முனைப்பு
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 239
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொலிஸ் நிலையம் நோக்கி
நான்
சென்று கொண்டிருக்கிறேன்,
றேணுக்காசக்ரவர்த்தியும் என்னுடன்.
காலை பத்து மணி
இளஞ் சூரியன் வீராப்பு
என் உடலில் தகிப்பு.
என் உள்ளத்தில் எண்ணற்ற கேள்விகள். எதுக்காக என்னை
அவை
பொலிஸ் ஸ்ரேசனுக்கு
கூப்பிட்டிருக்கினை?
உதவிப் பொலிஸ், அதிகாரி
ராஜ் பிஹாரி போஸ் என்னை விசாரிக்க
ஏன் துடியாய் துடிக்கிறான்? இதே ராஜ்
பிஹாரி போஸ் தான், இரண்டு வரியத்துக்கு
முன் வங்க பிஹார் நிலங்கள் இரண்டையும்
இணைக்கும் அரசின் முனைப்புக்கு எதிரான
மக்கள் போராட்டத்துக்கு
ஆதரவாய்
எங்கள் கல்லூரி
புரட்சிகர மாணவர் ஒன்றியம்
நடத்திய
ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடியடிப்பிரயோகம் நடத்தி முறியடிக்கத்
துடியாய்த் துடித்தான்.
இதே உதவிப் பொலிஸ் அதிகாரி
ராஜ் பிஹாரி போஸ் தான்
இன்றும்
என்னை
விசாரணை செய்ய
துடியாய்த்துடிக்கிறான்.
ஏன் இந்தத் துடிப்பு?
ஏலுமெண்டால் அவன்
என்னை
நல்லாய் விசாரிக்கட்டும். எதற்கும்
நான் தயார்த்தான்.
ரேணுஹா, நிமாய் கோஷ்,
இந்திரா, அனிஷ் ராய் சௌத்ரி
போன்ற எண்ணற்ற
மாணவத் தோழர் தோழியர் என்றும் என்பக்கம்.
றேணுஹாவைப்
பார்க்கும் போதெல்லாம்
என் உள்ளத்தில்
உல்லாசம், உத்வேகம்.
பரவசம்.
அவள்
அன்பின் வடிவாய்,
மனித உன்னதங்களாய் என்றும் மிளிர்கின்றான்.
அவளது பார்வையில் மானிடம்
ஜெக ஜோதியாய்
ஜொலிக்கின்றது ஆனால் இந்திரா?
இந்திராவுக்கு இன்று
ஏன் என்றுமில்லாத இந்த
அக்கறை என்மேல்?
அவளது அண்ணன்,
அந்த உயர் பொலிஸ் அதிகாரி
நரேந்திரகோஷிற்கு
என்னைக் காப்பாற்ற ஏன் இந்த முனைப்பு?
எண்ணற்ற கேள்விகள் என்னைக்
குடைவு. என்மேல் இந்திராவுக்கு
ஏன் இந்த திடீர் கரிசனை?
ஒரு நாள் கூட
நான் அவளுடன் பேசியதில்லையே?
அவளும் அப்படித்தான். அப்போ
அவள் என்னை
ஏன் இன்று அழைத்திருக்கிறாள்,
அவசரமாய்! இந்திராவை
நான் தினம் தினம் பார்ப்பு.
அவளது பெயர்கூட நேற்றுவரை
எனக்குத் தெரியாது.
அவளது வீடு
எங்கள் கல்லூரி
விடுதிக்கு அண்மையில் தான்.
ஒரு வருடத்துக்கு
முன்பு தான் நான்
அந்த விடுதிக்கு வந்தேன்.
காலையும் மாலையும்
நான்
எங்கள் கல்லூரிக்கு
சென்று திரும்பி
வரும் போதெல்லாம் இந்திராவின் தரிசனம்
எனக்குக் கிடைப்பு. இந்திரா
இளமையின் வசந்தத்தில்
காலடி எடுத்து வைக்கிறாள்.
அவள் அழகுச் சிலை. அவளது கனவு
காணும் விழிகளின் அடியில்
ஒருவித சோகத் திரை. ஏனிந்த சோகத்
திரை? தினமும் காலையும் மாலையும்
அவளது வீட்டு விறாந்தையில்
அவள் நிற்கின்ற
போதெல்லாம்
அவள் பக்கத்தில்
சிறுவன்.
சிறுவனுக்கு மூன்றோ,
நான்கு வயதிருக்கும்.
சிறுவன் அவளது மகனா?
அதெப்படி இருக்க முடியும்?
அவளது நெற்றியில்
குங்குமப் பொட்டில்லை.
அவளது தலையில் மொட்டாக்கு
சீலையுமில்லை. கட்டுக்குலையாத
அவளது உடலில் நெருப்புத்தணலாய்
கனல்கின்ற
தடித்த சிவப்பு
கரை போட்ட
வெள்ளைப் புடவை
இல்லை.
நீண்டு வளர்ந்து சுருண்ட
கடல் அலையாய் புரளும்
கரும் கூந்தல்
காற்றில் நீந்திக்கொண்டிருப்பு.
கன்னி கலையாத களை
அவளது முகத்தில்
நான்
காலையும் மாலையும்
கல்லூரிக்குச்
சென்று வரும் போதெல்லாம்
அவள் அவளது
வீட்டு விறாந்தையில் நிற்பு.
அவள் பக்கத்தில்
அந்தச் சிறுவன்
இன்முகம் காட்டி
கையசைப்பு.
ஆனால் அவளது முகத்தில் ஒரு வித இறுக்கம்.
ஏன் இந்த இறுக்கம்?
இந்திராவின் அக்கா சுபதாவும் சிறுவனின்
அப்பாபிமால் சென்னும் புலனாய்வுப்
பத்திரிகையாளர்கள். சிறுவனின்
அம்மாவும் அப்பாவும் விபத்தில் மரணம்.
இல்லை.இல்லவேயில்லை.
அவர்கள் இருவரும்
அமைச்சர் ஒருவரின்
நிதி மோசடிகளை
ஆதாரத்துடன்
அம்பலப்படுத்தியதற்காக,
அமைச்சரின் சதியினால்
படுகொலை.
இந்திராவும் இப்போ
புலனாய்வுப் பத்திரிகையாளர்.
இந்திராவுக்கு இன்று என்மேல்
ஏன் இந்தத் திடீர் அக்கறை? மேதினக்
கூட்டம் முடிந்து ஏழு மணியளவில்
நான் என் விடுதிக்கு வருகின்றேன். பாபுஜீ!’
நான் திரும்பிப் பார்க்கிறேன். ‘பாபுஜீஉங்களை
என்ரை
‘சோட்டாமா ‘வரட்டாம்’
மூச்சிரைக்க ஓடிவந்த
சிறுவன் கூறுகின்றான்.
எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி?
என்னால் இதை நம்பமுடியவில்லை.
‘ஒருவேளை அது
வேறை யாரோவாக
இருக்கலாமோ?’
எனக்கு சந்தேகம்.
‘என்னையா வரச் சொன்னா? ‘
ஐயமாய் நான்.
சிறுவனைக் கேட்கின்றேன்.
“ஓமோம் உங்களைத்தான்
சோட்டாமாவரட்டாம். “இல்லை
யில்லை
உன்ரை சோட்டாமா
வேறை ஆரையோதான்
கூட்டி வரச் சொல்லியிருக்க வேணும்
நீ ஆள் தெரியாமல் என்னட்டை வந்திருக்கிறாய்.’
‘பாபுஜி உங்களைத்தான் சோட்டாமாவரட்டாம்.
அதோ அங்கை நிக்கிறா. பாருங்கோ.
இந்திரா
என்னைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
‘வாங்கோ.
கெதியாய் வாங்கோ’
என் கையைப் பிடித்து இழுக்கின்றான்
சிறுவன். என்னுடன்
ஒரு வார்த்தை கூட
பேசாத இந்திரா இன்று
என்னை எதிர்பார்த்து நிற்கின்றாள்.
தயங்கித் தயங்கி நான் அவளிடம் செல்கின்றேன்.
என் கையைப் பிடித்து செல்கின்ற சிறுவனுக்கு
பெருமகிழ்ச்சி. நான் இந்திராவின் வீட்டு வாசலில்
கால் எடுத்து வைத்ததும் அவளது முகத்தில் மலர்ச்சி.
அவளது மென்மையான உதடுகள் பிரிகின்றன.
சிறு முறுவல்.
அவளது விழிகளில்
அசாதாரண ஒளிப்பிரவாகம்.
இது கனவா?
இப்படி நடக்குமென்று
நான் ஒரு போதும்
எண்ணியிருந்ததில்லை.
என் இதயத்தில் இளமையின் ஏக்கம், தாபம்
ஆவல், ஆசாபாசங்கள்
அனைத்தும்
முட்டி மோதி,
பொங்கிப் பிரவகித்து,
காட்டாற்று வெள்ளமாய்
அலை மோதிப் பாய்ச்சல். கணப்பொழுது தான்.
நான்
என் நிலைக்கு வருகின்றேன்.
என்னை எதிர்பார்த்து நின்ற இந்திரா
‘வாருங்கள் உள்ளே. ஜெயிலுக்குள் அல்ல
எங்கள் வீட்டுக்குள்.
புன்னகை ஒன்றை உதிர்த்து
என்னை வரவேற்று
உள்ளே
அழைத்துச் செல்கின்றாள்.
‘என்ரை சின்னண்ணா
உங்களை
அவசரமாய் பார்க்கவேணுமாம் அவர்தான்
உங்களை அழைத்து வரும்படி
கட்டளையிட்டார்.
கூறியவளாய் கதிரை ஒன்றை
இழுத்துவிட்டு
என்னை
அமரும்படி கூறுகின்றாள்.
‘அண்ணா, அண்ணா
நீங்கள் தேடியவர் இஞ்சை வந்துள்ளார்.
வாங்கோகெதியாய்
மகிழ்ச்சி பொங்க
இந்திரா தனது அண்ணனை கூப்பிடுகின்றாள்.
அவளது விழிகளில்
துடுக்குத்தனம்
ஆஜானுபகவான ஒருவர்
பொலீஸ் சீருடையில்
என்முன்.
எனக்குத் திகைப்பு ‘நமஸ்கார் பாபு.
என்பெயர் நரேந்திரநாத் கோஷ். நரேந்திரன்
என்று அழைக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னார் வங்க – பிகார் மாநிலங்கள்
இணைப்புக்கு எதிரான
மக்கள் போராட்டத்துக்கு
ஆதரவாய்
வங்க புரட்சிகர
மாணவர் ஒன்றியம்
ஆர்ப்பாட்ட பேரணி
ஒன்றை நடத்தியது. ஆண்-பெண் பேதமின்றி
ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடியே
புரட்சிக் கோஷமிட்டுக் கொண்டு
நாம் ஆக்ரோஷமாய்
முன் செல்கின்றோம். என்கையை
தோழி ரேணுஹா இறுகப்பிடித்தபடியே நாம் இருவரும்
ஆர்ப்பாட்டப் பேரணியின்
முன்னணியில்.
எங்கள் கைகளில்
செம்பதாகை.
புரட்சிக் கோஷமிட்டபடியே நாம் முன் செல்கின்றோம்
ஆர்ப்பாட்டப் பேரணியைத் தடுக்க பொலீஸ் படை குவிப்பு.
ஊர்வலத்தைத் தகர்க்க தடியடிப்பிரயோகம்
நடத்த
உதவிப் பொலீஸ் அதிகாரி
ராஜ் பிஹாரி போஸ் கட்டளையிட முஸ்தீப்பு.
பொலீஸ் உயர் அதிகாரி நரேந்திரநாத்
கோஷ் அதிரடித் தலையீடு. தடியடிப்பிரயோகம்
தடுத்து நிறுத்தம். மாணவர் பேரணி
காட்டாற்று வெள்ளமாய்
முன் பாய்ச்சல்.
அதே உயர் பொலீஸ் அதிகாரி நரேந்திரநாத் கோஷ்
இன்று இப்போ இங்கே என் முன். நரேந்திரனையும்
அவர் சகோதரி இந்திராவையும் அதிர்ச்சியுடன் நான்
பார்த்தபடியே இருக்கிறேன்.
‘பாலாபாபு.
நான் இந்த ஹுகிளி மாவட்ட
உயர் பொலீஸ் அதிகாரி.
இப்பதான் டியூட்டி முடிஞ்சு
வீடு வந்துள்ளேன்.
இன்னும் என் உடையை கூட நான் மாற்றவில்லை.
அவசர அவசரமாய்
நான் உங்களை
பார்க்க வேண்டியிருக்கு அதுதான்
உங்களை கூப்பிட்டழைதேன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
‘எதற்காக நீங்கள் என்னை அவசரமாய்
அழைத்தீர்கள்? ‘ ஆவலுடன் நான் கேட்பு.
நரேந்தரகோஸின் தாயார் வருகை. கைகூப்பி
நான் அவர்களை நமஸ்கரிப்பு. அவரும் என்னை
அன்பாய் வரவேற்பு. சிற்றுண்டியும் தேனீரும்
தந்து உபசரிப்பு. எதற்காக இவர்கள்
என்னை அவசரமாய் அழைப்பு?
நான் அறிய ஆவல்.
‘பாலா பாபு இன்றிரவு நீங்கள் உங்கள்
விடுதியில் தங்கக்கூடாது. ‘ நரேந்ரன் கூறுகின்றார்.
எனக்கு பிரமிப்பு.
‘ஏன் பாபுஜீ நான் எனது விடுதியில் தங்கக்கூடாது?
அப்போ நான் எங்கே தங்குவது, ‘
ஒன்றும் புரியாமால்
குழம்பிப்போய் கேட்கிறேன்.
பாலா பாபு
அவசரப்படாதையுங்கோ.
பதட்டம் வேண்டாம்
பாலா பாபு. எல்லாவற்றையும்
நான் விபரமாய் சொல்வேன். இப்பொழுதல்ல.
தருணம் வரும்போது
நான் விபரமாய் சொல்வேன்.
பாலா பாபு.
இன்று இரவு நீங்கள் தங்குவதற்கு ஏற்ற இடம்
ஏற்பாடாச்சு. நீங்கள் அங்குதான் இன்று
தங்கவேண்டும். இது எங்கள் கட்டளை
நரேந்தரன் பாபுவின் வார்த்தைகளில்
நிதானம் கண்டிப்பு.
இன்று இரவு உங்கள் விடுதியில்
நீங்கள் தங்கினால்
உங்களை அழைத்துச் சென்று மாமியார் வீட்டில்
தடுத்து வைத்து
விசாரணை செய்ய
நிச்சயம் ஆள் வரும்.
அதற்கான திட்டமும் தீட்டியாச்சு.
ராஜ் பிஹாரி போஸ் என்ற பொலீஸ்
அதிகாரி தான் இதன் சூத்திரதாரி. இதெல்லாம் எனக்கு
நன்றாய் தெரியும்.
இந்த விஷமிகளை ஓடவிட்டுத்தான்
பிடித்து அமத்தவேணும் பாலா பாபு நீங்கள்
எதற்கும் பயப்பிட வேண்டாம்.
எல்லாவற்றையும் நான்
அவதானித்துக்கொண்டுதான்
இருக்கிறன்.
நரேன் பாபுஜீ’
எதற்காக இந்தச் சதி
வேலை?
நான் எவருக்கும்
எந்தக் கெடுதலும்
செய்யவில்லையே
‘அதைப் பற்றி பேச
இப்போ நேரமில்லை
பாலா பாபு.
நாளைக்கு எல்லாம்
உங்களுக்கு விபரமாய் நிச்சயமாய் தெரியவரும். நீங்கள் இப்போ
நாங்கள் ஏற்பாடு செய்த
இடத்துக்குச் செல்லுங்கள்.
நாளை காலை
பத்து மணிக்கு
நான்டியூட்டியில் இருப்பேன்.
நீங்கள் அந்த நேரம் என்னை
நேராக வந்துபாருங்கள். எல்லாம் தெரிய வரும். இந்திரா இஞ்சைவா.
பாலாவை ரேணுகாவீட்டுக்கு
அழைத்துப்போ
இந்திரா என்னை தோழி ரேணுஹா
வீட்டிற்கு அழைத்து செல்கின்றாள்.
தோழி ரேணுஹா மஜும்தார் குடும்பத்தில்
நான்காவது பிள்ளை. ரேணுஹாவின் தந்தை
இந்திய சுதந்திரப் போராளி.
மஜும்தார் பதினாறு வயதில்
வங்க சிற்றகொங் ஆயுதக் கிடங்கு
தாக்குதல் போராட்டத்தில் பங்குபற்றியதற்காக
பத்து வருடங்கள் சிறையில் இருந்தவர்.
மஜும்தாரின் மனைவி மிருணாளினி
தேவி வங்கத்தின் பிரபல
மக்கள் கவி, முன்னனணி பாடகி.
மஜும்தாரின் மூத்த மகன்
சீதா ரஞ்சன்
வங்கத்தின் பிரபல வழக்கறிஞன்.
அத்துடன் தீவிர தொழிற்சங்கவாதி.
முதல் மகள் உஷாநந்தினி
வித்தியாசாகர் கல்லூரியில் வரலாற்றுப்
பேராசிரியர். இரண்டாவது மகள் சுபதா
பங்கபாஜிக் கல்லூரியில்
அரசியலில் விரிவுரையாளர். மூன்றாவது மகள்
ரேணுஹா
எனது சகமாணவி.
கலைப் பட்டப்படிப்பு
இறுதியாண்டு.
எங்கள் கல்லூரி
புரட்சிகர மாணவர் சங்க
செயலாளர்.
கடைக் குட்டி
ரமா.
கல்கத்தா கலைக் கல்லூரியில்
நாடகத்துறையில் பயிற்சி.
மஜும்தார் குடும்பமே
கம்யூனிஸ்ட் குடும்பம்.
நான் அங்கு வருவேன்.
என்று என்னை எதிர்பார்த்திருந்த
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
என்னைக்கண்டதும் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பு.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
இதயபூர்வமாய் உபசரிப்பு.
சப்பாத்தி ரொட்டியும்
பருப்பு, உருளைக்கிழங்கு கறியும்
இரவு உணவு.
அனைவரும் ஒன்றிணைந்து
மகிழ்ச்சியாய் பேசி இராச்சாப்பாடு. நள்ளிரவு வரை
நாம் அனைவரும் வங்க அரசியல்,
கலை இலக்கியம், தொழிலாளர்-விவசாயிகள்
போராட்டங்கள், வங்க புரட்சி பற்றிய கலந்துரையாடல்
காலை ஒன்பது மணிக்கு சோறும் பருப்பும் உருளைக்கிழங்கும்
அனைவருக்கும் அன்புடன் பரிமாறல்.
காலை பத்து மணி.
பொலீஸ் நிலையத்தை நோக்கி
நான் சென்று கொண்டிருக்கிறேன். தோழி ரேணுஹாவும்
என்னுடன்.
எங்கள் கல்லூரி புரட்சிகர மாணவர்
ஆர்ப்பாட்டப் பேரணி. ஆண்-பெண்
பேதமின்றி ஒருவர் கையை மற்றவர்
இறுகப் பற்றியபடியே உத்வேகமாய்
ஆர்ப்பாட்டப் பேரணி ஊர்வலம்
தோழி றேணுஹாவும் நானும்
ஒருவர் கையை மற்றவர்
இறுகப் பற்றியபடியே
பேரணியின் முன்னணியில்
சென்று கொண்டிருக்கும்
காட்சி
என்கண்முன்
நிழலாட்டம்.
இந்திரா
விடியது விடியு முன்பே
போகவேண்டிய இடமெல்லாம்
போய்
பார்க்க வேண்டியவர்கள்
எல்லோரையும்
பார்த்துவிட்டாள்.
முனைப்புடன்
பொலீஸ் நிலையத்தின்
முன்னால்
இந்திராவுடன் எங்கள் கல்லூரி
புரட்சிகர மாணவர் சங்க
தலைவர்
அணிஸ் ராய் சௌனத்திரி
பதினைந்து இருபது மாணவ மாணவி
தோழர் தோழியர்களுடன் அணிவகுத்து நின்றனர்.
உக்ரோஷத்துடன்.
பொலீஸ் உயர் அதிகாரி நரேந்தர கோஷ்
எம்மை அன்புடன் வரவேற்று விசாரணை ஆரம்பம்.
ராஜ் பிஹாரி போஸிற்கு ஏமாற்றம், ஆத்திரம்.
“நேற்று மாலை நாலரை மணிக்கு
நீர் எங்கு சென்றிருந்தீர்? ‘
‘சரம்பூர் நகரசபை மைதானத்தில் நடந்த மேதினக் கூட்டத்துக்கு
நான் சென்றிருந்தேன்.
‘யாருடைய மேதினம் கூட்டம்? வங்க தொழிலாளர்
விவசாயிகள் ஒன்றிணைந்த
மேதினக்கூட்டம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த மேதினக்கூட்டம்’
அந்தக் கூட்டத்தில் நீர் பேசீனீரா?
‘ஆம் பேசினேன். அதில் என்ன தப்பு?
‘நீர் ஒருவெளிநாட்டுப் பிரஜை உள்நாட்டு
அரசியலில் நீர் தலையிடலாமா? ‘நிச்சயமாக தலையிட
முடியாது.
அந்த உரிமையும் எனக்கு இல்லை. ஆனால் மேதினம்
சர்வதேச தொழிலாளர் தினம். தொழிலாளர்
தின விழாவில் பங்குபற்றியதில்
என்ன தவறு?
நீர்கூட்டத்தில்
பேசியுள்ளீர். அதுமாத்திரமல்ல. அங்கிருந்த
ஒரு கம்யூனிஸ்ட் தலைவரை
பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளீர்.
அத்துடன்
அவருக்கு மலர்மாலையும்
அணிந்துள்ளீர்‘
‘அது உண்மைதான்.
அதை நான் மறுக்கவில்லை.
அதிலென்ன தப்பு?
பங்கிம் முகர்ஜி
பாபுஜி
நாடறிந்த
கம்யூனிஸ்ட் தலைவர். அது மாத்திரமல்ல.
அவர்நாடறிந்த
உன்னத நாடகக் கலைஞர்.
அவர் தலைசிறந்த உன்னத நாடக நடிகர்.
வங்க புரட்சிக்கவிஞன். சுகந்தோபட்டசாரியாவின்
‘அஞ்சலோட்டக்காரன். ‘
கவிதை நாடகம் அந்த உன்னத
கலைப்படைப்பை
நிழல் நாடகமாக்கி தன்னந் தனியளாய் தானே
நடித்து வங்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற
உன்னத நாடக நடிகர். பங்கிம் முகர்ஜி என்ற
மகத்தான நாடகக் கலைஞர் பங்கிம் முகர்ஜியின்
நிழல் நாடகத்தைப் பார்த்து புரட்சிப் புயலாய் பொங்கி எழாத
வங்காளி
எவர்தானுமுண்டா?
இந்த உன்னத கலைப் படைப்பை
தடை செய்வதற்கு வங்க காங்கிரஸ் அரசு
எத்தனை தடவைகள் முயற்சி எடுத்து. இறுதியாய்
மண் கவ்வியதுதான்
மிச்சம்.
இப்படிப்பட்ட
புரட்சிக் கலைஞனை பாராட்டி
மலர்மாலை அணிந்ததில் தப்பென்ன?
அது தவறென்றால் நான் எந்தத் தண்டனையையும்
ஏற்கத்தயார்.
பாலாபாபு
உணர்ச்சி வயப்பட
வேண்டாம்
உங்கள்
செயல்பாட்டில்
தவறொன்றுமில்லை.
ஆனால்
உங்களை சிக்கலில் மாட்டிவைக்க
ஒரு சிலர் முனைப்பு. உள்நாட்டு அரசியலில்
நீங்கள் தலையிடுவதாய் தவறான குற்றத்தை
உங்கள் மீது சுமத்தி
உங்களை
நாடு கடத்துவதற்கு நீண்ட
நாட்களாய் திரைமறைவில் ஒரு சிலர்
தொடர்ச்சியாய்
சூழ்ச்சி செய்து வருவது
உங்களுக்கு தெரியுமா? நரேன் பாபுஜீ
எனக்கு அது
நன்றாகத் தெரியும்.
கடந்த இரண்டு
ஆண்டுகளாய்
எங்கள் கல்லூரி
மாணவர் சங்க
தலைவராயிருந்த
லலித் குமார் போஸும்
அவனது கையாட்களும்
எனக்கு எதிராய்
சூழ்ச்சி செய்வதில்
தீவிரமாய்
ஈடுபட்டு வருகின்றனர்.
என்பது எனக்கு
நன்றாகத் தெரியும்.
லலித் குமார் போஸின்
அப்பா ரமேஸ்குமார் நான்கு பெரிய மில்களின் சொந்தக்காரன்.
எமது கல்லூரி
மாணவர் சங்க தலைமையை
காலாதி காலமாய் லலித் குமார் போஸ் போன்ற
பிற்போக்கு கும்பல் தான்
பணத்தையும் அதிகாரத்தையும்
பயன்படுத்தி
தங்கள் கைவசம்
வைத்திருந்து வந்தனர்.
மாணவர்களின் நலன்களில்
என்றுமே அவர்கள்
அக்கறை காட்டியதில்லை. என்றுமே அவர்கள் நிர்வாகத்தின்
பக்கம் தான்.
அணிஷ் ராய் சௌத்ரி மிதினாப்பூர் மாவட்ட
ஏழை விவசாயியின் மகன். படிப்பிலும் பண்பிலும்
உயர்ந்து நிற்பவன்.
ஆனால் ஏழை விவசாயியின் மகன்
அனிஷ் ராய் சௌத்ரி
நான்கு மில்கள் சொந்னதக்காரனின்
மகன் லலித் குமாரை
எதிர்த்து போட்டியிடுவதா?
கடந்த இரண்டு ஆண்டுகளாய்
லலித் குமார் போஸ் தான்
கல்லூரி மாணவர் சங்க தலைவனாயிருந்தான்.
இந்த வருடம்
அனிஷ் ராய் சௌத்ரி லலித் குமாரை
எதிர்த்து போட்டியிட்டான். கல்லூரி மாணவர் சங்க
தலைவனாயிருந்தான். கல்லூரி கன்ரீன்
குத்தகை லலித் குமாரின் கையில் மூன்று வாரங்களாய்.
கல்லூரி நிர்வாகம் தட்டிக் கேட்க தயக்கம். தலைவர்
தேர்தலில் அனிஸ் ராய் சௌத்ரி
இலங்கை மாணவரின் ஆதரவுடன்
அமோக வெற்றி. அவர்களிடமிருந்த அதிகாரத்தை
எமது கல்லூரி மாணவர்களது பெரும்பான்மை
ஆதரவுடன் தகர்த்தெறிந்து மாணவர் சங்கத்
தலைமையையும்
நிர்வாகத்தையும்
புரட்சிகர மாணவர்கள்
இரண்டாண்டுகளுக்கு முன்பே கைப்பற்றி
பல சாதனைகளை
நிலைநாட்டி வருகின்றோம்.
எமது கல்லூரி
மாணவர் சங்கம்
அகில இந்திய மாணவர்சங்கம் சம்மேளனத்தின்
கிளை என்ற வகையில் புரட்சிகர
செயல்பாடுகளில் பங்காளியாய் இருக்கின்றது.
பாலா பாபு.
உங்கள் கல்லூரியில்
கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற இலங்கை மாணவர்களது
ஆதரவும்
புரட்சிகர மாணவர் சங்கத்தின் வெற்றிக்கு
வழி வகுத்தது.
இலங்கை மாணவர்களையும்
வங்காள மாணவர்களையும் ஓரணியில் திரட்டி ஆதரவளித்தது
நீங்கள் தான் என்பது
லலித் போஸ் குழுவுக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் தான் அவர்கள் உங்களுக்கு எதிராக
தொடர்ந்து சூழ்ச்சி
செய்து வருகின்றனர்.
எப்படியாவது
உங்களை நாடு கடத்தி விட வேண்டும்
என்ற வெறி
லலித் குமார் போஸிற்கு.
ராஜ் பிஹாரி போஸ்
லலித் குமார் போஸின்
உடன் பிறந்த அண்ணன் தான்.
பாலா பாபு நீங்கள்
விழிப்பாயிருங்கள். விசாரணை முடிந்தது.
நீங்கள் போகலாம்’ நான், ரேணுஹா, இந்திரா,
அணிஷ் ராய் சௌத்ரி
நாங்கள் அனைவரும்
பொலீஸ் நிலையத்திலிருந்து
தலை நிமிர்ந்தபடியே
வெளிவருகின்றோம்.’
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |