மேடைகளைச் சுற்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 119 
 
 

(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 5-6 | காட்சி 7-8 | காட்சி 9-10

ஏழாம் காட்சி

(மேஜிக் நிபுணர் சாந்தாராமின் மாயாஜாலங்களைக் கண்டு களியுங்கள் என்ற பதாகை பின்னணியில் இருக்கிறது. மேடையில் யாரும் இல்லை. சற்று நேரத்தில் மேடையில் வலப்பக்கத்திலிருந்து எழில் வருகிறான். சுற்றும் முற்றும் பார்க்கிறான். மேடையின் இடப் பக்கத்திலிருந்து மாரி வருகிறார்.)

எழில் : வாங்க சார். இங்க ஏன் வரச்சொன்னீங்க…

மாரி : நீங்க முன்னாடியே வந்திருக்கலாம். சாந்தாராமின் மாயாஜால நிகழ்ச்சிகள் முடிந்து விட்டதே. பார்த்து என்ஜாய் பண்ணி இருக்கலாம்.

எழில் : இங்க என்ன பண்றீங்க. நீங்கதான் ஈவென்ட் மேனேஜரா….?

மாரி : ஈவென்ட் மேனேஜரா இருக்கறதுக்கு தனித்திறமை வேணும். ஆர்கனைசிங் ஸ்கில்ஸ் இருக்கணும். அதெல்லாம் என்கிட்ட இல்ல.

எழில் : ஒங்களுக்கு என்னென்ன திறமை இருக்குன்னு தெரிஞ்சுக்கவா நான் இங்க வந்தேன்? என்ன விஷயம்னு சொல்லுங்க.

மாரி : என்னப்பா. ரெண்டு நாள்ல அந்த ரெண்டு பொண்ணுங்களையும் கண்டுபிடிச்சு கொடுக்கணும்னு கெடு குறிச்சீங்க இல்ல…

எழில் : (முகத்தில் மகிழ்ச்சியுடன்)

கண்டுபிடிக்க முடியலையா… உங்க பிறந்த நாள்ல அப்படி அளந்தாரு கமிஷனர் அய்யா. அதெல்லாம் பொய்தானே. ஒத்துக்கறீங்களா…

மாரி : அதனால்தான் இங்க வந்திருக்கேன். வட இந்தியாவி லிருந்து வந்திருக்கிற இந்த மேஜிஷியன் சாந்தாராம்கிட்ட இருக்கிற ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

எழில் : என்ன கடத்தப்பட்டவங்க எங்க இருக்காங்கன்னு மாயக் கண்ணாடியில காண்பிச்சிடுவாரா….?

மாரி : அது இல்லப்பா. கடத்தப்பட்டவங்களை உலகத்துல எந்த மூலைல வெச்சிருந்தாலும் வரவழைச்சுக் கொடுத்துடு வாராம்.

எழில் : என்ன சார். கதை விடுறீங்க.

மாரி : இந்த ஆப்ஷன் ஒண்ணு இருக்கு. ட்ரை பண்ணிப் பார்க்கலாமே. வரவழைச்சுக் குடுத்துட்டாருன்னா நீங்க கூட்டிக்கிட்டுப் போயிடுங்க.

எழில் : என்ன…?

மாரி : ஆதவன் கிட்ட கூட்டிகிட்டுப் போயிடுங்கன்னு சொன்னேன்பா.

எழில் : (சிரிக்கிறான்)

இருக்கற வேலையை எல்லாம் விட்டுட்டு நீங்க கூப்பிட்டதால வந்துட்டேன். டைம்பாஸ் ஆவது ஆகட்டும். நடத்துங்க ஒங்க தமாஷை.

(மாயாஜால மந்திரவாதி உடுப்பில் சாந்தாராம் மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறார்.)

மாரி : வணக்கம் ஜீ.

சாந்தாராம் : நமஸ்கார். வணக்கம். மாரிஜீ. என்ன விஷயம்! இந்த யங் மேனுக்கு பறவை வரவழைச்சுக் கொடுக்கணுமா? எழில் : கொடுத்தா சமைச்சு சாப்பிடலாம்…

மாரி : ஜீ. நான் சொன்னேன் இல்ல. இரண்டு யங் கேர்ஸ் லாஸ்ட் வீக் கிட்நாப்…

சாந்தாராம் : ஆ. சொன்னீங்க இல்ல. பூல்கயா…

மாரி : அவங்க ரெண்டு பேரையும் ஒங்களால வரவழைச்சுக் கொடுக்க முடியாதுன்னு இவுரு சொல்றாரு…

எழில் : என்ன சார். பெரிய மனுஷனா இருந்து கிட்டு என்னைப் போட்டுக் கொடுக்கறீங்க….

மாரி : என்ன யோசிக்கறீங்க ஜீ ப்ராபெர்ட்ரி ஏதாவது வேணுமா…

சாந்தாராம் : ஆமாம். ரெண்டு பெரிய கூடை வேணும். நீங்க போக வேண்டாம். நம்ம அசிஸ்டென்ட்ஸ் கொண்டு வருவாங்க.

(கை தட்டுகிறார்)

(இரண்டு பெண்கள் மேடையின் இடப்பக்கத்திலிருந்து இரண்டு பெரிய கூடைகளுடன் வருகிறார்கள். கூடைகளை மேடையில் வைத்து விட்டுச் செல்கிறார்கள்.)

சாந்தாராம் : மாரிஜீ. இந்த யங் மேனோட பேர் என்ன…?

மாரி : எழில்.

சாந்தாராம் : எலில். நமக்கு தமில்ல இந்த ஸ்பெஷல் வரமாட்டேங்குது. மாரிஜீ.

மாரி : பரவாயில்ல. இவ்வளவு தூரம் பேசறீங்களே சந்தோஷம்.

சாந்தாராம் : எலில்ஜீ. பாருங்கோ. இந்த இரண்டு கூடைகளையும் கவுத்து வைக்கிறேன். ஒண்ணும் இல்ல…. இப்ப மறுபடியும் கவுத்து வைக்கிறேன். மாரி அந்த யங் லேடீஸ் பேர் சொல்லுங்கோ.

மாரி : வீணா….

சாந்தாராம் : வீணாஜீ வாங்கோ….

(முதல் கூடையை எடுக்கிறார். அங்கே வீணா அமர்ந்திருக்கிறாள்.)

சாந்தாராம் : அனதர் பர்சன் யாரு…. மாரிஜீ

மாரி : மீனா….

சாந்தாராம் : மீனாஜீ…. வாங்கோ….

(மற்றொரு கூடையை எடுக்கிறார். மீனா அங்கே அமர்ந் திருக்கிறாள்.)

எழில் : (ஆச்சரியத்துடன்) என்ன சார். இது கண்கட்டி வித்தையா இருக்குது.

மாரி : அதுதான் சாரோட ஸ்பெஷாலிட்டி. தாங்க்ஸ் ஜீ. (இரண்டு இளம் பெண்களும் எழுந்து நிற்கிறார்கள்)

சாந்தாராம் : வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா? டமிள் ப்யுப்பில் நீங்கள் எல்லாம் சிக்கனமா இருப்பீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்த அளவு சிக்கனம் ஆகாது ஜீ. ஒரு வாரமா கிடைக்காத பொண்ணுங்கள வரவழைச்சுக் கொடுத்திருக்கான் இந்த மேஜிஷியன். தாங்க்ஸோட நிறுத்திக்கறீங்க.

மாரி : நான் ஒங்கள லாட்ஜ்ல வந்து பார்க்கிறேன்ஜீ.

சாந்தாராம் : மாரிக்கு காரியம் முடிஞ்சு போச்சு. அடுத்த தடவை வருவீங்க இல்ல பார்த்துப்பான் இந்த சாந்தாராம். ஹலோ சிஸ்டர்ஸ் பேக் பண்ணுங்கோ. அடுத்த ஷோவுக்குப் போவோம்.

(சாந்தாராம் போகிறார்)

மாரி : எழில்ஜீ ஒப்படைக்க முடியாதுன்னு அப்ப சொன்னேன். இப்ப ஒப்படைச்சுட்டேன். இனிமேல் நீங்க இவங்க ரெண்டு பேரும் இஷ்டப்பட்டா ஆதவன் சார் கிட்ட அழைச்சுகிட்டுப் போங்க.. இப்ப உங்க டர்ன்….

எழில் : வீணாம்மா. மீனாம்மா… என்ன இதெல்லாம். எங்க இருந்தீங்க? இந்த மேஜிக் ஆள்கிட்ட வேலைக்கு சேர்ந்துட்டீங்களா….

மாரி : எழிலுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தியா இருக்கு இந்த நேரத்துலயும்.

எழில் : : வாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போவோம். ஆதவன் அண்ணணும் ஒங்க ரெண்டு பேரோட அம்மாக்களும் கதி கலங்கிப் போயிருக்காங்க. எங்க இருக்கீங்கன்னு ஒரு போன் கூட பண்ணாம இருந்திருக்கீங்க பொறுப்பு இல்லாதவங்களா இருக்கீங்களே.

வீணா : நீங்கள் எல்லாம் அண்ணனை உத்தமன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா?

எழில் : இந்த உலகத்துல யாரையும் நல்லவங்கன்னு சொல்ல முடியாது. யாரையும் கெட்டவனுங்கன்னும் சொல்ல முடியாது. அவரவர் கோணம் அவரவருக்கு. அவரவர் நியாயம் அவரவருக்கு.

வீணா : இப்படி சாதுர்யமா பேசிட்டா ஆதவன் நல்லவராயிடு வாரா… ஒங்க கோணத்துல…

எழில் : இங்க பாருங்க. ஆதவன் வெளி உலகத்துக்கு எப்படியோ, குடும்பத்தை பொறுத்த வரைக்கும் ஒங்களையும் அம்மாவையும் தாங்குதாங்குன்னு தாங்கறாரு. என்ன என்ன குறை வெச்சாரு உங்களுக்கு எல்லாம்… அவரை மாதிரி பொறுப்பான மகனைப் பார்க்க முடியாது. பொறுப்பான அண்ணனைப் பார்க்க முடியாது.

வீணா : அம்மாவையும் அப்பாவையும் பிரிச்சு வைக்கறதுதான் ஒரு பொறுப்பான பிள்ளை செய்யற காரியமா?

மாரி : குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும் சாரி. தம்பி எழில். நீங்க குடும்ப விஷயம் பேசறீங்க. நான் இருக்கறது நல்லா இருக்காது. விடை பெறுகிறேன். நன்றி.

(மாரி மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறார்) எழில் : சார். நில்லுங்க. போய்ட்டாரா? சரி. வீணாம்மா. நான் எதுவும் பேசலை. வீட்டுக்குப் போகலாம் வாங்க.

வீணா : நான் எங்கேயும் வரலை அண்ணே. நான் பத்திரமா இருக்கேன்னு அண்ணன் கிட்ட சொல்லிடுங்க. அது போதும்.

எழில் : எல்லாம் மூடு மந்திரமா இருக்கே. நான் அண்ணன் கிட்டபோய் என்னன்னு சொல்ல முடியும்? என்ன நடந்ததுன்னு என்கிட்ட ஷேர் பண்ணிக்கங்க தயவு செய்து.

வீணா : இப்போதைக்கு சொல்லக் கூடிய மனநிலையில நான் இல்ல. சாரி. என்ன விட்டுடுங்க.

எழில் : சரி. எங்கே தங்கி இருக்கீங்க? அதையாவது சொல்லுங்க.

வீணா : ரெயின்போ வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன். இப்போதைக்கு இந்தத் தகவல் மட்டும்தான் உங்க கிட்ட ஷேர் பண்ணிக்க முடியும்.

எழில் : ரொம்ப தாராள மனசுதான்.

வீணா : நான் வரேன். (வீணா போகிறாள்)

எழில் : வீணா அம்மா நில்லுங்க…. முறுக்கிகிட்டு போறாங்க. மீனாம்மா. நீங்களாவது வாங்க. வீட்டுக்கு போகலாம்.

மீனா : என் வீட்டுக்குப் போக எனக்கு வழி தெரியாதா என்ன… நான் என்ன குழந்தையா?

எழில் : இதுவரைக்கும் மௌனமா இருந்தீங்களேன்னு பார்த்தேன். நல்ல வார்த்தையா பேசிட்டீங்க. சரி வீட்டுக்குப் போங்க. நீங்களும் என்ன நடந்ததுன்னு வாய் விட்டு சொல்லப் போறது இல்ல அப்படித்தானே…

மீனா : அப்படித்தான். எழில் சார். ஒரு வேண்டுகோள்.

எழில் : பரவாயில்லையே. வேண்டுகோள்னு எல்லாம் பேசறீங்க. சொல்லுங்கம்மா.

மீனா : என்னைப் பார்த்தது பத்தி ஒங்க நண்பர் ஆதவன் கிட்ட தயவு செய்து சொல்லிடாதீங்க. நான் வரேன்.

(மீனா போகிறாள்)

எழில் : ஒங்க ரெண்டு பேரையும் நான் சந்திச்ச விதத்தைப் பத்தி யார்கிட்டயாவது சொன்னா என்னைப் பைத்தியம்னு சொல்லுவாங்க. அய்யய்யோ… என்னைத் தனியா பேச வைச்சுட்டு போய்ட்டாங்களே. இந்த மாரி மட்டும் கைல கிடைக்கட்டும்…

(திரை)

எட்டாம் காட்சி

(எழுத்தாளர் நிரஞ்சனிக்கு பாராட்டு விழா என்ற பதாகை பின்னணியில் இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. ஓரிருவர் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். மலர்க்கொடி மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள். பதாகையையும் பேச்சு மேடையையும் பார்க்கிறாள். மேடையின் வலப் பக்கத்திலிருந்து மீனா வருகிறாள்.)

மீனா : என்ன மலர், நிதியளிப்பு விழான்னு சொன்னீங்க. பாராட்டு விழான்னு பேனர் வெச்சிருக்கீங்க.

மலர் : வாங்க மீனா. நிதி அளிப்பு விழான்னு நிகழ்ச்சிக்குப் பேர் வெச்சா அவங்க விர்ன்னு கிளம்பிப் போய்டுவாங்க. பாராட்டு விழான்னா பொருந்தி உட்காருவாங்க.

(மலர்க்கொடி, மீனாவின் அவளுடை ய கரங்களைப் பிடித்துக் கொள்கிறாள்.)

மலர் : சாரிங்கறது போதாது. என் தம்பி இப்படி செய்வான்னு எதிர்பார்க்கலே. ஒரு வாரமா உங்களை எங்கே வெச்சிருக்கான்னு தெரியல. மாரி சார் தான் கண்டுபிடிச்சு சொன்னாரு. அதை வெச்சு ஒங்க ரெண்டு பேரையும் பத்திரமா மீட்கமுடிஞ்சுது. என் தம்பி தகாத முறையில் நடக்கலையே.

மீனா : நீங்க வருத்தப்படாதீங்க. ஒங்கள வெச்சு ஆதவன் கேம் ஆடினது ஒரு அநாகரிகமான செயல். சதீஷ் உடனே அதற்குப் பழி வாங்கணும்னு நெனச்சுதல தப்பு இல்ல. யங் ப்ளட். அப்படித்தான் நெனக்கும்.

மலர் : ஆதவன் செஞ்ச அதே அநாகரிகம்தானே இதுவும். மீனா : ஆமாம். இரண்டு இளம் பொண்ணுங்கள கடத்துவது… ஒரு வாரமா ஓர் இடத்துல அடைச்சு வைக்கறது எல்லாம் சட்டப்படியும் தப்பு ஒழுக்கப்படியும் தப்பு. அநாகரிகமும் கூட. மலர் : அவனை நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிட்டீங்க நன்றி.

மீனா : மன்னிச்சதுக்குக் காரணம் சதீஷ் எங்க ரெண்டு பேரையும் நடத்திய விதம். மேலும், அவர் சொன்ன காரணம் எங்களுக்கு நியாயமா பட்டுச்சு ஒரு பெண்ணை நடத்தும் விதத்தை வெச்சுத்தான் ஓர் ஆடவனின் குணத்தை எடை போட முடியும்னு சொல்வாங்க. அந்த அளவுகோலை வெச்சுப் பார்த்தா சதீஷ் நல்லவரு. எங்ககிட்ட தவறா ஒரு வார்த்தை பேசலை. நடந்துக்கல. அவர்கூட இருந்தவங்களும் கண்ணியமா நடந்துகிட்டாங்க. உணவு, உடை, டிவி, எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சாங்க. எங்கேயோ வெளியூருக்குப் போய் சொந்தக் காரங்க வீட்ல தங்கிட்டு வந்தா மாதிரி இருந்துச்சு. நீங்க கவலைப்படாதீங்க. சதீஷை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். வீணாவும் அடிச்சாலும் உதைச்சாலும் சொல்ல மாட்டா.

மலர் : தாங்க்ஸ்ம்மா. இதை ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுங்க. ஆதவன் என்கிட்ட நடந்துக்கிட்ட சம்பவத்தை காரணமா வெச்சுஅவரைப் புறக்கணிக்காதீங்க. ரெண்டு வருஷ காதலை முறிச்சுக்காதீங்க. ப்ளிஸ்.

மீனா : காதலுக்கு மரியாதை கொடுங்கன்னு சொல்றீங்களா… நான் காதலிக்க ஆரம்பிச்சப்ப வாடகை வீட்ல இருந்தாரு. இப்ப பாருங்க. சொந்த ஃபிளாட், சொந்த ஆபீஸ் கட்டிடம்… இந்த திடீர் வளர்ச்சிதான் என்னை யோசிக்க வைச்சது. அதுக்கு நடுவுல ஒங்கள அவர் ஒழுங்கீனமா நடத்தின சம்பவம் வந்துச்சு…

மலர் : மீனா.. ஆண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினா பெண்களுக்கு சந்தோஷமாத்தான் இருக்கும்னு சொல்வாங்க. நீங்க மாத்தி யோசிக்கறீங்க.

மீனா : உழைச்சு சம்பாதிக்கற பணத்துல அடிப்படை வசதிகளோட வாழந்துடலாம். இந்த மாதிரி திடீர் முன்னேற்றம் சந்தேகத்துக்குரியது. இல்லையா மலர்?

மலர் : உங்களுக்கு ஆம்பிக்குவிட்டி இருந்தா மனசை விட்டுப் பேசுங்க. விட்டு விலகிப் போறதுனால என்ன பிரயோசனம்? அசுர வளர்ச்சிக்கு அப்புறமும். அவர் ஒங்களத் தவிர வேறு ஒரு பொண்ண ஏறெடுத்தும் பார்க்கலையே அதற்கு நீங்க மதிப்பு தரத்தானே வேணும்.

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து ஆதவன் வருகிறான்.)

ஆதவன் : நான் இன்ஷியேட் பண்ண நிகழ்ச்சி இது. ஒரு வார்த்தை கூட சொல்லாம நடத்தறீங்களே… என்ன அர்த்தம்…?

மலர் : வணக்கம் வாங்க. உங்களுக்கு இது பத்தி மெயில் அனுப்பினேன். இன்விடேஷனும் மெயில்ல அனுப்பினேனே. அவங்களுக்கு மருத்துவ செலவுக்கு உடனடியா பணம் தேவைன்னு கேள்விப்பட்டேன். அதனால அவசரம் அவசரமா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாப் போச்சு. சாரி. மன்னிச்சிடுங்க.

ஆதவன் : இந்த ஒரு வார்த்தையால வாயடைங்க. சரி. இந்தாங்க. என்னோட கான்ட்ரிப்யூஷன் ரொக்கமா இருபதாயிரம் இருக்கு. மேல வேணும்னாலும் கேளுங்க தரேன். (மலர்க்கொடி, உறையை வாங்குகிறாள்)

மலர் : நன்றி… மீனா.ஆதவனோட உட்கார்ந்து நிகழ்ச்சியப் பாருங்க. போங்க. (மீனா வேறுபக்கம் பார்க்கிறாள்)

ஆதவன் : கெஞ்சினா மிஞசுவாங்க விடுங்க. எத்தனை நாள் முறுக்கு காட்டறாங்கன்னு பார்க்கறேன். கலெக்ஷன் தொகை எவ்வளவு?

மலர் : நீங்க கொடுத்த தொகையும் சேர்த்து ரெண்டு இலட்சம் சேர்ந்திருக்கு. நிகழ்ச்சில நீங்களும் பேசுங்க. மீனாவோட உட்காருங்க.

ஆதவன் : நான் வரேன். கட்சி செயல் வீரர்கள் கூட்டத்திற்குப் போகணும். (ஆதவன் போகிறான்)

மலர் : ஆதவன் நில்லுங்க…

மீனா : (சிரிக்கிறாள்)

மலர் : என்ன மீனா… சிரிக்கறீங்க?

மீனா : கபீர் அண்ணன், என்னை வந்து பார்த்தப்ப ஆதவனைப் பழி வாங்கியே தீருவேன்னு டிவி சீரியல் வில்லி மாதிரி மலர் பேசிகிட்டு இருக்காங்கன்னு சொன்னாரு. இங்க என்னடான்னா எங்க காதல் உடையக் கூடாதுன்னு பேசறீங்க… நடந்துக்கறீங்க. எது உங்களுடைய நிஜமான முகம்?

மலர் : ஆறுவது சினம்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. உங்களுக்குத் தெரியாதா?… உணர்ச்சி வேகத்தில ஏதோ பேசிட்டேன். யோசிச்சு பார்த்தப்பத்தான் அதெல்லாம் முட்டாள்தனம்னு தெரிஞ்சுது. மேலும் என் தம்பி செஞ்ச காரியத்தை பெரிசு படுத்தாம நீங்க ரெண்டு பேரும் நடந்துக்கிட்டது என்னை நெகிழ வைச்சிடுச்சு… மீனா… நான் சொல்றதைக் கேளுங்க…

மீனா : அய்யிய்யோ மறுபடியும் முதல்லேந்து காதலுக்கு மரியாதைன்னு ஆரம்பிச்சுடாதீங்க. அதோ நிரஞ்சனி மேம் வந்துட்டாங்க பாருங்க.

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து மூத்த பெண் எழுத்தாளர் நிரஞ்சனி வருகிறார்.)

மலர் : வணக்கம் மேம். வாங்க.

நிரஞ்சனி : வணக்கம் மலர்.

மலர் : இவங்க மீனா… பேராசிரியை சரஸ்வதி தேவி.. நிரஞ்சனி : தெரியுமே. அவங்க பொண்ணா. முகஜாடையே காட்டிக் கொடுக்குதே. என்ன பண்றே?…

மீனா : ஐ.டி. கம்பெனில ஒர்க் பண்றேன் மேம்.

நிரஞ்சனி : ஏற்கனவே உங்களுக்கும் எங்களுக்கும் ஜெனரேஷன் கேப்… இப்ப டிஜிட்டல் டிவைட் சேர்ந்திடுச்சு…

மீனா : அதெல்லாம் ஒண்ணும் இல்ல மேம். பெரியவங்களால தான் நாங்க உருவாணோம். நாங்க நாங்களாவா உருவாயிட்டோம்?

நிரஞ்சனி : நல்லா பேசறே. வாழ்த்துக்கள்.

(நிரஞ்சனி நாற்காலியில் அமர்கிறாள்)

மீனா : மலர், நீங்க டயஸ்ல உட்காருங்க. ஒரு சேஞ்சுக்கு நான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறேன். பயப்படாதீங்க. உங்களுக்குப் போட்டியா இதே தொழிலா இறங்கிட மாட்டேன். மலர் : நல்ல ஐடியாவா இருக்கே. ஆடியன்ஸ் வந்துட்டாங்க வாங்க. நிகழ்ச்சிய ஆரம்பீங்க.

(மீனா, நன்றி என்று கூறியப்படியே உரை மேசை அருகே செல்கிறாள்.)

மீனா : தமிழ்த்தாய் வாழ்த்து (பாடல் ஒலிக்கிறது)

மீனா : அனைவருக்கும் வணக்கம். நம்முடைய மதிப்புக்கும் அபிமானத்திற்கும் உரிய மூத்த பெண் எழுத்தாளர் நிரஞ்சனி அவர்களுக்கு பாராட்டு விழாவாக அமைந்த இந்த மாலைப் பொழுது, ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவழித்தோம் என்ற மன நிறைவை நம் அனைவருக்கும் தரப் போகிறது. பெண்களின் நுண்ணிய மன உணர்வுகளைத் தமது எழுத்துக்களில் பதிவு செய்து வாசகர்களைக் கொள்ளை கொண்ட மூத்த பெண் எழுத்தாளர் நிரஞ்சனி அவர்களையும் இங்கு வருகை புரிந்துள்ள பிரமுகர்களையும் வாசகர்களையும் வருக வருக என வரவேற்பதில் நான் பெருமை அடைகிறேன். கொத்தடிமைத் தொழிலாளப் பெண்கள் பற்றி அவர் எழுதிய தேன்கூடு என்கிற புதினத்தை நாம் மறக்க முடியுமா? குடும்பக் கதைகள் மட்டுமல்ல. கள ஆய்வு மூலமாக தேன்கூடு போன்ற நாவல்களையும் பெண் எழுத்தாளர்கள் எழுத முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் அம்மா நிரஞ்சனி அவர்கள். எழுத்தாளர் என்டர்டெய்னர் என்ற அளவில் இல்லாமல் கற்பனைப் பாத்திரங்கள் மூலமாக வாசகரின் நெஞ்சங்களைப் பண் படுத்துபவர் என்ற நிலையை ஏற்படுத்தியவர். இன்றைய பாராட்டு விழாக் கூட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் பேச உள்ளார்கள். ஏழுமலை சுவாமிகள் அவர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இப்பொழுது சின்னத் திரையில் சிரித்து சிரித்து நம்மைச் சிறையில் இட்ட மங்கை மலர்க்கொடி உரை ஆற்று வருகிறார். நான் யார் என்பதை உங்களுக்குச் சொல்லாமல் விட்டது தவறு. மன்னிக்கவும். என்னுடைய பெயர் மீனா. நிரஞ்சனி அவர்கள் மீதுள்ள அபிமானத்தால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணியை கேட்டுப் பெற்றேன். வாய்ப்பளித்த மலர்க்கொடிக்கு நன்றி.

மலர்க்கொடி : (உரைமேசை அருகே)

நன்றி. மீனா. செயற்கரிய செயல்கள் செய்தவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்யாமல் மறந்துவிடும் இந்தச் சமூகம். காலந்தோறும் நடப்பதுதான் அது. அந்தத் தவறு நம்முடைய நிரஞ்சனி அம்மா அவர்கள் விஷயத்தில் நடந்து விடக் கூடாது என்ற உந்துதலில்தான் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உங்கள் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மா நிரஞ்சனி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள், வாழ்க்கையை எதிர்கொள்ள நிறைவாக வாழ்ந்திடதைரியத்தை அளிக்கும் விதமாக அமைந்தவை நிரஞ்சனி அவர்களின் எழுத்துக்கள். இந்தச் சமுதாயத்திற்குப் பயன் அளிக்கும் படைப்புகளை அவர் தொடர்ந்து படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமர்கிறேன். நன்றி. வணக்கம்.

மீனா : இப்பொழுது பெண்கவி காவ்யா அவர்கள் பேசுவார். வாருங்கள்.

காவ்யா : நிரஞ்சனி அவர்களுக்கும் அவையோருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் தந்த கொடையாக நம்மிடையே மலர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரான நிரஞ்சனி அவர்களின் படைப்புகளை நான் தேடித்தேடி வாசித்தேன். நிரஞ்சனியார் இப்பொழுது எழுதாமல் இருப்பது நமக்கு எல்லாம் வருத்தத்தை அளிக்கிறது. அம்மா. உங்கள் பேணாவைத் திறந்திடுங்கள் படைத்திடுங்கள் என்று தங்களுடைய வாசகர்களுள் ஒருவளாக நின்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

மீனா : நன்றி காவ்யா. காவ்யா அவர்களின் கனிவான உரைக்குப் பின்னர் உலகநாதன் அவர்கள் வருகிறார். வாருங்கள்.

உலகநாதன் : நிரஞ்சனி அம்மையார் அவர்களின் எழுத்துக் களைப் படித்து வளர்ந்தவன் நான் என்பதைப் பெருமையுடன் தெரிவித்து அவருக்கு வணக்கங்களைக் கூறுகிறேன். கட்டுரைகளில் சொல்ல வேண்டிய கருத்துக்களைக் கூட கற்பனைக் கதை மூலம் சொல்லக் கூடிய அவருடைய பாங்கு பாராட்டுக்குரியது. அவர் நெடுங்காலம் வாழ்ந்து இலக்கியத் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மீனா : உலகநாதன் அவர்களுக்கு நன்றி. கண்டேன் கண்டறியாதன கண்டேன். கண்டேன் அவன் திருப்பாதம் என் று அருளாளர் பாடி மகிழ்ந்தார் இறைவனைப் பற்றி. இங்கு இறையருள் பெற்ற அடிகள் ஏழுமலை சுவாமிகள் எழுந்தருளி உள்ளார். அவரை வாழ்த்துரை வழங்க மேடைக்கு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

(ஏழுமலை சுவாமிகள் மேடையின் வலப்பக்கமாக வருகிறார் உரைமேசை அருகே நின்று பேசுகிறார்)

ஏழுமலை : அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவரையும் காத்து அருள் புரிவான். அறச்சீற்றத்தைத் தம்முடைய எழுத்துக்கள் மூலம் காட்டிய எழுத்தரசி நிரஞ்சனிக்கு வாழ்த்துக்கள். இப்பொழுது இந்தத் தருணம், அவருடைய படைப்புகளைச் சுவைத்த சுவைஞர்களுக்கு இனிய தருணமாக இருக்கிறது என்றாலும் அரங்கத்திற்கு வெளியே வேறு விதமான சூழல் நிலவுவதால் நாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(கூட்டத்தில் சலசலப்பு குரல்கள்)

மீனா : (கையில் மைக்கை வைத்துக் கொண்டு)

இடையூறு செய்து குறுக்கிட்டதற்கு அடிகள் மன்னித்தருள வேண்டும். செல்வி. மலர்க்கொடியார், நிரஞ்சனி அவர்களுக்காக சேகரித்து திரட்டிய ரூபாய் இரண்டு இலட்சம் நிதியை தமது திருக்கரங்களால் அம்மாவிடம் வழங்குமாறு சுவாமிகளிடம் கேட்டுக் கொள்கிறோம், தாராளமாக நிதிஉதவி நல்கிய உள்ளங்களுக்கு நன்றி கூறுகிறோம்.

(நிரஞ்சனி வேண்டாம் வேண்டாம் என்று மறுக்கிறார். மீனாவும் மலர்க்கொடியும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகின்றனர். ஏழுமலை சுவாமிகள், பண முடிச்சை நிரஞ்சனியிடம் வழங்குகிறார். அவர் நாற்காலியில் அமர்கிறார்)

மீனா : சுவாமிகள் அரங்கத்திற்கு வெளியே வேறுவிதமான சூழல் என்று குறிப்பிட்டார்கள். காரணம், நம்முடைய பாரதிநகரின் அரசியல் பிரமுகர் திரு. முத்துராஜனும் அவருடைய மனைவியாரும் மகிழ் உந்து வண்டி விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலம்பெற நாம் பிரார்தனை செய்யும் அதே வேளையில் பதற்றமான சூழல் பறபரப்பான சூழல் நம்முடைய வட்டத்தில் இருப்பதால், சுவாமிகளின் அறிவுரைக்கு இணங்க இந்தக் கூட்டத்தினை நிறைவு செய்துகொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மன்னிக்கவேண்டுகிறோம். நன்றி.

(திரை)

– தொடரும்…

– மேடைகளைச் சுற்றி (நாடகம்), பதிப்பாண்டு: 2022, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *