முகவரி தேடும் காற்று

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 244 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் 4 – ஜெயிப்பதில் மிக்க மகிழ்ச்சி

“முதலில் உங்களுடைய பணத்தில் தான் நான் சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் என் காலில் நிற்க வேண்டுமெனில் தனியாக எந்த ஒரு முதலீடும் இல்லாமல் உழைத்து முன்னேறினால்தான் எனக்குப் பெருமை என்பதை உணர வைத்து விட்டீர்கள். ரொம்பா நன்றி.”

“ஆம் சொல்ல மறந்து விட்டேன். இது உன் விருப்பத்திற்காக நாம் அமைத்துக் கொண்ட களம். நீ வீட்டிற்கு எப்போதும் போல் வந்து போக வேண்டும். எனக்கு நீ தனியாக நின்று உன் காலில், பலத்தில் ஜெயிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனால் உன்னைக் காணமல் இருப்பதில் பிரச்சினை இல்லை. எனக்கு உன் அம்மா மேல்தான் பயம். அவளை நீ எப்போதும்போல் சந்திக்க வேண்டும். இது என்னுடைய அன்பு கட்டளை என்று கூட எடுத்து கொள்ளலாம்.”

“இனி நீங்கள் கட்டளை போட்டாலும் சரி. கட்டிப்போட்டாலும் சரி. இந்த அரசு தனி மனிதன். என் அம்மாவிற்காகவோ, நான் என் கொள்கைகளை விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை. முடிந்தால் நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று வேகமாக எளியே கிளம்பினான்.

“என்னங்க… அவன் பாட்டிற்கு கிளம்புகிறான். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.” என்றாள் ராணி அழுகையோடு.


”நீலா என்னதான் சொல்லிறாய்?” பெப்சியை உறிந்தபடி கேட்டான் அரசு.

“கொஞ்சம் யோசித்து பாருங்கள் அரசு. ஒரு கி.மி.தூரம் எங்கேயாவது நடந்து போயிருப்பீர்களா? அல்லது எப்போதும் பையில் குறைந்தது பத்தாயிரம் ரூபாயும், கிரெடிட் கார்டும் இல்லாமல் எளியே வந்திருப்பீர்களா?” ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் நீலாம்பரி.

”அதற்காக எப்போதும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? சொந்தக்காலில் நின்று ஜெயித்து வர முடியாதா?” அயர்ந்தவாறு கேட்டான் தமிழரசு.

”உங்கள் சுயமரியாதை, தன்மானம் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்கிறேன். அவைகளெல்லாம் கண்டிப்பாக தேவை. ஆனால் உங்கள் தந்தையின் இவ்வளவு பெரிய வியாபார சாம்ராஜ்யத்திலே கலந்து இன்னும் அதை விருத்தியடைய செய்வதை விட்டு விட்டு சொந்தக் காலில் நிற்கப் போகிறேன்… எனக்கு ஒரு சதவீதம் கூட

சம்மதமில்லை. அப்படியே நீங்கள் ஜெயித்தாலும் இந்த இளமையும் நாட்களையும் தொலைத்து விட்டு பிறகு கண்டிப்பாக அய்யோ இழந்து விட்டோமோ என்று வருத்தப்பட்டுக் கொண்டு தேடப் போகிறீர்கள்.”

“நிலா எதையாவது பெறுவதற்கு எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். அது கூட தெரியாமலா நான் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பேன்.”

“உண்மையிலே நீங்கள் பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு போன் பண்ண கையில் பணமில்லாமல் என் வீடுவரை நடந்து வந்திருக்கிறீர்கள். எப்போதாவது இது மாதிரி நடந்திருக்கிறதா?”

“இதே மாதிரி எத்தனை முறை ஐஸ்கிரீம் பாருக்கு வந்திருக்கிறோம். எப்போதாவது என் பர்சை எடுக்க அனுமதித்திருபீர்களா? இப்போது என் கையை எதிர்பார்த்துக் காவல் நிற்கிறீர்கள். இது முடியாத விஷயம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். இன்னும் இரண்டு வேளை உணவு யார் தருவார்கள். நான் பணம் தந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள உங்கள் தன்மானம் ஏற்றுக் கொள்ளுமா? இனி நீங்கள் வேலை தேடி சம்பளம் வாங்கி ..” என்று நீலாம்பரி முடிப்பதற்குள் “நீலா நான் வேலைக்குப் போவதாக எந்த ஐடியாவும் கிடையாது.” என்றான்.

“அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?”

“ஏதாவது பிஸினஸ் பண்ண வேண்டும். என்ன என்பதில்தான் இன்னும் ஆரம்பப் பிரச்சினையே. ஸ்டார்டிங் டிரபிள் என்று ஆங்கிலத்தில் சொல்ற மாதிரி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“மருந்து ஏற்றுமதியில் அறுபது சதவீதம் லாபம் வருகிறது” என்றான் விக்கி. பிளைவுட் வியாபாரத்தில் வெகுவான வருமானம் என்றான் சுந்தர். மனோவிடமும் இன்னும் பேச வேண்டியதிருக்கிறது. எப்படியாவது ஒரு வியாபாரத்தை தொடங்க ஆரம்பித்து விட்டால் திரும்ப அடுத்து அடுத்து என கிளைகளை பரவ விடலாம்” என்று அரசு முடிப்பதற்குள் வேகமாக விழுந்து விழுந்து சிரித்தாள் நீலாம்பரி.

கொஞ்சம் கோபம் தலைக்கேற “ஏன் சிரிக்கிறாய்? என்றான் தமிழரசு.இவ்வளவு பெரிய வியாபாரத்திற்கு யார் மூலதனமிடப் போகிறார்கள்.”

“இதற்காகவா சிரித்தாய், என் நண்பர்கள். இதில் என்ன சந்தேகமிருக்கிறது?”

“உங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்களுடைய தந்தையை நாடித்தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”

“அதில் தப்பில்லையே நீலாம்பரி.”

“தவறு என்று சொல்லவில்லையே.” அவர்கள் உடனடியாக உங்கள் தந்தையைத் தொடர்பு கொண்டு தமிழரசுக்கு “நாங்கள்

உதவலாமா” ?என்று கேட்பார்கள்.

“ஓ! அப்படிப்போகிறதோ கதை?….”.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தமிழரசு இதெல்லாம் தேவை இல்லாத விசயங்கள். ஒழுங்காக வீட்டுக்குப்போய் அப்பாவின் வியாபாரத்தைக் கவனியுங்கள். நாம் ஏற்கனவே பேசியபடி என் அக்காவின் திருமணம் அடுத்த நவம்பரில் முடிந்து விடும். இப்போதே எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“ நம் காதல் யாருக்கும் தெரியாதா?”

“அக்காவிற்கு தெரியும். அவள் என்னை விட பயந்தாங்கொள்ளி. அம்மாவிடம் அரசல் புரசலாக சொல்லி விட்டிருக்கிறேன். அடிக்கடி திட்டிக் கொண்டே யாரடி அந்தக் கடன்காரன் என்று உங்களையே

திட்டிக்கொண்டு சீக்கிரமே எவனாவது நல்லவனை பார்த்து கட்டி வைக்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டே இருப்பாள்.”

“அப்படீன்னா நான் நல்லவனில்லையா?”

அத்தியாயம் 5 – நான் நல்லவனில்லையா?

“இவ்வளவு நாளும் நல்லப் பையனாகத் தானிருந்தீர்கள். இப்பொழுதுதான் ரொம்ப மோசமாகத் தெரிகிறீர்கள்.”

“அப்படியென்றால் என்னிடம் பணமில்லை என்றால்… நான் எதுவும் வேண்டாம் என்று என் தந்தையின் வீட்டை விட்டு வெளியே வந்தால் இந்த தமிழரசை நீ விரும்பப் போவதில்லையா நீலாம்பரி.”

“அது… அப்படியில்லை அரசு.” இழுத்தாள் நீலாம்பரி.

“நேரடியாகக் கேட்கிறேன், இனி நான் என் தந்தையின் வீட்டிற்கோ அல்லது அவருடைய பணத்திற்கோ பாத்தியதை ஆகப்போவதில்லை. அப்படியிருக்கும் தருணத்தில் இந்த அரசை நீ விரும்புகிறாயா? ஏற்றுக்கொள்வயா என்பதுதான் என் கேள்வி?”

“ஏன் இப்படி விதண்டாவாதமாகப் பேசுகிறீர்கள். ஒழுங்காக வீட்டிற்குப் போங்கள். அப்புறம் பேசிக்கொள்ளலாம்.”

“இல்லை நீலாம்பரி. உன் மனதில் தடுமாற்றம் தெரிகிறது. தெளிவாகச் சொல்கிறேன் நான் இந்த நிமிடத்திலிருந்து ஒரு பைசாக

கூட இல்லாத வெறும் வெற்றுப்பயல் தமிழரசு. இந்த நிலையில் என்னை உன்னால் திருமணம் செய்துகொள்ள முடியுமா?”

அவனை ஏறெடுத்து நோக்கிய நீலாம்பரி “பணம் இல்லாதவன் எப்படி என்பது எனக்கு தெரியும் அரசு. அந்தக் கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை எனினும் கண்ணால் பார்த்தவள். ஒன்று தெரியுமா? இல்லாதவனை இல்லாளும் வேண்டாம் என்றாள்.”

“என்னதான் சொல்கிறாய்?” கோபத்தில் எழும்பினான் தமிழரசு.

“யாரையாவது ஒரு நல்லவனை பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.” என்றாள் நீலாம்பரி எங்கேயோ பார்த்துகொண்டு.

“சே”! என்று கத்திவிட்டு எரிச்சலுடன் கிளம்பினான் அரசு.

தமிழரசு தன் கால் போனபோக்கில் நடந்துகொண்டிருந்தான். பின்னாலே சப்தம் எழுப்பிய ஆட்டோக்காரன் அவனைத் தாண்டிப் போகுபோது “துஜா…” மராத்தியில் திட்டி விட்டுப் போனான்.

கொஞ்ச நேரம் நடந்ததும் கால் வலித்தது. வசாய் ரோடு ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கக் கூட பையில் பணமில்லை என்று

உணர்ந்த போது “ஆவ் சாப் கிதர் ஜாரஹாஹை?” என்றான் டீக்கடை பையாக்காரன்.

“சாரி பாய் சாப். பணமில்லை” என்றான் தமிழரசு.

“உன்னிடம் யார் பணம் கேட்டார்கள். டீ குடி” என்று கட்டிங் சாய் கொடுத்தார். சூடாக வாங்கிக் குடித்து விட்டு டிக்கெட் எடுக்காமல் சி.எஸ்.டி. ரயிலில் ஏறி காந்திவிலியில் இறங்கினான்.

சார்க்கோப் இண்டஸ்டிரியல் ஏரியாவில் சுந்தரின் தொழிற்சாலை இருந்தது. பஸ்ஸுக்கோ ஆட்டாவிற்கோ பணமில்லை. நடந்து போவதென்றால் அரை மணி நேரமாகும். பல்லைக் கடித்துக் கொண்டு வேகமாக சார்க்கோப்பிற்கு நடந்தான் தமிழரசு.

வழியிலே இரண்டு மூன்றுபேர் காரிலேயிருந்து “ஹாய் அரசு…” என்று கை காட்டிவிட்டுப் போனார்கள்.

அவன் காந்திவிலி இரயிவே ஸ்டேஷனில் இருந்து சுந்தரின் கம்பெனிக்கு நடந்து வர அரைமணி நேரத்திற்கு மேலாகி விட்டது.

‘சுந்தர் இண்டஸ்டிரீஸ்’ என்ற பெரிய நுழைவயிலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி பெரிதாக வணக்கம் போட்டான்.

சிரித்துகொண்டு ’சுந்தர் எம்.டி.’ என்று சிவப்பு எழுத்துகளால் எழுதியிருந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான் சுந்தர்.

பி.ஏ.விடம் ஏதோ லட்டர் டிக்டேட் பண்ணிக் கொண்டிருந்த சுந்தர் “வா தமிழரசு. என்ன ரொம்ப டயர்டாக இருக்கிறாய்… “ என்றவன் தன் பெர்சனல் செக்ரட்டரி கீதாவைப் பார்த்து……..“அலுவலகப் பையனிடம் ஸ்ராங்கா ரெண்டு கப் சாயா கொண்டுவரச் சொல்லு” என்றான்.

“என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய்? என்னையும் ஒரு மாதிரி பார்க்கிறாய்? “ சிரித்தான் களைப்பாக இருந்த தமிழரசனைப் பார்த்து.

தனக்குள்ளே சிரித்துக்கொண்ட தமிழரசு, புன்னகைத்து கொண்டே ”இது எல்லாமே உங்க அப்பாவினுடைய வியாபாரம்தானே” என்று கேட்டான்.

“ஆமா… நான் படித்து முடித்தவுடனே அப்பாவின் பிஸினஸில் சேர்ந்து விட்டேன். இப்போது சாப்பிட நேரமில்லை. பிஸி, சாயங்காலம் ஒரு வியாபார விஷயமாக ஜெர்மனி போகிறேன் வருகிறாயா?” என்று கேட்டான்.

“நீ கூட்டிக் கொண்டு போனால் தாராளமாக வருகிறேன்.” என்ற தமிழரசை ஏற இறங்கப் பார்த்தான் சுந்தர்.

“என்னடா என்னிடமே கேலி பண்ண ஆரம்பிது விட்டாயா?”

“இதிலே என்னடா கேலி… நீ ஜெர்மனி போகிறேன் என்றாய். என்னையும் அழைத்தாய். என்னைக் கூட்டிக் கொண்டு போவதாக இருந்தால் வருகிறேன். இதை நீ ஏன் கேலி அல்லது கிண்டலாக நினைக்கிறாய்?”

”அரசு எப்போதும் எங்கே போனாலும்… ஏன் மூன்றுமுறை நம் நண்பர்களோடு நாம் யு.எஸ். போய் வந்த போது கூட நீதான் எல்லாப் பணமும் செலவழித்திருக்கிறாய்.”

”சுந்தர், பழைய தமிழரசு பணக்காரன். ஆனால், இப்போது உன்னை நாடி வந்திருக்கும் இந்த அரசு ஒரு பைசா கூட இல்லாதவன். நான் ஏற்கெனவே உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் காலில் நிற்பதற்காக வெளியே வந்து விட்டேன். எப்படியாவது செய்வதற்கு உதவி செய்ய முடியுமா?”

அத்தியாயம் 6 – உதவி செய்ய முடியுமா?

“என்ன அரசு உனக்கு உதவி செய்வதற்கு மும்பையே முன்னாலே வந்து நிற்கும். ம்…ம்… என்று சொல்… எத்தனையோ பாங்கிலிருந்து கியாரெண்டி கூட இல்லாமல் எத்தனைக் கோடி பணம் வேண்டுமென்றாலும் வாங்கித் தருகிறேன். ஆமாம் என்ன வியாபாரம் செய்வதாக உத்தேசம்?”

“இந்த மாதிரி பாங்க்… அது இதுவெல்லாம் என் அப்பா ஜே.கே. பெயருக்காக பணம் கொடுப்பார்கள். அதெல்லாம் வேண்டாமென்று தானே வெளியே வந்திருக்கிறேன். நீ உதவி செய்ய முடியுமா?” டீ வர, எடுத்து சுடச் சுட அருந்தியவாறு கேட்டான் தமிழரசு.

“ம்… கண்டிப்பாக… உன் கம்பெனிக்கு ஒரு போன் போட்டு பேசிக் கொள்ளட்டுமா?”

“என் கம்பெனியா?” வாய் விட்டுச் சிரித்தான் அரசு. “டேய்.. எதுவும் வேண்டாம். சொந்தக் காலில் நின்று ஜெயித்துக் காட்டுகிறேன். என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன். என் கம்பெனி என்கிறாய். அது எல்லாம் என் தந்தையின் ஜே.கே க்ரூப் ஆஃப் கம்பெனி. அதற்கும் இந்த அரசுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது.

ஏதோ உன் நண்பன் என்கிற முறையிலே வந்து கேட்க வந்தேன். உன்னால் முடியுமா? முடியாதா?”

“என்ன மாதிரி உதவ வேண்டும்?”

“எனக்கு சின்ன வயதிலிருந்தே கப்பல் போக்கு வரத்தில் மிகவும் விருப்பமுண்டு. கப்பல் கம்பெனி… அல்லது அதைச் சார்ந்த பிரைட் ஃபார்வார்டிங் கம்பெனி ஏதாவது ஒன்று ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.”

“என்ன செலவாகும் அரசு?”

“ஐம்பதிலிருந்து எழுபது லட்சமாகும்.”

“இவ்வளவு பெரிய பணம் வேண்டுமெனில் என் அப்பாவிடம் கேட்கவேண்டும். அவர் உடனே உன் அப்பாவிற்கு போன் பண்ணிக் கேட்பார்.”

“ஆமாம்…சுந்தர், நீ ஒரு சரியான மரமண்டை. நானே என் தந்தையின் தயவிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவருடைய பணத்தில் ஒரு காசுகூட இல்லாமல் பெரிய மனிதனாக மாறிக் காட்டத் துடித்துக் கொண்டிருக்கிறேன்… நீ என்னடாவென்றால்….

“இதோ பார் சுந்தர். ஒரு சல்லிக் காசுகூட வேண்டாமென்று உதறிவிட்டு ரயிலுக்கு டிக்கெட் எடுக்க பணமில்லாமல்,

டிக்கெட்டில்லாமல் வசாயிலிருந்து காந்தவிலிக்கு வந்து அங்கிருந்து நடந்து வந்து உன்னைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறேன்.

“அதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள். இப்போது அடுத்த வேளைக்கென்ன செய்யப்போகிறேன் என்று தெரியாது. வெளியே போனால் நான் ஒன்றுமில்லாத இந்தியப் பிச்சைக்காரர்களில் ஒருவன்.”

“இப்போது சொல்லு, எனக்கு உதவமுடியுமா? முடியாதா?” என்றான் தமிழரசு.

“ஏண்டா போக்கிரி மாதிரி பேசுகிறாய்?. உன் அப்பா சம்பாதித்து வைத்திருக்கின்ற சொத்து உனக்குப் பின்னால் பத்திருபது வாரிசுகள் இருந்து சாப்பிட்டாலும் ஒரு பகுதி கூட குறையாது. அதை விட்டு விட்டு என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே? இது உனக்கே நன்றாக இருக்கிறதா?”

“போய் அப்பாவிடம் நல்ல பிள்ளயாக சேர்ந்து இன்னும் பணத்தைப் பெருக்க வழிசெய். ஏன் இப்படி கெட்ட பையானாக என் காலில்… உன் காலில் என வீண் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறாய்.”

“சுந்தர் உன்னிடம் நான் வந்தது அறிவுரை கேட்க அல்ல. உரிமையோடு நண்பன் என்ற முறையில் உதவி கேட்க வந்தேன். நீ எனக்கு பணம் சும்மா தர வேண்டாம். வெளியே எத்தனை பைசா வட்டியோ அத்தோடு மொத்தமாக என் வியாபாரத்தில் நான்

கொடிகட்டிப் பறக்கும் போது திருப்பி தந்து விடுகிறேன்” என்றான் தமிழரசு.

மெதுவாக சிரித்துக் கொண்ட சுந்தர் “ நீ நினைக்கிற மாதிரி பிஸினஸ் ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமில்லை. திமிங்கிலங்களும், யானைகளும் நிறைந்த உலகம். கொஞ்சம் அசந்தாய் என்றால் உன்னையும் சேர்த்து ஏப்பமிட்டு விட்டுப் போய் விடுவார்கள்.” என்றான்.

“இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்?”

“ஒழுங்காக உன் தந்தையின் வியாபாரத்திற்கு உதவியாக இரு.”

‘உன்னால் உதவி செய்ய முடியுமா? முடியாதா?”

எதுவும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கினான் சுந்தர்.உடனடியாக

எழுந்து நடந்தான் அரசு.


வாசுதேவன், தமிழரசு ரோட்டோரத்தில் தளர்வாக நடந்து போவதைப் பார்த்து விட்டுக் காரிலிருந்து இறங்கி “எங்கே போகிறாய் அரசு? ஏன் இவ்வளவு டல்லாக இருக்கிறாய்? கார் ரிப்பேராகி விட்டதா? எங்கேயாவது இறக்கி விடட்டுமா?” என்று கேட்டான்.

ரொம்பவும் களைப்பாக உணர்ந்த தமிழரசு “ஒன்றுமில்லை. என்னைக் காந்தவிலி ரெயில்வே ஸ்டேசனில் இறக்கி விட்டு விடு.” என்றான்.

“ஏன்…கார் கொண்டு வரவில்லையா? வசாய்தானே போக வேண்டும். நானும் அங்கேதான் போகிறேன். உன்னையும் வீட்டிலே இறக்கி விட்டு விடுகிறேன்.” என்றான் வாசு.

”சரி” என்றவன், வசாய் ரோட்டிற்கு திரும்பவும் எங்கே போவது? வீட்டிற்கு போக வேண்டு… அது இனி முடியாத விஷயம் என்பது தீர்மானமாகி விட்டது’

‘அத்தை பத்மினி வீட்டிற்கும் போனால் அங்கே கண்டிப்பாக என்னை அழைத்துச் செல்ல அப்பாவின் நண்பர் பாபு வந்து அமர்ந்திருப்பார்.’

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *