மூன்று கேள்விகள்
கதையாசிரியர்: பாபநாசம் சாமா
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 121
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தர்மபுரத்தை ஆண்ட தர்மாங்கதனுக்கு ஆண் சந்ததியே பிறக்க வில்லை. அவனது ஒரே மகள் வத்சலா. அவன் அவளை அருமை பெருமையாக வளர்த்து எல்லாக் கலைகளையும் கற்க ஏற்பாடு செய்தான். அவள் வளர்ந்து அழகியாயும் அதிபுத்திசாலியாகவும் ஆனாள். அப்போது தர்மாங்கதனுக்கு அவளது விவாகம் பற்றிய கவலை ஏற்பட்டது. அவளை மணப்பவன் அந்நாட்டின் அரசனாவானே! எனவே அவளது அறிவுக்கு இணையாக உள்ளவனையே அவன் அவளது கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருநாள் அந்த மன்னனின் தர்பாருக்கு ஒரு பண்டிதர் வந்தார். அவர் தம்மைத் தாமே மன்னனுக்கு அறிமுகம் செய்து கொண்டு “அரசே! சகலசாஸ்திர விற்பன்னன் சாம்பசிவம் என்பவன் நான். என் நாடு மாளவம். காசி, தட்சசீலம் ஆகிய இரு வித்தியா பீடங்களிலும் உள்ள பண்டிதர்களை வென்று எனக்கு நிகர் யாரும் இல்லை என்று பெயர் பெற்றவன். நான் இங்கு மூன்று கேள்விகளைக் கேட்பேன். இந்த நாட்டுக் குடிமகன் யார் வேண்டுமானாலும் அவற்றிற்குப் பதில் கூறலாம். அவற்றிற்குச் சரியான விடைகளைக் கூறி விட்டால் அப்படிக் கூறியவனிடம் இதுவரை நான் பெற்ற பதக்கங்களைக் கொடுத்து அவனை வணங்கி விட்டுப் போய் விடுவேன். இந்த நாட்டில் என் கேள்விகளுக்கு யாருமே சரியான விடைகளைக் கூறாது போனால் உங்கள் ஆஸ்தான பண்டிதர்கள் எனக்கு மரியாதை காட்டி, பல்லக்கில் அமர்த்தி அதனைச் சுமந்து கொண்டு என்னை வழி அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான திறமை உங்கள் நாட்டில் இருந்தால் சொல்லுங்கள்” என்றார் மிடுக்காக.
சாம்பசிவத்தின் ஆணவப் பேச்சு பண்டிதர்களையும் மன்னனையும் அவர் பால் வெறுப்படையவே செய்தது. ஆயினும் அதனை வெளிக் காட்டாமல் மன்னன் “நீங்கள் விட்ட சவாலை நாம் ஏற்கிறோம். உங்கள் கேள்விகளுக்கான விடைகள் மூன்று நாட்களுள் கிடைக்கும். அதுவரை நீங்கள் என் விருந்தினர் விடுதியில் தங்கி இருங்கள்” எனக் கூறினான்.
சாம்பசிவமும் “சரி. என் கேள்விகளைக் கூறுகிறேன். என் முதலாவது கேள்வி இது. யாரும் இல்லை எனக் கூறும் ஒரு உண்மையைக் கூற வேண்டும். ஆனால் அது முழுக்க முழுக்கப் பொய்யாக இருக்க வேண்டும். என் இரண்டாவது கேள்வி: கேளாத ஒலியும் பாராத காட்சியும் யாவை? மூன்றாவது கேள்வி: ஆண்டி முதல் அரசன் வரை எதற்கு மிக எளிதில் அடிமை ஆகிறான்? இக்கேள்விகளுக்கே சரியான விடைகள் தேவை” எனக்கூறி அரசனது விருந்தினர் விடுதிக்குச் சென்றார்.
அக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டு ஆஸ்தான பண்டிதர்களும் மன்னனும் திகைத்துப் போயினர். பண்டிதர் போனதும் அவர்கள் அக்கேள்விகளுக்கான விடைகள் பற்றி விவாதிக்கலானார்கள். அவர்கள் என்னென்னவோ விடைகளைக் கூறினார்கள். ஆனால் மன்னனுக்கோ அவை எதுவும் சரியானதாகப் படவில்லை.

அவன் தன் ஆஸ்தானப் பண்டிதர்களிடம் “வந்திருக்கும் சாம்பசிவப் பண்டிதர் ஆணவம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் அவர் தம் கேள்விகளால் உங்களைத் திக்கு முக்காடச் செய்து விட்டார் பாருங்கள்! நீங்கள் அக்கேள்விகளுக்கு சரியான விடைகளை யோசித்துக் கொண்டு வாருங்கள்’ எனக்கூறி அவர்களை அனுப்பி விட்டான்.
அதன் பிறகு மன்னன் அந்தப் புரத்திற்குச் சென்று தன் மகளின் அறையை அடைந்தான். ஏதோ யோசித்துக் கொண்டே வந்த தன் தந்தையைப் பார்த்து வத்சலா ஆச்சரியப்பட்டாள். தர்மாங்கதனும் தர்பாரில் நடந்ததை எல்லாம் அவளிடம் கூறி “வத்சலா! நாம் இதில் தோற்றுவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் நீ இருக்கிறாயே என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. அதனால் நீ இக்கேள்விகளுக்கு விடைகளைச் சொல். பார்க்கலாம்” என்றான்.
வத்சலா தன் தந்தை கூறியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு விட்டுச் சற்று நேரம் யோசித்தாள். பிறகு அவள் “எனக்கு விடை தெரியவில்லையே” என்றாள். அதைக்கேட்ட மன்னன் “அப்படி யானால் நமக்குத் தோல்விதானா?” என்று சலித்துக் கொண்டே கூறினான்.
அப்போது வத்சலா புன்னகை புரிந்து “நான் எனக்குத்தான் விடைகள் தெரியாது என்று கூறினேன். ஆனால் சரியான விடைகள் யாரிடமிருந்து கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். நம் அமைச்சரின் புதல்வர் பாஸ்கரவர்மர் இவற்றிற்கான சரியான விடைகளை நிச்சயமாகக் கூறுவார். ஏனெனில் அவர் ஒரு மாபெரும் மேதை எனப் பலர் புகழக் கேட்டிருக்கிறேன்” என்றாள்.
அதைக்கேட்ட தர்மாங்கதன் யோசனையில் ஆழ்ந்தவாறே அங்கிருந்து சென்றான். அவன் தன் பட் டத்து ராணியைக் கண்டு நடந்ததை எல்லாம் கூறி “நம் மகள் வத்சலாவை நான் நன்கு அறிவேன். சரியான விடைகள் தனக்குத் தெரியவில்லை என்றால் நம் நாட்டின் மானமே போய் விடுமே என்று துடிதுடித்துப் போயிருப்பாள். தன் அறிவு கூர்மையால் நாட்டின் மானத்தைக் காக்கவே முயல்வாள். ஆனால் அப்படி ஒரு கவலையோ சிந்தனையோ அவளிடம் காணப்படவில்லை. மாறாகச் சிரித்துக் கொண்டே அவள் அமைச்சரின் புதல்வன் பாஸ்கரவர்மன் இதற்கான விடைகளைக் கூறுவான் என்று உறுதியாகச் சொன்னாள். இது பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான். ராணியும் “நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நம் மகள் வத்சலா பாஸ்கரவர்மனைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள் என்று தெரிகிறது. இங்கு பேச்சு அடிபடுவதைக் கொண்டு பார்த்தால் வத்சலாவும் பாஸ்கரவர்மனும் ஒருவரை மற்றவர் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடைகளைப் பாஸ்கரவர்மனிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என வத்சலா கூறியது நீங்களே நேரில் அவனது புத்தி கூர்மையைக் காண வேண்டும் என்பதற்குத்தான். இதைத்தான் நான் சொல்ல முடியும்”‘ என்றாள்.

தர்மாங்கதனும் “ஓ! இதுவா விஷயம்? என் மகளே எனக்குப் பரீட்சை வைக்கிறாளா? சரி. இதனால் நான் இரண்டு விதத்தில் பயன் பெறுவேன். ஒன்று நாட்டின் மானத்தைக் காப்பது. மற்றது அலையாமல் எனக்கு மாப்பிள்ளை கிடைப்பது. இதுவும் ஒரு வகையில் நல்லதே” என்றான்.
மன்னனும் பாஸ்கரவர்மனை அழைத்து வரச் சொன்னான். அவன் நல்ல அழகன் என்றும் நல்லவிதமாக நடப்பவன் என்றும் அவனது தோற்றத்தையும் நடை உடை பாவனைகளைக் கொண்டும் மன்னன் தெரிந்து கொண்டான். அவனை உட்காரச் சொல்லி மன்னன் வந்திருக்கும் பண்டிதரின் கேள்விகளைக் கூறி அவற்றிற்கு விடை அவனால் சொல்ல முடியும் என்று வத்சலா கூறியதாகவும் சொன்னாள்.
அதைக்கேட்டு பாஸ்கரவர்மன் புன்னகை புரிந்து “அரசே. சாம்ப சிவம் மாபெரும் பண்டிதர் என் பதில் சந்தேகமே இல்லை. அவர் சாஸ்திரங்களையும் கற்பனைகளையும் உண்மைகளையும் தன் மூன்று கேள்விகளில் அடக்கியுள்ளார். அவரது முதல் கேள்வி தர்க்க சாஸ்திரத்தைச் சார்ந்தது. அதற்கு விடை “எனக்கு மரணம் இல்லை” என்பதே. இது உலகறிந்த பச்சைப் பொய். கடவுளின் படைப்பில் மரணம் அடையாத ஜீவராசியே கிடையாது. ஆனால் தர்க்க சாஸ்திரப்படி யாராலும் இதனை மறுக்க முடியாது. ஏனெனில் அந்த சாஸ்திரப்படி ‘நான்’ ‘எனது’ எனச் சொற்களெல்லாம் ஆத்மாவைக் குறிப்பன. ஆத்மாவிற்கு அழிவே இல்லை. எனவே சாதாரண முறையில் பார்த்தால் இது பொய். தர்க்க சாஸ்திரப்படி இது மெய்” என்றான்.
இந்த பதிலைக் கேட்ட தர்மாங்கதன் பாஸ்கரவர்மனின் கூர் அறிவை வியந்தவாறே “பேஷ் சரியான விடை. மற்ற இரு கேள்விகளின் விடைகளைக் கூறு பார்க்கலாம்” என்றான். பாஸ்கரவர்மனும் இரண்டாவது கேள்வியில் கேட்க முடியாத ஒலி என்பது மனதில் ஏற்படும் எழுச்சி. அது சொற்களால் வெளிவருவதற்கு முன் எழும் ஒலி. பிறகே அது வாயால் கூறப்படுகிறது. அதை உணர்பவனைத் தவிர மற்றவன் அறிய மாட்டான். அதுபோலக் காண முடியாத காட்சி கற்பனை. கற்பனையில் காணும் காட்சிகளை உண்மையில் காண முடியாது. எனவே மன உணர்வு, கற்பனை என்பனவே இரண்டாவது கேள்விக்கான பதில்” என்றான்.
மன்னனும் “ஆகா! சரியான விடைதான். சரி. மூன்றாவது கேள்வியின் விடை என்ன?’ என்று கேட்டான். பாஸ்கரவர்மனும் “ஆண்டி முதல் அரசன் வரை எளிதில் வசப்படுவது புகழ்ச்சி ஒன்றினாலேயே. புகழ்ச்சியைக் கேட்டு மயங்காதவர் யார்? எனவே புகழ்ச்சியால் யாரையும் எளிதில் வசப்படுத்திவிட முடியும். இதுவே மூன்றாவது கேள்வியின் விடை” என்றான்.
மன்னனும் “சபாஷ். இப்போது உனக்கு ஒரு பரீட்சை. நீ காணாத ஒன்றை காண்கிறேன். அந்த காட்சி என்ன?” என்று கேட்டான். பாஸ்கரவர்மனும் சிரித்தவாறே “உங்கள் மகள் எனக்கு மாலையிடும் காட்சிதான் அது. இதை நானும் காண்கிறேன்” என்றான்.
அதைக்கேட்ட மன்னன் கோபம் கொண்டவன்போல நடித்து “நீ மூன்று கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறிவிட்டதால் மட்டும் என் மகளை மணக்கப் போவதாகத் தீர்மானித்து விட்டாயா?” என்று கேட்டான்.

பாஸ்கரவர்மன் சிரித்தவாறே “உங்கள் மனதில் எங்கள் திருமணம் பற்றித் தோன்றாது இருந்திருந்தால், நான் மூன்று கேள்விகளுக்குச் சரியான விடை சொன்னதும் என்னைப் பாராட்டி இந்த விடைகள் சரியா என சாம்பசிவமே கூற வேண்டும் எனக் கூறியிருப்பீர்கள். நீங்களோ எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு என்னைப் புகழ்ந்ததோடு மேலும் ஒரு பரீட்சை வைத்தீர்கள். எதற்கு என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?” என்றான்.
தர்மாங்கதனும் ”ஆகா! இப்படித் தீர்மானமாக எதையும் சொல் லும் நீ என் மகளுக்கு ஏற்றவனே. நாம் இருவரும் கண்ட காட்சியை விரைவிலேயே உண்மையாக்கி விடுகிறேன்” என்றான்.
மன்னன் உடனேயே தர்பாரைக் கூட்டினான். அதில் வத்சலாவும், ராணியும் பாஸ்கரவர்மனும் அங்கு சென்றனர். பண்டிதர் சாம்பசிவமும் விரைவில் வந்து சேர்ந்தார். அந்த நிறைந்த சபையில் பாஸ்கரவர்மன் அந்தப் பண்டிதரின் மூன்று கேள்விகளுக்கும் தன் விடைகளைக் கூறினான். சாம்பசிவமும் அந்த விடைகள் சரியானவையே என்று கூறி பாஸ்கரவர்மனை மரியாதையுடன் வணங்கினார். தன் பதக்கங்களை எல்லாம் எடுத்து அவர் அவனிடம் கொடுத் தார். முடிவில் தான் அணிந்திருந்த மாலையைக் கழற்றி அவன் கழுத்தில் அணிவித்தார்.
அடுத்த நல்முகூர்த்தத்திலேயே வத்சலா மணமாலையை பாஸ்கரவர்மன் கழுத்தில் அணிவிக்க, தர்மாங்கதனும் அவன் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
– ஜனவரி 1991.