்டாம். திகம்பரர் பாதத் தாணை! இன் றிரவு எனக்கு வெளியே போய் விருந்துண்ண இச்சையே யில்லையென்று சத்தியம் செய்கின்றேன்.-ஆயினும் போய்த் தாலைக்கவேண்டும். – போடா அப்பா,போ முன்னே. நான் வருகிறேன் என்று சொல், போ.
லா. இதோ முன்னே போகிறேன் ஐயா – அம்மணி, எதற்கும் பலகணி வழியாய்ப் பாரும் வெளியே.
“:இந்த வழியோ ரிந்துவே வருவான்
ஜெயினன் மகளிரு நயனங் கவர்வான்.”
[போகிறான்.]
ஷா. அந்த வாலியின் வம்சத்து மடையன் என்ன சொன்னான்?
ஐ. அம்மணி, நான் போய்வருகிறேன்’ என்று சொல்லிப் போனான், வேறொன்றுமில்லை.
ஷா. முட்டாள் பையன், நல்லவன் தான்; ஆனால் பெருந்திண்டிக் காரன். லாபம் சம்பாதிப்பதில் நத்தைதான். பகற்பொழு தெல்லாம் உறங்குகின்றான் காட்டுப் பூனையைப்போல்.சோம் பேறிகள் என் வீட்டில் வாழ முடியா தென்னுடன். ஆகவே அவனை அனுப்பிவிடவேண்டிய தாயிற்று. அனுப்புவதிலும், தான் என்னிடமிருந்து கடன் வாங்கிய பொருளை அவன் செலவழிப்பதில், இவன் அவனுக்கு உதவி செய்யும்படி சரியானவனிடந்தான் அனுப்புகிறேன். – சரி, ஜலஜா, நீ போ உள்ளே. நான் உடனே திரும்பி வந்தாலும் வந்துவிடுவேன் ஒருவேளை, நான் சொன்னபடி செய். உன் பின்னால் கதவைச் சாத்திக்கொள்.-“கெட்டியாய்க் கட்டினால், திட்ட மாய்க் காணலாம்.” இப்பழமொழி சிக்கனமாம் மனத்திற்கு எப்பொழுதும் அர்த்த முடைய தாகும். (போகிறான்.) போய்வாரும்; என் அதிர்ஷ்டம் கெடாதிருந்தால், சீக்கிரத் தில் எனக் கொரு தந்தை நஷ்டம், உமக்கொரு பெண் நஷ்டம்.
[போகிறான்.]
காட்சி முடிகிறது.
ஆறாம் காட்சி
இடம்:- வாணீபுரம்ஷாம்லால் வீட்டிற்கு எதிர்.
கிரிஜாநாதனும், சாம்பநாதனும் வேஷம் பூண்டு வருகிறார்கள்.
கி. இக் கொட்டிலின் கீழ்தான் நின்றுகொண் டிருக்கும்படி லீலாதரர் விரும்பினார்.
சா. அவர் குறித்த கால மாய்விட்டதே சற்றேறக் குறைய.
கி. அவர் குறித்த மணிப் பிரகாரம் வாரத்து பெருத்த ஆச்சரிய மாகும். ஏனெனில் காதலர்கள் குறித்த மணிக்கு முன்ன தாக ஓடி வருவார்கள் என்றும்.
சா. நண்பர்களுக் குரைத்த மொழியினைக் காத்திட நாடும் வேகத் தினும், புதிய காதலின் தளைகளைப் பூட்டுதற்குப் பதின் LOL டங்கு வேகமாய்ப் பறந்து செல்லும், மதனன் கிள்ளைகள்.
கி. எக்காலத்தும் அப்படித்தான் அது. விருந்திற்கு உட்காரு. முன் இருக்கும் பசியின் விருப்பத்துடன், எவனொருவன் அதினின்றும் எழுகிறான்? முதலிற் சென்ற வேகத்தின் தீவ ரத்துடன், அதே வழியில் திரும்புங் காலை, கால் தளராது கடந்து செல்லும் கடிமா எங்குளது? உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களிலும், அவைகளை நாடும்பொழு திருக்கும் உற்சாகம், அவைகளை அனுபவிக்கும்பொழுது கிடையாது. துறைமுகத்தினின்றும் புறப்படும்பொழுது நாவாயானது மதம் பிடித்த காளையைப்போல் அழகுறச் சீலைகளைத்தரித்து, வேசிபோன்ற காற்றினால் அணைத்து ஆதரிக்கப்பட்டு, என்ன ஆடம்பரத்துடன் போகிறது! திரும்புங் காலையோ, அதே வேசையாம் காற்றினால் பக்கங்களெல்லாம் ஒடிந்து, வெயிலிலும் மழையிலும் அடிபட்டு, பாய்மரங்களெல்லாம் முறிந்து பாழாக்கப்பட்டு, தளர்ந்து மெலிந்த தரித்திரனைப் போல் வந்து சேர்கிறது.
சா. இதோ வருகிறார் லீலாதரர்.- அதைப்பற்றி அப்புறம் பேசுவோம்.
லீலாதரன் வருகிறான்.
லீ. என் இனிய நண்பர்களே, உங்களை நெடுநேரம் காக்கச் செய்ததற்காக உங்கள் மன்னிப்பைக் கேட்கிறேன். நானாக உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தபடியன்று, என் வேலையே இவ்வாறு தாமதிக்கச் செய்தது. உங்கள் காதலி களைப் பெற நீங்கள் கள்ள வேடம் பூணச் சமயம் வாய்க்குங் கால், உங்களுக்காக, நீர் காத்தபடி, அப்பொழுது நானும் காக்கின்றேன். வாருங்கள், அது தான் என் ஜைன மாமனார் வீடு. – ஓய்! யார் உள்ளே ?
ஆண் உடையுடன் ஜலஜா மேல்மாடியில் தோற்றுகிறாள்.
ஜ. யார் நீர் ? உங்களுடைய குரல் எனக்குத் தெரிந்ததாக நான் சத்தியம் செய்யக்கூடுமாயினும், சந்தேகமே யில்லாதிருக் கும் பொருட்டு உங்கள் பெயரைச் சொல்லுங்கள்.
லீ. நான் லீலாதரன்-உன் காதலன்.
ஜ. லீலாதரர் தான் ! சந்தேகமில்லை, என் காதலர்தான். இத்தனை காதல் உம்மீ தன்றி யார்மீது வைத்துளேன்? உம்மையன்றி, நான் உமது காதலியென்று, யாருக்குத் தெரியு மிப்பொழுது?
லீ. நீ என் காதலி என்பதற்கு, உல காளு மீசனும், உன் மனமு மே சாட்சி.
ஜ. இதோ இந்தப் பெட்டியைப் பிடித்துக்கொள்ளும். கஷ்டத் திற்குத் தகுந்த கூலியாகும் அது. இருட்டா யிருப்பது எனக்குச் சந்தோஷம்; உமக்கு என்னைத் தெரியாமலிருக் கின்றது. ஏனெனில் இந்த வேஷத்தைத் தரித்தது எனக்கு வெட்கத்தைத் தருகிறது. ஆயினும் காமத்துக்கு கண் ணில்லை அல்லவா? காமுகர்கள் செய்யும் அழகிய குற்றங்களெல்லாம் அவர்கள் கண்ணுக்கே தெரியா தல்லவா? அப்படித் தெரிவதானால், இவ்வளவுக்கும் காரணமாயிருந்த அந்த மன்மதனே நானிவ்வாறு ஆண் வேடம் தரித்திருப் பதைக் கண்டால் நாணப்படுவான்.
லீ. இறங்கி வா,நீ என் தீபக்காரனா யிருக்கவேண்டும்.
ஜ. என்ன? என் வெட்கம் வெளிப்படை யாகும்படி நானே வெளிச்சம் பிடிக்கவேண்டுமா? முன்பே உண்மையில் வெளிப்படையா யிருக்கிறது, அதற் கொரு வெளிச்சமும் வேண்டுமோ? காதலா,இதென்ன நியாயம்? இது என்னை வெளிப்படுத்தும் வேலை யாகுமே; நான் ஒருவரு மறியாதபடி மறைந் தல்லவோ செல்லவேண்டும்?
லீ. கண்ணே, இந்த அழகிய ஆண் உடையே உன் ரூபத்தை நன்றாய் மாற்றுகின்றது. சீக்கிரம் வா. இராக்காலம் விரை விற் கரந் தோடுகின்றது. பானுசேனர் வீட்டில் விருந்தின ரெல்லாம் நமது வரவை எதிர் பார்த்திருக்கின்றனர்.
ஜ. கதவுகளை யெல்லாம் சரியாகத் தாளிட்டுக்கொண்டு, என் னோடு இன்னும் கொஞ்சம் பணப்பைகளையும் எடுத்துக் கொண்டு, சீக்கிரம் வந்துசேர்கிறேன் உம்மிடம்.
[மேல்மாடியிலிருந்து மறைகிறாள்.]
கி. சீ! பிறப்பில் இவள் ஜைன மதஸ்தளா யிருந்தாலும், குணத்தில் ஹிந்துவே.
லீ. அதன்பொருட்டே அவள்மீது நான் அடங்காக் காதல் கொண்டிருக்கிறேன். குணத்தை யறியும் சக்தி எனக் கிருக்குமாயின், அவள் குணவதியே. என் கண்களாற் காண்பது மெய்யானால், அவள் அழகியே. அவள் நிருபித்த ருசுவின் படி நிஜவதியே. ஆகவே, மாறாத என் மனத்தினில், அழகும் குணமும் கற்பும் உடையவளாய் மதிக்கப்படுவாள் என்று அவள்.
ஜலஜா கீழே வருகிறாள்.
ஐ. என்ன வந்தனையா?- புறப்படுங்கள்! நண்பர்களே, புறப் படுங்கள் சீக்கிரம், வேஷம் பூண்ட நமது நண்பர்கள் நமக் காகக் காத்துக்கொண் டிருப்பார்கள் இந்நேரம்.
(ஜலஜாவுடனும் சாம்பநாதனுடனும் போகிறான்.)
அநந்தநாதன் வருகிறான்.
அ. யார் அங்கே?
கி. அநந்தநாதரே!
அ. சீ சீ ! கிரிஜாநாதா. எங்கே மற்றவர்களெல்லாம்? ஒன்பது மணியாய் விட்டது. நமது சிநேகிதர்களெல்லாம் உங்களுக் காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றைக்குக் கூத்தாட்டம் எல்லாம் ஒன்றும் உதவாது. காற்று திரும்பி விட்டது. பானுசேனன் உடனே கப்பலேறுகிறான்.உங் களைத் தேடிக் கண்டுபிடிக்க இருபது பெயரை அனுப் பினேன்.
கி. மிகவும் சந்தோஷம். உடனே இன்றிரவே புறப்பட்டு கப்ப லேறிச் செல்வதைவிட உத்தமமான சந்தோஷம் வேறொன் றையும் விரும்பவில்லை நான். [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது
ஏழாம் காட்சி
இடம்: மணிபுரம் சரோஜினியின் வீட்டிலோர் அறை எக்காளம்.
சரோஜினியும் மார்த்தாண்ட சேதுபதியும் தங்கள் பரிவாரங்கள் சூழ வருகின்றனர்.
ச. போய்த் திறைகளைத் தள்ளி, பெட்டிகளைக் காட்டுங்கள், இந்த உத்தம மன்னருக்கு – இனி உமக் கிஷ்டமானதைத் தொடும்.
மா. முதற் பெட்டி.-பொன்னா லானது. இதன்மீது “என்னை விரும்புவோன் பலர் விரும்புவதைப் பெறுவான் என் எழுதி யிருக்கிறது. இரண்டாவது- வெள்ளி “என்னை விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கப்படி பெறு வான் ‘ என்று உறுதி கூறுகிறது. இந்த மூன்றாவது பெட்டி, ஒளியிலா ஈயத்தா லாயது, “என்னை விரும்பு வோன் தனக்குற்றதை யெல்லாம் அளிக்கவும், அழிக்கவும் துணிய வேண்டும்,” என்று, மட்டி ஈயத்திற்குத் தகுந்த மட்டி புத்திதான் கூறுகிறது. இவற்றுள் சரியானதைத் தொடுகின்றேனோ இல்லையோ, என்பது எனக்கு என்ன வாய்த் தெரிகிறது?
ச. அரசே, இவற்றுள் ஒன்றில் என்படம் இருக்கின்றது; அதைத் தோடுவீராயின், என்னையும் அதனோடு பெறலாம்.
மா. எந்த தெய்வமாவது என் புத்திக்குத் துணையாயிருக்குமாக! -எதோபார்க்கிறேன்.– இவைகளின் மீது எழுதியிருப் பதைத் திரும்பவும் வாசித்துப் பார்க்கிறேன்.-இந்த ஈயப் பெட்டி என்ன சொல்லுகிறது; “என்னை விரும்புவோன் தனக் குற்றதை யெல்லாம் அளிக்கவும் அழிக்கவும் துணிய வேண்டும். அளிக்க வேண்டும்! எதற்காக? ஈயத்திற் காகவா இழக்கத் துணிய வேண்டும்? இந்தப் பெட்டி பய முறுத்துகிறது! எல்லாவற்றையும் இழக்கத் துணிவ தென்றால் அதற்கேதாவது நல்ல பிரயோஜனத்தை அடை யக் கூடும் என்று கோரியே, அங்ஙனம் செய்கிறார்கள் மனி தர்கள். பொன் போன்ற மேலான மனம் இந்த இழிவாகிய ஈயத்தைக் கண்டு இரங்காது, ஆகவே நான் இந்த ஈயத்திற்காக எதையும் கொடுக்கவுமாட்டேன், இழக்கத் துணியவுமாட்டேன். சுத்த வெண்ணிற முடைய வெள்ளி என்ன சொல்கிறது பார்ப்போம்:” என்னை விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கபடி பெறுவான் – தன் யோக்கியதைக்குத் தக்கபடி? பொறு இங்கே, மார்த் தாண்டா, உனது யோக்கியதையைப் பட்சபாதக மில்லா மல் ஆராய்ந்துபார். உன்னுடைய மதிப்பின்படி உன் யோக்கியதையை ஆராயும் பட்சத்தில் நீ பெறத்தக்கவனே! ஆயினும் நான் பெறத் தக்கது இந்தப் பெண்மணி வரை யில் எட்டாமற் போகலாமே? ஆயினும் என் யோக்கிய தையைப் பற்றி நான் சந்தேகிப்பது என்னை நானே இழி படச் செய்வ தாகும்!- என் யோக்கியதைக்குத் தக்கதெது? ஏன், இந்தப் பெண்மணி தான் ! – குலத்திலும், குடிப்பிறப் பிலும், செல்வத்திலும், குணத்திலும் இவளைப் பெறத் தக்கவனே! இவைகளை யெல்லாம்விட, என் காதலால் இக் கன்னிகையைப் பெறத்தக்கவன் நான். மேலே போகாமல் இவ்விடம் கோரினால் என்ன? இன்னொரு முறைபார்ப்போம். இந்தப் பொன்னில் என்ன வரைந்திருக்கின்றதென்று: “என்னை விரும்புவோன் பலர் விரும்புவதைப் பெறுவான்.’- ஏன், பலர் விரும்புவது இப்பாவையையே! உலகமுழுவதும் இவ் வுத்தமியை இச்சிக்கின்றது ! நாநிலத்து நான்கு திக்கு களிலிருந்து, உயிருடைய இத் தேவதையைத் தரிசித்து வழிபட வருகின்றனரே! தண்டக ஆரணியமும், விசால மான அரபி தேசமும், இக் கட்டழகியைக் காணவரும் அரசகுமாரர்களுக்குப் பெரும் பாதைக ளாயின ! வானத்தை யும் மதியாது தன் திரைகளால் காரி யுமிழும் சமுத்திர ராஜனாலும், அயல்நாட்டரசர்களைத் தடுக்க முடிய வில்லை. அவர்கள் அழகிய சரோஜினியைக் காண, ஆற்றைக் கடந்து வருவதுபோல் வருகின்றனர்.–இந்த மூன்று பெட்டிகளுள் ஒன்றில் இவ் வணங்கின் அழகிய பட மிருக்கின்றது. ஈயப் பெட்டியில் அப்படம் வைக்கப்பட் டிருக்குமா? இழிவாக இவ்வாறு எண்ணுதலும் பாதக மாம்! சமாதியில் வைக்கும் படியான அவளது சாயச் சேலையை மறைக்கவும் தக்க தல்ல. அல்லது, நல்ல சுத்தமாக்கப்பட்ட பொன்னின் விலைக்குப் பத்திலொரு பங்கு ஆகாத வெள்ளிப் பெட்டியில், அவளுரு வம் வைக்கப்பட் டிருக்கின்றதாக நான் எண்ணுவதோ? அம் படி எண்ணுதலே பாபமாம்!ஒப்புயர் வில்லா இம் மாணிக் கம் உத்தமமான தங்கத்திலன்றிவைக்கப்படாது. சிங்களத் தில் தேவஸ்திரீயின் உருவமைந்த பொன் நாணயம் ஒன் றுண்டு.-ஆனால் அந்த உருவம் பொன்னின்மீது செதுக்கப் பட்டிருக்கிறது. இங்கோ,ஒரு அப்சரக் கன்னிகை பொன் னாம் படுக்கையில் படுத் துறங்குகிறாள்.- சாவியைக் கொடு என்னிடம், இதையே நான் கோருகின்றேன்; என் அதிர்ஷ் டத்தின்படி யாகுக !
ச. இதோ, வாங்கிக் கொள்ளும் அரசே,என் உருவம் உள்ளே யிருக்குமாயின், நான் உம்முடையவளே!
மா. [பொன் பெட்டியைத் திறந்து] ஆ! கோரம்! இதென்ன இருக்கிற திங்கே ? யமனுடைய கபாலம் ! இதன் ஓட்டைக் கண்ணில் காகிதச் சுருள் ஒன்றிருக்கின்றது! எழுதி யிருக் கின்றதைப் படிக்கிறேன். [படிக்கிறான்.]
“மின்னுவதெல்லாம் பொன்னல்லவெனச்
சொன்னதை நீயும் பன்முறை கேட்டாய்;
என் வெளி யுருவைப் பார்த்திடவே தம்
இன்னுயிரைப் பலர் விற்பனை செய்தனர்;
பொன்முலாம் கோரியிற் புழுக்கள் வசிக்கும்.
வன்மனம் போலவே விவேக முடைத்தாய்
உருவினி லிளமையும் அறிவினில் முதுமையும்
இருந்தையேல் இத்திறம் உத்தரம் பெறாய்நீ
வருவாய் சுகமாய் வாழ்ந்த துன் மணம்.”
வாழ்ந்தது தான்! பட்டதெல்லாம் படு சூரண மாயிற்று. தாபம் போய்த் தணிக்கை வரவேண்டியது தான். சரோஜினி, நான் வருகிறேன்.–பன் முறை சொல்லிப்போக என் னித யம் பொறாது. தோற்றவர்கள் கூறிப்போகும் மாற்றம் இது தான்.
[தன் பரிவாரங்களுடன் போகிறான்.]
ச. சுலபத்தில் தொலைந்தது.–திரையை மூடிவிடுங்கள், போங் கள். இவரைப்போன்ற நிறமுடையவர்களெல்லாம் இம் மாதிரியே கோருவாராக!
[எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
எட்டாம் காட்சி
இடம் – வாணீபுரம். ஒரு வீதி.
சாம்பநாதனும், சோமேஸ்வரனும் வருகிறார்கள்.
சா. ஏன் அப்பா,நான் தான் பானுசேனர் கப்பலேறிச் சென்ற தைக் கண்டேனே ; அவருடன் கிரிஜாநாதரும் போயிருக் கிறார்; அவர்களுடைய கப்பலில் லீலாதரர் இல்லையென்று நான் உறுதியாய்ச் சொல்வேன்.
சோ. பாதகனான ஜைனன் தன் கூக்குரலினால் அரசரை எழுப்ப அவனுடன் போனார் அரசர்,பானுசேனர் கப்பலைத் தேடிப் பார்க்க.
சா. அவன் அதிக காலம் பொறுத்து வந்தான், அவன் வருமுன் கப்பல் புறப்பட்டுவிட்டது. ஆனால், அவ்விடத்தில், லீலா தாரும் அவர் கா தலியாகிய ஜலஜாவும் ஒரு தோணியிற் பார்க்கப்பட்டதாக அரசருக்குத் தெரிவித்தார்கள். அன்றி யும், பானுசேனர் சென்ற கப்பலில், அவர்களிருவரும் இல்லையென்று அரசருக்கு அநந்தநாதர் தன் உறுதி மொழி கொடுத்தார்.
சோ. தெருவுகளில் அந்த ஜைன நாய், விகாரம் பிடித்தவன்போல், மதி கலங்கினவனாய்,குணம் மாறி மாறி, கூக்குரலிட்டுக் கோலாகலமாய்,நடித்ததுபோல், நான் வேறெங்கும் கேட் தே யில்லை, “என் பெண்ணே ! ஹா! என் பொன்னே !! ஹா! என் பெண்ணே! ஒரு ஹிந்துவுடன் ஓடிப்போய்விட் டாளே! ஹா! என் மிலேச்சப் பொன்னே! நியாயமே நீதிச் சட்டங்களே !- என் பொன்னே! என் பெண்ணே ! முத்திரை வைக்கப்பட்ட ஒரு பை, முத்திரை யிடப்பட்ட இரண்டு பொன் பைகள்! – என் பொன்னை என்னிடமிருந்து என் பெண்ணே திருடிக்கொண்டு போய்விட்டனளே! அன்றியும் நகைகள்!- இரண்டு ரத்னங்கள்! விலை யிலாத இரண்டு சிறந்த ரத்னங்கள்!-என் பெண் திருடிக்கொண்டு போய்விட்டனளே! நியாயமே ! – என் பெண்ணைக் கண்டு பிடி! அந்த ரத்னங்களும் அந்தப் பொன்னும் அவள் வச மிருக்கின்றன!’
சா. ஏன், அவன் ரத்னமே, அவன் பெண்ணே, அவன் பொன்னே, என்று கூவிக்கொண்டு வாணீபுரத்திலுள்ள சிறு பிள்ளைகளெல்லாம் பின் தொடர்கின்றனர். அவனை.
சோ. நமது அநந்தநாதர் குறித்த தவணைப்படிச் செலுத்துவாராக இல்லாவிடின், இதற்காக அவர் கஷ்டப்பட வேண்டிவரும்.
சா. ஆமாம், நன்றாய் ஞாபகப்படுத்தினாய்; நான் நேற்றைத் தினம் பஸ்சிம தேசத்தான் ஒருவனுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்தேன்; அவன், நமது தேசத்துச் செல்வம் நிறைந்த ஒரு கப்பல், பஸ்சிம நாட்டிற்கும் சிங்களத்திற்கும் இடையிலுள்ள நெருக்கமாம் சமுத்திரத்தில், மூழ்கிப்போன தாகச் சொன்னான். இதை அவன் எனக்குச் சொன்ன பொழுது அந்தநாதர் ஞாபகம் எனக்கு வர, அவருடைய கப்பலா யிராதிருக்குமாக, என்று என்மனத்திற்குள் கோரிக் கொண்டேன்.
சோ. நீ கேட்டதை அநந்தநாதருக்குத் தெரிவித்தல் நலமெனத் தோற்றுகிறது; ஆயினும் திடீரென்று கூறாதீர்; ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை யுண்டு பண்ணினும் பண்ணும்.
சா. அவரைவிட உத்தமமான மனிதன் இம்மண்ணுலகிலேயே கிடையாது. பானுசேனரும் அநந்தநாதரும் ஒருவரைவிட் டொருவர் பிரியும்பொழுது நான் பார்த்தேன்; பானுசேனர் கூடிய சீக்கிரத்தில் திரும்பிவர முயல்வதாகக் கூறினார் அவரிடம்; “அப்படிச் செய்யவேண்டாம் பானுசேனா, என் பொருட்டு அவசரப்பட்டு வேலையைக் கெடுக்காதே. பக்குவ மாம் காலம் வரையில் அங்கே தங்கியிரு; நான் ஜைனனுக்கு எழுதிக் கொடுத்திருக்கும் பத்திர விஷயம், காதலோடு கூடிய உன் மனத்தில், நுழையவேண்டாம். மனத்தில் சந் தோஷத்துடனிரு; உனது காதலியின் காதலைப் பெறுதற் குச் செய்யவேண்டிய காரியங்களில் உனது மனத்தை முன் கியமாய்ச் செலுத்துவாயாக. அவ்விடம் உனது சவுகர்யத் திற்குத் தக்கபடி உனது காதலை வெளிப்படுத்தக்கூடிய நன் மார்க்கங்களில் முயல்வாயாக என்று பதில் உரைத்தார்; இதைக் கூறி முடிந்ததும், தனது கண்களில் நீர் ததும்ப, முகத்தைத் திருப்பிக்கொண்டு, பின் புறமாகத் தன் கரத்தை நீட்டி, அனைவரும் அதிசயப்படக்கூடிய அதிக அன்புடன், பானுசேனர் கரத்தைப் பற்றினார்; இங்ஙனம் அவர்கள் ஒருவரைவிட் டொருவர் பிரிந்தனர்.
சோ. உலகத்தில் அவர் பற்று வைத்திருப்பது, பானுசேனர் ஒரு வர் பொருட்டே என எண்ணுகிறேன். நாம் போய் அவ ரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரது மனத் துயரை எந்த வேடிக்கை வினோதத்தினாலாவது மாற்றுவோமாக, வாரும் விரைவில்.
அங்ஙனமே செய்வோம். [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
ஒன்பதாம் காட்சி.
இடம் – மணிபுரம். சரோஜினியின் வீட்டில் ஓர் அறை.
நீலகேசி ஒரு வேலையாளுடன் வருகிறாள்.
நீ. சீக்கிரம்! சீக்கிரம்! நான் உன்னைக் கேட்டுக்கொள்ளுகிறேன், திரையைத் தள்ளிவிடு சரியாக: அருகபுரத் தரசன் சத்தி யம் செய்துவிட்டு, இதோ வந்துவிட்டார் கோருவதற்காக.
எக்காளம். அருகபுரத்தரசனும், சரோஜினியும் தங்கள் பரிவாரங்கள் சூழ வருகின்றனர்.
ச. அரசே, அதோ பாரும்.- பெட்டிகள் இருக்கின்றன. என் பட மிருக்கும் பெட்டியை நீர் கோருவீராயின் உடனே நமது கலியாணச் சடங்குகள் நிறைவேற்றப்படும். நீர் அதில் தவ றிப்போவீராயின், மறுபடி வார்த்தையாடாது, உடனே இவ் விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகவேண்டும்.
அ. அ. மூன்று விஷயங்களை நான் கவனிப்பதாகச் சத்தியம் செய் திருக்கிறேன், முதலில், நான் எந்தப் பெட்டியைக் கோரி னேன் என்பதை ஒருபொழுதும் ஒருவருக்கும் வெளியிடக் கூடாதென்றும், பிறகு, சரியான பெட்டியைக் கோராவிட் டால், மரிக்குமளவும் மற்றொரு மாதை வரிப்ப தில்லை யென் றும், கடைசியில், என் துரதிர்ஷ்டத்தால் நான் தவறிப் போவேனாயின், உடனே உன்னைவிட்டுப் பிரிந்து ஊர்போய்ச் சேரவேண்டும் என்பதே.
ச. பாக்கிய ஹீனையாகிய என்னைப் பாணிக்கிரஹணம் செய்து கொள்ளக் கோரி வரும் ஒவ்வொருவரும், இம்மாதிரிதான் சத்தியம் செய்யவேண்டி யிருக்கிறது.
அ.அ .நானும் அதன் பொருட்டே ஆயத்தப்பட்டு வந்திருக்கி றேன். என் ஹிருதயத்தின் கோரிக்கையின்படி அதிர்ஷ்ட மும் கைகூடுமாக ! – பொன், வெள்ளி, மட்ட ஈயம்.”என்னை விரும்புவோன் எல்லாவற்றையும் கொடுக்கவும் இழக்கவும் துணிய வேண்டும்.” உன்பொருட்டு நான் கொடுப்பதன் முன், அல்லது இழக்கத் துணியுமுன், நீ இதைப்பார்க்கி லும் கொஞ்சம் அழகாய்த் தோற்றவேண்டும். பொன் பெட்டி என்ன சொல்கின்றது? ஆ! எதோ, பார்க்கிறேன்; “என்னை விரும்புவோன் பலர் விரும்புவதைப் பெறுவான்” பலர் விரும்புவதை’ – அந்தப் பலர் என்கிற பதத்திற்கு மூடர் என்று அர்த்த மாயினு மாகும், உலகத்தில் சாதா ரண ஜனங்கள், உள்ளே யிருப்பதை ஆராய்ந் தறியாது, தூக்கணாங் குருவியானது அபாயம் நேரிடுவதற்கு நேர் வழி யில், சுவரின் வெளிப்புறத்தில், காற்றடிக்கும் பக்கத்தி லேயே கூடு கட்டுவதுபோல், தங்களுடைய மூடக் கண்கள் அறிவிப்பதைவிட அதிகமாய் ஆராய்ந் தறியாது, வெளிப் பார்வையைக் கொண்டு விரும்புவார்கள். பலர் விரும்பு வதை நான் விரும்பேன்; ஏனெனில், சாதாரண ஜனங்க ளுடன் ஒருங்கு சேர்ந்து நாகரீகமற்ற மனிதக் கூட்டத்தில் நானும் ஒருவனாக மதிக்கப்படுவது எனக் கிஷ்ட மில்லை.- சரி, ஆனால் வெள்ளிப் பெட்டியிடம் திரும்புவோம். உன்மீ எழுதியிருக்கும் பட்டத்தை மறுபடியும் தெரிவிப்பாய் எனக்கு. என்னை விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கபடி பெறுவான்.” நன்றாகச் சொல்லப்பட்டது. தன் னிடத்தில் யோக்கியதை யின்றி, அதிர்ஷ்டவசத்தால் மரி யாதையைப் பெறலாமென்று மதித்துச் செல்கின்றவ னெவன்? தனக்குத் தகாத கவுரவத்தை வஹிக்கவேண்டு மென்று தரணியில் ஒருவனும் ஆசைப்பட வேண்டாம். ஹா? உலகத்தில் உத்தம ஸ்திதிகளும், உன்னத பதவி களும், உத்தியோகங்களும், துர்வழியில் சம்பாதிக்கப்படா திருக்குமாக! களங்க மற்ற கவுரவத்தை ஒருவன் தன் நற் குணத்தைக் கொண்டே பெறுவானாக! அப்படி யிருக்கு மாயின், இப்பொழுது காலால் நடப்பவர்கள் எத்தனை பெயர்கள் கனக தண்டி ஏறவேண்டும்! இப்பொழுது எஐ மானர்களா யிருக்கும் எத்தனை பெயர் வேலைக்காரர்களா யிருக்கவேண்டும்! இப்பொழுது உத்தமர்கள் என்று மதிக்கப்படுபவர்களுள் எத்தனை இழிந்தவர்களைப் பொறுக்கி எடுத்துவிட வேண்டும்! தவிட்டிலிருந்து அரிசியைப் பொறுக்குவதுபோல், காலகதியால் அழிந்தவர்களுக்குள், எத்தனை உத்தமர்களைப் பொறுக்கி எடுக்கலாம், புதிதாய்ச் சோபிக்கும்படியாக? சரி, அதிருக்கட்டும், நான் தீர்மானம் பண்ணவேண்டும். “என்னை விரும்புவோன் தன் யோக்கி யதைக்குத் தக்கபடி பெறுவான். என்னிடம் யோக்கி யதை இருப்பதாக மதிக்கின்றேன். இதன் சாவியைக் கொடு; உடனே இதைத் திறந்து, இதில் என் அதிர்ஷ்டத் தைக் கண்டறிகிறேன்.
[வெள்ளிப் பெட்டியைத் திறக்கிறான்.]
ச. அதிலிருப்பதைப் பார்ப்பதற்கு அத்தனை நேர மேன்?
அ. அ. என்ன இருக்கின்ற திங்கே? எனக்கொரு காகிதச் சுருளைத் தருகிற முழு முண்டத்தின் படம் ஒன்று! அதைப் படித் துப் பார்க்கின்றேன்.- சரோஜினிக்கும் உனக்கும் எவ் வளவு பேத மிருக்கின்றது! நான் கோரியதற்கும் பெறு வதற்கும் எவ்வளவு வித்யாசம்! “என்னை விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கபடி பெறுவான்.’ முழு முண் டத்தின் தலை தவிர வேறொன்றும் பெறுதற்குத் தக்கவ னல்லவா? இதுதானா எனக்குப் பரிசு? இதைவிட மேலா னதைப் பெற எனக்கு யோக்கியதை இல்லையா ?
ச. குற்றம் செய்வதும், தீர்ப்பு செய்வதும், குவலயத்தில் வெவ்வேறு தொழில்களாம்; அன்றியும் ஒன்றுக்கொன்று விரோதமான சுபாவமுடையது.
அ. அ. என்ன இருக்கிறது இங்கு?
“பழுதற் அனலிலிது பரிசோதித்த தெழுவிசை ;
பாரினில் தவறின்றி பகுத்தறியும் புத்தியும்
எழுவிசைச் சோதித்தே ஏற்றபடியாகும் ;
நிழலை முத்தமிடும் நிர்மூடரு முண்டேதான்,
அன்னவருக்கோ அத்துணை தான் சுகமும்
வெள்வேடம்பூண் வெறியரு முண்டே,
அம்மாதிரியே இதுவு மாகும்
காதலி எவளைக் கைப்பிடித்தாலு நீர்,
உமது தலையாய் உலகினி லிருப்பேன்.
உடனே போகலாம், வேலையு முடிந்தது!’
இன்னும் இருப்பனேல், இதனிலும் மூடனாவேன்.
மணக்க வந்தது, மடத்தலை யொன்றுடன்,
மறுத்தும் போவது மடத்தலை இரண்டுடன்.
பெண்மணி, விடை யளிப்பாய் ; செய்த சத்தியம் பிசகேன்; என் வருத்தத்தைப் பொறுமையோடு சகிப்பேன்.
[தன் பரிவாரங்களுடன் போகிறான்.)
ச. இப்படித்தான்,விளக்கு விட்டிலை எரித்தது ! அந்தோ! என்ன சுத்த மூட்டாள்கள் ! கோருகிற சமயத்தில், தங்கள் புத்தியினாலேயே தோல்வி யடையும் படியான யுக்திமாத்திரம் இருக்கின்றது.
நீ, ‘தலைவிதியின்படியே தாரமும் தண்டனையும்”, என்கிற பழ மொழி வீண் போகுமா?
ச. வா, போவோம்.- திரையைத் தள்ளிவிடு, நீலகேசி.
ஒரு வேலையாள் வருகிறான்.
வே. எங்கே என் எஜமானி?
ச. இதோ ; என்ன வேண்டும் உனக்கு?
வே, அம்மணி, தமது வாசற்படியில் வாணீபுரத்து வாலிபர் ஒரு வர் இழிந்திருக்கிறார்; தனது எஜமான் வரவைத் தான்முன் ன தாகக் தெரிவிக்க வந்ததாகக் கூறுகிறார். அவரிடமிருந்து தக்க மரியாதைகளுடன் வந்திருக்கிறார். உபசார வார்த்தை களும் உன்னத மொழிகளும் அன்றி, உயர்ந்த வெகுமதி களையும் கொண்டுவந் திருக்கிறார். இவரைப்போன்ற உண்மையான காதலுக்குத் தகுந்த உத்தமமான தூதனை, இதுவரையில் நான் கண்டதில்லை. சுகத்தைத் தரும் இள வேனிற் காலம் வந்துவிட்டது என்பதைக் குறிப்பதற்காகத் தென்றற் காற்று முன்னால் வீசுவதேபோல், தன் எஐமான னுக்கு முன்பாக இத்தூதர் வந்திருக்கிறார்.
ச. போதும் நிறுத்து, வேண்டுகிறேன் உன்னை ; இவ்வளவு அதிகமாய் நீ அவரைப்பற்றிப் புகழ்வதைப் பார்த்தால், சீக்கிரத்தில், அவர் என்னுடைய பந்து, என்று கூறி முடிப் பாயென அஞ்சுகிறேன் சற்று.-வா, வா,நீலகேசி, இவ் வளவு மரியாதையுடன் வருகிற வேகமுடைய மன்மதன் தபாலைக் காண விரும்புகிறேன் மிகவும்.
நீ. ‘அந்த மன்மதன் கிருபையால் அவர் பானுசேனரா யிருப்பாராக!
[எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
– தொடரும்…
– வாணீபுர வணிகன் (நாடகம்), நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, மூன்றாம் பதிப்பு: 1957.