யோகாஸனம்
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1
ஐயா! வாசகரே! அப்படி ஒன்றும் இதைப் புறக்கணித்துவிட்டுப் போகவேண்டாம். நான் உங்களுக்கு யோக ரகஸ்யங்களைப் போதிப்பதற்காக வரவில்லை.கொஞ்சம் இதைப் படித்துப் பாருங்கள்.
தற்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள சில பத்திரிகைகளில் தோன்றும் யோகாஸனக் கட்டுரைகளைப் படித்ததும், எனக்கும் பெரும் பீதி ஏற்பட்டுவிட்டது. ‘ஏதடா இது! பத்திரிகைகளெல்லாம் தமிழர்கள் அனைவரையும் யோகிகள் ஆக்கியே தீர்வது என முனைந்து நிற்கின்றன; நாம் கர்நாடக மனுஷனைப்போல் அவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறோமே’ என்று நினைக்க ஆரம்பித்தேன். பிறர் என்னைப் பிற்போக்காளனாகக் கருதுவது எனக்குச் சிறிதேனும் பிடிக்காது. யோகிகள் மலிந்த எதிர்காலத் தமிழ்நாட்டில் என்னுடைய இடம் எங்கிருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்தபொழுது என் மூக்கில் இரண்டு துளி நீர்கூட வந்துவிட்டது. (மூக்கால் அழுவது அப்படித்தானே!) அதனுடன் ‘ஒப்புரவொழுகு’, ‘உலகத்தோடு ஒத்து வாழ்’ என்னும் ஒளவையாரின் நீதி வாக்கியங்களும் ஞாபகத்திற்கு வரவே, ‘இந்தத் தலைகீழ் நிற்கும் வித்தையை நாமுந்தான் கொஞ்சம் கற்றுக் கொள்வோமே’ என்று தீர்மானித்தேன் யோகிகளும், தபஸ்விகளும், முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் கரைகளில் தவஞ்செய்யும் பெருமையைக் கங்கையும் யமுனையுமே இதுவரை அநுபவித்துவந்தன. ஆனால் இப்பொழுது அந்தப் பெருமையை நமது காவிரியும், தாம்பிரபர்ணியுங்கூட அடையப்போகின்றன என்பதை நினைத்தவுடனே என் மேனி புளகாங்கிதம் அடைந்தது.
பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் நல்ல நேரமாகப் பார்த்து, இதுவரை யோகாஸனங்களைப்பற்றி வெளிவந்த கட்டுரைகளை எல்லாம் விரித்து வைத்துக்கொண்டு, சாய்வு நாற்காலியில் படுத்தவண்ணம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். நான் என் யோகாப்பியாசத்தைப்பற்றி நினைக்கும் போதெல்லாம், என் மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றும். முதலில் நான் யோகாஸனங்கள் கற்பது, பின்பு ஹடயோகியாவது, பின்னர் ராஜயோகி, பின்பு ஹைஸ்கூலிலும் கல்லூரிகளிலும் யோகாஸனத்தைப்பற்றி என் பிரசங்கங்கள், பத்திரிகாசியர்களெல்லாம் என்னைக் கட்டுரை எழுதுமாறு வேண்டிக்கொள்வது, தேசம் முழுவதும் என் கீர்த்தி பரவுவது, இத்யாதி, இத்யாதி. பின்னர் நான் இவ்வற்பக் கீர்த்தியையும் புகழையும் வெறுத்துத் தள்ளுவது, வீட்டை வெறுப்பது, வாசலை வெறுப்பது, சொத்தைத் துறப்பது, சுகத்தைத் துறப்பது, பரமஹம்ஸராவது, பால் நிலவில் என் அரண்மனையை விட்டு வெளியேற யத்தனிப்பது, மனைவி யசோதரையையும், குழந்தை ராகுலனையும் கடைசி முறை பார்த்துவிட்டு வரலாமென்று அந்தப்புரம் செல்லுதல் – இத்தகைய இன்பக் கனாக் கண்டுகொண்டு, கற்பனா லோகத்தின் உச்சியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் என் மனைவி வீராயி வந்து, “விடியும்போதே இந்தப் பாழும் பத்திரிகையிலா விடியவேண்டும்? நாட்டாண்மைக்காரர் நேற்று உங்களைத் தேடிவிட்டுப் போனாரே. அந்த ஜட்ஜ்மெண்டைத் தமிழ்ப்படுத்திக் கொடுத்தாலும், நாலு காசு கிடைக்குமே. எழுந்திருந்து போங்கள்” என்றாள்.
என் மகன் மாடசாமி வந்து, “அப்பா, நாளைக்குக் கோட்டைக்குப் போனால் எனக்குப் பொரிகடலை வாங்கிக்கொண்டு வரமாட்டாயா?” என்று கேட்டான்.
2
ஆராய்ச்சிக் கட்டம் முடிந்தவுடன் அப்பியாசக் கட்டத்தில் இறங்கினேன். யோகாப்பியாசத்துக்கு வேண்டிய
சாதனங்களெல்லாம் தயார் செய்ய ஆரம்பித்தேன். முதலில் ஒரு லங்கோடு தைத்துக் கொண்டேன். பின்பு ஒரு கமண்டலமும் தயார் செய்து கொண்டேன். ‘டிஞ்சர் அயடின்’ பாட்டில் ஒன்று வாங்க வேண்டுமென்று ஒரு யோசனை தோன்றியது. ஆனால் பின்னால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. சிரசாஸனமும் மயூராஸனமும் பழகும்போது அதை வாங்கிக்கொள்ளலாம் எனத் தீர்மானித்தேன்.
ஒரு நாள் நான் லங்கோட்டைக் கட்டிக்கொண்டு, எனது யோகாப்பியாசத்தை ஆரம்பிப்பதற்குச் சித்தமா யிருக்கும்பொழுது என் மனைவி சாக்ஷாத் வீராயி அம்மாள் என் முன்பு பிரசன்னமானாள். “நாலு பிள்ளை குட்டி இருக்கிற இடத்தில், அபசகுனமா லங்கோட்டைக் கட்டிக்கொண்டு நிக்கிறீங்களே” என்றாள். அச்சமயம் என் நண்பன் சோமு முதலியும் வந்துசேர்ந்தான். என் வீட்டில்,உப்புமாப் பண்ணும்போதெல்லாம் சோமு முதலிக்கு எப்படியோ மூக்கில் வியர்த்துவிடும். ஏதாவது சாக்குச் சொல்லிக் கொண்டு வந்துவிடுவான். அவனைக் கண்டதும் என் மனைவி, “இலையில் பழையது போட்டு எவ்வளவு நேரமாகிறது? நான் எந்நேரம் வரைக்கும் காத்துக்கொண்டிருப்பது? வாருங்கள் ” என்று சொன்னாள்.
நானோ சோமு முதலி வந்திருப்பதையும் கவனியாமல் பதுமாஸனம் போட ஆரம்பித்தேன். என் முழங்கால் தரையில் படவேமாட்டேன் என்றது. அதை ஒரு கையால் அழுத்தி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
“இது ஏன்டா உனக்கு இந்தத் தொல்லை! இத்தனை வயசுக்கு மேலே உடம்பு வளையுமா? கலியுகத்தில் எங்காவது அஷ்டாங்க யோகம் சித்திக்கக் கேள்விப்பட்டிருக்கிறோமா?” என்று சோமு முதலி பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.
உங்களுக்கு உள் அந்தரங்கத்தைச் சொல்லி விடுகிறேன். சோமு முதலியின் வயிறு வண்ணான் சால் போல் இருக்கும். குன்றக்குடிக்குக் காவடி எடுத்தாலும், அவனுக்கு யோகாஸனம் வராது. நான் யோகீசுவரனாகி விட்டால் எனக்குச் சிஷ்யனாகும் யோக்கியதை கூடத் தனக்கு இராதே என்று என் மேல் அவனுக்குப் பொறாமை.
ஆனால் நானா இதில் எல்லாம் ஏமாறுகிறவன்? என் யோகாப்பியாசத்தை விடாமுயற்சியுடன் பயின்றேன். பதுமாஸனம், சித்தாஸனம், ஹலாஸனம், தனுராஸனம், சர்வாங்காஸனம், பச்சிமோத்தானாஸனம், உட்டியாணம், நௌலி முதலியவைகளை ஒருமட்டாகப் பழகிவிட்டேன். ஆனால் அந்தப் பாழும் சிரசாஸனமும் மயூராஸனமும் ஆண்டவன் என் தலையில் எழுதவில்லைபோலும்! நான் சிரசாஸனம் பழகும்போது, முதலில் கதவை அடைத்துக் கொண்டு, என் மனைவியை உதவிக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். என் மகனுங்கூட ‘டிஞ்சர் அயடின்’ முதலிய மருந்து வகையராக்களுடன் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பான். என்னுடைய யோகாப்பியாசத்திற்கு இத்தனை உதவி புரியக்கூடிய என் மனைவியையும் மக்களையும் பின்னால் ஒரு நாள் தனியே தவிக்கவிட்டு, நான் காட்டுக்குத் தவம் செய்யப்போகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கே மிகப் பரிதாபமாயிருக்கும்.
கூடிய சீக்கிரத்தில் என் மனைவியின் உதவியால் ஒரு பிரயோஜனமுமில்லை என்று அறிந்தேன். அவளால் ஒரு தடவையாவது என் கால்களைப் பிடித்து நேரே நிறுத்த முடிவதில்லை. ஆகையால் என் மனைவியை நம்புவதைவிட ஒரு காரைச் சுவரை நம்பினாலும் புண்ணியமுண்டு என்று நினைத்துச் சுவரையே ஆதரவாக வைத்துப் பழக ஆரம்பித்தேன். வெகு சீக்கிரத்தில் அதுவும் பிரயோஜனமில்லை என்று அறிந்தேன். ஏனென்றால் என் கால்கள் சுவரில் போய் விழுவதற்கு பக்கமோ சாய்ந்து, முன்பே, இடது பக்கமோ, வலது நான் ‘பொத்’ என்று விழுவேன். அத்தனை தடவைகள் விழுந்தும், என் கால் எலும்புகள் ஓடியவில்லையென்றால் அது ஈசுவரக் கிருபை என்றுதான் சொல்லவேண்டும். ‘கடவுள் கருணாநிதி, கருணைக் கடல், கருணை வெள்ளம்’ என்று பக்தர்கள் சொல்வதை இப்பொழுதாவது நீங்கள் நம்புகிறீர்களா?
என் சிரசாஸனப் பயிற்சியால் நான் ஒரு சிறந்த உண்மையை உணர்ந்தேன். ‘இவ்வுடல் மண்ணால் ஆனது; மீண்டும் அது மண்ணையே சேரும்’ என்பதைச் சிரசாஸனம் எனக்கு நிமிஷந்தோறும் நினைவுறுத்தியது. என் மகனும் அதனால் ஒரு பாடம் கற்றுக்கொண்டதாகச் சொன்னான். “அப்பா, பூமிக்கு ஆகர்ஷண சக்தி உண்டென்பதை நீ எவ்வளவு தெளிவாக விளக்கிக் காட்டுகிறாய்! நேற்று எங்கள் உபாத்தியாயர் அந்தப் பாடத்தை எத்தனையோ பரிசோதனைகளுடனும், உதாரணங்களுடனுந்தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் என் மூளையில் அது ஏறவே இல்லை” என்றான்.
யோகாசனப் பயிற்சியால் நான் அடைந்த நன்மை என்னவென்றா கேட்கிறீர்கள்? ஐயோ! அந்தக் கண்ணராவியைத்தான் ஐயா, இப்பொழுது சொல்ல வருகிறேன். ஒவ்வோர் ஆஸனமும் எனக்கு ஒரு வரப்பிரசாதத்தைக் கொடுத்தது. ஹலாஸனத்தினால் முதுகெலும்பு வலி; சர்வாங்காஸனத்தினால் தொண்டை வலி, கழுத்து வலி; உட்டியாணம், நௌலி இவைகளினால் வயிற்று வலி, வயிற்றோட்டம்! எனக்கு இத்தனை வியாதிகள்கூடப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவது? சோமு முதலி என்னை ஏளனம் செய்வானே, அவன் முகத்தில் நான் எங்ஙனம் விழிப்பது? இவ்வாறெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது, சாக்ஷாத் சோமு முதலியே வந்துவிட்டான்!
“ஏனடா! நான் அன்றைக்கே சொன்னேனே, கேட்டாயா? இந்த யோகாஸனம் எல்லாம் நமக்கு வேண்டாம். இக்கலியுகத்தில் யோக வித்தையைப் பூரணமாகக் கற்றறிந்தவர் ஒருவருமே இல்லை என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். உன் காதில் ஏறவில்லை. இப்பொழுது இத்தனை ரோகங்களுக்கும் அதிபதி யாகிவிட்டாயே; என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டான்.
நான் ஒன்றும் பதில் சொல்லத் தெரியாமல் பரக்கப் பரக்க விழித்தேன். சோமு முதலி உண்மையிலேயே நல்ல மனுஷன். கேள்வியைக் கேட்டுவிட்டுப் பதிலையும் அவனே சொல்லிவிட்டான். “நான் சொல்லுகிறேன், கேள்: ஏதோ ஆரம்பித்தது ஆரம்பித்து விட்டாய். யோகாப்பியாசத்தினால் வந்த நோயை, யோகாப்பி யாசத்தினாலேயே தீர்க்க வேண்டும். ஆகையினால் உடனே உதகமண்டலத்துக்குப் புறப்பட்டுப் போ. நேற்றுத்தான் பத்திரிகையில் யோகானந்தர் படமும்,அவர் நிறுவியிருக்கும் யோகாசிரமத்தின் படமும் பிரசுரமாகி யிருந்தன. அவ்வாசிரமத்திற்குச் சென்று மூன்று நான்கு மாதங்கள் இருந்து, நன்றாய் ஆஸனம் பழகிக் கொண்டு வந்துவிடு” என்றான்.
மறுநாள் காலை வண்டிக்கு நான் உதகமண்டலம் போவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். அன்றிரவு எனக்குத் தூக்கம் ஏது? பல தடவை திடுக்கிட்டு எழுந்து இன்னும் விடியவில்லையா என்று பார்த்தேன். தூங்க ஆரம்பித்தால் யோகாஸனத்தைப்பற்றிய கனவுதான்! கண்டவுடன், தாம் சுவாமி. யோகானந்தர் என்னைக் வெகுநாளாய் எதிர்பார்த்த சிஷ்யன் வந்துவிட்டதாக என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார். எனக்கு அவர் யோக ரகஸ்யங்களை அறிவுறுத்துவதாகவும், ராஜ யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ஞானயோகம் முதலியவை எனக்குச் சித்திப்பதாகவும், அதன்பின் நான் அமெரிக்கப் பிரயாணம் செய்வதாகவும்,சர்வ மத சபையில் பிரசங்கம் செய்வதாகவும் கனாக் கண்டேன்.
பின்பு பாரத தேசம் திரும்புகிறேன். உலகெங்கும் என் புகழ் பரவுகிறது. கடைசியில் நான் இமயமலையிலுள்ள ஒரு குகையில் தவம் செய்கிறேன். அப்பொழுது என் மனைவி வந்து என்னை.”நாதா!” என்று கூப்பிடுகிறாள். “நீ யார்? உன்னை எனக்குத் தெரியாதே!” என்று நான் சொல்லுகிறேன். அவள் மீண்டும், “நாதா! நாதா!” என்று கெஞ்சுகிறாள்.நான் ஒரே பிடிவாதமாய் நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறேன். என் மனைவி திடீரென்று தோள்களைப் பிடித்துக் குலுக்குகிறாள். நான் திடுக்கிட்டு விழித்தேன். என் தோள்களைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டு, ”எழுந்திருங்கள். மணி ஏழாகிறது. நீங்கள் ரெயிலுக்குப் போகவில்லையா?” என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.
எழுந்திருந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழு! எட்டு மணிக்கு வண்டி புறப்படுகிறது. ஆகையினால் அவசர அவசரமாய்க் காலைக் கடன்களை முடித்து, கோட்டை மாட்டிக்கொண்டு, பொத்தான்கள் கூடப் போடாமல் கிளம்பினேன். வாசற்படி இறங்கினேனோ இல்லையோ, அடுத்த வீட்டுச் செட்டியார் புன்முறுவல் செய்துகொண்டே வந்து, “ஏது, வெகு அவசரம் போலிருக்கு! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்.
இந்தச் செட்டியார் சாதாரணமாய் நல்ல மனுஷா. ஆனால் அவரிடம் இருக்கும் ஒரு கெட்ட வழக்கம் என்ன வென்றால், யார் வெளியே புறப்பட்டாலும் சரி, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டுவிடுவார். அவருக்கு நான் பல தடவை சொல்லி யிருக்கிறேன்: “யாராவது ஒரு காரியமாய்ச் செல்லும்பொழுது, அவரிடம் ‘எங்கே போகிறாய்?’ என்று கேட்டால், அந்தக் காரியம் ஜயமாவதில்லை; ஆகையால் இனிமேல் அம்மாதிரி கேளாதீர்” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அதை ஒன்றும் அவர் கவனிப்பதில்லை. அன்று நான் அவரிடமிருந்து தப்ப வேண்டுமே என்று எத்தனையோ சாமிகளை வேண்டியிருந்தேன். ஆனால் எங்கிருந்தோ எனக்குச் சனியன் போலத் தோன்றி, ‘எங்கே போகிறீர்?’ என்ற வெடிகுண்டையும் போட்டுவிட்டார். எனக்கு வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை.”நரகத்திற்குப் போகிறேன். நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டு விட்டேன்.
“சும்மா கேட்டேன், நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று” என அழுத்தந் திருத்தமாய்ச் செட்டியார் சொன்னார்.
இந்த அசட்டினிடம் எனன சொல்வது! கடிகாரத்தைப் பார்த்தேன்; இன்னும் பத்து நிமிஷங்களே இருந்தன. பகவானுடைய நாமத்தை உச்சரித்துக்கொண்டு, பின்னங்கால் பிடரியில் படும்படி விழுந்தடித்து ஓடினேன். ஸ்டேஷனையடைந்து டிக்கட் வாங்கிக்கொண்டு பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். வண்டி கிளம்பிவிட்டது! நான் ஓட ரெயில் ஓட கடைசியில் வண்டியைப் பிடித்து ஏறி ஒருவாறாக உள்ளே சென்றேன்.
இத்தனை இடையூறுகளுக்கு அப்புறம் நான் ஒருவாறாக உதகை போய்ச் சேர்ந்தேன். ரெயிலை விட்டு இறங்கியதும், “யோகாசிரமம் எங்கிருக்கிறது?” என்று டிக்கட் கலெக்டரையே கேட்டேன். என் தைரியத்தைப் பாருங்களேன்! அவர் “தெரியாது” என்று சொல்லி விட்டார். பின்பு யோகானந்தரையும், யோகாசிரமத்தையும் தேடி ஊர் முழுவதும் அலைந்தேன். எங்கும் அகப்படவில்லை. யோகானந்தரும் யோகாசிரமமும் உதகையில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளவே இவ்வளவு அவசரப்பட்டேன் போலும்! யோக வித்தையைக் கற்பதற்கு முன் வீடு திரும்புவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
சுவாமி சிகிச்சானந்தர் என்பவர், பம்பாயில் யோக சிகிச்சாசிரமம் ஒன்று வைத்திருப்பதாக நான் முன்னமேயே கேள்விப்பட்டிருந்தேன். அங்கே செல்லலாம் என்று புறப்பட்டேன்.
3
யோக சிகிச்சாசிரமத்தின் அதிசயங்களை நான் என்னென்று சொல்வது! உள்ளே நுழைந்தால், எங்கே பார்த்தாலும் மானிட அங்க அமைப்புப் படங்கள். யோகாஸனங்கள் செய்வதற்கு விதவிதமான கருவிகள், யந்திரங்கள்! சுவாமி சிகிச்சானந்தர் யோகாஸன வித்தையை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்திருந்தார். பாருங்களேன்; ஆஸனங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதற்கு மாதம் மூன்று ரூபாய்; பிராணா யாமத்திற்கு மாதம் ஐந்து ரூபாய்; இரண்டும் சேர்ந்து கற்றுக் கொடுப்பதானால் மாதம் ஏழு ரூபாய். எப்படிச் சிக்ஷா விகிதம்? யோக வித்தையை ரூபாய், அணா பைசாவாக மாற்றிய பேர்வழி லேசானவராக இருப்பாரா? இப்படியெல்லாம் நான் யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.
ப்பொழுது சுவாமிஜியே வந்துவிட்டார். உடனே நான் அவரிடத்தில் என் விருத்தாந்தம் முழுவதும் சொன்னேன். “நாளைக் காலையில் வந்து என்னைப் பார்” என்று சொல்லிவிட்டுச் சுவாமிஜி போய் விட்டார்.
மறுநாள் காலை சென்றேன்.
“சிரசாஸனம் போடு, பார்ப்போம்” என்றார்.
“அதுதானே எனக்கு வராது” என்றேன்.
“அப்படிச் சொல்லு. அதுதான் காரணம்” என்று அவருடைய சிஷ்யர்களில் ஒருவரை ஒரு யந்திரம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அது வந்தவுடன் அதற்குள் என்னை நிறுத்திப் பூட்டிவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். மூச்சு விடுவதற்காக என் முகப்பக்கம் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. அன்று மாலை ஆறு மணிக்குத்தான் என்னைத் திறந்து விட்டார்கள். அன்றிரவு முழுவதும் நான் பட்ட பாடு ஆண்டவனுக்குத்தான் தெரியும். தலை வலி, கண் குத்து, காது வலி, பல் வலி எல்லாம் பொறுக்க முடியவில்லை. மறுநாள் காலையில் சுவாமிஜியினிடத்தில் போய் முறை யிட்டேன். “இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்” என்று அன்றும் என்னை அந்த யந்திரத்தில் தலை கீழாக நிறுத்திப் பூட்டி வைத்து விட்டார்கள் !
அன்றிரவும் ஒரே வலி. என் பிராணன் போய்விடும் போல் இருந்தது. ஆகையினால் அதை விட்டுத் தப்புவதற்கு ஒரு யோசனை செய்தேன். காலையில் எழுந்ததும் சுவாமிஜியினிடம் சென்று, “சுவாமிஜி, நான் தங்களுக்கு என் நன்றியை எவ்வாறு தெரிவித்துக் கொள்வேன்? என் ரோகங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிட்டன. நான் இன்று ஊர் செல்கிறேன். விடை யளிக்கவேண்டும்” என்று நமஸ்காரம் செய்துகொண்டு நின்றேன்.
“சரி! தாங்கள் போகலாம். ஆனால்…” என்று சொல்லி என் கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். ‘பில்’ கொடுக்கும் உரிமையைச் சர்க்கார் இங்கிலீஷ் டாக்டர்களுக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். யோகீசுவரர்களும் அந்த லைசென்ஸைப் பெற்றிருக்கிறார்கள் என்று அப்பொழுதுதான் எனக்குத் தெரியவந்தது. இரண்டாம் வார்த்தை பேசாமல் இருபத்தைந்து ரூபாயை எண்ணி மேஜையின் மீது வைத்தேன்.
“ஏய் டைப்பிஸ்ட்! ஒரு சர்டிபிகேட்டு டைப் செய்து கொண்டு வா” என்று சுவாமிஜி கட்டளையிட்டார்.
ஐந்து நிமிஷங்களில் அதுவும் வந்து சேர்ந்தது. அதில் என் ரோகங்களின் விவரமும், அவை யோக சிகிச்சையினால் இரண்டே நாட்களில் குணமான விந்தையும் எழுதப்பட்டிருந்தன. ‘பிள்ளையார் பிடிக்கப் போய் அது பூதமான கதைபோலிருக்கிறதே’ என்று நினைத்துக்கொண்டு, அதிலும் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டுத் ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று வெளியே கிளம்பினேன்.
4
எனக்கு இன்னும் யோகாஸனத்தின் மீதுள்ள நம்பிக்கை மாத்திரம் போகவில்லை. பத்திரிகைகளுக்கு யோகாஸனக் கட்டுரைகள் எழுதிய யோகீசுவ ரானந்தரின் ஆசிரமம் ஸ்ரீநகரில் இருந்தது. ஆகையால் அவரையும் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று தீர்மானித்து ரெயில் ஏறினேன்.
நான் யோகீசுவரானந்தரின் ஆசிரமத்தை அடைந்த போது, அவருடைய சிஷ்ய கோடிகளில் சிலர் வெளியில் உட்கார்ந்திருந்தார்கள். நான் சுவாமிஜியைப் பார்க்க வேண்டுமென்று அவர்களிடத்தில் சொன்னேன்.
“சுவாமிஜிக்கு உடம்பு சௌகரியமில்லை; இப்பொழுது பார்க்க முடியாது” என்று அவர்களில் ஒருவர் சொன்னார்.
“உடம்புக்கு என்ன?” என்று நான் கேட்டேன்.
“மூல வியாதியால் மிகவும் கஷ்டப்படுகிறார்.”
“பச்சிமோத்தானாஸனம் செய்தால் மூல வியாதி பறந்தோடிப் போகுமே!” என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன். பின்பு நாம் எவ்விடத்தில் இருக்கிறோம் என்று ஞாபகத்துக்கு வரவே கைகட்டி வாய் புதைத்து, “ஏதோ சிறியேன் தெரியாமல் சொல்லி விட்டேன்; மன்னிக்க வேண்டும்” என்றேன். இதற்குள் தபால்காரன் வந்து ஒரு கட்டுக் காகிதங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அவைகளெல்லாம் என்னைப்போல் யோகாஸனங்கள் பயின்றவர்கள் எழுதிய கடிதங்கள். ஒருவருக்கு வயிற்றுவலி, வேறொருவருக்கு வயிற்றுக் கடுப்பு, மற்றொருவருக்கு வயிற்றோட்டம், இன்னும் ஒருவருக்குத் தலைவலி, பின்னொருவருக்குக் கண்வலி, பிறரொருவருக்கு மார்பு வலி, எஞ்சியவருக்கு மூலம்! எல்லாம் ஆஸனப் பயிற்சியால் வந்த விளைவு அதற்கெல்லாம் என்ன செய்வதென்று சுவாமிஜியின் உதவியை நாடியிருந்தார்கள். அவைகளை யெல்லாம் சிஷ்யர்கள் சுவாமிஜிக்கு வாசித்துக் காட்டினார்கள். அவருக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை. “பதஞ்சலி யோக சூத்திரத்தில் இரண்டு சூத்திரங்களுக்கு அரை குறையாய் அர்த்தம் படித்துக்கொண்டு நான் பத்திரிகையில் ஏதாவது எழுதினால், அதைப் பேசாமல் படித்துவிட்டுச் ‘சிவனே’ என்று கிடக்காமல் இவர்களை யார் அப்பியாசம் செய்யச் சொன்னது ? இந்த ஜன்மத்தில் நான் உட்டியாணமும் செய்தறியேன். நௌலியும் செய்தறியேன். நான்கு நாட்களாக நான் படும் பாடு பகவானே அறிவார். என்னை மலச்சிக்கலுக்கு என்ன செய்வதென்று கேட்டால், நான் என்ன சொல்வேன்! பத்திரிகைக்காரன் கொடுக்கும் காசு, இந்தக் கடிதங்களுக்குப் பதில் எழுதக்கூடக் காணாது. ஏ கிருஷ்ணானந்தா! ‘இனிமேல் யோகாஸனக் கட்டுரை என்னால் எழுத முடியாது’ என்று ஆசிரியருக்கு இன்றே ஒரு கடிதம் எழுதிவிடு” என்று சொன்னார்.
மறுவார்த்தை பேசாமல் நான் ஆசிரமத்தை விட்டு மெதுவாய் நழுவினேன்.
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 213
