முனைப்பு
கதையாசிரியர்: காசி ஆனந்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 469
(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலைப் பனி
கொக்கும் குருவியும் குளிரால் நடுங்கின.
தங்களுக்குள்ளேயே பேசி அவை ஒரு முடிவுக்கு வந்தன.
‘இன்று நான் குளத்துக்குப் போவதில்லை – வேண்டுமானால் மீன் இங்கே வரட்டும்’ என்றது கொக்கு.
‘நானுந்தான் தோப்புக்குப் போவதில்லை – வேண்டுமானால் பழம் இங்கே வரட்டும்’ என்றது குருவி.
பொழுது கரைந்தது.
பசி வயிற்றைக் கிள்ளியது.
நடுப்பகல் தாண்டியபின்பும் பசியை எப்படித் தாங்கிக் கொள்ளமுடியும்.
கொக்கு குளத்துக்குப் போனது. குருவி பழத்துக்குப் போனது.
மரத்தில் இருந்த அணில் பாடியது:-
‘கொக்கைத் தேடிக் குளம் வராது
குருவியைத் தேடிப் பழம் வராது’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.