கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 10,670 
 
 

மதுரையில் உள்ள உசிலம்பட்டியின், சக்திவாய்ந்த தாய் கருமாரியம்மன் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா, என் பெயர் கோவிந்த ராஜன்.

“இன்று நானும், இதற்கு முன் எங்கள் மூதாதையர்களும் பரம்பரை, பரம்பரையாக, தாய் கருமாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறோம்”.

“திருவிழா வருவதற்கு இன்னும் நாற்பது நாட்கள் மட்டுமே உள்ளது” “திருவிழாவிற்கு ஒரு 20 நாட்களுக்கு முன்னரே நிர்வாகிகள் திருவிழா செலவிற்காக வசூல் செய்த பணத்தை கேட்க ஆரம்பித்து விடுவார்கள்”. அதற்குள் அவர்கள் வசூல் செய்து நம்மிடம் கொடுத்த பணத்தை தயார் செய்து விட வேண்டும், அவர்கள் கேட்கும் போதெல்லாம் தர வேண்டும், அப்போது தான் அவர்களால் திருவிழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய முடியும்” .

ஊர் மக்களுக்கு தெரியாமல் அடகு வைத்த அம்மனின் நகைகளையும், மீட்டு கொண்டு வந்து நம் வீட்டில் வைத்து விட வேண்டும். பாதுகாப்பு கருதி நம் வீட்டில் வைத்துள்ள அம்மனின் நகைகளை திருவிழாவிற்கு முந்தைய நாள் ஊர் மக்கள் முன்னிலையில் கோவில் குருக்களிடம் தருவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. நம் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இந்த இரண்டையும் இருபது நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே, என் வீட்டு காலண்டரில் தேதியை பார்த்தேன்.

கோவிலுக்கு என சொத்துக்கள் நிறைய இருந்தாலும் அவற்றை வைத்து அனுபவித்து வருபவர்கள் கோவில் செலவுகளுக்கு தேவையான நேரத்தில் தேவையான பணத்தை தருவதில்லை. கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புது விதமான காரணங்களை கூறுவார்கள்.

எனவே கோவில் திருவிழாவிற்கு ஊர் மக்களிடம் வசூல் செய்து தான் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை சுமார் 10 லட்சம் வரை வசூலானது.

எங்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்களாக வாரிசுகள் இல்லாத காரணத்தாலும், என் மாமியார் கடந்த வருடம் காலமாகி விட்டதாலும், என் மனைவி யசோதாயவின் 10 வயதுள்ள தம்பி சின்னதுரையை எங்களுக்கு தத்து கொடுப்பதாக என் மாமனார் கூறினார். அவனை தத்தெடுக்க எனக்கு விருப்பமில்லை. என் மனைவியின் வற்புறுத்தலால் சின்னதுரையை தத்தெடுக்க ஒப்புக்கொண்டேன். நாங்கள் அன்று முதல் இன்று வரை எங்களுக்கு பிறந்த பிள்ளையை போல் தான் அவனை வளர்த்து வருகிறோம். இப்போது அவனுக்கு வயது 25.

சின்னதுரை கல்குவாரி ஏலம் எடுக்க 50 இலட்சம் வேண்டும் என என் மனைவியிடம் கேட்டுள்ளான். என் மனைவி என்னிடம் கேட்டாள். இப்போது நம்மிடம் அவ்வளவு பணம் இல்லையே…! ஏன் உனக்கு தெரியாதா? என்றேன். அதற்குள், சின்னதுரை என்னிடம் வந்து கோவில் திருவிழாவுக்கு வசூலித்த பணம் பத்து இலட்சம் உங்களிடம் தானே இருக்கு அதை கொடுங்கள், மிச்சத்தை எங்கேயாவது வாங்கி கொடுங்கள், பத்து நாளைக்குள்ள திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றான்.

“இது என்ன புது பழக்கம், நான் இதுவரை யாரிடமும் கை நீட்டி கடன் கேட்டதே யில்லை..!, கேட்கவும் மாட்டேன்., என் கெளரவம் என்னாகும் என்று கோபமாக கூறினேன்”.

“சரி யார்கிட்டேயும் கடன் கேட்க வேண்டாம்…! நம்ம வீட்டில இருக்கிற அம்மன் வைர நகைகளை அடகு வைச்சு பணம் கொடுங்க என்றான்”.

“என்னது…! அம்மனின் நகைகளை அடகு வைப்பதா? டேய்….. யாருக்காவது தெரிந்தால் என்ன ஆகும்?… உனக்கு ஏண்டா புத்தி இப்படி போகுது…! என்றேன்”.

“பத்து தலைமுறையா கோவில்ல வைக்கிறது பாதுகாப்பு இல்லன்னு தான் நம்ம வீட்டில பாதுகாப்பாக வச்சிருக்கோம்”.

“அத போய் அடகு கடையில் வைக்க சொல்றியே? அந்த மாதிரி அடகு வைச்சு அந்த பணத்தில தான் தொழில் ஆரம்பிக்கணுமா? சொல்லு….”

“அப்படியாப்பட்ட தொழில் நமக்கு வேண்டாம்டா….” என்றேன்.

அதனால் கோபம் கொண்டு கிளம்பி போன சின்னதுரை இரண்டு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை. அவனை காணாமல் என் மனவி தவித்த தவிப்பு எனக்கு தான் தெரியும். அவளுக்கும் அம்மனின் நகைகளை அடகு வைத்து சின்னதுரைக்கு பணம் கொடுக்க, அவள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவள் கருமாரியம்மனின் தீவிர பக்தை’.

பின்னர் எங்களை சமாதானம் படுத்திக் கொண்டு அவனை 5 நாட்களாக பல இடங்களில், பலரிடம் கேட்டு தேடி ஒரு வழியாக கண்டுபிடித்து, அவன் கேட்ட படியே பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அவனை பார்த்த பின், அன்று தான் என் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது .

அம்மனின் நகைகளை அவனிடமே கொடுத்து வெளியூரில் அடகு வைத்து பணத்தை எடுத்துக் கொள்ள சொன்னோம். கையிருந்த வசூல் பணம் பத்து இலட்சத்தையும் கொடுத்தேன்.

மீண்டும், நான் சின்னதுரையிடம், இது கோவில் சொத்து. இன்னும் 35 நாட்களில் திருவிழா வருகிறது. அதற்குள் அடகு வைத்த நகைகளையும், திருவிழாவிற்கு வசூலித்த பணம் பத்து இலட்சத்தையும் கொண்டு வந்து தந்து விட வேண்டும் என்று கூறினேன். அதற்கு சின்னதுரை பத்தே நாட்களில் நான் கூறியபடியே கொண்டு வந்து தந்து விடுகிறேன் என கூறிவிட்டு சந்தோஷமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றான்.

“அவன் சென்னை சென்று 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது” . போன் செய்தால் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. அவன் வழக்கமாக சென்னை சென்றால் அவனுடன் கல்லூரியில் படித்த நண்பன் குமார் வீட்டில் தங்குவதாக கூறுவான். அவன் விலாசம் என்னிடம் உள்ளது. ஆனால் போன் நெம்பர் தான் இல்லை. அவன் எங்கே இருக்கிறான் என ஒரு தகவலும் தெரியவில்லை. நாங்களும் அவன் சென்னையில் எந்த இடத்தில், யாருடன் சேர்ந்து கல் குவாரி ஏலம் எடுக்க போகிறான் என்று எதுவும் கேட்கவில்லை.

பணம் எங்கே இருக்குன்னு தெரியல…? நாளை மறுநாள் காலை திருவிழா நிர்வாகிகள் சுமார் இரண்டு லட்சம் வேண்டும் எனவும் அதனை காலை 10.00 மணியளவில் வந்து வாங்கிக் கொள்வதாக கோவில் ஊழியர் ஒருவர் மூலம் தகவல் சொல்லி அனுப்பியுள்ளார்கள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. என்னுடைய 20 ஏக்கர் நிலப்பத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு நில அடமான வங்கிக்கு சென்றேன். வங்கி மேலாளரை பார்த்து என் நில பத்திரங்களை அவரிடம் கொடுத்து இந்த நிலங்களை அடமானமாக வைத்து கொண்டு எனக்கு பத்து இலட்சம் தாருங்கள், அவசரமாக வேண்டும் என்று கேட்டேன். அவர் உடனே அந்த அளவுக்கு பணம் இங்கில்லை. மற்றும் தங்களின் நிலங்கள், தங்களுக்கு சொந்தமானது தான் என்று கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், தங்களின் ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் எடுத்து வாருங்கள். அதனை எங்களின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்த்த பின்னர் தான் அடமானம் வைத்துக் கொண்டு பணம் தர முடியும். இந்த process முடிய சுமார் ஒரு 15 நாட்கள் வரையிலும் ஆகலாம் என்றார் .

அய்யா, நீங்கள் கேட்ட அத்தனையையும் இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் கொண்டு வந்து தருகிறேன். இந்த சொத்துக்கள் அனைத்தும் என் தந்தையார் எனக்கு எழுதி வைத்ததுதான் . நான் எங்கள் ஊர் உசிலம்பட்டியில் உள்ள தாய் கருமாரியம்மன் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா. மிகவும் அவசரம். எனக்கு நாளை காலைக்குள் பத்து இலட்சம் வேண்டும். அதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்றேன்.

வங்கி மேலாளர் சற்று யோசனை செய்தபடியே பதட்டமான என் முகத்தை பார்த்தார். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்” , என்னுடைய அவசர தேவை என் முகத்தில் அவருக்கு தெரிந்தது போலும்.

“பின்னர் மேலாளர் என்னைப்பற்றி யாரிடமோ ஆங்கிலத்தில் விசாரித்தார். சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக பேசி கொண்டிருந்தார்”. பின்னர் முகத்தில் புன்னகையுடன், “தப்பா எடுத்துக்காதீங்க .. கோவிந்தராஜன்” , உங்க அவசர தேவையை கருதி, “உங்களைப் பற்றிய விவரங்களை கேட்க தான், உங்கள் ஊரில் உள்ள என் நண்பனுக்கு தான் போன் செய்தேன்” . “உங்களுக்கும் தெரிய வேண்டி தான் தங்கள் எதிரிலேயே என் நண்பனுடன் பேசினேன் என்றார் “.

அய்யா, எனக்கு தெரியாமல் என்னைப் பற்றி விசாரித்திருந்தாலும், நான் தவறாக எண்ண மாட்டேன்….! என் அவசர நிலைமை அப்படி…! “என்னைப்பற்றி எனக்குத் தெரியும், “என் குடும்பத்தை பற்றியும், எங்கள் ஊரில் உள்ள அனைவரும் நன்கு அறிவர்” என்றேன்.

எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு நில அடமான கடனை வழங்க ஏற்பாடு செய்கிறேன். ஐந்து ஏக்கருக்குண்டான நிலப்பத்திரங்களை மட்டும் தாருங்கள். அந்த நிலத்தின் வழிகாட்டு மதிப்பினை எங்கள் வங்கியின் சட்ட ஆலோசகர் மூலமாக கேட்டு அவரின் ஒப்புதலுடன் உங்களுக்கு இன்று மாலைக்குள் பணம் கிடைக்க வழி செய்கிறேன் என்றார் வங்கி மேலாளர்.

அவர் கேட்ட ஆவணங்களை எடுத்து வருவதாக கூறி கிளம்பினேன். ஆனால் வங்கி மேலாளரோ இதற்காக தாங்கள் மீண்டும் தங்களுருக்கு சென்று வர வேண்டாம். நான் கேட்ட ஐந்து ஏக்கருக்குண்டான நில பத்திரங்களை மட்டும் கொடுங்கள், மற்றவற்றை நீங்கள் நாளை கொண்டு வந்து தாருங்கள். அமைதியாக வெளியில் உள்ள சோபாவில் அமருங்கள், எங்கள் அலுவலர் தங்களிடம் கூறும் இடங்களில் மட்டும் தங்களின் கையொப்பம் இடுங்கள்., மற்ற வேலைகள் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறினார. பின்னர் கடன் தருவதற்கான . வேலைகளை தொடங்கினார்.

மாலை 4.00 மணி ஆயிற்று. மேலாளர் என்னை அவர் அறைக்கு அழைத்தார். கோவிந்தராஜன் தாங்கள் கேட்டபடியே பத்து இலட்சம் தயாராகிவிட்டது. தாங்கள் இந்த பணத்தை எப்படி கொண்டு செல்ல போகிறீர்கள் என கேட்டார். பேருந்து மூலமாக தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே வேண்டாம்? கோவிந்தராஜன், இப்போதெல்லாம் நிலைமை சரியில்லை…..! நான் ஒரு வாடகை கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அவர் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்றார். அவரின் பண்பையும், அன்பையும் கண்டு அவரது கையைப் பிடித்து மிகவும் நன்றி அய்யா என்றேன்.

பத்து இலட்சம் பணத்துடனும், மீதமுள்ள நிலங்களின் பத்திரங்களுடன் நலமாக வீடு வந்து சேர்ந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் வங்கி மேலாளருக்கு போன் செய்து மீண்டும் ஒரு முறை நன்றி கூறினேன்.

என் மனைவியிடம் வங்கியில் நடந்தவைகளை கூறினேன். ” என் தாய் கருமாரியம்மன் நம்மை கை விட மாட்டாள்” என்று என்னை பார்த்து மகிழ்ச்சியுடன் கண் கலங்க கூறினாள்.

மறுநாள் கோவில் திருவிழா நிர்வாகிகள் என்னிடம் வந்து நாங்கள் கூறி அனுப்பிய படி இரண்டு இலட்சம் போதாது போல் தெரிகிறது, எனவே ஐந்து இலட்சம் வேண்டும் என்று கூறி வாங்கி சென்றனர். வசூல் செய்த பணத்திற்கு ஈடான பணத்தை தாய் கருமாரியம்மன் அருளால் தயார் செய்து விட்டோம். அம்மனின் வைர நகைகளுக்கு என்ன செய்வது….? என என் மனைவி என்னிடம் கேட்டாள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை .

திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் அம்மனுக்கு காப்பு கட்டிவிட்டால் வெளியூர்களுக்கு செல்ல முடியாது.

“திருவிழாவிற்கு இன்னும் 10 நாட்கள் தானே உள்ளது, ஒன்றும் புரியவில்லை என கவலையில் ஆழ்ந்திருந்தேன்”.

“ஏங்க நான் ஒன்னு சொல்லவா? என கேட்டாள் என் மனைவி யசோதா”. என்ன? என்றேன்.

உங்க கிட்ட நம்ம சின்னத்துரையோட சென்னை நண்பர் குமாரோட விலாசம் இருப்பதாக சொன்னீங்களே..!.. அங்கே நாம நேர்ல போய் விசாரிக்கலாமே… என்றாள், அப்படியே தன் மகனையும் பார்க்கலாமே என்ற எண்ணத்துடன்….!

“அதுவும் சரிதான்..! சரி இன்னைக்கே கிளம்புவோம், மணி 11.00 தானே ஆகுது.. உனக்கும், எனக்கும் 2 நாளைக்கு தேவையான துணியை எடுத்துக்கோ என்றேன்”. மகனை பார்த்து விடுவோம் என்ற சந்தோஷத்தில், அரை மணி நேரத்தில் தயாராகிவிட்டாள். நானும் செலவுக்கு கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு வீட்டை நன்கு பூட்டி விட்டு, பக்கத்து வீட்டில் உள்ள என் நண்பர் சங்கரலிங்கத்திடம் சென்னைக்கு சென்று 2 நாளில் வந்து விடுவதாக கூறி விட்டு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டோம்.

மறுநாள் விடியற்காலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்த ஆட்டோகாரரிடம் குமாரின் விலாசத்தை காண்பித்து ஆட்டோ வருமா? என்று கேட்டேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை? அய்யா… இங்கிருந்து என் ஆட்டோவில் சென்றால் குறைந்தது ரூ.600 ஆகும். தங்களுக்கு வீண் செலவு வேண்டாம். எதிரில் உள்ள பஸ் நிறுத்தம் உள்ளது. அங்க போயி பக்கத்தில இருக்கிற கடையில நுங்கம்பாக்கம் போகணும் பஸ் நெம்பர் கேட்டு பஸ்ஸில ஏறி , வள்ளுவர் கோட்டத்தில இறங்கணும் சொல்லி டிக்கெட் வாங்கி அங்கே இறங்கி, அங்க இருக்கிற ஆட்டோ காரர் கிட்ட இந்த விலாசத்தை காட்டுங்க, அவர் இந்த விலாசத்திற்கு எப்படி போகணும்ன்னு வழி சொல்லுவார். நீங்க வள்ளுவர் கோட்டத்தில் இருந்து 5 நிமிஷத்துல நடந்தே போயிடலாம் என்றார். தம்பி இவ்வளவு நல்லவனா இருக்கியே …! நீ எந்த ஊரு என்றார். நான் சென்னைதாங்க… என்றார். அவரின் நல்ல மனதை பாராட்டினேன். பரவாயில்லிங்க.. இருக்கட்டும் என்றார் ஆட்டோக்காரர். சென்னையில ஒரு சில ஆட்டோகாரர்கள் அடாவடி செய்வாங்க என்று கேள்வி போட்டிருக்கேன். ஆனால் உன்ன போல நல்லவர்களும் இருக்கிறாங்க போல என்றேன். அவரும் சிரித்துக்கொண்டே ஆமாங்க… என்றார் தன்னடக்கத்துடன்.

அவர் கூறியபடியே எதிரில் இருந்த பஸ் நிலையம் வந்து விசாரித்து பஸ் ஏறி, வள்ளுவர் கோட்டத்தில் இறங்கி, அங்கிருந்த ஆட்டோகாரரிடம் குமாரின் விலாசத்தை காண்பித்து வழி கேட்டு ஒரு வழியாக வீட்டை கண்டுபிடித்தேன்.

வீட்டில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் குமார் பற்றி கேட்க, குமார் தன் மகன் தான் என்றும் தன் பெயர் சதாசிவம் என்று கூறினார். நான் எங்களைப் பற்றி அவரிடம் கூறி என் மகன் சின்னதுரையை பார்க்க வேண்டி சென்னை வந்ததாகவும் கூறினேன்.

உடனே அவர் சற்று யோசித்து விட்டு நீங்கள் முதல்ல குளிச்சிட்டு சாப்பிடுங்க, அதுக்குள்ள என் மகன் வந்துடுவான் அவன் கிட்ட பேசுங்க என்றார். நானும் யசோதாவும் ஒருவர் பின் ஒருவராக குளித்து விட்டு வந்தோம். டிபன் கொடுத்தார் அவர் மனைவி. சாப்பிட்டு முடித்தோம். அவர் கூறியபடியே அவர் மகன் குமார் வந்தான். குமாரிடம் எங்களை பற்றி கூறினார் அவர் தந்தை. அவன் அவர் தந்தையை பார்க்க, நான் குமாரை பார்த்து என்ன தம்பி? என்றேன்.

“அது வந்து…. எப்படி சொல்றதுன்னு தெரியல… அதான் என்றான் குமார்”. “நான் அவன் தந்தையை பார்த்து அய்யா உங்களுக்கு தெரியுமா…? என்னன்னு சொல்லுங்க என்றேன்” . “என் மனைவி குமாரை பார்த்து நீ எனக்கு என் பிள்ளை சின்னதுரை மாதிரி தான் சொல்லுப்பா என்றாள்” .

நீங்க சின்னதுரையின் அம்மாவா? நீங்க இறந்து போயிட்டாதா சொன்னானே..!? என்றான் குமார். நான் அவனுடைய கூட பிறந்த அக்கா. அவனை அவனது 10 வயதில் நாங்கள் தந்து எடுத்துக் கொண்டோம் என்றாள் என் மனைவி.

சதாசிவம் நீங்க பயப்படாதீங்க…! என்றார். “நடந்ததை அப்படியே சொல்லு குமார் என்றார் அவன் தந்தை”.

” சின்னதுரை தங்களிடம் பணம் பத்து இலட்சம் வாங்கியது, நீங்கள் மேற்கொண்டு தேவையான பணத்துக்கு அம்மனின் நகைகளை அடகு வைத்து பணம் எடுத்துக்கொள்ள சொன்னது, தவிர பத்து நாட்களில் தாங்கள் இந்த பணத்தை திருப்பி கொண்டு வந்து தங்களிடம் தந்து விட வேண்டும் என்று தாங்கள் கூறியது அனைத்தையும் என்னிடம் சொன்னான்”.

“நான் இது போன்று அம்மன் நகைகளை அடகு வைத்து தொழில் ஆரம்பிக்கணுமா …? தவிர உன்னால் எப்படி பத்து நாட்களில் திருப்பி தர முடியும் என்றும் கேட்டேன்….!

அதற்கு அவன் யார் திருப்பி தர போவது? அதெல்லாம் முடியாது..! எனக்கு வேலை ஆக வேண்டும் அதனால் அப்படி கூறினேன் என்று கூறினான். அது மட்டுமல்ல அவன் அம்மனின் நகைகளை அடகு வைக்கவில்லை..! அதிக பணம் தேவை பட்டதால் விற்று விட்டான் என்று கூறினான் குமார்.

“நானும் என் அப்பாவும் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அதனால் என்னிடம் கோபித்து கொண்டு போய் விட்டான்”. அவன் 5 நாட்களாக இங்கே வருவதேயில்லை என்றான் குமார். “இதை கேட்ட என் மனைவி மயங்கி விழுந்தாள், ஒரு வழியாக என் மனைவியின் மயக்கத்தை தெளிய வைத்து உட்கார வைத்தோம்”.

சின்னதுரையை வேறு எங்கே பார்ப்பது என கேட்டாள் என் மனைவி. அவன் ஏலம் எடுத்த கல்குவாரி எனக்கு தெரியும் என்றும் அவனை இங்கே வரவழைத்து பேசலாம் என்று குமார் கூறினான். நீங்கள் இங்கு வந்திருப்பதைக் கூறினால் வர மாட்டான். எனவே வேறு ஏதாவது காரணம் கூறி அழைத்து வருவதாக கூறி சென்றான் .

குமார் கூறியபடியே சின்னதுரையை அழைத்து வந்தான். எங்கள் இருவரையும் அங்கு பார்த்ததும் அப்படியே.. வெல வெலத்து போனான். குமாரை பார்த்து முறைத்தான்.

“சின்னதுரை எப்படிடா இருக்கே? ஏண்டா ஊருக்கு வரல? என்று அழூதபடியே கேட்டாள் யசோதா” . அவன் முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டு உங்களை யார் இங்கு வர சொன்னது? பணம், நகை எல்லாம் திருப்பி தர முடியாது. ஊருக்கு போங்க என்றான் மிரட்டலாக…!

“டேய் சின்னதுரை யார் கிட்ட? என்ன பேசறே… ? தெரிஞ்சு தான் பேசறையா? என கேட்டாள் யசோதா” .

இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்..! “இப்போ பணமோ, நகையோ என்கிட்ட இல்லை. நீங்க கொடுத்த பணம் போதல..! அதனால நகைகளை வித்துட்டேன்…! உங்களால என்ன ஒண்ணும் பண்ண முடியாது” . “உங்க கிட்ட தான் நிறைய நிலம் இருக்குதில்ல, அத வித்து அம்மனுக்கு நகை செஞ்சு போடுங்க” என்று சின்னதுரை கூற எனக்கு வந்த கோபத்தில் ஓடிச் சென்று பளார் என அவன் கன்னத்தில் அறைந்தேன்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சின்னதுரை நீ யாருய்யா என்ன அடிக்கறதுக்கு? நான் திருப்பி அடிச்சேனா… நீ தாங்க மாட்டே…ஓடி போயிடு ஊரை பாக்க என்று பலமாக கத்தினான்.

என் மனைவி தடுமாறி எழுந்து சின்னதுரையை நோக்கி போனாள். டேய்.. அவரைப் பார்த்து என்னடா கேட்டே? நீ யாருன்னா….? நன்றி கெட்டவனே… பத்து வயசிலிருந்து உன்னை தன் சொந்த பிள்ளை மாதிரி எப்படி எல்லாம் வளர்த்தாரு…? நீ கேட்டதெல்லாம் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொடுத்தாரு…

நம்ம அப்பா இருந்திருந்தா கூட உனக்கு இந்த மாதிரி செல்லம் கொடுத்திருக்க மாட்டாருடா….நீ தொழில் ஆரம்பிக்கறதுக்கு பணம் வேணும்ன்னு கேட்டு வாங்கி வந்தியே, போதா குறைக்கு அவங்க 10 தலைமுறையா பாதுகாத்து வந்த அம்மன் நகை வேற கொடுத்தாறே… அவரை பார்த்தா யாருன்னு கேட்கறே? அவரை நீ அடிப்பியா? எங்கே அவர் மேல் கையை வை பார்க்கலாம்..?!

வெட்டிடுவேன் அந்த கையை, உன்னை போய் தத்து எடுத்து வளர்த்தோம் பாரூ… தெருவில் போற நாயை எடுத்து வளர்த்திருந்தா கூட நன்றியோடு இருந்திருக்கும்…! என்றாள் யசோதா.

என்ன ஓவரா பேசினே போற… இதோ பார் என் கிட்ட பணமோ நகையோ இல்ல. உங்களால என்ன முடியுமோ செஞ்சுக்கோங்க…!முதல்ல இரண்டு பேரும் இடத்த காலி பண்ணுங்க என்று கோபத்துடன் சத்தமாக பேசினான் சின்னதுரை.

சதாசிவம் சின்னதுரையை பார்த்து தம்பி நீ பேசறது கொஞ்சம் கூட நல்லாயில்லை அவங்க பணத்தையும் , அம்மனின் நகைகளையும் திருப்பி கொடுக்கிற வழியை பாரு என்றார்.

டேய் குமார் உங்க அப்பாவை அவர் வேலையை மட்டும் பார்க்க சொல்லு, வீணா என் விஷயத்தில் தலையிட வேண்டாம்னு சொல்லு என்றான் சின்னதுரை.

அதற்கு சதாசிவம், இங்க பாருங்க கோவிந்தராஜன், இவன் பேசறது நடத்தை எதுவுமே சரியில்லை. பேசாம இவன் மேல போலிஸ்ல்ல ஒரு கம்பளையிண்ட் கொடுத்திடலாம் என்றார்.

அதற்கு சின்னதுரை கம்ளையிண்ட்டா… என் மேலேயா…? தாராளமா கொடுங்க. வசூல் செய்த பணத்தையும், அம்மனின் நகைகளையும் வச்சுன்னு இருந்தது அவரு. இது அந்த ஊருக்கே தெரியும். இப்ப என்கிட்ட கொடுத்தேன்னு சொன்னா இவரைத்தான் முதல்ல கைது பண்ணுவாங்க. ஊர்க்காரங்க இவரைத்தான் காரி துப்புவாங்க என்றான் கூறி சிரித்தான் சின்னதுரை.

டேய், டேய், வேணாம்டா, இன்னும் ஒரு வார்த்தை அவரை பத்தி தப்பா பேசினே, அவ்வளவு தான். உன்னை வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு வேணா போவேண்டா…! இனிமேல் எங்கள் முகத்தில் முழிக்காதே…! நீ செத்து போயிட்டாத நினைச்சிக்கிறோம் போடா…. வெளியே போடா….. நன்றி கெட்டவனே… எனக் கூறி கொண்டே மீண்டும் மயங்கி விழுந்தாள் யசோதா.

டேய் குமார் இனிமேல் என்னை தேடி வராதே… வந்தா நீ உன் வீட்டுக்கு திரும்ப மாட்டே…. என்று சொல்லிக் கொண்டே வெளியே போனான் சின்னதுரை.

யாருக்கும் எதுவும் புரியவில்லை. அவள் மயங்கியபடியே இருந்தாள்.

சதாசிவம் என்னிடம் வந்து கோவிந்தராஜன் இப்ப என்ன பண்ண போறீங்க? என்றார். நான் அவரிடம் என் நிலத்தை அடமானம் வைத்து பத்து இலட்சம் தயார் செய்து விட்டேன். ஆனால் அம்மனின் நகைகளுக்கு தான் எப்படி செய்வது?! என்று தெரியவில்லை என்றேன்.

திருவிழாவிற்கு இன்னும் 9 நாட்கள் தான் உள்ளது. நான் ஊருக்கு கிளம்ப வேண்டும். 2 நாட்களில் வந்து விடுவதாக கூறி விட்டு வந்தேன் என்றேன்.

யசோதா சற்று மயக்கம் தெளிந்து எழுந்தாள். தண்ணீர் கேட்டாள். ஏங்க நாம ஊருக்கு போலாமா? என்றாள். நான் சரி என்றேன்.

ஊருக்கு போய் அம்மனின் நகைகளுக்கு என்ன செய்வீர்கள்…? என்று கேட்டார் சதாசிவம். உங்களிடம் அம்மன் நகைகளின் போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். யோசித்தேன்… எதுக்கு கேட்கறீங்க? என்று என் மனைவி கேட்டாள். சொல்றேன்…! போட்டோ இருந்தா காட்டுங்க என்றார் குமாரின் தந்தை.

ஏங்க போன வருஷம் திருவிழாவிற்கு நகைகளை கொடுக்கற்துக்கு முன்னாடி கோயிலின் புது குருக்கள் உங்க கிட்ட வந்து அம்மனின் நகைகளை போன்ல ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு பிறகு கொடுங்கள் என்றார். நீங்க கூட இது என்ன புது பழக்கம்னு கேட்டீங்க… அதுக்கு அவரு உங்க கிட்ட திருப்பி கொடுக்கும் போது சரி பார்க்க வசதியாக இருக்கும்னு சொன்னரே…! ஆமாம் இப்போ தான் நினைவுக்கு வருது என்று கூறி விட்டு….

என் போனை சதாசிவமத்திடம் கொடுத்தேன். போனை குமாரிடம் கொடுத்து தேட சொன்னார். திருவிழா எந்த தேதியில் நடந்தது என்று குமார் கேட்டான். தேதி கவனம் இல்லை தம்பி, போன வருஷம் ஆவணி மாதம். ஆவணி மாதம்னா ஆகஸ்ட் , செப்டம்பர் -ல பார்க்கலாம் என்று கூறி போட்டோக்களை பார்த்து கொண்டே வந்தான். ஆம் இதோ இருக்கு என்று என்னிடம் போனை தந்து இதுவா பாருங்கள் என்றான்.

ஆமாம்பா இவைகள் தான் என்று கூறி என் மனைவியிடமும் காட்டினேன். அவளும் ஆமாம் இவைகள் தான் என்றாள்.மொத்தம் ஆறு போட்டோக்கள் இருந்தன. சதாசிவம் போட்டோக்களை பார்த்தார். கோவிந்தன் சார் இப்ப இதே நகைகளை செய்வதாக இருந்தால் எவ்வளவு பணம் வேண்டும் என்றார். நான் என் மனைவியை பார்க்க அவள் ஏன்? எதற்கு? என்றாள். சுமாரா சொல்லுங்க என்றார் சதாசிவம்.

சுமாரா ஒரு 50 இலட்சம் வரை ஆகலாம் என்றேன். சரி உங்களிடம் இப்போ 50 இலட்சம் இருக்கா? என்று கேட்டார். நான் “பத்து இலட்சத்திற்கே என் 5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து பணம் ஏற்பாடு செய்ததை காலையில் தானே உங்ககிட்ட சொன்னேன்” என்றேன்.

ஆமாம் சொன்னீங்க, இல்லன்னு சொல்லலை என்ற சதாசிவம், அவர் மனைவியிடம் எல்லோருக்கும் சாப்பாடு தயார் பண்ண சொன்னார். இல்லிங்க வேணாம் , நாங்கள் ஊருக்கு கிளம்பறோம் என்றேன். அவசர படாதீங்க… கொஞ்சம் பொறுமையா இருங்க. நீ சாப்பாடு ரெடி பண்ணும்மா என்றார்.

தப்பா எடுத்துக்க கூடாது? நான் ஒரு யோசனை சொல்லவா? என்று பீடிகை போட்டார் சதாசிவம்.

சரி, சொல்லுங்க என்றேன்…! எனக்கு தெரிந்த நகை செய்யும் ஆசாரி ஒருவர் இருக்கிறார். அவரிடம் இந்த போட்டோவை காட்டி கவரிங்கில் அமெரிக்கன் வைர கற்களைக் கொண்டு செய்ய சொல்லலாம். இந்த திருவிழாற்கு இதை வைத்து சமாளியுங்கள். அடுத்த திருவிழா வருவதற்குள் பணம் ஏற்பாடு செய்து இவரிடமே பழைய நகைகளை போலவே தங்கத்தில் ஒரிஜினல் வைரங்களை வைத்து செய்து விட்டு, இதனை வேறு ஏதாவது கோவிலுக்கு இலவசமாக தந்து விடுங்கள் என்றார்.

அய்யா… அம்மனை ஏமாற்றலாமா? அது தவறான செயலாகுமே. தவிர கோவில் குருக்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் தெரிந்தால் ஊரில் நான் கௌரவமாக வாழ முடியாதே…?அதை விட நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்றேன்.

என் மனைவியிடம் நீ என்னம்மா சொல்கிறாய் என கேட்டார் சதாசிவம். அவள் என்னை பார்த்தாள்.

நான் இன்னொன்று சொல்லட்டுமா? அம்மனின் நகைகள் உங்களின் மூதாதையர் கொடுத்தது என்று கூறீனீர்கள். அதனால் கவரிங் நகைகளை பார்த்தால் கூட அவர்களுக்கு சந்தேகம் வராது. தவிர நகைகளை கோயில் குருக்களிடம் தரும் போது தங்களுக்கு எந்த விதமான பதட்டமோ தயக்கமோ வர கூடாது. தங்களை காப்பாற்ற எனக்கு இந்த வழியை விட்டால் வேறு வழி தெரியவில்லை என்றார் சதாசிவம்.

என் மனைவியின் முகத்தில் சற்று பிரகாசம் தெரிந்தது.

ஏங்க , அய்யா சொல்ற மாதிரி நம்ம கௌரவத்தை காப்பாற்ற கவரிங் நகைகளை செய்து திருவிழா நடத்திடலாம்.

திருவிழா முடிந்தவுடன் நம் எல்லா நிலங்களையும் விற்று விடலாம். அந்த பணத்தை கொண்டு இவர் சொல்வது போல் அம்மனுக்கு தங்கத்தில் பழைய நகைகளை போல் நல்ல ஒரிஜனல் வைரம் வைத்துசெய்து விடலாம் என்று கூறினாள். அந்த அம்மனே சொல்வது போல் இருந்தது, என் மனைவியின் ஆறுதலான வார்த்தைகள்.

அய்யா இப்ப நீங்க சொல்றது போல செய்வதற்கு எவ்வளவு தேவைப்படும்? தவிர உங்களுக்கு தெரிந்த நகை ஆசாரி தங்கள் மீது ஏதாவது சந்தேகப்பட்டா என்ன செய்வது என்றேன்.

கோவிந்தராஜன் நீங்க அத பத்தி கவலைப் படாதீங்க, நான் பார்த்துக் கொள்கிறேன். நாம போய் நகை ஆசாரியை பார்த்து எவ்வளவு தேவைப்படும் என்று கேட்கலாம். புறப்படுங்கள் என்றார். நீங்க அவரிடம் எதுவும் பேச வேண்டாம். நான் பேசுகிறேன். நீங்க கூட வந்தால் மட்டும் போதும், என்று சதாசிவம் கூற எதற்கும் நாம் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறினால் நாளைக்கு நாம் ஒரிஜினல் செய்யும் போது அவர் எதுவும் கேட்க கூடாதல்லவா? என்றேன். நீங்க வாங்க … என்றார் சதாசிவம்.

சதாசிவம் நகை ஆசாரியை பார்த்து இவர் என் நண்பர், என்று கூற ஆரம்பித்தார்….. உடனே அவர் என்னை பார்த்து நீங்கள் மதுரை உசிலம்பட்டி தாய் கருமாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா தானே? என்றார்.

நான் அதிர்ச்சியில் சதாசிவத்தை பார்க்க, அவர் என்னை பார்க்க, நான் லேசாக வேண்டாம் என்று தலையசைத்தேன். “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று நான் கேட்க, அவர் என் பெண்ணை உங்கள் ஊரில் தான் கட்டி கொடுத்திருக்கேன். போன வருஷம் நடந்த திருவிழாவை காண வந்திருந்தேன், அப்போது என் மகள் உங்களை பற்றியும், நீங்கள் தான் தாய் கருமாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா என்று கூறினாள் என்றார்”.

எங்கள் இருவருக்கும் மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.

சொல்லுங்க என்ன விஷயம்? என்று கேட்ட நகை ஆசாரி , உங்கள் முகத்தில் ஏதோ சோகம் தெரிகிறதே என்றார்…!.

நான் என் போனை எடுத்து அதிலிருந்து அம்மனின் நகைகளை காண்பித்தேன். அதை பார்த்த மாத்திரத்தில், அவர் இதே போன்ற நகைகளை ஒரு இருபது நாட்களுக்கு முன்பு தான் என்னிடம் மதீப்பீடு கேட்க எனக்கு தெரிந்த பஜன்லால் மார்வாடி ஒருவர் எடுத்து வந்தார் . அத்தனையும் விலை உயர்ந்த வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது எனவும் , சுமார் 50 வரை இலட்சங்கள் பெறும் என்று கூறினேன் என்றார்.

“ஏன் என்ன விஷயம்? ஏதாவது திருடு போய் விட்டதா? என நகை ஆசாரி கேட்க”, “அந்த நகைகள் இப்போது அவரிடம் இருக்குமா?” என சதாசிவம் கேட்டார்.

“நகை ஆசாரி நீங்கள் நடந்தவைகளை கூறினால் தான் நான் கூற முடியும் என்றார்”.

அவரிடம் நான் நடந்த அனைத்தையும் விரிவாக விளக்கி கூறினேன். சதாசிவம் என்னையும் நகை ஆச்சாரியையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார். அய்யா அந்த நகைகளை எனக்கு மீண்டும் கிடைக்க உதவி செய்யுங்கள். நான் எனக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களை தருகிறேன். அவர் அதை அடமானமாகவோ அல்லது விலைக்கோ எடுத்துக் கொள்ளட்டும் என்றேன்.

ஆசாரி அவசர வேண்டாம். தங்களின் நல்ல எண்ணம் உள்ளவர்களுக்கு தாய் கருமாரியம்மன் நல்லதே செய்வாள். நான் அவருக்கு போன் செய்து நகைகளை பற்றி கேட்டு பார்க்கிறேன் என்று கூறி விட்டு நண்பர் பஜன்லாலுக்கு போன் செய்து பேசினார்..

“மார்வாடி பஜன்லால் அம்மனின் நகைகள் அப்படியே உள்ளதாக கூறி, எதற்கு கேட்கிறீங்கோ? என கேட்டார்”. தான் நேரில் வந்து விவரமாக கூறுவதாக கூறினார் நகை ஆசாரி….

“வாங்க நாம போய் பஜன்லால் மார்வாடியை பார்த்து பேசலாம் என்று கூறி எங்களை அழைத்துச் சென்றார் ஆசாரி”. மார்வாடி எங்களை பார்த்து வாங்க நமஸ்காரம் என்றார்.

“சொல்லுங்க ஆசாரி, நகைகளை பற்றி எதுக்கு கேட்டீங்கோ..?”

அது வந்து… எதுவானாலும் பரவாயில்லே….

“இவர் என் நண்பர் சதாசிவம், சென்னையில் தான் இருக்கிறார், அவரு சதாசிவத்தின் மகன் குமாரின் நண்பன் சின்னதுரை என்பவரின் அப்பா பேரு கோவிந்தராஜன் , மதுரையில் உசிலம்பட்டி கிராமத்தில் தாய் கருமாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா.. என்ன உசிலம்பட்டி சின்னதுரையா? நகைகளை என்கிட்ட கொடுத்துட்டு பணம் வாங்கி போன சின்னதுரையின் அப்பாவா? கோயில் தர்மகர்த்தான்னு வேற சொல்றீங்க…!

என்ன சொல்ல வர்றீங்க புரியலையே….? என்றார் பஜன்லால் சேட்

அய்யா நானே விளக்கமா சொல்லிடறேன்…..

என்று, என் மகன் என்னிடம் கல்குவாரி தொழில் செய்ய பணம் கேட்டதில் இருந்து ஆரம்பித்து, என் 5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து பத்து இலட்சம் வாங்கியது, சதாசிவம் வீட்டில் நடந்தது, என் மகன் என்னை தவறாக பேசியது, என் மனைவி சின்னதுரையை வீட்டை விட்டு விரட்டியது, மற்றும் அவசரத்திற்கு சதாசிவம் நகைகளை கவரிங்கில் செய்ய யோசனை கூறியது, நகை ஆச்சாரியை பார்த்தது, அவர் தங்களிடம் உள்ள அம்மனின் நகைகளை பற்றி கூறியது வரை நடந்த அனைத்தையும் விவரமாக மன வருத்தத்துடன் கூறினேன்.

முதல்ல மோர் சாப்பிடுங்க பிறகு பேசலாம்…என்று கூறி அனைவர்க்கும் மோர் கொடுத்தார் பஜன்லால். மோர் குடித்து முடித்தோம்.

“இப்ப சொல்லுங்க நான் என்ன செய்யணும்? என்று கேட்டார் பஜன்லால்”. “நான் சதாசிவத்தை பார்க்க, அவர் நகை ஆசாரியை பார்த்து நீங்க சொல்லுங்க என்றார்.

நகை ஆசாரி பஜன்லாலிடம், “சேட்டு.. கோவிந்தராஜன் மிகவும் நல்லவர். கோவில் தர்மகர்த்தா. என் பொண்ணை இவங்க ஊர் பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன். இவரைப் பத்தி என் மாப்பிள்ளையும் பொண்ணும் நல்ல விதமாக தான் சொல்லியிருக்காங்க. இவரும் இவருடைய மனைவியும் மகன் மேல உள்ள பாசத்தால் தான் ஊர்ல வசூல் செய்த பணத்தையும், போதா குறைக்கு மகனோட பிடிவாதத்தால் அம்மனின் நகைகளை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்து 10 நாட்களில் திருப்பி தர சொல்லி கொடுத்திருக்காரு. அவனும் இவங்க கிட்ட சரின்னு சொல்லிட்டு ஆனா உங்க கிட்ட வித்துட்டு பணம் வாங்கின்னு போயிருக்கான்”.

அவர் பத்து இலட்சத்தை ரெடி பண்ணிட்டாரு , ஆனால் அம்மன் நகைகளுக்கு மட்டும் உங்க உதவி கேட்டு வந்திருக்காரு.

“நான் என்ன உதவி பண்ண முடியும்…?. ஐம்பது இலட்சம் கொடுத்து தானே வாங்கியிருக்கேன்…..”என்றார் சேட்டு.

சரி சேட்டு, உங்கள தப்பா எதுவும் சொல்ல வரல…! உதவி கேட்டு தான் வந்திருக்கார்.

“அதாவது சேட்டு, இவர் கிட்ட 30 ஏக்கர் நிலம் இருக்கு…, அந்த நிலத்தின் பத்திரங்களை உங்க கிட்ட அடமான கொடுத்துட்டு, அம்மனின் நகைகளை வாங்கி போய் திருவிழா நடத்திட்டு வந்து, ஐம்பது இலட்சத்திற்குண்டான நிலத்தை உங்களுக்கே விற்று விடுவதாக கூறுகிறார். அப்படி உங்களுக்கு நிலம் வேண்டாம்னு சொன்னா …! உங்க சம்மதத்தோடு, வேறு யாருக்காவது விற்றுவிட்டு உங்களுக்கு பணம் தருவதாக கூறுகிறார். அது வரை ஐம்பதுலட்சத்துக்கு வட்டி பணமும் தருவதாக என்னிடம் கூறினார் என்று பேசி முடித்தார் நகை ஆசாரி.

நான் பஜன்லாலை பார்த்து அய்யா நகை ஆசாரி கூறியது எல்லாம் நான் அவரிடம் கூறியது தான். அதில் எந்த விதமான மாற்றம் இல்லை. “தாங்கள் மனது வைத்து எனக்கு அம்மனின் நகைகளை கொடுத்து உதவ வேண்டும். நான் எனக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களை நாளையே கொண்டு வந்து தருகிறேன். பத்திரங்களை வாங்கி கொண்டு பின்னர் நகைகளை தாருங்கள். இதில் என் குடும்பத்தின் கௌரவ பிரச்சினை அடங்கியுள்ளது என வருத்தத்துடன் கூறினேன்.

சேட்டு யோசித்தார். நகை ஆசாரியை எனக்கு 25 வருடங்களாக தெரியும். இது வரை அவர் என்னிடம் எந்த விதமான உதவியும் கேட்டதில்லை. அவரை நம்பி நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். என்ன சொல்றீங்க ஆசாரி என்றார் பஜன்லால் சேட். மனுஷனை மனுஷன் நம்பி தான் ஆக வேண்டும் சேட்டு…. கோவிந்தராஜன் எப்படி பட்டவர் என்று தெரிந்ததால் தான் அவரை இங்கு அழைத்து வந்தேன். நீங்க தாரளமா இவருக்கு இவர் கேட்ட படியே உதவி பண்ணுங்க. கருமாரியம்மன் நல்லவங்கள சோதிப்பா, ஆனா கை விட மாட்டாள், இல்லேன்னா இவர் என் நண்பர் சதாசிவத்த பார்க்க, சதாசிவம் என்கிட்ட அழைத்து வர, நான் உங்ககிட்ட நகை இருக்கும் விவரம் சொல்ல என்று தொடர்ந்து , கூற எல்லோருடைய முகத்திலும் ஒரு சந்தோஷம் உண்டானது.

நான் கூறிய படியே அன்றே மதுரைக்கு கிளம்பி மறுநாள் என் நிலப் பத்திரங்களை கொண்டு வந்து சதாசிவம் மற்றும் நகை ஆச்சாரி முன்னிலையில் பஜன்லால் சேட் அவர்களிடம் தந்து அம்மனின் நகைகளை பெற்றுக் கொண்டேன்.

எங்கள் ஊர் திருவிழாவிற்கு வருமாறு மூவரையும் அழைத்தேன். அவசியம் வருவதாக கூறினார்கள்.

சதாசிவம் , நகை ஆசாரி, பஜன்லால் சேட் மூவரும் திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழா இனிதாக நடந்து முடிந்தது.

நான் பஜன்லாலை பார்த்து நிலங்கள் தங்களுக்கு தேவையா அல்லது விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்யட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு மாதம் கழித்து சொல்வதாக கூறினார். உங்கள் விருப்பம். நீங்கள் செய்த உதவியினால் தான் திருவிழா நடந்தேறியது. இந்த உதவியை நான் என் உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன் என்று கூறியவுடன், உங்கள் ஊர் மக்கள் உங்களின் மேல் நல்ல மரியாதை வைத்துள்ளனர். அதை இந்த திருவிழாவில் நேராக பார்த்தேன் என்றார் பஜன்லால் சேட்.

திருவிழா முடிந்த ஒரு மாதம் கழித்து சின்னதுரை ஒரு விபத்தில் இறந்து விட்டதாக கூறி அவனுடைய கல்குவாரியின் மற்றொரு பங்குதாரர் சங்கர் என்பவர் என்னிடம் வந்து கூறினார். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் எந்த விதமான சலனமோ, அனுதாபமோ ஏற்படவில்லை.

சரி அதற்கு என்ன… என்று கேட்டேன்? என்னங்க உங்க பையன் இறந்திட்டான்னு சொல்றேன்…! நீங்க அதுக்கு என்னன்னு கேட்கறீங்க என சங்கர் கேட்க, எங்களை பொறுத்தவரை அவன் செத்து 60 நாட்களுக்கு மேல ஆச்சு என்றோம்.

அவன் உடலை ஏதாவது மருத்துவ கல்லூரிக்கு கொடுத்திடுங்க, அங்க படிக்கிற பசங்களுக்கு அவன் உடல் ஆராய்ச்சி செய்யவாவது பயன்படட்டும் என்றேன் மிகுந்த வெறுப்புடன். என் மனைவியும் அதுவும் சரி என்றாள்.

சரிங்க அப்படியே செய்றேன். ஏன்னா? அவன் என் கிட்ட கூட இத்தனை நாளா மரியாதை இல்லாம தான் நடந்துகிட்டான். நீங்க சொல்றது தான் சரி…! என்று கூறி சென்றான்.

சின்னதுரை என் கிட்ட கொடுத்த பணத்தை அடுத்த வாரம் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி சென்றான் சங்கர்.

அடுத்த வாரம் அவன் கூறிய படியே பணத்தை கொண்டு வந்து கொடுத்தான். அய்யா சின்னதுரை என் கிட்ட கொடுத்தது ஐம்பது இலட்சம் தான். இந்த இரண்டு மாதத்திலே வந்த லாபம் பத்து இலட்சம். ஆக அறுபது இலட்சம் இந்த பையில் இருக்கிறது என்று கூறி என் கையில் கொடுத்தான் சங்கர்.

அதில் அறுபது இலட்சம் இருந்தது. “நான் கொடுத்த பத்து இலட்சம் , அம்மனின் நகை விற்றதில் வந்த ஐம்பது இலட்சம் ஆக அறுபது இலட்சம்”. “தாய் கருமாரியம்மனின் கணக்கு சரியாகத்தான் இருக்கிறது” .

அன்றே சதாசிவம் மற்றும் நகை ஆச்சாரி யையும் அழைத்து கொண்டு பஜன்லால் சேட் அவர்களிடம் சென்று சின்னதுரைக்கு நடந்த விபத்தையும் அதன் மூலம் கிடைத்த அறுபது இலட்சம் பற்றி கூறினேன். “ கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது கோவிந்தராஜ், நல்லவர்களுக்கு நல்லது செய்வார்., கெட்டவங்களுக்கு கெடுதல் தான் நடக்கும்.” “நீங்க ரொம்ப நல்லவர் கோவிந்தராஜன், வட்டிப் பணம் எதுவும் வேண்டாம்” ..!என கூறி 50 லட்சம் மட்டும் பெற்றுக் கொண்டு என் நிலப்பத்திரங்களை என்னிடம் கொடுத்தார்.

“நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பன், ஆனால் கை விட மாட்டார்”

“கடவுளை நம்பினோர் கை விடபடார்”

“இக்கதை கற்பனையாக உருவாக்கப்பட்டது. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் கற்பனையே, தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் குறிப்பிடப்படவில்லை” – கதையாசிரியர்.

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

1 thought on “வளர்ப்பு மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *