ராஜியின் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2025
பார்வையிட்டோர்: 50 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜி எழுந்து வரும்போது மாதவன் பரணில் இருந்து எதையோ எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். காலை உதயத் தில், மணம் பரப்பி எழில் பொங்க மலரும் புத்தம் புது மலர் எனக் காட்சியளித்த அவளை அங்கிருந்தே கண்கொட்டாமல் பார்த்தான் அவன். 

“அதற்குள்ளாகவா எழுந்து விட்டீர்கள்? என்ன அவசர மாம்? எனக்கு முன்பே எழுந்து…” 

நாணத்தின் பூச்சேறிய முகம் சற்றே சிணுங்கிற்று: ”அம்மாவும் நானும் அதிகாலை நாலு மணிக்கே எழுந்து விடும் பழக்கமுடையவர்கள் ராஜி !… ” 

”எழுந்து?…” 

அவள் புருவங்கள் கேள்விக் குறியில் வளைந்தன. 

“….காலைக்கடன் முடித்து, பிரார்த்தனை செய்வோம்.. அப்புறம் வீட்டு வேலைகள்..” 

பூஜையறையின் நுழை வாயிலில் மாட்டப் பட்டிருந்த மகாத்மாவின் பெரிய படத்தில் மலர் மாலை, காலை இளங்காற்றில் இலேசாய் அசைந்தாடிற்று. உள்ளே சுடர் விட்ட ஐந்து முகக் குத்து விளக்கு; ஊதுபத்தியின் மணம். 

அப்போது தான் இவையனைத்தையும் கவனித்த அவள் முகத்தில் ஆச்சரியம். 

“ஆமாம். அதிகாலையில் அங்கே என்ன தேடும் படலம்?” அவள் ஏணியைப் பற்றியபடி அவனை நிமிர்ந்து நோக்கினாள். 

“இதோ, இதைத் தான்!… காலை வேளையில் இதன் அவசியம் இப்போது தேவைப் படுகிறது…” என்று கூறியபடியே அவன் நீட்டிய பொருளை எட்டி வாங்கினாள் ராஜி. 

அவள் வியப்பு இரட்டிப்பாகி வினாவாயிற்று: 

“இப்போது தான் இதன் அவசியம் தேவைப் படுகிறதா?… அப்படியானால்…. இத்தனை நாளும்?….” 

நாக்கில் துடித்த சொற்கள் நழுவி விழுந்தன.

“நாங்கள் காபி சாப்பிடுவதில்லை ராஜி!..” 

அவன் சிரித்தபடியே கீழே இறங்கினான். 

“எனக்கு என்று எதையுமே தனியாகச் செய்ய வேண்டாம்… காபி இல்லையானால், ஓவலோ, போர்ன்வீடாவோ, காலையில் நீங்கள் சாப்பிடுவதையே நானும்….” 

அவள் கூறி முடிப்பதற்குள் அவன் கண்ணாடிக் குப்பி உடைந்தாற்போல் சிரித்தான். 

“ஊஹூம்!.. அது மாட்டுப் பெண் நீ!.. நாங்கள் சாப்பிடுவதையெல்லாம் உனக்குத் தர முடியுமோ ?… உனக்கு உன் வீட்டு வழக்கப்படி காபி தான்!…” 

அவள் முகம் விழுந்து போயிற்று; அவன் குறும்பாய்ச் சிரித்தான். 

“என்னடா நீ ?… புதிசு, பழசு என்று அவளுடன் வம்பு செய்கிறாய்… நீ தப்பாக எடுத்துக் கொண்டு விடாதேயம்மா ராஜி! அவன் அப்படித்தான். கேலியும் கிண்டலும் தான் முழு மூச்சு…” 

அக்கணம், அங்கே பிரவேசித்த அவள் மாமியார் வாஞ்சையுடன் ராஜியை நோக்கினாள். அவளுக்கு வெட்கம் மிகுந்தது. 

கணவரும் மாமியாரும் காலையிலேயே எழுந்து அலுவல்களில் ஈடுபட்டிருக்கையில், அவள் மட்டும் தாமதமாய் துயில் கலைந்து வந்தது அவளுக்கு என்னவோ போலிருந்தது. சிவந்த முகத்துடன் கையிலிருந்த பற்பசையையும் தூரிகையையும் கணவரிடம் நீட்டினாள் அவள். 

“எல்லாம் ஆயிற்று. நான் உபயோகிப்பது அதோ அந்த ‘பிரஷ்’தான்!…” 

மாதவன் சுட்டிய திசையில் கப்பும் கிளையுமாய் ஒரு பெரிய வேப்பமரம் காட்சியளித்தது. 

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!” 

ஆரம்பப் பள்ளி மாணவனைப் போல அவன் நீட்டி முழக்கினான்: புன்னகையில் அவள் கன்னம் குழிந்தது. 

பல் தேய்த்து விட்டு சமயலறையில் நுழைந்த போது பரணி லிருந்து எடுத்த பில்டர், பளபளவெனத் துலக்கப்பட்டு, டிகாக் ஷன் நிரப்பப் பெற்றிருந்தது. காபியைக் கலந்து ஆவி பொங்க அவளிடம் கொடுத்தாள் மாமியார். 

“இன்றைக்குத் தூங்கிப் போய் விட்டேன். நாளை முதல் சீக்கிரமே எழுந்து, காபிக் கொட்டை அரைத்து வைக்கிறேன்…” என்றாள் ராஜி. 

“காபிக் கொட்டை அரைக்கப் போகிறாயா?…” 

கனகம்மா மெல்லச் சிரித்தாள். “…இனிமேல் தான் நம் வீட்டில் கைமெஷினும், ரோலரும் வாங்க வேணும் ராஜி. இது கடைப் பொடிதான். டவுனுக்குப் போய் மாதவனை காபிக் கொட்டையும் மெஷினும் வாங்கி வரச் சொல்கிறேன்… ” கனகம்மா கபடற்றுப் பேசினாள். 

கடைப் பொடியா?!. 

ராஜிக்கு வயிற்றைப் புரட்டியது. 

ஊரில், அவள் அம்மா உயர்ந்த ரக பீபரிக் கொட்டை வாங்கி, பொன் போல் ரோலரில் வறுத்து, அவ்வப்போது காலை யில் மெஷினில் போட்டு அரைத்து, மணக்க மணக்கக் காபி போடுவாள்: தொட்டால் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கும் அந்தக் காபியின் மணமே அலாதி தான். அந்த மணம் நாசியில் எட்டியபின்தான் அவள், படுக்கையிலிருந்து எழுவாள். 

இங்கே?… 

அவளுக்கு மட்டும் தான் அந்த ‘திரவம்’. 

வேண்டா வெறுப்பாக அவள் காபியைக் குடித்து முடிப்பதற் குள் மாதவன் குளித்து விட்டு வந்தான். திருநீறு துலங்க, துல்லியமான ஆடைகளுடன் அவனைக் கண்ட போது அவள் திகைத்துப் போனாள். அவள் இன்னும் ‘பாய்லர் ‘ போட வில்லையே! 

அடுத்து மாதவன் செய்த காரியம் அவளுக்கு மேலும் அதிர்ச்சி தருவதாயிருந்தது. 

வெள்ளித் தட்டத்தில் பழையமுதைப் பிழிந்து வைத்து, ஆடைத் தயிரை ஊற்றினாள் கனகம்மா. விரலிடுக்கில் தயிர்ப் பசை நூலாய் வழிய ‘கமகம’ வென கடாரங்காய் மணத்துடன் உணவை ருசித்துச் சாப்பிட்டவனாய் ராஜியைப் பார்த்து விஷமமாய்க் கண் சிமிட்டினான் மாதவன். 

‘புது மாட்டுப் பெண் நீ! நாங்கள் சாப்பிடுவதையெல்லாம் உனக்குத் தர முடியுமோ?… ‘ 

உதடுகளில் சப்தமற்ற சிரிப்பு வழிய சன்னக் குரலில் கூறினான் அவன். 

ஆம். ராஜியின் வீட்டில் அஞ்சலை கூட தண்ணீர் விட்ட சாதத்தை விலக்கிச் சுடுசோறு தான் கேட்பாள். 

இங்கே- 

எல்லாம் அவளுக்குப் புதுமையாக இருந்தது. அவளுக்காகத் தான் குளிக்க வெந்நீர் போடப் பட்டது. அவளுக்கு என்று பிரத்யேகமாய் ‘ டிபன்’ செய்தோ, வாங்கியோ தரப் பட்டது. 

‘பெரிய இடத்துப் பெண். நேற்றுத் தான் இங்கு வந்திருக்கிறாள். நம் வழக்கம் அவளுக்குப் பிடிபடும் வரை அவர்கள் வீட்டில் நடப்பது போல், செய்து விட்டோமானால், புகுந்த இடம் அவளுக்குச் சிரமம் தராது’, என்று கனகம்மா மருமகளுக்குப் பிரத்யேக சலுகைகள் அளித்து எதையும் பார்த்துப் பார்த்துச் செய்து வைத்தாள். 

ஆயினும் ராஜிக்குப் புக்ககத்துப் பழக்க வழக்கங்கள் புதுமை யாக இருந்தன. அதிகாலையிலேயே எழுந்து விடுவதும் அலுப்புச் சலிப்பில்லாமல் உழைப்பதும், ஏழைமையில்லாதிருந்தும் எளிய வாழ்வு வாழ்வதும், தேவைகளைக் குறுக்கிக் கொள்வதும்… 

அடுத்தாற் போல், ஆறு மாதங்களுக்கு முன் மணமான அவள் அக்காவின் வீட்டில் அவள் எப்படியிருக்கிறாள் ! அப்படி ஒன்றும் ‘ ஓகோ’ என்று உயர்த்தியான குடும்பமும் இல்லை; வேலை யும் இல்லை. அத்திம்பேருக்கும் அவர் அப்பாவுக்குமாகச் சேர்த்து ஐநூறு ரூபாய் வருகிறது. உடுத்திய உடை நலுங் காமல், கிடைத்த கௌரவத்தை விடாமல், நாலுபேரை அதிகாரம் பண்ணிக்கொண்டு நாகரீகமாக வாழ்கிறார்கள். 

இந்தக் காலத்திலும் இப்படி உழைப்பவர்களை ராஜி இங்கு தான் இந்த வீட்டில் தான் பார்க்கிறாள். 

விடியற்காலையில் எழுகை ; தொழுகை; பின்னர் தொழுவத் தில் மாடுகள் பராமரிப்பு, தோட்டவேலை, வேலைக்காரர்களை விசாரிப்பு… இப்படி ஒன்பது மணிக்குள் ஓயாத வேலைகள்: நியமம் தவறாமல் காரியங்களை நடத்தி விட்டு உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று விடுவான் மாதவன். உள்ளூரிலேயே உயர் நிலைப்பள்ளி யொன்றில் தலைமையாசிரியராய் இருந்தான் அவன். பாதி நாட்கள் பக்கத்துக் கிராமத்தில் நூற்புயக்ஞம், சேரியில் காரியம் என்று வெளி வேலைகள் வேறு. 

மாதவன் தான் இப்படி என்றால் கனகம்மாவோ ?… மாடும் கன்றும் வீடும் வாசலும் வேலைகள் கொள்ளை கொள்ளையாய்க் காத்திருக்கையில் இந்தத் தள்ளாத வயதிலும் வேலைக்கு ஆளின்றி எப்படித்தான் சமாளிக்க முடிகிறதோ? 

ராஜியின் பிறந்தகத்தில், அஞ்சலை ஒருவேளை வரவில்லை என்றால் வீடு அல்லோலகல்லோலப்படும். ஆங்காங்கே தோய்க் கப்படாத துணிகள்; தேய்க்கப்படாத பாத்திரங்கள் : வழ வழக்கும் சிமெண்டுத் தரையில் அடியடியாய்த் தூசிகள்: வீடு ஒரே களேபரம் தான்! 

ராஜியின் அப்பா ஒரு உயர்தர உத்தியோகஸ்தர். அந்த அந்தஸ்துக்குத் தக்கபடி தானே அவர் குடும்பத்தார் சமூகத்தில் நடமாட வேண்டியிருக்கிறது! அவர்களுடைய தகுதிக்கு, வீட்டில் சமையலுக்கு ஆள் இல்லை என்றாலே நாலுபேர் நகைப் பார்கள். அப்படியிருக்க அஞ்சலையின் வேலையை அவர்களால் எப்படிச் செய்ய முடியும்? 

பிறந்தகத்தில் ராஜி காலை ஏழு மணிக்கு மேல் தான் எழுவாள். எழுந்து காலைக் கடன் முடித்து, காபி அருந்திய பின், ஏதாவது படித்துப் பொழுது போக்குவாள். ஒன்பது மணிக்குச் சாப்பாடு. மதியம் 2 மணிக்கு காபி, டிபன். தினமும் ஏதாவது ஸ்வீட்; பூரி தோசை, பஜ்ஜி என்று இரட்டை டிபன். மாலை ஐந்து மணிக்கு டீயுடன் ஏதாவது பழங்கள். இரவு எட்டரைக்கு உணவு. 

அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் விடுமுறை நாளானால் கேட்கவே வேண்டாம். சினிமா, டிராமா, கடற்கரை என்று ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பினால், படுக்கப் பத்தரைக்கு மேலாகிவிடும். 

ஆனால்… 

இங்கேயோ?… 

பழையமுதை ‘அமுதாய்’ பாவித்துச் சாப்பிட்டு விட்டு மங்கு மங்கு’ என்று உழைக்கிறார்கள் இவர்கள் ! அவளால் அப்படி இருக்க முடியுமா?… 

ஆனால் யாரும் அவளை எதற்குமே கட்டாயப் படுத்த வில்லை ! ராஜிக்குத் தான் தனக்கு மட்டும் அளிக்கப்படும் சலுகை சஞ்சலத்தைத் தந்தது. 


மாதவனை ராஜிக்குக் கணவனாகத் தேர்ந்தெடுக்கையில், அவள் அப்பாவிற்குச் சிறிது தயக்கம் தான். பட்டணவாசத் தில் அருமை பெருமையாய் வளர்ந்த பெண், கிராமத்து ஆசிரியருக்கு வாழ்க்கைப் பட்டு வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா என அவர் யோசிக்கவே செய் தார். ஆனால் மாதவன், அளவற்ற ஆஸ்திகளுக்கு ஒரே வாரிசு என்பதை அறிந்த போது அவர் மனம் ஆறுதல் அடைந்தது. மாதவனின் அழகு மிக்க தோற்றம் ராஜியைப் பெரிதும் கவர்ந் தது. ராஜியின் தாய்க்கு, கனகம்மாவின் களங்கமற்ற சுபாவம் மிகவும் பிடித்தது. இவையெல்லாவற்றையும் விட ராஜிக்கு அங்கே ‘முடி’ போட்டிருந்தது. கல்லூரிப் படிப்பை உதறி விட்டு, பள்ளி ஆசிரியரைக் கைப் பிடித்தாள் ராஜி. 

விடுமுறை நாட்களில் கணவருடன் பக்கத்து டவுனுக்கு சினிமா பார்க்கப் போக அவள் உள்ளத்தில் ஆவல் துடிக்கும். ஆனால் அந்தத் தினங்களில் எல்லாம் மாதவனுக்குக் கொள்ளை அலுவல்கள் குவிந்து கிடக்கும். 

கொல்லையில் நந்தவனமும், சுந்தரக் காடுமாகத் தோட்டம் பாழ்போகிறதே! ‘கொத்து’ ‘வெட்டு’ என்று பாத்தியில் இறங்கி விடுவான். மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் பூசி, கொட்டில் கழுவி… 

வாசலில் பள்ளிச் சேவகன் காத்திருப்பான். ஏதாவது ஒரு மாணவனின் பெற்றோர், உதவி ஆ சிரியர்களில் இரண்டொருவர்…ஊர்ப் பிரமுகர்கள் சிலர்… 

இப்படி எவராவது மாதவனின் பேட்டிக்காகத் திண்ணையில் காத்திருக்கையிலும் கூட, கலைந்த கிராப்பும், வியர்வை வழியும் முகமுமாய், தட்டுச் சுற்றாகக் கட்டியிருந்த வேட்டியும் பனியனு மாய் மாதவன் அவர்களுக்குப் பேட்டிதருவான். 

“…தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தீர்கள் போலிருக்கு! என்னிடம் சொல்லியிருந்தால் வகுப்புப் பையன்களில் சில பேரை அனுப்பியிருப்பேனே?…” என்பார் ஒரு ஆசிரியர். 

“…நான் இங்கனே தானே அரைமணியா நின்னுக்கிட்டு இருக்கேன்…ஒரு குரல் கொடுத்தா ஓடிப்போய் செய்துடமாட்டேன்?” என்பான் சேவகன்.

ராஜிக்கு அவமானம் உடலை அனலாய்த் தகிக்கும். தனக்காக இல்லாவிட்டாலும், பிறருக்காகவாவது சுயமதிப்பைப் பாராட்ட வேண்டாமா?

தன் அந்தரங்கத்தைத் தனிமையில் அவள் மாதவனிடம் சொற்களாய் வடிப்பாள்.

‘எது அகௌரவம் ராஜி? நம் வேலையை நாமே செய்து கொள்வது மதிப்புக் குறைச்சலா?… அல்லது எதற்கும் பிறர் கையை எதிர்பார்ப்பதா?…”
 
அவன் அவளை மௌனியாக்கி விட்டு, பாத்திக்கு நீர் பாய்ச்சப் புறப்பட்டு விடுவான். 

அபூர்வ மனிதர்கள்! 

உணவில் தான் எளிமை என்றால், உடையிலும் கூட அதே எளிமை. தேவைக்கு அதிகமான எந்தப் பொருளும் வீட்டில் இடம் பெறாது. முப்பது வயது இளைஞன் மாதவன்; புது மணம் புரிந்து கொண்டவன். உல்லாச வாழ்விலும், சல்லாப நோக்கிலும் விதம் விதமாய் உடையணிவதிலும் ஆசை இராதோ ? 


அன்று… 

பிறந்தகத்திலிருந்து வந்த செய்தியுடன் ஆவல் பொங்க மாதவனிடம் ஓடினாள் ராஜி. 

“என்ன ராஜி?” 

“நாளைக்கு அண்ணா வருகிறானாம்!…”

“எனக்கும் கடிதம் வந்தது…” 

“அத்திம்பேரும் கூட வருகிறாராம்!…” 

“அவரும் கூட எழுதியிருக்கிறார்… வரவேற்க ஆவன செய்யப் படும்…” 

“…அது சரி!…நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள்…” அவள் பார்வை கெஞ்சிற்று. 

“….வேட்டி, ஜுப்பாவை விடுத்து, உன் அத்திம் பேரைப் போல் ‘பான்ட்’ போட வேண்டுமாக்கும்!…” 

“அது இயலாதது என்று எனக்குத் தெரியும் உங்களிடம் தான் அப்படிப்பட்ட உடையே இல்லையே?…” 

“….பின்னே?…’ 

“…நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் காலையில்…” அவள் பார்வை தயக்கத்துடன் அவனை நோக்கி இறைஞ்சிற்று. அவனுக்குப் புரிந்தது. அவள் கரத்தைப் பற்றித் தன் மார்புடன் அணைத்துக் கொண்டான் அவன். 

“அசடு…இது அகௌரவம் என்றா நினைக்கிறாய்?…உடலுக்கு நல்லதைச் செய்யும் உணவும், உள்ளத்துக்கு நன்மை பயக்கும் செயலும் எதுவாயிருந்தாலும் கேவலமில்லை. உழைப்பது கேவலம் என்றால், உலகம் தழைப்பதுவும் சாத்தியப் படாது ; உயரிய கலைகளும் கட்டடங்களும் கூட உருவாக முடியாது; சதுப்பு நிலங்களைக் கூட விளைவிக்கும் தனிப் புகழ் கொண்டது உழைப்பு; காடுகளையும் மேடுகளையும் கூட மாட மாளிகை களாகச் செய்யும் சக்தியுடையது உழைப்பு. வளமார்ந்த சமுதாயத்துக்கு அஸ்திவாரம் இளமையின் சலியா உழைப்புத் தான் ?…” 

அவன் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்தான். அதற்கு மேல் அவளுக்குப் பேச என்ன இருக்கிறது ? 

‘ஆனாலும் கஞ்சப்பிரபுவடி ராஜி உன் கணவர்’ என்று அண்ணா கேலி செய்யத் தான் போகிறான்; அத்திம்பேர் இளக் காரமாய்ப் பார்வையை வெளியிடுவார். 

அவளுக்கு ஊமை கண்ட கனவாய் வேதனை அரித்தது. அந்த நாளும் வந்தது; அவள் பயந்தது உண்மையாயிற்று. 


அண்ணா சிரித்தபடியே அவள் எதிரில் வந்து அமர்ந்தான். ஆம்; ராஜியைப் பார்க்க வந்தவன் அப்படியே அவளை மறு வீடு’ அழைத்து வந்திருந்தான். சில மாதங்களே ஆயினும் ராஜியின் பிரிவு அவர்களை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அப்பா மெலிந்து காணப்பட்டார்; அம்மா கூடச் சோர்ந்திருக்கிறாளே! 

குழந்தைகளும் அப்பாவும் அவளைக் கண்டதும் அன்புடன் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அம்மாவுக்கு எதிலும் ஒரு நிதானம். உணர்ச்சிகளை உண்டாக்கி, அன்பை ஆசை பொங்கும் பார்வையால் மட்டுமே வெளிப்படுத்தும் சாமர்த்தியம் அம்மா வின் தனித்துவம். 

“அம்மா! விஷயம் தெரியுமோ உனக்கு? ராஜியின் வீட் டில் இந்தக் கண்ட கண்ட பானங்களையெல்லாம் கையால் கூடத் தொடுவது இல்லை. ராஜிக்கு மட்டும் தான் ஸ்பெஷலாய் காபி போடுகிறார்கள்”. 

அம்மா வியப்பால் விழிகள் விரிய ராஜியை நோக்கினாள்:

”மாப்பிள்ளை?” 

“அவரா? இந்தியன் காபி!” 

அம்மா திகைத்தாள். 

“ஆடைத்தயிரும், நீர் விட்ட சாதமுமாய்…” 

அண்ணா விளக்க ஆரம்பித்தான். ராஜிக்குத் துக்கமும் அவமானமும் பொங்கியது. 

“காபி சாப்பிட்டால் அவர் உடம்புக்கு ஒத்துக் கொள்ள வில்லை…'” 

அவள் படபடத்தாள். 

“பலே! நீயும் பெரிய ஆளாகி விட்டாய் ராஜி ! சரி, காபி வேண்டாம். ஓவல், ஹார்லிக்ஸ் என்று ஏதாவது குடிக்கக் கூடாதோ? பணமா இல்லை ? சிக்கனம் தாயே! சிக்கனம். படி படியாக மாடு கறக்கிறது. பாலை மட்டுமா விற்கிறார்கள். சாணத்தைக் கூட அல்லவா காசாக்கி விடுகிறார்கள்!…” 

“சிக்கனமும் சேமிப்பும் நல்லதுதானே அண்ணா!”

ராஜியும் விடவில்லை. 

“காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே ! உள்ள வரை அனுபவிக்க வேண்டும். ஏதோ புதிதாய் வந்தவள் ஆயிற்றே என்று உனக்கு மட்டும் இப்போது சலுகையளிக்கிறார்கள். இன்னும் கொஞ்சநாள் ஆனால்…” 

“நானே அவர்கள் வழியில் சென்று விடுவேன்!” 

இடைமறித்த ராஜியின் குரலில் ரோசம். 

காபி அருந்தி விட்டு ஹாலில் சென்று ரேடியோவின் முன் அமர்ந்தாள் ராஜி. அவள் மனம் நிம்மதியின்றித் தவித்தது. 

முதன் முதலாகப் புக்ககம் சென்று திரும்பியிருக்கும் பெண்ணை அப்பா முதல் அனைவரும் அன்புடன் விழுந்து விழுந்து உபசரித்தார்கள். வந்த சில நாட்களுக்கு அதைப்பற்றி ராஜி பெருமிதமும் இன்பமும் கொண்டாள். 

ஆனால்… நாளடைவில் 

ஒவ்வொரு செயலின் போதும் அவள் புக்ககம் சிறுமைப் படுத்தப் படுவதாய் ராஜி நாளடைவில் உணர்ந்து கொண்டாள். பற்பல பண்டங்கள் அவளுக்கு வழங்கப் படுகையில், 

“ராஜிக்கு முதலில் கொடு ! அங்கே போனால் அவளுக்குக் கிடைக்காது!” என்று அப்பா, அண்ணா இவர்களிடமிருந்து, இவ்வித சொற்களுடன் கலந்து தான் கிடைத்தன. 

“காபியை அதிகம் கொடுத்துப் பழக்கப் படுத்தி விடாதே அம்மா! அப்புறம் அக்கா அங்கே போனால் திண்டாடப் போகிறாள்!” என்பான் தம்பி. 

ராஜிக்கு அழுகை குமுறிக் கொண்டு வரும். 

இங்கே, அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு சுகபோகமும் அவள் புகுந்த இடத்துக்குச் சிறுமையளிப்பதாக இருக்கையில் அவள் மட்டும் அவற்றை அனுபவிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது! 

ராஜிக்குப் பிறந்தகத்தில் காபி கசந்தது ! இனிப்புப் பண்டங் கள் கேலிச் சொற்களின் பின்னணியில் நாவிலும் மனதிலும் உறைத்தன. இருபது வருடங்களுக்கு மேலாகத் தனிச் சலுகை யுடன் செல்வத்திலும் செல்லத்திலும் திளைத்த பிறந்தகம் திடீ ரென்று முள்ளாய் உறுத்திற்று. உடனடியாகப் புக்ககம் போகத் துடித்தாள் அவள். 

ஆனால் திடீரென்று அத்திம்பேருக்கு உடல் நலமில்லை என்று செய்தி வந்து அப்பா பட்டணம் புறப்பட்டுப் போனார். அவர் வந்ததும் போகலாம் என்றிருந்தாள் ராஜி. 

“நான் வந்ததும் போகலாம் ராஜி ! உன் உடம்பு இளைத்துக் கறுத்து விட்டது. நல்ல ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு போகலாம். போகும்போது நல்ல வேலைக்காரியாகப் பார்த்துக் கூடவே அழைத்துக்கொண்டு போ!” 

அனல் வீச்சுக்களாய் அப்பாவின் சொற்கள் ராஜியின் நெஞ்சில் சுட்டன. 

தனிமையில் அம்மாவிடம், மனம் வெதும்பி, வெடித்துத் தீர்த்தாள். 

“அங்கே அவர்களுக்கு வசதியில்லாததாலா ஆள் வைத்துக் கொள்ளவில்லை. அம்மா! போலி கௌரவத்துக்கு அடி பணிவதால் வீண் செலவுகள் தாம் மிஞ்சும் என்பதை அறிந்து உழைப்பின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் அவர்கள். வயதையோ, மதிப்பையோ பாராட்டாமல் வளம் பெற உழைத்து, காந்தியடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்கள். சுதந்திர பாரத நாட்டின் சீரிய வளர்ச்சிக்குச் சிக்கனமும், சிறு தொழிலும் சிறந்ததொரு சாதனங்கள் என்பதைக் கண்டவர்கள். தோட்ட வேலையில் ஈடுபட்டு, காய்கறி, மற்ற உற்பத்தியைப் பெருக்குவதிலும் மாட்டுப் பண்ணையைப் பேணி, மதலைகளுக்குப் பால் தந்து ஆதரிப்பதும் தான் அவர்களுக்குப் பெருமை. 

அங்கே யாரும் என்னை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி வரவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானே தான் மனமுவந்து அந்தச் சூழ்நிலைக்கு என்னைப் பழக்கப் பழக்கப் படுத்திக் கொள்கிறேன்; உண்மையில், இப்போதெல்லாம் உல்லாச வாழ்வை வெறுத்து எளிய வாழ்வில் தான் இன்பம் காண்கி றேன். சோம்பேறியாக எதற்கும் பிறர் கையை எதிர்பார்ப் பதை விடுத்து ‘சுயதேவைப் பூர்த்தி’ செய்து கொள்வதைப் பெரிதும் வரவேற்கிறேன். 

முதல் தடவையாக இப்போது இங்கே வந்திருப்பதால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படக் கூடாதே என்பதற்காக இங்கு காபி குடிக்கிறேன். கை கால் கூட அழுக்குப் படாமல் சோபாவில் சாய்ந்திருக்கிறேன். இங்கே அனுபவிக்கும் ராஜபோகத்தை விட அங்கே அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் எளிய சேவையே எனக்கு நிறைவைத் தருகிறது…”

“பலே ராஜி! பிரசங்கமே செய்து விட்டாயே? அம்மா! உன் அருமை மகள் சொல்லுவதைக் கேட்டாயா! அங்கு போய் இன்னும் முழுசாய் மூன்று மாதமாகவில்லை! “உத்தர விடுங்கள் அம்மணி ! ஒரே நொடியில் நம் வீட்டுத் தோட்டத்தை…” 

அண்ணா போலிப் பயத்துடன் கை கட்டி வாய்பொத்தி நின்றான். இதற்குள் செய்திப் பத்திரிகையுந் தானுமாய் அம்பி ஓடி வந்தான்.

“அக்கா! அத்திம்பேரின் தோட்டத்திற்குச் சர்க்காரில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது! அடுத்தவாரம் அங்கேயே வைத்துப் பரிசளிப்பு விழாவாம்!” 

இன்ப அலைகள் நுரைத்துப் பொங்கி ராஜியின் இதயக் கடலின் கரையில் ஒதுங்கின. பெருமிதத்துடன் தமையனைப் பார்த்தாள். 

மறுநாளே அப்பா வந்துவிட்டார். 

“எடை குறைய வேண்டும்… எளிமையான உணவு வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார். மூத்த மாப்பிள்ளைக்கு வயிற்றில் ஏதோ கோளாறாம். தினமும் காலையில் தோட்டத்துப் புல் வெளியில் படிந்திருக்கும் பனித்துளியில் அவரே தினமும் எழுந்து சென்று ஒரு அவுன்ஸ் சேகரித்துச் சாப்பிடச் சொல்லுகிறாராம். பட்டண வாசத்தில் தோட்டத்திற்கு எங்கே போவது? ராஜியின் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்று கீதா சொல்லுகிறாள். அவள் ஊருக்குப் போவதற்குள் அவளைக் கேட்டுத் தகவல் எழுதும்படி சொல்லியனுப்பினாள்…” என்று செய்தி கொண்டு வந்தார் அவர். 

“இதற்கு என்னைக் கேட்க வேண்டுமா, அப்பா? கூடவே அழைத்து வந்திருக்கலாமே நீங்கள்! எங்கள் தோட்டத்து வேப்பமரக் காற்று பட்டாலே வியாதியெல்லாம் பறந்தோடி விடும். மேலும் தோட்டத்துப் புல் வெளியின் பனித்துளியைச் சேகரித்து ஏன் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தீர்களா? தினமும் காலையில் எழுந்து தானே தோட்டத்திற்குச் சென்று புல் வெளியில் உட்கார்ந்து எழுந்து சேகரிப்பது ஒரு ‘எக்ஸர்ஸைஸ்’ போல. நியமமாய் உழைக்க வில்லையானால் இப்படி ஏதாவது உழைப்பில் ஈடுபட்டுத்தான் உடல் நலனைப் பேண வேண்டியிருக்கிறது!” 

ராஜியின் மதிநுட்பத்தைக் கண்டு வியந்தார் அப்பா. 

அண்ணாவின் மூலம் பரிசுச் செய்தியைக் கேட்ட அவர் மகிழ்ச்சி இரட்டை மடங்காயிற்று. 

“ரைட்டோ, ராஜி? பரிசளிப்பு விழாவுக்கு எல்லோரும் வந்து விடுகிறோம். கீதாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து வரும்படி அண்ணாவை நாளைக்கே அனுப்புகிறேன்” என்றார். 

பட்டம் பெற்ற ஆசைமகள் பட்டிக் காட்டில், பாட்டாளியாய் உழைத்து, கட்டுப் பெட்டியாய் வாழ்கிறாளே என்று இப்போது அவர்கள் வருந்தவில்லை. குடும்ப நிர்வாகத்தில் அடங்கி, உழைப்பின் உயர்வை உணர்ந்து இலட்சிய வாழ்வு வாழும் அவர்களைக் கண்டு மகிழ்வும் நிறைவும் கொண்டார்கள்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *