முதல் பந்தி – ஒரு பக்க கதை





“கல்யாண வீட்டில் முதல் பத்தியில் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி…சாப்பாடு ஆனதும் இவ முதலிலேயே உட்கார்ந்து ஒரு பிடி பிடிச்சிடறா….முட்டையைக் கூட விட்டு வைக்கிறதில்லே!….எனக்குப் பார்க்க அசிங்கமா இருக்குதடி!……”
அந்தப் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் பெண்கள், சத்துணவைக் கவனிக்கும் தன் தோழி மாலதியைப் பற்றிப் பேசிச் சிரிப்பதைக் கேட்ட மல்லிகாவுக்குப் பொறுக்க முடிய வில்லை! மாலதியிடம் கேட்டே விட்டாள்.
“ ஏண்டி!…..இப்படி பேரைக் கெடுத்துக்கிறே?…..நீயே தினசரி முதலில் உட்கார்த்து சாப்பிடறதைப் பார்த்து எல்லோரும் அசிங்கமாப் பேசறாங்கடி!….”
“ போடி!….பைத்தியகாரி…..சமைச்சவளுக்குத் தான் அதில் உள்ள குறை நிறை நல்லாத் தெரியும்!….முட்டையை ஏன் சாப்பிடறேனா….வர வர பழைய முட்டைகளை சப்ளை பண்ணிடறாங்க…அதை சாப்பிடும் பொழுது தான் நமக்கே அது தெரியும்!…பாவம்!.. சின்னஞ் சிறுசுகளுக்கு என்ன தெரியும்?…இங்கே சாப்பிடற நூறு குழந்தைகளின் தாய்மார்கள் சார்பாகத்தான் நல்லது கெட்டது பார்த்து நான் பரிமாறுகிறேன்!…”
மாலதி சொன்னதைக் கேட்டு மல்லிகா அசத்து போய் விட்டாள்!
– 28-8-2013
![]() |
கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க... |