மீண்டு வருவோம் மீண்டும் வருவோம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 592
இளைஞன் செல்வம் மலேசியாவிலிருந்து திருச்சியில் உள்ள தன்னுடைய தாய் மாமா வீட்டுக்கு வந்திருந்தான். மாமா ராஜசேகரன் மரணமடைந்த தருணத்தில் வர முடியாததால், இரண்டு மாதங்கள் கழித்து விடுப்பு கிடைத்த போதுதான் அவனால் வர முடிந்தது.
அவன் இங்கு வந்து பார்த்த போது மாமாவின் மகன்களும் மகளும் கலகல என்று அவனிடம் பேசவில்லை. சரி துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்று நினைத்துக் கொண்டான் செல்வம்.
சில நாட்கள் கழித்து மாமாவிடம் வேலை பார்த்த கதிரவன் என்ற பெரியவரை அவன் டீக்கடையில் சந்தித்த போது, பிசினஸ்சில் மாமாவுக்கு பெரிய நஷ்டம் என்றும் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்கள் என்றும் அவருடைய கம்பெனிக்கு வர வேண்டிய தொகைகளும் வசூல் ஆகவில்லை என்றும் அவர் கூறினார்.
வீடு திரும்பிய செல்வம், அத்தையையும் மாமாவின் மகன்களையும் மகளையும் அழைத்துப் பேசினான் –
‘இந்த நேரத்தில் தான் மன உறுதியோட இருக்கணும்… முடங்கி போக கூடாது… நான் திரும்பி மலேசியா போகலை ஒங்களோட இருக்கேன்… மாமாவோட உடல் பொருள் ஆவியா இருந்ததே அவரோட பிசினஸ்தானே… நாம அதை தூக்கி நிறுத்திக் காட்டுவோம்.. என்ன சொல்றீங்க… முதல்ல வசூலாக வேண்டியதை எல்லாம வசூல் பண்ணி கடனை எல்லாம் அடைப்போம்… தேங்கி நிக்காம மாமா மாதிரியே தேனீ மாதிரி இயங்கிகிட்டே இருப்போம்… சரியா…’
செல்வத்தின் மாமா வீட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவனுடைய தெம்புரை நம்பிக்கை ஊட்டியது. அவர்கள் முகத்தில் புன்னகை பூத்தது.
(கேட்டில் உறுதி கூட்டும் உடைமை – கொன்றை வேந்தன் 21 – கஷ்டமான காலத்தில் மன உறுதியுடன் இருந்தால், கைவிட்டுப் போன உடைமைகள் திரும்ப கிடைக்கும்)
– இலக்கிய வரிக் கதைகள் – ஔவைப் பாட்டியின் கொன்றை வேந்தன்…
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
