முகவரி தேடும் காற்று

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 153 
 
 

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-28

அத்தியாயம் 25 – அம்மாவின் குரல்

தன்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்த எல்லா எக்ஸ்க்யூடிவ் ஆபிசர்களிடம் கம்பெனியின் வளர்ச்சிக்கான செய்தியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, செல் போன்

சங்கீதமாக சப்திக்க, யாருடைய செல் என்று கவனிக்காமல் “ஹலோ தமிழரசு ஹியர் ஹு இஸ் திஸ்” என்றான் கொஞ்சம் எரிச்சலாக.

“அரசு மகனே! எப்படி இருக்கிறாய்?” என்ற அம்மாவின் குரலைக் கேட்டதும் ஒருமுறை திக்கு முக்காடிப் போனான்.

எல்லாரும் தன்னையே கவனித்துக் கொண்டிருந்ததை பார்த்தும் “அம்மா ஒரு நிமிடம்” என்று சொல்லி விட்டு நீங்கள் கொஞ்ச நேரம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள். நான் திரும்பவும் வந்து கலந்து கொள்கிறேன்” என்று கூறி விட்டு வெளியே வந்தவன் கன்னத்தில் சிதறிய கண்ணீரை துடைத்து விட்டு “சொல்லுங்கள் அம்மா! எப்படி இருக்கீங்க?” என்றான்.

“நான் நல்லா இருக்கேம்பா. என்னுடைய சுகத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. நீ எப்படி இருக்கிறாய்? “ எதிர் முனையில் அம்மாஅழுவதை உணர்ந்தான்.

அரசு உணர்ச்சிப் பிழம்பாகி “அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” அவனை அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தான். கைகுட்டையால் முகத்தைத் மறைத்துக் கொண்டு.

“அழாதே அரசு. இத்தனை நாளாகியும் என்னைப் பார்க்கணும் என்று ஒரு முறை கூட உனக்கு தோன்ற வில்லையா ராஜா”

“அது… அது… வந்து..”

“தெரியுமடா. உன் தந்தையின் வைராக்கியம் உன்னிடமும் அப்படியே நிரம்பி வழிகிறது. ஏம்பா, பணம் சம்பாதிப்பதற்காக அம்மா, அப்பாவை ஒதுக்கி வைத்து விட்டுப் போக வேண்டுமா? ஏண்டா எங்களைப் பார்க்கத்தான் வரவில்லை. எத்தனை எத்தனை டெலிபோன்கள்.. கையில்லே செல்போன்.. ஒருமுறை தொலைபேசி எடுத்து என்னோடு பேசக்கூடாதா? நான் என்னடா தவறு செய்தேன்” அம்மா பேசமுடியாமல்..அழ ஆரம்பித்து… எதிர் முனையில் பேச முடியாமல் …….

“அம்மா வீணாக ஏன் அழுகிறீர்கள். தவறு செய்தது நான். சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஏதோ ஒரு காந்தக் கவர்ச்சியில் இழுக்கப்பட்டு வந்தவன். உங்களோடு கூட பேச முயற்சிக்காமல்…” என அவன் முடிக்கும் முன் “ஒரு வேளை நம்ம வீட்டு போன் நம்பர் உனக்கு மறந்து போச்சோ என்னவோ” என்றார் அம்மா.

“ஏம்மா என்னைக் கொல்கிறீர்கள்?” என்று கெஞ்சினான்.

கோபத்தோடு “அரசு உனக்கு நம் வீடு எங்கிருக்கிறது என்று தெரியுமல்லவா?” என்று கேட்டாள் அம்மா.

“தயவு செய்து என்னைக் காயப்படுத்தாதீர்கள் அம்மா. போதும், இன்னும் கொஞ்சநாள்… கொஞ்சநாளில் உங்களைப் பார்க்க….. உங்களோடு உங்கள் பிள்ளையாக தங்கி இருக்க வந்து விடுவேன்.

“……”பேசமுடியாமல் அழ ஆரம்பித்த அம்மா, ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, “எப்போது கண்ணா வரப்போகிறாய்? என் கண்கள் மங்கி உன் முகம் காண முடியாமல் போன பிறகா? ஏண்டா உனக்கு கல் நெஞ்சா? இவ்வளவு நேரம் பேசிய பிறகும் அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாயா?” என்று கேட்டாள் அம்மா.

“அப்பாவிற்கு என்ன? நல்ல சுகமாக இருப்பார்கள். அப்பாவைப் பற்றி அப்பாவின் மனைவி உன்னை விட அவரின் மகனான நான் மிகவும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அவருடைய வறட்டுக் கவுரவம் அவர் சம்பாதித்தியத் தோடே வளர்ந்த விஷயம். அப்பாவிடம் எனக்குப் பிடித்த விஷயமே. சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். முதலில் நம் உடம்பை கவனித்துக் கொண்டால்தான் நாம் மற்றவர்களை கவனிப்பதை மட்டுமன்றி சம்பாதிக்கவும் முடியும் என்று சொல்பவர் அது சரி, நீங்க எப்படி இருக்கீங்க?”

“நான்… எனக்கென்னப்பா. எங்களுக்கிருந்த செல்வம் நீயே என்னிடம் இருந்து போய்விட்ட பிறகு… என்ன மகிழ்ச்சி இந்த

வாழ்க்கையில்…..? பாபு அடிக்கடி வந்து நீ எங்கிருக்கிறாய்….? எப்படி இருக்கிறாய்? என்பதைப் பற்றிச் சொல்லக் கேட்டுத்தான் மகிழ்ச்சியோடு இருக்க முயற்சிக்கிறோம்.”

“ஓ பாபு…. அப்பாவின் நண்பர் இன்னும் என்னைத் துரத்திக் கொண்டு தானிருக்கிறாரா? சரி, அம்மா அப்புறம் போன் பண்ணுகிறேன்” என்று தொடர்பை துண்டித்து விட்டு தன் பணியாளர் ஒருவனை அழைத்து இந்த செல்லில் இருக்கும் கார்டை எடுத்து மாற்றி புது எண்ணுள்ள கார்டு போட்டுக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டு, உள்ளே வந்து ஹியூமென் ரிசோர்ஸ் டைரக்டர் இரவியை அழைத்து “என்னைக் கவனிக்க…என்னைத் தொடர்ந்து யாராவது வருகிறார்களா?” என்று கவனிக்க யாராவது ஒருவரை நியமியுங்கள்.

“எனக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை ரிப்போர்ட் தரச் சொல்லுங்கள்” என்றான்.

“சரி சார்” என்று நகர்ந்தார் இரவி.

அத்தியாயம் 26 – திரும்பவும் சிங்கப்பூர் பயணம்…

சூரியனின் வெளிச்சத்தின் தங்க நிறம் பூமி எங்கும் பூசப் பட்டுக்கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் தங்கள் வேலைக்குப் போவதற்கு “கிச்..கிச்…” குரல் எழுப்பி தயாராகிக் கொண்டிருந்தன. இரவு மகள் பூமித்தாயிடம் விடைப்பெற்றுக் கொண்டிருந்தாள்.

அலைபேசியை எடுத்துப்பார்த்த திலக் “என்ன அரசு இவ்வளவு காலையிலே போன். எதாவது அவசரமா?” என்றான்.

“ஆம் தீபக். என்னை அப்பாவின் ஆட்கள் சூழ்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு வருடத்திற்காவது நான் ஒளிந்தாக வேண்டும்.”

“ஒன்று புரியாமல்தான் கேட்கிறேன் அரசு. எதற்காக இந்த ஒளிவு மறைவு. நீயும் உன் உலகம் கட்ட ஆரம்பித்து விட்டாய். வீட்டோடு போய்விடுவது நல்லது தானே.” என அவன் பேசி முடிப்பதற்குள் இன்னும் ஓராண்டாவது ஓரளவு சம்பாத்தியம் செய்து இன்னும் சில

வியாபாரங்களை நிலைப்படுத்தி விட்டு அம்மா அப்பாவிடம் திரும்பலாம் என்றிருக்கிறேன்.” என்றான்.

“சரி. இப்போ எதற்காக அழைத்தாய்? இங்கே இன்று என் அலுவலகத்திற்கு என் அம்மா வரக்கூடும் என்று அனுமானிக்கிறேன். அதனாலே சிங்கப்பூருக்கு ஒரு டிக்கெட்டும் ஒரு பயணிகள் விசாவும் எடுத்துவிடு. நான் நேராக ஏர்ப்போர்ட் வருகிறேன்.”

“சிங்கப்பூரில் எங்கே தங்கப் போகிறாய்?”

“சொல்லப் போனால் இது ஒரு வியாபாரப் பயணம்தான். உன்னிடம் ஏற்கெனவே சொல்லியிருந்த படி நான் குஜராத்தில் ஒரு எண்ணெய் கம்பெனியில் ஒப்பந்தம் செய்திருந்ததை விரிவாக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தோம்.”

“ஏய் அரசு எங்கே போகிறாய் என்றுதான் புரியவில்லை. இந்த எண்ணெய்க் கிணறு விவகாரத்தில் எல்லாம் எப்போது நுழைந்தாய். விட்டால் நிலாவில் போய் ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தப்போய் விடுவாய் போலிருக்கிறதே.”

“முடிந்தால் அதையும் ஒருகை பார்த்து விட வேண்டியதுதான். சரியாகச் சொன்னால் அடுத்த வாரம் தான் சிங்கப்பூர் பயணமே முடிவு செய்திருந்தேன். இப்போது அம்மாவின் தொந்தரவு….

வீட்டிற்குப் போய் விடலாம்தான். அப்பா இது உங்கள் இரத்தம். என்னாலும் இந்த அளவிற்கு கொடி கட்ட முடியும் என்று அவருக்கு முன்னால் போய் நிற்க வேண்டும். ஏய்.. என்னப்பா. பேச்சை காணோம்.”

“உண்மையிலேயே நீ ஒரு அதி வேக பிஸினஸ் மேகந்தான். மறுக்க வில்லை. எங்கேயாவது சறுக்கி விடுவாயோ? என உன் வேகம் தான் பயம் காட்டுகிறது.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா அப்பாவிடம் திரும்பி விட்டால் இந்த வேகம் கண்டிப்பாக வடிந்து விடும்.”

அதுவும் சரிதான். நான் விமானப் பயணச் சீட்டும் விசாவும் கிடைத்தவுடன் அழைக்கிறேன்.” என்றான் தீபக்.

“சரி.” என்று போனை வைத்து விட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தான் அரசு. ரோட்டில் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்து நின்று சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார் அப்பாவின் நண்பர் பாபு.

சட்டையை வேகமாக எடுத்து மாட்டிக்கொண்டு பின்னால் வெளியே வந்து, ஒரு டாக்சியில் ஏறிக் கொண்டு “காந்தவிலி போப்பா” என்றான்.

திரும்பவும் அலை பேசியில் அழைப்பு வர “யாரு?” என்றான் அரசு.

“சார் நாங்கள் ‘தின விடியல்’ தினசரி பத்திரிகையிலிருந்து பேசுகிறேன்.”

“சரி. சொல்லுங்க. விளம்பர சம்பந்தமா நீங்கள் பேச வேண்டுமெனில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என்று அவசரமாகச் சொன்னபோது “சார் நாங்கள் அதற்காக கூப்பிட வில்லை. எல்லா ஆண்டும் ‘ஒரு தமிழ் இளம் வியாபாரக் காந்தம்’ என்று ஒரு தமிழ் வியாபாரியை (பிஸினஸ் மேனை)த் தேர்ந்து அவருக்கு விருது கொடுப்பது வழக்கம்” என முடிக்கு முன் …

“இந்த ஆண்டு… நான் கொஞ்சம் அவரசமாய் போய்க்கொண்டிருப்பதால் அடுத்த அண்டு பார்த்துக் கொள்ளலாமே. நீங்கள் வேறு யாரையாவது முயற்சி செய்யுங்களேன்…” என்றான்.

“சார், இந்த வருடம் உங்களைத் தேர்வு செய்து விட்டோம். நீங்கள் சம்மதம் சொல்லி விட்டால்….”

“சரி. எங்கே? எப்போது? என்ன நிகழ்வு?”

‘’சார் வருகிற இருப்பத்தொன்றாம் தேதி ஞாயிறு மாலை…. ‘’ என்றது எதிர்முனை.

‘’ஒரு நிமிடம்’’ என்று சொல்லி விட்டு கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் அன்று வேறு ஏதாவது பணி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து விட்டு ‘’சரி சொல்லுங்கள்’’ என்றான்.

‘’மகா கவி காளிதாஸ் அரங்கத்தில் ஒரு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறோம். மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.”

“சரி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? “ என்றார்.

“எந்த விளம்பரம் போட்டாலும் என் பெயர் போடாமல் கொஞ்சம் சஸ்பென்ஸாக இருந்தால் நலமாக இருக்கும்.”

“ உங்கள் விளம்பரத்திற்கான எல்லா செலவையும் நானே ஏற்றுக் கொல்கிறேன்.” என்றான் அரசு.

“ஒவ்வொருத்தரும் தன் பெயர் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் இந்நாளில் பெயர் போட வேண்டாம் என்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பவும் தொடர்பு கொள்கிறோம்.” என்றது எதிர்முனை.

“சரி, முடிவு பண்ணி விட்டு அழையுங்கள்” என்று அலை பேசியை மூடி விட்டு ‘என்ன செய்யலாம். அப்பா ஏன் என்னை இவ்வாறு துரத்துகிறார்?” என்று அரசு யோசித்துக் கொண்டிருந்த போது “சார்

எங்கே இறங்க வேண்டும். காந்திவிலி வந்தாச்சு”” என்றான் ஓட்டுநர்.

“அந்த புனித பாத்திமா ஆலயத்திற்கு பக்கத்தில் இறங்கிக் கொள்கிறேன்” என்றான் பையிலிருந்து பணம் எடுத்தவாறு.

அத்தியாயம் 27 – விருது வழங்கும் விழா

சிங்கப்பூரிலிருந்து இறங்கிய விமானப்பறவையிலிருந்து இறங்கிய அரசு “வெளியே வருகிறேன். ஏர்ப்போர்ட் வாசலுக்கு வா.” என்று ஓட்டுநருக்கு ஆணை கொடுத்து விட்டு வாசலுக்கு வந்ததும் ஏறிக்கொண்டான்.

ஓட்டுநர் திரும்பிப் பார்த்த போது “ஆங்… முல்லுண்ட் மகாகவி காளிதாஸ் அரங்கத்துக்கு போப்பா” என்றான்.

விமான நிலையத்தின் வெளியே உலோக விளக்குகள் இரவை விரட்ட முயன்று கொண்டிருந்தன.

எதிர்பாராத விதமாக அங்கே பெரிய போக்குவரத்து தடையாகி நின்று கொண்டி ருந்ததால் அலைபேசியை எடுத்து “மிஸ்டர்

ஜேம்ஸ், தின விடியல் ஆசிரியர்தானே பேசுகிறீர்கள்?” என்று கேட்டான்.

“ஆம் சார். சொல்லுங்கள்.”

“இங்கே கொஞ்சம் டிராஃபிக் ஜாமாகி விட்டது. நீங்கள் நிகழ்வை ஆரம்பியுங்கள். வந்து விடுகிறேன்.”

“ஆங்… சரி சார்.”

“நாம் ஏற்கெனவே பேசிக்கொண்ட படி என் வீட்டிற்கு…என் அப்பா அம்மாவிற்கு செய்தி போயிருக்காது என நினைக்கிறேன்.”

“வாய்ப்பில்லை சார். உங்கள் பெயர் போடாமல் செய்திகளும் விளம்பரங்களும் போட்டிருந்தால் அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”

“சரி, நான் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன். முதல் அமைச்சர் வந்தாச்சா?”

“இன்னும் இல்லை சார். அவரும் சரியாக அரைமணி நேரத்தில் வருவதாக அவர் உதவியாளர் தொலைபேசியில் செய்தி சொன்னார்.”

“சரி. “ என்று கூறி விட்டு, குறிப்பெடுத்துக்கொண்ட பேப்பரை எடுத்து என்ன பேச வேண்டும் என ஒரு முறை ஒத்திகை செய்து கொண்டான்.

‘தின விடியல்’ மற்றும் மராத்திய மாநில எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் ‘தமிழ் இளம் வியாபாரக் காந்தம்’ விருது வழங்கும் விழா என பெரிய பதாகை அரங்கின் முன்னும் மேடையிலும் மின்னியது.

நிறைய தமிழ் அன்பர்களும், வியாபாரிகளும் ஆங்காங்கே நின்று “இதென்னப்பா ஆள் பேர் கூட போடாமல் இவ்வளவு சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் கார் வந்து விட, முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர் புடை சூழ முதல்வர் அரங்கத்திற்குள் நுழைய பின்னால் காரில் வந்து இறங்கிய தமிழரசைப் பார்த்த ஜேம்ஸ் , “சார் வாங்க. முதல்வர் வந்தாச்சு. மேடைக்கு போயிடலாம்.” என்றார்.

“கொஞ்சம் நெர்வஸாக இருக்கிறது. நான் வேண்டுமென்றால் முன் வரிசையில் அமர்ந்து கொள்ளட்டுமா?” என்றான் அரசு.

“அது நன்றாக இருக்காது. முதல்வருக்கு அடுத்து உங்களுக்கு இருக்கை அமைத்திருக்கிறோம். வாருங்கள்” என அழைத்துக் கொண்டு சென்றார்.

உள்ளே வந்து மேடையில் அமர்ந்து முதல்வருக்கு அறிமுகமாகி கை குலுக்கிக் கொண்டு சிரித்தவாறு திரும்பிய போது கடைசி வரிசையில் அப்பாவின் நண்பர் பாபு தென்பட்டார். நிகழ்வு முடிவதற்கு முன் சொல்லாமல் கிளம்பிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டான் அரசு.

மேடையில் பலர் பேசிக்கொண்டிருக்க அடுத்ததாக “நமது இளந்தலைமுறை புதிய தமிழ் இளம் பிஸினஸ் மேன் திரு. தமிழரசு ஜே.கே. அவர்களுக்கு அவருடைய தந்தையும் தாயும் விருது வழங்குவார்கள்” என்று மேடையில் அறிவிப்பு வர கொஞ்சம் குழம்பிப் போன அரசு திரும்பிப்பார்த்தான்.

மேடையின் பின்னால், உள்ளேயிருந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் வந்து கொண்டிருக்க” மும்பையின் மிகப்பெரிய பிஸினஸ் மேன் திரு.ஜே.கே., மற்றும் அவரது மனைவியார் திருமதி.ராணி ஜே.கே. இருவரும் இணைந்து முதல்வரும் கலந்து கொள்ள இப்போது திரு.தமிழரசு அவர்களுக்கு இந்தச் சிறந்த விருதை வழங்குகிறார்கள்.” என திரும்பவும் அறிவிப்பு வர உள்ளே அமர்ந்த கூட்டம் மொத்தமாக எழுந்து கை தட்டி அமர்க்களப் படுத்த,

மெதுவாக நழுவி விடலாம் என்று வேகமாக மேடையிலிருந்து இறங்கினான் அரசு.

“எங்கேடா போறே. வா. “ என எதிரே வந்த அப்பா ஜே.கே. அவனை மேடைக்கு இட்டுச் சென்றார்.

விருதை எடுத்து ஜேம்ஸ் முதல்வரின் கையில் தர அவருடன் ஜே.கே. மற்றும் ராணியும் விருதைப் பிடித்துக்கொள்ள கண்ணீருடன் வேறு வழியில்லாமல் ‘தான் மாட்டிக்கொண்டோம்’ என்று உணர்ந்தவாறு அம்மா அப்பாவை பார்த்துக் கொண்டே விருதை வாங்கினான்.

புகைப்படக் காரர்களும் வீடியோ காரர்களும் போட்டிப் போட்டு வித விதமாகப் போட்டோ எடுத்துத் தள்ள, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்த வேளையில் திருமதி. ராணி ஜே.கே. எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தாள்.

அதைக் கவனித்த தமிழரசு “அம்மா” என்ற அலறலோடு, கீழே விழுந்த அவளைத் தூக்கி “தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, வாங்கி அவள் முகத்தில் தெளித்து அவள் மயக்கம் தெளியாததால் “விலகுங்கள்” என்று சொல்லி அன்னையைத் தூக்கிக்கொண்டு காருக்கு ஓடினான். பின்னாலே ஜே.கே.யும் பாபுவும் கை கொடுத்துக்கொண்டே அவனோடு ஓடினர்.

அத்தியாயம் 28 – அம்மாவிற்கு என்னாச்சு?

எய்ம்ஸ் மருத்துவ மனையில் அவனுக்குத் தெரிந்த மருத்துவர் இருந்ததால் உடனடியாக ஐ.சி.யு.வில் சேர்த்து குளுக்கோஸ் ஏற்றச் சொல்லிவிட்டு “டாக்டர் என்னாச்சு’’ என்று பதறினான்.

“கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அரசு. உங்கள் அம்மாவிற்கு ஒன்றுமில்லை. அவர்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றார் டாக்டர் குணா.

வெளியே வந்த போது அப்பாவும் பாபுவும் பேசிக் கொண்டிருக்க, திலக், பூனம், அனாமிகா மூவரும் வேகமாக வந்து “அரசு, அம்மாவிற்கு என்னாச்சு? என்ன பிரச்சினை” என்று கேட்டார்கள்.

“ஒன்றுமில்லை. சரியாக சாப்பிடாததனாலே வந்த மயக்கம்தான்.”

அனாமிகா “இதுக்குத்தான் சொன்னேன் ஒழுங்காக வீட்டிற்குப் போய் அம்மாவைக் கவனி” என்று கத்தினாள்.

எல்லோரும், ஜே.கே. பாபு மற்றும் அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்க்க மெதுவாக பூனத்தின் பின் மறைந்து கொண்டாள் அனாமிகா.

டாக்டர் குணா வந்து, “அரசு பிரச்சினை ஒன்றுமில்லை. அம்மா ஒழுங்காகச் சாப்பிட வில்லை என்று நினைக்கிறேன். குளுக்கோஸ் போட சொல்லி இருக்கிறேன். போய்ப் பாருங்கள்” என்றார்.

வேகமாக உள்ளே வந்த அரசு அம்மா விழித்திருப்பதைப் பார்த்து “என்னாச்சும்மா? என்றான் கதறி அழுதுகொண்டே.

கையைக் காட்டி அருகில் அழைத்து அவனை அப்படியே ஆரத்தழுவிக் கொண்ட ராணி அம்மா “எப்படிப்பா இருக்கே?” என்றாள்.

“எனக்கென்ன குறைச்சல். கல்லு மாதிரி இருக்கேன். நீங்க…. நீங்க… “ அரசினால் அழுகையை அடக்க முடியவில்லை.

“அழாதே கண்ணா. இப்போ என்னைப் பார்த்து அழுகிறாய். உன்னைக் காணாமல் தினம் தினம் அழுதேன் தெரியுமா?” என்றாள் அம்மா.

அதற்குள்ளாக கொண்டு வந்த ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் பிழிந்து “அம்மாவிற்கு கொடுங்கள்” என்றாள் அனாமிகா.

ஜூஸை வாங்கி அம்மாவிற்கு கொடுத்து விட்டு கண்களைத்துடைத்துக் கொண்டான்.

“அப்புறம் அரசு . நான் மிகவும் வலிமையான பெண் மகனே இப்படிப்பட்ட செயல்களுக்கெல்லாம் எளிதில் பயந்து விடுபவள் அல்ல. இந்த இந்த மயக்கமெல்லாம் ஒரு நாடகம் தான். அப்பா சொன்னார். நான் நடித்தேன்அவ்வளவு தான்.” அன்றாள் அம்மா.

“ஏதோ அரசு வீட்டுக்கு வந்தானே” என்றார் அப்பா.

“இது மருத்துவமனை அப்பா. நான் இன்னும் வீடு திரும்பவில்லை.” என்றான் அரசு.

“என்ன திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா?” என்று பாபு கேட்க, “சார் கார் வந்தாச்சு. வீட்டிற்கு கிளம்புவோமா?” என்றான் ஓட்டுநர்.

“அரசு இதெல்லாம் யாரு… இந்தப் பெண்ணைப் பார்த்தால்… “ என்று அனாமிகாவைக் காட்டிகேட்டாள் அம்மா.

“அது..” என்று சிரித்தான் அரசு.

“எங்களுக்குத் தெரியும். பாபு தான் எல்லாம் வந்து சொல்றாரே. ராணி உன் வருங்கால மருமகள். நம்மள பொண்ணு பார்த்து அலைய வேண்டாம்னு அவனே தன் வருங்காலத்தை தெரிந்து கொண்டான்” என்றார். பின்னாலே நின்று சிரித்த ஜே.கே.”

“பேரு என்னம்மா. வா உட்கார்”

“அனாமிகா”

“அனாமிகாவா….இனியாவது எங்களை விட்டு போக மாட்டியே அரசு. “ என்றாள் அம்மா.

“போக விட மாட்டேன் அத்தை” என்று அனாமிகா சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

(முற்றும்)

– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *