மூடி மறைத்த உண்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 1,554 
 
 

சூடான செய்திகளை வானொலி தொலைகாட்சி மற்றும் இணையத்தளங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளும் மக்கள் மொத்தமாக இந்த ஒன்றரை மாத ஊரடங்கு காலத்துக்குள் எல்லாப் பத்திரிகைகளையும் மறந்தே விட்டிருந்தனர் என்பது மறக்க முடியாத உண்மை. அரசாங்கம் ஊரடங்கை மெல்லத் தளர்த்திய இந்த சூழ்நிலையில் மறுபடியும் பணியை தொடர ஆரம்பித்த அந்த பத்திரிகை அலுவலகம், ஒரு குறிப்பிட்ட அளவு பத்திரிகைகளை மட்டும் அச்சடித்து விநியோகிக்கத் தொடங்கியிருந்தது. விநியோகம் தொடங்கி ஒரு வாரமாகியும் விற்பனை அதிகமாக இல்லாமல் அச்சடித்தப் பத்திரிகைகளில் ஒரு கணிசமான தொகை விற்பனை ஆகாமல் திரும்பி வந்தும் இருந்தன. இது அந்த பத்திரிகையின் மீது மக்கள் கொண்ட அபிமான குறைவால் ஏற்பட்டக் குறை இல்லை. ஒன்றரை மாதத்திற்கு மேலாக வருமானம் எதுவும் இல்லாமல் வீட்டுக்குள் அடைந்தபடி வாழ்க்கையை ஒட்டவே படாத பாடு பட்ட மக்களின் கைகளில் பத்திரிகை வாங்கக் கூடப் பணம் இல்லாத குறை என்றால் அது மிகை இல்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் இருந்து மக்கள் தங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகப் போராட்டத்தில் குதித்திருந்தனர். ஒருசிலர் தங்களிடம் இருக்கும் தங்க ஆபரணங்களை அடைவு வைத்துப் பணம் பெறுவதற்காக வங்கிகளுக்கும் அடைவு கடைக்ளுக்கும் அலைந்து திரிந்தனர், ஒருசிலர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களைத் தேடி அலைந்து திரிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும் பலர் வீட்டில் மனைவி மக்களின் காத்து கழுத்தில் பித்தளை ஆபரணம் கூட இல்லாமலும் , நம்பிக் கடன் கொடுக்க எவரும் இல்லாமலும் குழந்தைகளின் பசி போக்க வழியற்றும் இருந்தனர். இந்த தருணத்தில் மக்கள் மத்தியில் பத்திரிகை ஒரு அத்தியாவசியமானதாக இல்லாமல் போனது. ஊரடங்கில் மூடப்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிறுவனங்களாகவே மாறிப் போயும் விட்டதால் மேலும் பலர் தொழில் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டும் விட்டனர்.

இப்போதைய நிலையில் புதுத் தொழில் கிடைக்கும்வரை குடும்பத்தைப் பட்டினி என்ற புயலடித்துச் சாய்த்துவிடாமல் காப்பதற்கான போராட்டங்களில் பலர். இன்னும் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் பலர். ஒரு சூறாவளியைப்போல் எல்லா மட்டத்தினரையும் வேரோடு சாயத்துவிட்டிருந்த கொரோனா இப்போதைக்கு வயிற்றுப்பாட்டைக் கவனிக்க வேண்டியதே முக்கியம் என்பதை உணர்த்தி எல்லோரையும் ஓட்டப்பந்தயத்துக் குதிரைகளாக மாற்றி விட்டிருந்தது. இந்நிலை பத்திரிகை துறையினரையும் விட்டு வைக்கவில்லை.

பத்திரிகை விற்பனையின் மந்தப் போக்கை மாற்றுவதற்காக அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சக அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆசிரியர்கள் ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் மறுபடியும் பத்திரிகை விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார். நரைவிழுந்த வயதும் அனுபவமும் முதிர்ந்த செயலும் ஒருங்கிணைந்த ஆசிரியரின் கேள்விக்குப் பலரும் பலவித ஆலோசனைகள் வழங்கினார்கள்.

சிலரது நல்ல ஆலோசனை ஏற்கப்பட்டும் பலரது சுமாரான ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டும் முடிவுக்கு வந்த நிலையில் இறுதியாக பத்திரிகையின் சிறுகதைக்குப் பொறுப்பான ஆசிரியர் தமிழ்மணியிடம் வந்தார்.

“நீங்க என்ன செய்யப்போறீங்க?”

“நான் எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு நல்ல சிறுகதையை பிரசுரிக்க விரும்புகிறேன் சேர்”

“எல்லோரும் விரும்புவது மட்டுமல்ல இந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக ஒரு கதையை தெரிவு செய்து போடுங்க அதுதான் நல்லது”

“இப்போ கூட ஒரு நல்ல கதையை வாசித்துக் கொண்டிருந்தேன் நல்ல விறுவிறுப்பான நடையில் ஒருத்தர் எழுதியிருக்கார். சேர் மீட்டிங்கிற்கு கூப்பிட்டதால் வாசிக்கிறதை பாதியிலே நிருத்தி வச்சிட்டு வந்திருக்கேன் சேர்.”

“கதையின் கரு?”

“கதாசிரியர் இந்த கொiரோனா ஊரடங்கு காலத்திலேயே இடம்பெற்ற சம்பவங்களை வைத்து எழுதிஇருக்கிறார் சேர்”

“நல்லது கதையை முழுசா வாசித்து ரொம்பப் பொருத்தமாக இருந்தா அச்சுக்கு அனுப்பிடுங்க. இந்த ஞாயிறு பத்திரிகை மூலம் நாம் மறுபடியும் வாசகர்களையும் பழைய மார்கெட்டையும் பிடித்தே ஆகவேண்டும்” உத்தரவிட்டார் ஆசிரியர்.

“சரி சேர்” தலையாட்டிய தமிழ்மணி தன்னுடைய இருப்பிடம் நோக்கி நடந்தார்.

ஒரு சிறுகதையாக இருந்த போதும் நாட்டு நடப்பை டிஜிட்டல் கேமராவால் படம்பிடித்ததுபோல் எழுதப்பட்ட அந்தக் கதையின் சுவாரசியம் உடனே முழுக் கதையையும் பார்த்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது தமிழ்மணிக்கு. இரண்டு பக்கத்தை வாசித்தபோதே இந்தக் கதைதான் இந்த வாரத்துக்குப் பொருந்தும் என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டது. முடிவு எப்படி அமையுமோ எண்ணிக்கொண்டே தனது இருக்கையில் அமர்ந்து அந்தக் கதையை எடுத்து வாசிக்க முற்பட்டார்.

ஆனால் சற்றுமுன் வாசித்து விட்டுச் சென்ற அந்தக் கதையை அங்கே காணவில்லை. ஒருவேளை ஆசிரியர் அழைத்ததனால் அவசரமாக ஓடியபோது மேசையில் வைத்தக் கதை நழுவி கீழே விழுந்திருக்குமோ என எண்ணி மேசைக்குக் கீழே பார்த்தார். அங்கும் காணவில்லை. மேசையின் மீது கிடந்த வேறு கதைகளுக்கிடையில் சிக்கியிருக்கலாம் என்று ஒவ்வொரு கதையாக எடுத்தும் தேடினார். ஆனால் அவை எதற்குள்ளும் அந்தக் கதை இருக்கவில்லை.

‘என்னடா இது ஒரே மாயமா இருக்கே ..இப்போதுதான் வாசித்து வைத்திவிட்டுப் போனேன் அதற்குள் எங்கே போயிருக்கும்’ தனக்குள்ளே கேட்டுக் கொண்டவர், ‘ஒரு வேளை கையோடு மீட்டிங் நடந்த இடத்திற்குக் கொண்டு சென்று அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டேனோ?’ என்றவாறு மறுபடியும் எழுந்து மீட்டிங் நடந்த அறைக்குச் சென்றார்.

நீண்ட நீள்சதுர மேசையை சுற்றிலும் நாற்காலிகளும் சுழற்சியை நிறுத்திக் கொண்ட மின்விசிறிகளையும் தவிர சுத்தமாக இருந்த அந்த அறையில் எல்லாப் பக்கமும் சுற்றிப் பார்த்தார். கீழே விழுந்திருக்குமா என்று குனிந்தும் பார்த்தார். அங்கும் இல்லை. ‘அலுவலகப் பையன் குப்பை வாளியில் ஏதும் எடுத்துப் போட்டிருப்பானோ?’ ஆலோசனை முடியுமுன் கால்கள் குப்பை வாளி வைத்திருக்கும் இடத்திற்கு நகர்ந்தது.

ஊரடங்கு நேரத்தில் கொலைப்ட்டினியாய் கிடந்த தெருநாயின் வயிறாய் காலியாக இருந்தது அது. அங்கும் இல்லை. அப்படியென்றால் அந்தக் கதை எங்கே போயிருக்கும்? நல்ல கதை. ‘உண்மை’ என்றத் தலைபிற்கேற்ப ஊரடங்கு நேரத்தில் மக்கள் வாழ்க்கையில் மூடி மறைக்கப்பட்ட ஒரு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய வரிகள். அனுபவித்து எழுதியிருந்தார் கதாசிரியர். இப்போது என்ன செய்வது? இனி வேறு ஒரு கதையை வாசித்துத் தெரிவு செய்ய வேண்டும். அதுவும் காலத்திற்கேற்ற கதையாக இருக்க வேண்டும். இப்போதே நேரம் பதினொரு மணி. மூன்று மணிக்குள் கதையை அச்சுக்கு கொடுக்க வேண்டும்.அதற்கு முன் ஆசிரியரின் ஒப்புதல் வாங்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. அறிவுறுத்தியது மூளை.

மறுபடியும் தனது கேபினுக்குள் நுழைந்த தமிழ் மணி மீண்டும் ஒருமுறை அந்தக் கதையைத் தேடித் பார்த்துவிட்டு எழுத்தாளர்கள் அனுப்பிவைக்கும் கதைகளைப் போட்டுவைக்கும் அந்த பலகைப் பெட்டியை பார்த்தார். இவ்வாரம் பிரசுரிக்கவுள்ள கதையை தெரிவு செய்வதற்காக சற்றுமுன் திறந்து மூடாமல் இருந்த அந்தப் பெட்டிக்குள் குவிந்து கிடந்த கதைகளில் ஒன்றை எடுத்தார். வாசித்தார். மாற்றிவைத்தார். மற்றொன்றை எடுத்தார், வாசித்தார், மாற்றிவைத்தார். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக சுமார் இருபது கதைகள் மட்டும் வாசித்திருப்பார். ஒன்றிலும் அவரது மனம் ஒன்றவில்லை.

கதைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருந்தாலும் அவை இந்த சூழ்நிலைக்குப் பொருத்தமற்றவையாக இருக்கவே மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்தார். இப்போதும் முதலில் வாசித்த அந்தக் கதையைப் பற்றியே நினைவாக இருந்தது அவருக்கு. என்ன அருமையான கதை .எப்படி அது காணாமல் போயிருக்கும். நான் மீட்டிங்கில் இருந்த நேரம் வேறு யாராவது கேபினுக்குள் நுழைந்து கதையை எடுத்துப் போயிருப்பார்களோ.. அப்படி அந்தக் கதையை எடுத்துப்போய் என்னதான் செய்ய முடியும். அலுவலகத்தில் எதிரிகள் யாராவது இருந்தால் எடுத்துப் போயிருப்பார்கள் என்று சொல்லலாம். எல்லோரும் நண்பர்களே.. அவரவர் வேலையை அவரவர் செய்வதற்கே நேரமில்லாத நிலையில் கேபினுக்குள் நுழைந்து கதையை எடுத்துப்போகக் கூடிய வகையில் எவரும் இல்லை. அப்படியானால் அந்தக் கதைக்கு நடந்ததுதான் என்ன? மண்டையைப் போட்டுக் குடைந்துகொண்டிருந்தார்.

யாரிடமும் கேட்கலாம் என்றாலும் யாரிடம் கேட்பது? கேட்டால் என்ன நினைப்பார்கள். இல்லாவிட்டால் உன் காபினுக்கு நான் ஏன் வரப்போறேன் என்ற பதிலைத்தான் கூறுவார்கள். இல்லாவிட்டால் என்ன கதை? எப்படியான கதை? யார் எழுதியது? என்றெல்லாம் குடைந்து எடுப்பார்கள். தடியை கொடுத்து அடி வாங்குவதை விட கேட்காமல் இருப்பதே நல்லது . நேரத்தைப் பார்த்தார். ஒரு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. இது சாப்பாட்டு நேரம். இனி சாப்பிட்டுவிட்டு வந்து பார்ப்போம்.

உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கேண்டீனுக்குள் நுழைந்தார். மனைவியின் சமையல் மூக்கத் துளைத்தது. அருகில் அமர்ந்து சாப்பிட உட்கார்ந்த அலுவலகப் பையன், ‘சேர். இன்றைக்கு அக்கா கோழிக்கறி சமைச்சிருக்காங்கபோல’

‘ஆமாம் இந்தா எடுத்துக்கோ’ அவனுக்கும் கொடுத்துவிட்டு சாப்பிட்டபோதும் மனம் சாப்பாட்டில் லயிக்கவில்லை. இன்னும் அந்தக் கதையைப்பற்றிச் சிந்தித்த வண்ணமே இருந்தது.

உண்மை என்ற தலைப்புடன் நடந்த உண்மைகளையே கதையாகக் கிடைத்தும் அந்தக் கதை காணாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம். இரண்டு மாதம் யாரையும் எங்கேயும் செல்லவிடாமல் வீட்டுக்குள் முடக்கிப் போட்ட ஊரடங்கு காலத்தில் தலைநகரில் சிக்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்த இளைஞர்களின் துயரத்தின் ஒரு துளி., கொழும்புக்கு தொழிலுக்காக வந்து தொழில் ஓரிடம் சாப்பாடு ஓரிடம், தங்குமிடம் ஓரிடம் என்று வாழ்ந்த மலையக இளைஞர்கள், அறையை விட்டு வெளியே வர முடியாமலும், கையில் பணமிருந்தும் சமைத்துண்ண வழியின்றி சாப்பாட்டிற்கு அலைந்தபரிதாப நிலை.

இதற்கிடையே சாப்பாடு தேடி அலைந்தவர்களை ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களாக கருதி கைது செய்து அடைத்தக் கொடுமை. என்றெல்லாம் தொடக்கத்திலேயே வரிகளில் சுவாரசியம் மிகுந்திருந்தது அந்தக் கதையின் முதற்பக்கம். இரண்டாவது பக்கத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உரிய காலத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலையும் அதற்கான எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டையும் ,சட்டதிட்டங்களையும் எடுத்துக் கூறப்பட்டதோடு. இந்த கொரோனா நோயைவைத்து அரசியல் நாடகமாடும் ஒருசிலரின் சுயநலத்தை வெளிக்காட்டும் வேதனையையும் காட்டப்பட்டிருந்தது .

கொரோனா நோயில் இறந்தவர்களை எரிப்பதே நல்லது இல்லை மதச் சம்பிரதாயங்களுக்கமைய புதைப்பதே நல்லது என்ற கருத்தை வலியிருத்தும் சிந்தனைகளும்,. கொரோனா உதவித்தொகை பெரும்பாலனவர்க்ளுக்குக் கிடைக்காததையோ, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அது உரியவகையில் கொடுக்க வேண்டும் என்றக் கோரிக்கையை முன் வைத்ததாகவோ இல்லை ஒரு மாதத்திற்கு ஐயாயிரம் உதவித்தொகை கொடுத்துவிட்டு இரண்டு மாதத்திற்கு மேலாக அடைத்து வைத்திருக்கும் ஒரு சில மாகாண மக்களின் மனக்குமுறலையோ எடுத்துக் கூறப்பட்டிருந்தது . மூன்றாம் பக்கத்தை வாசிக்க முன் வந்த மீட்டிங் அந்தக் கதை காணாமல் போவதற்கான குழியைப் பறித்து விட்டது.

இந்த கொரோனா காலத்தில் இக்கட்டில் இருக்கும் ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற நன்கொடையைக் கொடுத்து உதவ முன்வந்த செல்வந்தர் ஒருவரிடம் பணம்பெற வந்து கூட்டத்தில் நசுங்குண்டு இறந்துபோன ஏழைத்தைமார்கள் மூவரினது மரணத்திற்கு காரணம் யார்? சம்பவத்தின் உண்மை நிலை என்ன என்பதையும் நிச்சயமாக எடுத்துக் காட்டியிருக்கும் கதாசிரியரின் சமூக அக்கறையையும் காணக்கூடியதாக இருந்திருக்கும் அந்தக் கதை.

சமகாலத்து மக்களின் துயரத்தை அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாகவும் இருந்திருக்கக் கூடியது இப்போது காணாமல் போய்விட்டது. அதற்கு நிகராக இன்னொரு கதையைக் கொடுக்கலாம் என்றாலும் அதற்கும் வழியில்லை. ஆசிரியரிடமும் இந்தக் கதைபற்றி வேறு சொல்லியாகிவிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு சில கதைகளை வாசிக்க வேண்டியுள்ளதே என்றவாறு கையை கழுவிவிட்டு மறுபடியும் தந்து கேபினுக்குள் நுழைந்தார் தமிழ் மணி. ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையின் விளம்பர பக்கங்களையும் சஞ்சிகைகளையும் முன்னதாகவே வடிவமைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் எல்லாப் பத்திரிகைகளைப் போலவே அந்தப் பத்திரிகையும் வழக்கப்படி கவிதை, கதை ,துணுக்குகள் ,குறுக்கெழுத்துப் போட்டிகள் மற்றும் இலக்கியம் சார்ந்த சஞ்சிகையை வடிவமைத்துக் கொள்ளும் முன்னெடுப்புகளின் மூழ்கியிருந்தது.

எல்லோரும் அவரவர் பங்களிப்பினை சரியாக வழங்கத் தயாராகி முழு மூச்சுடன் இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு திரும்பியிருந்த தமிழ்மணி நாற்காலியில் அமர்ந்து மறுபடியும் ஒருமுறை அந்தக் கதையைத் தேடிவிட்டு நாற்காலில் அமர்ந்தார். அவர் அமர்ந்த நேரம் நல்ல நேரமாக இருந்தது. அவர் அடுத்து வாசிக்கக் கையில் எடுத்தக் கதை ஒன்று சமகாலத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதையாக அமைந்திருந்தது. அந்தக் கதையின் ஓட்டத்திற்கு நிகராக இல்லை என்றாலும் இது வேறு கோணத்தில் இருந்தது.

ஒரு நல்ல கதை காணாமல் போனதிலிருந்து தப்பித்துக்கொள்ள இப்போதைக்கு இந்தக் கதை லாட்டரி டிக்கட்டில் லடச்சங்கள் அடித்தது மாதிரி இருந்தது. இப்போதைக்கு இது போதும். ஆசிரியரிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றிவிடலாம் என்று பெருமூச்சு விட்டார்.

அந்தக் கதையைப்போல் இந்தக் கதையும் காணாமல் போய்விடக்கூடாது என்று கவனமாக அதை எடுத்து மாற்றி வைத்துவிட்டு ,இதுவரை வாசித்தக் கதைகளை எல்லாம் கதைகளை இட்டுவைக்கும் அந்தப் பெட்டியிலேயே வைத்தவர் பெட்டியை மூடுவதற்காக அதற்கான மூடியை எடுத்தார்.

என்ன ஆச்சரியம். ஒரு மூன்று நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் தேடவைத்து மனதை அலைக்கழித்த அந்த “உண்மை” நடந்தது எதையும் அறியாத ஒரு அப்பாவியைபோல் அங்கே சிரித்துக்கொண்டிருந்தது….

ஆம் “உண்மை” என்ற அந்தச் சிறுகதையை இதுவரையிலும் பெட்டியின் மூடியல்லவா மறைத்திருந்தது.. எல்லா இடத்திலேயும் தேடிய கதை அவசரத்தில் மின் விசிறியின் காற்றுக்குப் பறந்துவிடாமல் இருக்க பெட்டியின் மூடிக்கடியில் வைத்தது அப்போதுதான் நினைவுக்கு வரச் சிரித்துக்கொண்ட தமிழ்மணி..சரி இனி என்ன செய்வது. இப்போதாவது கிடைத்ததே என்ற சந்தோசத்தில் இதுவரையில் மூடி மறைத்திருந்த ‘உண்மை’ என்ற அந்தக் கதையின் தொடர்ச்சியையும் வாசிக்கத் தொடங்கினார்.

மெய்யன் நடராஜ் என்னுரை - காதலியின் கல்யாணம், 2022. சற்றே இடைவெளி விட்டு எனது இரண்டாவது தொகுப்பு சிறுகதைத் தொகுதியாக வெளிவருவதில் மனக்கிளை மகிழ்ச்சிப் பறவையை உட்கார வைக்கிறது. பொதுவாக ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே சற்று இடைவெளி விடவேண்டும் என்பார்கள். இங்கே எனது இரண்டாவது குழந்தைக்கு சற்று பெரிய இடைவெளி விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. “காதலியின் கல்யாணம்” . இது வெறும் காதலை மட்டும் கருவாகக் கொண்டு உருவானதல்ல.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *