மோப்பசக்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 2,067 
 
 

அவள் உரக்க கூப்பிட்டது கேட்கவில்லை. கதவை பலமாக தட்டிய பிறகுதான் கேட்டது. பஞ்சாட்சரம் கதவை திறந்தார். வானத்துக்கும் பூமிக்கும் கயிறு பிடித்தாற் போன்று நீண்ட நேரமாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. கருப்பு நிற ஹிஜாப் அங்கி அணிந்திருந்த குறைந்த வயதுள்ள பெண்ணும் அதே போன்று வயதான ஒரு அம்மாவும் நின்றிருந்தார்கள். நன்றாக நனைந்திருந்தார்கள்.

“அம்மாவுக்கு அதிகமாக குளிர்கிறது ஒரு போர்வை தர முடியுமா அப்பா!”-என்றாள்.

“பழைய போர்வைதான் இருக்கும். சற்று அழுக்காக..?”-என்றார் பஞ்சாட்சரம்.

“அழுக்கா இருந்தாலும் குடுங்க பரவாயில்லை”-என்றாள் குறைந்த வயதான அமீதா பேகம்.

அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆவடியிலிருந்து கிளம்பி பம்மல் போய் கொண்டிருக்கிறார்கள். நல்ல மழை பிடித்துக் கொண்டது. உடனை ஒதுங்கவும் இடமில்லை. இரவு மணி எட்டாகிவிட்டது. அம்மா நனைந்துவிட்டதால் ஜன்னி வந்துவிடுமோ என பயந்து ஒதுங்கினார்கள். மழையின் ஸ்பரிசமும், ஓசையும் சிறிதும் உணராமல் அமைதியான வீட்டிற்குள் பேத்திக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த பெரியவர் பஞ்சாட்சரத்திற்கு மழையோடு போராடி நிற்கும் இவர்களை கண்டதும் மனம் இளகியது. ‘அப்பா!’-என அவள் அழைத்ததும் மனம் உருகி போனார். தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த போர்வையை துகில் உரிப்பது போன்று இழுத்து உருவி வெளி விளக்கை போட்டு அமீதா பேகம் கையில் கொடுத்தார். பின்பு ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு அதில் அமர சொன்னார். தன் மகளிடம் இவர்களுக்கு சூடான தேனீர் தயாரித்து தரும்படி கட்டளையிட்டார். அத்தனை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது ‘அப்பா!’- என்னும் அழைப்புதான். பெரியவரின் உடலிலிருந்த வியர்வையும் புளுக்கமும் போர்வையில் மணத்தது. அதை சிறிதும் முகம் சுளிக்காமல்  வாங்கி போர்த்திக் கொண்டாள் பேகத்தின் அம்மா  மைமூன். இப்போது மழை ஓய்ந்துவிட்டிருந்தது. கதவின் முன் எழுதப்பட்டிருந்த பேராசிரியர்.மு.பஞ்சாட்சரம் என்ற பெயர் பலகையையும் அந்த தெரு பெயர்,கதவு எண் முதலியவற்றை கவனித்து வைத்துக் கொண்டு நன்றி சொல்லி புறப்பட்டாள் அமீதா பேகம்.

“போர்வையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் “-என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டு வழி அனுப்பினார் பேரா.பஞ்சாட்சரம்.

அவர் சற்றும் எதிர் பாராத ஒரு மதிய வேளையில் அவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் அமீதா பேகம் என்று எழுதியிருந்ததை படித்து பார்சலை பிரித்து பார்த்தார். அவருக்கு அதில் ஒரு இன்ப அதிர்ச்சி இருந்தது. ஆம்! டெல்லியில் உள்ள அங்காடியில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த காஷ்மீர் போர்வைதான் அது. கூடவே அமீதாவின் கடிதமும் அலைபேசி எண்ணும் இருந்தது. அன்று முதல் தன் அலைபேசியில் கட்செவி புலனத்தில் அவளும் ஒரு உறுப்பினராக சேர்க்கப்பட்டாள். நல்ல செய்திகளை பரிமாறிக் கொண்டார்கள்.

“அண்ணே! நல்லா இருக்கியா?”-அலைபேசி மூலமாக ஊரிலிருந்து பஞ்சாட்சரத்தின் தங்கை பூதங்கம் பேசினாள்.

“நல்லா இருக்கேன் தங்கா, நீ…”-என்று விசாரித்தார் பஞ்சாட்சரம்.

“அண்ணே, பொன்னு பி.பி.ஏ. விமான மேலாண்மை படிச்சுருக்கு. சென்னை விமான நிலையத்துல வேல பாக்குறா. மகளிர் விடுதியிலதான் தங்கி இருக்கா. அவளுக்கு ஒரு வீடு பாத்து குடுங்க. நானும் அவகூட வந்து தங்கப் போறேன்”-பூதங்கம்.

விமான நிலைய வேலை என்று கேட்டவுடன் பஞ்சாட்சரத்திற்கு அமீதா பேகம்தான் நினைவுக்கு வந்தாள். அவளுடன் அலைபேசியில் பேசும் போதெல்லாம் தாழ பறக்கும் விமானத்தின் இறைச்சல்தான் கேட்கும். தங்கை பூதங்கத்திற்கு ‘ஆகட்டும்’-என்று சொல்லிவிட்டு, நல்ல வாடகை வீடு வேண்டி அமீதா பேகத்திற்கு போன் செய்து பேசினார் பஞ்சாட்சரம். பஞ்சாட்சரத்தின் மீது அதீத அன்பு வைத்திருந்த பேகம் தன் வீட்டிலேயே தரை தளத்தில் வீடு காலியாக உள்ளதால் அதில் குடிபெயரலாம் என ஆலோசனை வழங்கினாள். தனது தங்கைக்கும் மருமகளுக்கும் ஆண் துணை இல்லாததால் அவர்களின் பாதுகாப்பு வசதிகளை பேகத்திடம் உறுதி செய்து கொண்டு ஊரிலிருந்து தங்கையை வரவழைத்து அமீதாவின் வீட்டில் தரை தளத்தில் உள்ள வீட்டில் மாத வாடகைக்கு தங்க ஏற்பாடு செய்து முடித்தார்.

இரண்டு மாதம் கழித்து பூதங்கத்திடமிருந்து பஞ்சாட்சரத்திற்கு  அலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணே, வீட்டுக்காரங்க நல்லவகதான். ஆனா, நம்ம டைகர அவுகளுக்கு பிடிக்கல. எங்காவது கொண்டு போயி வுடுங்கனு சொல்றாக.”-பூதங்கம்.  பேரா.பஞ்சாட்சரத்திற்கு எதுவும் புரிபடவில்லை.

“ஏம்மா, டைகர வீட்டுக்குள்ளதானே வச்சிக்கிர வெளியே வந்து யாரையாவது கொலைக்குதா”-என்றார் பேரா.

“அண்ணே, நம்ம வூட்டு புள்ள மாதிரி அத வளக்குறேன். அதுனாலே எந்த வூட்டு நல்லது கெட்டதுக்கும் எந்த ஊருக்கும் போக முடியறது இல்ல. அத விட்டு பிரிஞ்சா அழும். எம்புள்ளையாவுல நா அத வளக்குறேன். அது அவுகளுக்கு புரிய மாட்டேங்குது”-பூதங்கம்.

“….”

“அவுக பள்ளிவாசலுக்கு இபாதா செய்ய செல்லும் போது, டைகர பாக்கவோ அது பக்கத்துல வரவோ கூடாதாம். தீட்டாயிடுமாம். வூட்லேயே ஒரு நாளைக்கு மூனு தபா தொழுகை செய்றாங்க. ஃபஜர், அசர், இசான்னு வாய்க்குள்ளேயே நுழையாத பேருங்க. அசரத்துகள் வூடு வரும் போது டைகர வெளியே விடாதீங்கன்னு கண்டிஷனா சொல்றாங்க அது புது ஆள பாத்தா கொலைக்கிது.”-பூதங்கம்.

“நம்ம டைகர சைத்தான்னு சொல்லும் போது எனக்கு ரொம்ப வேதனையா இருக்குண்ணே.”-பூதங்கம்.

“டைகர் சுத்தமா இருக்காதுன்னுதான் தொழுகை நடக்கிற மசூதிகள்லயும், வீட்டு தொழுகை நடக்கிற இடங்கள்லயும் அனுமதிக்க கூடாதுன்னு ‘ஸல்’ அறிவுரை சொல்லி இருப்பார். ஆனா, நிச்சயமா சைத்தான்னு சொல்லி இருக்க மாட்டாரு. நீ கவலைப் படாதே”- பேரா ஆறுதல் சொன்னார்.

“நேத்து இசான்னு சொல்ற தொழுகைக்கு முல்லாக்கள் ரெண்டு பேர் வந்தாங்க. அவர்கள பாத்து விடாம டைகர் கொலைச்சுது. அவங்க தூஆ முடிஞ்சு போன பின்னால அமீதா பேகம் எங்கிட்ட வந்து வீட்ட காலி பண்ணிடுங்கன்னு சொல்லிட்டாள். இப்போ நா என்ன செய்யுறது?”- மிகவும் வருந்தி சொல்லிவிட்டு அண்ணனின் பதிலை எதிர்பாராமல் தொடர்பை துண்டித்தாள் பூதங்கம் அம்மாள்.

பேரா.பஞ்சாட்சரம் அமீதா பேகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். தன் தங்கை வளர்க்கும் நாய் வீட்டுக்குள் வளரும் செல்லப் பிராணி. பொமேரேணியன் வகை என்றும், தங்கை அதை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வாள் என்றும், உடம்பில் உண்ணி வராமல் இருக்க நோடிக்ஸ் பவுடர் தினமும் போட்டுவிடுவாள் என்றும் சொன்னார். ஆனாலும், உங்க மத நம்பிக்கைக்கு எதிரியா இல்ல எதிரா இருக்கு. ஒரு மாதம் அவகாசம் கொடு வேற வீடு பார்த்து காலி பண்றேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று அமீதாவிடம் கோரினார் பேரா. அமீதாவும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.

அமீதா பேகம் இஸ்லாமிய மார்க்கத்தில் அதீத நம்பிக்கை உள்ளவள். அவள் கணவன் ரபிக் வெளி நாட்டில் வேலை செய்து கட்டிய வீடு அது. தற்போது மார்க்கெட்டில்  செருப்புக் கடை வைத்து வியாபாரம் செய்கிறான். ஆனால், ரபிக்கின் சொந்த அண்ணன் ரஹீம் பரம ஏழை. அவர்கள் இரட்டைப் பிறவிகள். ரஹீமின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவ்வப்போது ரபிக்கிடம் வந்து செலவுக்கு பணம் பெற்று செல்வான். இருவரும் பார்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதால் சில நேரங்களில் ரபிக் போல் நடித்து பேகத்திடம் ஆயிரம் இரண்டாயிரம் பெற்று செல்வான் ரஹீம். அண்ணன் மீது உள்ள பாசத்தால் ரபிக் அதை தவறாக எடுத்துக் கொள்வதில்லை.

இன்றும் கூட ரபிக் போல் வேடம் தரித்து பணம் பெற்று செல்ல வந்து நிற்கும் ரஹீமை பார்த்து இது ரபிக் அல்ல என்று தொடர்ந்து குலைத்துக் கொண்டிருந்தது டைகர். டைகரின் இந்த அறிய செயலை கண்டு உள்ளூர நெகிழ்ந்து போனாள். டைகரை வாஞ்சையோடு அணைத்து தடவிக் கொடுத்தாள் அமீதா பேகம்.

சில ஆயிரங்கள் கேட்ட ரஹீமை பார்த்து, “நீ ஒரு காஃபிர். இஸ்லாத்தை நிராகரிப்பவன். சீ! இங்கேயிருந்து போய்விடு!”-என்று உரக்க கத்தினாள். ரஹீம் வெட்கப்பட்டு போய்விட்டான். அவன் போனவுடன் குலைப்பதை நிறுத்திக் கொண்டது டைகர். 

மாறு வேடத்தில் பத்து பேர் ஒன்றாக வந்தாலும் தன் எஜமான் யார் என்று வாசனை மூலமாக துல்லியமாக கண்டுபிடித்துவிடுவான் டைகர். அவன் மனசு என்றும் சுத்தமானதுதான்!

இபாதா_ வழிபாடு
ஃபஜர்_ அதிகாலை தொழுகை
அசர்_ மாலை தொழுகை
இசா_ இரவுத் தொழுகை
அசரத்துகள்_ தொழுகை நடத்துபவர்
ஸல்_ நபிகள் நாயகம்
தூஆ_ பிரார்த்தனை
காஃபிர்_ இறை நம்பிக்கை இல்லாதவன்
முல்லாக்கள்_ போதகர்கள்.

– கல்வெட்டு பேசுகிறது, ஜுன் 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *