வாடாமல்லி
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 96
(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதழ் 4-6 | இதழ் 7-9 | இதழ் 10-13
இதழ் 7 – சிராம்மோன்

திரு.பெரோன் திடீரென்று பக்கவாதத்தால் தாக்குண்டு பாயும் படுக்கையுமானார். சில நாளில் நோயின் கடுமை நீங்கிற்று. ஆயினும் உடல் தேறும் தறுவாயில் சில நாள் மருந்தூற்றுக்களி னருகில் சென்று தங்குதல் நலம் என்று மருத்துவர் கருதினர். அதன்படியே ‘பூர்பன் லார்ஷம் போல்ட்’ என்ற மருந்தூற்றுப் பதிக் குச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. லாரைன் இத் தறுவாயில் தந்தையுடன் சென்று அவருக்குத் துணை யுதவி செய்ய விரும்பினாள். தந்தை தம் வீட்டின் கட்டுப்பாட்டுக் கோட்டையிலிருந்து விலகியிருக்கும் சமயம் இதுவே யாதலால் அதனை விட்டுவிட அவள் விரும்பவில்லை.
மாது பிளான்ஸி வழக்கம்போல் அவளைத் தடுத்து, எச்சரித்து, உறுக்கிப் பார்த்தாள். ஆனால் லாரைன் தன் வாழ்வில் முதல் தடவையாகத் தான் செய்த முடி வில் உறுதியாய் நின்றாள்.
பிளான்ஸி : உன்னை நான் போகவிடப் போவ தில்லை.நீ போனால் திரும்ப இவ்வீட்டு வாயில் உனக்கு அடைக்கப்பட்டுவிடும்.
லாரைனை இவ் வச்சுறுத்தல்கள் அசைக்காததைக் கண்டு அவள் தொனியைச் சிறிது மாற்றி எழுந்து அவ ளருகில் வந்து பேசினாள்.
“நான் கதவடைத்துவிட்டால் நீ என்ன செய்ய முடியும் என்று அமைந்தாராய்ந்து பார். உன் தந்தை வீட்டில் தந்தைக்குப் பின்னாலிருந்து கொண்டு மாது பெரோனும் விடலையும் உன் செல்வத்தை உன்னை யறி யாமல் கரைத்துக் குடிப்பர்.உன் பக்கம் போராட ஆளிராது” என்றாள்.
லாரைன் : என் பக்கம் கடவுள் இருப்பார்.
கடவுள் என்ற சொல் மாது பிளான்ஸியைத் தூக்கிவாரிப் போட்டது. கடவுள் போன்ற எட்டாப் பொருள்கள் பற்றிச் சின்னஞ் சிறு பிள்ளைகள் பெரிய வர்கள் முன்னிலையில் பேசத் துணியும் காலம் இது என்று அவள் நினைத்து உறுமிக் கொண்டாள். ஆனால் அவள் வாயாடவில்லை.
அவள் வேறு பக்கமாகத் தன் வற்புறுத்தலைத் திருப்பினாள்.
“மருந்தூற்றுப் பதியில் வைத்து உன் தந்தை உயிர் நீத்துவிட்டால் நீ என்ன செய்யக்கூடும்?”
லாரைன் : நான் ஒரு கன்னித் துறவியாய்விடுவேன்!.
லாரைனின் துணிச்சல் பயன் தந்தது. மாது பிளான்ஸி தன் அச்சுறுத்தல்கள் இனிச் செல்லாது என்று கண்டாள். லாரைன் சிறு பிள்ளையல்ல; தன் நிலைமை யறிந்து கொண்ட நிறையிளமாது ஆகிவிட் டாள். மருந்துப் பதியிலும் யாவரும் அவள் அழகு, அவள் அறிவுத்திறம், நாகரிகப் பண்பு ஆகியவற்றை வியந்து பாராட்டினர். தந்தையின் உள்ளத்தில் கூட அவளைப்பற்றிய மதிப்பு உயர்ந்தது.
லாரைன் திரும்பி வந்தபோது, மாது பிளான்ஸி கூடப் பேசாது அவளை வரவேற்றாள்.
லாரைனின் வாழ்க்கையனுபவங்களால் அவள் அறிவு அவள் வயதுக்கு மீறியதாயிருந்தது. இவ் வறிவு அவள் உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடைப் படுத்திற்று. அவள் தன் பருவத்திலுள்ள மங்கையர் களைப்போல எதிர்காலம்பற்றி மனக் கோட்டைகள் கட்டவில்லை. அவள் மனம் இன்னும் தன் பழைய வாழ் வின் தொல்லைகளைப் பற்றியும் தன் நிகழ்காலச் சூழல் களைப் பற்றியுமே சிந்தித்து வந்தது. தவிர, கனவுக் கோட்டைகள் கட்டிவந்த பல பெண்களை அவள் அறிந் திருந்தாள். பலர் கனவுக் கோட்டைகள் போன போக்கை அவள் மறக்க முடியவில்லை. பலர் காதற் கனவுகள் மணவாழ்வின் எல்லையை எட்டாமலே காதற் கனவுகளாயிருந்தன. சிலர் கனவுகள் மணவினையின் எல்லையிலோ, மணவிழாவின் பின் வந்த தேனிலவுக் காலப் புத்தின்ப எல்லையிலோ நின்றுவிட்டன. இவற் றால் குடும்ப வாழ்வு வெறும் காதல் விளையாட்டா யிருக்க முடியாது என்பதை அவள் அறிந்தாள். சிறப் பாகப் பெண்களுக்குக் காதல் மணமாகும் வரைதான் மதிப்புத் தருகிறது-அல்லது அதனை ஒருவரிடம் நம்பி ஒப்படைப்பதுவரைதான் மதிப்பு உண்டு என்று அவள் கண்டாள். ஆகவே அவள் கனவுக் கோட்டை களிலீடுபடாமல், ஆய்ந்தமைந்து தன் எதிர்கால வாழ்க்கை பற்றித் திட்டமிடுவதில் கருத்துச் செலுத்தினாள்.
இத்தனைக்குமிடையில் அவளிடம் அவளறியாமலே ஒரு குறைபாடு இருந்து வந்தது-அவள் உள்ளம் காதலை அறியவில்லை-காதலை அவாவவும் இல்லை. அவள் அலந்தது காதலுக்கல்ல, அன்புக்கு, நட்புக்கு! உள்ளந்திறந்து அன்பு செலுத்த, அன்பு கோர ஒரு தாய்; அன்போ அறிவுரையோ அளிக்க ஒரு தந்தை; துன்பம் பகிர்ந்து, இன்பம் பெருக்கி ஊடாட ஓர் உயிர் நண்பன், இவர்களே அல்லது இவர்களின் ஒரு கூட்டுக் கலவையே இப்போதைய அவள் தேவை.
அவள் தன் விருப்பங்களை ஆராய்ந்தாள்; தன் சூழல்களை ஆராய்ந்தாள். ஆம். தன் எதிர்கால வாழ் வின் தேவை ஒரு கணவன்-அவன் வெறுங்காதல னாய் இருந்து பயனில்லை; தந்தையற்ற அவளுக்கு ஒரு தந்தையாய், தாய் அற்ற அவளுக்கு ஒரு தாயாக இல்லாவிடினும், அவன் அவள் தாய்மையன்புக்குரிய வனாய், அவள் மதிப்பார்வத்துக்கும் அவா ஆர்வத் துக்கும் உரிய பண்பாளனாய் இருக்க வேண்டும். இப் பண்புக் கூட்டுக்குமுன் இளமை, அழகு, பகட்டான காதல் பசப்பு ஆகிய எவையும் புறக்கணிக்கத் தக்கவை என்று அவள் உள்ளம் கூறியது.
அவள் மனத்திரை முன் இப்பண்புகள் அவளு குப் பழக்கமான ஒரு முது நண்பர் உருவில் காட்சி யளித்தன. அந்நண்பரே அவள் தந்தையின் இல்லத்திற்கு அடிக்கடி விருந்தினராக வந்து கொண்டிருந்த கோமான் எல்ஃஜீயர் ஜோஸப் சிட்னி சிராம்மோன் என்ற பகட்டான பெயர் தாங்கியவர். அவர் உண்மை யில் எழுபது வயதுடையவர்; ஆனால் அவர் வீர வாழ்வு வாழ்ந்தவராதலால், உடற் கட்டுடையவராய் ஐம்ப தென மதிக்கத்தகுந்த தோற்றமுடையவராயிருந்தார். அவர் இளைஞரினும் விரைந்த சுறுசுறுப்பான நடை யுடையவர்; அத்துடன் நெட்டையாகவும் பார்ப்பதற் குப் பெருமிதத் தோற்ற முடையவராகவும் இருந்தார். அறிவமைதியும், அதனிடையே நல்ல பண்பாண்மை யின் சின்னமான கனிவும் புன்முறுவலும் அவர் முகத் தில் எப்பொழுதும் ஒளி வீசின. கடற் படையிலே வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்து, மன்னர் இளங்கோக்களால் மதிப்புப் பெற்ற அவர்தம் வாழ்க்கையின் மாலைப் போதை இன்பமாகக் கழிக்கவே பாரிஸ் வந்திருந்தார். அவர் குடும்பம் ஐரோப்பாவின் மன்னர் குடிகளுடன் பழந்தொடர்பு கொண்டது- ஃபிரஞ்சு அரசரும் ஆஸ்திரிய அரசரும் தாங்கள் சிட்னி கால்வழியில் வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொண்டனர்.
லாரைனின் கனவுருவம் இந் நனவுருவத்தைச் சுற்றியே வட்டமிட்டது.
சிட்னி சிராம்மோன் வீரர்மட்டுமன்று; நல்ல பண்பு முடையவர். லாரைனுடன் அவர் தந்தைபோல் பழகி னார்; தந்தை போலவே நடந்து கொண்டார். ஆயினும் அவள் அவர் உரையாடுமிடத்தில் வந்ததும், அவர் பேச்சிலும் உள்ளக் கிளர்ச்சியிலும் மாறுதல்கள் ஏற்பட வில்லை. அவர் நண்பராகிய லாரைனின் மாமன் திரு மான் கண்டர் இது பற்றி அவருடன் குறும்புக் கேலி செய்வதுண்டு. அவர் வயது இதனை ஓர் இன்பவேடிக் கையாக்கப் போதியதாயிருந்தது. லாரைனின் அமைந்த ஆராய்ச்சித் திட்டம் இவ்வேடிக்கையை வினையாக்க முனைந்தது. ஆம் அவருக்கு என் அன்பு தேவை; எனக்கும் அவர் அன்பு தேவை. நான் அவரை மதிக்கிறேன். அவர் மிகவும் நல்லவர், நற்பண்புடைய வர். அவர் தீங்கெண்ணமாட்டார். நல்லெண்ணமுடைய வர். நம்பிக்கைக் கேடு செய்யும் கூட்டத்தவரல்லர் அவர். ஆம்! நான் துணிந்துவிட்டேன். இதுஎன் முடிவு. என் மாமாவிடம் இது பற்றிக் கலந்தாராய்வேன்” என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டாள்.
தூய அல்லிமலர் போன்ற அவள் உள்ளத்தில் மெல் லிய செந்நிற ஒளி படர்ந்து பரவி ஓடிற்று. கலையை உடையாகக் கொண்ட அவ் எழுத்தாளர் நங்கை புதிய கருத்தார்வத்துடன் உடையில் கலையார்வம் கொண் டாள். பகட்டான அக்கால உடைகளை அவள் மேற் கொள்ளவில்லை-ஆனால் அவள் கலை தேர்ந்த எளிமை பகட்டை விடப் பகட்டுவ தாயிருந்தது. நீலக் கோடிட்ட தூய வெள்ளாடை, அதன்மேல் சிவந்த கச்சை, இவை அவள் இயற்கை யழகைப் பலமடங்கு பெருக்கிக் காட்டின. புது நயம் மிகுந்த இந்தப் போர்க் கோலத்துடன் அவள் புது நங்கையாகி, தன் மாமனி டம் சென்று பேசினாள். அவளிடம் அவர் கண்ட மாறு தல் அவர் முகத்தில் புன்முறுவல் தோற்றுவித்தது. ஆனால் அந்த மாறுதலின் போக்கு வழக்கமாக எவரும் எதிர்பாராததாயிருந்தது!
அவர் லாரைன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். அவரையறியாமல் அவர் உள்ளம் அவள் கருத்துக்களை எண்ணி நகை பூத்தது.
”குழந்தாய்! நீ கூறுவதெல்லாம் சரிதான். ஆனால் அவர் வயதென்ன? உன்னைவிட அவர் ஒரு தலை முறைக்கு முந்தியவராயிற்றே. இதை நீ எண்ணிப் பார்க்கவேண்டமா?”
லாரைன்: அதனால் என்ன கேடு மாமா? அவர் என்னை நேசிக்க முடியும், நேசிக்கிறார். என்னை அவர் பண முடியும். எனக்கு அவர் மீது மதிப்பு உண்டு. வேறு என்ன வேண்டும்?
திரு காண்டர் இப்புதுக் கருத்தில் ஆர்வங்காட்… முடியவில்லையாயினும், படிப்படியாக அதனை ஏற்கத் தொடங்கினார், தாய் தந்தையர் உணர்ச்சியற்ற போக் கால் எத்தனை பேர் காதலில்லா மணத்திற் சிக்கி அலைக் கழிகின்றனர். அவற்றைப் பார்க்க, இது மோசமென்று கூறுவதற்கில்லை. இதில் ஏமாற்றம் இல்லை, ஏமாற்று தலும் இல்லை; சூழ்நிலையை நோக்க, புறத்தேயுள்ள பொருந்தாமை அத்தனை பெரிதன்று என்று அவரும் அமைந்தார்.
“சரி, நான் அவரிடம் மெல்ல இதுபற்றித் தெரிவிக் கிறேன்” என்று அவர் ஏற்றுக்கெர்ண்டார்.
சிட்னி சிரோம்மோன் அக்கருத்தை விளையாட் டாகக் கருதுவாரென்று திரு. காண்டர் எதிர் பார்த் தார். ஆனால் அவர் அவ்வாறு கருதவில்லை. அது பற்றி ஆராய முனையவும் இல்லை. தம் தொலைக் கனவு களையும் மீறிய இவ் வெதிர்பாராச் செய்தி அவரைத் துள்ளிக் குதிக்க வைத்தது. அது அவர் உள்ளத்தை முற்றிலும் மகிழ்ச்சியுளாழ்த்திற்று. அவர் தோற்றம் இதனால் பல ஆண்டு இளமை பெற்றது. அவரது வழக்கமான அமைதி பறந்தது – அவர் உள்ளக் கிளர்ச்சி யால் துள்ளிக் குதித்தாடினார்.
ஆயினும் அவர் முற்றிலும் அறிவமைதியை இழந்து விடவில்லை. “என் அருமை காண்டர்! நீங்கள் விளை யாட்டுக்குத்தான் கூறுகிறீர்கள் போலிருக்கிறது. தங்கள் மருகியாவது, என்னை இங்ஙனம் கருதுவதாவது! அவள் அழகென்ன, இளமை யென்ன? அவள் நாகரிகத்துக்கும் குணத்துக்கும் அவளைத் தலைமேற் கொள்ள எத்தனை இளைஞர்களும் இளங் கோக்களும் காத்துக் கிடக்கின்றனர். அவள் என்னைப் புகழ்ந்து பாராட்டுவதற்காக இதைக் கூறி யிருக்கக் கூடும். அதற்கு நான் தகுதியுடையவனல்லவே.”
அவர் சொற்கள் அவர் உள்ளார்ந்த உணர்ச்சியை மறைக்கவில்லை. காண்டருக்கு வேறு சொற்கள் தேவைப்படவுமில்லை. அவர் அமைதியாக, “விளையாட்டல்ல, கோமான்! தாங்கள் இதனை ஏற்றுக்கொண்ட தாக லாரைனிடம் கூறப் போகிறேன்” என்றார்.
லாரைனின் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. அத் துடன் அவள் வகையில் இதுவரை ஒத்துவராத இரு கட்சிகளும் இதில் வியக்கத்தக்க அளவு ஒற்றுமை காட்டினர். சிட்னி சிராம்மோன் இளைஞராகவோ நடுத்தர வயதினராகவோ கூட இல்லாமல், முதிய வராகவும் மிக உயர்குடி மதிப்புடையவராகவும் இருந்ததால், மாது பிளான்ஸி ஒரு புறமும், மாது பெரோனும் திரு. பெரோனும் மறுபுறமும் இத் திட் டத்தை, அட்டியின்றி ஏற்றார்கள்.
மண நாள் குறிக்கப்பட்டது.
மணவிழாவுக்காக யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்புவது என்பதற்கான விருத்தழைப்புப் பட்டியல் வகுக்கப்பட்டது.
“திரு.திருமதி… .அவர்களுக்கு,
திருநிறை செல்வக் கோமான் எல்ஃஜீயர் ஜோஸப் சிட்னி சிராம் மோனுக்கும் திருநிறைச் செல்வி லாரைன் தேழீன் பெரோனுக்கும், நிகழும் 1769 ஏப்ரல் மாதம் 12-ஆம் நாளன்று காலை 11
காலை 11 – 11 மணிக்குப் பாரிஸ் நகரக் கோயிலில் வைத்து நடைறுெம் திருண நிறைவு விழாவுக்குத் தாங்கள் தங்கள் அன்பரும் சுற்றமும் சூழ அன்பு வருகை தந்து எங்களைச் சிறப் பிக்கும்படி கோருகிறோம்.
இங்ஙனம்
தங்களன்புள்ள,
திரு. பெரோன்
மாது பிளான்ஸி.
பெண் ஓர் அழகரசி. மாப்பிள்ளை ஒரு புகழரசர். துணையிணைப்பு எதிர்பாராதது. எனவே எங்கும் பர பரப்பும் வியப்பார்வமும் பரந்தன. மண அழைப் பிதழ்கள் எங்கும் நடமாடின.
மணமகள் உடையில் அவள் கலைச்சுவையுடன் அவள் செல்வ மரபு போட்டியிட்டது. இரண்டும் சரி சமமாகவே இணைந்தன. அவள் விரும்பிய வெண்மை நிறம் வென்றது-ஆனால் வெண்மை வெள்ளிச் சரிகை களாகவும் வெண்பட்டுக்களாகவும் மிளிர்ந்தது. பொன் னணி மணிகளின் ஒளிகளைக் கவிந்து வைரங்களின் வெள்ளொளி சுடர் விட்டது. இளஞ் சிவப்புகிற அருகுகளும் வானீலக் கச்சைகளும் இவ்வெண்மைகளை எடுத்துக் காட்டின. முகத்திலும் உடலிலும் படர்ந்த நறுமண வெண் தூளிடையே மங்கிய சிவப்பொளி கலந்துறவாடி இளநகை பூத்தன.
முதுமையின் அமைதி, இளமையின் எக்களிப்பு மணமகனிடம்; இளயிைமன் எழில் அறிவின் அமைதி மணமகளிடம் ; மனம்நிறைந்த இன்பக் களிப்பு அனை வரிடமும்-இத்தகைய நிறை அமைதி பெற்று விளங்கியது மணவிழா லாரைன் கோமான் சிராம்மோ னின் மனைத் தலைமையை உரிமையுடன் ஏற்று கோமாட்டி சிராம்மோன் ஆனாள்.
மணப்பெண் மணவாழ்வின் உறுதி வாசகத்தை முறைப்படி கூறுகையில், அவள் உள்ளம் அமைதி பெற் றிருந்தது. அவள் குழந்தைக் கால வாழ்வின் இருண்ட நினைவுகள், கன்னிமைக் காலப் புயல்கள் யாவும் ஓய்வு பெற்றேகின.
இதழ் 8 – மன்னவையேற்றம்
பாரிஸ் நகரில் வெர்சேப்பாக்கத்தில் ஒரு பெரிய மாளிகை. அது வழக்கமாகத் திறக்கப்படாமலே இருந்து வந்தது. இன்று அது திறக்கப்கட்டு அங்கே உயர்குடி மக்கள் அணியணியாகச் சென்று குழுமிக் கொண்டிருந்தனர். உறையிட்டுத் தூசி படிந்து கிடந்த சாய்விருக்கை, மேடைப் பலகைகள் யாவும் நெய்யிட்டுத் துடைத்துப் பளபள வென்று மின்னின. வில் வைத்தமைத்து அவற்றின் மீது மென் பட்டு மெத்தை களிடப்பட்ட அவ்விருக்கைகளில்ஒய்யாரமாக அமர்ந்து மாதரும் இளமங்கையரும் அழகிய சிறு விசிறிகளால் அடிக்கடி சிறு வீச்சு வீசிக்கொண்டிருந்தனர். அவர் களுடன் இளைஞரும் நல்லாடவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடை யேந்தியும் மேலங்கியின் நீண்ட பின்தானைத் தொங்கலை ஏந்தியும் பணியாட்களும் பணிப்பைதல்களும் தத்தம் பணியில் கருத்துச் செலுத்தி நின்றனர். இவர்களனைவரும் அம் மாளிகை முழுதும் பரந்து மலரை மொய்த்த பூவண்டு, பொறி வண்டுகள் போல் மொய்த்திருந்தனர். தெருக் களில் அடர்த்தியாக நின்றும் நடந்தும் திரிந்த மக்கள் திரள்களை மேலிருந்து பார்ப்பவருக்கு, அவர்கள் தலை யணியும் அதிலுள்ள தீப்பறவை இறகுகளும் தவிர வேறு எதுவும் தெரியமாட்டாது. ஆளேயில்லாமல் நீரில் மிதந்து இறகுக் கடைகள் சென்றன என்று கூறத்தக்கதாயிருந்தது அக்காட்சி. இவ்விறகுக் கட விடையே மீன் பிடிக்கும் படகுகள் போலக் குதிரை களும் குதிரை ஊர்திகளும் ஆங்காங்கு மெல்லென மெல்லென அசைந்து சென்றன.
இம்மாளிகையே மன்னர் சிறப்பிருக்கைக்குரிய “காலரி தேகிளாஸே” என்ற அரண்மனை. உயர்குடி மக்கள் மணிவிழாவின் பின் மணமக்கள் இம்மாளிகை யிலே அரசனரசியின் திரு முன்னிலையில் அரசவை யோருக்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுவது பிரஞ்சு நாட்டு மரபு. அம்முறையில் கோமான் சிட்னி சிராம்மோனையும் கோமாட்டி சிராம்மோனையும் அறி முகப்படுத்தும் விழாவுக்காகவே இச்சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தகைய கூட்டங்களுக்கு மட்டுமே வெளியே யெடுத்து வழங்கப்படும் பல உயர் சிறப்புப் பொருள் கள் இவ்வரண்மனையின் பக்க அறைகளில் வைக்கப் பட்டிருந்தன. இவற்றுள் ஆரஞ்சுப்பழம் போன்ற ற நிறமும் வடிவும் உடைய விளக்குகள் தனிப்படக் குறிக் கத் தக்கன. வெள்ளித் தொட்டிகளில் வெள்ளி பொன் வேலைப்பாட்டுடன் ஆரஞ்சு மரம் போலத் தோற்றும் படி செய்யப்பட்ட செயற்கை மரங்களில் ஆரஞ்சுப் பழங்கள், போலவே அவை தொங்கின. இத் தொட்டி களனைத்தும் இன்று மாளிகை எங்கும் வரிசை வரிசையாகப் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் பலவகைச் சிங்காரப் பொருள்கள் மீதும் மாதர் ஆடவர் அணி மணி ஒப்பனை வண்ணங்களின் மீதும் அவை தம் அடங்கிய செவ்வொளியை வீசிக் கொண்டிருந்தன.
ஃபிரான்சு நாட்டில் பழைய ஐரோப்பாவின் நாக ரிகம் உச்சநிலை அடைந்திருந்த காலம் இது. பதினான் காம் லூயியின் பேரரசு வெற்றிகளும் பெருஞ் செல்வ மும் கலைவண்மையும் ஃபிரான்சையே ஐரோப்பாவின் தலை நிலமாகவும், பாரிஸை அதன் நடுமேடையாகவும் வேர்சேப்பாக்கத்தையும் அதன் அரண்மனையையும் அவற்றின் மேடை மையமாகவும் ஆக்கியிருந்தது. இந்நாகரிகம் மேலும் வளர்ச்சி எய்தவில்லை; ஆனால் அதன் பொலிவு குன்றவுமில்லை. செயற்கைப் பண் பையும் உயர்குடிப் பெருமையையும் மேற்பூச்சாகக் கொண்ட இச்செயற்கைப் பொழிவின் மாயப் பசப்பை அகற்றவிருந்த ஃவிரஞ்சுப் புரட்சி இன்னும் இருபது ஆண்டுத் தொலைவிலேயே யிருந்தது. ஆயினும் அதன் முன்னறிகுறிகள் இப்போதும் மறைவில் மினுங்கின. ரூசோ ஒருபுறமும் வால்த்தேர் ஒருபுறமும் கலைஞ ரிடையேயும் அறிஞரிடையேயும் உலவத் தொடங்கி யிருந்தனர். தென்றலிடையே தோன்றிய இச்சிறு புயல்முகில்கள் வருங்காலத்தில் பெரும் புயலை எழுப்பி ஃபிரான்சை அல்லோலகல்லோலப் படுத்துவதுடன் அமையாது தன் வாடைக் குளிரால் உலகையே நடுங்கி ஆடச் செய்யும் என்று இச்சமயம் எவரும் எண்ணி யிருக்கமுடியாது. வழக்கம்போல, வழக்கத்தினும் மிகுதியாக, அரசிபற்றியும் அவள் தோழர் தோழியர் பற்றியும் இன்று வம்புரையாடிக்கொண்டிருந்த பாரிஸ் இளமாதர், இளைஞர்கள் கட்டாயம் அதனைப் பற்றிக் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அவர்களிடையே தலை நிமிர்ந்து சென்று தவிசேறி இறுமாந்து வீற்றி ருச்த அரசனும் அரசியும், தம் தலைகளைத் தூக்கு மேடைக்கு அனுப்பவேண்டி வருமென்றோ, தாமும் தம் பெருமக்கள் கோமக்களும் தம்மால் இன்று புறக்கணிக் கப்படும் கீழ் மக்கள் முன் நின்று உயிருக்குக் கொஞ்ச வேண்டிவரும் என்றோ சிறிதும் நினைத்திருக்கமாட்டார் கள். எதிர்கால நுனித்தறியும் நோக்கு மனிதருக்கு இருந்திருந்தால், அன்றைய விழவுக் கொண்டாட்டம், விழவுக் கொண்டாட்டமாகவே இருந்திருக்கமுடியாது.
வேடிக்கைப் பாட்டுக்கள், வசைப் பாட்டுக்களை மாதர் ஒருவரிடமிருந்து ஒருவர் திரும்பத் திரும்பக் கேட்டு மனப்பாடம் பண்ணிப் பரப்பிக்கொண்டிருந் தனர். ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவர் ஆடை யணி, நடையுடை, ஆடல் பாடல் வண்ணங்களில் கருத் துச் செலுத்தி அதனுடன் போட்டியிட்டு மேம்படுவது. ஒன்றிலேயே குறியாயிருந்தனர். போக ஒளிவு மறை வான காதல், அதன் விளைவான மறை பிறவினைபற்றிய உரையாடல் உதட்டுக் குதடு நடமாடின. கிரேக்க புராண மரபுப்படி மறை காதலும் அதன் விளைவுகளும் கடலகச் செல்வன் திருவிளையாடல்கள் புதிதாக உயர் குடி நங்கையரிடையே புகழ்பெற்றுவந்த விகட வசைக் கவிஞன் டிபஃவ்வர்ஸ் அத்தகைய திருவிளையாடல் களில் பிறந்தவன் – அத்திருவிளையாடல்கள் பற்றி நகையினிமைத் திறமும் வசைத்திறமும் தோன்றப் பாடியிருந்தான். அப்பாடல்கள் இத்தகைய கூட்டங் களில் ஊடாடின. லிஸெட் என்ற அரசவை இளவரசி ஒருத்தி பற்றிய பாடல் இவற்றுள் ஒன்று.
“மயல்விழியார் லிஸெட்! உன்றன் மாயவலையில்
மன்னவையின் மைந்தர் பலர் வதைப்படுகிறார்!
கயல்விழியார் கோமகளிர் கண்ணுறுத்தலாம்,
காரழகி இளவரசி கடுகிச் சீறலாம் !
புயலிடையும் கடற்செல்வன் பொலிந்து பெற்றவள்
பொருவில்மண மாதைஎனக் கலைபுகலுதே.”
இப்பாட்டைக் கோமகள் ஒருத்தியே பாடிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள். ‘ஆகா, ஆகா, என்ன அழகிய பாடல், என்ன சொல் நயம் ! திரும்பி ஒருதடவைபாடு’ என்று காதல் கோயிலின் மறையின்பமறியாப் புத்திள மங்கையர் பலர் அவளைச் சூழ்ந்து மொய்த்தனர்.
இளவரசருள் ஒருவர் மன்னர் நாகரிக நடையுடை யையும் அரசியின் இயற்கை வனப்பையும் புகழ்ந்தார். அவள் பொன்னிற மயிர் வனப்பில் அவர் ஈடுபட்டார். அது பொறுக்கவில்லை ஓர் இளமங்கைக்கு. ‘அது இயற்கைப் பென்னிறமல்ல. புதிதாக வந்த பொன்னிறப் பூச்சு மையின் திறமே அது” என்றாள் அவள்.
”அது உனக்கு எப்படித் தெரியும், அம்மணி?”
“நானும் அதைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன் என்று சொல்ல மங்கையின் நா எழவில்லை. “அத்த கையதொரு பொடியை இப்போது பலர் வழங்குவது எனக்குத் தெரியும். மேலும் அரசி முடி வேறு நிறமா யிருந்ததை நான் அறிவேன்” என்றாள்.
“எல்லார் முடியும் வேறுநிறமாகும் காலம் உண்டு” என்றார் முதுமையை எதிர்த்துப் போராடிய பெருமானார் ஒருவர்.
கோமான் சிராம்மோன் வழக்கத்துக்கு மேற்பட நற்பண்பு தேர்ந்த ஆடையணியுடன் வந்து தவிசி னருகில் உள்ள தம் இருக்கையில் அமர்ந்திருந்தார். கோமாட்டி சிராம்மோன் இருக்கை இன்னும் வெறுமை யாகவே இருந்தது. அவள் ஒப்பனை தீர்ந்து இன்னும் வரவில்லை. அனைவரும் அவளை எதிர்பார்த்துக்கொண் டிருந்தனர். ஏன் அவள் இன்னும் வரவில்லை என்று வினவினர் சிலர். சிலர், “குறித்த நேரத்தில் அவள் வந்து சேராமலிருக்க வேண்டும் என்றுதானே சிலர் விரும்பிக்கொண்டிருப்பர்” என்றனர். இங்கே சிலர் என்றது மாது பெரோனையும் மாது பிளான்ஸியையும் தான் என்று கூறத் தேவையில்லை. கிழவனை மணப் பதால் அவள் இறுமாப்படங்கித் தம் மனம்போல நடப் பாள் என்று இருவரில் எவர் நினைத்திருக்காலும், இதற் குள் அவர்கள் ஏமாந்தே போயிருப்பார்கள். லாரைன் பால் அமைந்திருந்த அமைதி, மன நிறைவு, பெருமிதம் ஆகியவை இவ்வெண்ணங்களைச் சிதறடித்துவிட்டன. ஆகவே, அரசர் முன்னிலையில் அவள் பெருமை பெறு வது இரு திறத்தாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் நண்பர், தோழியர் பலர் இக்குறிப்பறிந்து நடக்கவும் தயங்கவில்லை.
மணவிழாவில் மாது சிராம்மோனின் மண ஆடை ஒப்பனையில் கருத்துச் செலுத்தியதைவிட இப்போது அவள் தோழியராக வந்து குழுமிய உறவினர் மிகுதி கவனம் செலுத்தினர். எவரிடமும் தன்மயமாக நடந்து கொள்ளும் இயல்புகொண்ட லாரைன் முதலில் அவர்கள் முயற்சிகளை வாய் பேசாமல் பொறுத்துக்கொண் டிருந்தாள், ஆனால், அதனிடையே எழுந்த போட்டி யைப் பார்க்க, அவர்கள் ஒப்பனை என்றுமே முடியாத ஒப்பனையாய் விடுமோ என்று அவள் அஞ்ச வேண்டிய தாயிருந்தது. மயிரை வாரி முடிப்பாள் ஒருத்தி. தொங்கவிடுவாள் மற்றொருத்தி. வெள்ளாடை சார்த்து: வாள் ஒருத்தி. அதனை அகற்றி நீல ஆடையுடுத்த வேண்டுமென்பாள் மற்றொரு மங்கை. இவையன்றி இருந்திருந்து அவள் கால்களும் அலுத்தன. காற்றோட் டம் வராமல் சூழ யாவரும் வந்து மொய்த்ததால், அவள் ‘வியர்த்து விருவிருத்தாள். கடைசியில் அவளால் பொறுக்க முடியவில்லை. அவள் அருகிலிருந்தோர் கைகளைத் தட்டி விட்டு எழுந்து நிமிர்ந்து நின்றாள் சிறிது கோபக் குறிப்புடன் அவள் விசிறி படபடத்தது!
அவள் திடீர் மாறுதல் தோழியாக நடித்த அவள் திரிகளைத் திகைக்க வைத்தது. அத்திகைப்புக் கலையு முன் அவள் கூட்டத்தை ஊடுருவிச் சரேலென வெளி யேறினாள். அவள் குறிப்பறிந்த தோழியும் உடன் சென்றாள்.
மீட்டும் தோழியர் சிறையுட்பட்டால், குறித்த நேரம் தவறித்தான் அரசவை சேர முடியும் என்பதை மாது சிராம்மோன் நன்றாக உணர்ந்துகொண்டாள். அக் காலத்தில் பெண்டிர் எப்போதும் தலைவலி மருந்து முதலியவற்றை ஒப்பனைப் பொருள்களுடன் வைத்துக் கொண்டிருந்தனர். தோழியர் குழுவின் நெருக்கடி யால் ஏற்பட்டசோர்வை அவள் அம்மருந்தால் தீர்த்துக் கொண்டு தன் இயற்கை ஆடையணிகளைத் தன் கலைத் திறம் முழுதும் காட்டித் திருத்திக்கொண்டாள். பின் அவள் தன் தோழியிடம் “திரும்ப ஒப்பனையறை செல் லாமலே மண்டபம் செல்ல வழியுண்டா பார். எப்படி யாவது நாம் உடனே அங்கே சென்றுவிட வேண்டும்” என்றாள்.
தோழி நல்லகாலமாக இம்மாளிகையில் பலதடவை பணியாளாகவந்து பழகியவள். புறமேடை ஒன்றில் எப் படியாவது நுழைந்துவிட்டால், அதிலிருந்து அங்குள்ள மறைவழிகளுள் ஒன்றின் மூலம் கீழே செல்ல முடியும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், கோமாட்டி யாகிய தன் தலைவியைப் பலகணி யேறித் தாவச் சொல்ல முடியாதே என்று அவள் தயங்கினாள். மாது சிராம்மோன் அவள் குறிப்புணர்ந்து “பெண்ணே! நீ ஒன்றும் தயங்க வேண்டாம். இந்தப் பொல்லாத பிடாரிகளிடமிருந்து “தப்ப, கூற்றுவன் உலகுக்குத் தாவவும் நான் தயங்கமாட்டேன்” என்றாள்.
இருவரும் பலகணி ஒன்றில் ஏறித்தாவிப் புற மேடை, பெரும்பாலும் மூடியிருக்கும் இருட்டறைகள், மறைபாதைகள், இடைவழிகள் ஆகியவற்றினூடாகச் சுற்றிச் சுற்றிச் சென்று மண்டப மடைந்தனர். அவர்களைக் கண்ட பின்னரே சிராம் மோன் மூச்சு வாங்கினார். எங்கே பிளான்ஸி-பெரோன் மாயப் பசப்புத், தன் புது மணத் த ணை வியைப் பட்டுச் சிறைவைத்து விழா வைக் கெடுத்துவிடுகிறதோ என்று அவர் அஞ்சினார்.
மாது சிராம்மோன் ஏதோ காற்றுவாங்கப் போயி ருக்கிறாள் என்று பேசாதமைந்திருந்த ‘பிடாரிகள்’ சிறிது நேரம் சென்று அவளைத் தேடிக் காணாமல் வியப் புற்றனர். “எங்கே போயிருப்பாள்! தன் ஆத்திரம் பொறுக்காமல் பலகணியிலிருந்து குதித்திருப்பாளோ? அப்படி குதித்திருந்தால் எவ்வளவோ நல்லதுதான். ஆனால், அத்தகைய முடிவு ஏற்பட்டதாக நம்பமுடிய வில்லையே. எல்லாம் அமைத் யாயிருக்கிறதே” என்று எண்ணமிடலாயினர். அதனிடையே மணமகள் மண்டப மடைந்தாள் என்ற கசப்பான செய்தியைக் கேட்டு அவர்கள் விம்மிப் பொறுமினர். ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக்கொண்டனர்.
எதிரிகள் தவிர மற்றவர்கள் புதிய மாது சிராம் மோனின் அமைந்த நிறை அழகையும் அவள் ஆடை யணி நயத்தையும் நடையையும் போற்றிப் புகழ்ந்தார வாரித்தனர். “நாட்டில் பிறந்த நல்ல மல்லிகை மலர் இவள். மலையிடையே பிறந்த மாசிலா மாணிக்கம்” என்றனர் பலர். ‘நாட்டு மல்லிகை’ என்ற அடைமொழி அவளைப் பற்றிப் பேசுபவர் நாவிலெல்லாம் ஊடாடி அவள் சிறப்புப் பெயராய் நாளடைவில் அமைந்து விட்டது. இந்நாட்டு மல்லிகையின் முன் தோட்டத்து மல்லிகை எதுவும் மணம் பெறவில்லை.
மன்னர் பதினைந்தாம் லூயி பெண்களினும் நாணம் மிக்கவர். ஆனால், அவரைச் சூழ்ந்து மொய்த்த சூழ்ச் சிக் கும்பல் அவர் இறுமாப்புச் சிறுமையை வளர்த்து வந்தது. உலகம் ஃபிரான்சின் பேரரசைச் சார்ந்தும், ஃபிரான்சு தன் பேராற்றலைச் சார்ந்துமே இயங்குகிற தென்று அவர் நம்பி வந்தார். தம் நா அசைவது சட்டம்; தம் விரலசைவது ஆட்சி என்பது அவர் எண்ணம். ஆயினும் அவர் உள்ளத்திலும் நம் நாட்டில் ஒரு மாறுதல் ஏற்பட்டு வருகிறது என்ற எண்ணம் இருந்திருக்கக்கூடும். ஏனெனில் தம் தற்பெருமை தோன்ற அவர், “எனக்குப்பின் ஊழிக்கால அழிவு தான்” என்று கூறுவதுண்டாம்! அவர் உள்ளத்தைக் கவர்ந்து தவிசேற அரும்பாடுபட்ட காதற் கலையணங் காகிய அவர் துணைவியோ, அத்தவிசேறிய பின் தன் கலையைத் தனக்காகவே முழுதும் பயன்படுத்தினாள். அவள் ‘தனக்குப்பின் பேரூழி’ என்றுகூட எண்ணிய தில்லை. அவள் முடிவும் அதற்கேற்ப, கள்ளமிலா மன்னன் முடிவுபோலத் திடுமென நிகழவில்லை. தன் னைச் சூழ்ந்த பட்டுப்பூச்சிகள் ஆலகால விடத்தையே கக்க முடியும் என்பதை அவள் நன்கு கண்டனுபவித்த பின்னரே மாண்டாள்.
இன்று இம்மன்னனும் அரசியும் தம் கடைசிக் கோமான் கொலுவிருக்கையில் அமர்ந்திருந்தனர். கோமாட்டி சிராம்மோன் இருவரும் அதன் பாராட் டுக்கு முழுதும் உரியவராயினர். மணவிழாவுடன் மன்னேற்ற விழாவும் இனிது நிறைவேறிற்று.
பழைய ஃபிரான்சின் தங்குதடையற்ற இன்ப வாழ்நாளின் மாலைக் காலத்தில் மாலையிளங் கதிரவன் போல மாது சிராம்மோனின் வடிவழகும் பண்பழகும் துலங்கின. அவள் நடந்ததே நடைக்கு இலக்கிய மாயிற்று. அவள் ஆடையே ஆடையணியில் பழமைக் கும் புதுமைக்கும் நடுநிலைவாய்மை நாடியவர் முன் மாதிரியாயிருந்தது. அவள் பேச்சுக்களோ மன்னவைக் குரிய இன்ப நயமும் மற்றையோரும் விரும்பி மேற் கொள்ளும் அறிவு நயமும் பொருந்தியதாயிருந்தது. அவளும் சிராம்மோனும் முதுமைக்கும் இளமைக்கும் இடையே, நகருக்கும் நாட்டுக்கும் இடையே ஒரு பால மாகத் தோன்றினர். பழைய ஃபிரான்சு அவர்கள் மூலம் புதிய ஃபிரான்சு நோக்கிப் புன்முறுவல் பூத்தது.
மாது சிராம்மோனாகிவிட்ட லாரைனின் கடிதங்கள் இதற்குள் ஃபிரான்சின் நற்கடித இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டன. அவள் கடிதத்தை அவள் உரையாடல் திறமும் நயமும் தோற்கடித்தன. இவை யாவற்றையும் அவள் அன்பு கலந்த இனிய அருட்பண்பும், நடுநிலை கோடாத நேர்மையும், நயங்கெடாத எளிமையும் வென்றன. ஃபிரான்சு நாட்டின் எல்லா வகுப்பி.ன. ரிடையேயும் அவள் கிட்டத்தட்ட வேறுபடாத வகை யில் நல்லருளொளி பாலித்தாள். அவள் சென்றவிட மெல்லாம், அவளைச் சூழ அமைதியும் இனிய தென்ற லும் வீசின; கண்காணா ஒளியொன்று அவளைப் போர்த்து நின்று அவள் வனப்பையும் இனிமையையும் பெருக்கின என்று தோற்றிற்று.
மாது சிராம்மோன் முழு வளர்ச்சியடைந்துவிட்ட ப்போதும் நடுத்தர உயரமும் நடுத்தரத்தில் சற்றே குறைந்த வடிவும் வண்ணமும் உடையவளாயிருந்தாள். அவளைப் பார்த்த எவரும் அவள் சிற்றுருவுடைய சிங்காரி என்று எண்ணும்படியாகவே அவள் தோற்றம் இருந்தது. அக்கால ஃபிரஞ்சுப் பெண்கள் விரும்பிய வகையில் அவள் கால்கள் வனப்புடையதாக மட்டு மன்றி, சற்று வளர்ந்த சிறு குழந்தைகளின் கால்களோ என்னும்படி அளவாயிருந்தன. இதனால் அவள் விரைந்த நடைகூட அன்ன மென்னடைபோல இருந் தது. மலரைத் தாங்கிய மென் காம்பு பட்டில் நடந் தாற்போல அவள் நடை பழகினாள்.
அவள் இல்லற வாழ்க்கை கொந்தளிப்பற்றதா யிருந்தது. அதில் ஆட்டபாட்டம் எதுவுமில்லை. ஆனால், கோடைகால வான்போல அது அமைதியுடைய தாகவும், இன்பமுடையதாகவுமே இருந்தது. அதற்கு நிறைவு தரும் முறையில் அவளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. முதற் குழந்தை பெண். அது லாரைனை உரித்து வைத்தது போலவே இருந்தது. அதனுடன் அதன் சாயல் மாது சிராம்மோன் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த அவள் அன்னை மாதுழீன் பெரோனின் சாயல் படிந்தும் இருந்தது. லாரைன், தன் தாயை நினைவூட்டிய இம் மகவைத் தன் உயிரேபோல் போற்றி வளர்த்தாள். அதற்கு அவளிட்ட பெயர் அடிலி என்பது. அடுத்த குழந்தை ஆண். அது பெரிதும் தந்தை சிராம்மோனை நினைவூட்டுவதாயிருந்தது. அது தந்தை பெயரைச் சார்ந்து எல் ஃஜீயர் அகஸ்டி என்றே அழைக்கப் பட்டது. அன்பற்ற சிறைக் கூண்டில் வளர்ந்த லாரைன், மணவாழ்வு கழிந்து இக்குழந்தைகளின் அன்பில் மீண்டும் சிறைப்பட்டாள். ஆனால், இத் தடவை அவள் சிறை அவள் விரும்பி மேற்கொண்ட பொன்சிறையா யிருந்தது.
தன் இரு கண்மணிகளையும் லாரைன் இமைபோல் காத்தாள். சிராம்மோனும் அவள் மணவாழ்வின் முன் திட்டமிட்ட திட்டத்திற்கு ஒரு சிறிதுகூட ஊறு வராத வகையில் அவளை அன்பாதரவுடனும் மதிப்புட னும் நேசித்து வந்தார். இதில் வியப்பில்லை. ஏனெனில் வயது கடந்தும், உள்ளத்தில் முதுமையேறாத அச்சீரிய வீரர் அவளை உளமாறக் காதலித்தே யிருந்தார். மாது லாரைனோ காதலறியா விட்டாலும் அன்பின் அருமை அறிந்தவள். அவள் தன் உள்ளார்ந்த அன்பு முழு வதையும் அவர் மீது கொட்டி அவர் இல்லற வாழ்வினை நிறைந்த நல்லற வாழ்வு ஆக்கினாள். இல்லறத்துணைவர் நேசத்துக்கு அவர்கள் வாழ்வு ஒரு முன்மாதிரியா யிருந்தது.
இதழ் 9 – கைம்பெண்
மன்னன் பதினைந்தாம் லூயி தன் நாணத்தையும் தன் இறுமாப்பையும் உடன்கொண்டு இயற்கை வாழ் வெய்தினான். மன்னன் பதினாறாம் லூயி ரேயிம்ஸ் தலைக் கோயிலில் பேராரவாரத்துடன் முடிசூட்டப் பெற் றான். இதுவே ஃபிரான்சின் கடைசி மன்னரின் முடி சூட்டு விழா என்பதை உணர்ந்தவர்கள் போல, ஃபிரஞ் சுப் பெருமக்கள் இதில் தங்கு தடையற்றுத் தம் இன்பக் கேளிக்கைகளில் மிதந்தனர். இப்போது அவர் களுக்கு வாய்த்த அரசி மேரி அந்தாய்னெட் இக் கேளிக்கை ஊழிக்கு எல்லா வகையிலும் ஏற்ற தலைவி யாயமைந்தாள். அவள் அழகு ஃபிரஞ்சு அரசிகளுக் குள்ளே கூட முன் என்றும் கண்டு கேட்டிராத ஒன்றா யிருந்தது. அவள் ஃபிரான்சின்அரசியாக மட்டுமில்லை; அழகுக்கும் காதலுக்கும் அரசி போலவே காணப் பட்டாள். உண்மையில் அரசி என்ற பெயருக்கு ஒரு சிறிது இழுக்கம் தரும் அளவுக்கு அவள் இன்ப வாழ்வு: சென்று அவ்வெல்லையில் நின்று கலையரசி, காதலரசி என்ற பட்டங்களுக்கும் நாட்டரசிஎன்ற பட்டத்துக்கும் இடையே ஊசலாடுவதாயிருந்தது. மற்ற எந்த அரசி யும் செலவு செய்யாத பெரும் பொருள் அவள் அரண் மனைக் கேளிக்கை யின்ப வாழ்வில் செலவாயிற்று. பெருமக்கள் அதில் பங்குகொண்டனர்-பொதுமக்கள் தெரிந்தும் தெரியாமலும் இவ்வெல்லாச் செலவுகளுக் கும் இறையிறுத்தனர்.
மன்னவையின் இன்ப வாழ்வில் பொது மக்கள் கருத்துச் செல்லவில்லை. ஆனால் பெருமக்களுக்கோ அதில் பங்கு கிடைத்ததுடன், அதுபற்றிக் கவலை யின்றிப்பேசி வம்பளக்கவும், அரசி கட்சி, அரசி எதிர்க் கட்சி எனப் பிரிந்து உள்ளுறப் பூசலிடவும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த இன்ப வாழ்விலும் பூசலிலும் ஃபிரஞ்சுப் பெருமக்கள் நேர்மை, வாய்மை, அமைதி பார் ஆகிய யாவும் கெட்டு வந்தன. பொதுமக்கள் வையில் அவர்கள் தம்மையுமறியாமல் தம்மை இழிவு படுத்திக் கொண்டு வந்தனர்.
இவ்வாய்மை வாழ்வுக் கிடையில் அதன் கலைப் பண்புடன் முற்றிலும் முரண்பட்டு விடாமல், ஆனால் அதிலிருந்து எண்ணெயினிடையேயுள்ள தண்ணீர்த் துளிகள் போலத் தனிப்பட்டுப் பிரிந்து வாழ்ந்தனர், சிராம்மோன் துணைவர். பெருமக்களிடையே பெரு மக்களாக அவர்கள் நடமாடினர்; ஆனால் அவர்கள் வாழ்வு எளிமையும் நற்பண்பும் கெடாதிருந்தது. சிறப்பாக மாது சிராம்மோன் வகையில், அவள் உடையும் பெருமிதத் தோற்றமும்தான் அவள் உயர்குடியைக் காட்டினவே தவிர, அவள் அறிவு, ஒழுக்கம், பணிவு, கடமையுணர்ச்சி, அன்பு ஆகிய யாவும் அக்குழுவி னுக்கு அப்பாற்பட்டவையாயிருந்தன.
பூசல், உட்பூசல், பொய்மை, உட்பகைமை ஆகி யவை நிறைந்த மன்னவைக் குழாத்திடையே அரசியின் கண்கள் அடிக்கடி அன்பாதரவுக்கும் அமைந்த அறி வுரைக்கும் சுவைமிக்க உரையாடலுக்கும் மாது சிரோம் மோனையே நாடின. இன்ப வாழ்வில் தோய்ந்திருந்தும் அவள் உள்ளம் முற்றிலும் நச்சு படாது இருந்தது. சூழல்கள் அவளை ஈர்த்திரா விட்டால், அவளும் மாது சிராம்மோனின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கக் கூடும். ஆனால் மாது சிராம்மோனை அவள் அடிக்கடி காணக்கூட முடிவதில்லை. அவள் அவ்வப்போது அரசியைப் பார்ப்பதுண்டானாலும் அவள் நேரம் பெரும் பாலும் தன் குழந்தைகளைப் பேணுவதிலும், தன் கண வனின் பெருஞ் செல்வத்தை மேற்பார்வையிடுவதிலும் சென்றது. இத்துடன் மணமாகி ஆறாண்டுக்கு மேலாகி விட்டதால், சிராம்மோனின் உடல் முதுமைக்கும் நோய்க்கும் படிப்படியாக இரையாகி வந்தது. முடி சூட்டு விழாவில் அவர் கலந்துகொள்ள முடியவில்லை. மாது சிராம்மோன் கூட அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல், மன்னவைசெல்வதும் தன்மனை வருவதுமாக இருந்தாள்.
ஆனால் முடிசூட்டு நாளில் அவள் பெரும் பகுதியை யும் மன்னவையிலேயே கழிக்கும்படி நேர்ந்தது. அவ ளுக்கு அவ்வளவு பொறுப்பு அவ்விழாவில் ஏற்பட்டது. அவள் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்ட பின்னும் இன்னும் அவள் பாரிஸின் அழகரசிகளுள் முதல் வரிசையிலேயே இருந்தாள். அவள் அறிவும் அன்பும் அவளை அவ் அழகரசிகள் என்றும் நாட முடியாத உயர் மதிப்புப் பெறச் செய்திருந்தன. ஆகவே இன்பக் கோட்டையிலே அவள் ஓர் அறிவுக் கொடியாக உலவினாள்; வஞ்சனைப் புயலிடையே நேர் மைத் தென்றலாக அவள் விளங்கினாள். ஆயினும் அவள் வகையில் தெய்வம் தன் கொடுமைகளை இன்னும் நிறுத்திவிட்டதாகத் தோற்றவில்லை. ஏனெ னில் அவள் முடிசூட்டு விழாவிலிருந்தபோதே அவள் கணவன் உயிர் உடலுடன் போராடத் தொடங்கிற்று. பணியாட்கள் விரைந்து அவளை நாடி அனுப்பப் பெற்றனர். விழாவின் நடுவேளையிலேயே அவள் மூடு வண்டியில் கூட்டங்களை ஊடுருவி விரைந்து வந்தாள். ஆனால் விழாவை விட்டு வந்ததுதான் மிச்சம். இங்கே கணவன் உயிர் அகன்றது; அங்கே அவளில்லாமல் விழா நிறைவேறிற்று.
உலகம் அவளைக் கண்டு பொறாமைப்பட்டது. அவள் உலகை எண்ணிப் பொறாமைப்பட்டாள்.
பணம் படைத்த கணவனை, முதுமையுடைய கணவனை மணக்கும் அழகிள மங்கையர் கணவன் நீண்ட நாள் வாழ்வை எதிர்பார்த்தும் மணப்பதில்லை; அவன் மாள்வு அவர்களுக்கு அதிர்ச்சியை யூட்டுவதும் கிடை யாது. உண்மையில் பலர் கைம்பெண்ணாகும் நாளையே எதிர்பார்த்திருப்பார்கள். அழகிய செவ்வல்லி மலரை விரும்புபவர்கள் அதனுடன் முள்ளையும் சேர்த்துப் பெற வேண்டியிருப்பது போலவே. அவர்கள் தாம் விரும்பும் பணத்துடன் இணைத்துத் தரப் பணம் படைத்த கிழக் கணவனை யிழந்து கைம்பெண்ணாவது இத்தகையவர். பெரும்பாலாருக்கு முள்ளில்லாத செவ் வல்லிப் பூக் கிடைத்தது போன்றது. ஆனால் மாது சிராம்மோன் இத்தரத்து மா தல்ல ; அவள் நிலை வேறாகவே இருந்தது. அவள் சிராம்மோனுக்காக உண்மையிலேயே ஏங்கினாள். ஒரு தந்தைக்காக மகன் அடையும் துயர், ஓர் உடன்பிறந்தானுக்காக உடன் பிறந்தான் அடையும் துயர், ஒருதோழனுக்காக மறு தோழன் அடையும் துயர் இதனினும் மிகுதியாக இருக்க முடியாது; குறைந்தே இருக்கும். தந்தை,தாய், உடன் பிறந்தார், நண்பர் என்ற எல்லா வகை அன்பை யும் கணவனிடம் வைத்திருந்த மாது சிராம்மோன் அவ்வெல்லா வகைத் துன்பங்களையும் ஒரு சேர இப்போது அனுபவித்தாள் என்னலாம். அவள் தன் துயரின் எல்லையைக் கண்டுவிட்டதாகவே இப்போது எண்ணினாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் கணவ னுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்த வாழ்விலேயே அவள் இதுவரை தனக்கு ஏற்பட்ட வாழ்வின் உச்சநிலை இன்பத்தை அடைந்திருந்தாள். அவ் இன்ப வாழ்வின் கொடுமுடியாயிருந்த கணவன் இப் போது இல்லை; அதன் அடிவாரமாகிய குழந்தைகள் பாசம் இன்னும் மீந்திருந்தது. அவள் உள்ளார்ந்த பாசம் முழுவதும் மடைதிறந்த வெள்ளம்போல அவர்கள் வாழ்வில் பாயத் தொடங்கிற்று.
பெண்மையின் இளமை-பின் தாய்மை-இறுதி யில் கைம்மை ! பிஞ்சாயிருந்த இளமையின் பொலிவு. தாய்மையில் போதாகி, கைம்மையின் துயரிடையே மலர்ச்சியடைந்ததோ என்னும்படி யிருந்தது லாரை னுடைய இப்போதைய தோற்றம். உடலழகு மலர்ச்சி பெற்று அக அழகு மணம் வீசிற்று. கணவன் படத்தை வைத்து அவனை எண்ணி ஏங்கும்போது அவள் முகத்தில் படியும் துயர வரைகள் ; குழந்தை களுடன் குழந்தைபோல அவள் அவர்களைப் பின்பற்றி ஓடியாடி மகிழும்போது அதே முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி வரைகள் ஆகிய இரண்டும் அவள் நூல் நடையின் கலையழகினும் கவர்ச்சியுடையவையாய் இருந்தன. கன்னியர் அழகு காதல் கோயில் புகாதவர் களையே கவரும் தன்மையுடையது. அவள் அழகு காதற் பண்பில்லாமலே மனிதர் உள்ளத்தை மேம் படுத்துவதாயிருந்தது. அவள் அழகு ஒரு பண்பாய், அப்பண்பு ஒரு நெறியாய் மக்களை ஈர்த்து ஆட் கொள்வதாயமைந்தது.
இளமையின் ஆர்வமும் முதுமையின் அறிவமைதி யும், உலகியலாரின் திறமையும் சமயவாணரின் தூய் மையும், நகர வாழ்வின் இன்னயமும் அறிவுத் திறமும் நாட்டுப்புற வாழ்வின் எளிமையும் நேர்மை யும் அவள் வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்று பட்டன; நகரத்தின் உயர்வாழ்வில் அவள் நல்லிடம் பெற்றுப் பொலிய முடியும். ஆனால் அவள் மனம் திறந்தவெளி, தங்குதடையற்ற காற்று, பகலவனொளி, நாட்டுப்புறக் காட்சி ஆகியவற்றையும் நாடிற்று. கணவனிறந்தபின் அவள் நகரத்து வாழ்வை விட்டு நாட்டுப்புறஞ் சென்று வாழவேண்டுமென்றே திட்ட மிட்டாள். இவ்வெண்ணத்துடன் அவள் கணவனின் நகர்ப்புறப் பண்ணை மனைக்குச் சென்றாள். அங்கே அவள் கணவனின் இளவலான திரு. ஜோஸப் சிராம் மோன் தங்கியிருந்தார்.
திரு. ஜோஸப் மணமாகாதவர். 35 ஆண்டுப் பருவத்தினர். லயானின் கோவிலக வட்டத் தலைவ ராக அவர் பணியாற்றி வந்தாராயினும் ஃபிரஞ்சு காட்டுக் கோயிலகத்தாரைப் போலவே அவர் உலகியல் பண்பாடு மிக்கவர்; அறிவாராய்ச்சிகளில் ஈடுபட்ட வர். புத்தியக்கங்களையும் கலைகளையும் அவர் அறிந் திருந்தார். ஆனால் எதிலும் முனைந்து ஈடுபடுவதில்லை. தொல்லையற்று இன்பவாழ்வு நாடும் குணம் அவரிடம் உறைந்திருந்தது. மாது சிராம்மோனிடம் அவர் அன் புடனும் ஆதரவுடனும் பழகினார். அவள் நாட்டுப்புற வாழ்வு பற்றிய கருத்துக்களைக் கேட்டு அவர் உள்ளூரப் புன்முறுவல் கொண்டார். அவள் பருவம், அழகு, கலைச்சுவை, உயர் பண்பு ஆகியவற்றுக்கு நாட்டுப் புறம் விரைவில் சலிப்புத்தரும்; அவளுக்கு ஏற்றது நகர வாழ்வு. அதிலும் சிறப்பாகப் பாரிஸ் வாழ்வே என்பது அவர் எண்ணம். அவள் பண்புக்கேற்ற சூழ் நிலை நகரத்தில் மட்டுமே உண்டு என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டினார். அவர் கூறியதிலும் உண்மையில்லாமலில்லை.ஆனால் மாது சிராம்மோனின் நாட்டுப்புற ஆர்வம் நாட்டுப்புறப் பண்பு காரண மாகவே ஏற்பட்டதன்று; புதிய கலைப் பண்பு காரண மாகவே ரூசோவின் ‘எமிலி’யை அவள் பயிற்சிக் காலத்தில் கற்க மறுத்து விட்டாலும், ரூசோவின் நூல் களைக் கற்காமலேயே அதே வகை இயற்கைக் காட்சி ஆர்வமும் எளிமையார்வமும் அவளிடம் ஏற்பட்டிருந்தது.
திரு. ஜோஸப் சிராம்மோனின் மனையும் உணவு முறையும் வாழ்வும் கலைஞர் கலைத் திறத்துக்குக்கூட நிறைவளிப்பதாகவே இருந்தது. அவர் தோட்டத் திலும் பயனுடைய் காய்கறி பழங்கள் கீரைகளுட ன் நல்ல மலர்களும் நிலவரப் பச்சைச் செடி கொடிகளும் பலவண்ணமும் வடிவமைப்பும் தோன்றச் சிங்காரித்து வைக்கப்பட்டிருந்தன. மாது சிராமமோன் அதில் அடிக்கடி உலவுவாள். சிலசமயம் திரு. ஜோஸப்பின் மட்டக் குதிரை யேறி நாட்டுப்புறக் காட்சிகளைச் சுற்றிப் பார்வையிடுவாள். ஆனால் இப்புத்தனுபவங்களாலும் அவள் முகத்திலுள்ள சலிப்பு மாறவில்லை. அவள் வாழ்வில் ஏதோ குறையிருப்பது போலத் தோன்றியது. அது என்ன என்று அவளுக்கே தெரியவில்லையாயினும், அவள் மனம் எதிலும் பற்றாமல் ஊசலாடியது. குழந்தைகளுடன் விளையாடும் நேரந்தவிர மற்றச் சமயங்களில் அவள் உள்ளம் எதிலும் அக்கரை கொள்ளமுடியாமல் வெறுமை யடைந்திருந்தது. இதுபற்றித் திரு. ஜோஸப் கவலைப்பட்டு அடிக்கடி உசாவி வந்தார்.
‘அம்மணி, இன்று நேரத்தை எவ்வாறு கழித்தீர்கள்’ என்று அவள் உலவி வந்தமர்ந்திருக்கும்போது. திரு. ஜோஸப் கேட்டுப் பேச்சுத் தொடங்கினார்.
“ஐய, தங்கள் அக்கரைக்கு நன்றி. நன்கு அமைதி யாகவே கழித்தேன். அடிலிக்கு எழுத்துக் கற்றுக் கொடுத்தேன். அவள் விரைவில் கற்றுக் கொள் கிறாள். ஆனால் இத்தனை சின்னஞ் சிறு பருவத்தில் அவள் மூளைக்கு மிகுதி வேலை கொடுக்கக்கூடா தென்று நினைத்து விவிலிய நூலின் படங்களைக் காட்டிக் கதைகள் கூறிப் பொழுதுபோக்கிக் காட்டி னேன். அகஸ்டி மட்டும் புத்தகங்களில் அக்கரை கொள்ளாமல் குறும்புகள் செய்கிறான். மரங்களிலெல் லாம் ஏறி இறங்குகிறான் இரு குழந்தைகளையும் விளையாடவிட்டு அவர்களை என் ஓவியச் சட்டத்தில் தீட்ட முயன்றேன். ஆனால் அவர்கள் ஒரு நிலையாக நில்லாததால் படம் ஓடவில்லை. ”
“இப்போது நீங்கள் புத்தகங்களில் மிகுதி கவனம் செலுத்துவதில்லை போலிருக்கிறது. !”
“புத்தகங்களைவிட இயற்கை இங்கே கவர்ச்சி யூட்டுகிறது. இன்றுகூடக் குதிரையேறி நாட்டுப்புறங் களைச் சுற்றிப் பார்வையிட்டேன். நம் நாடு இவ்வளவு அழகிய காட்சிகளுடையது என்பதை நான் இதற்கு முன் எண்ணியதே இல்லை”.
அவள் ஆர்வத்தைக் கண்டு ஜோஸப் வியப்புற்றார்.
“நீங்கள் விரும்பும்போ தெல்லாம் தாங்கள் குதிரையை எடுத்துச் சென்று உலவுங்கள். சில நாளைக்காவது இந்நாட்டுப்புறக் காட்சி உங்களுக்குப் புதுமையுணர்ச்சி தரலாம்.”
“தங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி. ஆனால் நாட்டுப்புறக் காட்சியின் புதுமையுணர்ச்சி எனக்குச் சில நாளைக்குத்தான் இருக்கும் என்று எனக்குத் தோற்றவில்லை. அது எனக்கு என்றும் புத்தம்புது விருந்தாய் இருக்கும் என்பது உறுதி.”
திரு. ஜோஸப்புக்கு இன்னும் வியப்பு மிகுதியா யிற்று. பாரிஸின் உயர்குடியிலும் உயர்மதிப்புப் பெற்ற நங்கை ஏனிப்படிக் கூறுகிறாள் என்று அவர் அறியமுடியவில்லை. இயற்கை விருப்பு ஒரு கலையாக, ஒரு சமயமாக ரூசோவால் மாற்றப்பட்டு வந்ததா யினும், அதன் புத்தார்வத்தில் இன்னும் ஈடுபடவில்லை. மாது சிராம்மோனோ, பள்ளிப் பருவத்தில் ரூசோவின் எமிலியை வாசிக்காது எறிந்து விட்டவளாயினும், ருசோவைப் போலவே இயல்பாக அவ்வுணர்ச்சியுடைய வளாயிருந்தாள். இதனை அறியாத திரு. ஜோஸப் ” தங்கள் நாட்டுப்புற ஆர்வம் தற்போதைக்கு உங்கள் புதுமையுணர்ச்சிக்கு விருந்தாயிருக்கக்கூடும். தங்கள் பண்புக்கு நிலையான விருந்தளிக்க நாட்டுப்புறத் தாலோ அதன்பண்பிலா முரட்டு மக்களாலோ முடியாது. அத்தகைய கன்னிப்புதுமை நகரங்களில், அதுவும் பாரிஸ் நகரம் ஒன்றில்தான் உண்டு” என்றார்.
மாது சிராம்மோன் தாங்கள் கூறுவதில் உண்மை யில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் எனக்குப் பாரிஸ் சலித்து விட்டது. நாட்டுப்புறக் காட்சியை நான் புது விருந்தாக மடடும் விரும்பவில்லை.நிலையாக இங்கேயே தங்க விரும்புகிறேன். இங்கிருப்பதுடன் அன்று. இன்னும் நகரிலிருந்து தொலைவில் ஒதுங்கிச் சிறு குடிசை கட்டி இருந்து, நாட்டுப்புறத்தாள் போலவே வாழ விரும்புகிறேன்.
மாது சிராம்மோனின் மனப்போக்கை அவள் மைத்துனர் அறிந்து கொள்ள முடியவில்லை. இதில் வியப்புக்கு இடம் கிடையாது. ஏனெனில் அவளே அதை இன்னும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் நெடுநேரம் இயற்கையின் காட்சியைக் காண்பவள் போல மொட்டை மாடியில் சென்றிருப்பாள். ஆனால், அவள் கண்கள் எந்தக் காட்சியிலும் ஈடுபட்டு மகிழாமல் வெறித்திருக்கும். அவள் இயற்கையை நுகர்ந்து மகிழ்வதாக எண்ணினாலும், உண்மையில் அவள் எதிலும் மகிழவில்லை. அவள் உடல் நிழலில் உணங்கும் பழங்கள்போல உள்ளூர வாடிற்று. அவளுக்கு அவ்வாட் டமோ அதன் காரணமோ தெரியாது. திரு. ஜோஸப் அதனைக் கவனித்தார். ஆனால், பாரிஸ் இன்பத்தைப் பெறாததனாலேயே அவள் உள்ளம் வாட்டமுறுகிறது என்றும், நாட்டுப்புறக் காற்று அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் மட்டுமே எண்ணினார்.
“புறவெளியில் உள்ள காற்று உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கருதுகிறேன் அம்மணி. அதிலும் இவ்விளவேனில் காலத் தென்றல் புறத்தே இனிது. அகத்தே மெல்லுடல்களை வருத்தும் நச்சுத்தன்மை யுடையது” என்றார். அச்சொற்கள் அவளை ஏனோ திடுக்கிடச் செய்தன. ஆனால், அவள் உள்ளத்தின் போக்கையும் உடலின் நிலையையும் அவளே அறியவில்லை.
திரு. ஜோஸப் கவலையுடன் அவள்மீது தம்சால்வை” களைக் கொண்டுவந்து போர்த்துவார். அடிக்கடி அவளைத் திறந்த மாடியிலிருந் து உள்ளே இட்டுச் சென்று படுக்க வைப்பார். அவள் அவர் அக்க ரைக்கு நன்றி காட்டும் முறையில் அவரைக் கனிவுடன் பார்த்து ‘எனக்கு ஒன்றும் கேடு வராது. நீங்கள் கவலை யற்றிருங்கள். நான் நாட்டுப்புறத்தில் ஒரு குடிசை கட்டி வாழ்ந்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்” என்றாள்.
அவள் போக்குப்படி விட்டு, பின்னரே அவளுக்கு அவள் உண்மைத் தேவையை விளக்கவேண்டும் என்று திரு. ஜோஸப் எண்ணி, அவள் வேண்டுகோளுக்கு இணங்கினார். அவர் ஒத்துழைப்புடன் தொலைவில் அவள் சென்று தனக்கென ஒரு குடிசை கட்டினாள். அவ்வேலை அவள் உள்ளத்துக்கும் உடலுக்கும் சிறிது து. ஓய்வு கொடுத்தது. வீட்டில் நூல்கள், தோட்டச் செடி கள் அழகாக அமைக்கப்பட்டன. அவள் பிள்ளைகளுடன் சிறிது நேரம், நேரம் போக்குவாள். தோட்ட வேலை செய்வாள். அடிக்கடி ஊர்ப்புறம் சுற்றி ஏழை எளியர் வாழ்விற் கலந்து ஊடாடுவாள். பல குடும்பங்களில் வறுமைப் புயலிலிருந்தும் துன்பத்திலிருந்தும் அவள் மூலம் பலருக்கு உதவியும் விடுதலையும் கிட்டியது. அவள் ஊர்த் தெய்வமாக வாழ்ந்தாள்.
வீடு, சுற்றுப்புறம், மக்கள் யாவும் அவள் விருப் பத்துக்கு இணக்கமாகவே இருந்தன.ஆனால், மகிழ்ச்சி அவள் முகத்தில் இல்லை. திரு.ஜோஸப்புக்குத் தம் எண்ணத்தில் பெரிதும் உறுதி ஏற்பட்டது. அவள் அறிவும் அவளும் இத்தகைய தொண்டை நாடியது இயல்பே. இது அவளது பெருந்தன்மைக் குணம். கணவனில்லாத காரணத்தால் அவள் பாரிஸை வெறுப் பதும் இயல்பே. ஆனால், பாரிஸ் அவள் உயிர். அங்கே தான் அவள் வாழ முடியும் என்று அவர் கருதினார்.
மன்னவை, பாரிஸ் நகர வாழ்வு, அவற்றின் செய்தி கள் ஆகியவற்றில் அவர் அவள் கவனத்தைத் திருப் பினார். பாரிஸில் அமையாது நாட்டுப்புறம் நாடிய அவள் உள்ளம் இப்போது தன்னையுமறியாமல் பாரிஸ் நகருக்கு ஏங்கத் தொடங்கிற்று.
அவள் பாரிஸ் நண்பர்கள் நாள் தவறாமல் அவ ளுக்குக் கடிதம் எழுதி வந்தனர். அவள் கடித எழுத் தாண்மைக்கு ஓய்வின்றி அவளும் கடிதங்கள் வரைந்து அனுப்பி வந்தாள். ஒருநாள் வழக்கத்திற்கு மேற்பட்ட அளவுடையதாய், மிகச் சீரிய கலைநயமுடைய தாளில் மலர் மணமும் தூள் மணமும் போட்டியிடும்படி மண மூட்டப்பட்ட ஒரு முடங்கல் வந்தது. திரு. ஜோஸப் அதனை ஆவலுடன் அவள் முன் பிரித்துக்காட்டி வாசித் தார். அது இளவரசர் டி கான்டியின் மாளிகை விருந் துக்கான அழைப்பு.
‘இதனை ஏற்று ஒன்றிரண்டு நாள் பாரிஸில் கழித்து விட்டு வந்தாலென்ன?’ என்று ஜோஸப் நயமாக்க கேட்டார்.
மாது சிராம்மோனிடம் இப்போது எத்தகைய ஆர் வத்துக்கும் இடமில்லாது போயிற்று. உணர்ச்சியற்ற, ஆனால், வெறுப்பற்ற குரலில் “சரி. பழைய நண்பர் களை மீண்டும் பார்க்க எனக்கும் எண்ணமுண்டு”. என்றாள்.
பாரிஸ் இருகைநீட்டி மாது சிராம்மோனை மீண்டும் வரவேற்றது. அவள் இடைக்கால வாழ்வை அவள் நினைத்திருந்தாலும் பாரிஸ் நினைக்கவில்லை. எம்மாறு தலும் இடையே நிகழாதது போலவே பாரிஸின் இன்பக் கவலை அவளை ஒரு படகுபோல் ஈர்த்துக்கொண்டது; அவளும் நாட்டுப்புறத்தில் நாட்டுப்புற ஆர்வத்துடன் ஆனால் உள்ளுணர்வற்று மிதந்ததுபோலவே, அவ் வின்பக் கேளிக்கைகளுள் கலந்தாள். இன்னும் பாரிஸ் உயர் குடி அவள் தலைமையை முணுமுணுப்பின்றி ஏற்றது.
அவள் பாரிஸ் அழகில் தன்னை இழக்க முடிய வில்லை.ஆனால் பாரிஸ் அவள் அழகில் தன்னை இழக்கத் தயங்கவில்லை. அவள் எவருடனும் ஆர்வத்துடன் ஊடாடவில்லை. ஆனால், எல்லாரும் போட்டியிட்டுப் பண்பிற் சிறந்த இத்தலை நங்கையின் நட்பில் ஊடாடினர். அவள் உரையாடலில் புத்தார்வ நங்கையரும் புதுமை யிளைஞரும் மகிழ்ந்தனர்.
அவ்வாழ்க்கைப் போக்கை மாற்றிய புது அனுபவம் இவ்விருந்து மாளிகையிலேயே தொடங்கிற்று. உயர்குடியாளரிடையே உயர்குடியாளராயினும், அவர் களைத் தன் புதமைப் பாடல் மூலம் தாக்கியும் அதே சமயம் கவர்ச்சி செய்தும் அவர்கள் வாழ்வில் இடம் பெற்ற கலைஞன் ஆக்டேவ் மூரட் அவ்விருந்தினரில் ஒரு விருந்தினனாக வந்திருந்தான். எழுத்தாண்மைக் கலைநங்கையும் பாடற்கலையன்பனும் இங்கே மோதிக் கொண்டனர்.
– தொடரும்…
– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.